மூதூர் மொகமட் ராபி யின்
'இலுப்பம் பூக்கள்' :
வாசலெங்கும் நிறைந்து போய்க் கிடக்கின்ற வாசனைப் பூக்கள்:
1990களில் 'நிழலாக சில நிஜங்கள்' கதையோடு தனது சிறுகதைப் பயணத்தை ஆரம்பித்தாலும், 2012ம் ஆண்டுக்குப் பின்னரேயே கதைகள் எழுதுவதற்கான ஊக்கிகள் தனது மூளையின் நியுரோன்களை பிசாசு கணங்களின் நகங்களைக்; கொண்டு பிறாண்டியது என்று சொல்லியவாறு, 21 வருட காலத்துள் பத்தொன்பது கதைகளையே எழுத முடிந்தது என்றாலும் 2012க்குப்பின்னர் கதைகளின் வளர்ச்சி நான்காம் கியரில் கார்ப்பெட் வீதிகளில் வழுக்கிக் கொண்டு செல்லுகின்றது என்று தனது கதைகளின்; அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற மூதூர் மொகமட் ராபியின் பதினைந்து கதைகள் அடங்கிய 'இலுப்பம் பூக்கள்' 2014ம் ஆண்டு அவரது முதற் தொகுதியாக வெளிவந்தது.
சம கால இலங்கையின் சிறுகதை இலக்கியத்தில் மொகமட் ராபியின் எழுத்துகளுக்கு தனி வேறான இட ஒதுக்கீடு செய்வதற்கான தகுதிகளை அவரது கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதனை அவரது கதைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றவன் என்ற காரணத்தினாலும், இந்தத் தொகுதியின் கதைகளை ஒருசேர வாசித்த மனோநிலையிலும் குறிப்பிடுவதில் குறற்மில்லையெனக் கருதுகின்றேன். இவரது கதை உலகம் வேறு. அதன் மாந்தர்கள் வேறு. புதிதாக யோசிக்கின்ற 'அன்ட்ராய்ட்' சிந்தனையாளர்.
மூதூரின் வ. அ. இராசரத்தினம் தொடக்கம், வரால் மீன்கள் தந்த அமானுல்லா மற்றும் ஜலசமாதி தந்த உபைதுல்லா ஆகியோரின் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ளுகின்ற மொகமட் ராபி அவர்களிடமிருந்து தனது மாறுபட்ட கதைகளுக்கூடாக 'இவன் வேற மாதிரி' என்று புதிய கதைகளோடும் புதிய கதைக்கருக்களோடும் வெளிப்படுகின்றார்.
முன்னையவர்கள் தாம் சார்ந்த கடலையும் கடல் சார்ந்த மாந்தரையும் அவர்களின் எல்லைகள் கடந்த துயரங்களையும், விளிம்பு நிலை மக்களின் வலி பொழிகின்ற வீக்கங்களையும், வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றுப் பிழைப்புக்காரர்களையும் தமது கதைகளில் அழைத்து வந்து அடங்காத அலைகளூடாக கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற போது, மொகமட் ராபி தனது கதைக் களத்தினை வேறு திசைகளிலிருந்தும் வேறு புலங்களிலிருந்தும் வாங்கிக் கொண்டு வந்து புதிய கோணங்களில் தன்னை புகுத்திக் கொள்ளுகின்றார்.
ஓர் ஆங்கில ஆசிரியராக பணி புரிகின்ற மொகமட் ராபி இந்த டிஜிட்டல் நூற்றாண்டு பற்றி யோசித்து நோவாக் கலங்களில் காலங்களை கடந்து செல்ல ஆசைப்படுவதும், தன்னைச் சுற்றியுள்ள சூழலின் வெளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மைகளையும் யதார்த்தங்களையும் ரியலிச எல்லைக்குள் கொண்டு வரமுற்படுவதனையும் அவரது சிறுகதைகளில் காண முடிகின்றது.
