Sunday, June 18, 2017

பிளாஸ்டிக் அரிசி : மூளையை அடகு வைக்கலாமா?

 
 
 
 
பிளாஸ்டிக் அரிசி
 
 
 
 
ன்றைய தேதியில் பயனுள்ள தகவல் குறிப்பு என்றால் அது, “பிளாஸ்டிக் அரிசையை கண்டுபிடிப்பது எப்படி?” என்பது தான். அந்த அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி குறித்த பீதி பரப்பப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல்கள் உலவிக் கொண்டிருந்தன என்றாலும் தற்போது தமிழக அரசே இதை முன்னின்று பரப்பியதைப் போல தெரிகிறது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும், பிளாஸ்டிக் அரிசியைக் கண்டறிந்து பறிமுதல் செய்ய குழு அமைத்து நடவடிக்கை, பிளாஸ்டிக் அரிசி குறித்து தகவல் கொடுக்க தனி தொலைபேசி இலக்கம் அறிவிப்பு என தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்களை பீதிக்கு உள்ளாக்கின.

 
அது என்ன பிளாஸ்டிக் அரிசி? சமூக ஊடகங்களில் ஒரு காணொளிக் காட்சி பரவி வருகிறது. ஓர் இயந்திரத்தின் ஒரு முனையில் பிளாஸ்டிக் தாளை உள்ளிடுகிறார்கள். அப்படியே காமிரா நகர்ந்து செல்கிறது, அந்த பிளாஸ்டிக் தாள் பிரிந்து உடுட்டப்பட்டு அரிசி போல் சிறுசிறு துண்டுகளாக வெளிவருகிறது. இந்த இடத்தில் அது அரிசி தானா என்பதை உறுதி செய்ய காமிரா அதை நெருங்கிச் செல்லவில்லை. கழிவு பிளாஸ்டிக் தாளை பிளாஸ்டிக் துருவல்களாக மாற்றும் வேலை நடக்கிறது எனக் கருதுகிறேன். ஆனால் அதை பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் தொழிற்சாலை என்ற தலைப்பில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிலோ அரிசி தோராயமாக 30 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை ரகம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ கச்சா பிளாஸ்டிக் துருவலின் விலை 100 ரூபாய்க்கும் அதிகம். இதில் கலப்படம் செய்து லாபம் பார்க்க வேண்டுமென்றால் ஒரு கிலோ பிளாஸ்டிக்கைக் கொண்டு எத்தனை கிலோ அரிசி தயாரிப்பார்கள்? எளிமையான இந்தக் கேள்வி கூட எழுப்பப்படாமல் தான் அந்த காணொளிக் காட்சி ஊரெங்கும் உலா வருகிறது.


பிளாஸ்டிக் அரிசி என பரப்பப்படும் இந்த அரிசியை செயற்கை அரிசி என்று சொல்லலாம். உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் அரிசி தான் பிளாஸ்டிக் அரிசி என தூற்றப்படுகிறது. சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசியிலிருக்கும் கார்போஹைட்ரேட் தான் உருளை கிழங்கு, மரவள்ளிக் கிழங்குகளிலும் இருக்கிறது என்றாலும் நெல் அரிசியோடு ஒப்பிட்டால் கொஞ்சம் சத்துக் குறைவானது. அதேநேரம் இன்று பீதியூட்டப்படுவது போல இந்த செயற்கை அரிசியை உண்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. இந்தியாவின் பழைய பஞ்ச காலங்களில் உருளைக் கிழங்கும், மரவள்ளிக் கிழங்கும் தான் அரிசிக்குப் பதிலாக உணவாக பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.

ஏன் இவ்வாறு பீதியூட்டப்படுகிறது?
 
ஏனென்றால் அது தான் இதன் பின்னாலிருக்கும் அரசியல்.
 
ஊடகங்களில் பரபரப்பாக திரும்பத் திரும்ப காட்டப்படும் எதுவும் உண்மையாகத் தான் இருக்கும் எனும் பொதுப் புத்தி மிகக் கவனமாக உருவாக்கி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறித் தான் ஈராக்கின் மீது படையெடுத்தது அமெரிக்கா. ஒரு பேனாக் கத்தியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தது  என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஸ்டாலின் கோடிக் கணக்கில் படுகொலைகளைச் செய்தார் என்று பரப்பட்டிருக்கிறது. அவ்வாறு எழுதியவர்களே பணம் வாங்கிக் கொண்டு தான் அவ்வாறு எழுதினோம் என்று வாக்குமூலம் கொடுத்து விட்ட பிறகும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் ஸ்டாலின் கோடிக் கணக்கில் மக்களை படுகொலை செய்தார் என்பது பொதுப் புத்தியாக நிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது ஊடகங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் நம்முடைய மூளையை கட்டுப்படுத்துகிறார்கள். அது தான் இந்த பிளாஸ்டிக் அரிசி விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

