Wednesday, May 30, 2012

MGR vs Radha: 1967ல் உண்மையில் நடந்தது என்ன?







"சுட்டான் ; சுட்டேன்!"






தையும் சுவைபடச் சொன்னாலே போதும் அது எவ்வளவுதான் பழைய விடயமானாலும் அதற்கு ஒரு தனிக் கம்பீரம் வந்து விடும் என்பதை இதன் கீழுள்ள ஒரு கட்டுரையைப் படித்போது உணரக் கூடியதாக இருந்தது.   அதிலும் அது நடுநிலை தவறாமல் அநாவசிய புகழ்பாடல்கள் இல்லாமல் சமநிலையாக எழுதப்பட்டிருந்தால் கேட்கவும் வேண்டுமா? அதன் அழகே தனி அல்லவா?

தமிழகத்தின் மக்கள் திலகம் என்று அன்றும் இன்றும் போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் DMK திமுகவின் உறுப்பினராக இருந்தவேளை தனது சக நடிகரும் ஈ.வே.ரா. பெரியாரின் திகவின் விசுவாசியுமான நடிகவேள் ராதா வினால் ('சித்தி' தொலைக்காட்சி நாடகம் புகழ் ராதிகாவின் தந்தை) சுடப்பட்ட செய்தி யாவரும் அறிந்த விடயம்தான்.


இது நடந்தது 1967ம் ஆண்டில்...


தமிழ்பேப்பர் இணையத்தில் எஸ்.பி.சொக்கலிங்கம் என்பவர் எழுதியிருக்கின்றார்.வாசித்துப் பாருங்கள்!


-'Mutur' Mohd. Rafi



Here you're:




எம்ஜியார் கொலைமுயற்சி வழக்கு








1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆர் தொண்டையில் குண்டடிப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். சிறிது நேரத்துக்கெல்லாம் எம்.ஆர். ராதாவும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நெற்றிப்பொட்டிலும், கழுத்திலும் குண்டடிப்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு வரப்பட்டார். இருவருடைய ஸ்ட்ரெச்சர்களுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி தான். குண்டடிப்பட்ட இருவரிடமும் எந்த சலனமும் இல்லை.



இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரிடம் விசாரித்ததில், திரைப்பட நடிகர் எம்.ஆர்.ராதா தன்னை காதருகே சுட்டதாகத் தெரிவித்தார். குண்டு எம்.ஜி.ஆரின் காதை உரசிக்கொண்டு அவரது தொண்டையில் போய் பாய்ந்தது. எம்.ஆர். ராதா அங்கு தனக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்களிடம், “நான்தான் எம்.ஜி.ஆரை சுட்டேன்” என்று தெரிவித்தார். காவல்துறைக்கு தனது வாக்குமூலத்தை அளித்துவிட்டேன் என்றார்.
செய்தி கேட்டு, எம்.ஜி.ஆரைக் காண மருத்துமனையில் கூட்டம் திரண்டது. சுமார் 50,000 பேர் மருத்துவமனையில் கூடிவிட்டதாக ஒரு செய்தி உண்டு.




எம்.ஆர்.ராதா ஆதரவாளர்களும், அவருடைய நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தனர். சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் குழுமினர். திமுகவின் அண்ணாதுரை, கருணாநிதி, நடிகர் அசோகன் என்று அனைவரும் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை நடந்த ஆபரேஷன் தியேட்டரின் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.



எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, ஏதோ சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் நடந்தது ஒரு விபத்தல்ல. பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர், தி.மு.கவுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரும் சட்டமன்றத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவரது ராமாபுரம் இல்லத்துக்கு எம்.ஆர். ராதாவும், பெற்றால்தான் பிள்ளையா என்ற படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.கே.என்.வாசுவும் சென்றிருக்கிறார்கள்.



எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் பின்வருமாறு தெரிவித்தன. ‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’

ஆனால் 'பெற்றத்தால்தான் பிள்ளையா' என்ற படத்தின் தயாரிப்பாளர் வாசு காவல்துறையினரிடம் தான் கொடுத்த வாக்குமூலத்தில் பின்வருமாறு தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வேண்டும் என்று கோயம்புத்தூரிலிருந்து ஒரு பார்ட்டி விருப்பம் தெரிவித்தது. அந்த பார்ட்டி சென்னையில் உள்ள அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்த பார்ட்டிக்காகத்தான் நானும் எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.’ (இந்தத் தகவல் பொய் என்பது விசாரணையின் போது தெரியவந்தது. காரணம் காவல்துறையினர் அசோகா ஹோட்டலுக்கு சென்று விசாரித்ததில் கோயம்புத்தூரைச் சேர்ந்த எந்த சினிமாக்காரரும், வாசு குறிப்பிட்ட சமயத்தில் ஹோட்டலில் தங்கவில்லை என்று தெரியவந்தது).
மேலும், வாசு தன்னுடைய வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்றைய தினத்தில் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை மேற்சொன்ன காரணத்துக்காக அவரைச் சந்திக்கவேண்டுமென்று பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று காலம் தாழ்த்தி திரும்பியதால், ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலை கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.




மேலும் வாசு தெரிவித்ததாவது, ‘எம்.ஜி.ஆர் எங்கள் இருவரையும் வரவேற்றார். பின்னர் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் சினிமா சம்பந்தமான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய தொழிலை எம்.ஜி.ஆர் நாசம் செய்துவிட்டார் என்று கூறியபடியே கோபத்துடன் எழுந்து எம்.ஆர்.ராதா வெளியே செல்ல முற்பட்டார். பின்னர் எம்.ஆர்.ராதா தன்னுடைய வேட்டியில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அருகில் இருந்த எம்.ஜி.ஆரைச் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எம்.ஜி.ஆரின் இடது காதை உரசிக்கொண்டு போய் அவருடைய தொண்டையில் பாய்ந்தது. சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் எம்.ஆர்.ராதாவின் மீது பாய்ந்து, எம்.ஆர்.ராதா மேலும் துப்பாக்கியால் சுடாமல் தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள்ளாக எம்.ஆர்.ராதா தன்னைத் தானே கழுத்திலும், நெற்றிப்பொட்டிலும் சுட்டுக்கொண்டார்.’
எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


1. எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நிகழ்ந்த தொழில்முறை போட்டி. எம்.ஆர்.ராதாவுக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போயின. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று ராதா நினைத்தது.


