ஒரு பத்திக்கு அல்லது கட்டுரைக்குத் தலைப்பாக இலக்கங்களை இடுவது இதற்கு முதல் நடந்திருக்கின்தோ தெரியவில்லை. ஆனால் இதைத் தவிர இந்த பத்திக்கு வேறு எதையும் தலைப்பாக இட நான் விரும்பவில்லை.
"அதுசரி, இந்த இலக்கத்திற்கு என்ன அர்த்தம் ?"
என்று கேட்கின்றீர்களா..?
அதற்காக நீங்கள் 1996ம் ஆண்டுக்கு சென்று திரும்ப வேண்டும்.
ஆம், 1996ம் ஆண்டு.
அதுவரையில் ஏனைய அணிகளால் ஏறத்தாழ ஒரு கற்றுக்குட்டி அணியாகவே கருதப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் அணி உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டு அனைவரின் புருவங்களையும் உயர்த்தச் செய்த ஆண்டு அது !
அதுமட்டுமல்ல.. உலகக்கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தவரான அதிரடித் துடுப்பாட்ட வீரர்
Sanath Jayasuriya ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் நடந்த ஒரு சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 48 பந்துகளில் சதமடித்து சாதனை நிகழ்த்தியிருந்த வருடமும் அதுதான்.
அதே 1996ம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் கென்யாவிலே இலங்கை, பாகிஸ்தான், கென்யா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும்
Sameer Four Nations Cup எனும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் சுற்றுப்போட்டி நடந்து கொண்டிருந்தது.
அதேவேளையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டிகளுக்காக கரீபியன் தீவுகளிலே தங்கியிருந்தது பாகிஸ்தான் இளைஞர் அணி. அந்த அணியின் முகாமையாளருக்கு இரவு 2 மணியளவிலே கென்யாவில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகின்றது...
சுழல் பந்து வீச்சாளர்
முஸ்தாக் அஹமட் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதால் இளைஞர் அணியிலிருந்து சுழல்பந்து வீச்சாளர் ஒருவரை உடனடியாக கென்யாவுக்கு அனுப்பி வைக்குமாறு அணியின் முகாமையாளர் கேட்டுக்கொண்டார். அவரும் உடனடியாக மறுநாள் காலையில் தமது அணியிலிருந்த ஓர் சுறுசுறுப்பான இளைஞனை விமானத்தில் நைரோபிக்கு அனுப்பி வைத்தார்.
அந்த இளைஞன் நைரோபி மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் அணியின் ஜாம்பவன்களான அணித் தலைவர் சயீட் அன்வர், வக்கார் யூனுஸ், ரமீஜ் ராஜா, இஜாஸ் அஹமட், ஆகியோருடன் இணைந்து கொண்டான்.
இந்த இளைஞன் இணைந்து கொண்ட பின்பு பாகிஸ்தானுக்கு கென்ய அணியுடன் போட்டி இருந்தது. அது ICC யின் 1123 வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். அதுவே அந்த இளைஞனுக்கு அறிமுகப்போட்டியும் கூட.
அந்தப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற கென்ய அணி துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்திருந்தது. ஆகவே முதலில் பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்காக அந்த இளைஞனும் பந்து வீசும் வாய்ப்பைப் பெற்றான். தனது 10 ஓவர்களிலே வெறும் 32 ஓட்டங்களை மட்டும் கொடுத்திருந்தான். ஆயினும் விக்கட் எதனையும் பெறமுடியவில்லை. ஆனாலும் அதே போட்டியில் தன்னைப் போலவே மற்றுமொரு அறிமுக வீரராக ஆடிய கென்யா அணியின்
Tony Suji, சக்லைன் முஸ்தாக்கின் பந்து வீச்சில் வழங்கிய பிடியெடுப்பை எடுத்து ஆட்டமிழக்கச் செய்திருந்தான். அதைத் தவிர அந்தப் போட்டியில் வேறு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் நிகழவில்லை.
