பஸ் ஓரளவு காலியாத்தான் இருந்துது. ஆனாலும் கடசி வரிசையிலே ஜன்னலோரமா போய் உட்கார்ந்தேன். தனியா இருக்கணும்போல தோணிச்சுது. எதுக்கா? அழறதுக்குத்தான். ஆம்பளை அழலாமா? அதுவும் பட்டப்பகல்ல, நாலுபேர் ஏறி இறங்குற பஸ்ஸுல! குழப்பமாத்தான் இருக்கு. இப்போல்லாம் பொம்பளைங்களே லேசுல அழறது இல்லையே. சினிமாவுல கூட சிவாஜி, சிவகுமார் காலத்துக்கப்புறம் யாரும் பெருசா அழுதமாதிரி தெரியல. கமல் அழுவார்தான். இப்போ அவரும் குறைச்சுக்கிட்டார்தானே. குடும்பப்படம் பாபநாசத்திலே கூட நாயகன் மாதிரி மயில் அகவலாகவோ குணா மாதிரி குமுறி குமுறியோவோ அழலைதானே!
மத்தவங்க கதை எதுக்கு? நானே, ’அழுவேன்.. ஆனால் அழமாட்டேன்’ ரகம். குழப்புகிறேனா? உண்மை அதுதான். சினிமாவிலே நிழலான கதாபாத்திரங்களுக்காக சட்டென அழுதுடுற நான், நிஜத்திலே கல்லாட்டமா நிப்பேன். மரணமா இருந்தாலும்தான்! நாகர்கோவில் லக்ஷ்மி தியேட்டர்லயும் பயோனியர் தியேட்டர்லயும் சிவாஜி கூடவும் சவுகார் கூடவும் சேர்ந்து புழிஞ்சு புழிஞ்சு அழுத நான், என் பத்தொன்பது வயசிலே அப்பா செத்தப்போ சொட்டு கண்ணீர் விடலை! இத்தனைக்கும் அப்பா தலைமாட்டிலேதான் நின்னுட்டிருந்தேன். துக்கம் விசாரிக்க வந்தவங்க சின்னதா கேவிக்கிட்டு சட்டுனு உடம்பை குலுக்கினப்போ தொண்டையை அடைக்கத்தான் செஞ்சுது. ஆனா என் கண்ணுல மட்டும் ஊஹும் தண்ணி வரவே இல்லை. அப்பாவுக்கும் எனக்கும் சுமுகமான உறவு இல்லாமத்தான் நான் அழலைன்னு பலரும் பேசிக்கிட்டதுலேயும் உண்மை இல்லாம இல்லை.
அப்பா என்னை புள்ளையா வளர்த்ததைவிட பந்தயக்குதிரையா நினைச்சதுதான் அதிகம்.. பார்க்கிறப்போல்லாம் விரட்டிக்கிட்டேதான் இருந்தார். அதெல்லாம் ’அக்கறை’ன்னு இப்ப இந்த அம்பது வயசுல நானும் ஒரு டீன் ஏஜ் பையனுக்கு அப்பாவானப்பறம் சொன்னாலும் அன்னைக்கு அதை அடக்குமுறையாத்தான் நினைச்சு வெறுத்தேன். அந்த வெறுப்பினாலே எப்பவுமே அவரோடு ஏட்டிக்கு போட்டி வெறைப்புத்தான். கடைசியிலே களைச்சுப்போய் தனியா கூப்பிட்டுப் பேசுவார்.
“எனக்கு மட்டும் உன்னை எப்பவுமே கண்டிக்கணும்னு ஆசையா என்ன? எல்லாம் ஒரு பயம்தான். நீ நல்லாத்தான் படிக்கிறே. ஆனா இதெல்லாம் பத்தாது. படிப்பைத் தவிர என்னால உனக்கு காசு பணம் சொத்துன்னு வேற எதுவும் தரமுடியாது. அதனாலத்தான் சொல்றேன். நீ எவ்வளவு வேணும்னாலும் படி. இன்னும் அதிகமா உழைக்கணும். இப்போ பண்ற மாதிரி எழு மணி வரை தூங்குறது.. எப்பப் பார்த்தாலும் ரேடியோவில பாட்டு கேக்கறது.. மாசம் தவறாம சினிமா பார்க்க அடம் பிடிக்கிறது எல்லாம் ரொம்ப தப்புப்பா.“
அப்போதும் நான் இளகாமல் இறுக்கமாகத்தான் இருப்பேன். கடைசியில் அந்த அஸ்திரத்தை எடுப்பார்.
