Thursday, January 22, 2015

முட்டை அப்பமும் செத்த கிளிகளும்Note: ஜனாதிபதித்தேர்தல் ஆரம்பித்த வேளையில் நான் பரீட்சை ஒன்றுக்காக மும்முரமாக ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தேன் அத்துடன் என்னுடைய  தளமும் செயலிழந்திருந்த காரணத்தால் அந்தநேரத்தில் கிடைத்த ஆக்கங்களையும் பதிவு செய்ய முடியாது போனது. இனியாவது அவற்றை பிரசுரிக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை பதிவு செய்கின்றேன்.-Jesslya Jessly


 
முட்டை அப்பமும் செத்த கிளிகளும்'அரசியல் பத்திகள் எழுதுவதை நிறுத்திவிடலாமா?' என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி தேர்தல் களம் திடீரென
சூடுபிடித்திருக்கின்றது.

'என்னை எதிர்த்து பேட்டியிடப்போகும் பொதுவேட்பாளரை காண நான் ஆவலாக இருக்கின்றேன்.. இன்னுமா நீங்கள் அவரைத் தெரிவு செய்யவில்லை?' என்று கிண்டலும் கேலியுமாக எதிர்க்கட்சிகளைப் பார்த்து கொக்கரித்துக் கொண்டிருந்தார் ஆளுந்தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. ஆனால் தேர்தல் அறிவிப்பினை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திட்டு வெளியிட்ட அன்று மாலையே அவருக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

சிறுவர்களுக்கான டொம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூண் படங்களிலே எலியை விடாமல் துரத்தும் பூனைக்குத் தலையில் விழும் எதிர்பாராத தாக்குதலையும் அதனைத் தொடர்ந்து அதன் தலைப்பகுதி புடைத்து எழுவதையும் நாம் பார்த்திருப்போம். அது போலவே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பிலும் விழுந்தது ஒரு அதிர்ச்சிக்குட்டு.

கேலிபேசியபடி ஜனாதிபதி தேடிய அந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வேறுயாருமல்ல.


வடக்கு மாகாணசபை நீங்கலாக தொடர்ச்சியாக 29 தேர்தல்களை ஆளும்தரப்பு வென்றெடுக்க காரணமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலருமான சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்கள்தான் ஜனாதிபதியின் நேரடிப்போட்டியாளாராக திடீர் அவதாரம் எடுத்திருந்தார்.இது நமது ஜனாதிபதியை மட்டுமல்ல சகலரையும் அதிர்ச்சியிலாழ்த்தியிருக்கின்றது.

தோசையைப் புரட்டிப்போட்டதுபோல சட்டென மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையை சுதாரித்துக்கொள்ள முடியாமல் திணறினார்கள் ஆளும் தரப்பினர். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி அறிவிப்பை எப்படி எடுத்துக்கொள்வது அதற்கு எப்படியான தூண்டற்பேற்றைக் காண்பிப்பது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தடுமாறியவர்களாக ஏதேதோ உளறிக்கொட்ட ஆரம்பித்தனர்.

ஆயினும் அதிர்ச்சியில் இருந்து அனைவரும் மீள்வதற்கிடையில் பல காரியங்கள் நடந்து முடிந்துவிட்டிருந்தன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் ராஜித சேனரத்ன, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுடன் இணைந்து ஊடகங்களை வரவழைத்து தனது அதிரடி முடிவை அறிவித்ததோடு ஜனாதிபதி தரப்பினரின் குடும்ப ஊழல் ஆட்சியையும் சர்வாதிகாரப்போக்கையும் விமர்சித்தார் மைத்திரிபால சிறிசேன. அத்துடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து மக்களுக்கான நல்லாட்சியை உருவாக்கப்போவதாகவும் தெரிவித்தார் அவர்.

தான் மற்றும் அமைச்சர் ராஜித சேனநாயக்க போன்றவர்கள் ஆளும் தரப்பிலிருந்து வந்தபோதிலும் மகிந்தரின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான போராட்ட மனோநிலையுடன் பொருமியவாறே இருந்து வந்ததாக குறிப்பிட்ட மைத்திரிபால தங்களைப்போலவே பல அமைச்சர்கள் இன்னும் இருந்து வருவதாகவும் கூறினார். முன்பெல்லாம் அமைச்சரவையைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதி அண்மைக்காலமாக தனது குடும்ப உறுப்பினர்களின் முடிவுகளை கைச்சாத்திட்டு அங்கீகரிக்கும் இயந்திரமாக மாத்திரம் அமைச்சரவையை மாற்றியிருப்பதாக வேதனையுடன் கூறினார்.

