Thursday, May 10, 2012

கிண்ணி(யா) லீக்ஸ் படும்பாடு!
பொல்லைத் தந்து
வாங்கிய  அடிகள்....!
டந்த வாரம்  www.kinniya.net ல் நண்பர் சபருள்ளாவின் " அன்றாடக் காய்ச்சிகள்" எனும் தலைப்பில் சிறுகதையொன்றைப் படித்தேன்.  தனது சொந்த மண்ணின் நடைமுறைப் பிரச்சினையொன்றைக் கருவாகக் கொண்டு அதனைப் படைத்திருந்தார் அவர்.  அந்தச் சிறுகதையைப் பல தடவைகள் படித்துப் பார்த்து வியந்ததோடு பின்பு அதைப் பற்றி சிறுவிமர்சனம் - கருத்துரை கூற விரும்பினேன்.

 அதன்படிஅந்தக் கதை பற்றிய எனது பார்வையை கிண்ணியா நெற்றில் அந்தக் கதையின் கீழே வழமையாகத் தென்படும்  Comment box னுள் இட்டேன்.


Jesslya Jessly · Peradeniya University

நண்பர் சபறுள்ளா,
உங்கள் மண்சார்ந்த பிரச்சினை ஒன்றை வெளிப்படுத்தும் விதமாக உணர்வுபூர்வமாக படைத்திருக்கிறீர்கள். உங்கள் நோக்கத்திற்காகப் பாராட்டுகின்றேன். அதேவேளை இவ்வளவு உணர்வுபூர்வமான கதையை ஏன் அத்தனை சொதப்பலாக ஆரம்பித்திருக்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை.

உங்களுக்குள் உங்கள் மண்ணையும் மனிதர்களையும் யதார்த்தமாக வெளிக்கொண்டு வரக்கூடிய அருமையான படைப்பாளி உறைந்து கிடக்கின்றான். மூதூர் மண்ணின் மூத்த படைப்பாளி மறைந்த வ.அ. இராசரத்தினம் போல உங்களாலும் நமது மண்சார்ந்த மனிதர்களின் உணர்வுகளையும் முரண்பாடுகளையும் அருமையாக படம்பிடித்து எழுதமுடியும் என்று தோன்றுகின்றது.

ஆனால் நீங்கள் வித்தியாசமாக எழுதகின்றேன் என நினைத்துக்கொண்டு உங்களுக்கு ஒத்து வராத அல்லது பொருந்தாத ஒரு பாணியில் கதைகளை ஆரம்பிப்பதை மட்டும் சற்று மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

ஜேசுதாஸின் பாணியில் பாலாவோ பாலாவின் பாணியில் ஜேசுதாஸோ பாடினால் எப்படியிருக்கும்? உங்களது கதைசொல்லும் பாணியும் கதையை வளர்த்துச் செல்லும் போக்கும் தனித்துவமாக இருக்கும்போது ஆரம்பத்தை மட்டும் ஏன் றிஸ்க் எடுத்துக் கொள்கின்றீர்கள்? சிந்தியுங்கள்.

அருமையான கதை- குரங்குபாஞ்சான் என்ற சொல்லை வைத்துச் சுற்றிய சுற்றலை மட்டும் தவிர்த்திருந்தால் வடிவமைப்பும் கூட ஓகேதான்!


இதுதான் நான் எழுதிய விமர்சனம்.

இதை நண்பர் சபருள்ளா பார்த்தால் நிச்சயம் எனது விமர்சனம் பற்றிய தனது கருத்தைச் சொல்லக்கூடும் என்பதும் ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல கதை மற்றும் விமர்சனம் இரண்டையும் படிப்பது கிண்ணியாவின் அறிவுக்கூர்மைமிக்க வாசகர்களுக்கும் கிண்ணியா நெற்றின் இலக்கியவட்டத்தினருக்கும் ஒரு விருப்பத்திற்குரிய விடயமாக இருக்கும் என்பதும் எனது எதிர்பாரப்பாக இருந்தது.

நான் எதிர்பாரத்தபடியே எனது விமர்சனம் பற்றிய 'அறிவுபூர்வமான' பார்வை ஒன்று (எழுத்துப் பிழைகளோடு) வந்தது. ஆனால் நண்பர் சபருள்ளாவிடமிருந்து அல்ல. மாறாக கிண்ணி(யா)லீக்ஸ் என்று தன்னைப் பெருமையாக அழைத்துக்கொள்ளும் ஒருவர் அல்லது ஒரு குழுவிடமிருந்து. அந்த விமர்சனத்தைக் கீழே அப்படியே தருகின்றேன் பாருங்கள் நண்பர்களே...


Kinni Leaks · T/kinniya central college
சிறுகதைக்குக் கொமன்ட் அடிக்கச் சொன்னால் ரெண்டு பெண்கள் கீழே
இன்னொரு சிறுகதை எழுதியிருக்காங்க. முதல்ல இந்த போடோக்களப் போட்டு பேஸ்புக்கில் கலஸ் காட்டறத்த விட்டுட்டு அல்லாஹ்வை எண்ணி, பயந்து அடக்கமாய் வாழப் பழகுங்க. உங்களுக்கான கொமன்ட் கள் மேலுலகத்தில் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதிங்க.....


கவிமேதை அண்ணல் அவர்கள் முதல்கொண்டு இன்றைய இலக்கிய நண்பர்கள் எம் ஏ எம் அலி, சபருள்ளா,  தோழி பாயிஸா அலி வரை எத்தனையோ சிறந்த படைப்பாளிகளை ஈன்ற கிண்ணியா மண்ணில் இப்படியும் விமர்சனம் செய்யக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது.


சரி இவர்களது பிரச்சினை சிறுகதையோ அல்லது படைப்புகள் பற்றிய அக்கறையோ அல்ல; மாறாக, 'சிறுகதைக்கெல்லாம் விமர்சனங்களை எழுதுமளவுக்கு பெண்கள் வ (ளர்) ந்து விட்டார்களே' என்ற பிரச்சினைதான் போலிருக்கிறது என்று பேசாமல் விட்டு விடத்தான் முதலிலே நினைத்தேன்.ஆனால் கிண்ணியா நெற் என்பது தினமும் பல நூற்றுக்கணக்கான வாசகர்களால் பார்க்கப்படும் ஒரு இணையத்தளம் என்பதால் பொதுவெளிக்கு வந்து விட்ட இந்தப் பிற்போக்கான கருத்தை  இப்படியே தொங்க விட்டுவிடுவது இன்றைய இளைய தலைமுறையினரையும் பிழையாக வழிநடாத்தும் என்பதால் அன்பர் கிண்ணி(யா) லீக்ஸ் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதும் அந்த தைரியசாலிக்கு  பொருத்தமான பதில் கொடுக்கத் தீர்மானித்தேன்.


அதேவேளை,  பதிலளிக்கப் போனால், 'அட நம்மையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து பதிலெல்லாம் போடுகிறார்களே!' என்ற புளகாங்கிதம் கிண்ணி(யா) லீக்ஸுக்கு கிடைக்குமே என்ற கவலையும் இருக்கத்தான் செய்தது. ஆனால்  அதையெல்லாம் மீறி,  நாம் பதில் எழுதியதற்கு உள்ளுர காரணமிருந்தது. அதைப் பிறகு சொல்கிறேன் . இப்போது எனது பதிலைப்படியுங்கள்...!

Jesslya Jessly · Peradeniya University
நண்பர் கிண்ணி லீக்ஸ்!