2. பெரியார் தன்னுடைய 72 வது வயதில், தன்னுடன் பல மடங்கு வயதில் சிறியவரான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்துக்கு யோசனை கூறியவர் ராஜாஜி. பிராமணரான ராஜாஜியின் யோசனையைக் கேட்டு பெரியார் மணியம்மையை திருமணம் செய்து கொண்டார் என்ற காரணத்தை முன்வைத்து, அண்ணாதுரை மற்றும் ஈ.வி.கே சம்பத் ஆகியோர் பெரியாரின் திராவிட கழகத்தை விட்டுப் பிரிந்து தனியே திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் அண்ணாவை பின்பற்றி, பெரியாரை விட்டு விட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தனர். ஆனால் எம்.ஆர்.ராதா தொடர்ந்து பெரியாரின் விசுவாசியாகவே இருந்தார். திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகத்தைப் போல் இல்லாமல் தேர்தல் அரசியலில் இறங்கியது.
1957 ஆம் ஆண்டிலிருந்து, காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்குத் தேர்தலை சந்தித்தபோதும் திமுகவால் தமிழ்நாட்டில் காங்கிரசை பதவியிலிருந்து இறக்க முடியவில்லை.



1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. ஆனால் பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

 எது எப்படியோ, எம்.ஜிஆரை அவருடைய இல்லத்தில் வைத்தே கைத்துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர். ராதா. பின்னர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பிரபலமான வசனத்தையும் பேசியிருக்கிறார். குண்டு காயங்களுடன் இருந்த இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதல் உதவி அளிக்கப்பட்ட பிறகு இருவரும் அரசுப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருவரும் உயிர் பிழைத்துக்கொண்டனர்.



 எம்.ஜி.ஆரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததை அறிந்து மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் சார்ந்திருந்த தி.மு.கவினருக்கும், எம்.ஆர்.ராதா ஆதரவு திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று அறிந்த அரசு, சென்னையில் 15 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அப்படியிருந்தும் காவல் நிலையங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பரங்கிமலையில் இருந்த எம்.ஆர்.ராதாவின் தோட்டம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலை, காவல்துறை கண்ணீர் புகை வீசியும் லத்தித் தாக்குதல் நடத்தியும் கலைத்தது.



துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.ராதாவைக் கைது செய்து விசாரணை நடத்தியது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றதாகவும், பின்னர் எம்.ஆர்.ராதா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் காவல்துறை எம்.ஆர்.ராதா மீது சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பெரிய வழக்குகளை விசாரிக்க மாஜிஸ்டிரேட்டுக்கு அதிகாரம் இல்லாத காரணத்தால், அவர் வழக்கை செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிபெற்றது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் தி.மு.கவே கூட எதிர்பார்க்கவில்லை. அண்ணாதுரை கூட நடந்து முடிந்த தேர்தல்களில் சட்டசபைக்காகப் போட்டியிடவில்லை, நாடாளுமன்றத்துக்குத்தான் போட்டியிட்டார்.



தமிழகத்தில் மூன்று முறை (சுமார் 10 ஆண்டுகள்) முதலமைச்சராக இருந்த காமராஜர், 1967ம் ஆண்டு நடக்கவிருந்த தேர்தல் சமயத்தில், ஒரு கார் விபத்தில் காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.



அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரைப் பேட்டி எடுத்தபோது, தான் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று பேட்டி கொடுத்தார். ஆனால் நடந்தது வேறு. காமராஜர், தான் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.கவைச் சேர்ந்த பி.சீனிவாசன் என்ற இளைஞரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் கூட தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரசின் ஆட்சி, ஒரளவுக்கு ஊழல் இல்லாமல் நல்ல முறையில்தான் நடந்தது. இருப்பினும் 1967 தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம், ஆட்சி செய்தவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளிதான்.
புதிய ஆட்சி அமையவிருந்த தருணத்திலேயே, மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான இடைவெளி குறையத் தொடங்கியது. 1967 தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.கவினர் பதிவியேற்கும் தருவாயில், சென்னையில் கோட்டையில் மக்கள் பெரும் திரளாகத் திரண்டனர். அண்ணாதுரை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரும், தான் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். (எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுடுவதற்கு முன்னர், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு மக்களிடையே சரிந்திருந்தது என்றும், துப்பாக்கியால் சுடப்பட்ட பிறகு அவருக்கு மக்களிடையே பெரிய அனுதாபமும், ஆதரவும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது).



தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றாலும், அண்ணாதுரையின் ஆட்சியில் எம்.ஜி.ஆர் எந்தவித மந்திரிப் பதவியையும் வகிக்கவில்லை.இந்திய சுந்தரத்துக்குப் பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத புதிய கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. அவ்வழக்கை விசாரித்தவர் நீதிபதி திரு. லட்சுமணன். அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், பி.ஆர். கோகுலகிருஷ்ணன் (இவர் பின்னாளில் குஜராத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்) மற்றும் பி.இராஜமாணிக்கம். எம்.ஆர்.ராதா தரப்பில் ஆஜரானவர்கள் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்களம். (இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்திருந்தார்), மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை மற்றும் என்.நடராஜன்.



எம்.ஆர்.ராதாவின் மீது அரசு தரப்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இவை.


1) எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்றது (இ.பி.கோ – பிரிவு 307);


 2) தற்கொலை முயற்சி (இ.பி.கோ – பிரிவு 309);


 3) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது (ஆயுதச் சட்டம் – பிரிவு 25) மற்றும் ;


4) உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்து சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டது (ஆயுதச் சட்டம் – பிரிவு 27).