“உனக்கு என் உடம்பு பிரச்சனை தெரியாது. நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்னு எனக்கும் தெரியாது. என்மேலே இரக்கப்பட்டாவது கொஞ்சம் கூடுதலா ஒழுங்கையும் உழைப்பையும் கடைபிடி”
அந்த தழுதழுப்பான குரல் என்னை கலங்கடித்துவிடவே மவுனமாக
தலையாட்டி நகர்ந்து போய் புத்தகத்தை தூக்குவேன். எல்லாம் அந்த ஒரு ராத்திரி வரைதான். விடிஞ்சா பழைய குருடியாக என் தலையில் அவர் தண்ணீர் ஊற்றுவதும் நிமிராத வாலாக அவரை முறைச்சபடியே நான் எழுந்திருப்பதுமா பழைய வாழ்க்கைக்கே போயிருப்போம்.
ஆனால் அவர் உண்மையை மட்டும்தான் எப்போதும் சொல்லியிருக்கிறார்னு அவரது நாப்பத்தெட்டு வயசு அகால மரணம் உறுதி பண்ணிடுச்சி. அப்பாவை எடுக்கிற நேரத்திலே குனிந்து அவரது நெத்தியிலே முத்தமிட்டே அவரை வழியனுப்பினேன். அவ்வளவுதான். ’அவ்வளவேதான் எனக்கும் அப்பாவுக்குமான பந்தம்’ என ஊரும் உறவும் மட்டுமல்ல அம்மா, தங்கச்சிகளும் கூட நம்பியிருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை.
அன்னையிலேர்ந்துதான் நான் அப்பாவாகவே உருமாறினேன்.. ஆனால் அப்பாவுக்கு நேர் எதிராக! என்ன மறுபடியும் குழப்புறேனா? அப்பா வாழ்க்கையை ஓர் அனுபவமா வாழாம ஒரு தவமாவே வாழ்ந்து போய்சேர்ந்தவர். முழுக்க தியாகமான வாழ்வு. ஓரளவு கைநிறைய சம்பாதிச்சாலும் மூணு செட்டுக்கு மேலே தனக்குன்னு நல்ல உடுப்பு வச்சுக்கிட்டது இல்லை.. ஒரு ஓட்டலுக்கு போய் டிபன் காபி சாப்பிட்டது இல்லை… ரேடியோ சினிமான்னு எந்த கேளிக்கையையும் சுகிச்சது இல்லை. அவரது அதிகபட்ச பொழுதுபோக்கே ’ஹிண்டு’ பேப்பர் மட்டும்தான். தனக்குன்னு எதையுமே ஆசைப்படாம தன்னோட குடும்பத்து நன்மைக்காக அவர் காட்டின அதே அக்கறையை நான் உள்வாங்கிக் கிட்டாலும்.. அதைச் செயல்படுத்தறதுல அப்படியே அவருக்கு நேர்மாறா நடக்கவே முடிவெடுத்தேன்.
குடும்பத்து மீதான அக்கறையை கோபம், கண்டிப்பு, தண்டனை மூலம்தான் வெளிப்படுத்தணும்னு சட்டம் ஒண்ணுமில்லையே! தானும் சிரிக்காம மத்தவங்களையும் சிரிக்க விடாம அப்படி ஒரு இறுக்கமான அன்பு பாசம் அக்கறை என்னத்துக்கு? காசு செலவில்லாமல் இயற்கையே கொடுத்த சின்ன சின்ன சுகங்களைக் கூட அவர் அனுபவிக்கலையே! ஸ்பரிச சுகம் எத்தனை பெரிய இன்பம்! பள்ளிக்கூடம் மாறின ஒன்பதாம் வகுப்பைத்தவிர மற்ற எல்லா வகுப்புகள்லயும் மாதாமாதம் முதல் ராங்க் எடுத்த ஒரு மகனின் தோள் தொடுற, கட்டி அணைக்கிற, முத்தமிடுகிற சுகங்கள் ஒண்ணையுமே அவர் அனுபவிக்கவில்லையே! அப்பா பிணத்தை தூக்குறப்போ நான் முத்தமிட்டதோட நோக்கம்கூட அப்பா வாசம் எப்படி இருக்கும் என்று தெரிஞ்சுக்கத்தானோ என்னவோ? அப்போதான் அந்த சபதம் எடுத்தேன், ‘எனக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறந்தால் எங்க முதல் ஸ்பரிசம் நிச்சயம் பிணத்தை முத்தமிடுகிற சோகமா இருக்கவே கூடாது’ன்னு! அதன்பிறகு நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.
