Tuesday, November 1, 2011

திரைப்படம்:



ஏழாம் அறிவா?
அல்லது
ஏய்க்கும் அறிவா?




ன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.


கி.பி ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியில் பல்லவ மன்னர் வழிமுறையில் தோன்றிய போதிதர்மர் சீனாவுக்குச் சென்று மருத்துவ நுணுக்கங்களையும், தற்காப்புக் கலையையும் போதித்தார். அதுவே குங்ஃபூ வுக்கும், ஜென் தத்துவத்திற்கும் தொடக்கமாக இருந்தது. ஆனால் தமிழர்கள் இன்று அவைகளை மறந்துவிட சீனர்கள் தமிழரிடம் பெற்ற கலையை தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறர்கள். இதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மையக் கரு.


சர்கஸில் வேலை செய்துயும் கதாநாயகன் இடையிடையே காதாநாயகியை காதலித்து பலநாடுகளின் கடற்கரைகளில் பாட்டுப்பாடி கடைசியில் வில்லனை அடித்து நொறுக்கி வெற்றிக் கொடிகட்டும் ஒரு சராசரி திரைப்படத்தினை பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகன் தமிழன் என்பதால் பெருமித உணர்வு கொள்கிறான். இதற்கு திரைப்படக் குழுவினருக்கு கை கொடுத்திருப்பது, வரலாற்றிலிருந்து உருவப்பட்ட ஒரு வரியும்,

"தமிழன் மலேசியாவில் அடிபட்டான், இலங்கையில் அடிபட்டான், இப்போது தமிழ்நாட்டுக்குள்லேயே வந்து அடிக்கிறான்”
"ஒன்பது நாடுகள் சேர்ந்து தமிழன அடிச்சா அதுக்குப் பேரு வீரமில்லை, துரோகம்"

"மஞ்சளை விளைவிக்காத நாடுகளெல்லாம் மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது, ஆண்டாண்டு காலமாக விளைவித்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாமோ ஏமாந்து நிற்கிறோம்"

என்பது போன்ற சில வசனங்களும். ஒருவேளை திமுகவும் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு தூரோகமிழைத்து விட்டதாக எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்களிடம் தன்னுடைய படத்தின் மூலம் இப்படி தமிழுணர்வை ஏற்படுத்துவது அரசியல் ரீதியாக உதவும் என்று கூட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எண்ணியிருக்கக் கூடும்.


சீனா இந்தியா மீது நுண்ணுயிர் போர் (bio-war) நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் சீனா மீது கொண்டிருக்கும் கோபம். அதாவது ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள இனவழிப்புப் போரில் இலங்கை ராணுவத்திற்கு சீன செய்த உதவிகளால் சீனா மீது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திரைப்படத்திற்கான ஆதரவாக திருப்பிக் கொள்ளும் நோக்கத்துடனேயே சீனா அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் இந்தியா குறித்து திரைப்படம் கொண்டிருக்கும் கருத்து என்ன? இந்தியாவின் போரையே நான் நடத்துகிறேன் என்று ராஜபக்சே கூறியிருந்தது குறித்து, போரில் இந்தியாவின் பங்களிப்பின் ஆதாரங்கள் குறித்து திரைப்படம் மவுனம் சாதிப்பது ஏன்?


தெளிவாகக் கூறினால் இந்தியாவின் பங்களிப்பு குறித்து திரைப்படம் மவுனம் சாதிக்கவில்லை, மறைக்கிறது. மறைப்பதோடு மட்டுமின்றி ஆதரவாக திரிக்கிறது. போதிதர்மரின் அறிவை இன்றைய தமிழர்கள் மீளப் பெறவேண்டும் என்று திரைப்படத்தில் போதிக்கப்படுவது எதற்காக? சீனா இந்தியா மீது தொடுத்திருக்கும் நுண்ணுயிர் போரை எதிர்கொள்வதற்காக, சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடிக்க வேண்டும் என்பதற்காக. ஆக, ஈழத்தமிழர்களை கொன்றழித்த போருக்கு திட்டமிட்டு உதவிய இரண்டு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு அதை ஒரு நாட்டுக்கு ஆதரவாகவும் இன்னொரு நாட்டுக்கு எதிராகவும் திருப்புவதைத்தான் திரைப்படம் தமிழர்களிடம் கோருகிறது. இது அப்பட்டமான மோசடித்தனம் என்பதில் ஐயமொன்றுமில்லை.


பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களை, அதுவும் திரைப்படத்தின் சிறிய பகுதியாக வருவதை மட்டும் முழுமையாக எடுத்துக் கொண்டு இது போன்று அரசியல் நோக்கில் விமர்சிப்பது தேவையற்றது என்று கருதப்படலாம். ஆனால் திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த சிறிய பகுதியை மட்டுமே முதன்மைப்படுத்தி விளம்பரங்களும், செவ்விகளும் செய்யப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாது படத்தின் மையக் கருவே இது தான். படத்தைப் பார்த்துத் திரும்பும் ரசிகனிடம் அந்தப் படத்தின் அதிகான பகுதியாக வரும் பொழுதுபோக்கு மசலாத்தன காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பழந்தமிழர் பெருமை தான் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அந்த திரைப்படம் பார்வையாளரிடம் என்ன சொல்கிறது என்பதைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான படத்தொகுப்பு, திறமையான ஒளிப்பதிவு, அழகான இடங்கள், பாத்திரங்களின் நடிப்புத்திறன், உணர்வுபூர்வமான இசை போன்றவைகளை முதன்மைப்படுத்துவது, சொல்லவரும் செய்தியை தெளிவாக புரியவைக்க உதவும் அம்சங்களை எடுத்துக் கொண்டு, செய்தியை கண்டு கொள்ளாமல் விடுவது போன்றது.


அறிவியல் புனைவை கதைக் களமாக கொண்டிருக்கும் ஒரு கதையில் நோக்கத்திற்கு உதவியாக இணைந்து வரும் தொழில்நுட்ப அம்சங்கள் எவ்வளவு உயர்வானதாகவும் நேர்த்தியுடன் பயன்படுத்தபட்டிருந்தாலும் புரட்டுத்தனமான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அவைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவியல் புனைவு என்றாலே தர்க்க மீறல்களை கண்டு கொள்ளக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். என்றாலும் வெறும் நுண்ணோக்கியை வைத்துக் கொண்டு மரபணு ஏணியை பார்வையிடலாம் என்பதும், தனிப்பட்ட ஒருவர் பெற்றிருக்கும் அறிவு மரபணு வழியாக கடத்தப்படும் என்பதும், ஓரிரு நொடிகள் ஒருவரை பார்ப்பதாலேயே ஒருவரின் மூளையிலிருக்கும் சிந்தனைத் தூண்டுதல்கள் இன்னொருவர் மூளைக்குள் புகுந்து கொள்ளும் என்பதும் 'டூ மச்'சாக மட்டுமில்லை, 'ஃபோர் மச்' சையும் தாண்டியிருக்கிறது.


இறுதியாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். மஞ்சள் பூசுவதை ஒரு சடங்காக, கலாச்சாரமாக பரப்பாதீர்கள் அதை நச்சுக் கொல்லி எனும் அறிவியாலாக கற்றுக் கொடுங்கள் என்கிறார். அதாவது மெய்யானதை சொல்லாமல் சடங்காக, மரபாக செய்தால் காலப்போக்கில் அது மறைந்து விடும். மெய்யான பயன்பாட்டை புரியவைத்தால் மட்டுமே அது நீடித்து நிற்கும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார். 

ஆனால் இதை அவர் பின்பற்றியிருக்கிறாரா?


தற்காப்புக் கலைகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழன் இன்று எல்லா இடங்களிலும் அடி வாங்குகிறான் என்பது மெய்யான அரசியலா? மேலெழுந்தவாரியான உணர்ச்சியைத் தூண்டிவிடும் செயலா? ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளியல் நலன், விடுதலைப்புலிகளின் அரசியல் தவறுகள் உள்ளிட்டு பல மெய்யான காரணங்கள் இருக்கும்போது, அவைகளைப் பற்றி மறந்தும் பேசிவிடாமல், பண்டைய தமிழனின் வீரத்தையும் கலைகளையும் மறந்ததுதான் காரணம். அவற்றை தமிழன் மீண்டும் கைக்கொண்டால் திருப்பி அடிப்பதோடு மட்டுமன்றி தமிழன் என்றால் உலகிற்கு ஒருவித பயம் எழும் என்று கூறுவது மெய்யான அரசியலை மறைப்பதோடு மட்டுமன்றி, அதை அறிந்து எழுச்சி பெறவிடாமல் தடுக்கும் செயலாகவும் இருக்கிறது.

நன்றி : செங்கொடி

Monday, October 31, 2011

கவிதை:


எழுதிவைத்துக் கொள்ளுங்கள்!







சூரியன் ஒருநாள்
மேற்கிலே உதித்தெழும்
சுற்றுகின்ற பூமியோ
சத்தியமாய் சறுக்கிடும்!


வீசுகின்ற காற்றிலே
வெப்பநிலை உயர்ந்திடும்
விடுமுறைநாளைக்கூட
விஞ்ஞானமே தீர்மானிக்கும்!


ஆலயங்கள் அத்தனையும்
அருங்காட்சிக் கூடமாகும்
அன்று பிறந்த சிசு கூட
அடுத்தநாள் டியூசன்போகும்!


வீடுதோறும்
தொலைக்காட்சி தெய்வமாகும்
விடிந்தபின்பும் மின்சார விளக்கெரியும்

பள்ளியிலே வன்முறைகள் பாடமாகும்
பாடசாலைச் சீருடையில் வண்ணமேறும்!