உள்ளிருந்து போராடுவதிலே இனிமேலும் பலனில்லை என்பதால் நாட்டு மக்களின் நலன்கருதி ஒருகட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க வின் இணக்கப்பாட்டுடன் இந்த ஊழல் மிகுந்த மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சியைத்தகர்த்தெறியத் தீர்மானித்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. அதற்கு ஒத்துழைத்து பெரும் தியாகம் ஒன்றைப் புரிந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

அமைச்சர் மைத்திரி கொடுத்த 30,000 மெகாவாட் மின்சார அதிர்ச்சியில் வெலவெலத்துப்போனார் ஜனாதிபதி. அவர் அதுபற்றி உடனடியாகத் தெரிவித்த கருத்தானது அதனை தெளிவாகத் தெரிவித்தது. அதுவரை அவர் தன்னைப் பற்றி நேரடியாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கட்டமைத்திருந்த கனவான் பிம்பத்தை தகர்த்தெறிந்தது.

ஜனாதிபதி கூறினார், 'ரணிலுக்கு இப்போது இரண்டு மைத்ரிகள். வீட்டிலொரு மைத்ரியும் வெளியில் ஒரு மைத்ரியும் இருக்கிறார்கள்'

வீட்டில் இருப்பதாகக் கூறியது ரணிலின் பாரியாரை. அவரது பெயரும் மைத்ரி என்றே ஆரம்பமாகின்றது. பாருங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அதுவும் தேசத்தின் பெருமதிப்பிற்குரிய முதல் பிரஜை தனது சகபோட்டியாளரைப்பற்றி எத்தனை தரம் தாழ்ந்த கூற்றை வெளியிட்டுள்ளார் என்று.அதிலிருந்து ஆரம்பமானதுதான் மைத்திரி மீதான ராஜபக்ஷ விசுவாசுகளின் சேறுபூசல்கள். அவர் துரோகம் செய்து விட்டார், ஜனாதிபதியைக் காட்டிக்கொடுத்து விட்டார் என்றும் வெளிநாட்டுச் சதியிலே அவர் விழுந்துவிட்டார் என்றும் மழைக்காலத் தவளைகளாக கூச்சலிட்டார்கள். ஜனாதிபதியோ, முதல் நாளிரவு தன்னுடன் ஒன்றாக அமர்ந்து முட்டை அப்பம் சாப்பிட்டவரான மைத்திரி மறுநாள் காலையில் எதிர்ப்புறத்திற்குச் சென்றுவிட்டதாக கூறி அவரை 30 வெள்ளிப்பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

முன்னம் ரணில் விக்கிரமசிங்கதான் பொதுவேட்பாளராக போட்டியிடுவார் என்பதை யூகித்து வைத்திருந்த ஆளும் தரப்பினரும் ஆதரவாளர்களும் மைத்திரியின் அதிர்ச்சி வைத்தியத்தில் நிலைகுலைந்து போயுள்ளனர். இலட்சக்கணக்கான பணத்தை இறைத்து ரணிலை மக்கள் மத்தியில் மலினப்படுத்தும் விதமாக முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளும் பதாதைகளும் இறுவட்டுக்களும் பயனின்றி வீணாகிப்போனதே என்ற ஆதங்கமும் அதற்கு காரணமாம். அதுமட்டுமல்ல, அவசர அவசரமாக மைத்திரியைச் சேறுபூசும் சுவரொட்டிகளைத் தயாரிப்பதற்கும் போதிய அவகாசமும் அவர்களுக்கு இல்லாது போனது.

ஆனால் அதற்கிடையில் மைத்திரியோ ஆளும் தரப்பினரின் அடிவேரையே அசைக்க ஆரம்பித்துவிட்டார். அமைச்சரவை முடிவுகள் முதற்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் வரை எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பவற்றையெல்லாம் மக்கள் முன்னே புள்ளி விபரங்களுடன் போட்டுடைத்தார் மைத்திரி. மக்கள் விரோத ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் நல்லாட்சியை நிறுவுவதை நோக்காகக் கொண்டே தான் தனக்கு நிகழ்வதற்குச் சாத்தியமான உயிராபத்தையும் பொருட்படுத்தாது அரசைவிட்டு வெளியேறி வந்திருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஏற்கனவே விலகிச் சென்றிருந்த ஹெல உருமய கட்சியும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் தங்களது ஆதரவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு தெரிவித்தன. அதுவரை தேர்தல் வெற்றி குறித்த இறுமாப்பில் திளைத்திருந்த ஆளும் தரப்பு முதன்முறையாக கதிகலங்க ஆரம்பித்தது. பொதுச்செயலாளரை இழந்துவிட்ட நிலையில் அரசதரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக எதிர்க்கட்சிக்கு தாவ ஆரம்பித்தது எரிந்த புண்ணில் உப்புத்தடவியது போலாயிற்று.