96 நாள்கள் விசாரணை நடைபெற்றது. 69 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் வெப்லி ஸ்காட் .420 காலிபர் (ஒரு குழல் துப்பாக்கியின் உட்புற குறுக்களவு விட்டம்) வைத்திருந்தனர். இருவரும் தத்தம் துப்பாக்கிகளை பி.ஆர் அண்டு சன்ஸ் (P.ORR & Sons) நிறுவனத்திலிருந்து, 1950 ஆம் ஆண்டு வாங்கியிருக்கின்றனர். அதுவும் ஒரே நாளில். இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை. எம்.ஜி.ஆர் தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் ராதா தன் துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.


துப்பாக்கியை பயன்படுத்தும் உரிமைக்காலம் முடிந்தபிறகு துப்பாக்கியை வைத்திருக்கக்கூடாது, அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் எம்.ஆர்.ராதா அதைச் செய்யவில்லை. மேலும் உரிமம் இல்லாத துப்பாக்கியை குற்றத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார். எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். தன்னுடைய துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பின்னர் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளார்.



எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயற்சி செய்ததற்குத் தூண்டுதலாக (Motive) இருந்தது, எம்.ஜி.ஆர் மீதிருந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி. மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு நிறைய பணமுடை இருந்தது (சுமார் 7 லட்சம் ருபாய் வரை கடன் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன).அதே சமயத்தில், எம்.ஜி.ஆர் நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்தார். எம்.அர்.ராதாவுக்கு, எம்.ஜி.ஆரின் மீது தொழில்முறைப் போட்டி, பொறாமை இருந்தது. மேலும் எம்.ஆர்.ராதா தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் தியாகி பட்டம்தான் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



எம்.ஆர்.ராதா தரப்பில் கீழ்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.




1. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் நடைபெறும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.க-வில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இல்லை.



2. எம்.ஜி.ஆர் தான் எம்.ஆர்.ராதாவை சுட்டார் . சம்பவ இடத்துக்கு எம்.ஆர்.ராதா கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் எம்.ஜி.ஆரின் ஆள்கள் தான் வெடிக்காத இரண்டு தோட்டாக்களைப் போட்டிருக்கவேண்டும்.



3. எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் துப்பாக்கியை பிடுங்குவதற்காக சண்டையிட்டனர். அந்த சண்டையில்தான் எம்.ஜி.ஆருக்கு குண்டடிப்பட்டது. எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை வேண்டுமென்றே சுடவில்லை.



4. சம்பவத்தின் போது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே நடந்த மோதலில் எம்.ஆர்.ராதாவுக்குக் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தின் காரணமாக எம்.ஆர்.ராதாவின் ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆரின் சட்டை துவைக்கப்பட்டு, அதிலிருந்த ரத்தக்கறை யாருடையது என்று கண்டுபிடிக்க முடியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு ரத்த வகைகளைப் பற்றித் தெரியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு எம்.ஜி.ஆர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்திருந்த நாடோடி திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரத்த வகைகளைக் கொண்டு திரைக்கதையில் திருப்பம் கொண்டுவந்திருந்ததை சுட்டிக்காட்டினார்.



5. சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வாசுவிடம் இருந்தது. அதை அவர் வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்டுவிட்டுதான் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது.



6. எம்.ஆர்.ராதா பிரபல நாடக நடிகர். அவர் நாடகங்களில் நடிப்பதால் மாதந்தோறும் அவருக்கு 50,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. அதனால் அவர் கடன்பட்டார் என்று அரசு தரப்பில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.


7. எம்.ஆர்.ராதா சம்பவத்துக்குப் பிறகு காவல்துறைக்கு தான் கைப்பட எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ‘எனது முடிவு’ என்ற தலைப்பு கொண்ட அறிக்கை உண்மையாக எம்.ஆர்.ராதாவால் எழுதப்படவில்லை. (எம்.ஆர்.ராதா அந்த அறிக்கையில், கொள்கைக்காகவும் கட்சி நலனுக்காகவும் தற்கொலை தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது). எம்.ஆர்.ராதா கையெழுத்து அடங்கிய வெற்று காகிதத்தில், காவல்துறை தங்களுக்குத் தேவையான விவரங்களை பதிவு செய்து அதை எம்.ஆர்.ராதா கொடுத்த வாக்குமூலமாக ஜோடித்திருக்கிறார்கள்.

 எம்.ஆர்.ராதா வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்துக்கு அரசு தரப்பில் மறுவாதம் வைக்கப்பட்டது.



1. ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்கு குற்றம்புரிவதற்கு தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதைப்பற்றி அலசிஆராயவேண்டும். எம்.ஆர்.ராதாதான் எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்திற்காக எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது அவசியமற்றதாகிவிடுகிறது.



2. துப்பாக்கி மற்றும் வெடிக்கும் போர்க்கருவிகளில் நிபுணர் (Fire-arms expert), தன்னுடைய சாட்சியத்தில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டு எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் மாநிலத் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குனர் தன்னுடைய ஆய்வறிக்கையில், எம்.ஆர்.ராதாவின் தலையிலிருந்தும் கழுத்திலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகள் எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை என்று தெரிவித்திருக்கிறார். நீதிமன்றத்தில் சாட்சி கூறிய மேற்படி நிபுணர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வேட்டி கட்டிக்கொண்டு வரும் ஒருவரால் தன்னுடைய இடுப்பில் வைத்து மறைத்து எடுத்து வர முடியும் என்று தெரிவித்தார்.



3. குற்றம் விளைந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் துப்பாக்கியை பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அந்த துப்பாக்கியை எம்.ஆர்.ராதா பிடுங்கியவுடன் எம்.ஜி.ஆர் குனிந்திருப்பார். தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்திருப்பார். இது நடக்கவில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட காயத்தை வைத்து பார்க்கும் பொழுது, துப்பாக்கி மிக அருகாமையிலிருந்து எந்த போராட்டமும் நடைபெறாத சமயத்தில் வெடித்திருப்பது தெரிகிறது.