கென்ய அணியின் 148 எனும் இலகுவான இலக்கை துரத்திய பாகிஸ்தான் 41 ஓவரில் ஆறுவிக்கட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றதால் துடுப்பாட்ட வரிசையில் 7வது நிலையிலிருந்த அந்தப் புதிய இளைஞனுக்கு தன் அறிமுகப்போட்டியில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்த நாள் : அக்டோபர் 4ம் திகதி...
நடைபெறவிருந்த போட்டி மிகவும் முக்கியமானது. ஆம், பாகிஸ்தான் அணி மிகவும் வலுவான நிலையிலிருந்த உலகக்கிண்ணச் சாம்பியன் இலங்கை அணியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நடந்து முடிந்த போட்டிகளின் முடிவுகளின்படி தென்னாபிரிக்க அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது. இதனால் இறுதிப்போட்டியில் தெ.ஆபிரிக்க அணியை எதிர் கொள்வது இலங்கை அணியா அல்லது பாகிஸ்தான் அணியா என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாகவும் அது இருந்தது.
பாகிஸ்தான் அணி இறுதியாட்டத்திற்குள் நுழைவதானால் இரு வழிகள் மட்டுமே இருந்தன.
1. முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கை அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும்.
அல்லது
2. இலங்கை அணி விதிக்கும் இலக்கைத் துரத்துவதானால் போட்டியை 50 ஓவர்கள் வரை காத்திருக்காமல் ஒரு குறிப்பிட்ட ஓவர்களுக்குள் அதனை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் அதிரடியாக ரன்கள் குவித்தால் மட்டுமே இறுதியாட்டத்தை சந்திக்லாம் என்ற பெரும் நிர்ப்பந்தமிருந்தது.
அதேவேளை அணியிலுள்ள எல்லோருமே அதிரடியாக ஆட ஆரம்பித்தால் அதற்கேற்றபடி விக்கட்டுகளையும் விரைவாக இழக்க வேண்டி வரலாம் என்பதால் இதற்காக என்ன செய்யலாம் என்று குறித்த போட்டிக்கு முதல் நாள் நிகழ்ந்த வலைப் பயிற்சியின் போது அணித் தலைவர்
சயீட் அன்வர் யோசனையிலாழ்ந்திருந்தார்.
அப்போது அவருக்கு கரீபியன் தீவிலிருந்து வந்த அந்தப் புதிய இளைஞனின் மீது பார்வை சென்றது. அணியின் பயிற்சி ஆட்டத்தில் பந்து வீச்சுப் பயிற்சிக்காக இந்த இளைஞனை சிறிது நேரம் துடுப்பாடச் செய்திருந்தார்கள். அப்போது தமது அணியின் அத்தனை வீச்சாளர்களின் பந்தையும் அவன் அநாயசமாக அடித்து விளாசிக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்தார்.
அவர் மனதிலே ஒரு திட்டம் உருவானது.
அக்டோபர் 04, 1996 :
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. போட்டிக்காக தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வந்திறங்கினார்கள் பாகிஸ்தான் அணியினர். நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி பந்துவீசத் தயாரானது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது பாகிஸ்தான் அணி.
தலவைர் சயீட் அன்வரும் சலீம் எலாஹியும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி ஆடிக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானை அதிக ஓட்டங்கள் எடுக்கவே விடக்கூடாது என்பதையுணர்ந்து வெகு இறுக்கமான களத்தடுப்புடன் மிக நேர்த்தியாக பந்து வீசிக் கொண்டிருந்தார்கள் இலங்கை வீரர்கள். அதனால் ஓவருக்கு 4 அல்லது 5 ஓட்டங்கள் என்ற சராசரியைத் தாண்ட முடியாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள்.