கூடிவாழும்
எண்ணமெல்லாம் குறைந்து போகும்
குழந்தைகளைக் கொல்வதெல்லாம் வீரமாகும்

தரமில்லாப் பொருள் கூட
விற்றுத்தீரும்
தகுதியில்லா மனிதர்க்கெல்லாம்
தலைமைசேரும்


சக்கரைவியாதி இனி
சகலருக்கும் வந்துசேரும்
மனப்பிறழ்வு இல்லாதோர்
மனிதரில்லை என்றாகும்


வேலிகள் ஒன்றுகூடிப் பயிரைமேயும்
வளர்த்தகடா மார்பிலேறிக் குதித்து ஆடும்

காவலுக்கு வளர்த்த நாயே
காலைக் கடிக்கும்
விடுதலைக்கு உயர்ந்த கையே
வயிற்றலடிக்கும்!

-மூதூர் மொகமட்ராபி

Thursday, October 27, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்!



நண்பர்கள்
அனைவருக்கும்
இனிய
தீபாவளித் 
திருநாள்
வாழ்த்துக்கள்!

- Jesslya Jessly

அதெல்லாம் சரி, பேனா எழுதுமா?








'நல்ல பேனா இருந்தா ஒன்று தாங்க!' என்று கடைக்காரியிடம் காசை நீட்டினார் ஒருவர்.

'எப்படிப் பேனா வேணும்..?'

'விலையுயர்ந்த அழகான நல்ல பேனாவாகவே  தாருங்க!'

கடைக்காரி ஒரு பேனாவை எடுத்து வைத்தாள்.

'இது நல்லதா!'

'ஆமாம். இதில நிறைய வசதிகள் இருக்கு தெரியுமா.. இதுல மணிக்கூடு இருக்கு...அலாரம் இருக்கு..திசைகாட்டி இருக்கு!'

'அப்படியா! ஆச்சரியமாயிருக்கே' என்றார் வாடிக்கையாளர்

'அது மட்டுமில்ல...  இதில இன்னும் நிறைய இருக்கு!'

'ஐயோ!  வேற என்னவெல்லாம் இருக்கு...?'

'கல்குலேட்டர் இருக்கு..ஸ்டெப்லர் இருக்கு..வெப்பமானி இருக்கு..கெமரா இருக்கு..கீழே விழுந்தா உடையாது.. இவ்வளவு ஏன் நெருப்பில கூட எரியாது தெரியுமா?'

என்று மூச்சு விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்த கடைக்காரியை நிறுத்தி, வெகு அமைதியாகக் கேட்டார் அந்த வாடிக்கையாளர்.

'அதெல்லாம் சரியம்மா, இந்தப் பேனா எழுதுமா?'


***


ந்த உரையாடலை வாசித்தால் என்ன தோன்றுகின்றது உங்களுக்கு?

அதே உணர்வோடு பாடசாலை ஒன்றில் நடைபெறும் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பான இந்த கல்வியதிகாரி-ஆசிரியர் உரையாடலையும் பாருங்கள்.

'பாடத்திட்டம் இருக்கா?'

'ஆம் ஸேர்!'

' நல்லது.. பாடக்குறிப்புகள் இருக்கா?'

'ஆம், தினசரி எழுதி வைத்திருக்கிறேன் ஸேர்!'

'வெரிகுட்! கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?'

'ஆம் எல்லாம் ஒன்றும் விடாமல் செய்யப்பட்டுள்ளது ஸேர்!'

'பாடப்பதிவுக் கொப்பிகள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா?'

'ஆமாம்!  இந்தாருக்கு பாருங்க, ஸேர்!'

'அப்படியா?! வரவு இடாப்பு வேலைகள் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளதா?'

'ஆம், ஸேர்!'

' ஆச்சரிமாயிருக்கே... இந்தப்... புறக்கிருத்திய வேலைகளெல்லாம்..?'

'அதெல்லாம் டிப்டொப்பாக  செய்யப்பட்டிருக்கு ஸேர்! அதுமட்டுமில்ல...'

'........@#...*^+#....! '    (தடால்!)

'ஆ! ஐயோ...ஸேரைப் புடிங்க! டேய் யாராவது ஓடிப்போய் தண்ணி எடுத்திட்டு வாங்க... ! ஸேர் தலைசுத்தி மயங்கி விழுந்திட்டாருடா'


முகத்தில் தண்ணீர் விசிறியடிக்கப்பட்டு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. 

மயக்கம் தெளிந்து கண்ணை விழித்ததும் அந்தக் கல்வியதிகாரி கேட்ட முதல் கேள்வி:

'அதெல்லாம் சரி, பிள்ளைகளுக்குப் படிப்பிக்கிறீங்களா?'

-மூதூர் மொகமட் ராபி

சிந்தனைக்கு....



நம்மையே சிறையிடும் நமது வட்டங்கள்!





மது காலடியிலே வளரும் எதிர்காலப் பெருவிருட்சங்களான நமது சின்னஞ் சிறுவர்களை பற்றியும் அவர்களது மனப்பாங்குகளைப் பற்றியும் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

அவர்களது பிஞ்சு மனங்களில் இயல்பாகவே எழும்  வினாக்களையும் அந்த வினாக்கள் நமது  பழமைவாத துருப்பிடித்த சிந்தனைகளுக்கு அடிக்கின்ற சாவுமணிச் சங்கடங்களையும் பற்றிச் சிறிது யோசித்துப் பார்ப்போமா?


'அப்பா டைனோசர் உண்மையிலேயே உலகத்துல இருந்துச்சா?'
என்று  ஆரம்பக்கல்வி படிக்கும் ஒரு சிறுவன் கேட்க,

'இதென்ன கேள்வி...இருந்துச்சுதானே?!' என்பார் தந்தை.

'அப்படியென்டா ஏன் அது இப்ப இல்ல?' 
'அது..அது  வந்து.. அது எல்லாம் செத்துப் போயிட்டுது'

'எப்படிச் செத்திச்சு?'

'ஆ..அது அந்தக் காலத்துல..பெரிய அழிவு வந்து செத்துட்டுதுகள்'

'அழிவு என்டா..எப்படி? சுனாமி மாதிரியா?'

'ஆங்...  ஆமா....ம்! சுனாமி வந்து எல்லாம் ஒரேயடியா தொலைஞ்சிட்டுது!' என்றார் அப்பா உற்சாகத்துடன்! அழிவு என்ற சொல்லை சிறுவனுக்கு எப்படி விளக்குவது என்று முழித்தவருக்கு அவனே எடுத்துக் கூறியதிலே கொண்டாட்டம்! ஆனால் அவரது மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

'சுனாமில பூனைநாய் எல்லாம்தானே  செத்துச்சு...அதெல்லாம் ஒண்ணும் விடாம இல்லாமப் போக இல்லையே அப்பா?'

' அது வந்து...வந்து..டேய்! இதெல்லாம் உனக்கேண்டா...? உன்ட பாடத்தை மட்டும் படித்தால் போதாதா கண்ணா?' என்று சமாளிக்கத்தானே நம்மில் பல பேர் நினைக்கின்றோம்.

தவிர, அவனுக்கு/அவளுக்கு சிறு வயதிலேயே இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அதன் வழியில் சிந்தனைத் திறனை வளர்த்துச் செல்வதற்கு முயல்பவர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள்.


சிந்தித்துப் பார்த்தால் நாம், இளம் அரும்புகளான நமது  பிள்ளைகளின் இயல்பான அறியும் ஆற்றலை  வளர்த்துக் கூர்மையாக்குவதற்குப் பதிலாக அதனை நமது வசதிகளுக்கு ஏற்றவாறு மழுப்புகின்றோம் என்பதுதான் உண்மை. இதனை நாம் விரும்பியோ விரும்பாமலோ செய்து கொண்டுனிருக்கின்றோம்.

மேலே  உரையாடலில் சில பெற்றோர்களால் பிள்ளையின் கேள்விகளுடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியாத இயலாமை புலப்படுவதைப் பாரத்திருப்பீர்கள். இத்தகைய பெற்றோரால் ஆர்வமும் தேடல் முனைப்பும் நிரம்பிய தமது வாரிசுகளின் அறிவுப்பசிக்குத் தீனியிட முடிவதில்லை. இதன் காரணம் நமக்குள்ள அறிவெல்லாம் வெறுமனே நாம் ஈடுபடும் தொழில்சார்பான அல்லது துறைசார்பான  சில வட்டங்களுக்குள் சிக்கி இருப்பதுதான்.

அந்த வட்டச் சிறைகளுக்குள்ளிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நாமே விரும்புவதில்லை. இதற்கு இயல்பான சோம்பேறித்தனமும் ஒரு காரணம்.  வேறு சிலருக்கோ சும்மா இருப்பதிலே கூட ஒரு சுகம்  இருக்கின்றது.
இதனைப் புரிந்து கொண்டு பெற்றோராகிய நாம் வாசித்தல், கேட்டல், தேடுதல் மூலமாக நிறைய விடயங்களை அறிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியமானது அல்லவா?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!


 
- Jesslya Jessly

Wednesday, October 19, 2011

இது எப்படி இருக்கு?



உள்ளத்தைத் திறப்போமா?




பொதுவாக எல்லா மதங்களும் அவற்றின்  அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் ஆணாதிக்கத்தை  தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறியவாறு ஆணாதிக்கத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும் உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடைக் கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.


பெண்களுக்கான உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை நமது சூழலில் 80 களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த ஆடைமுறை பெண்களின் மீது ஒரு உறுப்பாகவே படிந்து விட்டது.


எந்த அளவுக்கு இந்த ஆடை பெண்களுக்கான கண்ணியமாக திணிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இதை அவர்கள்  இரண்டு விதங்களில் எதிர்கொள்கிறார்கள்.



உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடைக் கலாச்சாரத்தை மறுப்பவர்கள்.
அதாவது மேற்குலகின் ஆகக் குறைந்த ஆடை அணிவதையே சுதந்திரமாக நினைத்துக் கொண்டிருக்கும் தவறான போக்கிற்கு ஆதரவாக இருக்கின்றவர்கள் ஒருவகை.


பெண்களுக்கு வேறு என்ன அளவில் ஆடை அணிய வேண்டும் என்பது பற்றிய குழப்பம் உள்ளவர்கள் மற்றொரு வகை.


பெண்களுக்கான இந்த மேலதிக ஆடை அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை அவை காக்கும் என்பது தான்.


பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம்.


ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதன் சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாதிருக்கும் குறைபாட்டின் வெளிப்பாடுதான் உள்ளது. எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது.


உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயினும், வேறு பெண்களாயினும் முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல.


ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.


பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால் பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள். பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.


ஆண்களுக்கு ஆடைவரம்பு விதித்திருப்பதைப் போல், பெண்களுக்கும் விதித்திருக்கிறது இதில் அடிமைத்தனம் ஒன்றுமில்லை என்பது சிலரின் பிரபலமான வாதம். இது உண்மையா?


அவர்கள் கூறுவது போல் ஆண்களுக்கான ஆடை பெண்களுக்கான ஆடை என்று வரையறை செய்வதாக இல்லாமல் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குறிப்பிட்ட சில ஆண்களை தவிர ஏனைய ஆண்களுக்கு முன் வரக்கூடாது என்பதுதான் அவர்களது விதியாக உள்ளது. அதாவது, பெண்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன ஆடை உடுத்தியிருந்தாலும் அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும்.


இது ஆடை சார்ந்த விடயமா? அடிமைத்தனம் சார்ந்த விடயமா?
தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப, உடலை முழுவதும் மறைக்கக் கூடிய சுடிதார் போன்ற ஆடைகளும் உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை போன்றது தான் என்று சிலர் வைக்கும் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆக உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ, அந்நியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. இது ஆண்களுக்கு இல்லை.


முகத்தையும் முன்கைகளையும் தவிர ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள் எனும் நிபந்தனையை பெண்களின் ஆடைகளுக்கான வரம்பாக காட்டினாலும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும்  ஏனைய விதிமுறைகள் வலியுறுத்துகின்றன.


ஆக பெண்கள் தங்கள் பாலியல் அங்கங்களை மறைக்கும் வழமையான ஆடைகளால் உடுத்திக் கொள்வது போதாது. ஆடைக்கு மேலாக முகம் உட்பட அனைத்தையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என்பது தான் இவற்றின் முடிவு. இதை தற்போதைய நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு முகத்தை மறைப்பது முக்கியமில்லை என்றும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.


உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டால், ஆண்களின் அளவைவிட பெண்கள் அதிகமாக ஆடை அணிய வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள், இதற்கு ஒரு அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றது. இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல் திசை திருப்புவார்கள். இங்கு பிரச்சனை ஆடையின் அளவு அல்ல


போதுமான அளவு ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துக் கொண்டு தான் அந்நியருக்கு முன் அல்லது வெளியில் வரவேண்டும் என்பது தான்.


இதுமட்டுமன்றி, உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை அணிந்து கொண்டு வாழும் பெண்களின் மூலம் அது தங்களுக்கு படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ, பொது இடங்களுக்கு சென்று வருவதற்கோ எந்தவித இடையூறும் இல்லை என்றும், அதை ஆணாதிக்கமாக நாங்கள் கருதவில்லை என்றும் பதில் கூறச் செய்து அதனைக் கொண்டும் இதை எதிர் கொள்கிறார்கள்.


இதை ஏற்றுக் கொண்டு உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை அணியும் பெண்களுக்கு அது இடையூறாக இருக்குமா? அவர்கள் அதை ஆணாதிக்கமாக கருதுகிறார்களா என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை.


இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.

பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது. ஆணாதிக்கமும் தனியுடமையும் இணையும் புள்ளியிலிருந்து தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடக்கம் பெறுகிறது. ஆனால் மத அடிப்படைவாதிகள் இந்த அடிப்படைகளை காண மறுக்கிறனர்.


பாலியல் குற்றங்களை தனிப்பட்ட குற்ற நடவடிக்கையாக காணும் அதேநேரம் அந்தக் குற்றத்தில் பெண்களையும் இணைக்கிறது. இந்த குற்றங்களுக்கு தீர்வாக உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடையை முன் நிறுத்துகின்றது, அதுவும் ஆணின் பலதார வேட்கையை சட்டமாக அங்கீகரித்துக் கொண்டு. அதாவது ஆணின் காமப்பசிக்கு பல மனைவிகள் கூடுதலாக வேண்டிய அளவுக்கு அடிமைகள் என்று அனுமதியளித்துவிட்டு அதற்கு எதிராக பெண்களை உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடைக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?


ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடை பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா?  ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்? 


சுட்டுவிரல் நகம் தெரிந்தாலும் அதையும் பாலியல் நுகர்வோடு அணுக சமூகம் ஆணை அனுமதிக்கும் போது ஒரு ஆடை அதற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? தன்னின் எந்தப்பகுதி வெளிப்பட்டு ஆணின் பார்வையில் கிளர்ச்சியை தூண்டுமோ என்னும் பதைப்பையே இந்த ஆடைகள் பெண்களுக்கு வழங்குகிறது. அது மேலும் மேலும் ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.

பாலியல் குற்றமென்பது பார்வையோடு மட்டும் தொடர்புடையதல்ல. பார்வை இருக்கட்டும் கேட்கக் கூசும் வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார்களே பெண்கள் வெளியில் வரும்போது காதுகளை பஞ்சால் அடைத்துக் கொண்டுதான் வரவேண்டும் என்று சட்டம் செய்யலாமா?


பொது இடங்களுக்கு வந்தால் உரசுவதற்காகவே கடந்துபோகிறார்களே என்னசெய்யலாம்? உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடையை இரும்பால் நெய்து கொள்ளவேண்டும் அதுவும் உடலைவிட்டு அரை அடி தள்ளியிருப்பது போல் தைத்துக் கொள்ள வேண்டும் எனத் திருத்தம் கொண்டு வரலாமா?

பெண்களுக்கு சமவுரிமையுள்ளது எனப் பழக்கத்தில் பிதற்றுபவர்களின் பார்வை பெண்களின் விசயத்தில் இவ்வளவு மட்டமாக இருக்க முடியுமா? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த  சராசரி மனிதர்களின் பார்வையைத் தாண்டி இவர்களிடம் ஒன்றுமில்லை என்பதற்கு இந்த உடலை முற்றாக மறைத்து மூடும் ஆடையை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை!

 
(இக்கட்டுரை செங்கொடி இணைய தளத்தில் 'அல்லாவின் பார்வையில் புர்கா' என்ற தலைப்பில் அண்மையில் வெளியானது. அதன் மையக்கருத்து சிதையாதவாறு சில குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தந்திருக்கின்றோம்- Jesslya Jessly)

Friday, October 7, 2011

ஆசிரியர் தினம் (கவிதைகள்)




சிவப்புக்கோடு!






ழகு மிகுந்தசேலைகட்டி

அதற்கு ஏற்ற பொட்டும் வைத்து

அரைநொடியில் முகம் திருத்தி

அவசரமாய்ப் பள்ளிசெல்லும்

உயிருள்ள இயந்திரம் நான்!

** 
திகாலை கண்விழித்து

அரையிருட்டில் அடுப்பெரித்து

விடியும்வரை வாசல்கூட்டி

வெளிச்சம்வர கடைக்கு ஒடி

கட்டிலருகே தேனீர் வைத்து

கணவனைத் துயிலெழுப்பும்

கலியுகத்து நளாயினி நான்!

** 

ரவிரவாய்க் குறிப்பெழுதி

இடதுகையால் தொட்டிலாட்டி

குழாய்நீரில் துணிதுவைத்து

குளிக்கும்போது அழுதுதீர்த்து

படியேறித்துணி உலர்த்தி

பாதம்நோக மடித்துவைக்கும்

பற்றரியில்லா ரோபோ நான்!

** 

குழந்தைகளை வெளிக்கிடுத்தி

குழப்படிக்குப் பதில்கொடுத்து

அவசரத்தில் பவுடர் அப்பி

ஆட்டோவுக்குள் தலைசீவி

கடிகார முள்ளோடு

சதிராடிப் போராடும்

சாட்டையில்லாப் பம்பரம் நான்!

** 

சிவந்து வயிறுகிள்ள

பாணோடு பன்னும் வாங்கி

பாதியிலே கடித்து விழுங்கி

கதவோரம் செருப்புத்தேடி

தெருமுனையில் பஸ்பிடித்து

பந்தயத்துக் குதிரைபோலே

பாய்ந்துநானும் ஓடிவந்தால்.....



ருகைதரும் பதிவேட்டில்

இரக்கமின்றிச் சிரித்திருக்கும்- அந்த

இதயமில்லாச் சிவப்புக்கோடு!

-மூதூர் மொகமட் ராபி


II


இதுதான் கௌரவமா?





ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

நாட்கள் தோறும் மாறுசெய்து

வாரந்தோறும் வாட்டியெடுப்பீர்

தவணைமுறையில் தன்மானந்தீண்டி

ஆண்டு முழுவதும் மனம் சிதைப்பீர்

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

&&

த்தனையும் அழகாய்ச் செய்து

ஆண்டிலொரு நாளில் மட்டும்

தோள்வலிக்க மாலையிட்டு

தொடர்ந்து வந்து வாழ்த்துச் சொன்னால்

ஆசானுக்கு அதுதான் கௌரவமா? 

&&

ற்றிவைத்த ஏணிகளுக்கு

தூசுதட்டும் நாளின்று

எரிந்து கரையும் தீபங்களுக்கு

ஓர் அவசரத் திருநாளின்று!

- Jesslya Jessly

Monday, October 3, 2011

இது தேவையா?



பாடாய்ப் படுத்தும் "தினங்கள்"


I






'தம்பி, இன்று உங்கள் பள்ளியில் என்ன தினம் கொண்டாடுகின்றீர்கள்?'


விடுமுறை நாள் தவிர்ந்த வேறு ஏதாவது ஒருநாளில் காலையிலே எழுந்து வீதியில் எங்காவது ஒரு மூலையில் நின்று கொண்டிருங்கள். உங்களைக் கடந்து மலையேறும் சிறுமனிதர்களைப் போல முதுகை வில்லாக வளைக்கும் புத்தகப்பைகள் சகிதம் காலில் சக்கரம் கட்டாத குறையாக அலறியடித்து ஓடும் பள்ளிக்கூட மாணவர்களைப் பார்க்கலாம்.


