Friday, June 22, 2012

யார்...? & யார்...?





யூகித்துப் பாருங்கள்!











நண்பர்களே!

கீழே தரப்பட்டிருப்பதை சற்றுப்படித்துப் பாருங்கள். இது, இந்திய தமிழ் சினிமாவிலே தத்தம் துறையிலே மங்காப்புகழுடன் இன்னும் இருந்துவரும் இரு பெரிய நட்சத்திரக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விடயம்.

ஒரு கலைஞரைப் பற்றி மற்றொரு கலைஞர் கூறியிருக்கும் ஒரு குறிப்பு இது. நீங்கள் இலகுவிலே கண்டுபிடித்துவிடாதிருப்பதற்காக மட்டும் ஓரிரு சொற்களை மட்டும் மாற்றியிருக்கின்றேன்.

இவர்கள் இருவரும் யார், யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம். முடியாது போனால் அல்லது விடையைச் சரிபார்க்க நினைத்தால் அடியிலே தருகின்றேன் பின்பு சாவகாசமாய் பார்த்துக்கொள்ளலாம்.



அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தெரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் அவராக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் அவர் நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
..............................???






இவர்களில் யார்?











 இவர்களில் யார்?

இவர்களில் யார்?



 இவர்களில் யார்?



















இவர்களில் யார்?







சரி, உங்கள் பொறுமையைச் சோதித்து போதும். இதோ விடை:


"அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும்.


இந்த பிள்ளைக்கு இசை தரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது. அந்த சாதுர்யம் தனக்கு இல்லை, என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது.


சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரிபோல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும்.


நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் இளையராஜாவாக இருக்க ஆசைப்பட்டிருப்பேன்.


அதேபோல் இளையராஜா நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.


சகபாலன்
கமல்ஹாசன்"




- 'Mutur'  Mohammed Rafi

Wednesday, June 20, 2012

மலையடியில் மரணிக்கும் மதநெறிகள்!







மூதூர்   'மூணாங்கட்டைமலை'

விவகாரம்:





னுராதபுரம் - பொலநறுவை - யாப்பஹுவ - குருநாகல்  - கண்டி - கம்பளை...       
                       என்று நமது இலங்கைத்தீவிலுள்ள சில நகரங்களின் பெயர்களை வரிசைக்கிரமமாகக்கூறிக் கொண்டு வந்தால் உங்களைப்போன்ற சிறகுகளின் நீண்டகால  வாசகர்களுக்கு உடனடியாக மனதிலே தோன்றுவது என்னவாக இருக்கும்?

இதுவும் ஒரு புதிதாக உருவான நீண்டதூர பேருந்து தடமோ என்று நினைக்க மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இலங்கையின் வரலாறுபற்றி சிறிதளவு அறிந்திருந்தாலே போதும் பண்டைய இலங்கையின் தலைநகரங்களின் இடம்பெயர்வு ஒழுங்கு என்பதை இலகுவாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
இதேபோல அதே அனுராதபுரத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றுமொரு ஊர்களின் வரிசைக்கிரமத்தைக் கீழே தருகின்றேன். இதனைப்பற்றி ஏதாவது புரிகின்றதா என்று முயன்று பாருங்கள்..

அனுராதபுரம் - தம்புள்ள - மூதூர் - தெகிவளை- காலி...

என்ன ஏதாவது புரிந்ததா நண்பர்களே? இருங்கள் விளக்கமாகக் கூறுகின்றேன்.

        மூன்று தசாப்தங்களையும் பல்லாயிரம் உயிர்களையும் கோடிக்கணக்கான பணத்தையும் மனித உழைப்பையும் ஏப்பம்விட்டதன் மூலம் நமது அழகிய இலங்கைத்தீவின் எதிர்காலத்தையே நாசமாக்கியது  உள்நாட்டு யுத்தம்.  அந்த பேரழிவு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், அண்மைக்காலமாக சிங்களப் பௌத்த பேரினவாதத்தின் அசிங்கம்பிடித்த ஆக்கிரமிப்புக்கும் அடாவடித்தனத்துக்கும் இலக்காகிவரும் முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களின் அல்லது வணக்கஸ்தலங்களின் ஊர்களின் ஒழுங்கு வரிசைதான் அது.


