ஒரு நிழலும் ஒரு நிஜமும்!
சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'மகாநதி' எனும் ஒரு தமிழ் திரைப்படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.
அந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வாக்குள்ள கிராமவாசி ஒருவர் தனக்கு எதிர்பாராத விதமாக அறிமுகமாகும் மோசடிப் பேர்வழி ஒருவனை நம்பி நகரத்தில் குடியேறி நிதிநிறுவன சதிவலையில் வீழ்ந்து சிறை செல்லும்படியாகி விடுவதும் பின்பு அதற்குக் காரணமானவர்களை வித்தியாசமான முறையில் பழிதீர்த்து பிரிந்த உறவுகளை ஒன்றுசேர்ப்பதுதான் கதை.
இந்தக் கதையை மிகவும் சிறப்பாக திரைக்கதையாக்கம் செய்து தனக்கேயுரிய மிகையில்லா நடிப்பால் அற்புதமான காவியமாக்கியிருப்பார், கமல்ஹாசன்.
அந்தப் படத்தில் ஒரு காட்சி வரும்.
இரண்டு வருடப் பலத்த போராட்டத்தின் பின்பு சிறையிலிருந்து கமல் பிணையில் வெளியில் வருவார் கமல். அப்போது அவரது தாயில்லாப் பிள்ளைகள் இரண்டும் தொலைந்து போயிருப்பார்கள். தன்னுடன் சிறையில் இருந்த மற்றொரு அப்பாவிப் பிராமணரான பூர்ணம் விஸ்வநாதனைத் துணைக்கழைத்துக் கொண்டு பிள்ளைகளைத் தேடியலைவார் கமல்.
அப்போது தற்செயலாக வீதியில் வித்தை காட்டிக்கொண்டிருக்கும் நரிக்குறவர்களிடம் வாழ்ந்திருக்கும் தன் மகனைக் கண்டு கொள்வார்கள். அவர்களிடம் தமது கண்ணீர்க் கதையைக்கூறி மகனை மீட்டுச் செல்வதற்காக அவன் தூங்கும் வரை அவர்களது குடிசையில் காத்திருப்பார்கள், கமலும் பூர்ணமும்.
அது இரவு உணவுவேளையாதலால் அவர்கள் இருவருக்கும் கடையில் வாங்கிவந்த சாப்பாட்டை ஒரு அலுமினியத்தட்டில் போட்டுக் கொடுத்து, "நீங்கள்லாம் எங்க சாப்பாட்டைச் சாப்பிடுவீகளா எஜமான்?" என்று தயங்கியவாறு கேட்பான், நரிக்குறவர்களின் குடும்பத்தலைவன்.
ஆச்சாரம் மிக்க பூர்ணம் தயங்கி, ஏதோ கூறி சமாளித்து நழுவ, 'என்னங்க கேள்வி இது? ரெண்டு வருசமா என் மகன் சாப்பிட்ட சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேனா?' என்று கண்கள் பனிக்க நன்றிப் பெருக்குடன் அதை வாங்கிச் சாப்பிடுவார் கமல்.
கடைசியில், பிரிவாற்றாமை தாளாமல் அழுதுபுலம்பும் நரிக்குறவப் பெண்களிடமிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகனைத் கனத்த மனதுடன் தூக்கிச் செல்வார் கமல். இந்தஉணர்வுபூர்வமான காட்சியமைப்பும் அதை அற்புதமாகவும் இயல்பாகவும் நடித்த கலைஞர்களின் திறமையும் சிலாகிக்கத்தக்கது.
ஆனால் இந்தப் பத்தியில் நான் கூறவந்த விடயம் இதுவல்ல. இனிமேல் சொல்வதுதான்:
அந்தக் காட்சியில், ஓரிடத்தில் பூர்ணம் விஸ்வநாதன் நரிக்குறவனுக்கு நன்றி சொல்ல நினைத்து பரம ஏழையான அவன் கைமாறாக எதையாவது எதிர்பார்க்கின்றானா என்பதையும் அறிவதற்காக அவனிடம், 'தம்பீ! இந்தப் புள்ளய இத்தனை காலமும் வளர்க்கிறதுக்கு எவ்வளவோ கஸ்டப்பட்டிருப்பீங்க...' என்று தயங்கித் தயங்கி பேச்சை ஆரம்பிப்பார்.
அதற்கு அவன், 'யோவ்! அய்யரே, எனக்கொண்ணும் கஸ்டமெல்லாம் கெடையதுய்யா! அதெல்லாம் உன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா...!' என்பான் பளிச்சென்று.