4. எம்.ஆர்.ராதாவையும் வாசுவையும், எம்.ஜி.ஆர் தன் வீட்டுக்கு வந்த போது இரு கைகளையும் கூப்பி வரவேற்றிருக்கிறார். அவர் பாலியஸ்டரால் ஆன உடையை உடுத்தியிருந்தார். எம்.ஆர்.ராதாவைப்போல் ஷால் எதுவும் அணியவில்லை. உடம்பில் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்தால், பாலியஸ்டர் துணி மெலிதாக இருப்பதால் அதன் வழியாகத் தெரிந்துவிடும்.



5. தான் எந்த துப்பாக்கியால் சுடப்பட்டோம் என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை. அதாவது எம்.ஜி.ஆர் தன்னை முதலில் சுட்டார் என்று எம்.ஆர்.ராதா சொல்லியிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் வைத்திருந்ததாகச் சொல்லப்படும் துப்பாக்கியால் தன்னை சுட்டாரா அல்லது தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டாரா என்று எம்.ஆர்.ராதாவால் சொல்லமுடியவில்லை.



6. எம்.ஜி.ஆரும் வாசுவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் எம்.ஆர்.ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரை சுட்டிருக்கிறார்.



7. எம்.ஆர்.ராதாவுக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்க்கும்போது, அவர் தனக்குத்தானே அதை ஏற்படுத்திக்கொண்டார் என்பது தெரிகிறது.
8. எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் சண்டை நடந்தது என்று நிரூபிக்கப்படாததால், எம்.ஆர்.ராதாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது என்று சொல்வதும், மேலும் அந்த காயத்தினால் ஏற்பட்ட ரத்தம் எம்.ஜி.ஆரின் சட்டையில் படிந்தது என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. சட்டை துவைக்கப்பட்டது, அதனால் முக்கிய ஆதாரம் அழிந்துவிட்டது என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.



9. வாசு முக்கிய சாட்சி. ஒரே சாட்சி. அவர்தான் குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கிறார். குற்றத்தைப் பார்த்திருக்கிறார். குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் அவர் கைக்கு கிடைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் எம்.ஆர்.ராதா இரண்டு பேரும் குண்டடிப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு என்னவாகும் என்று யாரும் சொல்ல முடியாத நிலை. இந்தச் சந்தர்ப்பத்தில், எங்கே போலீஸ் தன்னை குற்றவாளியாக கருதிவிடுமோ என்ற எண்ணம், எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படுவது சகஜம்தான். தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாகத்தான், வாசு துப்பாக்கியை காவல் துறையினருக்கு ஒப்படைக்காமல், வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு நடக்க முடிவெடுத்திருக்கிறார். இதில் ஏதும் தவறில்லை.



10. எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடித்து மாதம் 50,000 ரூபாய் சம்பாதித்திருந்தால், அவருக்கு சுமார் 7 லட்சம் ரூபாய்க்கு கடன் எப்படி ஏற்பட்டிருக்கமுடியும்? கிடைத்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எம்.ஆர்.ராதாவுக்கு பணத்தட்டுப்பாடு இருந்தது உறுதியாகிறது.



11. எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆரின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, அதனால் எம்.ஜி.ஆரைப் பற்றி நாத்திகம் என்ற பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர்.ராதா தவறாக நினைத்திருக்கிறார்.



ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர் கட்சி பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்.



அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.ஆர்.ராதா தான் குற்றவாளி என்று முடிவு செய்து அவருக்குத் தண்டனை வழங்கினார். 262 பக்கங்கள் கொண்ட தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்கு பின்வருமாறு தண்டனைகளை வழங்கினார்.


1. எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

2. தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறை தண்டனை;

3. உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை;

4. துப்பாக்கியை வைத்து சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.


அனைத்து தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவின் வயதை கருத்தில் கொண்டுதான் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு அப்போது வயது 56.


தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு எம்.ஆர்.ராதாவைக் காவல் துறையினர் கைது செய்து கூட்டிச்சென்றனர். குற்றம் நடந்த தினத்திலிருந்து தீர்ப்பு வழங்கப்படும் தினம் வரை எம்.ஆர்.ராதா ஜாமீனில் வெளிவரவில்லை.

செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை, 7 ஆண்டுகளிலிருந்து 3 1/2 ஆண்டுகளாக குறைத்தது.



இந்த வழக்கில் அனைவரும் வியந்த விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆச்சர்யம்! இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இது எப்படி என்று எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் வியந்தனர்.
காரணம் இதுதான். எம்.ஆர்.ராதாதாவின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் தன்னுடைய வீரியத்தை (Muscle Velocity) இழந்திருந்தன. குறிப்பிட்ட இலக்கை வேகமாகச் சென்று தாக்கும் திறனை குண்டுகள் இழந்திருந்தன. அதனாலதான் உயிர் போகும் அளவுக்கு பெருத்த சேதம் எதையும் ஏற்படுத்தமுடியவில்லை.



எம்.ஆர்.ராதா குற்றத்துக்குப் பயன்படுத்திய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் 1950ம் ஆண்டு வாங்கியிருக்கிறார். குற்றம் நடந்த ஆண்டு 1967ல். இந்த இடைப்பட்ட 17 ஆண்டுகளில் எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியையும் தோட்டாக்களையும் தன்னுடைய மேஜையின் டிராவில் வைத்திருந்தார். எம்.ஆர்.ராதாவின் டிரா ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும், தோட்டாக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவேதான் தோட்டாக்கள் தன்னுடைய வீரியத் தன்மையை இழந்துவிட்டன. தடயவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் இவ்வாறு ஒரு புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.