ஆம் நண்பர்களே, ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஆளைக்கடிக்கும் ஓநாய்கள்போல கடந்த வருடம் அனுராதபுரத்தில் ஒட்டுப்பள்ளம் எனும் பிரதேசத்திலே அமைந்திருந்த முஸ்லீம்களில் ஒருசாரார் புனிதமாக மதித்துப்போற்றும் கல்லறை ஒன்று அந்தப்பிரதேச பௌத்த மதகுருக்கள் சிலரின் தலைமையிலான உள்ளுர் காடையர்களினால் பொலீசார் வேடிக்கை பார்த்திருக்க உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டதை யாவரும் அறிவோம்.



அதனையடுத்து இலங்கையின் தூங்கா நகரமான தம்புள்ளையில் பௌத்த மதகுருக்கள் சிலரின் தூண்டுதல் வழிகாட்டலுடன்  60 வருடங்களுக்கும் மேலான காலப்பழமைவாய்ந்த பள்ளிவாசலைத் தகர்ப்பதற்கும் அங்கிருந்து அகற்றுவதற்கும் ஆர்ப்பாட்டக்குழு ஒன்று முயன்றனர். இதன்போது ஓரளவு பள்ளிவாசல் சேதத்திற்குள்ளானது.


அதே போன்று இனவாத சக்திகளால் தூண்டப்பட்ட இளைஞர் குழு தெகிவளையிலே காலம்காலமாக வசித்துவரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தொழுகைபுரியும் பள்ளிவாசலொன்றின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிட இப்போதும் முயன்று கொண்டிருக்கின்றனர்.




புத்தளம் - சிலாபம் வீதியிலுள்ள ஆரியசிங்களவத்தை கிராமத்திலே வசித்துவரும் முஸ்லீம் குடும்பங்கள் தமது சொந்த காணியிலே தொழுகைக்காக நிர்மாணம் செய்த தற்காலிக பள்ளிவாசலின் இருப்பை எதிர்த்து அமைதியின்மையையும் நெருக்கடியையும் ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்குழு ஒன்று அங்குள்ள முஸ்லீம்களை வற்புறுத்தி அந்த இடத்தை வெறும் குர்-ஆன் ஓதலுக்குரிய மதரஸாவாக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டத்தரணி ஆவணத்திலே கையெழுத்தும் பெற்றுள்ளனர்.


காலியிலே ஒன்றாக வாழ்ந்துவருகின்ற சிங்கள-முஸ்லீம் மக்களிடையே பிரிவினையையும் குரோதத்தையும் உருவாகிவிடும் விதமாக இனவாதசக்திகள் முஸ்லீம்களின் வியாபாரத்தலங்களின் மீது கதவுகளிலும் பூட்டுகளிலும் மனிதமலத்தை விசிறியும் பன்றியின் இரத்தத்தைப் தெளித்தும் காட்டுமிராண்டித்தனம் புரிந்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி அந்த முஸ்லீம் வர்த்தக நிலையங்களின் நீண்டகால வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.


இவ்வாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக முஸ்லீம்களின் மீது திட்டமிட்டதும் எழுந்தமானதுமான தாக்குதல்கள் நிகழ்ந்தவாறுள்ள நிலையிலே, தற்போது உள்நாட்டு இனமுறுகல் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலே ஒன்றான கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.





மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன.



மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது  கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்தல் தொழில் இப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்து வாழும் எத்தனையோ ஏழைக்குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயமாக இருந்து வருகின்றது.