மேலேயுள்ளது செலுலோய்ட் கதை. இனிவருவது நிஜக்கதை:
தமிழ்நாட்டிலே கும்பகோணம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியான இளைஞன் சத்யராஜின் கதையைக் கேளுங்கள்.
சத்யராஜ் கூலி வேலைபார்த்த சூளையில் தனக்கு ஒத்தாசையாக இருந்த யுவதியான சக தொழிலாளி ரேகாவிடம் காதல்வயப்பட்டான். இவரும் திருமணம் செய்து கொள்ளத்தீர்மானித்த வேளையில் ரேகாவின் தந்தையின் பக்கமிருந்து சாதி வேற்றுமை பலமாகக் குறுக்கிட்டது. அத்துடன் வேலை பார்த்த இடத்திலிருந்து தனது ஊரான திருத்துறைப்பூண்டிக்கே அழைத்துச் செல்லப்பட்டாள் ரேகா.
இதனால் காதலர்கள் இருவரும் பிரிய வேண்டியதாயிற்று.
காதல் தோல்வியால் சிறிதுகாலம் கலங்கித் திரிந்தான் சத்யராஜ். இந்த நாட்களில் அவனது பரிதாபத்தைப் பார்த்து கலங்கிய முறைப்பெண் எழிலரசி சத்யராஜுக்கு மிகவும் ஆறுதலாக இருந்து வந்தாள். காலக்கிரமத்தில் தனது பழைய காதல் நிறைவேறாது என்றுணர்ந்து எழிலரசியை, அதுவும் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, மணமுடித்தான் சத்தியராஜ்.
ஆனால் அத்துடன் முடியவில்லை சத்யராஜின் பிரச்சினை. மறுபுறம் திருத்துறைப்பூண்டியில் அவனையே நினைத்து திருமணம் புரியாமல் வாழ்ந்த காதலி ரேகாவுக்கு இந்தத் திருமண விடயம் எப்படியோ தெரிந்துவிட ஆவேசம் பொங்கியவளாய் சத்யராஜின் இடத்திற்கே வந்திறங்கி விட்டாள்.
இதனால் ஏற்கனவே தன் பெற்றோருடன் எழிலரசிக்காக சமரசம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஏழை இளைஞன் செய்வதறியாது திகைத்துப் போனான். வேறு ஒரு நல்ல இளைஞனை மணந்து கொள்ளுமாறு ஊரவர்கள் எடுத்துக் கூறிய புத்திமதியெல்லாம் ரேகாவின் வைராக்கியத்திற்கு முன்பு எடுபடவேயில்லை. ஆற்றாமல் தீர்மானத்தை சத்யராஜ் எழிலரசி தம்பதிகளிடமே விட்டு விட்டு விலகினர் ஊர்ப் பெரியவர்கள்.
தன்னைக் கட்டிக் கொண்டவளைக் கைவிடவும் முடியாமல் காதலுக்காக ஊர் உறவுகளையெல்லாம் உதறிவிட்டு ஓடி வந்தவளை சேர்த்துக் கொள்ளவும் முடியாமல் தடுமாறிய சத்தியராஜின் சங்கடத்தைத் தீர்த்து வைக்க அந்த கனத்த இரவிலே துணிச்சலாக முடிவெடுத்தாள் ஒருத்தி.
பின்னிரவிலே திரும்பிப் போன ஊரவர்கள் அதிகாலையில் ஒலித்த கல்யாண நாதசுர ஓசை கேட்டு ஆச்சரியப்பட்டு "இது என்ன கூத்து தாயி?" என்று சத்தியராஜின் வீட்டை நோக்கி விரைந்து வந்தார்கள்.
அங்கே புதுமாப்பிள்ளைக் கோலத்தில் ரேகாவுக்குத் தாலி கட்டிக்கொண்டிருந்தான் சத்தியராஜ். அருகிலே ஏற்கனவே அவன் கட்டிய தாலியுடன் மணக்கோலத்தில் எழிலரசியும் அட்சதை போட்டுக் கொண்டிருந்தாள்.
ஆம்! ஒரு பெண்ணின் மனம் மற்றோர் பெண்ணுக்குத்தான் தெரியும் என்பதை நிரூபிப்பது போல இருவரும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்து ரேகாவுடனும் சத்தியராஜுடனும் பேசி சம்மதிக்க வைத்தாள் அதிகம் படிக்காதவளான எழிலரசி.