இத்தனை களேபரங்களுக்கும் மத்தியில் ஜேவீபி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் நடப்பவற்றை அவதானித்தபடி அமைதிகாத்து வந்தது. ஜேவீபிக்கு எந்தக்காலத்திலும் ஐக்கிய தேசியக்கட்சியைக் கண்ணில் காண்பிக்கக்கூடாது. மகிந்தரின் ஊழல் அரசை வீழ்த்தவேண்டும் எனும் அவசியம் அந்தக்கட்சிக்கு இருந்த போதிலும் அதற்காக ஐ.தே.க வை நேரடியாக ஆதரிக்க அது விரும்பவில்லை. ஆகவே முன்பெல்லாம் வெறுமனே ஆளும் தரப்பை கடுமையாக விமரிசிப்பதையே அது முழுமூச்சாக செய்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அரசியல் அரங்கில் திடீரென ஏற்பட்ட மாறுதல் ஜேவிபீ கட்சியையும் உற்சாகங்கொள்ள வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே இந்த ஜனாதிபதித் தேர்தலே சட்டவிரோதமானது என்று கூறி ஒதுங்கியிருக்கத் தீர்மானித்திருந்த அக்கட்சி தற்போதைய நிலைமையை கவனித்து 'ஏகாதிபத்திய மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்துவோம்' என்ற கோஷத்தை முன்வைத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது மைத்திரியை முன்னிறுத்தி நல்லாட்சிக்காகப் போராடும் எதிர்க்கட்சிகளின் பொது அமைப்புக்கு மறைமுகமாக தனது ஆதரவை வழங்க ஆரம்பித்துள்ளது.

ஆரம்பத்தில் மக்களிடம் வெற்றி நிச்சயம் என்று முழங்கி வந்த ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் தொடர்ச்சியான கட்சித்தாவலையும் மைத்திரிக்கு கிடைத்து வந்த மக்கள் ஆதரவையும் பார்த்தபின்பு சுதியை மாற்றி, தாம் தோல்வியடைந்தால் நாட்டில் என்ன நிகழும் என்று புலம்ப ஆரம்பித்திருப்பது போலத் தெரிகின்றது.  அவர்களது புலம்பல்களிலே புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மகிந்தரும் ராணுவ அதிகாரிகளும் ஐ.நா வின் சர்வதேச விசாரணைக்குழுவால் போர்க்குற்ற விசாரணைக்காக கொண்டு செல்லப்படுவார்கள் என்பதுதான் பிரதான விடயமாக உள்ளது. இது தவிர, நமது நாடு இறைமையை இழந்து மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்க வேண்டிவரும், பாரிய செலவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீதி அபிவிருத்தி மற்றும் கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிடும் போன்றவையும் அடக்கம்.

ஆனால் ஆளும் தரப்பின் இந்த யூகங்களுக்கெல்லாம் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு. மைத்திரிபால சிறிசேன, தான் ஜனாதிபதியானதும் மகிந்த ராஜபக்ஷவையோ அவரது ராணுவ அதிகாரிகளையோ சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் இன்றைய அரசின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஊழல் களைந்து மூன்று மடங்கு வேகத்துடன் செய்யப்போவதாகவும் தெளிவான பதிலடிகளை வழங்கியுள்ளார்.

இதனால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஆளும் தரப்பினர் பல்வேறு உபாயங்களைக் கையாள ஆரம்பித்திருக்கின்றமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதில் ஒன்றுதான் எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிசபை உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு இழுத்தெடுக்கும் முயற்சிகளாகும். இதற்காக பெருந்தொகையான நிதி பரிமாறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆளுந்தரப்பு மாத்திரமல்ல எதிர்த்தரப்பினரும் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப்பல் எனும் பழிவாங்கல் பாணியில் ஐ.தே.க வின் பொதுச்செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்கவை தமது பக்கத்திற்கு எடுத்துக்கொண்டார்கள். ஆளும் தரப்புக்குத் தாவியதும் சொல்லிவைத்தாற்போல அதுவரைகாலமும் தானிருந்த தரப்பினரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் அத்தநாயக்க.
இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், திஸ்ஸ அத்தநாயக்கா ஐ.தே.க வை விட்டு ஆளும் தரப்புக்குத் தாவியதை எவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான். சிலர் 'ஒழிந்தது பீடை' என்று வெளிப்படையாகவே பேசியதும் குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ சமகாலத்தில்தான் கொலன்னாவையைப் பிரதிநிதிப்படுத்தும் மேல்மாகாணசபை ஆளும்தரப்பு உறுப்பினரான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் எதிர்த்தரப்புக்கு தாவியிருந்தார். உடனே, 'செத்தகிளியை ஆளும்தரப்புக்குக் கொடுத்துவிட்டு பஞ்சவர்ணக்கிளியை அல்லவா வாங்கியிருக்கின்றார்கள்' என்று மேற்குறித்த இருவரது தாவலையும் ஒப்பிட்டு மக்கள் வேடிக்கையாகப் பேசலானார்கள்.