இந்த நிலையில்தான் கடந்த 08.06.2012  வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி வண. சரணகீர்த்தி தேரோ வின் தலைமையிலே திடீரென பல வாகனங்களில் 20க்கும் அதிகமான பணியாட்கள் மூணாங்கட்டை மலைப்பகுதிக்கு வந்திறங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குன்றின் உச்சிக்குச் செல்வதற்குரிய படிக்கட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்குரிய உபகரணங்களும் இரும்பு மரக்கிராதிகளும் வந்திறங்கின. அத்துடன் அதே 'மூணாங்கட்டை மலை'  குன்றின் அடிவாரத்திலே  சிறியதொரு வணக்கத்தல வடிவிலமைந்த கொட்டில் ஒன்றையும் நிறுவும் முயற்சிகளையும் ஆரம்பித்தனர்.


இதனால் அப்பிரதேசவாசிகள் குழப்பத்திற்கும் பீதிக்குமுள்ளானார்கள். இதனையடுத்து இந்த விடயம் ஊருக்குள் வேகமாகப்பரவியது. விளைவாக ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி சர்வமதக்குழுவின் தவிசாளரின் தலைமையில் மலையடிவாரத்தில் ஆலய நிர்மாணத்திலே ஈடுபட்டுக்கொண்டிருந்த  பௌத்த விகாராதிபதியைச் சந்தித்துப்பேச முடிவு செய்தனர்.


விகாராதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களது மேற்படி நடவடிக்கைகளின் தீய விளைவுகளை எடுத்துக்கூறி சுமுகமான ஒரு இணக்கத்துக்கு வருவதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு 12.06.2012 செவ்வாயன்று அவர்கள் சென்று பேசியபோது வெகுண்டெழுந்த சேருவில விகாராதிபதி,  தவிசாளரையும் ஊர்மக்களையும் நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, 'நாங்கள் 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தநாட்டில் வாழ்பவர்கள். நீங்களோ 500 வருடங்களாகத்தான் இங்கே குடியேறியிருப்பவர்கள். நாங்கள் உரிய மேலிடத்தின் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். எங்களைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை. நாங்கள் நினைத்தால் இந்த நாட்டை விட்டே உங்களைத் துரத்துவோம்' என்றெல்லாம் சத்தமிட்டுள்ளார். இதிலிருந்தே அவர்களது உத்தேச பௌத்த ஆலய நிர்மாணிப்பின் நோக்கத்தினை  தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது.


மூதூர் பட்டினத்திலே வாழ்ந்துவரும் ஏறத்தாழ 90 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 அங்கத்தவர்களும் தமது ஆன்மீக பேணுதல்களை நிறைவேற்றுவதற்காக பௌத்த விகாரையொன்று ஏற்கனவே இருந்து வருகின்ற நிலைமையில் ஒரு சிங்களவர்தானும் குடியிருக்காத ஜபல்நகரிலே ஓர் பௌத்த ஆலயம் அமைப்பதற்கான தார்மீக நியாயம் எதுவுமே கிடையாது என்பதால் மூதூரிலுள்ள பல சிங்கள மக்களே ஆச்சரியப்படுமளவுக்கு சேருவிலை விகாராதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தனைக்கும் இந்த மலையடிவார பௌத்த ஆலயத்தின் நிர்மாணிப்பு வேலைகள் பற்றி மூதூரில் வாழும் சிங்களமக்களிடமோ மூதூர் பட்டின விகாராதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.


அதேவேளை, இந்த 'மூணாங்கட்டை மலை' குன்றுகளின் ஆக்கிரமிப்புக்கு வெறும் ஆலய நிர்மாணம் மட்டுமல்ல வேறு சில நோக்கங்களும் இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்தக்குன்றுகளில் பழங்காலப் புதையல்கள் இருப்பதாக இப்பிரதேச மக்களிடையே நீண்டகாலமாக ஓர் நம்பிக்கை நிலவி வந்திருக்கின்றது.