"நான் இப்ப இரண்டு மாசம் கர்ப்பமாக இருக்கிறேங்க. இந்த நேரத்துல ஏம் மாமாவ எம்புட்டு விரும்பியிருந்தா அந்தப் பொட்டப் புள்ள ஊரு ஒறவையெல்லாம் வுட்டுப்போட்டு ஓடியாந்திருக்கும்? அதை வெரட்டிவுட்டா நா பொம்பளையே இல்லங்க! அதான் மாமாக்கிட்டப் பேசிச் சம்மதிக்க வச்சுட்டேனுங்க" என்று பளிச்சென்று வெள்ளந்தியாகக் கூறும் எழிலரசியிடம் தான் ஒரு தியாகம் செய்த உணர்வோ கர்வமோ சிறிதும் தெரியவில்லை.
அந்த செலுலோயிட் கதையின் ஏழை நரிக்குறவனையும் இந்த நிஜக்கதையின் ஏழை எழிலரசியையும் நினைத்துப் பாருங்கள்.
நாம் வாழும் சமூகத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும் மத்தியதரத்தினரும்தான் போலித்தனமான சிந்தனைகளாலும் சமூகக்கட்டுப்பாடுகளாலும் கட்டுண்டு கிடப்பவர்கள். தம்மைச் சுற்றிலும் அவசியமேயில்லாத வேலிகளையும் தடைகளையும் அமைத்துக் கொண்டு சிறு பிரச்சினைகளைக்கூட பெரிது பண்ணிக் கொண்டு வாழ்பவர்கள். தைரியமாக முடிவெடுக்கத் திராணியின்றி உறவுகளைச் சிக்கலாக்கிக் கொள்பவர்கள்.
வரட்டுக் கவுரவம் போலி அந்தஸ்துகளையெல்லாம் கட்டிக்கொண்டு அலைபவர்கள். "அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?" என்பதை நினைத்து நினைத்து அன்றாடம் சாகுபவர்கள். வசதியாக வாழ்வதாகக் காட்டிக்கொண்டு பணக்கார நோய்களைத் தேடுபவர்கள். சுருக்கமாகச் சொன்னால், முகங்களை விற்றுவிட்டு முகமூடி மாட்டியவர்கள்தான் இந்த மேல் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர்.
ஆனால் ஆணும் பெண்ணும் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் சாதாரண அன்றாடங்காய்ச்சி மக்களிடம் இந்த அவசியமில்லாத போலித்தனங்கள் கிடையாது. இவர்கள் வாழ்க்கையை நின்று நேருக்குநேர் போராடி வாழ்பவர்கள் என்பதால் எதையுமே யதார்த்தமாக அணுகுபவர்கள். இவர்களிடம் மெகா சீரியல் மாமிகள் கிடையாது. M.N.நம்பியார் போல கண்களை உருட்டும் அண்ணிகள் கிடையாது.
படுக்கையறைகளிலும் பட்டுப்புடவை, உதட்டுச்சாயம் மேக்கப் சகிதம் படுத்துறங்கும் பெண்கள் கிடையாது. சமையலறையில் கூட எதுகை மோனை வசனங்கள் அடுக்குமொழிகளால் பேசிக் கொள்ளும் டாடிகள் மம்மிகள் கிடையாது. டை கட்டிக் கொண்டு போனும் லாப்டொப்புமாக பைக்கிலும் காரிலும் அலைந்து, தூக்கம் குறைந்த இளைஞர்கள் கிடையாது.
அது மட்டுமா, இளம்வயதில் புரட்சிகள் பேசிவிட்டு, வயதானதும் வசதியான வாழ்கைக்குள் ஓடி ஓளியும் கபட மனிதர்கள் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு குக்கிராமத்துப் பெண் எழிலரசிக்கும் செங்கல் தொழிலாளி ரேகாவுக்கும் ஒரே கணவனுக்கு இயல்பான மனைவிகளாக ஒரேவீட்டில் வாழும் சாத்தியமான துணிச்சல் எப்படி வந்தது என்று இப்போது புரிகிறதா?
இதை நமது மத்தியதர 'உதட்டுச்சாய' மாமிகளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியுமா? விதிவிலக்காக எங்காவது நிகழ்ந்தாலும் இந்த வாழ்வை அந்த ஏழைப் பெண்களைப்போல இயல்பாக வாழத்தான் இவர்களால் முடியுமா என்ன ?
"கஸ்டமெல்லாம் ஒன்னமாதிரி ஆளுங்களுக்குத்தான்யா!" எனும் நரிக்குறவனின் பதிலில் இருக்கும் வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயமின்மையெல்லாம் எங்கிருந்து வருகிறது தெரிகிறதா?
இனியாவது சிந்தித்துப் பாருங்கள்!
-மூதூர் மொகமட் ராபி