Saturday, November 24, 2012

பாலுமகேந்திராவும் சினிமாவும்

 

 

 

சினிமாவும் பால் வியாபரமும் ...


  
ன்றுக் குட்டிக்கான பாலைக் கறந்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஒருவன் நினைத்த மாத்திரத்திலேயே அவன்
வியாபாரியாகிறான். இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

அதுபோல, தன் குடும்பத்துக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை
சினிமாவில் போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் வியாபாரியாகிறான். அந்த வகையில் சினிமாத் தயாரிப்பாளர்கள்
அனைவருமே வியாபாரிகள் தான். இதில் விதிவிலக்கெல்லாம் கிடையாது.

தான் விற்பனை செய்யும் பாலில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கலப்பதில்லை என்ற திடசங்கல்பத்தில் ஒரு பால் வியாபாரி.
லிட்டருக்கு 250 மில்லி தண்ணீர் என்ற எண்ணத்தில் இன்னுமொரு பால் வியாபாரி. லிட்டருக்குப் பாதிக்குப் பாதி தண்ணீர் என்ற முடிவில்
மூன்றாவது வியாபாரி.

அவனவன் மனனிலைக்கு - attitude -க்கு ஏற்ப அல்லது பணம் பண்ணும் ஆசைக்கு ஏற்ப பால் சுத்தமாக அல்லது கலப்படமாக நமக்குக்
கிடைக்கிறது.

சினிமா வியாபாரமும் அப்படித்தான்.

தயாரிப்பாளரும் இயக்குனர்களும் அவரவர் மனனிலைக்கேற்ப சமரசங்கள்- compromises செய்துகொள்கிறார்கள். தரமான தூய சினிமா
மட்டுமே தருவேன் என்று ஒரு தயாரிப்பாளர், அல்லது இயக்குனர். நல்ல படம் தருவேன் ஆனால் வியாபாரம் கருதி அதில் கொஞ்சம் " ஐட்டங்களும் " வைப்பேன் என்ற மனநிலையில் இன்னுமொரு தயாரிப்பாளர் அல்லது இயக்குனர்.

படம் எடுப்பேன், ஆனால் அது வியாபார நோக்கத்தில் மட்டுமே! எனவே எனது படத்தில் " விலைபோகக்கூடிய " அம்சங்கள் நிறைய இருக்கும் என்ற முடிவுடன் மூன்றாவது தயாரிப்பாளர்.

இப்படியாக பால் வியாபாரம் செய்ய வருபவரின் நோக்கத்தைப் பொறுத்து, பாலின் தரம் அமைவதைப் போல, படம் எடுக்க வருபவரின்
நோக்கத்தைப் பொறுத்தே படத்தின் தரம் அமையும். தரமான -கலப்படமில்லாத பாலை மட்டும் தான் வாங்குவோம் என்று பால் வாங்குபவர்கள் முடிவு செய்தால், கலப்படம் செய்து பால் விற்கும் வியாபாரிகள் காலக் கிரமத்தில் குறையத் தொடங்குவார்கள். இது எனது நப்பாசை - wishful thinking!

இது நடக்கிற காரியமில்லை என்பது எனக்குத் தெரியும்.....!

சினிமா கற்றுக் கொள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த 1966 முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 46- ஆண்டுகளில் எந்த வித வணிக சமரசங்களும் இல்லாமல் இரண்டே இரண்டு படங்களை மட்டும் தான் என்னால் கொடுக்க முடிந்தது. "வீடு", "சந்தியாராகம்" என்ற இரண்டு படங்கள் தான் அவை. எனது மற்ற படங்கள் எல்லாமே பாடல் காட்சிகள் போன்ற சில வணிக சமரசங்களுடன் பண்ணப்பட்ட படங்கள் தான். ஆனால் அவற்றில் பல படங்கள் நல்ல படங்கள் என்று இன்று வரை மக்களால் கொண்டாடப்படும் படங்களாகவும், அதே சமயம் 200 நாட்களுக்குமேல் ஓடி வசூல் சாதனை புரிந்த படங்களாகவும் அமைந்து போனது என் அதிர்ஷ்டம்!

பெரிய திரையை விட சின்னத்திரையில் தான் "படைப்புச் சுதந்திரம்"- creativity freedom எனக்கு அதிகம் கிடைத்தது. 1999 செப்டம்பர் முதல் 2000 செப்டம்பர் வரை சன் தொலைக்காட்சிக்காக நான் செய்த "கதை நேரம்" குறும்படங்கள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு மிகவும் திருப்தியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு புதன் கிழமையும் ஒரு குறும்படம் என்ற வகையில் 52 குறும்படங்கள் செய்தேன். இந்த 52-ல் ஒரு 20-25 குறும்படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பது எனது கணிப்பு. ஆங்கில அடியெழுத்துக்களுடன் (with subtitles) இவற்றை எந்த நாட்டிலும் திரையிடலாம். அப்படியொரு உலகளாவிய தன்மை அமைந்து போன குறும்படங்கள் அவை. தொலைக்காட்சியில் அவை காண்பிக்கப்பட்டும் 12-15 வருடங்களாகின்றன. இன்னும் மக்கள் அந்தக் குறும்படங்கள் பற்றிச் சிலாகிக்கின்றனர். "கதை நேரம்" குறும்படங்கள், பல கல்லூரிகளிலும் திரைப்படப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்று அறிகிறேன். ரொம்ப சந்தோஷம்.

-பாலுமகேந்திரா

Thanks : 'Moontrampirai'

Thursday, November 22, 2012

சிறுகதை: ஒரு கதையின் கதை







'ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?'


கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே நுழைந்தான் மக்பூல்.  என்னுடைய கோணேசர்பூமி வலயத்திற்குட்பட்ட புறநகர்ப் பாடசாலைகளில் ஒன்றான இலுப்பஞ்சோலை முஸ்லீம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அவன். 

