ஆனால், அதனிலும் கொடிது : அது பற்றிய உண்மைகள்!
அன்புள்ள நண்பர்களே!
நமது நாட்டில் அடுக்களை முதல் அமைச்சரவை வரை டெங்கு பற்றி இப்போதெல்லாம் பரவலாக பேசப்படுவது அனைவரும் அறிந்ததே. அது தொடர்பாக பல இணையத் தளங்களையும் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட ஒர் பதிவு இது.
இது நமக்கும் மிக நன்றாகவே பொருந்தும் என்பதால் வெகு சில அவசியமான மாற்றங்களுடன் தருகின்றேன். படித்துப் பாருங்கள்...
- Jesslya Jessly
டெங்கு காய்ச்சல் (தமிழகத்தை) மீண்டும் வளைத்திருக்கிறது.
குழந்தைகள் உட்பட பலர் இறந்திருக்கிறார்கள். தினமும் டெங்கு மரணச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் மே ஜூன் மாதங்களில் கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து தாக்கி வந்திருக்கும் இந்தவகைக் காய்ச்சலினால் இதுவரை 70 பேர் வரை கொல்லப்பட்டிருந்தும் அரசு அதை தடுப்பதற்கு திடமான எந்த முயற்சியையும் எடுக்காமல் மேம்போக்கு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்து வந்தது. அதாவது சாக்கடைகளின் ஓரங்களில் வெள்ளைப் பொடியை தூவுவது, கொசு மருந்து அடிப்பது, தண்ணீரை தேங்க விடாதீர்கள் என அறிவிப்புச் செய்வது போன்றவைகள் தான் அதிகபட்சம் டெங்குவுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். இதனால் கடையநல்லூர் பகுதிகளை மட்டுமே சுற்றிக் கொண்டிருந்த டெங்கு கடந்த ஜூன் மாதத்தில் (தமிழகம்) முழுவதும் பரவியது. இப்போது மீண்டும் பலரை பலி கொண்டிருக்கிறது. ஆனால் அரசோ அவைகள் டெங்குவினால் ஏற்படும் மரணங்கள் அல்ல என டெங்கு காய்ச்சல் முன்வைத்து செய்யப்பட்ட கொலைகளின் கணக்கை குறைத்துக் காட்டுவதிலேயே குறியாயிருக்கிறது.
இந்த நோயின் தன்மைகளைக் கொண்டு ‘குருதிப் போக்குக் காய்ச்சல்’ என்று மருத்துவர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். ஆனால், அரசோ மர்மக் காய்ச்சல் என்று புதுப் பெயர் சூட்டி ஊடகங்கள் மூலம் உலவ விட்டிருக்கிறது. நாளிதல்களில் முழுப்பக்க விளம்பரமாய் சிரட்டைகளில் கூட தண்ணீர் தேக்கக் கூடாது என்று படத்துடன் விரிந்திருக்கிறது. காட்சி ஊடகங்களில் வட்டமாய் நடிகர்கள் தோன்றி எல்லாக் காய்ச்சலும் டெங்குவல்ல என்றும், அரசு மருத்துவமனைகளில் நிறைய இரத்தமும் போதிய வசதிகளும் இருக்கிறது என்றும் பயமுறுத்துகிறார். ஏதோ மக்களின் சுகாதாரக் குறைபாட்டினால் தான் டெங்கு பரவுகிறது என்பதைப் போன்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மட்டுமல்லாது, ஏடிஸ் வகைக் கொடுக்கள் கடிப்பதாலேயே இந்நோய் உண்டாவதைப் போன்ற அதாவது ஏடிஸ் வகையின் எந்தக் கொசு கடித்தாலும் நோய் தொற்றிவிடும் என்பதைப் போன்ற ஊகத் தகவல்கள் பரப்பப்படுகின்றன.