அதேவேளை தனது முதலாவது சர்வதேச துடுப்பாட்டத்தை ஆடுவதற்காக உடைமாற்றும் அறையில் தனது கால்காப்புகளைக் கட்டிக்கொண்டு வக்கார் யூனிசின் துடுப்பை வைத்துக் கொண்டு சில துடுப்பாட்ட நுணுக்கங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த 16 வயது மட்டுமே நிரம்பிய புதிய இளைஞன்.
பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை 60 ஆக இருந்த 10 வது ஓவரிலே சலீம் எலாஹி 23 ஓட்டத்துடன் குமார தர்மசேனவின் பந்து வீச்சில் முரளிதரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து திரும்பினார்.
இப்போது அந்த இளைஞன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு களமிறங்கத் தயாராகின்றான்.
சக வீரர்கள் அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பி வைக்க களத்தில் ஆட்டமிழக்காது நின்றிருக்கும் அணித் தலைவருடன் இணைந்து கொள்வதற்காக மைதானத்தினுள் இறங்கி சூரியனைத் திரும்பிப் பார்த்து விட்டு நடக்கின்றான்.
இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போவதை அறியாதவர்களாக சனத் ஜயசூரிய உட்பட இலங்கை அணியினர் வெகு சாதாரணமாக அவனைப் பார்த்தவாறு அடுத்த பந்து வீச்சுக்குத் தயாராகின்றனர்.
மறுமுனையில் நின்றிருக்கும் சயீட் அன்வர் அவனிடம் ஏதோ கூறிவிட்டு தோளிலே தட்டி உற்சாகப்படுத்திவிட்டு நகர்கின்றார். புதிய துடுப்பாட்ட வீரனைப் பதற்றமடையச் செய்து அவுட் செய்வதற்காக சுற்றிலும் களத்தடுப்பை இறுக்கமாக்குகின்றனர் இலங்கை வீரர்கள்.
முதலாவது பந்து வீச்சை தடுத்தாடுகின்றான்.
இரண்டாவது பந்துவீச்சை வெகு அநாயாசமாக தூக்கியடிக்க பந்து மைதானத்திற்கு வெளியே போய் விழுகின்றது. இதை எதிர் பாராத பந்து வீச்சாளர் அடுத்த பந்தை யோக்கர் பந்தாக வீச அதை தடுத்தாடி ஒரு ஓட்டம் பெறுகின்றான். அடுத்த பந்தை வேகமாக கட் செய்து அடிக்க அது பவுண்டரியாகின்றது.
அதன் பிறகு இலங்கை அணிக்கு நடந்த கதைதான் முக்கியம்!
ஆம், இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனா ரணதுங்கவுக்கு அங்கு என்ன நடக்கின்றது என்பது புரியவே வெகுநேரமானது. புதிய இளைஞன் இலங்கை அணியின் பந்து வீச்சைத் துவம்சம் புரிய ஆரம்பித்தான். சிக்ஸ்களும் பவண்டரிகளும் அடுத்தடுத்துப் பறந்தன.
சட்டெனச் சுதாரித்துக்கொண்ட இலங்கையணி, இருக்கும் பந்து வீச்சாளர்களையெல்லாம் அடுத்தடுத்து மாற்றிப் பார்த்தது.
ஆனால் பாவம் அத்தனை முயற்சியும் காட்டாற்று வெள்ளத்திற்கு கடற்கரை மணலில் கட்டிய அணைபோலானதுதான் மிச்சம்.
வேகமென்றாலென்ன சுழலென்றாலென்ன சகலருக்கும் ஒரே சிகிச்சைதான்.
Six.. four... six... four.... six என்று
boundaries மழை பொழியவாரம்பித்தது.
சிக்ஸர்களுக்குப் பறந்த பந்துகளையெல்லாம் கார் பார்க்கிற்குள் சிறுவர்கள் தேடித்தேடிப் பொறுக்க ஆரம்பித்தார்கள்.