ஓர் ஆசிரியராக இருந்த காலத்தில் நல்ல வாட்டசாட்டமாகவும் உற்சாகமாகவும் இருந்தவன் அதிபராக நியமிக்கப்பட்ட இந்த ஒன்றரை வருடத்துக்குள் பாவம் இப்படி மெலிந்து தேய்ந்து தாடியெல்லாம் நரைத்து முகமெல்லாம் கவலையேறி.. பாவம் அவன். வயது என்னவோ அவனுக்கு மிஞ்சிப்போனால் நாற்பது அல்லது நாற்பத்தி இரண்டுக்குள்தான் இருக்கும். ஆனால் அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கும் என்னைவிட முதியவன்போலத் தோற்றமளித்தான். படிக்கின்ற காலத்திலும் படிப்பிக்கின்ற காலத்திலும் கிரிக்கட், புட்போல், கரப்பந்தாட்டம்,  உயரம் பாய்தல் ஓட்டம்  என்று சகல விளையாட்டுகளிலும் கலக்கியவனா இப்போது இப்படியாகிவிட்டான்?

'ஸேர்!'

'ஓமோம். நான்தான் வரச்சொன்ன நான். இப்பிடி இருடாப்பா மக்பூல்.!' என்று எதிரேயிருந்த இருக்கையிலே அவனை அமர்த்திவிட்டு கண்ணாடியைக் கழற்றிவிட்டு பைலை மூடிவைத்தேன்.

'பிறகு.. உங்கட ஹஜ் பெருநாளெல்லாம் எப்பிடி விசேஷமா?' அவனை வரச்சொல்லியனுப்பிய காரணத்தை சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பு என்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக கேட்டு வைத்தேன்.
'எங்க ஸேர்? காலையில விடியக்குள்ளேயே மழை. பெருநாள் தொழுகைக்கே நனைஞ்சுதான் பள்ளிக்குள்ள போய்ச் சேர்ந்தோம்.'

'ஓம் என்ன? எங்கட தீபாவளியும் இனி வர இருக்கு. அதுக்கும் மழைதானோ தெரியாது. அதுசரி, அன்டைக்கு நான் வந்து போன பிறகு இப்ப ஸ்கூல் எப்பிடிப்போகுது. வேற பிரச்சினையேதுமில்லையே?' என்று சம்பிரதாயத்துக்கு கேட்டுவிட்டு மக்பூலின் முகத்தை சிறிது நேரம் மௌனமாக நோட்டமிட்டேன்.

மக்பூலிடம் விசயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று ஒரே குழப்பமாக இருந்தது.
இப்பொழுது வலயக் கல்விப்பணிப்பாளர் பதவியிலிருக்கும் நான், ஒருகாலத்தில் இதே வலயத்தில் கணிதபாடத்திற்குரிய ஓர் ஆசிரிய ஆலோசகராக இருந்தவன்தான். அந்தக் காலத்திலே அவனது ஊரான நிலாவெளி பாடசாலை ஒன்றில் சாதாரண பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்த இளைஞன்தான் மக்பூல். அந்த நாட்களிலே அங்கு சென்றால் போதும் மக்பூலின் உபசாரத்தால் நான் திக்கு முக்காடிப் போய்விடுவதுண்டு. பஸ்ஸேறி நாங்கள் போகும் வழியெல்லாம் பாதுகாப்புக் கடமையிலே ஈடுபட்டிருக்கும் சீருடையினரின் விசாரணைகளும் கெடுபிடிகளும் தொல்லை தந்த காலம் அது. அதையெல்லாம் தாண்டி மக்பூலிடம் வந்து சேரும் என்னைப் போன்றவர்களுக்கு இவனது உபசரிப்பிலும் உற்சாகமான பேச்சிலும் களைப்பு முழுவதும் பறந்தோடிவிடும்.

'இருங்க சேர், இந்தா ஒரு நிமிஷத்தில வாறேன்' என்று அவன் போனால் சிறிது நேரத்தில் தட்டு நிறையச்சுடச்சுட கிழங்கு ரொட்டிகள், பற்றீசுகள், கட்லட்டுகள் என்று வகை வகையான  தின்பண்டங்களுடன்தான் வருவான். பெரிய கண்ணாடி க்ளாசுகளிலே பால் வெண்மை நிறத்திலே தென்னங்குரும்பை வழுக்கைகள் இடைநடுவிலும் அடியிலும் மிதக்க தேசிப்புளியும் சீனியும் அளவாய் விட்டுக் கரைத்த சுவையான இளநீர் பாடசாலையின் பின்புறமுள்ள அவனுடைய தென்னந்தோப்பு வீட்டிலிருந்து  வரும்.

இத்தனை உபசாரப்பிரியனான  மக்பூலிடம் ஒரு அலாதியான தனிப்பிரியம் எப்போதும் எனக்குண்டு. உபசாரத்திலே மட்டுமல்ல கற்பித்தலிலும் மக்பூல் திறமையானவன்தான். அவனைப் பார்க்க ஒருவகையிலே பாவமாகவும் இருந்தது. நான் சொல்லப்போகும் விடயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

எனது வலயத்தில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம் பாடசாலைகளில்  புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் அவனது இலுப்பஞ்சோலைப் பாடசாலைதான் இப்போது எனது தன்மானத்துக்கே சவால்விடும் பிரச்சினையாய் மாறியிருப்பதால் நான் கேட்கப்போவதை அவன் ஒத்துக்கொண்டு விட்டால் பிரச்சினையேதுமில்லை. மாறாக, அவன் முடியாது என்று மறுத்து விட்டால்தான் சிக்கலே.

எனது வலது கை விரல்கள் மேசை மீதிருந்த கண்ணாடியாலான பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டேயிருக்க அது எனது இரு கைகளுக்குள்ளே நின்று சுழன்று கொண்டிருந்தது.

இலுப்பஞ்சோலை முஸ்லீம் வித்தியாலயத்திற்கு மக்பூலை நான் அதிபராக நியமிப்பதற்கு முன்பு அங்கு நீண்டகாலமாய் அதிபராக இருந்தவன் வேறுயாருமல்ல. என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவனும் தற்போது என்னை ஒரு கௌரவச் சிக்கலிலே மாட்டிவைத்து விட்டவனுமாகிய தனபால் என்பவன்தான். அவன் இயல்பிலேயே ஒரு முசுடுட்டுப் பேர்வழி. அதுமட்டுமல்ல, சாதாரண ஆசிரியராக அவன் வேறு பாடசாலைகளில் கடமையாற்றிய காலங்களிலே பாடசாலைக்கு நேரத்துக்கு போய்கூட அறியாதவன். அப்படியே போனாலும் நோட்ஸ் ஒவ் லெஸ்ஸன் ப்ளான்கள்; எழுதாமலும் ஒழுங்காக வகுப்புகளிலே படிப்பிக்காமலும் கிடந்தவன். ஆனால் சிறு அதிகாரம் கிடைத்தாலும் போதும் உடனே அடுத்தவர்களை வருத்திப் பார்ப்பதிலே மட்டும் அலாதியான சுகம் காண்பவன்.

