சிவப்புக்கோடு!
அழகு மிகுந்தசேலைகட்டி
அதற்கு ஏற்ற பொட்டும் வைத்து
அரைநொடியில் முகம் திருத்தி
அவசரமாய்ப் பள்ளிசெல்லும்
உயிருள்ள இயந்திரம் நான்!
**
அதிகாலை கண்விழித்து
அரையிருட்டில் அடுப்பெரித்து
விடியும்வரை வாசல்கூட்டி
வெளிச்சம்வர கடைக்கு ஒடி
கட்டிலருகே தேனீர் வைத்து
கணவனைத் துயிலெழுப்பும்
கலியுகத்து நளாயினி நான்!
**
இரவிரவாய்க் குறிப்பெழுதி
இடதுகையால் தொட்டிலாட்டி
குழாய்நீரில் துணிதுவைத்து
குளிக்கும்போது அழுதுதீர்த்து
படியேறித்துணி உலர்த்தி
பாதம்நோக மடித்துவைக்கும்
பற்றரியில்லா ரோபோ நான்!
**
குழந்தைகளை வெளிக்கிடுத்தி
குழப்படிக்குப் பதில்கொடுத்து
அவசரத்தில் பவுடர் அப்பி
ஆட்டோவுக்குள் தலைசீவி
கடிகார முள்ளோடு
சதிராடிப் போராடும்
சாட்டையில்லாப் பம்பரம் நான்!
**
பசிவந்து வயிறுகிள்ள
பாணோடு பன்னும் வாங்கி
பாதியிலே கடித்து விழுங்கி
கதவோரம் செருப்புத்தேடி
தெருமுனையில் பஸ்பிடித்து
பந்தயத்துக் குதிரைபோலே
பாய்ந்துநானும் ஓடிவந்தால்.....
வருகைதரும் பதிவேட்டில்
இரக்கமின்றிச் சிரித்திருக்கும்- அந்த
இதயமில்லாச் சிவப்புக்கோடு!
-மூதூர் மொகமட் ராபி
II
இதுதான் கௌரவமா?
ஏற்றிவைத்த ஏணிகளுக்கு
தூசுதட்டும் நாளின்று
எரிந்து கரையும் தீபங்களுக்கு
ஓர் அவசரத் திருநாளின்று!
&&
நாட்கள் தோறும் மாறுசெய்து
வாரந்தோறும் வாட்டியெடுப்பீர்
தவணைமுறையில் தன்மானந்தீண்டி
ஆண்டு முழுவதும் மனம் சிதைப்பீர்
&&
ஏற்றிவைத்த ஏணிகளுக்கு
தூசுதட்டும் நாளின்று
எரிந்து கரையும் தீபங்களுக்கு
ஓர் அவசரத் திருநாளின்று!
&&
அத்தனையும் அழகாய்ச் செய்து
ஆண்டிலொரு நாளில் மட்டும்
தோள்வலிக்க மாலையிட்டு
தொடர்ந்து வந்து வாழ்த்துச் சொன்னால்
ஆசானுக்கு அதுதான் கௌரவமா?
&&
ஏற்றிவைத்த ஏணிகளுக்கு
தூசுதட்டும் நாளின்று
எரிந்து கரையும் தீபங்களுக்கு
ஓர் அவசரத் திருநாளின்று!
- Jesslya Jessly
No comments:
Post a Comment