Tuesday, November 15, 2011

எப்படி இருந்தது...இப்படியாச்சே!?




கடவுளேயானாலும்...!


ந்தப் படங்களைச் சிறிது பாருங்கள் நண்பர்களே...

பெரிதாக ஒன்றுமில்லை... ஒரு காலத்தில் மிகவும் அவசியமாகவும் போற்றத்தக்கதாகவுமிருந்த பல்வேறு  அம்சங்கள்தான் இவை. அவற்றின் இன்றைய நிலைமையைப் பாருங்கள்....



முதலில், திருகோணமலை -மூதூர் தரைவழி திறக்கப்பட்டதன் காரணத்தால் கடந்த பல தசாப்தங்களாக மூதூர்ப் பிரதேச மக்களின் போக்குவரத்துக்காக இறுமாப்புடன் உழைத்த படகுகளின் இன்றைய அவலத்தைக் காணுங்கள்....




படகுகள் மட்டுமல்ல, தூர்ந்துபோய் காணப்படும் கொங்கிரீட் கடல்பாலம்... துருப்பிடித்துக் கிடக்கும் படகு பிணைக்கும் இரும்புக் கிராதிகள்...மக்களை மிரட்டி மகிழ்ந்த காவலரண்கள் ...காக்கிச்சட்டைக் கெடுபிடிகள்... கடலைச் சரமணிந்த வியாபாரிகள்..
 உல்லாசப்பயணிகள்...  வரிசையில் காத்திருந்து வியர்வைப் பிசுபிசுப்பும் பரபரப்பும் தாளாமல்  முண்டியடித்து முன்பின்னாக அசையும் மனிதப்பாம்பு... என்று ஜேஜே என்றிருந்த திருகோணமலைத் துறைமுக இறங்குதுறை இன்று சனசந்தடியின்றி....... எப்படிக் களையிழந்து வெறிச்சோடிக் கிடக்கிறது பார்த்தீர்களா?


 

இது போலவே பழைய பெருமையும் இன்றைய உதாசீனத்தையும் பெற்ற பல விடயங்களைப் படங்கள் வாயிலாகவே வழங்கியிருக்கின்றோம். பாருங்கள்.!




 
 ஒரு காலத்தில் பரபரப்பான சேவையாக இருந்துவந்த தபால்சேவை நவீன தொடர்பு சாதனங்களின் வருகையின் பின்பு எவ்வாறு கவனிப்பாரற்றுப் போய்க்கொண்டிருக்கின்றது என்பதற்கு நகரசபை கட்டிடத்துக்கு எதிரேயுள்ள இந்த தபால் பெட்டியே மவுனச் சாட்சி!

இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதெல்லாம் சரி, மனிதனுக்கும் அவன் கண்டுபிடித்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும்தான் இந்த நிலைமை என்றால்.... திருகோணமலை பொதுநூலகத்தில் நாம் கண்ட காட்சியை நீங்களும் பாருங்கள்...


திருகோணமலை பொதுநூலகம் நகரசபை வளாகத்தினுள் அமைந்துள்ளது .


அந்தப் பொதுநூலக முன்றலில் எத்தனையோ காலமாக வீற்றிருந்த கல்விக்குப் பொறுப்பான கடவுளின் சிலையின் கதியைப் பார்த்தீர்களா?


அரசமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்ற போதிமாதவனுக்குப் போட்டியாக புளியமரத்துக்குக் கீழே தவமிருக்கிறாளோ சரஸ்வதி என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதல்லவா?


காரணம் இதுதான்.. ..



இந்த ஆண்டு நிகழ்ந்த சரஸ்வதி பூஜைக்காக பிரபல தனியார் கட்டிட நிர்மாண  நிறுவனம் ஒன்று, பொதுநூலகத்துக்கு  புதிய சிலை ஒன்றை அன்பளிப்புச் செய்திருந்தது.



புதிய சிலையை நிறுவுவதற்காக பழைய சிலையை அப்படியே பெயர்த்தெடுத்து பொதுநூலக வளாகத்தின் ஒரு ஒதுக்குப்புறமாக புளியமரமொன்றின் கீழே பழைய வாகன டயர் ஒன்றின் மீது ஏற்றிவைத்துள்ளனர்.




எதுவுமே பழையதாகி விட்டால் இதுதான் நிலைமை என்பதற்கு கடவுளர்களும் விதிவிலக்கில்லை போலிருக்கின்றது.








-'Mutur' Mohammed Rafi