இத்தகைய குணாம்சமுள்ள தனபாலும் நானும் ஏறத்தாழ ஒரே உத்தியோகத் தரத்திலுள்ளவர்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இருவரும் அதிபர் தேர்வுப் பரீட்சையிலும் ஒன்றாகத்தான் சித்தியெய்தியிருந்தோம். அப்போதிருந்த மாகாணக் கல்வியமைச்சு எங்கள் இருவருக்கும் மூதூரிலிருந்த  இரு தமிழ்ப்பாடசாலைகளுக்கு தனித்தனியாக அதிபர் நியமனங்களை வழங்கியது. நியமனக் கடிதம் கிடைத்ததும் நான் உடனடியாக அங்கு சென்று பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் சோம்பேறியான தனபாலோ திருகோணமலை நகரைவிட்டுப் போக விரும்பவில்லை. அதனால் புறநகரிலிருந்த பின்தங்கிய பாடசாலையான இதே இலுப்பஞ்சோலை பாடசாலை மீது  ஒரு கண்வைத்திருந்தான். அது ஒரு முஸ்லீம் பாடசாலையாக இருந்த போதிலும் அங்கு கணிசமான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் கற்பதைக் காரணம் காட்டியதோடு கல்வி அதிகாரிகளையெல்லாம் கைக்குள்ளே போட்டு  அதிபர் நியமனத்தை எப்படியோ அங்கு மாற்றி  எடுத்து விட்டான்.

அதிபராக நியமனம் கிடைத்த பின்பு தனபால் அங்கு நடாத்தியதற்குப் பெயர் பாடசாலை நிர்வாகம் அல்ல: காட்டுத் தர்பார். கல்வியலுவலகத்திலே உள்ள சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தனக்குக் கீழே வேலை செய்த ஆசிரியர்களையெல்லாம் இரக்கமின்றி வதைத்தான். அவர்களையெல்லாம் படாதபாடு படுத்தி அலுவலக உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டு வெறும் வைத்து கடதாசி நிர்வாகம் நடத்தியவன்தான் தனபால். கற்பித்தல் திறமையில்லாத முகஸ்துதி செய்து வால்பிடித்துப் பிழைக்கும் சில ஆசிரியைகளை சலுகைகொடுத்து தனக்கு  நெருக்கமாக வைத்துக்கொண்டு நியாயம் கேட்பவர்களையெல்லாம் வருத்தும் போக்கிலே நிர்வாகம் நடாத்தி வந்திருக்கின்றான் அவன். ஆனாலும் காலப்போக்கில் இவனுடைய அடுத்தவரை மதிக்காத அதிகார மமதை பெற்றோர்களையும் நோக்கித் திரும்பியதனால் ஊருக்குள்ளிருந்து படிப்படியாக எதிர்ப்பலைகள் உருவாகி ஒன்று திரண்டெழுந்தது. கடைசியில் அந்தப் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் செய்து தனபாலை ஒருவெறிபிடித்த நாயைத் துரத்துவதுபோல விரட்டியடித்து விட்டார்கள். இப்படி துரத்தப்பட்டவர்களின் தஞ்சம் கோருமிடம் வலயக்கல்வி அலுவலகத்தை விட்டால் வேறு எங்குள்ளது?

இதற்கிடையில் நான் பதவி உயர்வுகள் பல பெற்று கடைசியில் இப்போது இந்த வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியை ஏற்பதற்காக மீண்டும் கோணேசர்பூமி வலயத்துக்கு வந்துசேர்ந்தேன்.  அவ்வேளையில் சகபாடியான தனபால் மனமுடைந்துபோய் இந்த அலுவலகத்தில் தஞ்சம் கிடந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அவன் எனது நண்பன் என்பதாலும் அதிபர் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டதை அறிந்திருந்ததாலும் அவன் மீது சிறிது அனுதாபத்துடன் நடந்து கொண்டேன். ஒருகாலத்திலே என்னுடைய தரத்திலிருந்தவன் இப்போது என்னுடைய அலுவலகத்திலே நாதியற்று கிடப்பதைப் பார்த்து மனம் கேட்காமல் போனால் போகிறது என்று சில பொறுப்புக்களை அவனுக்கு வழங்கி வைத்து என்னுடனேயே வைத்துக் கொண்டேன்.

ஆனால் அதுதான் நான் எனக்கே வைத்துக்கொண்ட பொறி என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.

நானும் பதவிக்கு வந்த புதிது. தவிர, முஸ்லீம் பாடசாலை தொடர்பான விடயங்களைக் கையாளும்போது அதிலே தனபாலுக்கு நிறைய அனுபவம் இருக்குமென்று நம்பி சில விடயங்களில் அவனது ஆலோசனையையும் கேட்டு வந்தேன். ஆனால் நெருங்கிய நண்பன்தானே என்று நான் வழங்கிய சலுகைகளை அவன் தனது நலனுக்காகவும் முன்பு தான் அதிபராக இருந்த காலத்தில் இலுப்பஞ்சோலை பாடசாலையிலிருந்த தனக்கு வேண்டாத ஆசிரியர்களை பழிதீர்ப்பதற்காகவுமே அவன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதை எனக்கிருந்த வேலைப்பளுவினால்  ஆரம்பத்தில் நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ஒருகட்டத்திலே தனபாலின் ஆலோசனையைக் கேட்டு மக்பூலின் பாடசாலையில் சற்றுத் துணிச்சலாகப்பேசும் இயல்புள்ள ஆசிரியர் ஒருவனை சிறிது அச்சுறுத்தி வைப்பதற்கு தீர்மானித்தேன். அவனை ஏதாவது குற்றம்பிடித்து வெருட்டி வைப்பதற்காக எனது அலுவலகத்திலிருந்த நிர்வாக அலுவலர் ஒருவரையும் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஒருவரையும் அனுப்பிவைத்திருந்தேன்.