உங்கள் "அறிவுபூர்வமான" கருத்துக்கு நன்றி. பெண்கள் என்றால் அடக்க ஒடுக்கமாக சமையலறைக்குள்ளேயே கிடந்து, இன்னும் அடுப்பு பற்றவைத்துக்கொண்டு, ஊர்வம்பு பேசிக்கொண்டு வெட்டிப்பொழுது போக்கிவிட்டு வருகின்ற கட்டாக்காலி ஆண்களுக்கு பணிவிடை செய்து கொண்டு இருக்கவேண்டுமென்று நினைக்கிறீர்களோ?

முதலில் சொந்தப் பெயரை தைரியமாக வெளியிடும் தைரியமில்லாத நீங்களெல்லாம் ஓர் ஆண்பிள்ளையா? கரப்பானுக்குக் கூடத்தான் மீசையிருக்கின்றது. பெண்களை சக மனிதர்களாகப் பார்க்கும் நல்ல இயல்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரிகளிடமிருந்து ஆரம்பித்தால் நல்லது.

பெண்களின் வளர்ந்துவரும் திறமைகளை ஏற்றுக்கொள்ளாத தாழ்வுச்சிக்கலுக்கு எல்லாம் மருந்து கிடையாது. உள்ளுக்குள் வெம்பிச் சாக வேண்டியதுதான். முடிந்தால் சபறுள்ளா போன்ற நல்ல படைப்பாளியின் சிறுகதையொன்றுக்கு விமர்சனம் ஒன்றை எழுதுங்கள் பார்ப்போம். பெண்களை மதிக்கும் எத்தனையோ மனிதர்கள் உள்ள மண்ணிலிருந்து உங்களைப்போல ஒரு கோழையா? Shame...Shame!

இறைவனின் பார்வையில் ஆண் -பெண் என்ற பேதம் எல்லாம் கிடையாது. அப்படி பேதம் இருக்கின்றது என்றால் எங்கோ பெரிய தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தம். பெண்களுக்கு அட்வைஸ் செய்வதெல்லாம் இருக்கட்டும். முதலில் உங்கள் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள் அன்பரே!நான் கொடுத்த இந்த பதில் வெறும் பதில் அல்ல; அது நன்கு திட்டமிடப்பட்டஒரு பொறியும்கூட!

ஆம்..! எனது கோப வார்த்தைகள் எனும் புழுவுக்குள் இருந்த தூண்டிலை கிண்ணி(யா) லீக்ஸ்  எனும் ஏமாளி மீன் கடிப்பதற்காக  காத்திருந்தேன். எனது எதிர்பார்ப்பு தவறவில்லை.

பாருங்கள் இவரது அடுத்தடுத்து வந்த இரண்டு பதில்களை ...!அவற்றிலே எனது சவாலுக்கான பதில் ஏதாவது உள்ளதா என்றும் பாருங்கள்!


Kinni Leaks · T/kinniya central college
அட....! ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமையாமே..... எங்கு இஸ்லாம் படித்தீர்கள்.....? நீங்கள் ஒரு தரஜா குறைக்கப்பட்டவர்கள்! குர்ஆனோடு சம்பந்தமே இல்லாத உங்களோடு எதற்கு வெட்டிப்பேச்சு.....? அதிகம்
பேசாதீர்கள்.....! கிண்ணிலீக்ஸ் இன் நோக்கம் புரியாமல் விளையாடாதீர்கள்!

Kinni Leaks · T/kinniya central college
அப்ப நீங்க குர்ஆனை நிராகரிக்கிறீர்களா......? அல்லாஹ்.....! இந்த சகோதரிக்கு நல்லருள் புரிவாயாக.....!
May 7 at 10:12pm)இருந்தாலும் கடைசியாக  அவர் குறிப்பிட்ட விடயத்தை வைத்து மீண்டும் பதில் ஒன்றை இட்டேன்.

Jesslya Jessly · Peradeniya University
Hi Kinni Leaks,

அப்படியென்றால் இஸ்லாம் பெண்களைச் சமமாக நடத்தவில்லை என்றா சொல்கிறீர்கள்?

இஸ்லாம் பெண்களைச் சமமாக நடத்துவதாக நிறுவுவதற்கு இஸ்லாமிய அறிஞர்களெல்லாம் வரிந்து கட்டி எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கையிலே நீங்கள் என்ன இப்படி சேம் ஸைட் கோல் போடுறீங்க? அப்படியென்றால் உண்மையிலேயே பாரபட்சம்தானா நண்பரே?

சரி, ஒரு பேச்சுக்கு நாங்கள் ஒரு தரஜா குறைக்கப்பட்டவர்கள் என்றே வைத்துக்கொள்வோமே. நீங்கள் ஒரு தரஜா உயர்ந்தவர்தானே?

எங்கே இந்த தரஜா குறைந்தவள் எழுதியது போல சொந்தமாக ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதுங்களேன் பார்ப்போம்.

சரி அதையெல்லாம் விடுங்கள் என் சவாலுக்கு உங்கள் பதிலென்ன மிஸ்டர் கரப்பான் பூச்சி?

என் சவாலுக்குப் பதில் கூறாமல் நீங்கள் தரஜாவெல்லாம் பேசியிருப்பதைப் பாரத்தால் நீங்கள் எங்களுக்கு உண்மையாகவே பயப்படுகின்றீர்கள் என்றுதானே அர்த்தம்? அதுவே எங்களுக்கு வெற்றிதான் நண்பரே.

அது என்ன?   உங்கள் கிண்ணி லீக்ஸின் நோக்
கம் புரியவில்லையா எங்களுக்கு?

நண்பரே!

இந்த வருடம் முடிய இன்னும் 7 மாதங்கள் இருக்கும்போது 2012 வருசத்துக்குரிய பெஸ்ட் ஜோக்கையெல்லாம் இப்பவே அடிக்கக்கூடாது? ஹா!...ஹா...ஹ்...ஹா! சிரித்து வயிறு நோகின்றது...! WOW! what a joke it is...?

உங்கள் கிண்ணி லீக்ஸின் காட்டுமிராண்டி நோக்கம்தான் அப்பட்டமாகத் தெரிகின்றதே!


 Kinni Leaks · T/kinniya central college"உனது கணவன் சோம்பேரி என்டு சொல்லி இன்னொருத்தனைக் கூப்பிட்டவள் தானே நீ.... இவ்வாறான அம்பலங்களையெல்லாம் ஸ்காப் கட்டி மறைக்கப் பார்க்கிறாயா.....? அந்தரங்கங்களை அடுத்தவனிடம் பகிர்ந்த கொண்ட உனக்கெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி என்ன தெரியும்.....? சமஉரிமை சமஉரிமை என்று மேல் சட்டை இல்லாமல் திரிய ஐடியா போடுற கூட்டத்திற்கெதிராக அவசரமாக ஏதாவது சட்டமூலம் கொணரவேண்டும்.....!

உங்களைப் போன்றவர்களைத் திருப்திப்படுத்த வெளிநாடுகளிலிருந்து நீக்ரோக் காரர்களை இறக்குமதி செய்வோம்..... அதுவரைக்கும் அடக்கமாக இருங்க சகோதரியே.....! உங்கட கவலை புரியுது..... என்ன செய்ய.... நாளை வருவான் ஒரு மனிதன்.... நன்றாய்க் கிழிக்க நாளை வருவான் ஒரு மனிதன்......!"

