பாடாய்ப் படுத்தும் "தினங்கள்"
I
'தம்பி, இன்று உங்கள் பள்ளியில் என்ன தினம் கொண்டாடுகின்றீர்கள்?'
விடுமுறை நாள் தவிர்ந்த வேறு ஏதாவது ஒருநாளில் காலையிலே எழுந்து வீதியில் எங்காவது ஒரு மூலையில் நின்று கொண்டிருங்கள். உங்களைக் கடந்து மலையேறும் சிறுமனிதர்களைப் போல முதுகை வில்லாக வளைக்கும் புத்தகப்பைகள் சகிதம் காலில் சக்கரம் கட்டாத குறையாக அலறியடித்து ஓடும் பள்ளிக்கூட மாணவர்களைப் பார்க்கலாம்.
அவர்களில் ஒருவனை நிறுத்தி இந்தப் பத்தியின் ஆரம்பத்திலுள்ள வினாவைக் கேட்டுப்பாருங்கள். 'இன்று ஒரு தினமும் கிடையாது!' என்று அவன் பதில் கூறினால் அன்றைய தினம் நிச்சயம் உங்களுக்கு சுரண்டல் அதிஷடலாபச் சீட்டில் ஒருகோடி ருபாய் பரிசு விழும் அல்லது திருட்டுப் போன உங்கள் வெளிநாட்டுக் கைத்தொலைபேசி திரும்பக் கிடைக்கும். அதுவுமில்லையென்றால், அன்று மாலை இருட்டுவதற்குள் இலஞ்சம் வாங்காத போக்குவரத்துப் பொலீஸ்காரர் ஒருவரைச் சந்திப்பீர்கள்...!
ஒரு வருடத்தில் 365 அல்லது 366 நாட்களுள்ளதோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு விசேட தினம் மட்டும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சிறுவர் தினம், முதியோர் தினம், குடிநீர் தினம்.. மகளிர் தினம்... எயிட்ஸ் தினம்.. சயரோக தினம்... புகைபிடிப்போர் தினம்... என்று ஏதாவது வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஒன்றுமே இல்லாத தினம் என்று ஏதாவது நாட்கள் விட்டு வைத்திருக்கின்றார்களா என்ன?
மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய ஏதாவது ஒரு நற்பணியை மக்களிடையே முன்னெடுப்பதற்காகவும் அதுவிடயமாக நினைவூட்டி விழிப்புணர்ச்சியைத் தூண்டுவதற்காகவும் இப்படியான விசேட தினங்கள் சர்வதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டன. எடுத்துக் காட்டாக எயிட்ஸ் தினம். அந்த உயிர்கொல்லி நோய் ஏற்படக்கூடிய விதம் பற்றியும் அதிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது பற்றியும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்து அறிவூட்டும் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்காகப் பயன்படுகின்றது. இதுபோலவே சூழல் தினம்.. குடிநீர் தினம்..போன்றவற்றைக் கூறலாம்.
ஆனால் காதலர் தினம்.. முட்டாள்கள் தினம்... பெற்றோர் தினம்.. ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்படும் தினங்களுக்கு என்ன அர்த்தம் இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை.
பெற்றோர் தினம் என்று கூறி நாம் கீழைத்தேய மக்கள் ஒரு குறிப்பிட் தினத்தைக் கொண்டாடத்தான் வேண்டுமா? மேற்கத்தைய நாடுகளில் வாழும் மக்களின் குடும்பக் கட்டமைப்பின் தன்மை வேறு நமது மக்களின் குடும்பக் கட்டமைப்பின் தன்மை வேறு.
அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சுயமாக வாழ அனுமதித்து விடுகின்றனர். இதனால் பெற்றவர்களின் மீதான பிள்ளைகளின் பொருளாதாரத் தங்கியிருத்தல் வெகு குறைவு. தமது படிப்பை முடித்ததும் தாமாகவே வேலைதேடிக் கொள்வார்கள், அவர்கள். அதுபோலவே, எதுவித நெருடலுமின்றித் தாமாகவே வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொண்டு விடுகின்றார்கள்.
முக்கியமாக பெற்றோருடன் இணைந்து வாழ்வது கிடையாது. தனியே
தனிக்குடித்தனம்தான்.
இதனால் வருடத்தில் குறிப்பிட்ட நாளைத் தனியே ஒதுக்கி
Parent's Day கொண்டாடுகின்றார்கள். எங்கோ தொலைவில் கிராமத்தில்
cottage களில் ஓய்வைக் கழிக்கும் வயது முதிர்ந்த பெற்றோரை பிள்ளைகள் சகிதம் போய்ப்பார்த்து அன்றைய நாள் முழுவதும் சலிக்கச்சலிக்கக் கொண்டாடிவிட்டு மறுதினம் வீடு திரும்பி மீண்டும் தமது தினசரி வேலைகளில் மூழ்கிவிடுவார்கள்.
மறுதலையாக, பிறந்ததிலிருந்தே பெற்றோரின் அரவணைப்பில் கிடந்து திருமணமான பின்பும் கூட மாமி-மருமகள் சண்டைகளையெல்லாம் தாண்டி ஏதோ ஒருவிதத்தில் விரும்பியோ இன்றியோ தாய் தந்தையருடன் பின்னிப் பிணைந்தே வாழும் வாழ்க்கை முறையைக் கொண்ட நமக்கு இந்தப்
பெற்றோர் தினம் தேவைதானா?