அதுவே நான் செய்த அடுத்த தவறு.

ஆம், இரை பிடிக்கச்சென்ற பாம்பின் தலை ஒரு தவளையின் வாய்க்குள்ளேயே இறுக மாட்டியது போலாயிற்று நான் அனுப்பிவைத்த அந்த அலுவலர்களின் நிலைமையும். அவர்களால் அந்த ஆசிரியர் பக்கமிருந்து எந்தவொரு உருப்படியான தவறுகளையும் பிடிக்க முடியவில்லை. மாறாக விசாரிக்க வந்தவர்களது தகுதிகள் பற்றி அவன் விசாரிக்கத் தொடங்கி விட்டானாம். இதனால் என்னை நம்பிச் சென்ற இருவரும் ஆளைவிட்டால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடியே வந்து விட்டார்கள். அவர்களை சிதறடித்து அனுப்பிய அந்த ஆசிரியன் ஏற்கனவே பிரபல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவரும் ஒருவனாம். அவனுக்கு இப்படி வித்தியாசமாக ஒரு ஏதாவதொரு சிறிய விடயம் கிடைத்தாலும் போதுமாம். உடனே அதை ஒரு சிறுகதையாகவோ கவிதையாகவோ எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவானாம். அப்படிப்பட்டவன் இதைவிடுவானா?

அன்றைய தினம் விசாரணை என்ற பெயரில் நடந்த கோமாளிக்கூத்தையெல்லாம் அந்த விஞ்ஞான ஆசிரியன் 'இலுப்பஞ் சருகுகள்' என்ற தலைப்பிலே ஒரு அருமையான சிறுகதையாக எழுதியனுப்பிவிட அதை நமது நாட்டின் பிரபலமான சஞ்சிகையொன்று தனது அடுத்த பதிப்பிலே உடனடியாக பிரசுரித்தும் விட்டது.
அன்று ஆரம்பித்ததுதான் இந்த இலுப்பஞ்சோலை பாடசாலைத் தலையிடி.
'இலுப்பஞ் சருகுகள்'  வெளியானதிலிருந்து நான் எங்கே சென்றாலும் என்னிடம் அதைப் பற்றியே கேட்கத் தொடங்கி விட்டார்கள்.  ஓய்வுபெற்றுச் சென்ற எனது மேலதிகாரிகள் முதல் நேற்றுவரை என்முன்னால் வாய்திறந்திராத கற்றுக்குட்டி அதிபர்கள் வரை ஏதோ துக்கம் விசாரிப்பது போல விசாரித்து எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.  இப்போதெல்லாம்  எனக்கு  வரும் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதற்குக்கூட நான் இரண்டுமுறை யோசிக்க வேண்டியவனாக இருக்கின்றேன்.

எங்கள் அலுவலகத்தின் அசிங்கமான ஒருமுகத்தை அம்பலமாக்கிய அந்த விஞ்ஞான ஆசிரியனைக் கோபிப்பதா அல்லது பிழையான தகவல் தந்து என்னை ஒரு ஆப்பிழுத்த வானரமாக மாற்றி விட்ட தனபாலைக் கோபிப்பதா என்று குமைந்து கொண்டிருப்பதுதான் இப்போதெல்லாம் என்வேலையாக இருக்கின்றது. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுக் வைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதில்லை என்று தோன்றியதால்தான் மக்பூலை அழைத்திருக்கின்றேன்.



'என்ன விஷயமா ஸேர் வரச் சொன்னீங்க?'

'ஒன்றுமில்லை மக்பூல். உங்கட ஸ்கூல்ல மல்டிமீடியா ப்ரொஜெக்டர் ஏதுமிருக்குதா?' கண்ணாடியாலான பேப்பர் வெயிட்டை விரல்களால் சுழற்றிச்சுழற்றி அதன் மேசை நடனத்தை ரசித்தவாறே கேட்டேன்.

'இல்லை. ஏன் ஸேர் கேட்கிறீங்க?'

'இல்ல உங்கட ஸ்டாஃப்ல யாராவது ஸ்கூலுக்கு லேப்டொப் கொம்ப்யூட்டர் கொண்டு வந்து பாவிக்கிறாங்களா?'

'........'

'என்ன சத்தத்தையே காணல்ல. ஒருவேளை நீதான் பாவிக்கிறியோ?' என்று கேட்டுவிட்டுச் சிரித்தேன்.

'எனக்கிட்ட அதெல்லாம் கிடையாது ஸேர். ஆனா யாரும் கொண்டு வாறாங்களோ தெரியல்ல...'

'இஞ்ச பாரு மக்பூல், பொய் சொல்லாத. உங்கட ஸ்கூல்ல மட்டும் என்ன நடந்தாலும் அதை அப்பிடியே எனக்கு வந்து சொல்றதுக்கு ஆளிருக்குது தெரியுமா? கேட்டதுக்கு மழுப்பாம பதில் சொல்லு மக்பூல்'

'அப்ப அதையும் அந்த ஆளுக்கிட்டயே கேட்டிருக்கலாமே ஸேர். எங்கட ஸ்கூல் இலுப்பை மரத்திலருந்து ஒரு இலை விழுந்தாலும் அதை உங்கட ஒபிசுக்கு ஓடி வந்து சொல்லுற சில டீச்சர்மாராலயும் அதைக் கேட்டுட்டு உங்களுக்கிட்ட இஷ்டத்துக்கு வத்தி வைக்கிற ஆளாலயுந்தான் ஸேர் என்ட ஸ்கூல்ல இவ்வளவு பிரச்சினையும்..'

இதை அவனிடமிருந்து நான் சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை. முகமெல்லாம் இறுக மக்பூல் என்னோடு இப்படிப் பேசுவது இதுதான் முதல் தடவை.