பொதுவாக Facebook போன்ற சமூகத்தளங்களைப் பயன்படுத்தும்போது ஆண்களே கூட அவதானமாக இருக்க வேண்டும். அதிலே உண்மையான விடயங்களையெல்லாம் போட்டுத்தொலைத்தால் என்னாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலர் தங்களது தோற்றத்தைக் கூட மறைத்து நடிகர்கள் கிரிக்கட் வீரர்கள் போன்ற பிரபலமானவர்களின் படங்களை இடுவார்கள். அதற்காக எல்லா விபரங்களும் போலியானவை அல்ல.


அப்படித்தான் நானும் Facebook கை பயன்படுத்தும்போது  சில கட்டாக்காலி ஆண்களிடமிருந்து வரக்கூடிய காதல் அழைப்புத் தொல்லைகளை இல்லாமல் செய்வதற்காகவும்   ஒரு பெண்ணுக்கு வரும் இயல்பான சங்கடங்களைத் தவிர்க்கவும்  எனது prfile edit  ல் மட்டும் ஒரு போலியான தகவல் ஒன்றைக்கொடுத்திருந்தேன். 


அதாவது 'நான் திருமணமானவள்..மனிதனாக நடந்து கொள்ளாத எனது கணவனை விவாகரத்துச் செய்து விரட்டி விட்டவள் ..... '  என்று தொடங்கிச் சில விபரங்களை வேடிக்கையாகக் குறிப்பிட்டு இருந்தேன்..

அதைத்தான் நமது கிண்ணி(யா) லீக்ஸ்  உண்மையென ஏமாந்து தூண்டிலையும் சேர்த்துக் கடித்து விட்டார்.
 

அதாவது அந்த 'இஸ்லாமிய காவலர்' பெருமான் அதை வைத்துக்கொண்டு முழுமையாக அறிந்தேயிராத ஒரு இஸ்லாமியப் பெண்ணை வசைபாடியிருக்கும் அழகைப் பாரத்தீர்களா நண்பர்களே!

இஸ்லாமியப் பெண்களை மேலும் ஒழுக்கமாக ஆக்குவதற்கு வந்திறங்கியுள்ள இந்த அவதாரபுருசன் தனக்கு பிடரியில் ஒரு ஷொட்டு விழுந்ததும்  அதே இஸ்லாமியப் பெண்களுக்கு எப்படி வசையிழுக்கிறார் பார்த்தீர்களா?

கிண்ணி(யா) லீக்ஸ் ஸின்  அவலட்சணமுகம் வெளியானதும் அவரது பாணியிலேயே சிறிது இறங்கி வந்து மேலும் சில ஷொட்டுகளை இறக்கிப் பார்த்தோம்.

இப்போதுவரை  ஆள் கப்சிப்!   அந்த ஷொட்டுகளை பாருங்கள்..

Jesslya Jessly · Peradeniya University
Kinni Leaks

அப்படி வாங்க வழிக்கு நண்பரே!

நீங்கள் தனிப்பட்ட வாழ்வைத் தாக்கத் தொடங்கியதில் இருந்தும் நீ என்று ஒருமையில் அழைக்கத் தொடங்கி விட்டதிலிருந்தும் உங்களுடைய கருத்து வங்குரோத்துத்தனம் உலகம் முழுக்க வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஒத்துவராத ஓடுகாலிக் கணவனை ஓடஓட அடித்து விரட்டுவதற்கெல்லாம் ஒரு தைரியமும் தில்லும் வேண்டும். அதை முறைப்படி செய்த என்னைப் பார்த்து....

உங்களைப்போன்று....

கிண்ணியாவுக்குள் தொப்பி கழற்றாமல் பக்தியோடு வளையவந்தவிட்டு திருகோணமலை மெக்கய்சர் ஸ்டேடியத்தில் தமிழ் சிங்களப் பெட்டைகளுக்குப் பின்னால் கார்த்திகை நாய்போல ஜொள்ளுவிட்டபடி...

கழற்றிய தொப்பியில் அதைத் துடைத்துக் கொண்டு திரியும் கட்டாக்காலி 'இஸ்லாமிய காவலர்களுக்கு' டயறியா வரத்தான் செய்யும்.

முதலில் என்னுடைய சவாலுக்குப்பதில் சொல்லிவிட்டு என்மீது சேற்றை வாரியடிக்கத் தொடங்குங்கள்.
...

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நான் யாரோடும் பகிர்ந்து கொள்ள உரிமையுள்ளது. உங்களைப்போல....

ஜொள்ளுக்கு கட்டைக் கவுன் பெட்டைகளும் கலியாணம் செய்துகொள்ள அபாயாபோட்ட அப்பாவிப் முஸ்லீம் பெட்டைகளும் என்று ரெட்டை வாழ்க்கை வாழ்வது கிடையாது. நாங்கள்.
மீசையுள்ள ஆம்பிளையாக நீங்கள் இருந்தால் மரியாதையான வார்த்தைகளால் எங்களைப்போன்ற பெண்களோடு வாதித்துப் பாருங்கள். அதற்கே வழியில்லாத நீங்களெல்லாம் கிண்ணி லிக்ஸின் நோக்கம் பற்றி பீத்தி என்ன பிரயோசனம்?

உங்களைப்போன்ற வேஷம்போடும் பக்தி கட்டாக்காலியைவிட நாங்கள் எவ்வளவோ தரஜா உயர்ந்தவர்கள். அடங்குங்கள். இல்லையோ...

முந்தி மாதிரி ஆம்பிளையென்றால் பயந்து அடங்கி ஒடுங்கிப்போவதெல்லாம் உங்கள் உம்மம்மா காலத்தோடு மலையேறிவிட்டது.

ரொம்பத் துள்ளினால் பெண்கள் நாங்கள்.... ஒட்ட நறுக்கி விடுவோம்! Be careful!
Kinni Leaks

Wednesday, May 9, 2012

சிறகிலிருந்த பிரிந்த இறகு ஒன்று!

தருமு சிவராமு 


"தருமு சிவராமு  என்ற ஒரு படைப்பாளியைத் தெரியுமா உங்களுக்கு?"


                                என்று கேட்டால் என்று நம்மில் பலர் யோசிப்பார்கள். இத்தனைக்கும் அவன் நமது திருகோணமலை மண்ணில் பிறந்தவன்.


நமது நாட்டிலும் தமிழ்நாட்டிலும் கவிதை, சிறுகதை, குறுநாவல்கள், பத்திகள்,ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள், என்று எதையும் விட்டு வைக்காத எழுத்தாற்றலிலும் மட்டுமல்லாது கேலிச்சித்திரம், ஓவியம் ஆகிய துறைகளிலும் தனது தனித்துவமான ஆற்றலை நிரூபித்திருப்பவன் அவன்.

அட! இத்தனை விடயங்களில் சிறந்து விளங்கியவனை  அதுவும் நமது மண்ணின் படைப்பாளியை யாரென்று கூறாமல் பெரும் பீடிகையெல்லாம் போட்டுக்கொண்டு ஏதோ இன்று நேற்று எழுத்துத்துறையில் கால்வைத்திருக்கும் ஒரு கற்றுக்குட்டி எழுத்தாளரைப்போல அறிமுகம் செய்து கொண்டிருக்கிறீர்களே என்று கேட்பவர்களுக்கு மட்டும் ஒன்று சொல்கின்றேன்.

அவன் இப்போது உயிருடன் இல்லை.

