Monday, January 16, 2012

ரயிலே... ரயிலே... ஒருநிமிடம்!







இரயில் சிநேகிதிகள்!





'நாளை நமதே' என்று ஓர் பழைய எம்ஜியார் படம் அல்லது பழைய அமிதாப் காலத்து  ஹிந்திப்படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும். வில்லனால் சிறுவயதில் திசைக்கொன்றாய் பிரிந்துபோன சகோதரர்கள் கடைசியில் மேடையில் குடும்பப் பாட்டு ஒன்றைப் பாடித்தான் ஒன்று சேர்வார்கள்.


சரிதான், அதற்கும் இந்தப் பத்திக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது என்று கேட்கிறீர்களா? இல்லாமலா எழுதப்போகின்றேன்... இதுவும் ஒரு பிரிவு பற்றிய கதைதான். ஆனால் பிரிந்தவர்கள் சகோதரர்களல்ல; நண்பர்கள்!

இது நடந்து ஏறத்தாழ 20  ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் பின்னிரவு மழையில் நனைந்த பூமியாய் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இன்னும்  மனதிலே ஈரமாகவேதான் இருக்கின்றது.
\
இதை நான் இப்போது எழுதுவதற்குரிய காரணமும் இந்தத் தொடரின் தலைப்பும் ஒன்றுதான். ஆம்! அது  என்றைக்கோ தவறவிட்டுவிட்ட எனது சிநேகிதிகள். 'அபியும் நானும்' என்ற திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்வார், 'நிகழ்கால நிகழ்ச்சிகள்தானே எதிர்காலத்தில் இனிமையான நினைவுகளாகின்றன' என்று.


அது உண்மைதான்!


1991ல் 'மீண்டும் தனது தோழிகளைச் சந்திக்கலாம்தானே' என்று அவன் அலட்சியமாக இருந்ததன் விளைவை இன்றுவரை பிரிவு என்னும் இதய வலியாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.


ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல்சார்ந்த ஈர்ப்பைத் தவிர வேறு உறவுகள் உருவாக முடியாது என்று சூடம் கொளுத்திச் சத்தியம் செய்யும் நமது கீழைத்தேய சமூகத்தில் எனது சிநேகிதிகளுக்கும் அவனுக்குமிருந்த நட்பை நான், நீங்கள், சமூகம் எல்லோரும் எப்படிப் புரிந்து கொள்வோம்?

அன்றைக்கு இளம் யுவதிகளாக இருந்த அவர்கள் இப்போது குறைந்தது நடுத்தரவயது பெண்மணிகளாகி மனைவிகளாகவும் தாயாகவும் மாறியிருப்பார்கள். இயல்பாகவே குடும்பச்சூழல் காரணமாக கணவர் தொடங்கி குழந்தைகள்பராமரிப்பு வரை ஒரு குடும்பப்பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலையில் ஆண்களைப்போல கடந்தகால நட்புகளை நினைத்துப் பார்க்கவே நேரமிருக்காது.


அபூர்வமாக நேரமிருந்தாலும் கூட இவ்வாறான நட்புகளைத் தொடர்ந்து பேணுவதில் இருக்கும் சமூகக் காரணிகள் அவற்றை அனுமதிப்பதில்லை. ஆயினும் சிறுவயதிலே எப்போதோ எடுத்துக்கொண்ட ஓர் புகைப்படத்தை வெகுகாலம் கழித்துப் பார்க்கும்போது ஏற்படும் ஒருவித பரவச உணர்வுகள், பதின்வயதில் கேட்டு இரசித்த பாடல் ஒன்றை இப்போது கேட்கும்போது மனதிலே நிழலாடும் இனிய நினைவுகள்  இந்த பத்தியை வாசிக்க நேர்ந்தால் அவனது இனிய சிநேகிகிதிகளுக்கும் தோன்றலாம்.


நம்மோடு கூட இருப்பவருக்குக் காண்பிப்பதற்குள்ளே கணத்தில் மறைந்துவிடும் ஒரு நடுநிசி வால்வெள்ளி போல இதைப் படித்துவிட்டு பிறருக்குச் சொல்லாமலே இரசித்துவிட்டு மறந்தவிடலாம் தோழிகளே - உங்களால் முடிந்தால்!
 


அது 1991ம் வருடம். அப்போது அவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் (விஞ்.) பிரிவு மாணவன். முந்தைய ஆண்டில் வடகிழக்கு முழுவதும் தலைவிரித்தாடிய வன்செயல்களினால் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்வதிலே இருந்த சாத்தியமான உயிராபத்தை கருதி கொழும்பு அல்லது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் கோரிப் போராடிக் கொண்டிருந்த காலம் அது.


இடமாற்றம் பெறுவதிலேயிருந்த தாமதம், நம்பிக்கையீனம் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயர்கல்வியைத் துறந்துவிட்டு அரசாங்கத் தொழில் ஒன்றில் நிரந்தரமாக இணைந்துவிடலாமா என்று மனம் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் பாதையில் மிக முக்கியமான முடிவை தாமதிக்காமல் எடுத்தேயாக வேண்டிய புள்ளியில் அவன் இருந்த காலம் அது. இதனால் அவ்வப்போது கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்றுவரவேண்டியிருந்தது அவனுக்கு.