 '....என்ட நிருவாகத்துக்குள்ள எல்லாரும் மறைமுகமாக கையடிச்சிக்கிட்டு ஒருத்தரும் என்னை ஸ்கூல் நடத்துறதுக்கு விடுறீங்க இல்ல ஸேர்..! எத்தனை பிரச்சினையை ஸேர் நான் சமாளிக்கிறது? ' என்றான் மக்பூல் கோபத்துடன். அவன் மறைமுகமாக எதைச்சொல்கின்றான் என்பது புரிந்தது.

'அட! நீயும் இப்ப நல்லாப் பேசப் பழகிட்ட போல. முந்தியெல்லாம் நான் பேசுனா ஒரு வார்த்தை பேச மாட்டாய். சரி கோபப்படாத மக்பூல். நீ எனக்கு முந்தி இருந்தே நல்லாத் தெரிஞ்ச ஆள் என்டதாலதான் இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டு இருக்கிறன். ஆனா நீ மட்டுமா எனக்கு வேண்டியவன் சொல்லு பார்ப்பம்? உன்னைப்போல வேண்டியவன், தெரிஞ்சவன் என்று பலரையும் சமாளிச்சுத்தான் நானும் எல்லாத்தையும் செய்யணும். இந்தக் கதிரையில இருந்து பார்த்தாத்தான் இந்தப் பதவியிலுள்ள கஷ்டங்கள் தெரியும்'

'எனக்கும் அப்பிடித்தான் ஸேர் இருக்கு. பேசாம ஒரு டீச்சராகவே நான் இருந்திருக்கலாம் போல இருக்கு. ஏந்தான் இந்தப் பாழாய்ப்போன ப்ரின்ஸிப்பல் எக்ஸாம் எடுத்துப் பாஸ் பண்ணினோம் என்று இப்பதான் கவலையாக்கிடக்கு. இப்படிக் கிடந்து நிம்மதியில்லாம அலையுறதுக்கு ஊர்ல கிடக்கிற பட்டி மாடுகளைக் கட்டி மேய்ச்சுக்கிட்டிருந்தாலும் இதைவிட கூடக் காசு வந்திருக்கும். மனிசனுக்கு நிம்மதியும் கெடைச்சிருக்கும் ஸேர். என்ன நாய்ப் பொழைப்பு ஸேர் இது!'

'மக்பூல் என்னடா இப்படியெல்லாம் பேசுறா நீ? நீ கேட்டுத்தானே உன்ன அந்த ஸ்கூலுக்குப் போட்டோம்'

'யா அல்லாஹ்! அப்ப கேட்டது நான்தான் ஸேர். ஆனா யாருக்குத் தெரியும் இப்பிடி ஆக்களெல்லாம் இருக்குதெண்டு?'
மேசை அழைப்பு மணியை அடித்து உள்ளே வந்தவனிடம், 'நாகராசா! ரெண்டு கூல் ட்ரிங்க்ஸ் கொண்டுவா' என்றேன்.

'எனக்கு வேணாம் ஸேர்! சுகர் இருக்குது. வெறும் தண்ணிபோதும்' என்றபடி மேசையிலிருந்து மினரல் வாட்டர் போத்தலை எனது அனுமதியுடன் எடுத்து மூடியைத் திறந்தான் மக்பூல்.

'என்ன மக்பூல் இப்பதானே நாப்பது வயசைத் தாண்டியிருப்பாய் நீ. அதுக்குள்ள உனக்கு சுகர் ப்ரஷரெல்லாம்  வந்திட்டுதா?' என்று வியந்துபோய் கேட்டேன் எனக்கு ஹைப்ரஷர் மட்டும் இருக்கின்ற தைரியத்தில்.

'நாப்பத்தி மூணு வயசுதான் ஸேர். ஆனா மூணு வருசத்துக்கு முதல்ல நான் நிலாவெளி ஸ்கூல்ல ஒரு நல்ல மெட்ஸ் மாஸ்டரா இருந்திட்டு விடியக் காலையில வயலையும் ஸ்கூல்விட்டு பின்னேரத்தில  மாடு கன்றுகளையும் பாத்துக்கிட்டு கிரிக்கட் புட்போல் விளையாடிட்டிக்கிட்டிருந்த காலத்தில சுகருமில்ல ஒரு ப்ரஷருமில்ல..'


'இப்ப அதிபரா வந்த இந்தக் கொஞ்சக் காலத்துக்குள்ள எல்லாத்தையும் எடுத்திட்டாய் என்றுதானே சொல்ல வாறாய் நீ. அது ஒண்ணுஞ் செய்யயேலாடா மக்பூல். நாம எல்லாரும் பதவியென்ட புலிவாலத் தெரியாமப் புடிச்சிட்டம்டா. இனி அதை விடவும் ஏலாது. அது இழுக்கிற இழுப்புக்கெல்லாம் ஓடிட்டுத்தான் திரிய வேண்டியிருக்குப் பாரு.. உன்ட அதிகாரியா நான் இதைச் சொல்ல வரயில்ல.  நீ கவலைப்படாத மக்பூல் எல்லாஞ் சரியா வரும்'

நான் அவனைத் தேற்றுவது போலக் கதைத்தாலும் மக்பூலின் முகத்திலிருந்த வாட்டம் நீங்கவில்லை. ஒரு விதத்திலே அவனை நினைத்தால் பாவமாகவும் இருந்தது. நிலாவெளியிலே கன்றுக்குட்டிபோல துள்ளித்திரிந்த ஒரு கெட்டிக்கார கிராமத்து இளைஞனை பதவியைக் கொடுத்து அடிமாடாக மாற்றிவிட்டேனோ என்ற குற்றவுணர்வு முதன்முதலாக என் நெஞ்சைத் தாக்கியது. ஆனால் இவன் மட்டுமா? இவனைப்போல ஆக்கபூர்வச் சிந்தனைகளையும் இயல்பான திறமைகளையும் பதவிக்காகத் தொலைத்துவிட்ட எத்தனை பொலிகாளைகள் இன்று எங்கள் கல்வித் திணைக்களத்திலே வெறும் செக்குமாடுகளாகச் சுற்றிவந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பார்க்கும்போது என்னைப்போன்ற உயரதிகாரிகளின் அதிகாரத் தோரணைகளுக்கு அடங்க மறுத்துப் போராடிப் போராடி குழப்படிக்காரர்கள் என்று பெயர் வாங்கினாலும்கூட அந்த கதையெழுதும் விஞ்ஞான ஆசிரியனைப் போன்றவர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்.