இதை உறுதிப்படுத்தும் விதமாக 1970 களிலே பௌத்த பிக்கு ஒருவர் புதையலை எடுப்பதற்காக உயிர்ப்பலி கொடுக்கும் நோக்கத்திலே இந்தக்குன்றின் உச்சிக்கு  குழந்தையொன்றைக் கடத்திச் சென்றுள்ள சம்பவத்தை பிரதேசமக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் தகவலொன்றை அடுத்து குன்றின் உச்சிக்கு விரைந்து ஏறிய அன்றைய மூதூர் பொலீசார் பிக்குவின் பலிபூஜையின் இறுதிநேரத்தில் அதிரடியாகப்புகுந்து அந்தக்குழந்தையைக் காப்பாற்றியதையும் குற்றவாளியான பௌத்த பிக்குவைக் கைதுசெய்து கொண்டுசென்றதையும் இன்றும் பல முதியவர்கள்  நினைவு கூருகின்றனர்.





எவ்வாறாயினும் இந்த மலையடிவார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிச்சயமாக வேறு உள்நோக்கங்கள் கொண்டது என்பதை யூகிப்பதற்கு பெரிய புத்திசாலித்தனம் ஒன்றும் தேவையில்லை. இவர்கள் ஆலயம் அமைப்பதும் பின்பு அந்த இடத்திலே மெல்ல மெல்ல அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதும் அதன்பின்னர் அந்தப் பிரதேசங்களிலே காலங்காலமாக வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதும் இலங்கையின் பிந்தியகால வரலாற்றுப் பாடங்கள். ஆனால், இவ்வாறான தூரநோக்கற்ற பல நடவடிக்கைளினால்தான் வளம்நிறைந்த நமது அழகிய தீவுதேசம் ஏறத்தாழ கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இயல்பாக அடைந்திருக்கவேண்டிய பொருளாதார அபிவிருத்தியையும் செழிப்பையும் இழந்து நின்றது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பதுதான் வியப்பைத் தருகின்றது.


அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர்களும் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கௌ;ளாமல் வாளாவிருப்பதையும் அறிய முடிகின்றது. பின்பு இந்த விடயம் குறித்து அண்மையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் மூதூருக்கு வந்திருந்தார்.
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக மூதூரில் நிகழ்ந்த சர்வமதக்குழு பிரதிநிதிகளின் சந்திப்பிலே அவர் உரையாற்றியபோது, 'அரசாங்கம் மூணாங்கட்டைமலை குன்றிலே ஆலயம் எதனையும் அமைப்பதற்கான எந்த அனுமதியையும் எவருக்கும் வழங்கியிருக்கவில்லை' என்று கூறிச்சென்றார்.




ஆகவே இதிலிருந்து உரிய மேலிடத்தின் அனுமதி பெற்றிருப்பதாக சேருவில விகாராதிபதி சர்வமதக்குழுவின் தவிசாளரிடம் கூறியது பொய்யான கூற்று என்று தெரியவருகின்றது. அவ்வாறாயின் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயற்பட்ட விகாராதியின்மீதும் மலைக்குன்றிலே பௌத்த கொடியை ஏற்றி தற்காலிகச் சிறுஆலயத்தையும் நிறுவிக்கொண்டிருக்கும் அவரது குழுவினர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விசனத்துடன் வினவுகின்றார்கள் மூதூர் மக்கள்.






எது எவ்வாறாயினும் மூதூர்ப்பிரதேசத்தில் வாழும் ஏறத்தாழ அனைத்து மக்களும் அமைதியான வாழ்க்கையையே விரும்புபவர்கள். ஆனால், ஆக்கிரமிப்புச் சம்பவத்தைத் தெடர்ந்து இங்கு வாழும் சகல இனமக்களின் மனதிலும் சந்தேகமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இந்த நிலை இவ்வாறே நீடிக்கும்போது பல விரும்பத்தகாத நிகழ்வுகள், அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இனமுறுகல் யுத்தவடுக்கள் இன்னும் மாறாதநிலையிலும் அமைதியாகவே இருந்துவரும் இந்தப் பிரதேசம் மீண்டும் போர்க்களமாக மாறிவிடக்கூடிய நிலையொன்று ஏற்படுமாயின் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர்.


