ஆற்றங்கரை!
ஆகாயக் கன்னியின்
அந்திநேர அலங்காரங்களில்
மனதைப் பறிகொடுத்த மஞ்சள் சூரியன்
அடங்காத சபலங்களோடு
அடிவானமெனும் அந்தப்புரத்திற்குள்
இறங்கிக் கொண்டிருக்கும்
ஓர் இனிய மாலைப்பொழுது!
***
ஓ!
அந்தத் தென்றல்
ஓர் நெடுநாள் நண்பன்போல
என்தோள்மீது கைபோட்டு
நேசமாய் கேசம் அளைந்து
குசலம் விசாரித்துச் செல்லும்!
***
என் கால்களின் கீழே..
துள்ளியோடும் பள்ளிச் சிறுவர்போல
ஒன்றையொன்று துரத்தி
ஓடிப்பிடித்து விளையாடும் கரையோர நீரலைகள்
என்பாதங்களிலே ஈரமுத்தங்கள் பதித்து
இரக்கத்தைக் கூறும்!
***
அடடா!
ஆற்றுநீர்ப்பரப்பிலே காற்றுத்தூரிகை வரையும்
கைரேகைகளைப் படித்து
மௌனச்சோதிடம் சொல்லத்தான்
காத்திருக்கின்றதோ
மரக்கிளையில் தவம்புரியும் மீன்கொத்தி?
***
அதோ!
கொடுக்குத் துப்பாக்கியுடன்
துடுக்கு நடைபோடும்
சின்னச்சின்ன சிவப்பு நண்டுச் சிப்பாய்கள்
எந்த நாட்டின் 'அமைதிகாக்க'
ஆற்றுமணல்மீது அணிவகுப்பு நடாத்துகின்றன?
-மூதூர் மொகமட் ராபி