Sunday, June 23, 2013

அபாயாவும் நிக்காபும் இலங்கைக்கு பொருத்தமற்றதா?ஜாஃப்னா முஸ்லீம் இணையத்தளத்திலே அண்மையிலே சர்ச்சைக்குரிய நேர்காணல் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. 'அபாயாவும் நிக்காபும் இலங்கை (முஸ்லீமகளுக்கு)க்குப் பொருத்தமற்றது' என்பதே அதன் தலைப்பு. அதனை எழுதியிருந்தவர் கலாநிதி அமீர் அலி அவர்கள். இவர் அவுஸ்திரேலிய முர்டொச் பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளராவார். முன்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல்துறை விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர்.
இலங்கையிலே பௌத்தமத அடிப்படைவாதிகளால் முஸ்லீம்களின் வணக்கத்தலங்கள் ஆடைகள் மற்றும் மாட்டிறைச்சியுண்ணும் பழக்கம் போன்ற விடயங்கள் கேள்விக்கும் சர்ச்சைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் இந்தக் கட்டுரையிலுள்ள கருத்துக்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இக்கட்டுரை ஜாஃப்னா முஸ்லீம் இணையத்தளத்திலே வெளியான ஜுன் 21ம் தினத்திலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்கும் 23ம் திகதி அதிகாலை வரையில் மட்டும் இக்கட்டுரையை விமர்சித்து 59 பின்னூட்டங்கள் வாசகர்களால் இடப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை கலாநிதியின் கருத்துகளுக்கு காட்டமான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. அவற்றில் சில அவரைத் தனிப்பட்ட ரீதியிலும் தூற்றுவதாகவும் அவர்மீது சேற்றை வாரியடிப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

வெகுசிலர் மட்டும் அவரது கருத்துகளை நிபந்தனைகளுடன் அல்லது பகுதியளவில் ஆதரித்து எழுதிவருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவரது கருத்தை ஆதரிப்பவர்களுக்கும் அதனைக் காட்டமாக எதிர்ப்பவர்களுக்கும் இடையிலே சுவையான விவாதங்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
அந்த வாதப்பிரதிவாதங்களிலே சிலவற்றை கீழே தருகின்றேன்...

(எழுத்துப் பிழைகள் மட்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளனவே தவிர மொழிநடை மற்றும் வாக்கிய அமைப்புகள் எதுவும் மாற்றப்படவில்லை) :

0 ஊரிலுள்ள பள்ளிகளிலெல்லாம் பாங்கு சொல்லத்தேவையில்லை ஒன்றிரண்டு பள்ளிகளில் சொன்னால்போதும் என்று கூறும் நீங்கள் பிறந்த ஊரில் (காத்தான்குடி) ஒவ்வொரு மின்கம்பங்களிலும் ஒலிபெருக்கி வைத்து அதான் சொல்லும் நடைமுறை பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

 –புவி றஹ்மத்துல்லாஹ் 21.6.1013 19:380 சகோதரர் பொறுப்பற்றமுறையில் எதுவித இஸ்லாமிய அடிப்படையுமற்றவர்போல் கூறியிருப்பது கவலையளிப்பதாகவும் வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
உங்களது கூற்று முஸ்லீம்களை மலினப்படுத்துவதாகவும் தனிமனித சுதந்திரத்திற்கு ஊறுவிளைவிப்பதாகவும் உள்ளது. வேற்று மதத்து சகோதரர்களும் அரசியல் தலைவர்களும் முஸ்லீம்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும்போது நீர்!! அதுவும் பெயருக்கு முன்னால் ஒரு கலாநிதியையும் போட்டுக்கொண்டு இப்படித் தறுதலையாகப் பேசுவதை நிறுத்திக்கொள்வது உமக்கும் நல்லது சமூகத்துக்கும் நல்லது.