சொல், செயல், நடவடிக்கை எல்லாத்துலேயுமே அவருக்கு நேர் எதிரான அணுகுமுறைகளோட வாழ்ந்தேன் ; வாழறேன். கோவமா யார் கிட்டேயும் ஒரு வார்த்தை பேசத்தெரியாது. ’இது பிடிக்குது இது பிடிக்கலைன்னு’ தீர்த்து சொல்லத் தெரியாது. ரெண்டு தஙகச்சிங்களுக்கு அண்ணனா வளர்ந்தப்ப ஒருதடவைகூட கை நீட்டினதில்லை. சென்னையில வேலை கிடைச்சு குடும்பத்தை கூட்டிவந்ததும் , ஒரு வாரம் ஹோட்டல், ஒருவாரம் சினிமா, ஒருவாரம் நண்பர்கள் வீடு, ஒரு வாரம் மெரினா என்று வாரம் தவறாம அம்மாவை அழைச்சிட்டுப் போய்.. அப்பா கொடுக்காத சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் வாரி வாரி வழங்கினேன். அந்த சுதந்திரத்தையே தனக்கான அதிகாரமா மாத்தி என்னை அடக்கி ஆளத்தொடங்கினதோட, தங்கச்சிங்க கல்யாணத்துக்கான டவுரி பண்டமாற்று வியாபாரமா, எனக்கு கல்யாணம் பேசினபோது அந்தப் பொண்ணு முகத்தைக்கூட பார்க்காமத்தான் தாலி கட்டுனேன். இருவது வயசு வரைக்கும் பசங்களை அடிச்சுத்தான் வளர்க்கணும்னு சொல்லி சொல்லியே அடிச்ச அப்பாவின் பிள்ளையான நான் என் மகனை (இந்த பதினேழு வருடத்தில்) ஒரு தடவை கூட அடிச்சதும் இல்லை குட்டுனதும் இல்லை.
நீங்களே அதிசயப்படுற அளவு இப்படியெல்லாம் அநியாயத்துக்கு நல்லவனா இருந்தும் கடைசியிலே என் நிலைமையைப் பார்த்தீங்களா? திருச்சி – சென்னை பஸ்ஸின் கடைசி மூலையிலே உட்கார்ந்து அழவேண்டிய கதிகேடு!
ஒரு அப்பா செத்துப்போன குடும்பத்து மூத்த மகன் என்ன என்ன செய்யணுமோ அத்தனையையும் தப்பாமத்தான் செய்தேன். ஆனாலும் அதெல்லாம் பத்தாது அதுக்கும் மேலே பெருசா ஏதாவது எதிர்பார்த்தாங்களோ என்னவோ இன்னைக்குவரை அம்மா, தங்கச்சிங்களுக்கு அந்த நன்றியுணர்வு இல்லவே இல்லை. ஒருகட்டத்துல ’உங்க நன்றியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்.. நிம்மதியா வாழவிட்டா போதும்’னு நான் நொந்துக்கிறாப்பிலே கல்யாணமாகி தனிக்குடித்தனம் போன ரெண்டு தங்கச்சிங்களோ இல்லை ஒரு தங்கச்சியும் அம்மாவுமோ இல்லே மூணுபேருமாவோ அடிக்கடி முட்டிப்பாங்க. நாள்கணக்கு மாசக்கணக்கு தாண்டி வருசக்கணக்கா ஒருத்தொருக்கொருத்தர் பேச்சுவார்த்தைகூட இருக்காது. பலசமயம் பஞ்சாயத்து பண்ணப்போய் நான் பொல்லாதவனா பேரெடுத்து திரும்பியிருக்கேன்.