அவர்களில்  ஒருவனை நிறுத்தி இந்தப் பத்தியின் ஆரம்பத்திலுள்ள வினாவைக் கேட்டுப்பாருங்கள். 'இன்று ஒரு தினமும் கிடையாது!' என்று அவன் பதில் கூறினால் அன்றைய தினம் நிச்சயம் உங்களுக்கு சுரண்டல் அதிஷடலாபச் சீட்டில் ஒருகோடி ருபாய் பரிசு விழும் அல்லது திருட்டுப் போன உங்கள் வெளிநாட்டுக் கைத்தொலைபேசி திரும்பக் கிடைக்கும். அதுவுமில்லையென்றால், அன்று மாலை இருட்டுவதற்குள் இலஞ்சம் வாங்காத போக்குவரத்துப் பொலீஸ்காரர் ஒருவரைச் சந்திப்பீர்கள்...!


ஒரு வருடத்தில் 365 அல்லது 366 நாட்களுள்ளதோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு விசேட தினம் மட்டும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சிறுவர் தினம், முதியோர் தினம், குடிநீர் தினம்.. மகளிர் தினம்... எயிட்ஸ் தினம்.. சயரோக தினம்... புகைபிடிப்போர் தினம்... என்று ஏதாவது வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஒன்றுமே இல்லாத தினம் என்று ஏதாவது நாட்கள் விட்டு வைத்திருக்கின்றார்களா என்ன?


மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய ஏதாவது ஒரு நற்பணியை மக்களிடையே முன்னெடுப்பதற்காகவும் அதுவிடயமாக நினைவூட்டி விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் இப்படியான விசேட தினங்கள் சர்வதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டன. எடுத்துக் காட்டாக எயிட்ஸ் தினம். அந்த உயிர்கொல்லி நோய் ஏற்படக்கூடிய விதம் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது பற்றியும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து அறிவூட்டும் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்காகப் பயன்படுகின்றது. இதுபோலவே சூழல் தினம்.. குடிநீர் தினம்..போன்றவற்றைக் கூறலாம்.


ஆனால் காதலர் தினம்.. முட்டாள்கள் தினம்... பெற்றோர் தினம்.. ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும் தினங்களுக்கு என்ன அர்த்தம் இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை.


பெற்றோர் தினம் என்று கூறி நாம் கீழைத்தேய மக்கள் ஒரு குறிப்பிட் தினத்தைக் கொண்டாடத்தான் வேண்டுமா? மேற்கத்தைய நாடுகளில் வாழும் மக்களின் குடும்பக் கட்டமைப்பின் தன்மை வேறு நமது மக்களின் குடும்பக் கட்டமைப்பின் தன்மை வேறு.

அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சுயமாக வாழ அனுமதித்து விடுகின்றனர். இதனால் பெற்றவர்களின் மீதான பிள்ளைகளின்  பொருளாதாரத் தங்கியிருத்தல் வெகு குறைவு. தமது படிப்பை முடித்ததும் தாமாகவே வேலைதேடிக் கொள்வார்கள், அவர்கள். அதுபோலவே, எதுவித நெருடலுமின்றித் தாமாகவே வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொண்டு விடுகின்றார்கள்.


முக்கியமாக பெற்றோருடன் இணைந்து வாழ்வது கிடையாது. தனியே தனிக்குடித்தனம்தான்.

இதனால்  வருடத்தில்  குறிப்பிட்ட நாளைத் தனியே ஒதுக்கி Parent's Day கொண்டாடுகின்றார்கள். எங்கோ தொலைவில் கிராமத்தில்  cottage களில் ஓய்வைக் கழிக்கும்  வயது முதிர்ந்த பெற்றோரை  பிள்ளைகள் சகிதம் போய்ப்பார்த்து அன்றைய நாள் முழுவதும் சலிக்கச்சலிக்கக் கொண்டாடிவிட்டு மறுதினம் வீடு திரும்பி மீண்டும் தமது தினசரி வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.

மறுதலையாக, பிறந்ததிலிருந்தே பெற்றோரின் அரவணைப்பில் கிடந்து திருமணமான பின்பும் கூட மாமி-மருமகள் சண்டைகளையெல்லாம் தாண்டி  ஏதோ ஒருவிதத்தில் விரும்பியோ இன்றியோ தாய் தந்தையருடன் பின்னிப் பிணைந்தே வாழும் வாழ்க்கை முறையைக் கொண்ட நமக்கு இந்தப் பெற்றோர் தினம் தேவைதானா?


II





 
பெற்றோர் தினம் போலவே நம்மை நாமே பரிசீலிக்க வேண்டிய மற்றுமொரு தினமும் உண்டு. அதுதான் அக்டோபரில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம்.

ஆசிரியர்களும் அவர்களது அளப்பரிய சேவைகளும் போற்றப்படவேண்டியவை என்பதிலே மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் பாடசாலைகளிலே  அந்தத் தினம் அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடப்படுகின்றதா?

ஆசிரியர்களோடு நேரடித் தொடர்புடையவர்களான மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் மேலதிகாரிகள் எவ்வாறு ஆசிரியர்களை நடாத்துகின்றார்கள் என்று பார்ப்போம்.


தற்போது பெருகிவரும் விஞ்ஞான தொழினுட்ப முன்னேற்றங்களுடனான இலத்திரனியல் காட்சி ஊடகங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் பாவனை காரணமாக மாணவர்களின் நடத்தைக் கோலங்களில் பிறழ்வுகள் அதிகரித்து வருவது யாவரும் அறிந்த ஒன்று. இதனால் பாடசாலைகளின் உள்ளும் புறமும் இளம் தலைமுறையினரைக் கையாளுதல்  ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. 


பாடசாலைகளிலே சீருடை அணிதல், தலைமுடி திருத்தல் முதற்கொண்டு   எதிர்ப்பாலாருடன் பழகுதல் வரை  ஒழுங்குவிதிகளுக்குள் மாணவர்களை  கட்டுப்படுவது  பிறழ்வான போக்குகளை நெறிப்படுத்துவது போன்ற சவால்கள் நேரடியாக  ஆசிரியர்களுக்கே விடப்படுகின்றன. இதனால் ஆசிரியர்-மாணவர் உறவுகளில் விரிசலும் முரண்பாடுகளும் எழுவதோடு அவை சிலவேளைகளில் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களாகவும் மாறிவிடும் அபாயமும் இருந்து வருகின்றது. 

இவற்றின் விளைவாக ஆசிரியர்கள் மாணவர்களால் மதிக்கப்படும் போக்கு மெல்ல மாற்றமடைந்து வருகின்றது. பல பாடசாலைகளில் குறிப்பாக வளர்ந்த மாணவர்கள் தமது ஆசிரியர்களை கண்ணியப்படுத்துவதை ஏதோ புராதன விடயம் என்பது போல நினைக்கின்றார்கள்.

பொதுவாகக் கூறினால், ஒருகாலத்தில் மாணவர்களின் போற்றுதலுக்குரியவர்களாக கருதப்பட்ட ஆசிரியர்கள் இன்று தமக்குரிய அந்த இடத்தை இழந்து வருகின்றார்கள் என்றுதான் கருதவேண்டியுள்ளது. (இதற்கு வேறு பல சமூகப் பொருளாதார காரணிகளும் துணையாகவுள்ளன.)

பல பாடசாலைகளில் ஆசிரியர்களை அதிபர்களே மதிப்பதில்லை. தாங்களும் ஒருகாலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் எனும் உணர்வின்றி அதிகாரமாக நடந்து கொள்கின்றனர். அற்ப காரணங்களுக்காக ஆசிரியர்களை  அவமானப்படுத்துவதும் தமது நிர்வாக பலத்தை பிறரிடம் காட்சிப்படுத்தும் விதமாக கெடுபிடிகள் வதைகள் புரிய முயற்சிப்பதும்   கூட நடப்பதுண்டு.


பெற்றோர்கள் இன்னும் ஆசிரியர்களை உயர்வாகவே நடாத்தினாலும் அவர்களில்  சிறு தொகையினராவது  கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளாமலில்லை.

தங்கள் பிள்ளைகளின் அறிவுக்கும் ஆளுமைக்கும் வழிகாட்டும் ஆசிரியர்கள் எப்போதாவது சிறிது அதிகமாக மாணவர்களைக் கண்டித்து அல்லது தண்டித்து விட்டால் போதும் (ஆனால்  அற்ப காரணங்களுக்காக மாணவர்களை மிருகத்தனமாக வதைத்த விதிவிலக்கான சில சம்பவங்களும் இல்லாமலில்லை). உடனே வெகுண்டெழுந்து அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் புரிந்து  அவமானப்படுத்தும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் தினம் எவ்வாறு பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது?

பெற்றோர்களும் மாணவர்களும் தாங்களாக முன்வந்து பாராட்ட வேண்டிய இந்த நிகழ்வைக் கூட ஆசிரியர்கள்தான் வழிநடாத்த வேண்டியுள்ளது. பல இடங்களில் ஆசிரியர்கள் ஏறத்தாழ தமக்குத் தாமே பாராட்டுதல் நடத்திக் கொள்கின்றனர்.

வருடத்தின் மீதி நாட்கள் முழுவதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து நடக்கும் மாணவர்களும் ஆசானின் மனங்களை நோகடித்து அதிர்ச்சி மதிப்புப் பெறும் பெற்றோர்களும் குறைகூறியே கொல்லும் அதிபர் மற்றும் மேலதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து ஒருநாளைத் தேர்ந்தெடுத்து மாலையிட்டுப் பாராட்டுவதை எப்படி மனதார  ஏற்றுக் கொள்ள முடியும்.

(தொடரும்)

- Jesslya Jessly


Wednesday, September 28, 2011

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




ஆதிக்கமா அல்லது அவசியமா?







