Monday, October 31, 2011

கவிதை:


எழுதிவைத்துக் கொள்ளுங்கள்!







சூரியன் ஒருநாள்
மேற்கிலே உதித்தெழும்
சுற்றுகின்ற பூமியோ
சத்தியமாய் சறுக்கிடும்!


வீசுகின்ற காற்றிலே
வெப்பநிலை உயர்ந்திடும்
விடுமுறைநாளைக்கூட
விஞ்ஞானமே தீர்மானிக்கும்!


ஆலயங்கள் அத்தனையும்
அருங்காட்சிக் கூடமாகும்
அன்று பிறந்த சிசு கூட
அடுத்தநாள் டியூசன்போகும்!


வீடுதோறும்
தொலைக்காட்சி தெய்வமாகும்
விடிந்தபின்பும் மின்சார விளக்கெரியும்

பள்ளியிலே வன்முறைகள் பாடமாகும்
பாடசாலைச் சீருடையில் வண்ணமேறும்!


கூடிவாழும்
எண்ணமெல்லாம் குறைந்து போகும்
குழந்தைகளைக் கொல்வதெல்லாம் வீரமாகும்

தரமில்லாப் பொருள் கூட
விற்றுத்தீரும்
தகுதியில்லா மனிதர்க்கெல்லாம்
தலைமைசேரும்


சக்கரைவியாதி இனி
சகலருக்கும் வந்துசேரும்
மனப்பிறழ்வு இல்லாதோர்
மனிதரில்லை என்றாகும்


வேலிகள் ஒன்றுகூடிப் பயிரைமேயும்
வளர்த்தகடா மார்பிலேறிக் குதித்து ஆடும்

காவலுக்கு வளர்த்த நாயே
காலைக் கடிக்கும்
விடுதலைக்கு உயர்ந்த கையே
வயிற்றலடிக்கும்!

-மூதூர் மொகமட்ராபி

No comments:

Post a Comment