 – குருவி 22.06.2013 00:44


0 கலாநிதிக்கு சரியாக இஸ்லாம் தெரியாது போலும் தேவையென்றால் சொல்லித் தாரோம்

-இஹ்ஸான் ஹஸீம் 22.06.2013 3:59


0 கலாநிதி அமீர்அலி அவர்கள் இதுவரைகாலமும் இல்லாத அளவில் என் முஸ்லீம் பெண்கள் அபாயாவும் நிகாபும் அணிகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவை முஸ்லிம் உடைகள் என்றால் இதுவரை இலங்கை முஸ்லிம் பெண்கள் அபாயாவும் நிகாபும் அணியாமல் இஸ்லாத்திற்கு விரோதமாகவா வாழ்ந்தார்கள்?
இந்தோனேசியாவில் வாழும் முஸ்லீம்கள்  அபாயாவும் நிகாபும்
அணியாதபடியால் அவர்கள் முஸ்லீம்கள் இல்லையா?

-க்ரிட்டிக் 22.06.2013 7:32


0 திரு. அமீர் அலி அவர்கள் கூறிய கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடுகள் இல்லாதபோதிலும் இத்தனை வெளிப்படையாக நமது இஸ்லாமிய விடயங்களை அவர் துணிந்து அலசியிருப்பதை நிச்சயம் வரவேற்கவே வேண்டும்.


ஒரு பண்டமோ கருவியோ செயன்முறையோ சித்தாந்தமோ அல்லது வேதாந்தமோ  அது எவ்வளவுதான் புனிதமானது என்று மாய்ந்து மாய்ந்து போற்றப்பட்டாலும் இன்றைய உலக நடைமுறைகளுக்கு ஒவ்வாததாக இருக்குமாயின் அது சமூகத்திலிருந்து சத்தமேயில்லாமல் மறைந்துவிடும். காலப்போக்கிலே அருங்காட்சியத்திலோ அல்லது வரலாற்று ஆவணங்களிலோ வேண்டுமானால் அவற்றை தூசுதட்டி அடுத்த தலைமுறையினரின் பார்வைக்கு வைத்திருக்க முடியும்.


இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும்.
இலங்கை போன்ற பல்லின மக்கள் ஒன்றாகச்; சேர்ந்து வாழும் நாடுகளை ஒரு சவூதி அரேபியாவாகவோ அல்லது ஈரானாகவோ மானசீக கற்பனை செய்தபடி இஸ்லாமிய கடும் கோட்பாடுகளை மக்கள் மீது நிர்ப்பந்தித்துக்கொண்டு வாழ முடியாது.தவிரவும் அரேபியப் பாலைவனத்தில் தோன்றிய இஸ்லாம் அனைத்து கலாசாரத்தையும் பின்பற்றும் மக்களுக்கும் முழுமையாகப் பொருந்திப்போகும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. பல அம்சங்கள்  அறவே பொருந்தாதபோதிலும் அவற்றை விடாப்பிடியாக நிர்ப்பந்திக்கவும் மூர்க்கமாக வலியுறுத்தவும் நினைக்கும்  இஸ்லாமியக் கடும் கோட்பாட்டாளர்களுக்கு இறுதியில் ஏமாற்றங்களே காத்திருக்கும்.


இதற்கு கலாநிதி அமீர்அலி அவர்களின்  இலங்கையிலே நிலவும் தற்போதைய குழப்பமான சூழல் பற்றிய இந்தக் கட்டுரையும் இதற்குக் கிடைத்துவரும் நாகரீகக்குறைவான பின்னூட்டங்களுமே முதற் சகுனம்.

–ஜெஸ்லியா ஜெஸ்லி  22.06.2013  9:47


0 அவுஸ்திரேலியாவில் ரூபட் மேடொக் எனும் பிரபல சியோனிசவாதியின் பல்கலைக்கழகத்திலே பணிபுரியும் இக்கலாநிதி அண்மையில் ஜாமியுல் பலாஹ் அரபுக்கல்லூரிக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஜாமியுல் பலாஹ் அரபுக்கல்லூரி பல உலமாக்களை உருவாக்கி இஸ்லாத்தை அதன்தூய நிலையில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச்செய்துவரும் ஒரு பிரதான நிறுவனமாகும்.

பேராசிரியர் அமீர் அலி அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தவறுகள் விடக்கூடிய சராசரி மனிதன்தான் என்று அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியதுடன் அவுஸ்திரேலியாவில் உள்ள பிரபல உலமாக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்.