தனது அனுபவங்களையும், அனுபவமல்லாத ஆனால் யதார்த்தத்துக்கு நெருக்கமானதையும், நேரடியாக தன்னுள் ஒளிபரப்பாகின்ற சம்பவங்களின் தொகுப்புகளையும் வழமையாக கைக்கொள்ளப்படும் பாணியிலிருந்தும், வார்ததைகளின் பிரயோகங்களிலிருந்தும் மாறுபட்டு வேறோர் தொனியில் தொனிக்க முற்படுவதனை அவரது 'இலுப்பம் பூக்கள்' தொகுதியில் கண்டு கொள்கின்றேன்.
இந்தத் தொகுதியை முற்றிலுமாக வாசித்து முடிக்கின்ற போது ஒன்று மட்டும் மிகத் தெளிவாகும். மொகமட் ராபி வழமையான கதை சொல்லுகின்ற சிறுகதைப் புள்ளிக்குள்ளிருந்து கொண்டு, அதன் மரபுக்குள் வசித்துக் கொண்டு சொல்லும் விதத்தையும் சொல்லும் மொழியையும் மாற்றியிருக்கின்றார் என்பதனை கண்டு கொள்ளலாம். பல நல்ல கதையாளர்கள் இப்படி செய்திருப்பது நாம் அறிந்ததே. அதாவது அடிப்படைகளை மாற்றாமல் விதிகளுடைத்தல்.
இந்தத் தொகுதியில் உள்ள சில கதைகள் அவரது கல்விச் சூழலையும், அந்த சூழலின் அனக்கொண்டா விஷத்தில் ஊறிப்போன அரசகல்வி நிறுவனங்களின் அழுக்கு உடல்களையும் அம்மணப்படுத்துகின்றன. மிக நீண்ட காலமாக ஆசிரியப் பணியில் உள்ள மொகமட் ராபி தான் சந்தித்த தான் அனுபவித்த தான் துயருற்ற, தான் விரக்தித்த அந்தக்கல்விச் சூழலை தனது கதைக்குள் மிக லாவகமாகக் கொண்டு வந்து விடுகின்றபோது அரச கல்விப்புலத்தின் அழுக்குகள் எமது முகத்தில் கருமை நிறத்தில் வந்து குந்திக்கொள்ளுகின்றன.
இந்தத் தொகுதியின் நான்கு கதைகள் கல்விப்புலத்தினை அடிப்படையாகக் கொண்ட அதேவேளை பெரும்பாலான கதைகள் பிரச்சினைகள் பற்றி பேசுவதனையே பிரதானமாகக் கொண்டுள்ளதனையும் அவதானிக்கலாம். 1. சம்பள நிலுவை, 2. இலுப்பம் பூக்கள், 3. நான் எனும் நீ, மற்றும் 4. ஒரு கதையின் கதை ஆகிய நான்கு கதைகளும் தான் சார்ந்த கல்விப் பிரிவின் கேவலங்களையும் அவலங்களையும் கதையாடல் செய்கின்றன. 'சம்பள நிலுவை'யில் தனது சம்பள நிலுவைக் காசோலையை எடுத்துக் கொள்வதற்காக ஓர் அப்பாவி ஆசிரியன் வலயக் கல்விப் பணிமனையில் படுகின்ற பாடும், அந்தரமும் யதார்த்தத்தின் உச்சம். இப்போதெல்லாம் கல்விப் பணிமனைகள் அரசியலின் அனுசரணையில் அநியாயக்கார கும்பலினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கின்றன. பாவம் இலட்சிய தாகமுள்ள ஆசிரிய சமூகம்.
'நான் எனும் நீ' யில் பாடசாலையை அலிபாபா குகையாக மாற்றிக்கொண்டு திருட்டுப் புரிகின்ற அதிபரின் கொள்ளை பிஸினஸ் கமிராவில் பதிவாகி விடுகின்றபோது அதிலிருந்து தப்பிக்கொள்வதற்காக அப்பாவி ஆசிரியரின் மீது கருணையே இல்லாமல் பாலியல் குறற்றசாட்டுப்பத்திரம் தயாரிக்கின்ற அசிங்கம் பிடித்த அதிபரினால் அழுத்தம்கூடி இறந்து போகின்ற அந்த அப்பாவி கௌரவ ஆசிரியனின் மரணத்தில் எவ்வளவோ உண்மைகளும் எவ்வளவோ கொடுமைகளும் கண்ணுக்குத் தெரியாத வைரசுகளாக மாறி காயப்படுத்தி விடுகின்றன மனசை.