அவ்வாறு ஒருதடவை அவன் ரயில்வண்டியில் கொழும்பு சென்று கொண்டிருந்தான். அந்த நாட்களிலே திருகோணமலையிலிருந்து மாலையில் புறப்படும் ரயிலில் ஏறினால் கல்லோயாச் சந்தியில் இறங்கி மட்டக்களப்பிலிருந்து வரும் இரவு தபால் வண்டிக்குக் காத்துக்கிடந்து ஏறினால்தான் கொழும்புப் பயணம் செய்யலாம். அதுவும் சிலவேளகளில் மட்டக்களப்பிலிருந்து வரும் புகையிரதத்தின் பயணிகள் பெட்டியில் கூட்டம் நிரம்பி வழியும் அப்போதெல்லாம் நிற்பதற்குக் கூட இடம்போதாமலிருக்கும்.



அன்றும் கல்லோயாச் சந்தியில் வந்து நின்ற ரயிலிலில் கூட்டம் கதவுகள் வரை பிதுங்கி நின்றது. வழமையாக ரயில் நின்றால் சும்மாவேனும் புகையிரத மேடையில் இறங்கிவிட்டு ஏறும் ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் கூட 'எங்கே இறங்கினால் வேறுயாரும் இடத்தைப் பிடித்துவிடுவார்களோ' என்ற பயத்தில் அன்றிரவு தேன்கூட்டில் மொய்த்திருக்கும் தேனீக்களைப்போல இறங்காமல் ஒட்டியிருந்தார்கள்.


ஒவ்வொரு கதவாய் தேடியலைந்து எப்படியோ ஒருவழியாய் பயணிகள் பெட்டியினுள் எறிவிட்டான். முதுகில் தொங்கிய தோள்பையுடன் நின்றுகொண்டிருக்கும் பயணிகளைக்கடந்து உட்செல்வதே பெரும்பாடாக இருந்தது. வழிமுழுவதும் "Excuse-me" க்களை தாராளமாக வாரியிறைத்து ஒருவாறு ஓரளவு நெருக்கடி குறைந்த இடத்தில் போய் நின்று கொண்டான்.




அது ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியின் கடைசி இருக்கையுடன் சேர்ந்தவாறுள்ள ஒருமுனை என்பதால் வழியில் நிற்பதே சற்றுச் சிரமமாக இருந்தது. அவனும் இன்னும் சில இளைஞர்களும் கால்கள் வலிக்க நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகிலிருந்த இருக்கையில் ஆறு அல்லது ஏழு இளம் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒன்றாக வந்திருப்பவர்கள் போலத் தோன்றியது.


இளைஞனான அவனது பார்வை இயல்பாக அவர்களை நோக்கி செல்லும் போதெல்லாம் அந்த இளம் பெண்களின் பார்வைகளுடன் எதேச்சையாக உரசிக் கொண்டது. அவர்கள் ஒன்று சேர்ந்து அவனையே பார்ப்பது போலிருந்தது  உண்மையா அல்லது பிரமையா என்று அவனுக்குத் தெரியவில்லை. அதனால் மெல்லிய கூச்ச உணர்வுக்குள்ளாகி தனது பார்வை வேறுபுறமாகத் திருப்பிக்கொள்ள முயன்றான். ஆனால்  அவர்கள் தன்னைப் பாரக்கிறார்களா என்று திரும்பிப் பார்க்கத்தோன்றியது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நின்றிருந்தான்.

இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் அந்த நள்ளிரவில் இருளைக் கிழித்தபடி விரைந்து கொண்டிருந்தது  இரவுத் தபால் வண்டி.
அப்போது ரயில்வே காவலர்கள் பயணச்சீட்டுகளைப் பரிசோதித்துக் கொண்டுவந்தனர். அதனால் இருக்கையிலிருந்தவர்கள் சற்று எழுந்து சீட்டுகளைக் காட்டிவிட்டு மீண்டும் தங்களுக்கிடையில் இடம்மாற்றிக் கொண்டு அமர்ந்தனர், அந்த இளம்பெண்கள்.



சிறிது நேரத்தில் அவனது தோள்பையை பின்னாலிருந்து யாரோ தட்டுவது போலிருக்கத் திரும்பிக் கீழே பார்த்தான். அந்த இளம்பெண்களில் ஒருத்தி சிரித்தவாறு தனக்குப் பக்கத்தில் சிறு இடத்தை அவனுக்காக   ஒதுக்கி அதிலே அமருமாறு சைகை செய்தாள். அவன் லேசாகத் தயங்கியபோது எதிரில் நின்றிருந்தவர்களிலே யாரோ அந்த இடத்தைக் குறிவைக்கவே சட்டென அந்த இடத்தில் இருந்துவிட்டான்.


நன்றி சொல்லிவிட்டு அவன் அமர்ந்தாலும் உண்மையில்  அவனும் சேர்ந்து உட்கார்வதற்கு அந்த இருக்கை போதாது. ஆனால் அது 'மனமிருந்தால்...' என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட இடம் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய புத்திசாலித்தனம் தேவைப்பட்டிருக்கவில்லை அவனுக்கு.  தான் தயங்கிய வேளையிலே எதிரில் நின்ற வேறொரு இளைஞன் இதே இருக்கைக்கு முண்டியடித்தபோது இடம்தந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் அவன் காணத்தவறவில்லை. (Contd...)





-'Mutur ' Mohammed Rafi