'மௌனகுரு என்று படம் வந்திருக்கு. பொலீஸ் கதை ஒன்று. ஒருக்காப் பாரேன்!'
எனது உறவினர் ஒருவர் போகிற போக்கிலே சொல்லிவிட்டுப் போனார். இருபத்து நான்கு மணிநேரமே போதாதிருக்கும் இன்றைய இயந்திர வாழக்கைச்சுழலில் தமிழ் திரைப்படமொன்றுக்காக இரண்டரை மணிநேரத்தை செலவிடுவதற்கு சட்டென்று உடன்பட முடிவதில்லை. அபூர்வமாக வெளிவரும் ஒரு நல்ல திரைப்படத்திற்காக மட்டுமே நேரமொதுக்கும் பழக்கமுண்டு. அதுவும் ஒரு முதற்தடவையாக பார்க்கும்போது ஒரு முழுப்படத்தை விட்டு விட்டுப் பார்த்து இரசிப்பது எனக்கு ஒத்தவராத ஒன்று.
மௌனகுரு பற்றி வேறு எதுவுமே தெரியாத நிலையில்தான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இப்போது சில வாரங்களாக அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாமல் அதையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். குறைந்த பட்சம் ஒரு ஆறு தடவையாவது முழுமையாகப் பாரத்திருக்கின்றேன். மிகவும் பிடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஓட்டிப் பாரத்ததற்கு கணக்கே கிடையாது. அப்படியென்ன அது? என்று கேட்பவர்களுக்காக இதை எழுதுகின்றேன்.
ஒன்றும் பிரமாதமான கதையோ பிரண்டமானமான காட்சியமைப்புகளோ நட்சத்திரப் பட்டாளங்களோ அசத்தும் தொழினுட்பக் கிறங்கடிப்புகளோ கிடையாது. அப்படி இருந்தும் மனதிலே பச்சக்கென படம் ஒட்டிக்கொள்வதற்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா? யதார்த்தம்..!
யதார்த்தமென்றால் யதார்த்தம், யதார்த்தமோ யதார்த்தம்!
ஆம். இதுவரைக்கும் தமிழ் சினிமா எத்தனையோ யதார்த்த சினிமாக்களைக் கண்டிருக்கின்றது. அண்மைக் காலத்திலே காதல், வெய்யில்...தொடங்கி ரேனிகுண்டா என்று பட்டியல் நீள்கின்றது.
வசூலைப் பற்றிய கவலை குறைவான ஒரு தயாரிப்பாளரும் கொஞ்சம் உலக சினிமாக்களில் பரிச்சயமுள்ள இயக்குனரும் சேர்ந்து விட்டால் ஒரு குடும்பக் கதையையோ சமூகக்கதையையோ யதார்த்தமாகச் சொல்வதற்கு நிறைய வாய்ப்புகளுள்ளது. ஆனால் ஒரு போலீஸ் கதையை யதார்த்தமாக சொல்வதற்கு நிச்சயம் இன்னும் ஆழமான திறமையும் துறைசார்ந்த அறிவும் தேவை.
தங்கப்பதக்கம் முதல் இப்போது மௌனகுரு வரை வந்த போலீஸ் படங்களில் குருதிப்புனல் ஓரளவு யதார்த்தமாகப் படம்பிடிக்கப்பட்டிருந்தது எனலாம். அதன் பிறகு வந்த படங்களில் பொதுவாக தொழினுட்ப ஆதிக்கமும் பிரமாண்ட அகங்காரமும் இருந்தளவுக்கு யதார்த்தம் இருக்கவில்லை.
சரி, இப்போது மௌனகுருவைப் பார்ப்போம்....
உள்ளுரில் படிக்கும் எதையும் முகத்துக்கு நேரே பேசும் சற்று மூடி டைப்பான கல்லூரி மாணவன் கருணா சிறு கைகலப்பு ஒன்றின் காரணமாக சென்னையிலே திருமணமாகிக் குடியிருக்கும் அண்ணனின் சிபாரிசோடு அங்கிருக்கும் அருள்தாஸ் கல்லூரியில் சேர்கின்றான். அண்ணனின் மாடிக்குடியிருப்பிலே ஏற்கனவே அண்ணியின் தங்கையும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான ஆர்த்தி தங்கியிருப்பதால் கல்லூரி விடுதியில் தங்க வேண்டியவனாகின்றான் கருணா.