என்னை ரொக்கத்துக்கு விக்கிறாப்பிலே அம்மாவா தேடிக் கொண்டு வந்த என் மனைவியை அம்மாவுக்குத்தான் மொதல்ல புடிக்காமப் போச்சு. அண்ணி கொண்டு வந்த பணம் நகையை ஆதாரமா வச்சு ஆளுக்கொரு வீடு கட்டி முடிச்சப்பறம் தங்கச்சிகளுக்கும் அண்ணியைப் புடிக்காம போச்சு. ஆனாலும் ‘யார் எது சொன்னாலும் நீ வாயை திறக்காதே’ன்னு நான் சொன்னதை என் சம்சாரம் விதியே என்று கடைபிடிச்சது பெரிய ஆறுதல்தான்.
ஆனால் அம்மா? வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்கிற மூர்க்கத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக விசுவரூபம் எடுக்க ஆரம்பிச்சார். தையல் கற்றுக்கொள்கையில் நியூஸ்பேப்பரை வெட்டிப்பழகும் அதே சுவாரஸ்யத்தோடு உறவுகளையும் உணர்வுகளையும் சகட்டுமேனிக்கு வெட்டித்தள்ளினார். இருபது வருசங்களாக அப்பா போட்ட கோட்டுக்குள்ளே வாழ்ந்துபழகிய அம்மாவுக்கு, ’நல்லது செய்வதா நினைச்சு நான் கோடுங்களை அழிச்சது பெரும் வினையாவே போச்சுது. அப்படித்தான் சித்தி மகள் கல்யாணத்துக்காக நான் நாகர்கோவில் பொறப்பட்டப்போ.. “எங்கே பொறப்பட்டுட்டே? சித்தி வீட்டுக்கா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..” – என தடுத்தார்..
“திடீர்னு சித்தியோட பகைங்கறதால சித்தப்பா செஞ்ச உதவிகளை மறக்கலாமா? அப்பா செத்தப்போ ஆஸ்பத்திரிலேர்ந்து மயானம் மட்டும் அவர்தானேம்மா உதவி செஞ்சாரு. அந்த நன்றியை நினைக்க வேணாமா? “
“சொள்ளமாடன் இல்லேன்னா சுடலை மாடன்கிறாப்பிலே அவர் இல்லேன்னா இன்னொருத்தர் உதவி இருப்பாங்க. பெருசா சொல்ல வந்துட்டான். நீ ஆபிசுக்கு போற வழியைப் பார். என்னை மீறி ஊருக்குப்போனா நீ திரும்ப வர்றப்போ நான் வீட்டுல இருக்க மாட்டேன்”
அம்மாவின் அந்த ஒரே துருப்புச்சீட்டில் என் ஆட்டம் முற்றாக முடிந்துவிடும். ஆனாலும் ஒரு டிபிகல் இந்தியனாக தமிழனாக அம்மாவுக்கு தலையாட்டியேதான் வந்தேன். மனைவி பிள்ளைகளைப் பின் தள்ளிவிட்டு அம்மாவுக்கே முன்னுரிமை தந்தேன். அம்மா சொன்னார் என்று கடனுக்கு மேல் கடனாக வாங்கி சென்னைக்கும், என் தகுதிக்கும் பொருத்தமில்லாத பெரியவீடாகவே கட்டிமுடித்தேன்.
தவணை முறையில் காரும் வாங்கி நிறுத்தினேன். டிவி பார்க்கையில் பேரப்பிள்ளைகளை இடைஞ்சலாக கருதினாள் என்று இன்னொரு டிவியை அம்மா அறையிலேயே பொருத்தினேன். ஹாலில் இருந்த ஃபோனும் அறைக்குள் இடம்பெயர்ந்தது. ஆசைப்பட்டாள் என்று ஜன்னலை உடைத்து ஏசியும் மாட்டினேன். ஆனாலும் திருப்திப்பட்டாள் எனத் தோன்றவில்லை. வயது ஆக ஆக இறுக்கமான முகபாவத்துடன் தான் உண்டு தன் டிவி உண்டு என அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள். சாப்பாடு கூட சீரியல் நடிகர்களோடுதான் என்றாகிப்போனது. சீரியல் நேரத்தில் யார் உள்ளே போனாலும் முகம் சுளித்தாள். சமயங்களில் கதவை அறைந்து சாத்தினாள்.
குறையில்லாத வாழ்வு சிலருக்கு வரம் சிலருக்கு சாபம்தானோ? அம்மாவின் எரிச்சல் குணம் கண்டு நானும் உறவாடலை குறைத்துக் கொண்டேன். அதனால்தானோ என்னவோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பிணங்கி இருந்த ரெண்டாவது மகளுடன் திடீரென் உறவை புதுப்பித்துக் கொண்டாள்.. போன்மூலமேதான்!