II
பெற்றோர் தினம் போலவே நம்மை நாமே பரிசீலிக்க வேண்டிய மற்றுமொரு தினமும் உண்டு. அதுதான் அக்டோபரில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம்.
ஆசிரியர்களும் அவர்களது அளப்பரிய சேவைகளும் போற்றப்படவேண்டியவை என்பதிலே மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் பாடசாலைகளிலே அந்தத் தினம் அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடப்படுகின்றதா?
ஆசிரியர்களோடு நேரடித் தொடர்புடையவர்களான மாணவர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் மேலதிகாரிகள் எவ்வாறு ஆசிரியர்களை நடாத்துகின்றார்கள் என்று பார்ப்போம்.
தற்போது பெருகிவரும் விஞ்ஞான தொழினுட்ப முன்னேற்றங்களுடனான இலத்திரனியல் காட்சி ஊடகங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் பாவனை காரணமாக மாணவர்களின் நடத்தைக் கோலங்களில் பிறழ்வுகள் அதிகரித்து வருவது யாவரும் அறிந்த ஒன்று. இதனால் பாடசாலைகளின் உள்ளும் புறமும் இளம் தலைமுறையினரைக் கையாளுதல் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகின்றது.
பாடசாலைகளிலே சீருடை அணிதல், தலைமுடி திருத்தல் முதற்கொண்டு எதிர்ப்பாலாருடன் பழகுதல் வரை ஒழுங்குவிதிகளுக்குள் மாணவர்களை கட்டுப்படுவது பிறழ்வான போக்குகளை நெறிப்படுத்துவது போன்ற சவால்கள் நேரடியாக ஆசிரியர்களுக்கே விடப்படுகின்றன. இதனால் ஆசிரியர்-மாணவர் உறவுகளில் விரிசலும் முரண்பாடுகளும் எழுவதோடு அவை சிலவேளைகளில் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களாகவும் மாறிவிடும் அபாயமும் இருந்து வருகின்றது.
இவற்றின் விளைவாக ஆசிரியர்கள் மாணவர்களால் மதிக்கப்படும் போக்கு மெல்ல மாற்றமடைந்து வருகின்றது. பல பாடசாலைகளில் குறிப்பாக வளர்ந்த மாணவர்கள் தமது ஆசிரியர்களை கண்ணியப்படுத்துவதை ஏதோ புராதன விடயம் என்பது போல நினைக்கின்றார்கள்.
பொதுவாகக் கூறினால், ஒருகாலத்தில் மாணவர்களின் போற்றுதலுக்குரியவர்களாக கருதப்பட்ட ஆசிரியர்கள் இன்று தமக்குரிய அந்த இடத்தை இழந்து வருகின்றார்கள் என்றுதான் கருதவேண்டியுள்ளது. (இதற்கு வேறு பல சமூகப் பொருளாதார காரணிகளும் துணையாகவுள்ளன.)
பல பாடசாலைகளில் ஆசிரியர்களை அதிபர்களே மதிப்பதில்லை. தாங்களும் ஒருகாலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் எனும் உணர்வின்றி அதிகாரமாக நடந்து கொள்கின்றனர். அற்ப காரணங்களுக்காக ஆசிரியர்களை அவமானப்படுத்துவதும் தமது நிர்வாக பலத்தை பிறரிடம் காட்சிப்படுத்தும் விதமாக கெடுபிடிகள் வதைகள் புரிய முயற்சிப்பதும் கூட நடப்பதுண்டு.
பெற்றோர்கள் இன்னும் ஆசிரியர்களை உயர்வாகவே நடாத்தினாலும் அவர்களில் சிறு தொகையினராவது கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளாமலில்லை.
தங்கள் பிள்ளைகளின் அறிவுக்கும் ஆளுமைக்கும் வழிகாட்டும் ஆசிரியர்கள் எப்போதாவது சிறிது அதிகமாக மாணவர்களைக் கண்டித்து அல்லது தண்டித்து விட்டால் போதும் (ஆனால் அற்ப காரணங்களுக்காக மாணவர்களை மிருகத்தனமாக வதைத்த விதிவிலக்கான சில சம்பவங்களும் இல்லாமலில்லை). உடனே வெகுண்டெழுந்து அளவுக்கு மீறி ஆர்ப்பாட்டம் புரிந்து அவமானப்படுத்தும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் தினம் எவ்வாறு பாடசாலைகளில் கொண்டாடப்படுகின்றது?
பெற்றோர்களும் மாணவர்களும் தாங்களாக முன்வந்து பாராட்ட வேண்டிய இந்த நிகழ்வைக் கூட ஆசிரியர்கள்தான் வழிநடாத்த வேண்டியுள்ளது. பல இடங்களில் ஆசிரியர்கள் ஏறத்தாழ தமக்குத் தாமே பாராட்டுதல் நடத்திக் கொள்கின்றனர்.
வருடத்தின் மீதி நாட்கள் முழுவதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து நடக்கும் மாணவர்களும் ஆசானின் மனங்களை நோகடித்து அதிர்ச்சி மதிப்புப் பெறும் பெற்றோர்களும் குறைகூறியே கொல்லும் அதிபர் மற்றும் மேலதிகாரிகளும் ஒன்றுசேர்ந்து ஒருநாளைத் தேர்ந்தெடுத்து மாலையிட்டுப் பாராட்டுவதை எப்படி மனதார ஏற்றுக் கொள்ள முடியும்.
(தொடரும்)
- Jesslya Jessly