அருள்தாஸ் கல்லூரி விடுதியில் தங்கியிருப்பவர்களின் கைத்தெலைபேசிகள் மணிக்கூடுகள் போன்ற சிறுசிறு பொருட்கள் மர்மமான முறையில் தொடர்ச்சியாக திருடுபோய்க் கொண்டிருக்கின்றன. அவ்வாறு திருடுபவன் என்றாவது ஒருநாள் அகப்படும்போது வசூலிப்பதற்காக காணாமல் போகும் பொருட்களின் விபரம் விடுதிப் பொறுப்பாளரினால் தேதிவாரியாக ஒரு புத்தகத்திலே குறித்த வைக்கப்படுகின்றது.
இதேவேளை சென்னை புறநகர்ப் பகுதியில் ஆள்அரவமற்ற வீதியில் கோடிக்கணக்கான கறுப்புப் பணத்துடன் செல்லும் கார் ஒன்று விபத்திலே சிக்குகின்றது. அந்த இடத்தில் எதேச்சையாக நின்றிருக்கும் உதவி கமிஷனர் மாரிமுத்து உட்பட போலீஸ் அதிகாரிகள் நான்குபேர் பணத்துக்கு ஆசைப்பட்டு குற்றுயிராய்க்கிடக்கும் கார்ச் சாரதியை அடித்துக் கொன்றுவிட்டு நழுவிவிடுகின்றார்கள்.
உதவி கமிஷனர் மாரிமுத்துவடன் வாடிக்கையாக உறவு வைத்திருக்கும் ஒரு விபசாரிப் பெண் மாயா மேற்படி கார் விபத்து மற்றும் கறுப்புப்பண அபகரிப்புப் பற்றி தனது சக அதிகாரியடன் அவர் பேசும் ஒரு தொலைபேசி உரையாடலை தந்திரமாக கமெரா ஒன்றில் பதிவுசெய்து விடுகின்றாள். அதனை வைத்து கமிஷனரை மிரட்டிப் பணத்தைப் பறிக்கும் உத்தேசத்துடன் தனது கூட்டாளிகள் இருவரை ஒரு தேனீர்விடுதிக்கு வரவழைத்து வீடியோவைக் காண்பிக்க அவர்களோ அது போலீஸ் விவகாரம் என்பதால் மறுத்துவிட்டுப் பின்வாங்கிச் சென்று விடுகின்றார்கள். அதேவேளை அவளது கைப்பையிலிருந்த வீடியோ கெமரா அதே தேனீர் விடுதிக்கு வந்திருந்த அருள்தாஸ் கல்லூரி மாணவர்களில் ஒருவரால் திருடப்பட்டுகின்றது. இதனால் குழப்பமடைந்த மாயா தலைமறைவாகி விடுகின்றாள்.
திருடப்பட்ட கமெராவில் பதிவுசெய்யப்பட்டிருந்த உரையாடல் உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்துவுக்கு அநாமதேயத் தொலைபேசி மூலமாக தெரிவிக்கப்பட திகிலடையும் மாரிமுத்து கோபவெறியுடன் விபச்சாரி மாயாவைத தேடுகின்றார்;. இறுதியில் மாயா அகப்பட்டுவிடுகின்றாள். மாரிமுத்துவிடம் அடிபட்டு உயிரைவிடும் மாயாவினால் அருள்தாஸ் கல்லூரி விடுதி விவகாரம் தெரியவருகின்றது.