தண்டனைக் காலம் முடிந்த பிறகு, எம்.ஆர்.ராதா நிறைய நாடகங்களில் நடித்தார், சில திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்த குண்டை மருத்துவர்கள் ஆரம்ப காலத்தில் அகற்ற விரும்பவில்லை. குண்டை தொண்டையிலிருந்து அகற்றுவதை விட, அகற்றாமல் விட்டு விடுவதே உசித்தம் என்று மருத்துவர்கள் எண்ணினார்கள். (மாவீரன் நெப்போலியனுக்கு போர்க்களத்தில் சண்டை இடும்போது குண்டடிபட்டு உடலில் குண்டு தைத்தது. அதை அவருடைய மருத்துவர்கள் அகற்றவில்லை. நாளடைவில் அந்தக் குண்டு நெப்போலியனின் உடலில் கரைந்து விட்டது).
எம்.ஜி.ஆர் ஒருமுறை தும்மியபோது, கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு நகர்ந்து தொண்டைக்கு வந்துவிட்டது. பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சையால் எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டது.



1973 ஆம் ஆண்டு பெரியார் மறைந்த இறுதிச் சடங்கில் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்து பேசினர். நட்பு பாராட்டினர். எம்.ஆர்.ராதா தான் செய்த குற்றத்திற்காக, எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தியும் உண்டு.


1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 72 வது வயதில் மரணமடைந்தார்.



1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதல்வரானார். அவர் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.



Thanks : tamilpaper.net


S.P. சொக்கலிங்கம்

Tuesday, May 29, 2012

வலிசுமந்து ஒரு வரம்:









மாரி:

நீ ஒரு நிஜ ஹீரோ!







சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.



“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.



மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய்,



“அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.



மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.


ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.



இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.



தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார்.



“ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.



அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.


அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.



இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.



இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.



இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…


-'Mutur' Mohd. Rafi


Note:

"மன்னார் வளைகுடா வாழ்க்கை " எனும் தளத்தில் வெளியான கட்டுரைக்குறிப்பு இது.  இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச் செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்..

சச்சின் டெண்டுல்கர் & சாலமன் பாப்பையா ...!








 Just for a Change!






சச்சின் டெண்டுல்கர் பட்டிமன்ற நடுவராகித் தீர்ப்புக் கூற சாலமன் பாப்பையா  bat  பிடித்து கிரிக்கட் ஆடினால் எப்படியிருக்கும்? நினைக்கவே வேடிக்கையாக இருக்கின்றதல்லவா...?

பார்த்துப் பழகிய கண்களுக்கு சிறு மாறுதல்கள் கூடப் பெரிதாகத்தானே தோன்றும்.


ஒரு குறிப்பிட்ட துறையிலே மிகுபுகழோடும் வெகுபரபரப்பாகவும் இருப்பவர்கள் அதனுடன் சிறிதும் சம்பந்தமில்லாத இன்னொரு துறையிலே ஆர்வமும் ஞானமும் இருந்தால் என்ன செய்வார்கள்...?

வேறு என்ன செய்வார்கள்? கவிதை எழுதுவார்கள்!
Ok..ok!  புகழின் உச்சியிலிருக்கும் ஒருவர் எழுதிய கவிதை இது.


வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்....





-'Mutur' Mohd. Rafi


Here you are...










"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து

வெட்கத்தில் புன்னகைத்து..

கடற்கரையில் காற்றுவாங்கி..

கைபிடித்துப் பரவசமாய் நடந்து..

கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு..

கைபேசியில் குறுஞ்செய்தியனுப்பி...

கண்களால் பேசிச்சிரித்து...

கால்கடுக்கக் காத்திருந்து...

காதுபிடித்து மெல்லத்திருகி...

கண்ணீரோடு கட்டியணைத்து..

கண்பொத்தி விளையாடி..

இடிக்குப்பயந்து தோளில் சாய்ந்து..

செல்லமாய் நெஞ்சில் சாய்ந்து...

பேசாமல் இருந்து தவிக்கவிட்டு...

கோயில்சுற்றி குளம்சுற்றி...

மழைரசித்து நனைகையில்...

துப்பட்டாவில் குடைவிரித்து...

புத்தகத்தில் கடிதம் மறைத்து...

மணிக்கணக்கில் தொலைபேசி..

அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி..

'அவர் ரொம்ப நல்லவர்மா' என

அழுதுபுலம்பி அம்மாவிடம் சொல்லி...

ஒருவழியாய் வெற்றிகொள்கின்ற

காதல் திருமணங்கள்போல

இனிப்பதில்லை-

இன்டர்நெட்டில் தேடியலைந்து

பத்துக்குப்பத்து பொருத்தம் பார்த்து

பண்ணுகின்ற திருமணங்கள்!


-கமல்ஹாஸன்

Sunday, May 27, 2012

சிறுகதை: மூதூர் மொகமட் ராபி








நிழலாக சில நிஜங்கள்









ராஜீஸுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

இன்று மாலை ஸனீராவிடம் எப்படியாவது விசயத்தைச் சொல்லிவிட வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. இனிமேலும் அதைச் சொல்லவில்லை என்றால் அவன் எதற்காக ஸனீராவுக்கு அதுவும் அவள் வீட்டுக்கே சென்று பாடம் சொல்லித் தரச் சம்மதித்தானோ அந்த நோக்கமே வீணாகிவிடும்.

படுக்கையை விட்டு எழுந்தவன் நேரத்தைப் பாரத்ததும் சுறுசுறுப்பானான். டவலை எடுத்துக்கொண்டு சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த தன் தாயைக் கூப்பிட்டு டீ தர நினைவுபடுத்தி விட்டு கிணற்றடிக்குச் சென்றான்.


ராஜீஸ் இருபத்து மூன்று வயதை கடந்த மார்ச் மாதத்தில் முடித்திருக்கும் திடகாத்திரமான கெட்டிக்கார இளைஞன். குடும்பத்தில் ஒரே பிள்ளை. தந்தை உள்ளுர் பாடசாலையொன்றில் ஆசிரியராக இருக்கின்றார். ராஜீஸ் கண்டியிலுள்ள பிரபல கல்லூரியொன்றில் படித்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருக்கின்றான். உயர்தரப்பரீட்சை எழுதிய பின்பு சில மாதங்கள் வரை கண்டியில் தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தவன் ஊருக்கு வந்து ஒருமாதத்துக்கு மேலாகின்றது.