 'சரி, மக்பூல். இப்ப அந்த பழைய மனுஷி லோகிதராசா டீச்சரின் பிரச்சினைகள் என்ன மாதிரி? வாற மார்ச் மாசத்தோட பென்சனுக்குப் போயிடுவாதானே? அவன்  விஞ்ஞான வாத்தி என்ன சொல்றான். இப்ப அவனால ஏதும் பிரச்சினையா?'

'இவ அவனோட தனவுறதாலதான் ஸேர் பிரச்சினையே. அவன் பிள்ளைகளை அனுப்பி எதையாவது கேட்டு விட்டாக்கூட கெட்ட வார்த்தையால அவனுக்கு ஏசி விடுறா மனுஷி. இவன் அந்தந்த இடத்திலேயே நல்லா குடுத்து விடுறவன். உங்களுக்கு தெரியுந்தானே?'

'ஓமோம். கேள்விப்பட்ட நான்தான்'

'அவ படுத்திற பாடுதான் பெரும்பாடா இருக்குதே ஸேர். அவக்கு ஒரு டீச்சருக்கு இருக்கு அடிப்படை மரியாதைகூடத் தெரியுதில்ல. யாராவது எதையாவது கேட்டுவிட்டாலும் கெட்ட வார்த்தையால ஏசி விடுது அந்த மனுஷி. இதை எல்லாரும் பொறுத்திட்டு இருப்பாங்களா?'

'ஆ! அதுதான் உனக்கு ஒருத்தன் இருக்கிறானே.. சயன்ஸ் மாஸ்டர். என்ன பேர் அவனுக்கு..? அந்த மனுஷிய யாரு பொறுத்தாலும் அவன் பொறுக்க மாட்டானே. ஆனா அந்த மனுஷி லோகிதராசா என்னடான்டா அந்த விஞ்ஞான மாஸ்டர்தான் தன்னைப்போட்டுக் கரைச்சல் படுத்திறதா அண்டைக்கு ஒருநாள் வந்து இஞ்ச வந்து அழுது ஒப்பாரி வச்சிட்டுப் போகுதே மக்பூல்..?'

'அவன் விஞ்ஞான மாஸ்டர் வந்து ஸேர் எதிலயும் போல்டாகத்தான் ஸேர் நடப்பான். தனக்குச் சரியென்டு பட்டதை பொட்டிலறைஞ்ச மாதிரிக் கதைக்கிற ஆள். வீணாகப் பயப்படுறதும் கிடையாது ஸேர். அதால பார்க்கிறதுக்கு கொஞ்சம் குழப்படிக்காரன் போலத் தெரிவான்.  மற்றப்படி படிப்பிக்கிறதுலயெல்லாம் ஆள் பிரச்சினை இல்லை. அதுமட்டுமில்ல ஸேர் அவன் மற்றவங்களைப்போல கோள் சொல்றது வால்பிடிக்கிறது மாதிரி ஜாதியுமில்ல. அப்படியிருக்கிறவன் இவவோட அட்டகாசத்தை பொறுப்பானா?'

'அதுக்காக ஒரு பொம்பிளை அதுவும் ஒரு வயசுபோனவைய இஞ்ச வந்து மனவருத்தப்பட்டு அழுகிற அளவுக்கு அவன் என்ன செய்தான் என்டு நாங்களும் யோசிச்சுப் பாக்கத்தானே வேணும் மக்பூல்?'

'ஸேர், நான் ஒரு பக்கம் ஸப்போர்ட் பண்றனென்டு நீங்க நினைக்கப்படாது. அவ வயசாளிதான். ஆனால் வாய் சரியில்ல ஸேர். அவ ஒரு தமிழ் டீச்சர். அவன் என்னைப்போல ஒரு முஸ்லீம். ஒருநாள் அவனுக்கும் எனக்கும் ஸ்கூல்ல வச்சு சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு உடனே அதை நாங்க இரண்டுபேரும் ஆறுதலாகப் பேசி நாங்க தீர்த்திட்டோம். ஆனா இவ உடனே என்ன செய்தா தெரியுமா?'

'சொல் மக்பூல் கேட்போம்'

'இவ உடனே சந்தோசப்பட்டு, 'பாரு ரெண்டு சோனியும் கொளுவிட்டுது!' என்டு யாருக்கிட்டயோ சந்தோசப்பட்டு கதைச்சிருக்கிறா. இதை நானும் கேள்விப்பட்டேன். நான் அதிபராயிட்டதால ரோசம் மானமெல்லாம் இல்லாம நிருவாகத்துக்காக பொறுத்துக்கிட்டேன். அவன் அப்படிப் பொறுப்பானா ஸேர்? நல்ல வடிவாத் திருப்பிக் குடுத்திருக்கிறான்டு நினைக்கிறேன்.. அதுதான் எனக்குந் தெரியாம உங்களுக்கிட்ட ஓடிவந்திருக்கா போல'

'மக்பூல், முஸ்லீம்களை பொதுவா எல்லாரும் சோனி என்று செல்லமாக் கூப்பிடுறதுதானே? அதில ஏதும் தப்பில்லையே'

இதை நான் கேட்டதும் மக்பூலின் முகம் ஏனோ சட்டெனக் கறுத்து விட்டது. அவன் எதுவும் பேசாமல் கண்ணாடித் தடுப்புச் சுவரினூடாகத் தெரியும் எனது அலுவலகத்தின் அடுத்த  அறையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பயங்கரக் கடுப்பிலே இருந்தும் மேலதிகாரியான என்னைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் பேசாமலிருக்கின்றான்என்பது நன்றாகப்புரிந்தது. அந்தக் கேள்வியை நான் மக்பூலிடம் கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்து சிறிது வருந்தினாலும் அதுபற்றி எனக்குள் ஏனோ ஒரு குரூர மகிழ்ச்சியிருக்கத்தான் செய்தது.

