Saturday, June 22, 2013

"நான் எதற்கும் பயப்படவில்லை!"எட்வார்ட் சினோவ்டென் இருபத்தொன்பதே வயதான திறமைமிக்க இளைஞன்.சீ. சி.ஐ.ஏ இன் முன்னைநாள் தொழில் நுட்ப உதவியாளர். இப்போது அமரிக்க பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான பூஸ் அலென் ஹமில்டன் நிறுவனத்தில் உயர்ந்த ஊதியத்தில் வேலைபார்பவர். இன்றைய திகதியில் ஒசாமா பின்லாடனிலும் அதிகமாக அமரிக்க அரசால் தேடப்படுபவர். எந்த நேரத்திலும் அமரிக்க அரசு கைது செய்து தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கலாம் என்று ஊடகங்கள் ஒரே கருத்தில் தெரிவிக்கின்றன.
 
அமரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக வேலைபார்த்த ஸ்னோவ்டென், அமரிக்க பாதுகாப்பு சபையின் வெளி நாட்டு ஒப்பந்தக்காரர்களான டெல் கொம்பியூடர்ஸ் நிறுவனத்திலும் வேலைசெய்திருக்கிறார்.
 
இன்று உலகம் முழுவதும் ஒருவரைப்பற்றி அதிகமாகப் பேசுகிறது என்றால் அது எட்வார்ட் ஸ்னொவ்டென் ஐத் தவிர வேறு யாருமில்லை.
 
மனிதர்கள் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ‘புரட்சிசெய்யும்’ இணையத்தளங்கள் அமரிக்கரான ஈழத்தமிழரைப் பற்றிப் பெருமையடித்துக்கொண்ட அவமானகரமான செய்தி வெளிவந்த ஒரு சில நாட்களிலேயே அமரிக்காவின் உள்ளிருந்தே முளைத்த மனச்சாட்சியுள்ள மனிதன் ஸ்னோவ்டன்.
 
ஈழத்தமிழர் கண்டுபிடித்த இரவுப் பார்வை தொழில் நுட்பம் தான் ஒசாமாவைக் தேடிப்பிடித்து கொலைசெய்து அமரிக்க ‘ஜனநாயகத்தை’ நிலை நாட்ட உதவியது என்று பெருமையடித்துக் கொண்டன புலம்பெயர் ‘அரசியல்’ இணையங்கள்.
 
அமரிக்க அரசியல் வரலாற்றில் அதிக அளவான இரகசியத் தகவல்களை ஆதாரபூர்வமாக மக்கள் முன் வெளிக்கொண்டுவந்தவர் என்ற பெயர் ஸ்னோவ்டனையே சாரும் என்று பிரித்தானிய கார்டியன் பத்திரிகை கூறுகிறது.
 
உலகின் ஒவ்வொரு மூலையிலும் இரத்தம் வழிந்தோடுவதற்கும், மனிதர்கள் சாரிசாரியாகக் கொல்லப்படுவதற்கும், ஜனநாயகத்தின் பெயரால் மனிதர்கள் அழிக்கப்படுவதற்கும், நாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கும், வளங்களைச் சுரண்டி ஒருசில பணக்காரக் குடும்பங்கள் கொழுத்து வெடிப்பதற்கும் அமரிக்க அரசு மிக நுணுக்கமாக ஒவ்வொருவரையும் கண்காணித்துவருகிறது. இதற்கான பொறிமுறையை மில்லியன்கள் செலவில் செயற்படுத்தி வருகிறது.
 
மனிதர்களது அடிப்படைச் சுதந்திரத்தையும் உரிமைகளையும் ஒரு சிறு மூலைக்குள் முடக்கிவைத்திருக்கிறது. வியாபாரம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கும், சுந்தந்திரமாகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கும், மனிதர்களை நுகர்வுப் பண்டங்களாக விற்பனை செய்வதற்கும் மட்டுமே சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியாக மனிதர்களாக வாழ்வதற்கான சுந்ததிரம் பறித்தெடுக்கப்பட்டுவிட்டது.
 
கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள், பேஸ்புக் தொடர்பாடல்கள், கூகிள் தேடல்கள், மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை எவ்வாறு செயற்படுகின்றது என்பதை அதற்காக வேலைசெய்த ஸ்னோவ்டென் தனது மனச்சாட்சியின் உந்துதலால் வெளியேறி அம்பலப்படுத்தினார்.
 
 
‘எனக்குத் தெரிந்தவரை நான் எனது செயல்களுக்காக துன்பப்படுத்தப்படுவேன் என்பதை அறிந்து தான் இதனைச் செய்கிறேன்’ என்று முதலாவது தொகுதி ஆவணங்களை வெளியிடும் போது அவர் எழுதிவைத்தார்.மேலும் தொடரும் அவர்,
 
 
‘நான் நேசிக்கும் இந்த உலகை ஆள்கின்ற நிறைவேற்று அதிகாரமுடைய, எதிக்கமுடியாத, மன்னிக்கமுடியாத அதிகாரம், இரகசியச் சட்டங்கள், குறைந்தது ஒரு கணமாவது அம்பலப்படுத்தப்படுமானால் அதற்காகத் திருப்தியடைவேன்’ என்று கூறுகிறார்.
இதற்கு மேலும் தொடரும் அவரின் மக்கள் மீதான பற்று வெளிப்படுகிறது. ‘ஊடகங்களைக்கு அதிகமாக என்னை வெளிப்படுத்தி என்னைப்பற்றி ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கிப் பேசுவதை விரும்பவில்லை, அமரிக்க அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது குறித்து ஊடகங்கள் பேசட்டும்’ என்று கூறுகிறார்.
 
