தன் வயிற்றில் சுமக்கவில்லை என்பதை தவிர ஏறத்தாழ தனது மகனாகவே என்னை வரித்து அன்பு காண்பித்து வந்த ஒரு பெண்மணி நேற்றைய தினம் மரணித்து விட்டார்.
நிபந்தனையில்லாத அன்பை எப்போதும் என் மீது சொரிந்த அந்தப் பெண்மணி இத்தனை விரைவாக மறைந்துவிடுவார் என்று எதிர் பார்க்கவில்லை.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரைப்போய்ப் பார்த்து அன்பு மழையில் நனைந்து திரும்புவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தேன். இருந்தும் அவரது இறுதி நாட்களில் சுகவீனமுற்று வைத்திய சாலையில் இருந்தைக்கூட அறியாதவனாக மரணச் செய்தியை மட்டுமே பெறுபவனாக இருந்தது இப்போதும் குற்றவுணர்வின் தீயில் வைத்து என்னை வாட்டுகின்றது!
அவரது பெயரைக்கூட மரணச் செய்தி நோட்டீஸில் படித்துத்தான் நான் அறிந்த கொண்டேன். திருமதி அன்னப்பிள்ளை அழகுராசா என்ற இயற்பெயருடைய அவரை 'கங்குவேலி அக்கா' என்றுதான் நான் உட்பட குடும்பத்தினர் அனைவரும் அவரை அழைப்போம்.
இத்தனை முக்கியத்துவம் மிக்க பெண்மணியின் இறுதிச்சடங்குக்கு நான் வேண்டுமென்றே தாமதித்து சென்றேன். அவரை உயிரோடு பார்த்துப்பழகிய என்னால் ஒரு படுக்கையில் பிணமாக பார்க்க முடியாது என்பதுதான் அதற்கான காரணம்.
கங்குவேலி மயானத்தில் அவரைப்புதைத்த பின்பு, சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்த மாலையில் வயல்வெளியினூடே தனியாக மோட்டார் சைக்கிளில் திரும்புகையில், 'இது யானைக்காடு... நேரத்துக்கு போய்ச் சேர்ந்திடணும்' என்று முன்னம் ஒருமுறை இதே கங்குவேலிக்கு அக்காவை பார்க்கச் சென்றிருந்தவேளையில் கங்குவேலி அக்கா கூறியது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது!.
சென்று வாருங்கள் கங்குவேலி அக்கா!
-Mutur Mohammed Rafi