ஆம்! எழுத்தையும் படைப்பாற்றலையும் தவிர இறுதிவரை தனது பிழைப்புக்கென தொழிலென்று எதையுமே செய்யாததாலும் இந்தப் உலகத்தின் பாசாங்குமிக்க போலிச்சம்பிரதாயங்களுடன் கடைசிவரை சமரசம் புரியாததாலும் தமிழ்நாட்டில் ஒரு சிறுநகரத்தின் ஒதுக்குப்புறமான சந்து ஒன்றிலிருந்த வாடகை அறையில் வறுமையாலும் நோயினாலும் ஏறத்தாழ அநாதையாகச் செத்துப்போனான், அந்த மகாகலைஞன்.அவனை எல்லோரும் 'பிரமிள் என்ற புனைபெயரினூடாகத்தான் அதிகம் அறிந்து வைத்திருக்கின்றார்கள். இந்த சிறகுகள் வலைப்பூவின் முகப்புக் கவிதையாக வீற்றிருக்கும் 'காவியம்' எனும் சிறுகவிதையை வாசித்துப்பாருங்கள். அது ஒன்றே போதும் அதைப்படைத்தவனின் பேராளுமையை அறிந்து கொள்வதற்கு...


               

               காவியம்


சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத

பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச்செல்கின்றது...
உண்மையைச் சொல்பவனாகவே இருந்த காரணத்தால் உயிரோடு இருந்தவரை சர்ச்சைக்குரியவனாகவே வாழ்ந்து பின்பு இறந்தபோது, தனது இறுதி ஊர்வலத்துக்குக் கூட பதினான்குபேரைத் தாண்டாத மகாகவி சுப்பிரமணி பாரதி போலவே இவனுக்கும்கூட  வாழ்விலும் மறைவிலும் அதே 'பெரும்பேறு' கள் நிகழ்ந்தன.

இறந்தபின்பும் இறவாத ஜீவனுள்ள அவனது படைப்புகள் மட்டுமே அவனை நமக்கெல்லாம் அடையாளம் காட்டும்.

அவனைப்போலவே அவனது படைப்புக்களும் எதுவித சமரசங்களுக்கும் உட்படவில்லை. நினைத்ததை நெற்றிக்கு நேரே பொட்டிலறைவதுபோலச் சொல்லும் நெஞ்சுரமும் நேர்மைத்திறனுமுள்ள இந்த மாபெரும் மனிதனின் கவிதையில் ஒன்றை இங்கே தருகின்றேன் படித்துப் பாருங்கள், நண்பர்களே...!- 'Mutur' Mohammed Rafi
கவிதை:என்றேன்,  என்கின்றார் 


டைப்பு ஒரு பயங்கரப்

பொறுப்பு என்றேன்

'கவிதை ஒர் அறிவார்த்தத்

திகைப்பு' என்றேன்.

'உள்ளதை உள்ளத்தில்

வாங்கி உயிருட்டும்

சுக்கிரத் தவிப்பு

உம்மிடம் இல்லை.

உள்ளதுக்கு அப்பால்

ஆழ்ந்து எரியும்

சூரியத் தகிப்பு

அதுவும் இல்லை.உமக்கேன் இந்த வேலை?

உமது பிரைவேட்

புட்டிக்குடியையும்

குட்டி அடியையும்

அவுத்த அவுத்துக்

காட்டிவிட்டால்

கவிதை ஆகுமா?

பிரக்ஞை விசயம்

பிரைவேட் அல்ல-

தனியன் அனுபவம்

மனிதம் ஆகணும்

ஆகலை என்றால்

அறிவின் எதிரில் அது

அய்யோ பாவம்,படிக்கும் மனசுக்குள்

நிகழும்விபத்து

கால் ஒடிந்த நாற்

காலியில் உட்கார மாட்டீர் நீர்

மனிதத்துவத்துக்கு

மானக்கேடான

உமது கவிதையில்

அமராது என்மூளை என்றேன்.
அவர் சொன்னார்.

'எனக்கேது சூரிய ரேகை

எனக்கேது ஏதோ சுக்கிர யோகம் என்று

சோசியம் பார்க்கிறீர்.

நானாக்கள்சூனாக்கள்

ஞாவன்னா ராவன்னா

யாரைத்தான் வேணாலும்

கேட்டுப் பாருமேன்

அவர்கள் அறிஞர்கள்.
உமக்கேது அறிவு?

அறிந்தவர் என்றால் கேட்கிறேன்

சொல்லும் கேள்விக்கு விடையை'

என்ற அவர்

குலுக்கு நடிகைகள்

கும்மிருட்டு மோகினிகள்

சிலுக்கு மாமிகள்

சிலரைக்குறிப்பிட்டு ... 'இவர்களின் உறுப்புகளில்

சிவப்பெது கறுப்பெது?

சொல்லும்' என்கின்றார்.

என்கின்ற போதே

வழியுது அவருக்கு

ஜொள்ளும் ஸ்கலிதமும்.

-பிரமிள்

Monday, May 7, 2012

சிறுகதை: மூதூர் ஏ.எஸ். உபைதுல்லா

கொடி பறக்குது!


'வாப்புச்சி ஒங்களுக்கு விசியந்தெரியுமா?'


'சொல்லு ராசா'


'கருமலோத்து மல இரிக்குலவா...அதுல ஒரு சின்னக் கொளம் இரிக்காம..அதுலருந்து தான் ஆமிக்கேமுக்கு பைப்பால தண்ணி போவுதாம். அது வத்துரதே இல்லியாம்...'  என கூறிக் கொண்டிருந்த பேரன் இன்னும் ஏதேதோ சொல்ல வைத்திருந்தவன் வேலிக்கு மேலால் கூட்டாளிகளின் தலைக்கறுப்புத் தெரியப்பறந்தோடினான்.


பேரன் சொல்லி முடிய தானும் கருமலை ஊற்று பற்றி அவனுக்கு நிறைய சொல்ல வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் பேரன் ஓடிவிட்டான்
ஜனாப்தீன் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார். மனக்குளத்துக்குள் பேரன் விட்டெறிந்த கல் கடந்தகால நினைவலைகளை எழுப்பியது.கருமலையின் சுற்றுவட்டாரத்தில் ஜனாப்தீனின் கால்தடம் படாத  இடம் இல்லையென்றே சொல்லலாம். இன்றைக்கும் பார்ப்பவர் கண்களை ஆச்சரியத்தால் அகலமாக்கும் அற்புதமான வற்றாத கருமலை ஊற்று இன்றளவும் மிகப்பெரிய அதிசயம் தான்;.அது ஒரு அள்ளக்குறையாத ஒரு அட்சய பாத்திரம். அதில் சுத்தமும் சுவையும் மிகுந்த மதுரமான தண்ணீர். ஜனாப்தீனும்  அதில் குடித்திருக்கிறார். குளித்து மகிழ்ந்திருக்கிறார்.அந்தக்காலத்தில் கருமலையில் கொடியேத்தி அடிவாரத்தில் கந்தூரி நடைபெறும். ஊர்கூடி உண்டு மகிழும். அதிலும் கொட்டியாரத்தார் வத்தையில் புறப்பட்டு வந்து விசேடமாக கந்தூரி கொடுப்பார்கள். மீனவர்கள் இரண்டு மூன்று மாதங்கள் வாடிபோட்டு தங்கி மீன்பிடிப்பார்கள்.மலையில் கொடி ஏத்தி அதுகாற்றில் அசைவதைக்கண்ணால் கண்டதன் பின்னர் தான் அடிவாரத்தில் அடுப்பெரிக்கப்படும். அந்தக்காலத்தில் இளைஞர் குழுவொன்று கொடியுடன் மலையேறப் புறப்படும். ஜனாப்தீன்தான் அதற்கு தலைமை தாங்குவார்.            காலவோட்டத்தில் எல்லோரையும்; வாரியெடுத்துக் கொண்டு ஓடும் காலம்
ஜனாப்தீனையும் வயோதிபனாக்கி சாய்மனைக் கதிரைக்குள் மடித்துப் போட்டது. தூரத்தில்குடிமனைகளுக்கு மேலால் பசியமரங்களை போர்வையாய் போர்த்திக் கொண்டு நின்ற கருமலையின் உச்சி கண்ணில் பட்டதும் ஜனாப்தீனுக்கு நாடிநரம்புகளில் ஒருவித விறுவிறுப்பு பரவியது. மனம் கடந்தகாலத்துக்குத் தாவியது.

