Tuesday, September 30, 2014

சிறுவர் தினம் - 2014






காலம் மாறிப் போச்சு!







காலம் இப்போ மாறிப்போச்சு தோழா
காசுக்கெல்லாம் அடிமையாச்சு தோழா
சிறுவர் எங்கள் உரிமையெல்லாம் தோழா - வெறும்
ஒருநாள் கூத்தாய் ஆகிப்போச்சே தோழா!


ஓடியாட நேரமில்லை தோழா - எம்மை
ஓய்வில்லாமல் கொல்லுகின்றார் தோழா
பட்டி மாடு ஆட்டைப்போல தோழா - தினம்
காலை மாலை அடைக்கின்றாரே தோழா!


புத்தகப்பை பாரமாச்சு தோழா
பாலர் முதுகும் இங்கே கூனிப்போச்சு தோழா
பள்ளிச்செலவு கூடிப்போச்சு தோழா - ஆனால்
படிப்பின் நோக்கம் மாறிப் போச்சே தோழா..!


பள்ளிப்பாடம் கூடிப்போச்சு தோழா - ஆனால்
கல்வித் தரமோ இறங்கிப்போச்சு தோழா
பாடுபட்டு படித்தபோதும் தோழா - ஓர்
பலனும் அதிலே இல்லையடா தோழா!


கோயில் வாசல் உண்டியலோ தோழா - எங்கள் தலை
குப்பை நிறைக்கும் தொட்டியாமோ தோழா
வாழும் கலை சொல்லிடாமல் தோழா - வெறும்
ஏட்டுச்சுரைக்காய் சமைக்கின்றாரே தோழா..?


தேடிக் கற்கும் நாளும் வந்தால் தோழா - கல்வி
தேனைப்போல இனிக்குமேடா தோழா
வேறு எதுவும் வேண்டாமடா தோழா -முதலில்
எம் கட்டுகளை அவிழ்க்கச் சொல்லு தோழா!


-மூதூர் மொகமட் ராபி