சிறிது நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இடையிலே எனக்கு வந்த ஒரு செல்போன் அழைப்பை பேசிமுடித்து விட்டு,

'ஏன் மக்பூல் அவன் இந்த புத்தகம் பேப்பருக்கெல்லாம் கதை, கவிதை, கட்டுரை செய்தியெல்லாம் எழுதுற ஆள்தானே..? ஆள் கொஞ்சம் கெட்டிக்காரந்தான் போல. கடைசியா உன்ட ஸ்கூலுக்கு நான் வந்த நேரமும் மத்த டீச்சர்மாரெல்லாம் பேசாம இருக்க இவன் மட்டும் எழும்பி எனக்கிட்டேயே கனக்க கதைச்சிட்டுக் கிடந்தானே..?'

'ஓம் ஸேர், நாந்தான் சொன்னனே அவன் தனக்குச் சரியென்டு பட்டது எதையும் நேரே கதைக்கிற ஆள். நேர்மையா நடப்பான். நல்லா எழுதுவான், நியாயமா பேசுவான். போனவருசம் நீங்க வலயத்தால நடத்துன  டீச்சர்ஸ் டே போட்டியிலயும் சிறுகதையில வலயத்தில முதல்பரிசு வாங்கியிருக்கான்'

'அப்பிடியா? அப்படி ஒருவன் இருக்கிறது நல்ல விசயந்தான். ஆனா இவன் கற்பனையில எழுதாம நடக்கிற விசயத்தையல்லவா அப்பிடியே எழுதிப்போடுறான். முந்தி ஒருநாள்  நான் இவனைப்பற்றி சரியாத் தெரியாம நம்மட டீடீ பெரிய நாயகத்தையும் ஏஓ ரனீஸையும் அனுப்பி வச்சேன் ஞாபகமிருக்கா மக்பூல்?'

'ஓமோம். நாங்கூட அண்டைக்கு மையத்து வீடொன்றுக்குப் போயிருந்த நேரம். பிறகுதான் எனக்கும் விசயம் தெரியும்;'

'ஆங் அன்டைக்குத்தான். அதுபாத்தா விசாரிக்க வந்தவங்க ரெண்டுபேரையும் றூல்ஸ் கதைச்சு பேச்சாலேயே மடக்கி அனுப்பிட்டான் பாரு. அது மட்டுமா  விசாரிக்க வந்து ரெண்டுபேரும் மூக்குடைபட்டதை ஒரு கதையா எழுதி ஒரு பேப்பருக்கோ மாதப் புத்தகத்துக்கோ போட்டிருக்கான் போல. அதைப் படிச்சிட்டு நம்ம பழைய ஸட்டீ அருமைப்பிள்ளை கூட நேற்று எடுத்துக் கேட்கிறாரு. நான் நடத்துற மீட்டிங்லயெல்லாம் அதிபர்மார் அதைப்பத்தி கிசுகிசுத்துச் சிரிக்கிறானுகள்.'

'ஸேர், அவன் எல்லாருடைய உண்மையான பேரையெல்லாம் போட்டா ஸேர் எழுதிறான்?'

'அப்பிடி எழுதினாத்தான் இந்நேரம் அவனைப்புடிச்சு ஏதாவது செஞ்சிருக்கலாமே. சரி, இப்ப சொல்லு அவன்தானே ஸ்கூலுக்கு லேப்டொப் கொண்டு வாறவன்?'

'...........'

' என்ன பதிலைக் காணல்ல. சொல்லு மக்பூல், அவன் கொண்டு வாறானா இல்லையா?'

'உங்களுக்கு ஓடி வந்து தகவல் சொல்ற ஆக்கள் லேப்டொப்பை யார் கொண்டு வாறது தகவலையும் உங்களுக்கு சொல்லித்தானே இருப்பாங்க. பிறகு ஏன் ஸேர் எனக்கிட்ட கேட்கிறீங்க?'

'ஆனா நீதானே அங்க அதிபர். உனக்கிட்டத்தானே நான் கேட்பேன்'

 'ஸேர், இப்பெல்லாம் எல்லா டீச்சர்மாருக்கும் எழுத்து வேலைகள் கூடிப்போயிட்டுது. அதால ஆளுக்கொரு பெரிய பேக்கைச் சுமந்திட்டுத்தான் வாறாங்க. அதுக்குள்ள லேப்டொப் இருக்கா இல்லையா என்டெல்லாம் தேட ஏலுமா? ஆனா வகுப்பில யாரும் வச்சிருக்கிறதில்ல.'

'அப்படியென்டா வேற இடங்கள்ல பாவிக்கிறாங்கதானே?'

'இருக்கலாம் ஸேர். அதோட லேப்டொப் என்கிறது இந்தக் காலத்தில எல்லாருக்கும் ஒரு எலக்ரொனிக் டயறி மாதிரி ஆகிட்டுது. அதை அவங்க கொண்டு வந்து ப்ரீ பீறியட்டுல பாவிச்சா நம்ம ஒண்ணும் சொல்லேலாதே ஸேர்.'

'ஓஹோ! எனக்கே பாடம் நடத்துறியா நீ...? உனக்குத் தெரியுமா சட்டப்படி செல்போனைக்கூட ஸ்கூலுக்குள்ள கொண்டு போகேலாது'
இப்படி நான் கூறியதும் மக்பூல் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான். அவன் தனக்குள் என்னைப்பற்றி ஏதோ நக்கலாக நினைப்பதைப்போலத் தோன்றியது எனக்கு. இவனெல்லாம் அப்படிப் பார்க்கிற அளவுக்குப் போய்விட்டதா எனது நிலை என்ற கோபம் மனதுக்குள் மண்டிக்கொண்டு வந்தது.  மேசை இழுப்பறையைத் திறந்து அவசர அவசரமாக ஒரு ப்ரஷர் வில்லையை நாக்கின் கீழ் விரல்களால் அழுத்தி வைத்துக்கொண்டு சிறிது மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன்.