இதனால் அருள்தாஸ் கல்லூரி விடுதியை இரகசியமாக கண்காணிக்கின்றனர் உதவி கமிஷனர் மாரிமுத்து குழுவினர். இதேவேளை மாயாவின் கமெரா உட்பட திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு பையில் இடப்பட்டு விடுமுறை நாளிலும் கூட விடுதியில் தங்கியிருக்கும் கருணாவின் அறைவாசலில் அவனுக்குத் தெரியாமல் வைக்கப்படுகின்றது. சரியாக கருணா அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருக்கும்போது உள்ளே வரும் போலீஸ்காரர்கள் இருவரும் கருணாதான் தங்களை மிரட்டிய சூத்திரதாரி என்று தப்பாக நினைத்து அவனைக் கடத்திச் சென்று விடுகின்றனர். கருணாவையும் மாயாவின் கூட்டாளிகள் இருவரையும் ஒன்றாக காட்டுப்பகுதி ஒன்றுக்குக் கொண்டு சென்று சுட்டுக்கொல்ல முனையும்போது ஏற்படும் குழப்பத்தில் கருணா மட்டும் எதேச்சையாக உயிர்தப்பி இரவோடு இரவாக கல்லூரி விடுதிக்கு மீண்டும் வந்து அதிபரிடம் மட்டும் நடந்ததைக் கூறுகின்றார்.
அதிபரும் தனது நெருங்கிய பொலீஸ் நண்பர் ஒருவர் மூலமாக சிக்கலைத் தீர்க்கலாம் என்று கூறி கருணாவை மறுநாள் காலையில் சந்திக்குமாறு அனுப்பி வைக்கிறார். ஆனால் அன்றிரவே மாரிமுத்து குழுவினரிடம் அகப்பட்டுக் கொள்ளும் கருணா ஒரு மனநோய் வைத்தியசாலையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்படுகின்றார். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் கல்லூரி அதிபர் வரவழைக்கப்பட்டு போலீசுக்கு வேண்டிய மனநோய் வைத்தியசாலை வைத்தியர் உதவியுடன் திட்டமிடப்பட்டு ஓர் மனநோயாளி எனச் சித்தரிக்கப்படுகின்றார். குடும்பத்தினரும் விவரம் அறியாது நம்பி அங்கேயே சிகிச்சை பெற ஒப்புதல் தருகின்றனர்.
அதேவேளை மூடிய வீட்டினுள் தூக்கில் தொங்கிக் கிடக்கும் மாயாவின் சாவை விசாரிக்க வரும் கர்ப்பிணியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளின் நேர்மையான நடவடிக்கைகள் மாரிமுத்து குழுவினருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கின்றது. ஆனாலும் அதனைக் குழப்புவதற்கு முயன்றால் சிக்கலாகி விடும் என்பதால் தள்ளியிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மாயா பற்றி விசாரித்துத் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கும்போது படிப்படியாக தனது மேலதிகாரிகளில் ஒருவரான மாரிமுத்து அடங்கிய நால்வர் குழுவினரின் தகிடுதத்தங்களும் கருணா அதிலே தேவையில்லாமல் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகின்றது. இதனால் அவர்கள் நால்வரையும் கைதுசெய்வதற்கு அவசியமான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கின்றார் பழனியம்மாள்.
மறுபுறம் மனநோய் வைத்தியசாலையில் இருந்து இன்னொரு நோயாளியின் உதவியுடன் தப்பியோடிவரும் கருணா தன்னைக் கொல்வதற்காகப் பிடித்துச் சென்ற நால்வரில் ஒருவரான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனைத் தந்திரமாகக் கடத்திவந்து தான் மனநோயாளி அல்ல என்ற உண்மையை பகிரங்கமாகக் கூறுமாறு தனது கல்லூரி வளாகத்தினுள்ளிருக்கும் பாழடைந்த கட்டிடத்தினுள்ளே கைத்துப்பாக்கி முனையிலே பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருக்கின்றான்.
இதை எப்படியோ மோப்பம் பிடிக்கும் மற்றைய மூவரும் கருணாவைப் பிடித்து விடுகின்றனர். இதன்போது அவர்களுக்கிடையில் நிகழும் வாக்குவாதத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மாரிமுத்துவின் துப்பாக்கிக்குப் பலியாகின்றார். அடுத்து கருணாவைத் தீர்த்துக்கட்டத் தயாராகும்போது அங்கு வரும் பழனியம்மாள் தலைமையிலான போலீஸ் குழுவிடம் மாட்டிக் கொள்கின்றனர்.