 
மரபணு மாற்றப் பயிர்கள் என்பது இன்று சாதாரணமாகி இருக்கிறது. இந்த மரபணு மாற்றப் பயிர்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளை உண்பதன் மூலம் உடலுக்கு எவ்வளவு தீங்கு நேர்கிறது? என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்றெல்லாம் ஆய்வுகள் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் அவை எந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தவில்லை. தெளிவாகச் சொன்னால், மரபணு மாற்று பயிர்களுக்கு, விதைகளுக்கு எதிராக பேசினால் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. அண்மையில் தெலுங்கானாவில் மரபு சார்ந்த மிளகாய் விதையை பரப்பினார் என்பதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஊடகங்களில் அந்தச் செய்தி போலி மிளகாய் விதைகளை விற்றவர் கைது என வெளிவந்திருக்கிறது. அது என்ன போலி மிளகாய் விதை? மரபணு மாற்ற விதைகளை பற்றி மக்களிடம் விழுப்புணர்வு செய்யக் கூடாது. பாரம்பரிய விதைகளை வைத்திருந்து விற்றால் கைது. இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் என்ன முடிவுக்கு வர முடியும்? முதலாளிகளுக்கு, ஏகாதிபத்தியங்களுக்கு எதுவெல்லாம் லாபத்தைக் கொட்டிக் கொடுக்குமோ அவைகலெல்லாம் – அவைகளில் உடலுக்கு தீங்கு இருந்தாலும் – உலகில் நல்லவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும். ஏகாதிபத்தியங்களுக்கு லாபத்தை கொட்டிக் கொடுக்காத எதுவும் – அவைகளில் உடலுக்கு நன்மை இருந்தாலும் – உலகில் கெட்டவைகளாக பொதுப் புத்தியில் உருவாக்கப்படும்.


சில நாட்களுக்கு முன்னால் புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்றொரு செய்தி தீயாய் பரவியது. மைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது? அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன? அவை என்னென்ன விதங்களில் உடலுக்கு தீங்கு செய்கின்றன என்று விரிவான ஆய்வுக் கட்டுரை போல அந்தச் செய்தி அமைந்திருந்தது. படித்துப் பார்த்த பலர் புரோட்டா சாப்பிடுவதையே விட்டு விட்டார்கள். மைதாவுக்கு மெருகூட்ட, அதை வெண்மையாக்க அந்த வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அவைகளை உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதும் உண்மை தான். இதை புரோட்டாவுக்கு எதிராக மட்டும் ஏன் பயன்படுத்தினார்கள்? கேக் வகைகளிலிருந்து மேற்கத்திய உணவுகளான பீட்சா வகைகள் வரை அனைத்திலும் மைதா கலந்திருக்கிறது. மைதாவை பயன்படுத்தாதீர்கள் என்று பரப்பினால் அது விழிப்புணர்வு, புரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்று பரப்பினால் அதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஏழைகளின் உணவாக மலிவான விலையில், உடலுக்கு உடனடி தெம்பளிக்கும், பரவலாக உண்ணப்படும் உணவான புரோட்டாவை ஒழித்து விட்டு அந்த இடத்துக்கு பீட்சாவைக் கொண்டு வர செய்யப்படும் சதித் திட்டம் என்பதாகத் தானே அதை புரிந்து கொள்ள முடியும்.