'இலுப்பம் பூக்கள்' மற்றும் 'ஒரு கதையின் கதை' இரண்டும் ஒரேநேர் கோட்டில் பயணிக்கின்ற ரயில் பெட்டிக் கதைகள். ஒரே பாதை இன்டர் ரிலேட்டட் கதைகள். இரு வேறு கதைகள். இரு வேறு சம்பவங்கள். ஒரே கதைக் களம்.. அதே கதா பாத்திரங்கள். இரண்டையும் சேர்த்து வாசிக்கின்ற போது இரண்டு கதைகளுக்குள்ளும் ஒரு பொதுப்பண்பினை உணர்ந்து கொள்ளலாம். இரண்டு கதைகளுக்குமான நடுப்புள்ளியில் கதாசிரியரே நின்று கொண்டிருக்கின்றார் என்பதனை பத்துப் பேரை சாட்சிக்கு அழைத்து நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்பது என் வாதம்.
நன்றாகப் படிப்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளையும், ஒன்றுக்குக்கும் உதவாத பேர்வழிகளின் ஒதுங்குமிடமாய் வலயக் கல்விப் பணிமனை மாறிவிட்டிருக்கின்ற மலட்டுத்தனத்தினையும், இஸ்ரேலின் அஜென்டாவின் கீழ் செயலாற்றுகின்ற ஐக்கிய நாடுகள் சபை போல வலயக்கல்விப் பணிப்பாளர் சிலரது அஜென்டாவின் கீழ் வேலை செய்கின்ற கேவலத்தையும், கல்வி அதிகாரிகள் என்ற பெயரில் நல்ல ஆசிரியர்களை ஃபுட் போலாக்கிக் கல்வியின் மீது தாம் நினைத்ததுபோல ஆடிக் கொண்டிருக்கும் ஷைத்தான்களையும் பற்றி மொகமட் ராபி இந்த இரண்டு கதைகiளிலும் சொல்லும் போது நேரடியாக பட்ட ஒருவனால்தான் இந்த யதார்த்தம் வெளி வரும் என்று எனது உள் மனசு உரக்கச் சொல்லுகின்றது.
தவிரவும் இந்த இரண்டு கதைகளையும் அவர் தைரியமாக துணிகரமாக தான் சார்ந்த துறையின் அசிங்கங்களினை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பது ஓர் எழுத்துக்காரனின் நேர்மையை மதிப்பீடு செய்ய உதவுகின்றது. குறித்த இந்த நான்கு கல்வி சார் கதைகளையும் படிக்கின்ற போது கிண்ணியாவின் கல்வி வலயமும் அதில் எந்த வித வேலையுமில்லாமல் மாதாந்தம் சம்பளம் எடுத்துக் கொண்டிருக்கின்றவர்கள் பற்றியும், அரசியல் மற்றும் தகுதியில்லாத அதிபர்களால் சாக்கடையாகிக் கொண்டிருக்கின்ற பாடசாலைகளும் , ஆசிரிய பயிற்சி நிலையமும் எனக்குள் வந்து கதறியழுகின்ற காட்சியை தவிர்க்க முடியமாற் போய் விடுகின்றன.
பலிக்கடா, என்ன விலை அழகே, மியூறியன் கிறேட்டர் ஆகிய மூன்று கதைகளும் சயன்ஸ் ஃபிக்ஷன்ஸ் ரகம். இலங்கையின் சிறுகதைத் துறையினைப் பொறுத்த வரை விஞ்ஞானப் புனை கதைகள் என்பது எப்போதுமே வெறுமை தட்டிப்போய்க்கிடக்கின்றன. யாரும் விஞ்ஞானப் புனை கதைகள் எழுதுவதற்கு முன் வருவதுமில்லை அதற்காக ஆகக் குறைந்தது முனைவதுமில்லை. விஞ்ஞானப் புனைகதைகள் தொடர்பில் அறியாமையும் தெரியாமையும் அதனை எழுதுவது தொடர்பிலான அச்சமுமே எமது எழுத்தாளப் பெருந்தகைகளுக்கு மத்தியில் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது. அவ்வப்போது சில விஞ்ஞானப் புனை கதைகளை வாசிக்கின்ற அபூர்வங்கள் மட்டுமே இங்கே நமக்கு கிடைக்கின்ற அனுபவங்கள். தீரன் நௌஷாத் தனது 'வெள்ளி விரல்' தொகுதியில் ஒரு
விஞ்ஞானப் புனைகதை எழுதியிருக்கின்றார்.
