Thursday, September 1, 2011

நாயுடன் ஒரு பேட்டி

('செருப்புடன் ஒரு பேட்டி' என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையைப்  கடித்ததன் விளைவு)






உங்கள் இனம் பற்றி ஏதாவது இயம்புவீர்களா?

உதவுவதற்கென்றே உருவெடுத்தோம்
மிருகமெனப்பெயரெடுத்தும்
காடுகளில் வாழ்ந்ததில்லை
வீடுகளன்றி எமக்கு போக்கிடம் வேறில்லை.
காவல் காக்கும் கடமைதான் கடவுள் எமக்கு தந்த வரம்
மிச்சம் மீதிவரும் போது நாங்கள் இருப்பதும் தெரியவரும்
வித்தை காட்டியும் பிழைப்பார்கள்
எம்மை விற்றும் பிழைப்பார்கள்.

ஒழுங்காய் உணவு தரவில்லை என்று புலம்புகிறீர்களே உன்னதமான நன்றியறிதலுக்கு உங்களைத்தானே உதாரணமாகச் சொல்கின்றோம்.

அன்பு பொங்கி வரும் போது 'நன்றியுள்ள நாய் 'என்பீர்கள்
சந்தோசம்.
ஆத்திரம் தலைக்கேறினால்
நன்றி கெட்டநாய் என்கிறீர்களே!

சரி போகட்டும் முதல் முதலாக உம் இனத்தை விண்ணுக்கனுப்பிப்பி மண்ணில் பெருமை தரவில்லையா?

வாவ்..வவ.வவ்(அஹ்தாகப்பட்டது- ஹஹ்ஹஹ்ஹா!...)
விண்ணுக்கெமமையணுப்பினீர்
விக்கினமின்றித் உதவி புரிந்தோம். எம்மைப்பலியாக அனுப்பி பரீட்சித்தீர்
பின்னர் குஷியாகப்போகப்புறப்பட்டீர்.
ஓகே...ஓகே..காட்டில் வாழக்கடவாமல் வீட்டில் வாழவழிவிட்டோம். வீட்டுவாயிலிலும் எமதன்றி உமது பேரையன்றோ பொறித்திடடோம். மட்டுமா 'கடிநாய் கவனம்' என்றொரு கௌரவத்தையும கச்சிதமாய் தந்திட்டோம்.

கள்ளர் கயவர் அண்டாது துள்ளிக்குதித்து வெருண்டோட
எழுதியிருந்தால் தப்பில்லை.
பஞ்சம் பசி பட்டினி என்று
கெஞ்சித்திரியும் மாந்தர்களை
மறித்துது; திருப்பி அனுப்பி விட
நாங்கள் இல்லா வீடுகளிலும்
எங்கள் நாமம் உண்டல்லோ?!

உயர் தர வீடுகளிலும் உல்லாசமாக வாழ்கிறீர்கள் தானே?

கழுத்தோடு கட்டி கையில் வைத்துக்கொண்டு
பிஸ்கட்டை எறிந்து பிடிக்கச்சொல்லி
என் உணவு வேளை அங்கு உல்லாச வேலையாகிறது.(.......மௌனம்........)
மாடிவீட்டு மழலைகள் போல்
தெருவோரச் சுதந்திரத்துக்காக தினம் ஏங்குகிறோம்.
அக்கரைப்பச்சைகள் எங்களுக்கும் உண்டு.

சரி சரி. கொஞ்சம் பொதுவாகப் பேசுவோம். அது ஏன் அடிக்கடி வைக்கோல் போரில் போய் படுக்துக்கொள்கின்றீர்கள்.

நாங்கள் படுப்பது கிடக்கட்டும். .அது உங்கள் 'படுப்பு' வகையறா போன்றல்ல.
சீசனுக்கு சீசன் ஊரூராய் வந்து. உள்வீடுவரை
அழையாது புகுந்து-கவனியும் அழையாது புகுவது நாங்கள் மாத்திரம் அல்ல
உருகிவழிந்து உணர்ச்சியூட்டி உங்கள் பொன்னான வாக்குகளை
வாரியள்ளிக் கொண்டு போய் கூவிவிற்றுவிட்டு
உயர் சபையில் போய் ஒரு ஆட்சி முடியுமட்டும்
'படுத்து'திரிகிறார்களே !!!!!
அவர்களது நெஞ்சுச்சட்டை பிடித்து
நாக்கைப்பிடுங்கிச்சாக
நாலு கேள்வி கேட்க துணிவிருக்கா
(மௌனம்)
அதாவது
 உரிமையுள்ள பசு உண்ண வந்தால் ஒன்றும் செய்வதில்லை.
ஊரான் பசு வந்தால் உறுமத்தவறுவதில்லை. அவ்வளவுதான்.