நான் எதற்கும் பயப்படவில்லை ஏனென்றால் இது நானே தெரிவுசெய்துகொண்ட முடிவு என்று கூறுகிறார்.
ஹவாயில் அமைந்துள்ள அமரிக்கத் தேசியப் பாதுகாப்பு மையத்திலேயே இவர் இறுதியாக வேலைபார்த்துள்ளார். அங்கு வெளிப்படுத்த விரும்பிய இறுதித் தகவல்களையும் பதிவு செய்துகொள்கிறார்.
 
பின்னதாக தான் மருத்துவ விடுமுறையில் செல்லப்போவதாகத் தனது மேலாளரிடம் கூறி அனுமதி பெற்றுக்கொள்கிறார். தனது காதலியிடம் சில நாட்களுக்கு தான் வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று விடைபெற்றுக்கொள்கிறார். மே மாதம் 20ம் திகதி ஹொங்கொங் நாட்டில் வந்திறங்கிய ஸ்னோவ்டன் இன்றுவரை அங்கேயே தங்கியிருக்கிறார்.
 
ஹொட்டேல் அறையொன்றில் தங்கியுள்ள ஸ்னோவ்டென் அங்கிருந்த மூன்று வாரங்களில் மூன்று தடவையே வெளியில் சென்றுவந்ததாகக் கூறுகிறார்.
 
 
 
 
ஜனநாயகம் குறித்தும் சுதந்திரம் குறித்தும் அமரிக்க அரசின் போலிப் பிரச்சாரங்களை நம்பிய ஸ்னோவ்டென் 2003 ஆம் ஆண்டு மேற்படிப்பை முடித்துக்கொண்டு ஈராக்கிய மக்களை ‘விடுதலை’ செய்ய வேண்டும் என்று அமரிக்க இராணுவத்தில் இணைந்து கொள்கிறார். அவர் எண்ணியதற்கு மாறாக பயிற்சியளித்தவர்கள் அரேபியர்களை எப்படிக் கொலைசெய்வது என உந்தப்பட்டவர்களாகவே காணப்பட்டனர் என்று கூறும் ஸ்னோவ்டென் பயிற்சியின் போது கால்களில் ஏற்பட்ட விபத்தினால் அங்கிருந்து வெளியேறுகிறார்.
 
தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக இணைந்து கொள்ளும் ஸ்னோவ்டன், கணணியில் இயல்பாகக் காணப்பட்ட திறமை காரணமாக கணனி பாதுகாப்பு தொழில் நுட்பப் பிரிவில் அமரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இல் வேலைக்குச் சேர்ந்து கொள்கிறார்.
 
2007 ஆம் ஆண்டு ஜெனிவாவிலுள்ள சி.ஐ.ஏ இன் பிரிவில் வேலைசெய்வதற்காக சுவிஸ் நாட்டிற்கு அனுப்பப்படுகிறார். அங்கு கணனி நெட்வேர்க் இற்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார்.
 
அப்போது சி.ஐ.ஏ இன் பல்வேறு ஆவணங்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது.
 
அவர் சுவிஸ்லாந்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது சி.ஐ.ஏ ஒரு வங்கி முகாமையாளரை தனது உளவாளியாக இணைத்துக்கொள்ள முற்படுகிறது. முதலில் அவரை மதுபான சாலைக்கு அழைத்து அவருக்கு அதிகமாக மதுபானத்தைப் பருக ஊக்கப்படுத்திய பின்னர் அவரது காரிலேயே விட்டுக்குச் செல்லுமாறு ஊக்கப்படுத்தினார்கள். அவர் குடிபோதையில் காரைச் செலுத்தினார் எனக் கைதானதும் அதிலிருந்து விடுவித்து தொடர்பை ஏற்படுத்தி பின்னர் சீ.ஐ.ஏ இல் சேர்த்துக்கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தைப் பார்த்ததும் தனது அரசு எப்படி நடந்துகொள்கிறது. என்ற விம்பம் உருவாகியதாகக் குறிப்பிடுகிறார்.
 
நானும் இந்த வலைப்பின்னலில் ஒருவானாக வேலை செய்கிறேன் என்ற மனச்சாட்சி அவரை உறுத்துகிறது. சி.ஐ.ஏ இலிருத்து தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு 2009 ஆண்டு மாற்றமடைந்து சென்ற ஸ்னோவ்டென் ஜப்பானில் தனது பணியை ஆரம்பிக்கிறார். அங்கும் அதே நிலை தொடர, ஒபாமா ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்படும் என நம்புகிறார்.
எந்த மாற்றங்களும் நிகழவில்லை.
 
அடுத்த மூன்று வருடங்களில் அமரிக்க அரசு தனது உளவு நிறுவனங்களூடாகத் தனது சொந்த மக்களையும் உலகையும் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என பெரும்பாலான பகுதிகளை அறிந்துகொள்ளும் ஸ்னோவ்டன் அவற்றை உலகிற்கு வெளிப்படுத்தவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார்.
 
தனது அதியுயர் வசதியான வாழ்வையும் அதி விசேட சலுகைகளையும் துறந்து இப்படி ஒரு முடிவை எட்வார்ட் ஸ்னோவ்டன் எடுத்தார் என்பது மேற்கு ஊடகங்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.
 
அமரிக்காவின் மூடிய அழுகிய இரகசியங்களை வெளிப்படுத்திய இன்றைய உலகின் கதாநாயகனின் மக்கள் பற்றும் சமூக உணர்வும் பல்தேசிய நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடகங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் உலகின் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்துகொள்வார்கள்.
 
Thanks: inioru.com