இந்தப்பிரதேசத்தின் மக்களைப் பிரதிநிதித்துவம்புரியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளையும் தனிப்பட்ட நலன்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு நிலைமையை எடுத்துக்கூறி, உடனடியாக இந்த இயற்கைவளம் மீதான மத ஆக்கிரமிப்பையும் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்; செயற்பாடுகளையும் நிறுத்தவேண்டும் என்பதே இந்த நாட்டில் சமாதானமும் சகஜவாழ்வும் நிலைபெறவேண்டும் எனவிரும்புவோர் அனைவரினதும் விருப்பமாகும்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்!


- Jesslya Jessly 
(2012.06.20)

Sunday, June 17, 2012

மூதூர் : மலையும் வெறியும்





உயர மலையேறும் மதவெறிகள்...!

&
துயர நிலைவீழும்   மதநெறிகள்..!





போருக்குப்பிந்திய இலங்கையில் உள்நாட்டு மக்களிடமும்,வெளிநாட்டு மக்களிடமும் சில பொதுவான  நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் காணப்பட்டன. கோடிக்கணக்கில் பணத்தையும் ஆயிரக்கணக்கிலே உயிர்களையும் விழுங்கிய யுத்தம் ஓய்ந்தது. இனிமேல் விலைவாசி குறையப்போகின்றது. எவரும் எங்கும் எப்போதும் செல்லலாம். எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சமய கலாசாரங்களைப்பேணி நி;ம்தியாக வாழலாம் என்று அனைத்து இலங்கைமக்களும் நம்பியிருந்ததெல்லாம் முற்றிலும் நியாயமானவையே.


ஏனெனில் வெள்ளைமுள்ளிவாய்க்காலோடு யுத்தம் முடிவுக்கு வந்தகையோடு 'இது இலங்கை மக்களின் நாடு. இங்கு சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேதம்கிடையாது. உங்கள் அனைவருக்கும் சமத்துவமான வாழ்வு நிச்சயமாக உண்டு.' என அன்றுமுதல் கூறத்தொடங்கிய ஜனாதிபதி இன்றளவும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கூறிக்கொண்டுதான் இருக்கின்றார். மக்களும் ஜனாதிபதியின் தூய்மையான இந்த வாரத்தைகளை நம்பி அது நடைமுறையிலும் நிறைவேற வேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் மனதுக்குள் பிரார்த்தித்த வண்ணமுள்ளனர்.


இதே பிரார்த்தனை நாட்டின் அனைத்துப் பிரதேசத்திலும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு இருந்தது போன்றே மூதூர் பிரதேச முஸ்லிம்களுக்கும் பலமாக இருந்ததுண்டு. மூதூரின் வளத்தையும்  வாழ்வையும் மக்களையும் காக்கவென மூதூருக்கு உள்ளும் புறமும் இப்பிரார்த்தனைகள் ஒலிப்பதுண்டு.
2002  பெப்ரவரி மாதம் 2ம் திகதியன்று அரசு- விடுதலைப்புலிகளிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான போது 'இனியெல்லாம் சுகமே...' என எதிர்பார்த்திருந்த மூதூர் முஸ்லிம்களுக்கு பிரச்சினை, சிலுவை வடிவில் வந்தது.


மூதூர் - மட்டக்களப்பு பிரதான வீதியின்  64வது மைல்கல்லில் உள்ள ஜபல் நகரில் மூதூர் பிரதேசத்துக்கே தனியழகு சேர்ப்பதுதான் நில அடையாளமான இயற்கையின் கொடையாகிய மூணாங்கட்ட மலை என அழைக்கப்படும் குன்றுத்தொடராகும். அந்த 'சமாதான' காலத்தில் எல்லா மக்களுக்கும் பயன்பட்டுக்கொண்டிருந்த எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளமான மலையின் மீது திடீரென ஒருநாள் கொங்றீட் சிலுவைகள் முளைத்தன.