***
து ஒரு கத்தூரிக் காலம். அரிசி, ஆடு, ஆக்கள் என வயிறு நிறைய ஏற்றிக் கொண்டு கொட்டியாரத்து வத்தை குடாக்கடலைக் கிழித்து வகிடெடுத்துக் கொண்டு கருமலையூற்றை இலக்கு வைத்து விரைந்து கொண்டிருந்தது. வத்தையின் தண்டயல் சுலைமான் அணியத்துக்கு வந்து வெறுமேலுடன் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நிற்பது கரையில் இருந்து பார்க்கத் தெளிவாகத் தெரிந்தது.


தடதடவென வேகத்தை தணித்தக் கொண்டு குவாட்டிக் குடாவுக்குள் நுழைந்த வத்தை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. கரையில் நின்றவர்கள் முழங்காலளவு தண்ணீரில்போய் வத்தையில் இருந்த பொருட்களை இறக்கினார்கள்.வெள்ளைமணல் நாச்சிக்குடா சின்னம்புள்ளச்சேனை மக்களும் தம் பொருட்களோடு அங்கு வரத்தொடங்கினர். கொடியுடன் மலையேறக்காத்திருந்த ஜனாப்தீன் குழுவினரும் வெள்ளயும் சொள்ளயுமாக  வந்து சேர்ந்தனர். ஒரே கலகலப்பும் ஆரவாரமும்தான்.
சற்றுநேரத்தில் கூடிநின்ற மக்கள் வழிவிட முகம்மது தம்பி நடுவே நடந்து வரஇ தொடர்ந்து பக்கிரான் லெப்பை மசூர் லெப்பை வகாப் லெப்பை ஆகியோர் வந்தனர். ஆரவாரித்துக்கொண்டிருந்த சனங்களை முகம்மது தம்பி தலையை உயர்த்தி சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். மழைத்தூறலுக்கு அடங்கிய புழுதியாய் ஆரவாரம் ஓய்ந்து  எங்கும் ஒரே........ அமைதி.


'லெவ்வ நீங்க துஆவ ஓதுங்க' என்றதும் பக்கிரான் லெப்பை இருகைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மனமுருக துஆ செய்யவாரம்பித்தார். மக்களும் பக்தி சிரத்தையாக ஆமீன் சொன்னார்கள்.                                துஆ முடிந்ததும் ஜனாப்தீன் குழுவினர் புறப்பட்டனர.; ஜனாப்தீன் பிஸ்மிகால் வைத்து பயணத்தை ஆரம்பிக்க மலையடிவாரத்தில் கந்தூரிவேலைகள் ஆரம்பமாகின.


ஏற்கனவே நடந்த கந்தூரியின் போது பாவிக்கப்பட்ட கொறக் கொள்ளிக் கொட்டான்கள்இ மக்கிமண்ணோடு மண்ணாக கிடந்த சாம்பல் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக கற்களை உருட்டி வந்து அடுப்பு வைத்தனர.; ஒரு சாரார் மலைக்காட்டுக்குள் நுழைந்து வேண்டியமட்டும் விறகுகளை சுமந்து வந்து போட்டார்கள். பொண்டுகள் அரிசியை களையத்தொடங்க  சிறுவர்களை விரட்டிவிட்டு ஆண்கள் சிலர் பற்றை மறைவில் ஆடுகளை அறுத்து உரிக்கத்தொடங்கினர். சிறுவர்கள் தூண்டல் தங்குஸூடன் மீன்பிடிக்கச் சென்றனர். குழந்தைகள் ஓடியாடிக் கொண்டும் தாய்மாரின் முந்தானை பிடித்து காரணம் சொல்லத் தெரியாமல் அழுது கொண்டும் திரிந்தனர்.

கிழக்கே கரக்கடச் சேனைக்கப்பால் இளஞ்சூரியன் தென்னைகளின் உச்சிகளை தடவிக் கொண்டு மேலெழும்ப இளைஞர்களும் உற்சாகமாக மலையேறிக் கொண்டிருந்தனர்.


உருளைக்கிழங்களவு முதல் ஊர்க்குருவி முட்டையளவு வரையிலான கற்கள் நிறைந்த மலைப்பாதையில் எறிக் கொண்டிருக்க அவர்களின் நடுவே குப்பாயத்தால் சுற்றப்பட்ட கொடியை மிகவும் பக்திசிரத்தையாக  தோளில் சுமந்த மனசூர் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தார். நெஞ்சேற்றமான பாதையில் ஆங்காங்கே மயில் தோகையென தாழ்ந்து தரைதடவத் துடிக்கும் மரக்கிளைகளை தலைக்கு மேலால் தூக்கிவிட்டுக்; கொண்டும் சவட்டிக்கொண்டும் சவட்டி முறித்துவிட்டுக் கொண்டும் முன்னேறினார்கள்.
வழியில் அவர்களை குறுக்கறுத்துக் கொண்டு காட்டுச்சேவல் ஒன்று ஓடியது.

'சா....புடிச்சி அறுத்தாக்கிணா நல்லாரிக்கும்'  என சம்மூன் குனிந்து கல்லெடுக்க அலியார் விரைந்து சம்மூனின் கையைப் பிடித்துக் கொண்டு
'கல்லக் கீழ போடு சம்மூன். கொடியேத்தப்போற நேரத்துல இப்புடியெல்லாம் செய்யப் பொடாது'                                           


அலியாரின் நியாயத்தை உணர்ந்த சம்மூன் கல்லைக் கீழே போட்டார்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. எல்லாரின் நெற்றியிலும் வியர்வை முத்துக்கள். முதுகுச்சட்டையும் லேசாக ஒட்டத்தொடங்கியது. ஆனாலும் கொட்டியாரக்குடாவின் தலைதடவி அதன் ஈரப்பதன் அள்ளிக்கொண்டு வந்து மலையை மூடிக் கவிந்து கிடக்கும் பசுமையான மரங்களுக்குள் பூந்து புறப்பட்டு வந்த கடல் காற்று ஈரப்பதன் அள்ளி வியர்த்த உடலில் எறிந்து விட்டுப் போனதும் உடல் சில்லென்று சிலிர்த்து ஒரு சுகானுபவம் ஏற்பட்டது. எல்லோரும் ஒரே நேரத்தில் 'ஆஹா......!' என்றனர்.