அவர்களிடமிருந்து கருணாவைக் காப்பாற்றி மாரிமுத்துவையும் மீதமிருக்கும் இரு போலீஸ் குற்றவாளிகளையும் கைதுசெய்ய முயலும்போது பழனியம்மாளுக்கு அவரது உயரதிகாரியிடமிருந்து வேறுவிதமான ஆணை வருகின்றது. அதன்படி பழனியம்மாள் பொறுப்பை மாரிமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகின்றது. மாரிமுத்து பழையபடி கருணாவை மனநல காப்பகத்துக்கு கொண்டு செல்ல முயல்கின்றார். இதை எதிர்பாராத கருணா வெகுண்டெழுந்து நிகழும் கைகலப்பில் உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்துவும் போலீஸ் அதிகாரிகள் மூவரும் கத்திக்குத்துக்குள்ளாகிக் கொல்லப்படுகின்றார்கள்.
நடந்ததை அறிந்து மீண்டும் திரும்பி வரும் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், கைகலப்பினால் சோர்ந்து இரத்தம் வழியும் கத்தியுடன் நிற்கும் கருணாவை மனநலக்காப்பகத்திற்குக் கொண்டு செல்வதாக உச்சகட்டக் காட்சி நிறைவு பெறுகின்றது.
இதுதான் கதை. கதையைச் சொல்லும்போதே இதில் புதுமையாக ஒன்றுமில்லை என்பது புரிந்திருக்கும். கதாநாயகன் சதிக்குள்ளாவதும் குற்றம் சுமத்தப்படுவதும் அதிலிருந்து விடுபடுவதற்காக நீதியையும் சட்டத்தையும் நம்பாமல் தப்பித்து வந்து சில சாகசங்களின் இறுதியில் காரணமானவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு சுபம் போடுவதும் தமிழ் சினிமாக்களின் அரைத்தமாவுகளில் ஒன்றுதானே. ஆனால் இதையெல்லாம் ஒரு சிறிய சினிமாத்தனமும் இல்லாமல் ஏதோ நாம் நேரிலே பார்த்திருக்க நடைபெறும் சம்பவங்கள் போல இருப்பதுதான் மௌனகுருவின் விசேடம். உரையாடலாகட்டும் பாத்திரப்படைப்புகள் மற்றும் அவற்றின் நடிப்பு வெளிப்பாடுகளாகட்டும் எல்லாமே வெகு இயல்பாகவுள்ளது.
எடுத்துக்காட்டாக ஒரு காட்சியைப் பாருங்கள்...
ஆளில்லா வீதியிலே கார் விபத்துக்குள்ளானதும் அதனைப் பார்த்து அங்கு ஓடிச் செல்லும் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உட்பட நால்வரும் சாரதி இறந்துவிட்டதாக நினைத்து விடுகின்றார்கள். அந்தப் பகுதிக்குரிய பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி என்பவருக்கு விபத்தைப் பற்றி அறிவிப்பதற்காக உதவி கமிஷனர் மாரிமுத்து கைத்தொலைபேசியில் முயன்று கொண்டிருக்கின்றார். அப்போது காரின் பின் ஆசனத்தை ஆராயும் ஒரு போலீஸ்காரர் ஒரு பெட்டி முழுவதும் பெருந்தொகையான கரண்ஸி நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து விடுகின்றார். அதன் பிறகு அவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடலை அப்படியே தருகின்றேன். வாசியுங்கள்...
'சார் ஒரு நிமிஷம்!'
(நால்வரும் பெட்டியைப் பார்க்கின்றார்கள்)
'ஃபுல்லா இருக்கா என்ன?'
'ஆமா சார்'
'ஒரு ஏழெட்டு சீ (கோடி) இருக்கும் போலிருக்கே?'
'தாராளாமா இருக்கும்..சார்!'
