Saturday, March 1, 2014

முள்மரம்












வீட்டு முற்றத்திலே
வெகுநாட்களாய் -
வேர்பிடித்து நின்றிருந்தது
ஒரு வெறிபிடித்த முள்மரம்



மல்லிகைச்செடி வாங்கி 
மலர்ப்பாத்தி செய்தவேளை
மண்ணோடு மண்ணாய்க்கிடந்து
மறைவாய் முளைத்தது
அந்த முள்மரம்..



ஊற்றிய நீரையெல்லாம்
உறிஞ்சிக் குடித்து
விலைவாசி போல் வேர்விட்டு
விரைந்து வளர்ந்தது
அந்த முள்மரம்



இலைகள் நிறையவிட்டு
இலைக்கணுவில் முட்கள் வைத்து
இறுமாந்து நின்றிருந்தது
அந்த முள்மரம்



தன் வேர்செல்லும் இடமெல்லாம்
வேறு மரங்கள் வளராமல்
வேரோடு ஒழித்துக்கட்டி
அதிகாரம் பேசி நின்றிருந்தது
அந்த முள்மரம்..



ஒன்றும் விடாமல்
ஒழித்துக்கட்டி 
ஒற்றை மரமாய் அது நின்றவேளை
உட்புறமாய் கறையான் அரித்து
உழுத்துப்போனதில்..



ஆயிரம் செடிகொடிகள்
அதன்கீழே அநியாயமாய் நசிந்து சாக
தடுமாறிச் சரிந்து வீழ்ந்து
சத்தமின்றி ஒழிந்து போனது
அந்த முள்மரம்!

-மூதூர் மொகமட் ராபி

Sunday, February 23, 2014

கவிதை : உன்னைக்காணும் நேரம்!









ரு புதுமலரை முகர்வதுபோல

ஒரு இனிய பாடலை இசைப்பது போல
பிஞ்சுக் குழந்தையின் பஞ்சுமுத்தம்போல
உன்னைக்காணும் நேரம் உணர்கின்றேன்..



காலம் காலமாய் யுகம் யுகமாய்
இந்தப்பிரபஞ்சமெல்லாம் நான் தேடியலைந்த
ஏதோ ஒன்றாய் எனக்கு நீ எப்படியானாய்..?



இனிய நிலாவே -
நீ சிரிக்கும் நேரம் இந்தப்பூமியுருண்டையே
பூரித்து புதிதாகச் சுழல்கின்றதே!



ஓ! கவிதை கவிதையென்று
எத்தனை காகிதங்களை
உன் கரங்களிலே திணித்திருக்கின்றேன்
இருந்தும் என் உணர்ச்சிமிக்க
உயிர்த்துடிப்பான கவிதையே நீதானே..!


-மூதூர் மொகமட் ராபி