ஆனால் மொகமட் ராபி இந்தத் தொகுதியில் மூன்று சயன்ஸ் ஃபிக்ஷன்களை தந்திருக்கின்றார். 'பலிக்கடா' லைக்கா நாய் பற்றிய விண்வெளிக்கதை. வாசிக்கின்ற போது சற்று குழப்பத்தை உண்டு பண்ணி விடுகின்றது. 'என்ன விலை அழகே' சயன்ஸ் ஃபிக்ஷனுக்கு நெருக்கமானது. முற்று முழுதான சயன்ஸ் ஃபிக்ஷனல்ல.
'மியூறியன் கிறேட்டர்' முழுதான சயன்ஸ் ஃபிக்ஷனின் அனுபவத்தினை தந்து விடுகின்ற விஞ்ஞான வித்தை. ஆர்தர் சீ கிளார்க் தனமான இந்தக் கதையினை வாசிக்கின்ற போது சுஜாதாவும், ஆர்னிக்கா நாசரும் நமது வாசலுக்கு வந்து சுகம் விசாரித்து விட்டுப் செல்கின்றனர்.
எனினும் மொகமட் ராபியின் இந்தக் கதை சயன்ஸ் ஃபிக்ஷனில் தனியாகத் தெரிகின்றது. நிறைய மெனக்கெட்டிருக்கின்றார் இந்தக் கதைக்காக என்பது மட்டும் புரிகின்றது. புனை கதை என்றாலும் வெறுமனே கற்பனையில் மட்டும் விஞ்ஞானத்தை சொல்லப் போனால் அந்தக் கதை அம்புலிமாமாக் கதையாகி விடுகின்ற ஆபத்துகள் நிறையவே இருக்கின்றன. அதனால்தான் மொகமட் ராபி இந்தக் கதைக்காக நிறைய பாடு பட்டிருக்கின்றார். நிறையத் தேடியிருக்கின்றார். அவரது கதையில் வந்து விழுகின்ற விஞ்ஞான அரும் பதங்கள் அவர் இதற்காக ரெஃபரன்சுக்காக புத்தகங்கள் புரட்டி எடுத்திருக்கின்றார் என்பதனைக் காட்டுகின்றது.
'எனது பெயர் இன்சாப்' கதை தனியே சயன்ஸ் ஃபிக்ஷன் என்ற வரையறைக்குள் கொண்டு வரமுடியாது. இன்ஃபோர்மேட்டிவ் ப்ளஸ் சயன்ஸ் ரியலிசக் கதை இது. ஃபிக்ஷனைத் தாண்டி பூமியின் கிரேவிட்டி சம்பந்தமான விஞ்ஞான எடுகோளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதை ஃபிக்ஷனைத் தள்ளி விட்டு ரியலிசத்துக்குள் வந்து நிற்கின்றது. அதனால்தான் ரியலிசம் கலந்த ஃபிக்ஷன் என்று இந்தக் கதையினை மதிப்பீடு செய்ய முடிகின்றது.
இந்தத் தொகுதியில் என்னை பிரமிக்க வைத்த கதைகளுள் ஒன்று 'கரைகள் தேடும் ஓடங்கள்'. இலங்கையின் தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் பேசப்படாமலே பல சங்கதிகள் மூலைக்குள் குந்திக் கொண்டு அழுதுகொண்டிருக்கின்றன. வழமையான பல்லவிகளோடு (சில விதி விலக்குகள் தவிர) தமது கதைகளுக்கு தாளக் கட்டுகளுக்குள் மெட்டமைத்துக் கொண்டு கட்டுகளுக்குள் தம்மை கடிவாளமிடுகின்ற இலங்கையின் தமிழ் சிறுகதைப் பரப்பில் நானறிந்த வரை யாரும் தொடாத ஒரு விடயத்தை மொகமட் ராபி தொட்டிருக்கின்றார்.