ண்மையில்  பிரபல எழுத்தாளர் ஒருவரின் 'சிறுகட்டுரைகள்' என்ற நூலை தற்செயலாக படிக்க நேர்ந்தது. அதில் ஒன்றில் அறிஞன், கவிஞன், புலவன், இறைவன், தூதன் போன்ற பல   சொற்களுக்கு பெண்பாற் சொற்கள் நமது தமிழ் மொழியில் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இது எவ்வளவு தூரம் உண்மையென்பது தெரியவில்லை. ஆனாலும்  இதில் என்னை வசீகரித்த விடயத்தைச் சொல்லி விடுகின்றேன்.

பெண்களை வெறும் போகப்பொருளாக காதலியாக மனைவியாக பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே காணவிரும்பும் ஆணாதிக்க சமூகம்தான்  அவ்வாறு பெண்பாற் சொற்கள் நமது தமிழ் மொழியில் இல்லாதிருப்பதற்குக் காரணம் என்று கூறுகின்றார். அத்துடன் அந்த கருத்தை அவர் மேலும் விபரித்துச் செல்கின்றார்.

 வேடிக்கை என்னவென்றால் தற்போது கவிஞன் என்பதற்கு கவிதாயினி வந்துவிட்டது. இதற்காக அவர் கூறும் ஆணாதிக்கம் என்ற காரணத்தை  முழுமையாகப் புறக்கணித்துவிட முடியாது.  ஆணாதிக்கமும் பெண்டிமைத்தனமும் நமது சமூகத்தின் பெரும் சாபக்கேடுகள் என்பதிலே ஐயமில்லை.

அதேவேளை  பெண்பால் சொல்லுருவாக்கம் தழைக்காமைக்கு முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் நச்சுவேர்கள் மட்டும்தான் காரணம் என்பதை முற்றாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போதெல்லாம்  பூச்சாடி ஒன்று உடைந்தால் கூட "பெண்ணடிமைத்தனம்...ஆணாதிக்கம்" என்று பழி போடுவது  ஏதோ அறிவுஜீவித்தனம் போல் ஆகிவிட்டது.

அவ்வையார், ஜான்சி ராணி போன்ற சில விதிவிலக்குகள் தவிர, அந்தக் காலங்களில் இலக்கியம், ஆன்மீகம், தத்துவம், போரியல் போன்ற துறைகளில் பெண்கள் பரவலாக ஈடுபட்டிருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பெண்கள் ஈடுபடாமைக்கு வேண்டுமானால் ஆணாதிக்கமும் அதன் நேரடி விளைவான பெண்ணடிமைத்தனமும் காரணமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.

இன்று மேற்கூறிய துறைகள் உட்பட பெண்கள் ஈடுபடாத துறைகளே இல்லை எனலாம். எனவே பொதுப்பாற் சொற்களின் அளவு மெல்லச் சுருங்கி இனிமேல் பெண்களுக்குரிய சொற்களும் நமது மொழியில் உருவாக வேண்டிய கட்டாயம் கண்ணெதிரே தெரிகின்றது.

இதனால், சுஜாதா போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள் வேடிக்கை மதிப்பிற்காகப் பயன்படுத்திய சொற்கள் கூட (உ-ம் கவிஞை , அறிஞி, புலவி...) இனிவரும் காலங்களில் நமது தமிழ்  பண்டிதர் பெருமக்களின் முறைப்புகள், விரோதங்களையெல்லாம் தாண்டி சாதாரண வழக்கில் வரக்கூடிய சாத்தியம் நிறைய உள்ளது என்பது எனது கருத்து.

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

- Jesslya Jessly

Friday, September 23, 2011

அடப்பாவிகளா!

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!






I


ண்மையில்  அனுராதபுரம் பழைய நகர்பகுதியில் ஒட்டுப்பள்ளம் என்ற இடத்திலே அமைந்திருந்த முஸ்லிம்களின் சியாரம் என அழைக்கப்படும் ஒரு கல்லறை விஷமிகள் சிலரால் பகிரங்கமாக உடைத்துத்தரைமட்டமாக்கப்பட்டது. இந்தச் செய்தியை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இதை யார் செய்தார்கள் எதற்காகச் செய்தார்கள் என்ற வாதப் பிரதி வாதங்கள் பல நடந்து கொண்டிருக்கையில் இது குறித்த நாம் சில கருத்துக்களை முன் வைக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது குழுவினரைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்படும் சின்னங்களை மாற்றுக் குழுவினர் அல்லது விஷமிகள் குழுவினர் திட்டமிட்டு அழிப்பது போன்ற பல்லாயிரக்கணக்கான சம்பவங்கள் மனித வரலாற்றிலே இடம்பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இப்படியான விஷமத்தனங்கள் மூலம் குறிப்பிட்ட மக்களைச் சீண்டிக் கோபப்படுத்தி அதனை ஒரு பெரிய விவகாரமாக ஊதிப்பெருப்பித்து தங்களது குறுகிய நோக்கங்களை கேவலமான வழியில் அடைந்து கொள்வதுதான் இதற்குக் காரணமானவர்களின் நோக்கமாக இருக்கவேண்டும்.

அதேவேளை இந்தியாவின் அயோத்தி நகரில் 2006 டிசம்பர் மாதம் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்புச்சம்பவம் ஏனோ நினைவுக்கு வருகின்றது.  அந்தவேளை மசூதி இடிக்கப்பட்ட விடயம் பல்வேறு பிரிவினராலும் வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகிக் கொண்டிருந்தவேளையில் நடிகர் கமலஹாசன், "அடப்பாவிகளா, உங்களது மதச்சண்டையில் இந்தியாவின் ஒரு வரலாற்றுச் சின்னத்தை அநியாயமாக உடைத்து விட்டீர்களே!" என்று ஒரு கருத்தை தனது ஆதங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.

உண்மையில் மற்ற எல்லாவற்றையும் தாண்டி இதைத்தான் நாம் நிறைய யோசித்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களின் போற்றுதலுக்குரிய விடயம் என்பதற்காக நமது உலகின் / தேசத்தின் மனிதவாழ்வின் கலாசார சின்னங்களை அப்படியே மாற்றி மாற்றி அழித்துக் கொண்டிருந்தால் இறுதியில் நமது எதிர்கால சந்ததிக்காக நாம் விட்டு வைக்கப்போகும் வரலாற்றுச் சின்னங்களும் அடையாளங்களும்தான் எவை?

அனுராதபுரத்தில் சியாரம் அழிக்கப்பட்டாலென்ன அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டாலென்ன ஆப்கானிஸ்தானின் பாமியன் புத்தர் சிலை தகர்க்கப்பட்டாலென்ன நஷடம் என்னவோ நம் எல்லோருக்கும்தான்.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்!


II









திலே இன்னுமொரு விடயமும் உண்டு.

இது சிறிது சர்ச்சைக்குரியதுதான் என்றாலும் குறிப்பிடாமல் விடுவது எழுத்து நாகரிகத்துக்கு உரியதல்ல.

இலங்கையில் உள்ள முஸ்லீம்களிடம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சில கொள்கைகள் இருந்து வருகின்றன. சில குழுவினர் தமது மதநம்பிக்கை காரணமாக  சமயப் பெரியவர்கள் அல்லது மகான்கள் எனக்கருதப்படுவோரின் இறந்த உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை புனிதமான இடங்களாக கருதி அதிலே பிரார்த்தனைகள் நேர்ச்சைகள் வைத்து வருகின்றனர்.

அதே வேளை இன்னும் சிலர்,  மேற்குறிப்பிட்ட விடயங்களும் இடங்களும் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறானது என்றும் அத்தகைய கல்லறை வழிபாடுகள் புரிவது இறைவனுக்கு இணைவைப்பதை ஒத்தது என்றும் கூறி மறுதலித்தும்  வருகின்றனர்.
இந்த இரு பிரிவினருக்குமிடையில் நீண்டகாலமாகத் தொடரும் பனிப்போரும் அவ்வப்போது அங்காங்கே தலைகாட்டும் பதற்ற நிலைமைகளும் இருந்து வருவதை யாரும் மறுப்பதற்கில்லை.

இதன் விளைவாக, ஒரு காலத்திலே நமது நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக இருந்து  வந்த சியாரம்கள் பல நம்மவர்களாலேயே அழித்தொழிக்கப்பபட்டிருக்கின்றன. அந்த சியாரம்கள் இஸ்லாமிய மதத்தின் கோட்பாடுகளுக்கு  முரணான அடையாளச் சின்னங்கள் என்று முஸ்லிம்களில் பெரும்பான்மையானோரிடம் அபிப்பிராயமிருப்பதால் அவை அழிக்கப்பட்ட வேளைகளில் யாரும் அதை ஒரு பெரிய விடயமாகவே கருதியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், இப்போது அனுராதபுரத்திலே சியாரம் அழிக்கப்பட்டதற்கு முஸ்லிம்கள் அனைவரும் -கொள்கை வேறுபாடுகளையெல்லாம் தாண்டி- ஏதோ ஒரு வகையில் கவலை கொண்டுள்ளதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது.

இந்த சியாரம்களும் அது போன்ற வேறு சின்னங்களும் சர்ச்சைக்குரிய விடயங்களான போதிலும் இதிலுள்ள சரி பிழைகளுக்கப்பால் நின்று பார்த்தால் இதுவரை காலமும் அவை தங்களையறியாமலே ஒரு வரலாற்றுப் பணியை செய்து வந்திருக்கின்றன.

அதாவது  பண்டைய காலந்தொட்டு இலங்கைத் தீவில் எங்கெல்லாம் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்களோ அங்கெல்லாம் அங்கனம் முஸ்லீம்கள்  வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்களாகவும் மறுக்கவே முடியாத வரலாற்றுச் சின்னங்களாகவும் இந்த சியாரம்கள்  இருந்து வந்திருக்கின்றன. அவற்றை நாமே அழித்தொழித்ததன் மூலம் இலங்கை முஸ்லீம் மக்களில் ஒரு சாராரின் கொள்கைப் பிடிப்புகள் வேண்டுமானால் காப்பாற்றப்பட்டு நலமாக இருந்திருக்கலாம்.