ஊருக்கே பொதுவான இயற்கைவளமொன்றின் மீது மத அடையாளத்தை இட்டுவைப்பது குறித்த மதத்துக்கும் அதனை விசுவாசத்துடன் பின்பற்றும் மக்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடல்லாமல் மக்களுக்கு மத்தியில் வீண் பதட்டத்தையும் தோற்றுவிக்கலாம் என அவ்வேளையிலே சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டனர்.


அவ்வாறிருக்கையில் மலையில் நிர்மாணிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலுவைகள் திடீரென அகற்றப்பட்டன. அவ்வாறு மர்மமான முறையிலே அகற்றியமை தெரியவந்த போது அவை மூதூர் முஸ்லிம்களால்தான் அகற்றப்பட்டதாக  ஆதாரமற்ற வீண்பழி ஒன்றை  அன்றைய புலிப்பயங்கரவாதிகள்  முன்வைத்தனர்.



அதுமட்டுமல்லாமல் அதனைச்சாட்டாக வைத்து மூதூர் முஸ்லீம்கள் மீது ஓர்  திட்டமிட்ட பெரியளவிலான தாக்குதலை புலிகளின் மறவர்படை மேற்கொண்டது. மல்லிகைத்தீவு ராசு, நாவலடி ரஞ்சன்(மூலப்பொட்டி) என அழைக்கப்படும் புலிகளின் மறவர்படை பிரதேசத்தலைவர்களால் பட்டப்பகலில் மூதூர் முஸ்லிம்களின் உயிர் உடமை மீது குறிவைத்துத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.


இதன்போது நான்கு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் அது முஸ்லீம்களின் புனித ரமழான் நோன்பு காலமாதலால் அதற்குத் தேவையான பேரீச்சம்பழம், அரிசி மற்றும் பலசரக்குப்பொருட்களை ஏற்றிவந்த முஸ்லிம் வர்த்தகர் காஸிம் ஹாஜியாரின் லொறி பச்சனூர் எனுமிடத்தில் மறித்து தீயிட்டுக்; கொளுத்தப்பட்டது.
மேலும் அந்த சமயத்திலே அறுவடைக்குத் தயாராகவிருந்த முஸ்லிம்களின் வயல்களுக்குள் நீரைத் திறந்து விட்டதுடன் கால்நடைகளையும் வயலுக்குள் சாய்த்துவிட்டு மகிழ்ந்தனர்.


ஏன் இந்த கடந்தகால ஞாபகங்கள் என்றால்,நியாயமற்ற வீம்புத்தனமான சமய அடையாள வெளிப்படுத்தல்கள்,திணிப்புகள் என்பன சாதாரண மக்களது வாழ்வில் எவ்வாறு பாரிய தாக்கங்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கின்றது என்பதை நாம் இரைமீட்கத்தான்.


ஆக, ஏற்கனவே எல்லோருக்கும் பொதுவான மூணாங்கட்டை மலைக்குன்று  தூரநோக்கற்ற மதசார்புள்ள விஷமிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியதனால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகள் முன் அனுபவமாக இருக்க, இப்பொழுது மீண்டும் மூணாங்கட்டைமலை விவகாரம் விகாரமாய் உருவெடுத்து மூதூர் மக்களை அச்சத்துக்கும் பதட்டத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.