திருநங்கையாகின்ற அல்லது அரவாணியாகின்ற (Trans Gender) ஒருவனின் அல்லது ஒருத்தியின் மனோநிலைகளில் சதாவும் கத்தி வீசிக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கின்ற எமது சமூகக் கட்டமைப்பில் சொந்த ரத்தங்களே புரிந்து கொள்ளாத நிலையில் அணைப்பதற்கும் அறுதல் தருவதற்குமென ஒரு நபர் வந்து விடுகின்ற போது ஏற்படுகின்ற ஆறுதலையும், வாழ்வின் மீதான பிடிப்பினையும் மொகமட் ராபி சொல்லுகின்ற விதம் ரசனைகளில் ஏலக்காய் வாசம்.
இந்தத் தொகுதியில் கரைகள் தேடும் ஓடங்களை மிகக் கடுமையாக ரசித்தேன். கதையின் முடிவில் துயரத்தை அள்ளி எமது கைகளில் தந்து விட்டுச் செல்லுகின்ற மொகமட் ராபி அதனூடாக தனது கதையினை வெற்றி பெறச் செய்வதோடு அழவும் வைத்து விடுகின்றார். இலங்கையில் யாரும் பேசாத ஒரு சங்கதியை எடுத்து கதையாக்கித் தந்த மொகமட் ராபியின் மனோ நிலையில் பரவுகின்ற வித்தியாசத்தை உணருகின்றேன். இந்தக் கதையை சில இடங்களில் நக்கலும் நையாண்டியுமாக, சில இடங்களில் சீரியசாக என்று கலந்து சமூகம் ஒதுக்கித் தள்ளுகின்ற ஒரு திருநங்கைக்கு வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்துகின்ற கதாபாத்திரத்தின் மீது பெயர் சொல்ல முடியாத நேசத்தை பொருத்தி விடுகின்றார்.
'வேடிக்கை மனிதர்கள்' தாடிகளையும் ஜிப்பாக்களையும் தஸ்பீஹ் மணிகளையும் வைத்துக்கொண்டு மார்க்கத்தின் மரியாதைக்குரிய மனிதர்களாக மாறிவிடுகின்ற வெளி வேஷங்களை துகிலுரிகின்ற கதை. வெளி வேஷங்களுக்கே மரியாதை கொடுத்து பழக்கப்பட்டு விட்ட நமது சமூகத்தின் மார்க்கத்தின் மீதான பார்வையில் உள்ள கோளாறினை கேள்விக்குள்ளாக்குவதோடு, ஆன்மீகம் என்ற சொல்லுக்கு தப்லீக் சமூகம் கொடுத்துள்ள கருத்தினை தகர்த்தெறிகின்றார்.
வெறுமனே {ஹகுகுல்லாவுக்குள் மட்டும் தம்மை சுருக்கிக் கொண்டு, {ஹக்குக்குல் இபாதாவான சமூக வாழ்வின் அத்தியாவசியங்களிலிருந்து நைசாக கழன்று கொண்டவர்கள் மீது சாட்டை வீசுகின்ற மொகமட் ராபி, இந்தக் கதையின் முடிவில் 'அடடா மிச்சம் நன்றி அமீர் சாப் உங்களுக்கு பெரிய மனசு. ஆனால் பாருங்க நான் உங்கட சீட்ல இருக்குறத விட இப்படியே நின்றுட்டு வரத்தான் விரும்புறேன். தேங்க்ஸ்' என்று கூறி விட்டு சற்று முன்னே தள்ளிப் போய் சாரதிக்குப் பக்கத்திலே நின்று கொண்டான், இம்தியாஸ் எனப்படும் முன்னால் சரவணபவன்' என்று கதையை முடிக்கின்ற போது மொகமட் ராபி ஒட்டு மொத்தக் கதையையும் மீண்டும் மனசுக்குள் ரயிலோட்டிப் பார்க்கின்றார்.