'ஆகாய வெண்ணிலாவே..தரைமீது வந்ததேனோ...அழகான..'  ஜேசுதாஸின் பாடல் ஒன்றுடன் கிணற்றடியிலிருந்து ஈரமாய் வந்த ராஜீஸை தாயின் குரல் இடை மறித்தது.

'தம்பி, இன்னைக்கும் பாடமா?'

'ஏம்மா ஏதும் வேலையிருக்கா?' எங்கே இன்று ஸனீராவைச் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற தவிப்போடு கேட்டான் ராஜீஸ். இன்றைக்குத் தவறினால் அந்த விசயத்தைச் சொல்லவே முடியாமலாகிவிடும் என்பது அவன் தாய்க்கு எப்படித் தெரியும்?

'வேற ஒண்ணுமில்ல, உனக்கிட்ட சொல்ல மறந்திட்டனே..நேத்துக் காலைல அவ வந்தா..' என்று நிறுத்திய தாயை 'யார்' என்பது போல திரும்பிப் பார்த்தான்.

'அதுதான் தம்பீ, நம்ம ஸனீராட உம்மா! எப்பிடி நல்லாப் படிப்பிக்கிறானான்னு கேட்டேன். ஓ! இப்பதான் மகள் விஞ்ஞானப் பாடத்தை விரும்பிப் படிக்குது என்றா...'

'............'

'அது சரி, நீ என்ன.. படிப்பிச்சு முடிஞ்சா ஒரு நிமிசம் அவங்க வீட்ல நிக்கிறதில்லியாமே.. ஏன் தம்பி, கொஞ்ச நேரம் இருந்துதான் வாயேன்...மாஸ்டர் வாப்பாக்கிட்ட குறைபட்டாராம்' என்றவாறு டீயை நீட்டிய தாயிடம் ஏதோ சொல்ல வந்தவனுக்கு ஸனீராவிடம் தான் சொல்லப்போகும் விடயம் நினைவுக்கு வந்தது. பேசாமல் டீயைக் குடித்து விட்டு 'ட்ரெஸ்' செய்து கொண்டு சைக்கிளை வெளியிலெடுத்தான் ராஜீஸ்.


தூரத்தில் எங்கேயோ ஒரு குயில் விடாமல் கூவிக்கொண்டிருந்தது.
***







மாலை 6.30

'தாக்கவீதத் தொடரில் மேலேயுள்ள மூலகங்கள் கீழேயுள்ள மூலகங்களை அவற்றின் உப்புக் கரைசலிலிருந்து இடம்பெயர்க்கும்..விளங்கிட்டுதானே? ஆகவே  நாகம், செப்புச்சல்பேற்றுக் கரைசலில் செப்பை இடம்பெயர்க்கும்...சமன்பாடு எழுதுங்க'

ஸனீராவுக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ். ஸனீரா, அவன் கொடுத்த இரசாயனச் சமன்பாடுகளை எழுதிக்கொண்டிருந்தாள்.  கையிலிருந்த சோக் பீஸை யன்னலினூடாக எறிந்து விட்டு ஸனீராவின் அருகில் கதிரை ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்து அவள் எழுதுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.

ஸனீரா!


ராஜீஸின் தந்தையின் பால்ய நண்பரும் ஊரிலே குறிப்பிடக்கூடிய பசையுள்ள புள்ளிகளில் ஒருவருமான ஜமால் ஆசிரியரின் ஒரே மகள். பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றாள். நிறம் சற்றுக்குறைவானாலும் வசீகரமானவள்.

சிறுவயதிலிருந்தே ராஜீவ் வெளியூரில் படித்ததால் நெருங்கிய உறவினர்களைத் தவிர ஊரில் பலரை அவனுக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் இப்போது ஊருக்கு வந்த ஒன்றரை மாதத்தில் அவனது தந்தையை பாடசாலை வேலையாக வீட்டிற்குத் தேடிவருகின்ற சிலரையாவது தெரிந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். இவ்வாறுதான் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியரையும் அறிந்து கொண்டான் ராஜீஸ்.

ஜமால் ஆசிரியர் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் ராஜீஸுடன் அன்பாகப் பேசிக் கொண்டிருப்பார். அவனது படிப்பு, எதிர்கால நோக்கம் பற்றியெல்லாம் மிகுந்த அக்கறையோடு கேட்பார். ராஜீஸின் தந்தையுடனான தனது இளமைக்கால நட்பு நெருக்கங்களையெல்லாம் விபரித்து இன்றும் அது இனிதாகத் தொடர்வது பற்றிப் பெருமையாகச் சொல்லுவார்.   அவன் வந்த ஒரு வாரத்திற்குள்ளே இரண்டு தடவை அவனைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கின்றார். அவன் தயங்கிய போதெல்லாம்,


'ராஜீஸ்! ஒரு மனிதர் நம்மை மதித்து வீட்டுக்கு அழைத்தால் அதைச் சந்தோசமாக  ஏற்க வேண்டும். அதுதான் பண்பு' என்ற தந்தையின் விருப்பத்திற்காக மறுக்காமல் சென்று வருவான். அப்போதெல்லாம் தனது தந்தையுடனான நட்பின் காரணமாகவே ஜமால் ஆசிரியர் தன்மீது அதிக அக்கறை  காண்பிப்பதாக எண்ணியிருந்தவனுக்கு அந்த அக்கறையின் உண்மையான காரணம் ஒருநாள் தெரியவந்தும் அதிர்ச்சியடைந்தான் ராஜீஸ்.


அவனால் அதை நம்பவே முடியவில்லை. அதன்பிறகு ஜமால் ஆசிரியர் வீட்டுக்கு வந்த போதெல்லாம் ராஜீஸ் முன்புபோல முகம் கொடுத்துப்பேச முடியாமல் சங்கடப்பட்டான். அவர் தந்தையைச் சந்திப்பதற்கு வரும்போதெல்லாம் மெல்ல நழுவி விடுவான். அப்படியும் எதிர்பாராமல் ஒருநாள் அகப்பட்டுக்கொண்டான்.