உண்மை. அந்தவகையில் நீங்கள் எவ்வளவோ மேல். இன்னொன்று .எதில் அடிபட்டாலும் காலைத்தானே தூக்குகிறீர்கள். அது ஏன்?

வேறெதற்கு......
எல்லாம் ஒரு அனுதாபத்தை எதிர் பார்த்து;த்தான்
இருந்தாலும்
ஏனெதற்கென்றில்லாமல் நீங்கள் எடுத்ததற்கெல்லாம அனுதாபம் தேடி
கண்ணீர் விடுதலிலும் பார்க்க
எம் கால் தூக்கல் பிசகில்லை காண்.

சரி... .கால் கிடக்கட்டும். அது ஏன் உங்கள் வாலை நிமிர்த்தவே முடியாதுள்ளது?

ஏன் முடியாது.
நீங்களாக நினைத்தால் முடியாது.
நாங்கள் நினைக்க வேண்டும். எனவே எங்கள் வாலை நிமிர்த்துவது இருக்கட்டும்.
எங்கள் வால் நிமிர்ந்தாலும் நிமிரும். உங்களில் வால்பிடிப்பவர்களை நிமிர்த்தமுடியும்h? (மனதுக்குள்: வால் ஒன்றுதான் குறை)

இந்த கால் வால் என்று நமது பேட்டி வந்துவிட்டதால் அந்தவரிசையில் அவசியம் ஒன்று கேட்டாக வேண்டும். அதாவது குறிப்பாக மின்கம்பங்களைக்கண்டு விட்டால்  உடனே அபிசேகஞ்செய்யத்தொடங்கிவிடுகிறீர்களே......

பதில் ரொம்பமுக்கியமோ?
அடுத்தவனின்
அந்தரங்கம் அறிந்து
அம்பலப்படுத்தி
அதில் சுகங்காணும்
கேவலமான புத்தியை
உங்களோடு மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
................ அவசியம் தெரியணுமாம்..வாhhhவ்-(அதாவது- 'ஹூம்ம்ம்...')

எதற்கெடுத்தாலும் விரக்தியாகவே பேசுகிறீர்களே. திருப்திப்படும்படியாக எதுவுமில்லையா?

ஏன் இல்லை.
'நாயைச் சுடுவது போல்...'
என்பது மாறி
'மனிதனைச்சுடுவது போல் ;;;
என்று
நாம் கூறும் நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்களே!!!

அதுவும் அப்படியா....சரி...உங்களுக்குப் பிடித்த கூற்று.

நன்றி கெட்டமக்களைவிட
நாங்கள் மேல் என்று
நீங்கள் சொல்வது.

(ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி நமக்கே கடிவிழுதே!!!ருட்டமாத்தவேண்டியதுதான்.) ஓக்கே  உங்களுக்கும் நிறைய நியாயமான பிரச்சிளைனகளும் பொறுப்புக்களும் கடமைகளும் இருப்பது தெரிகிறது. அதனால உங்களவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி பிரச்சினைகள் தேவைகள் பற்றிப் பேசினால் என்ன?

எம்மை தனியாகக் கண்டாலே கல்லெடுக்கிறீர்கள்.
இந்த லட்சணத்தில் எங்கே கூட்டம் கூடுவது?!
மீறி கல்யாணவீட்டிலோ கத்ததம் பாத்தியாவிலோ
ஒன்று கூடினால்
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே திடீர்தாக்குதலுக்கு உள்ளாகி விடுகிறோம்.
இதை யாரிடம் போய்முறையிடுவது. முறையிட்டாலும் முடிவுகிட்டுமா?
ஒருவிசாரனைக் கொமிசனைப்போட்டு மூடி. இனந்தெரியாத நபர் என்று எங்களுக்கும் தீர்ப்புத்தந்து விடமாட்டீர்கள்.?

இறுதியாக ஒரு கேள்வி. எதையாவது பற்றி சீரியசாக சிந்திப்பதுண்டா?

உண்டு.
சில தலைவர்களையும் சில அதிகாரிகளையும்
பார்க்கும் போது
அவர்களை அடித்து
மன்னிக்கவும் கடித்து
விரட்டிவிட்டு
அவ்விடத்தை
நாங்களே வகித்தாலென்ன என்று சிந்திப்பதுண்டு.....
என்ன சொல்கிறீர்கள்???


Mutur- Abdullah

No comments:

Post a Comment