“உன் தங்கச்சிக்கும் எனக்குமான சண்டை தீர்ந்துடுச்சு.. அதனால மறுபடி அவளை வந்து போகச் சொல்லலாம்னு இருக்கேன்”
“தாராளமா வரட்டும் போகட்டும். ஆனா மறுபடி ரெண்டுபேரும் சண்டை போட மாட்டீங்கன்னு கியாரண்டி குடுக்க முடியுமா? “
“என்னைப் பார்க்க என் மவ வர்றதுக்கு உன் பர்மிஷன் வேணுமோ?”
சண்டைக்கு தயாரில்லாமல் நான் அலுவலகம் போய்ட்டேன். மாலையில் வீடு வந்தால் அதிர்ச்சி அம்மா வீட்டை விட்டு போய் விட்டாள். என்னால் நம்பவே முடியலை. அரக்கபரக்க தங்கச்சிகளுக்கு போன் போட்டால் அம்மா ஊருக்கே போய்விட்ட தகவல் கிடைச்சுது. ‘என்னதான் கோபம்னாலும் எதுக்கு ஊருக்கு போகணும்? உங்க கிட்டேயாவது வந்திருக்க வேண்டியதுதானே?’ங்கிற கேள்வியை அவர்களிடம் கேட்க முடியாது. ’எங்களாலயெல்லாம் அம்மாவை வச்சு பார்க்க முடியாது’ன்னு ஏற்கனவே பலதடவை சொல்லியிருந்தவங்க அவர்கள். மறுநாள் நாகர்கோவிலுக்கு போன் போட்டபோதுதான் அம்மா சித்தி வீட்டில் இருப்பது தெரியவந்துது. நான் உடனே வர்றேன்னு சொன்னதுக்கு
“வேணாம் வேணாம் அம்மா உன் மேலே ரொம்ப கோவமா இருக்காங்க.. ஒரு வாரம் கழிச்சு வந்தா போறும்’னு சித்தி சொன்னது நியாயமாகப் பட்டது.
அதான் நேத்தைக்கு பொறப்பட்டு இன்னைக்கு காலையிலே ஊருக்குப் போயிட்டேன். எப்பவுமே சிரிப்பும் குதூகலமுமாக நான் நுழையும் சித்தி வீடு முதன்முதலாக அன்னியமாகப் பட்டுது. அம்மா நடந்துகொண்டது அதை விட அதிர்ச்சியாக இருந்தது. கூடத்தில் டிவி பார்த்து கொண்டிருந்தவள் என்னை கண்டதுமே முகம் சுருக்கி உள்ளறைக்கு சென்று விட்டாள். பின்னாலேயே ”அம்மா அம்மா” என்று அழைத்தவாறே இயல்பாக நகர்ந்த என்னை சித்தப்பா வழிமறித்தார்.
வலுக்கட்டாயமாக இழுத்து பிரம்பு நாற்காலியில் இருத்தினார்.
“உன்னை யார் இப்ப வரச்சொன்னது? மைனிக்கு இன்னும் கோவம் தீரலைடா.."
“அந்த அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? திடீர் திடீர்னு சண்டைபோடறதும் திடீர் திடீர்னு ஒண்ணு சேர்றதும் தப்புன்னு சொன்னது உலகமகா குத்தமா? “
“குத்தமான்னு கேட்டா குத்தம்தான். ஏன்னா அம்மா வயசு அப்படி”
“ஏன் சித்தப்பா உங்களுக்கு என்னை தெரியாதா? என் தங்கச்சிங்க மாதிரி நான் எப்பவாவது அம்மா கிட்டே அவமரியாதையா நடந்திருப்பேனா?”
“நீ நல்லவன்தான்.. அதுக்காக அம்மாக்க போனை கட் பண்ணுனது நியாயமா?”
அதிர்ந்துபோய் விட்டேன். ”என்ன நான் போனை கட் பண்ணினேனா? என்ன சொல்றீங்க?”