இதேபோலத் தான் அஜினாமோட்டாவுக்கு எதிரான பிரச்சாரமும். கரும்பு மரவள்ளிக் கிழங்கு ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு. இதன் வேதிப் பொருள் மோனோ சோடியம் குளூட்டமைட் என்பது. அஜினாமோட்டோவுக்கு எதிரான பிரச்சாரங்களில் எல்லாம் தவறாமல் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஒரு வாசகம், ‘அதில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் தீங்கான பொருள் கலக்கப்பட்டிருக்கிறது எனவே அதை பயன்படுத்தாதீர்கள்’ என்பது தான். ஆனால் அஜினாமோட்டோவின் ஒவ்வொரு பாக்கெட்டிலும் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பெயர் தவறாமல் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது அஜினோமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் எனும் பொருள் கலந்திருக்கவில்லை. அஜினாமோட்டோவின் பெயரே மோனோ சோடியம் குளூட்டமைட் தான் என்பதே அதன் பொருள். சாதாரண உப்பை பயன்படுத்தாதீர்கள் அதில் சோடியம் குளோரைடு எனும் தீங்கான பொருள் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது எவ்வளவு நகைப்புக்கு இடமானதோ அதே போலத் தான் அஜினாமோட்டோவில் மோனோ சோடியம் குளூட்டமைட் கலந்திருக்கிறது என்பதும். இது உணவில் சுவை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் உப்பு. சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பலநூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு துணை உணவுப் பொருள். அளவோடு பயன்படுத்தினால் எந்தத் தீங்கும் இல்லை.


இப்படி உடல்நலம் எனும் பெயரில் ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. மீண்டும் மீண்டும் திணிப்பதன் மூலம் மக்களின் மூளையைக் கட்டுப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. அதற்கு எளிமையான இன்னொரு எடுத்துக்காட்டு தான் உப்பு. சமையலில் சாதாரண உப்பின் பயன்பாடு முழுவதுமாக ஒழிந்து விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அயோடின் உப்பின் ஆதிக்கம் இருக்கிறது. அயோடின் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆய்வுகள் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் அயோடின் உப்பை பயன்படுத்துவதே உடலுக்கு நல்லது என எண்ணி பயன்படுத்துகிறார்கள். இது எப்படி நடந்தது? இந்தியாவில் 7 சதவீத குழந்தைகள் அயோடின் குறைபாட்டுடன் இருக்கின்றன என்றொரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதைக் கொண்டே இந்தியாவின் மொத்த மக்களும் அயோடின் உப்பை பயன்படுத்துவதே நல்லது என்று பிரச்சாரம் செய்தார்கள். இன்று டாடா உட்பட பல நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளில் அயோடின் உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.


எல்லாம் இருக்கட்டும், பிளாஸ்டிக் அர்சியிலும், மைதாவிலும் அஜினாமோட்டோவிலும் என்ன ஏகாதிபத்திய ஆதாயம் இருக்கிறது என எண்ணுகிறீர்களா? பொதுவாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் பெயரில் எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைக்கிறது அமெரிக்கா. இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதிலிருந்து, விவசாய மானியங்களை ஒழிப்பது வரை எல்லா நாடுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் தன்னுடைய நாட்டில் விவசாய மானியங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது. இந்த விசயத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலாக இருப்பது சீனாவின் உற்பத்திப் பொருட்களே. உலகில் சீனப் பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு அது தன் எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்காக சீனம் சார்ந்த பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செயற்கை அரிசி, அஜினாமோட்டோ போன்றவை சீன உற்பத்திப் பொருட்களே.


இன்னொரு முக்கியமான அம்சமும் இதில் இருக்கிறது. பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகத் தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அது தற்போது திடீரென வேகம் பெற்றதற்கான காரணத்தை நாம் பதஞ்சலியோடு இணைத்துப் பார்க்க வேண்டும். மோடி பிரதமராக உருவாக்கப்பட்டதில் அதானிக்கு இருக்கும் தொடர்பைப் போலவே பதஞ்சலி நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டு. மோடி பிரதமரானதற்கு பிறகு தான் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் வெகுவாக கவனம் பெற வைக்கப்பட்டன. அந்த அடிப்படையில் பதஞ்சலி அரிசி விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. பதஞ்சலி அரிசி என்ற பெயரில் விற்கப்படும் அரிசிக்கான சந்தையை உறுதிப்படுத்தவே, பிளாஸ்டிக் அரிசி என்ற பெயரில் அரிசி குறித்த பீதி திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.


எனவே, நாம் நாமாக நீடிக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்கும் ஒரே வழி நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றி விடாமல் தடுப்பது மட்டுமே. நம்மைச் சுற்றி நிகழும் எதுவானாலும், முதலில் அதில் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. எல்லாவற்றிலும் இருக்கும் அரசியலைப் புரிந்து கொள்ள அவை குறித்து பருண்மையாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் சமூகத்தில் நடப்பவைகளை நாம் சரியாக உள்வாங்காமல் போனால் நம்முடைய மூளையை பிறர் கைப்பற்றுவதை நம்மால் தடுக்க முடியாமல் போகும்.
 
 
நன்றி : செங்கொடி