டெங்குக் காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஏடிஸ் கொசுக்களில் இருந்து மனிதர்களுக்கு பரவு பரவுகிறது என்கிறார்கள். ஆனால் இது முழுமையான உண்மையல்ல. டெங்கு வைரஸ் மனிதர்களின் உடலிலும், ஏடிஸ் கொசுக்களிலும், சில வகை குரங்குகளிலும் தங்கியிருக்கும் திறனுள்ளவை. இவை கொசுக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் கொசு வேறொருவரைக் கடிக்கும் போது அவரையும் டெங்கு வைரஸ் தொற்றிக் கொள்கிறது. வேறொரு மூலத்திலிருந்து பெறாமல் சுயமாக எல்லா ஏடிஸ் கொசுக்களும் டெங்குவை பரப்புவதாக ஒரு தோற்றம் உண்டாக்கப்படுகிறது. டெங்குவை உண்டாக்கும் வைரஸ்களை ஏடிஸ் கொசுக்கள் (நுளம்புகள்) உற்பத்தி செய்வதில்லை, மாறாக பரப்புகின்றன. ஆனால், அந்த வைரஸ் எதனால் நீடித்திருக்கிறது?
மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் பல நாட்களாக வடியாமல் தேங்கி நின்று பள்ளிக்கூடத்துக்கு செல்வது உள்ளிட்ட அனைத்துக்கும் சிரமப்படும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு சொல்கிறது, சிரட்டைகளில் கூட நீரை தேங்க விடாதீர்கள் டெங்கு வந்துவிடும் என்று. கொசுக்கள் உற்பத்தியாக நீங்களே வழி ஏற்படுத்திக் கொடுக்கதீர்கள் என்கிறது அரசு. ஆனால், நாடெங்கும் சாக்கடைகளையும் கழிவுகளை மூடாமல் திறந்த வெளியாக விட்டு கொசு உற்பத்திக் கூடம் நடத்திக் கொண்டிருப்பதே அரசு தான். போதாதென்று ஆறுகளையும் சாக்கடைகளாக மாற்றியிருக்கிறது. ஓரிடத்தின் திடக்கழிவுகளை அகற்றி இன்னொரு இடத்தில் கொட்டி விட்டு சுத்தம் செய்துவிட்டதாக கூறுகின்றன உள்ளாட்சி அமைப்புகள். ஆனால் அப்படி கொட்டப்படும் இடங்களிலெல்லாம் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொசுக்களும் (நுளம்புகள்) நாற்றமும் தாங்க முடியவில்லை என்று சாலை மறியல் செய்து கொண்டிருக்கிறார்கள். கொசு(நுளம்பு) வளர்ப்பு திட்டத்தை இவ்வளவு செம்மையாக நடத்திவிட்டு நீரைத் தேக்காதீர்கள், சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறுவதற்கு இந்த அரசுக்கு கொஞ்சமாவது அறுகதை இருக்கிறதா?
இரவு நேரங்களில் தொடர்வண்டி நிலையங்களிலோ, பேருந்து நிலையங்களிலோ, பொது இடங்களிலோ சிறிது நேரம் நின்றால் தெரியும், ஒரு படையெடுப்பை நடத்தும் நேர்த்தியுடன் கொசுக்கள் (நுளம்புகள்) எப்படி நம்மைத் தாக்குகின்றன என்று. கொசுத்தடுப்பு மருந்துகளோ, திரியோ இல்லாமல் ஓர் இரவு கூட தூங்க முடியாது எனும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி கடவுளைப்போல் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன கொசுக்கள் (நுளம்புகள்).
குடும்ப வரவு செலவுத் திட்டத்தில் மாதாந்திரம் கொசு மருந்துகளுக்கென்றே எல்லா குடும்பங்களும் நிதி ஒதுக்குகின்றன.
இந்த நிலை எப்படி ஏற்பட்டது?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கொசு இப்படி ஒரு பூதாகரமான பிரச்சனையாக இருந்திருக்கவில்லை. தெருக்களில் சேரும் குப்பைகளை சிறுவர்கள் இரவில் தீ வைத்து எரிப்பார்கள், அதுவே ஒரு வாரத்துக்கு கொசுக்கள் அண்டாமல் விரட்டியடிக்க போதுமானதாக இருக்கும். கொசுவலையை பயன்படுத்துவது கூட ஆடம்பரத்தின் செல்வச் செழிப்பின் அடையாளமாக இருந்தது. ஆனால் இன்று .. .. ? நீங்கள் தூங்க வேண்டுமென்றால் தனியாக நிதி ஒதுக்கி கொசு மருந்து நிறுவனங்களுக்கு கப்பம் கட்டியே தீர வேண்டும்.