எனவே இவ்வாறான இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான செய்தியை வெளிப்படையாக வெளியிட்ட ஒருவர், நபி(ஸல்) அவர்களிடம் இறைவனுடைய நேரடி வழிகாட்டலின்கீழ் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஒரு முழுமையான மனிதர் என்ற அடிப்படைக்கருத்தை ஆழமாக விதைத்துவரும் ஒரு இஸ்லாமியக்கல்வி நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது எம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

 – மெஹிதீன் அகமட்லெப்பை 22.06.2013 9:57

0

Mr. Mohideen Ahamed Lebbe,

கலாநிதி அமிர்அலி அவர்களது கருத்துகள் தொடர்பாக எனது பின்னூட்டத்துடன் இதுவரை வெளியிடப்பட்டுள்ள பின்னூட்டங்களிலே உங்களுடையதுதான் ஓரளவு பண்பாகவும் நாகரீகமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதனால் பதில் கூற விரும்புகின்றேன்.

கலாநிதியாகி ஒருவர் பணிபுரியும் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர் ஒரு சியோனிசவாதி என்ற தகவல் மட்டுமே அவரையும் அவரது கருத்துக்களையும் நிராகரிப்பதற்கு போதுமானதா..?

அப்படிப் பார்த்தால் நம்மில் எத்தனையோ இஸ்லாமியர்கள் முஸ்லீம்களை துச்சமாக எண்ணும் போக்குடைய பிற மதத்ததைச் சேர்ந்தவர்களைத் தலைவர்களாகவும் மேலாளராகவும் கொண்ட அமைப்புகளிலும் நிறுவனங்களிலும் பணிபரிகின்றார்கள். அதற்காகவே அவர்களது சிறந்த கருத்துக்களை நீங்கள் ஒதுக்குவீர்களா என்ன?

முஹம்மது (ஸல்) அவர்கள் தவறுகள் புரியக்கூடிய சராசரி மனிதன்தான் என்பதை அவர்களே பல தடவை தனது வாழ்க்கைக் காலத்தில் ஏற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா?

ஒருமுறை பேரீத்தம்பழ விளைச்சலை அதிகரிப்பதற்காக பேரீத்தம் பூக்களை செயற்கையாக மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த அரபிகளைப் பார்த்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்தார்கள்.


அதன்படியே விட்டுவிட, அவ்வருடம் விளைச்சல் மிகவும் பின்னடைவானது. நஸ்டமடைந்த அரபிகள் வருத்தத்துடன் நபி(ஸல்) அவர்களிடம்  வந்து வினவியபோது, "அதனை நான் ஒரு தூதராக உங்களுக்கு கூறவில்லை. சராசரி மனிதனாகத்தான் எனது அபிப்பிராயத்தை சொன்னேன். சராசரி மனிதனாக நான் கூறுவதெல்லாம் இறை கட்டளையாகாது. எனவே நீங்கள் மீண்டும் உங்கள் வழமையான முறையில் விளைச்சலைப் புரியலாம்" என்றார்கள்.

இதைப்போல பல சம்பவங்களைச் சொல்ல முடியும்.

பொதுவாக முஸ்லீம்களாகிய நாம் அனைவருமே உளரீதியாக ஒருவிதமான ஆன்மீக மாயைகளினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றோம். அது எம்மை அறிவுபூர்வமாக செயற்படுவதிலிருந்து காலம் காலமாக விலக்கியே வைத்திருக்கின்றது.

கதாநாயகிக்கு வில்லனால் ஆபத்து நேரும்போது எப்படியும் கதாநாயகன் வந்து காப்பாற்றுவான் என்று காத்திருக்கும் எம்ஜியார் காலத்து தமிழ்சினிமா ரசிகர்களைப்போல ஆன்மீகத்தைப் பற்றிய பிம்பங்களை அளவுக்கு மீறி ஊதிப்பெருப்பித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றோம்.
அவற்றை யாராவது துணிந்து சுட்டிக்காட்டினால் கண்ணை மூடிக்கொண்டு வெகுண்டெழுந்து சேறுபூசி நமது பலவீனங்களை மறைக்க முயற்சிக்கின்றோம்.


ஆனால் இவையெல்லாம் எத்தனை காலத்திற்கு?

-ஜெஸ்லியா ஜெஸ்லி  22.06.2013  15:50


(தொடரும்)

குறிப்பு: கலாநிதி அவர்களின் நேர்காணல் கட்டுரையை முழுமையாக வாசிப்பதாயின் பின்வரும் தளத்திற்கு செல்ல முடியும்: www.jaffnamuslims.com