தவிர, ஏராளமான தேர்தல்களில் தொடர் தோல்வி கண்ட ஐ.தே.க வின் செயலாளராக இருந்து அந்தத் தோல்விகளுக்கு விளக்கமளித்து விளக்கமளித்தே அனுபவம்பெற்றவரான திஸ்ஸ அத்தநாயக்காவை இம்முறை ஆளும் தரப்பினர் வாங்கியிருப்பதற்கு எதிர்கால அர்த்தமுள்ளது என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகின்றது.அவை ஒருபுறமிருக்க ஒருகாலத்தில் புலிகளை ஒழித்துக்கட்டியதன் மூலம் நாட்டு மக்களின் மனதிலே ஒரு சாகச நாயகனாக உயர்ந்திருக்கும் இன்றைய ஜனாதிபதியின் சேவைகளையும் நாம் மறந்துவிட முடியாது. இதை நம்ம மறுப்பவர்கள் இறுதியுத்தத்தின்போது சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளை துணிச்சலாக எதிர்கொண்டு நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் மகிந்த ராஜபக்ஷ போல வேறு எந்தத் தலைவராவது நிலைநாட்டியிருக்க முடியுமா என்று உங்;களுக்குள் ஒருதடவை கேட்டுப்பார்த்துக் கொள்ளலாம்.

அதுமாத்திரமல்ல வர்த்தகத் தலைநகராம் கொழும்பு நகரை உயர்ந்த தரத்தில் அழகுற அபிவிருத்தி செய்தமை, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை துரிதமாக அபிவிருத்தி செய்து பயணநேரத்தை குறைத்தமை, வடக்கு வசந்தம், கிழக்கின் உதயம் போன்ற திட்டங்கள் மூலம் யுத்தத்ததால் சிதைந்து கிடந்த பிரதேசங்களை புனர்நிர்மாணம் புரிந்துமை என்று அவரது சேவைகளைக் கூறிக்கொண்டே செல்லலாம்.

அதேவேளை இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் நாட்டின் தலைவர் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக இன்று தன்னுடைய தரப்பு உறுப்பினர்களையே தக்கவைத்துக்கொள்ள முடியாதளவு தடுமாறிப்போனமைக்குரிய காரணங்களையும் நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தாக வேண்டும்.

நாட்டின் தீராத் தலைவலியாக இருந்து வந்த தீவிரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டிருந்த போதிலும் அந்த தீவிரவாதம் முளைத்துக் கிளம்பியதற்குரிய அடிப்படைக்காரணங்களை அரசு புரிந்து கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதற்குரிய தீர்வுத் திட்டங்களை முன்வைத்து செயற்படுவதற்குப் பதிலாக வெறும் சலுகைகளையும் அபிவிருத்திகளையும் மட்டுமே வழங்கி திருப்திப்படுத்தி விடலாம் என்று கருதிச் செயற்பட்டு வருகின்றது.

தவிர, வடக்கு மற்றும் கிழக்கிலே சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலே முன்னர் அங்கு ஒருபோதுமே வசித்திராத பெரும்பான்மை மக்களை இராணுவத்தின் அனுசரணையுடன் திட்டமிட்ட விதத்தில் குடியேற்றிக் கொண்டிருகின்றமை.சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்களின் மீதும் அவர்களின் மத தலங்கள் மற்றும் வியாபார நிலையங்களைக் குறிவைத்து கடும்போக்காளர்களும் சமூகவிரோதிகளும் இணைந்து திட்டமிட்டு நடாத்தி வருகின்ற பல தாக்குதல்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அல்லது கண்டும் காணாமல் நடந்து கொள்கின்றமை.

ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மீது நடாத்தப்படும் அடக்குமுறை மற்றும் உரிமைக்காக அமைதியாகப் போராடும் மக்கள் அமைப்புகள் மீதான இராணுவ அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றமை. ஆளுந்தரப்பு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட சுதந்திரமாக இயங்க முடியாத வகையில் மறைமுகமாக அழுத்தும் ஜனாதிபதியின் குடும்ப ஆதிக்கம்.

யுத்தம் முற்றாக நிறுத்தப்பட்டு பலவருடங்களாகிவிட்ட போதிலும் அதன் பலனை இன்னும் அனுபவிக்க முடியாதிருக்கும் மக்களை விலைவாசி உயர்வு, வரிச்சுமைகளால் வெறுப்பேற்றுகின்றமை.

வரலாற்றில் என்றுமில்லாத அளவில் வெளிநாட்டுக்கடன் பெறப்பட்டு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவற்றிலே பெருமளவில் ஊழல் நிறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் ஆதாரபூர்வமாக தெரிவித்து வருகின்றமை.

இவ்வாறான பல காரணங்களால்தான் இன்று மகிந்த ராஜபக்ஷவின் அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இதுவே மகிந்த ராஜபக்ஷ இன்றைய தேர்தலில் எதிர்கொள்ள வேண்டிய மிகவும் சவாலான விடயங்களாக இருந்து வருகின்றன.இதேவேளை சிறுபான்மை மக்களை பிரநிதித்துவம் புரியும் கட்சிகளின் நிலைமைகள் இன்னும் கவலைக்கிடமாகவே இருந்து வருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே யாருக்கு வாக்களிப்பது என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டமைதான். ஆனால் அவர்களை வழிநடத்துவதாக பாசாங்கு செய்து கொண்டிருக்கும் கட்சிகள்தான் வரலாற்றில் என்றுமில்லாதளவு குழப்பத்தில் மூழ்கி தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இன்றைய நாளில் முதற்கட்ட தபால் வாக்களிப்பு கூட ஆரம்பித்துவிட்டது. ஆனால் இன்றைய தினம் வரை தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில்தான்  தமிழ், முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் புரிந்துவரும் சில கட்சிகள் இருந்து வருகின்றன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இதுவரை தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை. நாட்டின் முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானோரை பிரதிநிதித்துவம் புரியும் ஒரு பொறுப்புவாய்ந்த கட்சியானது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மிகச் சிக்கலான அரசியல் சூழ்நிலையில் அதுவும் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் இவ்வாறு தடுமாறிக்கொண்டிருப்பதானது வேடிக்கையானது மட்டுமல்ல மலினமானதும் கூட. இனிமேல் முஸ்லீம் மக்கள் குறித்த கட்சிக்கு வழங்கும் ஆதரவையும் மறுபரிசீலனை புரியவேண்டிய தேவையையும் இது உண்டாக்கியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க முடியாதிருப்பதற்கு தனித்தனியே வௌ;வேறு காரணங்களிருப்பது போலத் தோன்றுகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகத் தெரிவித்தால் ஆளும்தரப்பினருக்கு ஆதரவான சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் அதை மக்களிடையே பகிரங்கபடுத்தி அரசியல் இலாபம் பார்த்து விடுவார்கள் என்பது ஒன்றும் மறைமுகமான விடயமல்ல.

முஸ்லீம் காங்கிரஸினருக்கு மகிந்தருக்கு தலையையும் மக்களுக்கு வாலையும் காட்டும் விலாங்குமீன் வேலை பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது.

அதாவது பெரும்பான்மையான நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் இன்றைய நிலையில் எதிர்த்தரப்பு பொதுவேட்பாளர் வெற்றிபெற்றால் தமது மக்களும் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருப்பதை சுட்டிக்காட்டி புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் ஒட்டிக்கொள்ளலாம். மாறாக, மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டாரானால், 'ஐயா, நாங்கள் கடைசிவரை உங்களோடுதானே இருந்தோம்' என்று கூறி வழக்கமான பதவி சலுகைகளோடு அமோகமாய் இருந்துவிடலாம்.

இப்படி ஒரு நப்பாசை அவர்களுக்கு.

அதேவேளை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனாதிபதி தரப்பினர் தேர்தல் விதிகளுக்கு முரணான விதத்தில் அரச வளங்களையும் மக்களின் வரிப்பணத்தையும் மட்டுமல்லாது தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகளையும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொண்டிருப்பதையெல்லாம் பார்க்கும்போது இந்தத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்து முடியுமா என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது.

எது எவ்வாறாயினும் வாக்களிப்பிற்கு ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கப்போவது திருவாளர் பொதுஜனமே.


-மூதூர் மொகமட் ராபி 
(2014.12.23)