மறைந்த மாபெரும் இஸ்லாமிய அறிஞரும், மேதையுமான அபுல் ஹசன் அலி நத்வி சொல்வது போல 'இலங்கை போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் இஸ்லாத்தை சொல்லத் தேவையில்லை நீங்கள். மாற்றாக மார்க்கம் சொல்லுகின்ற ஒரு முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். அதுவே மிகப் பெரிய தஃவா' என்பது இந்தக் கதையை வாசித்த போது என்னை சுய பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டேன்.
உண்மைதான் தாடிகளுக்கும் நீண்ட ஜிப்பாக்களுக்கும் பள்ளி இபாதாக்களுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சமூக வாழ்வில் பேணப்பட வேண்டிய மார்க்கக் கடமைகளை மறந்து போய்விட்ட எமது சமூகத்தின் வெளிவேஷங்கள் களையப்பட வேண்டுமென்ற செய்தியினை சொல்லுகின்ற இந்தக் கதை போலிகளின் மீதான நேர்மையான விமர்சனம்.
'மணல் தீவுகள்' கதை நவீன உலகின் செல் ஃபோன் கலாசாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கின்ற இளவட்டங்கள் பற்றிய கதை. கதையின் கரு சின்னதென்றாலும் ஒரு திரைக்கதை போல மொகமட் ராபி விரித்துச் செல்லுகின்ற அழகு வாசிக்க வைக்கின்றது. பல மரணங்கங்களுக்கும், தற்கொலைகளுக்கும் காரணமாக இருக்கின்ற கைபேசிக் கலாச்சாரத்தின் கொடூரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மொகமட் ராபி பதியத் தவறி விட்டாரோ என்று தோன்றுகின்றது.
'சிலந்திக் கூடுகள்' கதை காதலின் துரோகம் பற்றி சொல்லுகின்ற காலாகாலத்துக்குமான கதை என்றாலும் கதையை ஜவ்வு மாதிரி இழுக்காமல் அதன் போக்கிலே விட்டு சம்பவங்களை கோர்வையாக்கி மொகமட் ராபி தருகின்ற போது வாசிப்பானுபவம் காதலின் துரோகத்தை நொந்து கொண்டாலும், இரு வேறு பட்ட காதல் கதைகளை குழப்பி இரண்டாவது காதல் கதையை அழுத்தமாக்கும் முயற்சியில் மொகமட் ராபி இறங்கியிருக்கின்றார்.
இரண்டாவது காதலுக்கு அழுத்தம் கொடுக்கின்ற ராபி, அதனையே மையக் கருத்தாக எடுத்திருந்தால் முதற் காதல் கதை அநாவசியமானது. முதல் காதல் கதை வழமையான மித்திரன் அல்லது ராணி இதழ்க் கதை வடிவில் சென்று இடை வேளைக்குப் பின்னர் இரண்டாம் காதல் கதை அழுத்தத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இந்த இடத்தில் இரண்டாம் காதலையே ஒரு காதலாக்கி அதன் துரோகத்தை பதிவு செய்திருந்தால் சுப்ரமணியபுரம் படத்தின் துரோகங்களை பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும். இந்தக் கதை அதனை செய்யத் தவறி விட்டது ராபி.
'விழியில் வடியும் உதிரம்' கதை இந்த் தொகுதியின் இன்னுமொரு நட்சத்திரக் கதை. இந்தத் தொகுதியின் போர்க்காலக் கதை இது மட்டுமே. மரத்தால் விழுந்த ஒரு தமிழ் இளைஞனை மாடு மிதித்து அப்புறம் ஆர்மிக்காரன் தனது சூக்களால் மிதித்து என்று செல்லுகின்ற கதையில் மனித நேயத்துக்கும் போருக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமிட்டு அழுகின்றார் மொகமட் ராபி.