கொடி கொண்டு செல்லும் குழுவில் ஒரு வெளியூர் இளைஞன். கொடி ஏற்றத்துக்குப் புதிது. நாலாபக்கமும் திரும்பிப்பார்த்துக் கொண்டே  நடந்து கொண்டிருந்தான்.மலையில் இருந்து கீழே சுட்டிக் காட்டி அந்த எடத்துல ஏன் ஒருத்தரயும் காணயில்ல' என்று கேட்க


'அதா...அதுதான் குவாட்டிக்குடா. இஞ்சால இரிக்கி பாருங்க அது தான்
திருக்கக்குடா. இந்தப்பக்கம் திரும்பிப்பாருங்க அதச் சொல்ற வேப்பங் குடான்டு. இந்த எடத்துலயெல்லாம் கொஞ்சக் காலத்துக்கு மொத நம்மட சனந் தான் வாழ்ந்துது.  ரெண்டாம் ஒலக யுத்தத்துல ஜப்பாங்காரங் குண்டு போடயிங் சனம் எழும்பிக்கிட்டு கந்தளா, கிண்ணியா, தம்பலகாமம் என்டு போய் குடியேறிட்டு. இப்பயுங் அந்தாக்கள்ற பதிவுத்துண்டுல(Birth certificate) வேப்பங்குடா திருக்கக்குடா குவாட்டிக்குடான்டுதான் இரிச்சி.'  என்று ஜனாப்தீன் விளக்கிக் கொண்டு முன்னே செல்ல, திடீரென்று,


'எல்லாரும் அப்புடியே நில்லுங்க' என்றார் மன்சூர்.நடந்தவர்கள்  சடுதியாக ஸ்தம்பித்தார்கள். எல்லோரும் மன்சூரை விழிகளால் வினவ அவர் சுட்டிக்காட்டிய திசையில் எல்லார் விழிகளும் குத்திட்டு நின்றன. அங்கே கற்களை சுற்றிப் படர்ந்த மரங்களின் அடியில் சருகுகள் நிறைந்து கிடந்தன. சற்று நேரத்தில் அந்தச் சருகுகள் லேசாக அசைய ஆரம்பித்தன. மெல்ல மெல்ல அந்த அசைவு நீளமாக நெளிந்து வளைந்து அசைந்ததும் தான் சருகுக்குள் கிடந்த வெங்களாத்தியன் ஒன்று புறப்பட்டுப் போவது தெரிந்தது.                      


தூரத்தூர நடந்தவர்கள் இப்போது அருகருகே நடந்து முன்னேறினர். சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே அமைதி. அந்த அமைதியை குலைக்க விரும்பிய அலியார்


'வெங்களாத்தியன் மட்டுமா பக்கத்துமலயில மான் மொயல் உக்குளான் காட்டுக்கோழி எல்லாங்கெடக்கு இன்ஸா அல்லாஹ்  நாளக்கி மம்மதம்பி நானாட்ட தோக்க வாங்கிக்கிட்டு போவோம்' என்று சொல்லி வாயெடுக்கு முன் பக்கத்து பற்றைக்குள் ஒரு சடசடப்பு. பெண் மான் ஒன்றை ஆண்மான் ஒன்று  விரட்டிக் கொண்டோடியது. எல்லோர் முகங்களிலும் ஒருவித மகிழ்ச்சிப் பிரவாகம். அந்த மகிழ்ச்சியில்  நடை வேகம் கொண்டது.


இப்பொழுது ஜனாப்தீன் முன்னே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது மலைமீதிருந்த கருமலையூற்றுப் பள்ளிவாசல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதனைக் கண்டதும் எல்லோரையும் ஒருவித பக்திப் பரவசம் பற்றிக் கொண்டது. இனம் புரியாமல் மனதுக்குள் அமைதி ஒன்று பரந்து நிறைந்தது.

பள்ளிவாசலை நெருங்கி விட்டார்கள். அது  அப்படியே கொட்டியாரக் குடாவை பார்த்துக் கொண்டிருந்தது. காலம் பூராகவும் பள்ளிவாசல் கொட்டியாரக் குடாக் காற்றால் வயிற்றை நிரப்பும் வண்ணமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழுவழுப்பான படிகளில் இறங்கினால் நேரே சென்று கடலில் கால் நனைக்கலாம். எனவே பள்ளி வாசலின் பக்கவாட்டால் ஏறி தூணைப்பிடித்து  பள்ளிவாசலின் முன் பிரகாரத்துக்குள் நுளைந்தார்கள். அந்த அற்புத ஊற்றில் வுளு செய்தார்கள். இரண்டு ரக்காயத்து சுன்னத்துதொழுதார்கள். அந்த வுளுவோடு பள்ளிவாசல் முன்றலில் போர்வைக்குள் சுற்றிவைக்கப்பட்ட கொடியை எடுத்து நாட்டினார்கள். பச்சைப் பின்னணியில் பொட்டும் பொறயும் தாங்கிய கொடி கடல் காற்றில் படபடத்து பட்டொளி வீசிப்பறந்தது.


அனைவரும் அன்னார்ந்து பார்த்து பரவசமானார்கள்.கொடியை ஏற்றிவிட்டு இன்னும் சொற்ப உயரமே இருந்த மலை உச்சிக்கு ஏறினார்கள். மலை உச்சியில் சற்று வேகமான காற்று. உச்சியில் இருந்து பார்க்கும் போது  திரும்பும் பக்கமெல்லாம் அல்லாஹ்வின் அருள் இயற்கை அழகாக காட்சியளித்தது. கொட்டியாரக் குடா நீலத்துகில் விரித்து விட்டது போன்று விரிந்து பரந்து கிடந்தது. 05 சிறு சிறு கீற்றுகள் போல மீன்பிடித் தோhணிகள் அலைகளில் லாவகமாக அசைந்து கொண்டிருந்தன.இடையிடையே அலைகள் பிளவுற்று அன்னக்கூட்டம் போல நுரையெறிந்து கொண்டு போனது. மூதூருக்கும் திருகோணமலைக்கும் இடையே பயணிகள் படகும், நெல், செங்கல் ஏற்றிய வத்தைகளும் போய்வந்து கொண்டிருந்தன. பிரம்மாண்டமான பாதாளமலை கடலுக்குள் கம்பீரமாக குத்திட்டு நின்றது. உலகின் உண்ணதமான அந்த துறைமுகத்துக்குள் வெளிநாட்டுக்கப்பல்கள் நுழைந்து கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சி.அங்கிருந்து இறங்கி  கருமலையூற்றுப் பள்ளிவாசல் முன்றலுக்கு வந்தனர்.
அப்படியே நடந்து அங்கே காணப்படும் நாப்பது முழ கபுறையும் ஏனைய கபுறுகளையும் பார்த்துக் கொண்டு வந்து பள்ளிவாசலின் படிக்கட்டில் அமர்ந்தனர். சட்டையின் மேல் பொத்தானை தளர்த்திக்கொண்டு அடுத்தடுத்த படிக்கட்டில் கைகளை ஊண்றி வசதியாக சரிந்து கொண்டனர். சிலு சிலுவென வீசிவந்த கடல் காற்று ஆடைகளுக்குள் நுழைந்து குளுகுளுப்பேற்றிக் கொண்டு போனது. எல்லோருடைய மனங்களும் அல்லாஹ்வைப் புகழ்ந்தன.
சாய்ந்து கொண்டிருந்த ஜனாப்தீன் மன்சூரின் பக்கம்திரும்பி'என்ன அருமயான காத்துப்பாத்தியா மன்சூர்'


'உண்மதாம்மச்சான். காலம்பூரா இங்கினயே இருந்திரலாம் போலரிக்கி'
அலியாரும் உரையாடலில் இறங்கினார்.