'என்ன தம்பிய காணவே கிடைக்குதில்ல...'

'ஓ! அது..வந்து..சும்மா கொஞ்சம் வேலை' இழுத்துச் சமாளிக்க முயன்றான். உடனடியாக 'ரெடிமெட்' பொய் வராத தன் நேரத்தை நொந்து கொண்டான்.

'அப்படியா! இல்ல மகன் வீட்ல சும்மாதான் இருக்குன்னு  தம்பிட வாப்பா சொன்ன மாதிரி ஞாபகம்...'  அவர் விடுவதாக இல்லை.

ராஜீஸுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. காட்டிக் கொள்ளாமல், 'இன்னும் கொஞ்ச நாள்ல யுனிவசிட்டி தொடங்கிடுவாங்க...அதுவரைக்குமதான்... இப்பிடி...'

'ஆ! தம்பி ஸயன்ஸ்தானே? நம்மட மகளுக்கு...ஸனீராவைத் தம்பிக்குத் தெரியும்தானே? ஸயன்ஸ்தான் கொஞ்சம் பிரச்சினையாயிருக்கு. சும்மாயிருக்கிற நேரம் கொஞ்சம் வீட்ட வந்தா...'

அவனுக்குப் புரிந்தது.

'ஏன்தான் வாப்பா இப்படியெல்லாம் சொல்லி மாட்டி விடுறாங்களோ?' மனதிற்குள் தந்தையைக் கோபித்துக் கொண்டிருந்தவனுக்கு மின்னலடித்தது போல அந்த 'ஐடியா' மூளையில் பளிச்சிட்டது. தன் திறமையைத் தானே உள்ளுர மெச்சிக் கொண்டான். அவன் பதிலுக்காகக் காத்திருந்தவரிடம் மலர்ந்த முகத்துடன் சம்மதித்தான்.

அப்படித் தொடங்கியதுதான் இந்தத் தனி வகுப்பு.


'என்ன  ஸனீரா, உன்ட ஸேருக்கு யோசனை எங்கேயோ போயிட்டுது போல?'
திடுக்கிட்டு சுயநினைவுக்குத் திரும்பியவன் எதிரே ஸனீராவின் தாய் டீயுடன் சிரித்துக் கொண்டே நின்பதைக் கண்டான். சிரித்தவாறு டீயை வாங்கி மேசையில் வைத்தான்.

'ஆறிடப் போகுது குடிச்சிட்டு யோசிங்க.. ஸனீரா எடுத்துக் குடு!'  என்று அவர் திரும்பிப் போனதும் டீயைத் தானே எடுத்துக் குடித்து விட்டுக் கப்பை வைத்தான் ராஜீஸ். ஸனீரா தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். வெளியே இலோசாக மழைதூறிக் கொண்டிருந்தது.

'ஸனீரா!'

எழுதிக் கொண்டிருந்தவள் தலையை நிமிர்த்தி, 'என்ன?' என்பதுபோல புருவங்களை உயர்த்தினாள். அவள் பெரிய விழிகளில் தெரிந்த பளபளப்பு அவனை ஒரு கணம் பேசவிடலாம் வசீகரித்தன. மேசையில் ஆறிக்கொண்டிருந்த அவளின் டீ கப்பைக் காட்டினான். அவள் புன்னகைத்தவாறே தனது டீயை எடுத்துக் கொண்டாள்.

'ஸனீரா, நான் ஏற்கனவே சொன்னபடி இன்னையோட இந்த க்ளாஸ்ஸை முடிப்போம். நான் படிப்பித்த பகுதிக்குள்ளே ஏதாவது விடுபட்டிருக்குமா? இருந்தா கேளுங்க.. ஏனென்னடா இனி எனக்கும் கெம்பஸ் தொடங்கிவிடும்....'

அவன் முடிக்கவில்லை.

'ஒரு நிமிசம் இருங்க!' என்றுவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவள் சற்று நேரத்தில் வெளியே வந்து ஒரு அழகான புத்தகமொன்றை நீட்டினாள்.

' அட! என்ன இது?' புரியாமல் பார்த்தவனிடம், 'இது வெளிநாட்டிலிருந்து கிடைத்த நோட்புக். உஙகளுக்கு என்ட சின்ன ஒரு கிப்ட்!' என்று தயங்கியவாறு சொன்னாள் ஸனீரா.

'ஓ! தேங்க்யூ! வெரிமச்' என்று அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு மேசையில் வைத்துவிட்டு, 'அதிருக்கட்டும் ஸனீரா, உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் பேசவேணும்.' என்று யாராவது வருகிறார்களா என்று சுற்றிலும் பதட்டமாகப் பார்த்தான் ராஜீஸ்..

ஸனீரா கெட்டிக்காரி மட்டுமல்ல, பழகுவதற்கும் இனிமையானவள். இத்தனை நாளும் விஞ்ஞானப்பாடம் சொல்லித்தர ஒத்துக்கொண்டதற்கு காரணமே இன்னும் சிறிது நேரத்தில் ராஜீஸ்  அவளிடம் சொல்லப்போகும் விடயம்தான். ஆனாலும் அதை அவன் முழு ஈடுபட்டுடன் செய்ய முடிந்ததே அவளது திறமையினால்தான்.

'எ.. என்ன விசயம்?' ராஜீஸின் பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது.

'ஸனீரா, நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேணும்...செய்வீங்களா?'

'உதவியா? என்ன உதவி..' அவள் விழிகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன.

'அது..வந்து..சொல்றேன்! ஆனா உங்க வாப்பா, உம்மா, வேற யாருக்கிட்டயும் இதைச் சொல்லக் கூடாது..முடியுமா?'

'ஆங்.. சரி! அது என்ன உதவி?'
'ஸனீரா, உங்க வாப்பா,  உங்களுக்கு என்னைச் சம்பந்தம் பேசியிருக்கும் விசயம் தெரியும்தானே?'