“உங்கம்மா தங்கச்சி கூட பேசக்கூடாதுன்னுதானே போனை கட் பண்ணி வச்சே”
“யார் சொன்னாங்க?. நேத்தைக்கு நான் பொறப்படறப்போகூட போன் வந்துதே. அப்போ வேலை செய்யுதுன்னுதானே அர்த்தம்”
“அவன் என்ன முட்டாளாக்கப் பார்க்குறானா? போன் வரும் ஆனா கால் போகாது.. அப்படி கட் பண்ணி வச்சிருந்தான்” – அறையினுள்ளிருந்தே அம்மா குரல் வந்தபோதுதான் சட்டென புத்திக்கு எட்டியது, ’இந்தமாதம் இன்னும் பில் கட்டாதது’. அதன் விளைவாகத்தான் அவுட் கோயிங் மட்டும் துண்டிக்கப்பட்டிருக்கிறது போலும். விஷயத்தை விளக்கிச் சொல்லியும் சித்தப்பாவே நம்பத் தயாரில்லைங்கறப்போ அம்மா பத்தி சொல்லணுமா?
அம்மா இருந்த அறையை நெருங்கி தட்டிப்பார்த்து ஏமாந்தேன். மறுபடி தட்டுனதும் உள்ளிருந்து குரல் வந்த்து.
“என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா? நீ எனக்கு புள்ளையும் இல்லை நான் உனக்கு அம்மாவும் இல்லை”
விக்கித்துப்போனேன். அதுக்குமேல் அங்கே நிக்க திராணியில்லாம தேகம் நடுங்கிச்சுது. இறுக்கமான என் அப்பாவை பார்க்கறப்போல்லாம் சட்டுனு உடல்மொழியை மாத்தி மரியாதையும் பாசமும் காட்டின என் பாட்டி நினைவிலே வந்து போனாள். போன தலைமுறை இறுக்கத்தை தளர்த்தணும்னு புறப்பட்ட நான் தோத்துப்போன மகனா வெளியே வந்தேன். பஸ் நிலையம் நோக்கி நடந்தேன்.
சென்னைக்கு டிக்கட்டும் எடுத்த பிறகுதான் அந்த புதிய எண்ணம் வந்துது.
திருச்சியில் இறங்கி கல்லூரியில படிக்கும் மகனைப் பார்த்தா என்ன? பழைய தலைமுறை உண்டாக்கிய காயத்திற்கு புதிய தலைமுறை மருந்து பூசினா இதமா இருக்கும்தானே! கூடவே மகனைப் பார்த்தாகவேண்டிய நிர்பந்தமும் இருந்துது. நானும் எங்கப்பாவும் எலியும் பூனையும்னா, என் மகனும் நானும் நகமும் சதையும் மாதிரி! இப்போ மொதல் மொதலா நகச்சுத்தி வந்திருக்கு. அதிலும் சொந்த காசுல சூன்யம் வச்சுக்கிட்ட நிலைமை!
போனவருஷம் அவனது பதினெட்டாவது பிறந்தநாளை கொஞ்சம் அமர்க்களமாவே கொண்டாடினேன். ‘டொட்டடாய்ங்’ என பரிசை நீட்ட, பிரிச்சவன் அசந்தே போனான். பதினையாயிரம் ரூபாய் ஸ்மார்ட் ஃபோன்! ’பச்சக்’கென முத்தமிட்டான் போனை அல்ல என்னைத்தான்!
“தேங்க் யூ.. தேங்க்யூப்பா. இவ்வளவு காஸ்ட்லி போனா? நினைச்சே பார்க்கலை. பலதடவை கேட்க நினைச்சும் கார் கடனோட தவணை முடியலியேன்னு மனசை அடக்கிக்குவேன்”
அதுதாங்க என் புள்ளையோட ஸ்பெஷாலிட்டி! மத்த பிள்ளைகளைப் போல அதுவேணும் இது வேணும்னு கேக்கறதே இல்லை.
“இப்பவே பதினைய்யாயிரம் ரூபா போன்னா அண்ணனோட அடுத்த பிறந்த நாளைக்கு என்னப்பா குடுப்பீங்க?”- மகள் ஆர்வமா கேட்டா.