'இப்ப வெளங்குதா இந்தப் பெரியார்களெல்லாம் ஏன் இந்த எடத்த தெரிவு செஞ்சாங்க என்டு? இந்த தனிமயும் காத்தும் பசுமையும் தூய்மயும் அப்புடியே படச்சவன நெனச்சி பரவசப்படுத்திப்போடும்'


இந்த  உரையாடல் எதிலும் ஈடுபடாத அந்த இளைஞன் நாற்பது முழக் கபுறையே பார்த்துக் கொண்டிருந்தான்.


'என்ன தம்பி வந்ததுலருந்து ஒன்னும் பேசமாட்டெங்கிரிங்க. கபுறயே பாத்துக் கிட்டிரிக்கிங்க' என்றார் மன்சூர்.                 


'அது... அது எப்புடி நாப்பது முழம் என்டுதான்'


'அதா...இந்தக்கபுறு எந்தக்காலத்துல இருந்து இஞ்ச இரிக்கென்டு எனக்குத் தெரியா. ஆனா இந்தப்பள்ளிவாசல் இந்த எடத்தல கட்டப்பட்டது ஆயிரத்தி எண்ணூத்திப்பைனஞ்சாமாண்டு எண்டு அந்தா அதுல கல்வெட்டுமாதிரி எழுதியிரிக்கி பாருங்க' என்று மன்சூர் பள்ளியின் உள்முகப்பை சுட்டிக்காட்டினார். அதனை உற்றுப்பார்த்த இளைஞன்


'வெள்ளக்காரன் கண்டியக் கைப்பத்துன ஆண்டும் அதுதான்'என்று கூறிவிட்டு
 மீண்டும் நாப்பது முழக்கபுறையே குறிப்பாக பார்ப்பதை அவதானித்த
அலியார்,


' தம்பி...நாப்பது மொழக்கபுறு இங்கினமட்டுமில்ல. பக்கத்துல கன்னியாவுலயும் மல உச்சில ஒரு நாப்பது மொழ கபுறு இரிக்கி. அதுமட்டுமில்லாம எலங்கயிலயும் ஒலகத்துல வேற வேற நாடுகள்ளயும்; இப்புடி நீளமான கபுறு இரிக்கி. இதுக்குப்பின்னால ஏதோ ஒரு உண்ம இரிக்கும். அத ஆராஞ்சி பாக்கணும்' என்றார்.


' அதுமட்டுமில்ல. ஆதம்நபி நூகுநபியிர சந்ததிக்கெல்லாம் அல்லாஹ் தொன்னூறு மொழ ஒயரத்தக் குடுத்ததா குர்வான்ல சொல்லப்பட்டிரிக்கி' என்று ஜனாப்தீன் தனக்குத் தெரிந்ததை சொன்னார்.' கதயென்டா நல்லா இன்றஸ்ட்டாத்தான் இரிக்கி. கொடியேத்தப்போன ஆக்களக் காணயில்லயென்டு சனந்தேடும். வெளிக்கிடுவோம்' என்று மன்சூர் சொன்னதும் அனைவரம் எழுந்து சாரனை உதறி உடுத்திக் கொண்டு மலையில் இருந்து இறங்கத்தொடங்கினர்.


மலையடிவாரத்தில் என்ன பாவம் செய்ததோ பெரிய பெரிய அண்டாக்கள் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தன. கொதித்துக் கொண்டிருந்த தண்ணீருக்குள் போட்ட ஏலங்காவாசம் காற்றில் கலந்து நாசிக்குள் நுளைந்து அவர்களை வரவேற்றது.

***டந்தகால நினைவுகளில் சஞ்சரித்த ஜனாப்தீன் நிகழ்காலத்துக்கு வந்தார். இப்பொழுதும் அந்த ஏலங்காவாசனை அவர்மூக்கில் மணப்பது போன்று ஒரு பிரமை. ஒருமுறை சுவாசத்தை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டார். அது ஏக்கப்பெருமூச்சாக வெளியேறியது.


அழகும் ஆரவாரமும் கதையும் கலகலப்புமாக காட்சியளித்த கருமலையும்இபள்ளிவாசலும் அதன் வற்றாத அற்புத ஊற்றும் தற்பொழுது இராணுவத்தளமாக மாறியிருக்கிறது. பழாய்ப்போன யுத்தம் இப்படி எத்தனை சந்தோசங்களை புரட்டிப்போட்டு விட்டது.


இருந்தாலும் எப்படியாவது மௌத்துக்கு முன் ஒருதடவை கருமலையில் ஏறி அந்த அற்புத ஊற்றில் ஒலுவெடுத்து கருமலைப்பள்ளியில் தொழுதுவிட வேண்டுமென அவரது மனம் அடம்பிடிக்க ஆரம்பித்தது.-மூதூர் ஏ.எஸ்.உபைதுல்லா  

Sunday, May 6, 2012

கிண்ணியா : ஓர் இன்ப ஏமாற்றம்!தீப்பிடித்ததோ

டைனமைட் வெடி!

ஆனால்

நமத்துப்போனதோ

வதந்தி வெடி!

(Thanks : Picture courtsey  Kinniya net)

டந்த 4ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் கிண்ணியா பாலம் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் ஒரு அதிசய சம்பவம் நடைபெற்றதை ஊடகங்கள் மூலமாக அறிந்திருப்பீர்கள். 


தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமான  காணிக்குள் குழி ஒன்றைத் தோண்டிய போது அதற்குள்ளிருந்து தீச்சுவாலையுடன் பெருமளவு புகையும் கிளம்பியுள்ளது.


இதனால் குழியைத் தோண்டிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வெருண்டோடினர்.  அதனைக் கேள்வியுற்று பார்ப்பதற்காக பெருமளவிலே மக்கள் கூடியுள்ளனர். பின்பு தீச்சுவாலை விடயம் ஆண்களிடம் அல்லது பெண்களிடம் கூறப்பட்ட இரகசியம்போல சில நிமிடங்களுக்குள்ளே உலகம் முழுவதும் பரவிவிட்டது.


( நம்புங்கள் - உடனடியாகவே தொலைபேசியிலும் Face book உட்பட சமூகத்தளங்களிலும்  இணையத்தளங்களிலும் என்ன ஏது விபரம் என்று கெட்கத் தொடங்கி விட்டார்கள் )முதலில் ஒருவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை என்பது மட்டுமே இன்றுவரை 100%  சுத்தமான உண்மை. வேறுவார்த்தையில் சொன்னால், அதனையடுத்த நிமிடத்திலிருந்து 'உண்மை' அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டது.


இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு தனிமனிதரும் தங்கள்  மனப்பாங்கு, கேள்விஞானம் மற்றும் கல்வியறிவு  விசாலத்துக்கேற்ப பல்வேறுவிதமான யூகங்களை வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.


அதிர்ஷ்டவசமாக அந்த வேளை கிண்ணியாப் பாலத்தில் நின்றிருந்த சுற்றுலா நண்பர்கள் குழு ஒன்றுக்கு உடனடியாக அங்கு செல்ல முடிந்தது. அவர்கள் மூலம்  கிண்ணியாவில் கிடைத்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.