'சரி, சட்டத்தில அப்பிடி இருந்தாலும் அவசரத்துக்கு பயன்படுத்திறதுக்காக நாங்க அதைப்பற்றி கண்டுக கொள்ளாமத்தானே விட்டு வச்சிருக்கிறம். அதுக்காக வகுப்புல பிள்ளைகளுக்கு படிப்பிக்காம செல்போனில பேசிட்டிருக்கிறது சரியில்லதானே மக்பூல். அதுமாதிரித்தான் இந்த லேப்டொப் விசயமும்'

'கடமை நேரத்தில அதுகளை பாவிச்சா பிழைதான் ஸேர். நீங்க சொல்றது விளங்குது. ஆனா என்ட ஸ்கூல்ல யாரும் அப்பிடி வகுப்புல லேப்டொப் பாவிக்கிறதில்ல. சிலவேளை ப்ரீ பாடத்துக்கு ஸ்டாஃப் றூமில செய்றாங்களோ தெரியாது. அதை நம்ம தடுக்கேலாதே ஸேர்?'

அவன் கூறியதிலிருந்த நியாயம் புரிந்தாலும் மேலதிகாரி எனும் பதவியில் ஒட்டியிருக்கும் நான் எனும் மமதை அதை ஏற்றுக்கொள்வதற்கு இடம் தரவில்லை. அது ஏனோ தெரியவில்லை இந்தக் கதிரைக்கு வந்து சேர்ந்த பின்பு சரியோ பிழையோ யாராவது என்னுடைய கருத்துக்கு மாறுதலாகப் பேசுவதை என்னால் முன்பு போல ரசிக்க முடியவில்லை. அதனால் வேறு என்ன விதத்தில் மக்பூலை மடக்கலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

எனது கைகள் மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டை மீண்டும் உருட்டத் தொடங்கியது. அது சுழன்று சுழன்று மேசையின் மத்தியிலிருந்து மெல்ல விலகிச் சென்று விளிம்பில் நின்று ஆடிக்கொண்டிருந்தது.

'அதிருக்கட்டும் மக்பூல், பிள்ளைநேயப் பாடசாலைத் திட்டமெல்லாம் என்ன ஸ்கூல்ல பருவத்தில இருக்கு.. எதுவும் செய்து முடிச்ச மாதிரிக் காணல்லயே'
'அது ஓரளவு செய்து முடிச்சுக் கொண்டுதான் இருக்கிறம். இடையில் இந்த சூறாவளி மழையால ஒருகிழமையா பிள்ளைகள் வரவு குறைவு. அதால கெச்மெண்ட் ஏரியாவுல விபரங்களை எடுக்க முடியாம இருந்தது. கொஞ்சம் டைம் தந்தீங்கண்டா செய்துரலாம் ஸேர்'

சற்று முன்பு சிறிது விறைப்பான தொனியிலே பேசிக்கொண்டிருந்த மக்பூலை இப்போது இறங்கி வந்து பேச ஆரம்பித்தது எனக்குப் பிடித்திருந்தது. 'பாம்புகள் கொத்துவதற்குத் தெரியாது போனாலும் சீறுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்' என்று எங்கோ நான் வாசித்த வாசகம் ஒன்று சட்டென என் நினைவுக்கு வந்தது.

'சரி, தந்த ப்ரொஜெக்ட் எல்லாம் கெதியா முடிச்சு வாற புதன்கிழமை காலையில ஒன்பது மணிக்குள்ள டீவிடீ என்ட மேசையில இருக்கணும்.'

' யா அல்லாஹ்! புதன் கிழமையா..? இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தானே ஸேர் இருக்கு. அதுக்குள்ள எப்பிடி ஸேர் முடிக்கிறது. ராப்பகலா வேலை செய்தாலும் முடிக்கேலாதே ஸேர்'

'அதெல்லாம் எனக்குத் தெரியாது மக்பூல். இதை இப்ப நான் உனக்கு மேலதிகாரியாத்தான் சொல்றேன். புதன் கிழமைக்குள்ள வேலை முடியலண்டா நான் உன்மேல எக்ஷன் எடுக்க வேண்டித்தான் வரும். சும்மா உன்ட எதிர்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே. அதுக்குப் பிறகு நீ என்னைக் கோவிக்கக்கூடாது. சரி நீ போய்ட்டு வா!'  அவனை நீ நிமிர்ந்து பார்க்காமலே முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு மூடிவைத்த பைலைத் திறந்து கையெழுத்திடத் தொடங்கியபோது,

'சரி ஸேர் நான் பிறகு வாறேன்'

அவன் தனது அலுவலகப் பையைத் தூக்கியபடி கதவை நீக்கிக் கொண்டு மிகவும் சோர்வாக வெளியேறிச் சென்றான்.

அவன் போன சிறிது நேரத்திலே அவ்வளவு நேரமும் வெளியே நின்றிருந்த தனபால் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்து, 'மக்பூல் போயிட்டானா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.

'வா தனபால்! எல்லாத்தையும் குழப்பியடிச்சுப்போட்டு இப்ப பூனை மாதிரி வந்து எட்டிப்பாரு!  உன்னால நான் யாராரையெல்லாம் கூப்பிட்டுக் கெஞ்ச வேண்டியிருக்குப் பாத்தியாடா?' என்றேன் சலிப்புடன்.

'என்னவாம் ரவீந்திரன், அந்த சயன்ஸ்; மாஸ்டர் லேப்டொப்பைக் கொண்டு வந்து ஸ்கூல் பிள்ளைகளையெல்லாம்  வழிகெடுக்கிறானென்டு கடிதம் எழுதித்தர மக்பூல் ஒத்துக்கிட்டானா?' என்று தனபால் ஆர்வமாய் என்னிடம் கேட்டான்.

மேசையின் விளிம்பிலே நின்று சுழன்று கொண்டிருந்த பேப்பர்வெயிட் மெல்ல நகர்ந்து சென்று கீழே விழுவதற்காகச் சென்று கொண்டிருந்தது. சட்டென்று அதைக் கைகளால் பிடித்து ஆட்டத்தை நிறுத்திவிட்டு,

'இல்ல தனபால், இன்டைக்கு அவனிருந்த நிலைமையில நான் அவனுக்கிட்ட நேரடியா கேட்க இல்ல.. ஆனா புதன்கிழமை காலையில நான் கேட்டதும்  அநேகமா ஒத்துக்குவானென்றுதான் நினைக்கிறேன்' என்றேன்.


-மூதூர் மொகமட்ராபி