ஆனால் மறுபுறத்தில் அது  தங்களது  முன்னோர்களின் ஆதாரங்களை தாமே அழித்துத் தீர்த்து விட்ட செயலாகவும் மாறிவிட்டதுதான் பரிதாபம். அன்று தமது கொள்கைக்காக முஸ்லீம்களே சியாரம்களை மூர்க்கமாக உடைத்துத் தரைமட்டமாக்கிய போது ஆதரித்தும் ஆமோதித்தும் நின்றவர்கள் இன்று அதே அக்கிரமத்தை அந்நியர்கள் அதிகார வெறியுடன் புரியும்போது...  

 தான் இகழ்ந்த வார்த்தைகளையே பொறுக்கியெடுத்து  தன் தாய்க்குத் வேறு ஒருவன் பழி கூறப் பார்த்து நிற்கும்  மகனைப்போல...


எந்தவிதமான உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.



- Jesslya Jessly

Thursday, September 8, 2011

திறந்திடு அறிவே!




பேய்களை நம்பாதே!







பேய்களுக்குப் பயப்படாதவர்கள் என்று இந்த உலகில் யாராவது உண்டா? 'ஏன் நான் இருக்கிறேனே !' என்று உங்களில் பலர் துள்ளியெழுவது புரிகிறது.. சரி, சரி! ஆனால் நெஞ்சைத் தொடாமலே சொல்லுங்கள்.. உங்கள் வயதின் எந்தக் கட்டத்திலாவது பேய்களுக்குப் பயந்துதானே இருப்பீர்கள்? ஆம்.! என்பதுதான் உண்மை. இல்லை என்று உங்களால் கூறவே முடியாது.

சிலருக்கு பேய்கள் பற்றிய சிறுவயதுப் பயமெல்லாம் தற்காலிகமாக நீங்கியிருக்கும். சிலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். பலருக்கு  பேய்களைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. ஆனால் எங்காவது தனியாக இருளில் ஆளில்லா சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது உடனடியாகத் துணைக்கு ஓடிவருவது நமது மூளையின் சிந்தனை மையத்தின் சேமிப்பிலிருக்கும் பேய்கள் பற்றிய எண்ணங்கள்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலபேர்தான் பேய்களைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். அவர்களைப் பற்றி பிறகு சாவகாசமாகப் பார்க்கலாம்.

இப்போது பயப்படுபவர்கள்...

உங்களுக்குத் தெரியுமா பேய்களுக்குப் பயப்படுபவர்களைவிட தாங்கள் பயப்படுவதை காட்டிக்கொள்ளாமல் நடிப்பவர்கள்தான் அதிகம்.  ஒரு நம்பகமான புள்ளிவிபரம் இதைக் கூறுகின்றது. சரி, புள்ளிவிபரம் இருக்கட்டும் ஒருபக்கம்..! நாம் இந்தப் பேய்கள் எப்படி உருவாகின...அல்லது  உருவாக்கப்பட்டன ஏன் இந்தப் பேய்கள் பற்றிய பயம் மட்டும் ஏன் கடைசிவரை எல்லோரையும் இப்படிப் பிடித்தாட்டுகின்றது என்று சிறிது அலசுவோம்.


இதற்காக வாருங்கள் நமது குழந்தைப்பருவத்துக்கு ஒரு நடை போய்விட்டு வரலாம்..


சிறுவயதிலே உங்கள் அம்மா அல்லது பாட்டி பாட்டன்கள் கதைகள் சொல்லி உணவு ஊட்டியிருப்பார்கள் அல்லது தூங்க வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் உங்களை மிரட்டி வழிக்குக் கொண்டுவர தங்களுக்குத் தெரிந்த பல வித்தைகளை அவர்கள் முயன்றிருப்பார்கள். அவற்றிலே சுலபமானதும் உடனடிப் பலன் தருவதுமான வித்தை பேய்கள் பற்றிய கதைகளும் பயமுறுத்தல்களும்தான் போலிருக்கின்றது.

தொட்டிலில் ஆட்டிக்கொண்டே தாலாட்டுப் பாடும் தாய் அடங்காமல் அழும் தன் குழந்தைக்கு, 'அந்தா பேய் வருது...உன்னைப் பார்த்து பல்லைக் காட்டுது... பேசாமல் தூங்கு!' என்று மிரட்டுவதோடு தானும் பயந்தது போல பாசாங்கு செய்வாள். இந்த நிகழ்ச்சி அந்தத் தாயைப் பொறுத்தவரையில் தனது குழந்தையைத் தூங்கச் செய்யும் வெகு சாதாரண உத்தி அல்லது சிறு ஏமாற்று அவ்வளவுதான். ஆனால் அந்தச் சிறுகுழந்தைக்கோ அதன் மனவளர்ச்சியையும் எதிர்கால ஆளுமையையும் பாதிக்கப்போகும் ஒரு முக்கியமான கல்வெட்டுச் செதுக்கல்!

 ஆம், ஒரு குழந்தைக்கு தனது தாயின் வார்த்தைகளின் அர்த்தம் முழுமையாகப் புரியாது போகலாம். ஆனால் அவளது ஒவ்வொரு சிறு அசைவும்கூட  உடல்மொழிக்குரிய உணர்வுகளாக அந்தக் குழந்தையினால் மிகவும் கவனமாக உள்வாங்கப்படுகின்றது.

ஒரு பூனையையோ நாயையோ குழந்தைக்குக் காண்பித்து அந்தத் தாய் பயமுறுத்துவாளாக இருந்தால் அந்தப் பயத்தின் எல்லை மிகவும் குறுகியதாகவே இருக்கும்.  குழந்தை சிறிது பெரியவானகியதும் 'ஓ! நாயும் பூனையும் இவ்வளவுதானா?' என்று தெரிந்து பயம் துறந்து விடுவான். மாறாக,இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பித்து அவன் பயமுறுத்தப்படுவதால்  வாழ்க்கை முழுவதும் காணமுடியாத ஏதோ ஒன்றுக்கு பயந்தபடியேதான் இருக்கப்போகின்றான்.

இந்த எண்ணப்பாங்கு அவனது வாழ்வின் இளமைப்பருவத்திலே சிலையில் எழுத்தாகப் பதிந்து விடுவதால் பின்பு எவ்வளவுதான் அறிவியல் தாக்கங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டாலும் மூளையின் எங்கோ ஒரு ஆழமான புள்ளியில் 'அந்தப்பயம்' இருந்து கொண்டேதான் இருக்கும். இதனால்தான் அறிவியல் ரீதியாக அமானுஷய சக்திகளுக்கு வாய்ப்பில்லையென்று நன்கறிந்த விஞ்ஞானிகளுக்குக்கூட லேசான பேய்ப்பயம் இருக்கின்றது.

அடுத்து...

ஆதிகால மக்களிடம் பேய்கள் பற்றிய பயம் எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும் என்று சற்றுப் பார்ப்போம். வேட்டையாடி நாடோடியாக வாழ்ந்த காலத்திலே மழை, இடி, மின்னல், புயல், நிலநடுக்கம், கடற்கோள், கானல்நீர், வானவில், ஆலங்கட்டி மழை காட்டுத்தீ, கிரகணங்கள், வால்நட்சத்திரங்கள், தொற்றுநோய்கள் போன்ற இயற்கையின் நிகழ்வுகளுக்குரிய சரியான விளக்கம் மனிதனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இதனால் காடுமேடுகளில் அலைந்து திரிந்தபோது அவன் கண்ணுற்ற இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு தான் அறிந்திராத சில சக்திகள்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதினான். அவற்றில் தனக்கு உவப்பான  இயற்கை நிகழ்வுகளுக்கு நல்ல சக்திகளும் அழிவு அல்லது அச்சம் தரும் நிகழ்வுகளுக்கு தீய சக்திகளும் காரணம் என அவன் எண்ணியதில் வியப்பேதுமில்லைதானே. பின்பு அவற்றுக்கு முறையே கடவுள்கள் என்றும் பேய்கள் என்றும் பெயரிட்டிருப்பான். 

ஆரம்பத்தில் எளிமையாக இருந்த மனிதனின்  வாழ்க்கை காலப்போக்கில் படிப்படியாக சிக்கலடைந்தது. மனிதனின் அறிவியல் வளர்ச்சியும் வாழக்கைத்தரமும்  துரிதமாக வளர்ந்த சென்ற போது ஆதியில் அவனை மிரட்சிக்குள்ளாக்கிய பல இயற்கையின் விளைவுகளுக்குரிய காரணங்களை கண்டறிந்து தெளிவடைந்தான். எனினும் மனித வாழ்வின் சமூக அமைப்புகளிலும் அதன் போக்கினில் ஏற்பட்ட சிக்கலான மாற்றங்களின் காரணமாக அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொள்வதிலும் அதுபற்றிய கருத்தாக்கங்களிலும் வேறுபாடுகள் உண்டாயின.

இதை இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் காட்டு விலங்குகளில் ஒன்றாக வாழந்திருந்த மனிதன் படிப்படியாக நாகரிகமடைந்து தனது சூழலையும்  அவற்றில் நிகழும் மாற்றங்களையும் அவதானித்து ஆய்வுகள் பல புரிய ஆரம்பித்தவுடன் இயற்கையின் மாயத்திரைகள் பல விலகத் தொடங்கின. அவற்றின் விளைவாக பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகின.

ஆரம்பத்திலே மனிதனால் கண்டறியப்பட்ட சகல உண்மைகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கிலே அங்ஙனம் அவன் கண்டறிந்த அறிவியல் உண்மைகள் பலவற்றை-அவை எவ்வளவுதான் ஐயம் திரிபற உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கூட- அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதளவு மனிதனே உருவாக்கி வளர்த்த சில நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் மக்களைத் தடுத்து வைத்தன.