முதலில், கீழுள்ள தொலைபேசி உரையாடலைப் பாருங்கள்:


'அது ஒண்ணுங் இல்ல மச்சாங்! இவனொளு ஆக்கள் நெறையா அநியாய வேலையெல்லாம்.........(தணிக்கை)........ செஞ்சிரிக்கானொள் பாருங்க.. அதான் பாருங்க ரப்புநாயன் பத்தியொழும்ப வச்சிரிச்சான்....எச்சரிக்கை பண்ணிரிச்சான் மச்சாங்..இதுக்குப் பெறவும் திருந்தி நடக்காட்டி...' என்று தொடர்ந்தது பாலத்தில் எமது வாகனத்துக்கு அருகே சைக்கிளை நிறுத்தி நின்று பேசிய ஒரு சாதாரண பொதுமகன் ஒருவர்.'அது ஒண்ணுமில்ல பாருங்க இந்த எடம் பள்ளக்காணிதானே...முந்தி முந்தி நம்மட ஆக்கள் கெடந்த குப்பையெல்லாம் கொட்டினவனொளுதானெ...அதெல்லாம் உக்கி மெத்தேன் வாயு வெளியாவுது...அதுதான் பத்திரிச்சி...' என்றார் தனியார் டியூட்டரியில் விஞ்ஞானம் கற்பிக்கும் ஒரு இளைஞர்.


'இவனொள்தான் சும்மா என்னத்தையோ போட்டுப் பத்தவச்சுப்போட்டு பிலிம் காட்டுறானொள்...' என்பது ஒரு பாடசாலை பத்தாம் தரத்திலே கற்கும்மாணவியின் கருத்து என்றால்,


 60 வயது முதிய  பென்சனியர் ஒருவரின் எண்ணம் பின்வருமாறு உள்ளது:


'வாப்பா! இதெல்லாம் கடைசி காலத்துக்குரிய அடையாளந்தான்.. நம்ம மார்க்கத்தை சரியாக் கடைப்புடிச்சி நடந்தா எந்த கக்கிசமும் வராது. நம்மட பொண்டுவொளெல்லாம் டவுசர்போட்டுக்கிட்டு பைசிக்கில் ஓடிக்கிட்டுத் திரியுறதெல்லாம் அந்த ........க்கே பொறுக்கயில்ல அதான் இப்பிடியெல்லாம் முந்தி சுனாமியை உட்டான் இப்ப நெருப்பை உண்டாக்கிப் பயப்படுத்திறான்..''இது நம்மட பகுதியில எரிமலைக் குழம்பு வெளிவருவதற்கான அடையாளம்தான்.. ஏனென்டா கன்னியாவுல சுடுதண்ணி வருதெண்டா சும்மா வருமா? அப்படி என்னமோ இருக்கு...இனி கிண்ணியா திருகோணமலை ஏரியாவுலயிலயெல்லாம் சனம் இருக்கிறது ஆபத்துத்தான்..!' என்றார் ஒரு உயர்தரத்தில் புவியியலை ஒரு பாடமாக எடுத்தவரான முன்னாள் மாணவர் ஒருவர். (ஆனால் பெயரைக் குறிப்பிடப் போவதில்லை என்று சத்தியம் செய்தும் தனது புவியியல் பாடத்தின் பரீட்சைப் பெறுபேற்றைக் கடைசிவரை கூற மறுத்துவிட்டார் )


இப்படி ஒவ்வொருவரும் உண்மையான காரணங்களைப் பற்றிய சிறு அக்கறைதானும் இன்றி ஒவ்வொரு விதமான யூகங்களையும் நம்பிக்கைகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த இலவசசேவை சிறு தயக்கத்துடன் சூடுபிடிக்க ஆரம்பித்தவேளையில்தான்  கிண்ணியா பொலீசாரிடமிருந்து ஒரு தகவல் வெளியானது.

நீண்டகாலத்துக்கு முன்பு மீன்பிடிப்பவர்கள் புதைத்து வைத்திருந்த டைனமைட் வெடிமருந்துகளின் துகள்கள் கலந்த மண்ணே தீப்பற்றியது என்று உறுதியாகத் தெரிவித்தனர். இந்த 'டைனமைட்' உண்மை பற்றிய அறிவிப்பு நாடுமுழுவதும் செய்தியறிக்கைகளில் ஒளிபரப்பானதும் பலருக்கு மனம் தண்ணீரில் ஊறிய வெடிமருந்துபோல் சப்பென்றாகி விட்டது!


'சே! இந்த பொலீஸ்காரனொளே இப்படித்தான்! யுத்தம் முடிஞ்ச பொறவு  பரபரப்பான செய்தி ஒண்ணுமில்லாம இந்தச் சனமும்  ப்ரேக்கிங் நியுஸ்களில்லாமல் டீவிக்காரனொளும் 'டல்'லடிச்சுப்போய் கெடக்கிறதெல்லாம் இந்தக் காக்கிச்சட்டைக்காரனொளுக்கு எங்க தெரியப்போவுது...சே!  சரி கண்டுபுடிச்சதுதான் கண்டுபுடிச்சீங்க ஒரு ரெண்டு மூணுநாள் விஷயத்தை ஊறப்போட்டு வைத்திருந்தா என்ன கொறைஞ்சா போயிடும்? எவ்வளவு கஷ்டப்பட்டு அவனவன் மூளையைக் கசக்கி கற்பனைவளத்தைக் கூட்டி சனங்கள்ற  கவனத்தைக் கவருவதற்கு சாவுறான் என்டதெயல்லாம் யோசிக்காம இவனுகள் இவ்வளவு சீக்கிரமாக உண்மையைப்போட்டு ஒடச்சிப்போட்டானுகளே...!' என்று வேடிக்கையாக கவலைப்பட்டார் இளம் சட்டத்தரணி நண்பர் ஒருவர்.


அவர் கூறியதிலும் உண்மை இல்லாமலில்லை.
இன்னும் சில நாட்கள் காத்திருந்திருந்தால் சம்பவ இடமான கிண்ணியாவிலும் சூழவுள்ள இடங்களிலும் வேறு பிரதேசங்களிலும் இருந்து வந்திருக்கக்கூடிய சுவாரசியமான யூகங்களையும் கற்பனை வளங்களையும் இழந்துதான் விட்டோம் போலிருக்கின்றது.


இன்னும் இதை வைத்து நிகழ்ந்திருக்கக்கூடிய ஆன்மீக மிரட்டல்கள், உபன்னியாசங்கள், எதிர்வுகூறல்கள் மற்றும் லேசான பயமுறுத்தல்கள் போன்றவற்றைக்கூட சரிவர அனுபவித்திருக்காமல் ஒரு anti-climax ஆகிவிட்டதே என்ற சிறு ஆதங்கம் எனக்கும் இருக்கிறதுதான்.


ஒருமுறை, மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவிடம்,


'ஜோசியம், கைரேகை சாத்திரம், ராசிபலன், நியுமராலோஜி போன்றவற்றை நம்புகிறீர்களா?'


என்று வாசகர் ஒருவர் கேட்க அதற்கு அவர் தனக்கேயுரித்தான பாணியில் பதில் கூறி அவற்றைக் கிண்டலடித்து விட்டு கடைசியில் ஒன்று சொன்னார்:


' உண்மையில்லை என்றாலும் 'டல்'லடிக்கும் அன்றாட வாழ்க்கையை இப்படியான விடயங்கள் சுவாரசியப்படுத்துகின்றன '   
-மூதூர் மொகமட் ராபி