அவள் பதில் கூறாமல் தலையைக் குனிந்திருந்தாள். 'ஆனா ஸனீரா, நான் கண்டியில ஒரு கேளை விரும்பிட்டிருக்கிறேன்...'


தலைகுனிந்திருந்த ஸனீரா சட்டென நிமிர்ந்தாள்.

'அவளைத்தான் நான் மெரி பண்றதாகவும் முடிவும் பண்ணிருக்கிறேன்... ஆனா இங்க ஊருக்கு வந்த பிறகுதான் உங்களை எனக்கு முடிவு செய்ய நம்ம இருவர் வீட்டிலும் ஏற்பாடு நடந்திருப்பது தெரிய வந்தது. ஆனா..'

அவள் விழிகளில் கண்ணீர் குளமாய்த் ததும்பியது. அவளது உதடுகள்
எதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்க யாராவது வந்து விடப் போகின்றார்களே என்ற பயத்தில் தவித்துக் கொண்டிருந்தான் ராஜீஸ்.

'ஸனீரா, ஐம் ஸோ ஸொறி! அழாதிங்க! யாராவது வந்து பாத்தா ரெண்டு பேரையும் பிழையா நினைக்கப் போறாங்க! உங்களைப் பிடிக்காததாலதான் இப்படிச் சொல்றேனென்டு நினைக்காதீங்க..அங்க கண்டியில அந்த கேள் என்மேல உயிரையே வச்சிருக்கா..என்னால அவளுக்கு எதாவது ஏமாத்தம் வந்தா தாங்கவே மாட்டா...!'

'இந்த விசயத்தை எங்க வீட்ல சொன்னா என்னை இவ்வளவு படிக்க வச்சு ஆளாக்கின எங்க உம்மா வாப்பா தாங்க மாட்டாங்க. நான் இல்லையென்டா உடனே இன்னொரு நல்ல மாப்பிள்ளையைக் கூட பேசுகிற வசதி உங்க வாப்பாக்கிட்ட இருக்கு.! ஆனா என்ன நம்பியிருக்கிற அந்த ஏழைப் பிள்ளைக்கு அந்த வசதியில்லாமில்ல, ஸனீரா! அதனால நீங்களே என்னைப் பிடிக்கயில்ல என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும். எனக்காக இல்லாட்டாலும்  தகப்பனில்லாத ஒரு ஏழைப் பிள்ளைக்காகவாவது இந்த உதவியை..'

அதற்குள் யாரோ வருவது போலிருக்கவே அவசரஅவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினாள் ஸனீரா.

'என்ன ஸனீரா? பாடமெல்லாம் முடிஞ்சுதா?' என்றவாறு வீட்டுக்குள்ளே வந்தார் ஸனீராவின் தந்தை ஜமால் ஆசிரியர். மகளின் வகுப்பு இன்றுடன் நிறைவடைவது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காகக் கேட்டுவைத்தார்.

'ஓம், எல்லாமே முடிஞ்சுட்டு வாப்பா!'  ராஜீஸைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினாள் ஸனீரா.

சிறிது நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ராஜீஸ் விடைபெற்றுக் கொண்டான்.
 ***





 'உம்மா! உம்மா!'

கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த ராஜீஸ் கையிலிருந்த விஞ்ஞானப்பயிற்சிப் புத்தகத்தையும் ஸனீரா தந்த நோட்புக்கையும் மேசையில் எறிந்தான். எறிந்த வேகத்தில் அந்த நோட்புக்கினுள்ளிருந்து ஒரு சிவப்புநிறக் கவர் ஒன்று எகிறி விழுந்தது. அதைச் சந்தேகமாகய் எடுத்துப் பார்த்தான்.


அது ஒரு கடிதவுறை. அதன்மேல் அவனது பெயர் எழுதப்பட்டிருந்தது. அவசர அவசரமாய் பிரித்துப் படித்தான்.

அன்புள்ள ராஜீஸ்,

என்னை மன்னிக்கவும். என் படிப்பில்  இத்தனை நாளாக உதவி புரிந்து வரும் உங்களிடம் நான் என் வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் உதவியை எதிர்பார்க்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

எங்கள் வீட்டில் எனக்கு உங்களைத் திருமணம் பேசுவதற்கு ஆயத்தம் புரிகின்றார்கள். இது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் நான் வேறு ஒருவரை விரும்புகின்றேன். அவர் இப்போது ஊரில் இல்லை. வெளிநாட்டிலிருக்கின்றார். ஒருவரை மனதார விரும்பி விட்டு இன்னொருவரை மணப்பது சரியா? உங்களைப் பிடிக்கவில்லை என்று நான் ஒரு பெண்பிள்ளை என்பதால் எங்கள் வீட்டில் சொல்ல முடியாது. சொன்னால் வாப்பா கொன்றே விடுவாங்க.. ஆனால் நிங்க நினைத்தால் சொல்ல முடியும்.

உங்களை மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பழகும் ஒரு சகோதரனாக எண்ணி இந்த உதவியைக் கேட்கின்றேன். எனக்காகச் செய்யுங்கள். இந்தக் கடிதத்தை நோட்புக்கினுள் வைத்திருக்கின்றேன். என்னைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டாம். உங்கள் உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்.

இப்படிக்கு

ஸனீரா.


ராஜீஸுக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.




-மூதூர் மொகமட் ராபி
(1990.12.18)

Note:

இதுதான் நான் எழுதி -முழுமையாக எழுதி முடித்து - வெளிவந்த முதல் சிறுகதை என்று நம்புகின்றேன். இப்போது வாசித்துப் பார்க்கும்போது கற்றுக்குட்டித்தனமாக இருக்கின்றது. இது 1991 அல்லது 1992 ல் இலங்கை வங்கி அலுவலர் திரு. பக்கீர்த்தம்பி  ஆசிரியராக இருந்து வெளியிட்ட 'முத்தொளி' சஞ்சிகையில் பிரசுரமானது - 'Mutur' Mohd.Rafi