கொசு (நுளம்புகள்) மருந்து நிறுவனங்களின் ஆண்டு லாபம் ஆயிரம் கோடிகளை தாண்டி இருக்கிறது. இந்த நிறுவனங்கள் காந்தியின் அகிம்சை நிறுவனங்கள். இவை தயாரிக்கும் கொசு மருந்துகள் மறந்தும் கூட கொசுக்(நுளம்பு)களை கொல்வதில்லை. அந்த இடங்களிலிருந்து விரட்டிவிட மட்டுமே செய்கின்றன. கொசுச் சுருளைப் பற்றவைத்தால் அந்தச் சுருளில் உட்கார்ந்து இளைப்பாறும் அளவிற்கு கொசுக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி தகவமைத்துக் கொள்வதற்கும், படுவேகத்தில் இனப்பெருக்கம் செய்வதற்கும் கொசுமருந்துகளில் ஊக்கிகள் இருக்கின்றனவா என ஆராய்ந்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் கிடைக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் கொசு (நுளம்பு)க்களை முன்னிட்டு மக்கள் பணம்
சுரண்டப்படுவதும், அந்த மருந்துகளே கொசுக்களின் இனப்பெருக்கத்தை துரிதப்படுத்துவதும் குறித்து இந்த அரசுக்கு ஏதாவது அக்கரை இருக்கிறதா?
டெங்குவை சாதாரண இரத்தப்பரிசோதனை மூலம் அறிய முடியாது, எலிசா பரிசோதனையின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்று மக்களிடம் கூறும் இந்த அரசு அந்த சோதனை செய்யும் வசதியை எத்தனை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தியிருக்கிறது? போதுமான அளவுக்கு இரத்தம் சேமிப்பில் இருப்பதாக புளுகும் இந்த அரசு, டெங்குவுக்கு இரத்தம் ஏற்றுவதை விட இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளைப் பிரித்தெடுத்து அதை ஏற்றுவதே சரியானது என மருத்துவர்கள் கூறுவதை எப்படி எதிர் கொண்டிருக்கிறது. இரத்தத் தட்டுகளை ஏற்றுவதற்கு அரசு மருத்துவமனைகளில் வசதி இருக்கிறதா?
இவைகளைப் பயன்படுத்திக் கொண்டு தான் தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதுவரை டெங்குவுக்கு பலியானவர்களில் அதிகமானோர் தனியார் மருத்துவமனைகளுக்கு கொட்டியழ முடியாத அடித்தட்டு மக்கள் தாம்.
தொகுத்துப் பார்த்தால், சாதாரண விசயமாக இருந்த கொசுவை விரட்டுகிறோம் என்று கூறிக் கொண்டு தனியார் நிறுவனங்கள் இந்தத் தொழிலில் இறங்கிய பிறகு தான் கொசுக்கள் பல்கிப் பெருகி மிகப்பெரும் பிரச்சனையாக ஆனது. தொடர்ந்து கொசுக்களால் நோய்கள் பரவ அதைக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. மறுபக்கம் அரசு கொசுக்களை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் கொசு வளர்ப்புத் திட்டங்கள் மூலம் அந்த தனியார் நிறுவனங்களுக்கு உதவுகிறது. டெங்குவினால் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்கான நச்சுச் சுழல் இது தான். இந்தச் சுழலைச் சுழற்றும் அச்சாணியாக தனியார்மயமே இருக்கிறது. எனவே டெங்குக் காய்ச்சல் தனியொரு மனிதனுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்றோ, தனியார் மருத்துவமனைகளுக்கு கப்பம் கட்ட முடியாத அவலம் என்றோ புரிந்து கொள்வது டெங்குவை ஒழிப்பதற்கு எந்த வகையிலும் உதவாது.
சுகாதாரத் துறையில் தனியார்மயத்தை கொசுவை அடிப்பது போல் அடித்து ஒதுக்கினால் மட்டுமே டெங்குவையும் இன்னபிற நோய்களையும் சமூகத்திலிருந்தே விரட்டியடிக்க முடியும்.
Thanks: senkodi