'இப்ப என்ன பண்ணணும் ஆங்?' என்று உதவி கமிஷனர் மாரிமுத்து கேட்க,
மற்ற மூவரும் ஆளையாள் பார்த்துக் கொள்கின்றார்கள்.
'நீங்கதான் சார் சொல்லணும்' -இன்ஸ்பெக்டர் செல்வம்.
'நாராயண மூர்த்திக்கு இன்னிக்குப் பெரிய கேஸ்!' என்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், முகத்தில் ஏக்கம் தொனிக்க.
'இப்பிடி ஆளே இல்லாத எடத்தில இவ்வளவு பணத்தை உட்டுட்டு அநியாயமாப் போயிட்டானே' -இது செல்வம்.
'ஒரு வண்டியையும் காணோம்..ஒரு ஈ காக்கா கூட இல்ல!' -இது ஹெட் போலீஸ் பெருமாள்
யோசித்தபடி கைத்தொலைபேசியை நெருடிக் கொண்டிருக்கும் உதவி கமிஷனர் மாரிமுத்துவிடம்,
'லைன் கெடைக்கல்லயா சார்?' எனக் கேட்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.
'ம்ம்...! அப்பிடியே வெலகி ஓடுறீங்களே ராஜேந்திரன்?'
'சார்! அது..'
'பயமா?'
'ப..யோ..ம்...அது வந்து'
'பேசாம நாமளே டீல் பண்ணலாம்..என்ன சொல்றீங்க?' -மாரிமுத்து.
'மாட்டிக்கிட்டா சார்?'
'மாட்ட மாட்டோம் ராஜேந்திரன்! க்ளியர் ஷொட்! செற்லாயிரலாம்!'
இந்த உரையாடலைப் பார்த்தால் இதிலே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விபத்துக்குள்ளான காரிலேயுள்ள பணத்தை அபகரிக்கும் எண்ணம் இருப்பது தெளிவாகப் புலனாகின்றது. ஆனாலும் தமது மேலதிகாரி மாரிமுத்துவிடம் அதை நேரடியாகத் தெரிவிக்க முடியாமல் அதற்குரிய சாதகங்களை எவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துகின்றார்கள் என்பதைப் பார்க்கலாம்.
இதுபோன்று எல்லாக் காட்சிகளிலும் இயல்பு இழையோடுகின்றது.
கதை சொல்லப்பட்ட விதமும் சிறுகிளைக் கதைகள் பிரதான கதையுடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ள விதமும் நேர்த்தியாகவுள்ளன.
நடக்கவே சிரமப்படும் கர்ப்பிணியான இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வெகு இயல்பாகவும் அழுத்தமாகவும் குற்றப் புலனாய்வில் ஈடுபட்டுத் துப்புத் துலக்குவது தமிழுக்கு ஓரளவு புதுசு. அத்துடன் துப்பாக்கியை ஸ்டைலாகப் பிடித்தபடி அலையும் தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பொண்ட் பாணி துப்புத்துலக்கர்களுக்கெல்லாம் நக்கலும் கூட.
போலீஸ்காரர்கள், விபச்சாரி மாயா, கல்லூரி அதிபர், அவரது மகன், மாணவர்கள், விடுதிப் பொறுப்பாளர், காவலாளி, கருணாவின் தாய் , அண்ணன், அண்ணி, காதலி ஆர்த்தி, மனநல வைத்தியர் என்று ஒவ்வொரு பாத்திரமும் மனதிலே அழுத்தமாய் பதியும் வண்ணம் கதையோட்டத்திலே இயல்பாக பொருந்திப் போகின்றார்கள்.
நட்சத்திரங்கள் மறைந்து பாத்திரங்கள் மட்டும் மனதில் நிற்பது புதிய இயக்குனரின் திறமைக்குச் சான்று. படத்தின் போக்குக்கு ஏற்ற விதத்தில் உறுத்தாத ஒளிப்பதிவும் இசையமைப்பும் படத்தொகுப்பும் இருப்பது ஆறுதலளிக்கின்றது.
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
(தொடரும்)
- Jesslya Jessly