தொலைக்காட்சியில் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பலருக்கு ஒன்றுமே புரியவில்லை. நாம் பார்ப்பது
நேரடி ஒளிபரப்பா அல்லது நடந்து முடிந்த ஆட்டமொன்றின்
ஹைலைட் நிகழ்ச்சியா என்று சந்தேகம் வரத் தொடங்கியது.
18வது பந்திலே 50 வது ரன்னை எட்டியவன் 37 வது பந்திலே 101 ரன்களை எடுத்து இதோ இன்று 2013 ஆண்டு வரையிலே 17 வருடங்களாக இன்னும் கூட முறியடிக்கப்படாதிருக்கும் உலக சாதனையை நிகழ்த்தினான்.
50 நிமிடங்களில் மொத்தமாக 40 பந்து வீச்சுகளையும் எதிர்கொண்டவன் சர்வதேச சதத்தை மிக இளம் வயதிலே (16 வருடங்கள் 217 நாட்கள்) பெற்ற வீரனாகவும் அந்த நேரத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய சிக்ஸர்கள் (11) எனும் சாதனையைச் சமப்படுத்திய துடுப்பாட்டக்காரனாகவும் மிளிர்ந்தான்.
அன்று தனது முதலாவது இன்னிங்ஸில் உலக சாதனையை முறியடித்து அணியை இறுதியாட்டத்திற்கு நுழையச் செய்த அந்த அழகிய துறுதுறுப்பான 16 வயது அந்த இளைஞன் அன்றைய உலகச் சம்பியன் இலங்கை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சையும் எப்படித் துவம்சம் செய்தான் என்பதைத்தான் மேலே நீங்கள் தலைப்பிலே காணும் இலக்கங்கள் வரிசையாக காண்பிக்கின்றன.
"அதுசரி, அந்த இளைஞன் யார் ?" என்று அப்பாவித்தனமாகக்
கேட்பவர்களுக்காக மட்டும் இதைக் கூறுகின்றேன்:
அந்த இளைஞன் பாகிஸ்தான் அணியின் அதிரடி,
Shahid Afridi!
தவிர, வேறு யாராக இருக்க முடியும்..?
0610400600661166264400661411041606024100
Note:
Sameer Four Nations
Cup, sixth qualifying match
PAKISTAN v SRI LANKA
Toss: Sri Lanka.
Sensational batting by
teenage leg-spinner Shahid Afridi swept Pakistan into the final. He was
promoted to No. 3 - he had not batted in his only previous international - and
dashed to a hundred in 37 balls, 11 fewer than the limited-overs international
record set by Jayasuriya against Pakistan in Singapore six months earlier. He
was said to be 16 years 217 days old, but he looked older, and the ages of
several established Pakistani players had recently been challenged. His
brilliance was not in dispute. In all, he scored 102 from 40 balls, with 11 sixes
(equalling Jayasuriya's record) and six fours, out of 126 for the second
wicket.
The full innings was : 0610400600661166264400661411041606024100.
He took
41 off the 11 balls he faced from Jayasuriya, whose ten overs went for 94,
though he also managed three wickets. The ground was not especially small, and
most of the sixes went into the car park, anyway. They would have been sixes
almost anywhere. Nor were they slogs; it was an exhibition of wonderful clean
hitting. After Afridi was out, Saeed Anwar scored a more sedate 115 from 120
balls and Pakistan galloped to 371, the second-highest total ever scored in a
one-day international. Sri Lanka had little hope of winning, but could still
reach the final ahead of Pakistan on net run-rate if they scored 290. When
Waqar Younis reduced them to 27 for four, that looked unlikely. But Aravinda de
Silva scored an intelligent, unflustered 122 from 116 balls, sharing century
stands with Ranatunga and Dharmasena. Sri Lanka entered the final over, from
Waqar, needing 11 to qualify; Vaas hit a six and a four, then was bowled with
one ball remaining.
Man of the Match : Shahid Afridi.
Thanks: Cricinfo
- Jesslya Jessly