உதாரணமாக ஒருகாலத்தில்  நாம் வாழும் பூமியே இந்த பிரபஞ்சத்தின் மையமாகக் கருதப்பட்டது. சகல கோள்களும் சூரியனும் நமது பூமியையே சுற்றி வருவதாகக் கருதப்பட்டு வந்தது. இந்தக் கருத்தை ஏற்றுப் பல மத நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் உருவாகி வலுப்பட்டிருந்தபோது "பூமியல்ல சூரியன்தான் ஞாயிற்றுத் தொகுதியின் மையம்" என்பதை  அறிஞர்கள் பலர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார்கள். ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பை அன்றைய செல்வாக்கிலுள்ள மதநிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் அத்தகைய புதிய உண்மைகளை ஆய்ந்தறிந்து கூறும் அறிவியலாளர்களுக்கு மரணதண்டணை உட்பட பல தண்டனைகளையும் வழங்கியது.

இது போலத்தான் அமானுஷய சக்திகள் பற்றிய பயமும் நம்பிக்கைகளும். இத்தகைய நம்பிக்கைகள் அறிவியலாளர்களால் நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும் கூட அவற்றை வைத்து காசுபார்க்கும் அல்லது தங்களது ஆதிக்க அடக்குமுறை நலன்களுக்குப் பயன்படுத்தி வருகின்ற ஒரு சரரார் விடுவதாக இல்லை.

மின்சார வசதிகள் இல்லாத மன்னர்களின் ஆட்சிமுறை இருந்த நாட்களில்  திருடர்களும் வழிப்பறிக் கொள்ளையர்களும் ஒரு உத்தியைக் கையாள்வதுண்டு.  நீண்ட காலமாக  திருடிச் சேர்த்த சொத்துக்களை எங்காவது பாழடைந்த  வீடுகளிலும் கட்டிடங்களிலும் பதுக்கி வைத்திருப்பர். இதனால் குறிப்பிட்ட அந்தப் பிரதேசத்திலே மக்கள் சுதந்திரமாக உலாவுவதை அவர்கள் விரும்புவதில்லை. இதற்காக அந்தத் திருடர்கள் பகலிலே நன்றாகத் தூங்கி பின்னிரவில் எழுந்து கறுப்புப் போர்வையால் தங்களை மூடிக் கொண்டு அந்தக் கட்டிடங்களைச் சுற்றிலும் அவலக்குரல் எழுப்பியபடி  உலாவுவார்கள். அப்படிச் செய்வதனால் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக ஊருக்குள் கதை பரவும். அதனால் அந்தப் பகுதிக்கு பகலிலும் கூட பொது மக்கள் வரத்துணிய மாட்டார்கள். இதனால் பதுக்கிய பொருளும் திருட்டு பற்றிய ரகசியமும் பிறருக்குத் தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான்  அவர்களது பயமுறுத்தலின் பின்னாலுள்ள செய்தி.

மேலே நான் கூறிய விடயத்தை பேய்கள் பற்றிய பயத்திற்கு மட்டுமன்றி,  இந்த சமூகத்திலே உலாவும் அவசியமற்ற விடயங்களான மூடநம்பிக்கைகள் அறிவியலின் வளர்ச்சியோடு இயல்பாக அழிந்து விடுவதிலிருந்து வேண்டுமென்றே கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கூட அப்படியே பொருத்திப் பார்க்கலாம். 

 திருடர்களுக்கு தமது திருட்டுச் சொத்துகளைப் பாதுகாக்க பேய்கள் எனும் கருத்தாக்கம் எவ்வாறு பயன்படுகின்றதோ அவ்வாறுதான் நமது சமூகத்தில் வாழும் மக்களின் விழிப்புணர்ச்சியை மழுப்புவதற்கு பல மூடநம்பிக்கைகள் உதவுகின்றன. பல்வேறு தெய்வங்கள், சூனியம், பேய், பிசாசு, ஆவிகளிடம் பேசுவது, மந்திர தந்திரங்களால் நோய்களைக் குணப்படுத்த நினைப்பது, சாமியார்களிடம் நம்பிக்கை வைத்து ஏமாறுவது போன்ற விடயங்களின் பின்னால் இருப்பதெல்லாம் வெறும் ஏமாற்றுப்பித்தலாட்டங்களன்றி வேறு எதுவும் கிடையாது.

இவ்வாறு  மக்களின் அறியாமையைப் பயன்படுத்தியும் தூண்டியும் வயிறு வளர்ப்பவர்களின் கதைகள் தற்போது அம்பலமாகிக்க கொண்டிருப்பதை பத்திரிகைகளிலும் வேறு ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள். இவற்றை நிருபிக்க மிகவும் பிரபலமான சாமியார்களின் ஆசிரமங்களிலே நடந்த மற்றும் நடந்து வரும் சம்பவங்களே போதும்.

-'Mutur' Mohd. Rafi

(தொடரும்)

Saturday, September 3, 2011

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை!




அடையாள   அட்டைகள்









ன்றாட வாழ்வில் நாம் பொதுவாக பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்துகின்றோம். பாடசாலை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டை, தொழில் நிறுவன அட்டைகள் என்று பல்வேறு அடையாள அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் நமது புகைப்படம் மற்றும் முக்கியமான விபரங்கள் காணப்படுவதுண்டு.


ஆனால், காலம் செல்லச் செல்ல நமது அடையாள அட்டைகளில் இருக்கும் புகைப்படத்துக்கும் நமது உண்மையான தோற்றத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் தோன்றவாரம்பித்து மெல்ல மெல்ல அந்த வித்தியாசங்கள் அதிகரித்து, ஒரு கட்டத்தில் உற்றுப்பார்த்தாலும் கூட ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்க முடியாதளவு  வேறுபட்டுப் போய் விடுவதும்  உண்டு.


புகைப்படம் மட்டுமல்ல கால ஓட்டத்தில் நமது சுயவிபரங்களில் கூட சில மாற்றங்கள் உண்டாகிவிடுவதுண்டு. ஒரு காலத்தில் மாணவனாயிருப்பவர் தொழில் செய்பவராவதும் தனியாளாய் இருப்பவர் மணமுடித்தவராவதும் போன்ற மாற்றங்களைக் கூறலாம்.


இவ்வாறாக நமது தோற்றத்திலும் சுயவிபரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றினை நாம் வாழ்வின் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு வேறு புகைப்படம் பதிய விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து 'மாட்டேன் போ! நான் சின்ன வயதில் எடுத்த படம்தான் அழகாயிருக்கிறது.' என்று நீங்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிந்து புதிதாக  அடையாள அட்டை ஒன்றைப் பெற மறுத்தால் சிரமம் யாருக்கு என்று யோசித்துப் பாருங்கள்.


 ஒரு பழைய அடையாள அட்டை - அது ஒருகாலத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்த போதிலும்- எப்படி இன்றைய தேவைக்கு உதவாமல் போய்விடுகின்றதோ அப்படித்தான் நாம் ஒருகாலத்தில் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த சில விடயங்களும் வழக்கொழிந்து போய் விடுகின்றன.

இது காலத்தின் யதார்த்தம். விரும்பியோ விரும்பாமலோ இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கின்றது. மாறாக, வரட்டுப்பிடிவாதம் பிடித்து நீங்கள் நின்றால் இன்றைய யதார்த்த உலகை புரிந்து கொள்வதிலும் அதற்கேற்ப உங்கள் வாழ்வியலை எடுத்துச் செல்வதிலும் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இப்போது யோசித்துப் பாருங்கள்....

இன்று நாம் வாழ்வியல் தேவைகளுக்காக பின்பற்றி வருகின்ற சித்தாத்தங்கள், கொள்கைகள் உட்பட எல்லாமே நமது அடையாள அட்டைகள் போன்றதுதான். அவற்றிலே தெளிவாக  நாள், மாதம், ஆண்டு கொண்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே தவிர அவை அனைத்துக்கும் ஒரு செல்லுபடியாகும் கால எல்லை இருக்கத்தான் செய்கின்றது.


நாம் எவ்வளவுதான் புனிதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும்   இயற்கை எனும் இரக்கமற்ற சிற்பி காலம் எனும் உளி கொண்டு அனைத்தையும் செதுக்கிக் கொண்டேதான் இருக்கின்றான்.


வேறு வார்த்தைகளிலே சொல்லப்போனால் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் என்றுமே மாறாமல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரே விடயம்.


தவிர, இன்றைய இளைய தலைமுறைச் சிறார்களின் பரந்துபட்ட அறிவுக்கு இடம்கொடுக்கும் வகையில் நாம் அனைவருமே தயாராக வேண்டியிருக்கின்றது. ஒரு காலத்தில் 'அது ஆகாது' என்றோ 'இது கூடாது' என்றோ கூறினாலே போதும் ஒரு விடயத்திலிருந்து இளையவர்களைத் தடுத்துவிடக்கூடியதாக இருந்தது.


பின்பு அந்த நிலை சிறிது மாற்றமடைந்து 'அது ஆகாது!' என்பதற்கு நாம் ஏதாவது விளக்கம் தர வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு அந்த விளக்கம் கூட அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டியுள்ளது என்பதுதான் மறுக்கவே முடியாத யதார்த்தம்.


நிலைமை இவ்வாறிருக்கும் போது இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு நமது பழைய துருப்பிடித்த கொள்கைகளையே இன்னும் வரட்டுத்தனமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் வேலைக்காகுமா?


இடைவிடாது மாறிக் கொண்டேயிருக்கும் நமது உலகில் சிலபேரின் பேச்சுக்களைச் செவிமடுத்திருப்பீர்கள். அதாவது, தாங்கள் வேதவாக்காகக் கருதும் அல்லது நம்பும் சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகளில் வாழ்ந்திருப்பார்கள். அவை எதுவித மாற்றத்திற்கும் உட்படாமல் இருக்கின்றது என்று பெருமையடிப்பதையும் கூட பார்த்திருப்பீர்கள்.


 இவர்களுக்காகச் சிரிப்பதா அழுவதா கூறுங்கள்?


 சரி, அதெல்லாமிருக்கட்டும், 'மாற்றமேயுறாதிருக்கும்'  அவற்றைச் சிலாகித்து, எக்காலத்திற்கும் பொருந்திப்போகக் கூடியவை என்று  இவர்கள் கூறுவார்களேயானால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.

இதுகுறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!


- Jesslya Jessly


1927     இருவருமே(அன்னை) தெரேஸாதான்!   1997






"எல்லாமே மாற்றமடையும் -என்பதைத்தவிர மற்ற எல்லாமே மாற்றத்திற்குள்ளாகும்!"

Friday, September 2, 2011




சிறகுகள்
வலைப்பூவைப்
பார்வையிடும்
நண்பர்கள்
அனைவருக்கும் 
எனது உற்சாகமான
ரமழான் வாழத்துக்கள்!

இந்தப் பண்டிகையை
வெறுமனே
களியாட்டங்களாய்
மட்டும்
கொண்டாடித்
திருப்தியடைந்து விடாமல்
நமது வாழும்
சூழலிலுள்ள
சக மனிதர்களில்
தேவையுள்ளவர்களிலே
குறைந்தபட்சம்
ஒருவருக்காவது 
போதுமான
உணவு, உடை,
மற்றும்
அவசியமான
பண்டங்களை
வழங்கி
இன்புறுவோம்!
Jesslya Jessly

Thursday, September 1, 2011

நாயுடன் ஒரு பேட்டி

('செருப்புடன் ஒரு பேட்டி' என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையைப்  கடித்ததன் விளைவு)






உங்கள் இனம் பற்றி ஏதாவது இயம்புவீர்களா?

உதவுவதற்கென்றே உருவெடுத்தோம்
மிருகமெனப்பெயரெடுத்தும்
காடுகளில் வாழ்ந்ததில்லை
வீடுகளன்றி எமக்கு போக்கிடம் வேறில்லை.
காவல் காக்கும் கடமைதான் கடவுள் எமக்கு தந்த வரம்
மிச்சம் மீதிவரும் போது நாங்கள் இருப்பதும் தெரியவரும்
வித்தை காட்டியும் பிழைப்பார்கள்
எம்மை விற்றும் பிழைப்பார்கள்.

ஒழுங்காய் உணவு தரவில்லை என்று புலம்புகிறீர்களே உன்னதமான நன்றியறிதலுக்கு உங்களைத்தானே உதாரணமாகச் சொல்கின்றோம்.

அன்பு பொங்கி வரும் போது 'நன்றியுள்ள நாய் 'என்பீர்கள்
சந்தோசம்.
ஆத்திரம் தலைக்கேறினால்
நன்றி கெட்டநாய் என்கிறீர்களே!

சரி போகட்டும் முதல் முதலாக உம் இனத்தை விண்ணுக்கனுப்பிப்பி மண்ணில் பெருமை தரவில்லையா?

வாவ்..வவ.வவ்(அஹ்தாகப்பட்டது- ஹஹ்ஹஹ்ஹா!...)
விண்ணுக்கெமமையணுப்பினீர்
விக்கினமின்றித் உதவி புரிந்தோம். எம்மைப்பலியாக அனுப்பி பரீட்சித்தீர்
பின்னர் குஷியாகப்போகப்புறப்பட்டீர்.
ஓகே...ஓகே..காட்டில் வாழக்கடவாமல் வீட்டில் வாழவழிவிட்டோம். வீட்டுவாயிலிலும் எமதன்றி உமது பேரையன்றோ பொறித்திடடோம். மட்டுமா 'கடிநாய் கவனம்' என்றொரு கௌரவத்தையும கச்சிதமாய் தந்திட்டோம்.

கள்ளர் கயவர் அண்டாது துள்ளிக்குதித்து வெருண்டோட
எழுதியிருந்தால் தப்பில்லை.
பஞ்சம் பசி பட்டினி என்று
கெஞ்சித்திரியும் மாந்தர்களை
மறித்துது; திருப்பி அனுப்பி விட
நாங்கள் இல்லா வீடுகளிலும்
எங்கள் நாமம் உண்டல்லோ?!

உயர் தர வீடுகளிலும் உல்லாசமாக வாழ்கிறீர்கள் தானே?

கழுத்தோடு கட்டி கையில் வைத்துக்கொண்டு
பிஸ்கட்டை எறிந்து பிடிக்கச்சொல்லி
என் உணவு வேளை அங்கு உல்லாச வேலையாகிறது.(.......மௌனம்........)
மாடிவீட்டு மழலைகள் போல்
தெருவோரச் சுதந்திரத்துக்காக தினம் ஏங்குகிறோம்.
அக்கரைப்பச்சைகள் எங்களுக்கும் உண்டு.

சரி சரி. கொஞ்சம் பொதுவாகப் பேசுவோம். அது ஏன் அடிக்கடி வைக்கோல் போரில் போய் படுக்துக்கொள்கின்றீர்கள்.

நாங்கள் படுப்பது கிடக்கட்டும். .அது உங்கள் 'படுப்பு' வகையறா போன்றல்ல.
சீசனுக்கு சீசன் ஊரூராய் வந்து. உள்வீடுவரை
அழையாது புகுந்து-கவனியும் அழையாது புகுவது நாங்கள் மாத்திரம் அல்ல
உருகிவழிந்து உணர்ச்சியூட்டி உங்கள் பொன்னான வாக்குகளை
வாரியள்ளிக் கொண்டு போய் கூவிவிற்றுவிட்டு
உயர் சபையில் போய் ஒரு ஆட்சி முடியுமட்டும்
'படுத்து'திரிகிறார்களே !!!!!
அவர்களது நெஞ்சுச்சட்டை பிடித்து
நாக்கைப்பிடுங்கிச்சாக
நாலு கேள்வி கேட்க துணிவிருக்கா
(மௌனம்)
அதாவது
 உரிமையுள்ள பசு உண்ண வந்தால் ஒன்றும் செய்வதில்லை.
ஊரான் பசு வந்தால் உறுமத்தவறுவதில்லை. அவ்வளவுதான்.

உண்மை. அந்தவகையில் நீங்கள் எவ்வளவோ மேல். இன்னொன்று .எதில் அடிபட்டாலும் காலைத்தானே தூக்குகிறீர்கள். அது ஏன்?

வேறெதற்கு......
எல்லாம் ஒரு அனுதாபத்தை எதிர் பார்த்து;த்தான்
இருந்தாலும்
ஏனெதற்கென்றில்லாமல் நீங்கள் எடுத்ததற்கெல்லாம அனுதாபம் தேடி
கண்ணீர் விடுதலிலும் பார்க்க
எம் கால் தூக்கல் பிசகில்லை காண்.

சரி... .கால் கிடக்கட்டும். அது ஏன் உங்கள் வாலை நிமிர்த்தவே முடியாதுள்ளது?

ஏன் முடியாது.
நீங்களாக நினைத்தால் முடியாது.
நாங்கள் நினைக்க வேண்டும். எனவே எங்கள் வாலை நிமிர்த்துவது இருக்கட்டும்.
எங்கள் வால் நிமிர்ந்தாலும் நிமிரும். உங்களில் வால்பிடிப்பவர்களை நிமிர்த்தமுடியும்h? (மனதுக்குள்: வால் ஒன்றுதான் குறை)

இந்த கால் வால் என்று நமது பேட்டி வந்துவிட்டதால் அந்தவரிசையில் அவசியம் ஒன்று கேட்டாக வேண்டும். அதாவது குறிப்பாக மின்கம்பங்களைக்கண்டு விட்டால்  உடனே அபிசேகஞ்செய்யத்தொடங்கிவிடுகிறீர்களே......

பதில் ரொம்பமுக்கியமோ?
அடுத்தவனின்
அந்தரங்கம் அறிந்து
அம்பலப்படுத்தி
அதில் சுகங்காணும்
கேவலமான புத்தியை
உங்களோடு மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
................ அவசியம் தெரியணுமாம்..வாhhhவ்-(அதாவது- 'ஹூம்ம்ம்...')

எதற்கெடுத்தாலும் விரக்தியாகவே பேசுகிறீர்களே. திருப்திப்படும்படியாக எதுவுமில்லையா?

ஏன் இல்லை.
'நாயைச் சுடுவது போல்...'
என்பது மாறி
'மனிதனைச்சுடுவது போல் ;;;
என்று
நாம் கூறும் நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்களே!!!

அதுவும் அப்படியா....சரி...உங்களுக்குப் பிடித்த கூற்று.

நன்றி கெட்டமக்களைவிட
நாங்கள் மேல் என்று
நீங்கள் சொல்வது.

(ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி நமக்கே கடிவிழுதே!!!ருட்டமாத்தவேண்டியதுதான்.) ஓக்கே  உங்களுக்கும் நிறைய நியாயமான பிரச்சிளைனகளும் பொறுப்புக்களும் கடமைகளும் இருப்பது தெரிகிறது. அதனால உங்களவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி பிரச்சினைகள் தேவைகள் பற்றிப் பேசினால் என்ன?

எம்மை தனியாகக் கண்டாலே கல்லெடுக்கிறீர்கள்.
இந்த லட்சணத்தில் எங்கே கூட்டம் கூடுவது?!
மீறி கல்யாணவீட்டிலோ கத்ததம் பாத்தியாவிலோ
ஒன்று கூடினால்
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே திடீர்தாக்குதலுக்கு உள்ளாகி விடுகிறோம்.
இதை யாரிடம் போய்முறையிடுவது. முறையிட்டாலும் முடிவுகிட்டுமா?
ஒருவிசாரனைக் கொமிசனைப்போட்டு மூடி. இனந்தெரியாத நபர் என்று எங்களுக்கும் தீர்ப்புத்தந்து விடமாட்டீர்கள்.?

இறுதியாக ஒரு கேள்வி. எதையாவது பற்றி சீரியசாக சிந்திப்பதுண்டா?

உண்டு.
சில தலைவர்களையும் சில அதிகாரிகளையும்
பார்க்கும் போது
அவர்களை அடித்து
மன்னிக்கவும் கடித்து
விரட்டிவிட்டு
அவ்விடத்தை
நாங்களே வகித்தாலென்ன என்று சிந்திப்பதுண்டு.....
என்ன சொல்கிறீர்கள்???


Mutur- Abdullah