“அதை இப்பவே சொல்லலாமா? சரி சொல்றேன்.. அதை நினைச்சாவது இன்னும் நல்லா படிக்கட்டும். அடுத்த வருஷம் ஆப்பிள் லேப்டாப்”
“ஹைய்யா அப்போ அண்ணனோட டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் எனக்கு.. “
“நிஜமாவே மேக் வாங்கி தருவீங்களா? ஐம்பது அறுபதாயிரம் ஆகும்பா”
“அதுக்குன்னு ஒரு சீட்டு போட்டா போச்சு”
மறுபடியும் ஒரு பச்சக் தந்தான். அன்னைக்கு ராத்திரி திருச்சிக்கு கிளம்பறதுக்கு முன்னால அவன் என்னை இறுக்கி கட்டி அணைச்சப்போ மனசு நிறைஞ்சு போச்சு. ஆனா அப்போ உத்தரத்துல விதி சிரிச்சதை நான் பார்க்கவே இல்லை. இது நடந்து பத்து மாசம் ஆகுது.
முந்தா நாள் அம்மா பஞ்சாயத்துக்காக நாகர்கோவில் பஸ் பிடிக்க காத்திருந்த சமயம் பையன் போன் வந்துது.
“சீக்கிரம் சொல்லுப்பா அவசரமா ஊருக்கு பொறப்பட்டுட்டு இருக்கேன்”
“அப்பா உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்.. இன்னும் ரெண்டு மாசத்திலே என் பொறந்தநாள் வருதுல்லே..”
“ம்..”
“இந்த தடவை மேக் லேப்டாப் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்கள்ல”
“ம் சொல்லு”
“ரமேஷ் வினீத் எல்லாரும் புது பைக் வாங்கிட்டாங்கப்பா”
“அப்ப உனக்கு ரொம்ப வசதியா போச்சு. அவங்க கூடவே சுத்தலாம்.”
“இல்லப்பா நீங்கதான் சொன்னீங்கள்ல செகண்ட் இயர்ல தினமும் லைப்ரரிக்குப் போற பழக்கம் வேணும்னு.. ஹாஸ்டல்ல இருந்து லைப்ரரி ரொம்ப தூரம்னுதான் இன்னும் தொடங்காம இருக்கேன். அதனால லேப்டாப்புக்குப் பதில் பைக் வாங்கித் தந்திருங்கப்பா..”
“நீ பைக் கேட்டது லைப்ரரிக்கா? இல்லை உன் நண்பர்கள் வாங்கிட்டாங்கங்கிறதுக்காகவா? “
“ரெண்டும்தான்”
“ஆனா என் பதில் ஒண்ணுதான். இப்ப உனக்கு பைக் கிடையாது. உனக்கு எப்போ என்ன வாங்கித்தரணும் இந்த அப்பாவுக்கு தெரியும்”
“…”
“என்ன புரிஞ்சுதா? “
“……. “
அந்த மவுனத்தின் பின்னாலிருந்த மகனோட ஏக்கம் எனக்கு பிடிபட்டாலும் அப்போ சமாதானப்படுத்த நேரமில்லாம ஊருக்கு ஓடிப்போனேன். திரும்பறப்போ அம்மா தந்த காயத்துக்கு மருந்தா மகனது நினைவு மேலோங்கி வந்ததும் போன் போட்டேன். எடுக்கலை. பிறகுதான் வகுப்பு நேரத்தில் சைலண்ட் மோடில் அவன் போனை வைக்கறது ஞாபகம் வந்துது.
’சாயந்திரம் ஐந்து ஐந்தரை மணி அளவில் திருச்சி வருவேன் பஸ் ஸ்டாண்டில் சந்திக்கவும்’னு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். நேரில பார்த்த உடனே ’உன் இருபதாவது பிறந்தநாளைக்கு பைக் வாங்கித்தர்றேன்’னு வாக்குறுதி குடுக்க நினைச்சேன். அப்பவும் சமாதானமாகாம சிணுக்கமாக முகத்தை வைச்சா வேறவழியில்லாம ’சரி’ சொல்லணும்னு முடிவு பண்ணுனேன். என் அம்மா மாதிரி என்னாலதான் இறுக்கமா நடந்துக்க முடியாதே. பிள்ளை முகம் பார்த்தாலே உருகிடுவேனே! அவனும் அப்படிப்பட்டவன்தானே..
எனது மனசின் வேகம் புரிஞ்சுதானோ என்னவோ நாலரைக்கே திருச்சி போய்ச் சேர்ந்துட்டேன். . இறங்கிய கையோடு போனைப் போட்டேன். மணி அடிச்சுது.. ஆனால் எடுக்கலை. நாலு தடவை முயற்சி பண்ணிட்டு கடைசியில அறை நண்பன் அரவிந்துக்கு போன் போட்டேன். உடனே எடுத்தான்.