ரயிலில் சந்திக்கின்ற பார்த்தீபன் எனும் தனது உயிரை பணயம் வைத்து தனது பேர்சை மீட்டுத்தந்து கொழும்பு செல்லுகின்ற அந்த புகை வண்டியில் அந்த இளைஞனை புலி என்று ஆர்மிக்காரன் பிடித்துச் செல்லும் போது அவன் அவனது தாய் கதறுகின்ற அலறலை கேட்கத்தான் முடிகின்றது. எதுவும் செய்ய முடியாத கையறு நிலையை உருவாக்கி விட்ட யுத்தத்தின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் விரக்தியும் ஆழம் காண முடியா சமுத்திரத்தைப் போல பரந்து விரிகின்றது என்பதனை சொல்லுகின்ற இந்தக் கதை மொகமட் ராபிக்கு பெயர் வாங்கிக் கொடுக்கக் கூடிய கதை. ஓட்டமாவடி அரபாத் மற்றும் தீரன் நௌஷாத் போன்றோர் போர்க்கால கதை சொல்லிகளாக இருக்கின்றார்கள். மொகமட் ராபியின் இந்த ஒற்றைக் கதையும் அதற்குள் அடங்கும்.
'சுற்றுலா' கதையில் மூதூர் போன்ற முஸ்லிம் கிராமங்களில் காவாலிகள் கலாச்சாரத்தின் காவலர்களாக மாறி விடுவதனையும், விளிம்பு நிலைப் பெண்கள் மீதான சமூகத்தின் அடக்கு முறையையும், சுய நலத்தோடு சதாவும் இயங்கிக் கொண்டிருக்கின்ற பச்சோந்திகளையும், தற்போது ஓரளவுக்கேனும் அந்த பெண்ணடிமைத்தனமும் பெண் பற்றிய பிரக்ஞையும் மாறி இருக்கின்றது என்று கதையை நகர்த்தும் மொகமட் ராபி வெறுமனே சிறு உரையாடல்கள் மற்றும் ஓரிரு ஃ;ப்ளஷ் பெக்குகளோடு கதையை முடித்து விடுவது ஏனோ மொகமட் ராபி சொல்ல வந்த மையக் கருத்தை விட்டு விலகி நிற்கின்றதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.
'கரையொதுங்கும் முதலைகள்' உரையாடல்கள் மூலம் வெள்ள நிவாரணங்களிலும் இதர அனர்த்த நிவாரணங்களிலும் ஊரில் அரச அதிகாரிகளால் நடாத்தப்படுகின்ற லஞ்ச ஊழல்கள் பற்றிய கதை. வெறுமனே எக்கச்சக்க உரையாடல்களோடு கதை நகருகையில் சற்று அயர்ச்சியினைத் தந்தாலும் கதையின் முடிவில் ஒரு ஆறுதல் பெருமூச்சுக்கு அபயமளிக்கின்றார் மொகமட் ராபி.
ஒட்டு மொத்தத்தில் மொகமட் ராபியின் இலுப்பம் பூக்கள் கனதியான கதைகளின் நவீன அல்பம். பெரும்பாலான கதைகளில் தன்னை ஒரு புதிய கதை சொல்லியாகக் காட்டுகின்ற மொகமட் ராபி, மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர், அங்கு வாழ்ந்தவர் என்றாலும் போரின் எல்லாவித துயரப் பாடல்களையும் கேட்டு விட்ட மூதூர் மண்ணையும் மூதூர் மக்களையும் ஏன் இவர் தனது கதைகளுக்கூடாக பதிவு செய்யாமலே போய் விட்டார் என்பதில் எனக்கு வருத்தமும் கவலையும் இருக்கின்றது. அதனைத் தாண்டி இலங்கையின் சிறுகதைப் பரப்பில் ஒரு பேசப்படக்கூடிய காத்திரமான கதைத் தொகுதியை மொகமட் ராபி இலுப்பம் பூக்களாக தந்திருக்கின்றார் என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
இலுப்பம் பூக்கள் வாசித்து முடித்த பின்னரும் மனசுக்குள் இறைந்தே கிடக்கின்றது.
-கிண்ணியா சபருள்ளா
2016-06-03