“அப்பா எப்படி இருக்கீங்க? “
“நான் நல்லா இருக்கேன். உன் ஃப்ரண்டு எங்கே? “
“இதோ இங்கேதானே இருக்கான்..”
“அப்புறம் ஏன் நான் போன் பண்ணி எடுக்கலை?”
“அப்படியா? இதோ நானே போனை குடுக்கிறேன்.”
போனின் மவுனத்தினூடே சில இழுபறி பேச்சு கசிந்தது.
“ஏதோ கோபம் போல. பேசமாட்டேங்கிறான்”
என் மகன்… என் ம..க..னா இப்படி பகிரங்கமாக கோபம் காட்டுகிறான்?. நம்பவே முடியலை.
அதீத ஹீனத்துடன் “நிஜமாவா? “ எனக்கேட்ட்தும் சட்டென உரத்த சத்தம் காதில அறைஞ்சுது.
”நான் தான் உங்க போனை எடுக்கலைலே அப்புறம் எதுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் போன் பண்ணி என்னை அசிங்கப்படுத்தணும்? யூ ஆர் நாட் எ குட் ஃபாதர். ஐ ஹேட் யூ டாட்”
என்னால நம்பவே முடியலைங்க. என் பையனிடமிருந்து அப்படி ஒரு எதிர்மறையை நான் எதிர்பார்க்கவே இல்லை. மேற்கொண்டு என்ன செய்வதுன்னு தெரியாம திணறி நிக்கிறபோதான் காலியாக கிளம்பின இந்த பஸ்ஸோட கண்டக்டர் டிரைவருக்கு விசில் கொடுத்தவாறே என் தோள் தொட்டு ‘சென்னையா?’ன்னு கேட்க மவுனமாக ஏறி உட்கார்ந்துட்டேன்.
இன்னமும் நம்பமுடியலை.. காலையிலே என்னைப் பெத்தவ அறைக்குள்ளே போய் கதவை அடைச்சு என்னை அவமானப்படுத்தினா.. சாயந்திரம் நான் பெத்தது அறையிலே ஒளிஞ்சுகிட்டு என்னை அசிங்கப்படுத்திடுச்சு. அதான் இந்த அழுகை! இப்படி ஜன்னல் ஓர சீட் பிடிச்சு அழுதா மட்டும் தீர்ந்துரக்கூடிய வேதனையா என் சோகம்? எங்கப்பா மாதிரி வீட்டை மிலிட்டரி கேம்ப் ஆக்க வேணாம்னு அதிக சுதந்திரம் கொடுத்ததுக்கான தண்டனையை அம்மா தந்துட்டாங்க. ஸ்கூல் ஹெட்மாஸ்டரா எங்கப்பா என்கிட்டே பழகின மாதிரி இல்லாம தோள்ல கைபோட்டு ஏ ஜோக் சொல்லுற ஃப்ரண்டுபோல அதிக சுவாதீனம் கொடுத்து பழகினதுக்கான பரிசை என் மகனும் கொடுத்திட்டான். ரெண்டு தலைமுறைகளை இணைக்கிற பாலமா என்னை நான் கற்பனை பண்ணிக்கிட்டதுக்கு இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து என்னையே புல்டோசர் வச்சு சாய்ச்சுட்டாங்களே! ஒரே நாள்ல என்னைப் பெத்த தாயாலயும் நான் பெத்த மகனாலுமா உதாசீனத்துக்காளாகி இப்படி நடுத்தெருவு.. இல்லை இல்லை நடுரோட்டிலே பஸ்லே அழுதுட்டே போக வச்சிட்டாங்களே! இருட்டு அருகில் ஆளுங்களும் இல்லைங்கறதால கண்ணீர் பொங்கி பொங்கி வழியற சமயம்.. சட்டுனு விளக்குங்க எரிஞ்சதும் வெளிச்சத்தில் அதிர்ந்துபோய் கையால முகத்தை துடைச்சுக்கிட்டேன். சாப்பாட்டுக்காக வண்டி நிறுத்தப்படப்போற முஸ்தீபு. வேகம் குறைச்சு இருட்டுல ஓடுற வண்டியின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். ’நான் எந்த இடத்தில் இருக்கிறேன்’னு என்னால அனுமானிக்க முடியவிலை. சாலையிலே மட்டுமில்லே வாழ்க்கையிலும்தான்!
-முகம்மது ஐஷ்வர்யன்