அன்று சிலுவைகள், இம்முறை பௌத்த சமய அடையாளப்படுத்தல்கள்... இதனால் மூதூர் மக்களின் அச்சமும் பீதியும் பன்மடங்காகியிருக்கின்றது.  அண்மைக்காலமாக தீவிரப்போக்குடைய சில பௌத்த பிக்குகள் குண்டர்கள் புடைசூழ அநுராதபுர ஒட்டுப்பள்ளம் சியாரம் உடைப்பு, தம்புள்ள புனிதப்பிரதேச பிரகடனம் மற்றும் மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளிமீதான தாக்குதல், ஆரிய சிங்கள மாவத்தை மத்ரசாவுக்கு விடப்படும் அச்சுறுத்தல், தெகிவளை பள்ளிவாசல் மீதான பிக்குகளின் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் இலங்கை முஸ்லிம்களின் சமய அடையாளங்கள் மீதும், மதவிழுமிய நடவடிக்கைகள் மீதும் மதப் பின்பற்றல் குறித்த உரிமையின் மீதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. ஆகவே இதன்பின்னணியாக அல்லது இத்தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே மூதூர் ஜபல்நகர்மூணாங்கட்ட விவகாரத்தைப்பர்க்கவேண்டியிருக்கிறது.


அதாவது இதுவரையிலான முஸ்லிம் சமய அடையாளங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தம் பெரும்பாலும் சமய அனுஷ்டானத்துக்கு விடப்பட்ட சவாலாக இருக்க, மூணாங்கட்ட மலைப்பிரச்சினை சமய அனுஷ்டானத்துக்கும், வாழ்வாதாரத்துக்கும் சவால் விடுவதாக இருக்கிறது.
கடந்த 2008 ம் ஆண்டு சேருவிலை விகாரையைச் சேர்ந்த பிதம பிக்குவான சரணகீர்த்தி தேரோ அவர்கள், இம்மலையின் மீது பௌத்த சின்னங்கள் இருக்கின்றது எனக்கூறி சர்ச்சையை உண்டு பண்ணிய போது, அது பற்றி நேரில் கண்டு அறிவதற்காக மூதூர் சர்வமதக்குழுவினர் குறித்த பிக்குவுடன் சேர்ந்து மலையுச்சிக்கு ஏறினர். அங்கு பௌத்த புறாவஸ்த்து என்று பிக்கு சுட்டிக்காட்டிய அம்சத்தை அக்குழுவினர் ஆராய்ந்த போது அது 1989ல் இந்திய அமைதிகாக்கும் படையினர்(IPKF) மலை மீது தொலைத்தொடர்புக்கோபுரம் அமைத்து  அதனை அகற்றியபின் பழைமையடைந்து போயிருந்த சீமெந்துக்கட்டுத்தான் அது என அவ்விடத்திலேயே அது நீருபிக்கப்பட்டது.



அதே நேரம் அம்மலையுச்சியில் இருக்கும் கிறேவல் பாங்கான இடத்தில் கல்லில் வடிக்கப்பட்ட மிசான் கட்டைகள் நடப்பட்டடிருப்பது தெரிய வந்தது. அவ்விடயம் அப்போது பி.பி.சி.செய்தியிலும் ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது.


விடயம் இவ்வாறு மாறியதால், அத்தோடு அவ்விடயம் குறித்த பௌத்த பிக்குவால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் மூணாங்கட்டைமலையில் புத்தர் சிலை வைக்கும் சர்ச்சை அதிகார சக்திகளின் பக்கதுணையுடன் பூதாகரமாக எழுந்துள்ளது.


மூதூரைப் பொறுத்தவரையில் 1965ம் ஆண்டிற்குப்பின்பே சிங்கள மக்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுள் பல குடும்பத்தினர் தம் ஊரான கந்தளாய்க்கு திரும்பிச்சென்றிருக்கின்றனர். தற்போது மூதூர் பிரதேச செயலகத்துக்குள் 293 அங்கத்தவர்கள் கொண்ட 94 சிங்களக்குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது மார்க்க அனுஷ்டானத்துக்கென தபாலகத்தக்கருகில் ஒரு பெரிய விகாரையும் உண்டு.


இவ்வாறிருக்கையில் கடந்த 01.06.2012 அன்று வெள்ளிக்கிழைமை சுமார் மதியம் 12.25 அணியளவில் சேருவில பிரதம பிக்குவான சரண கிர்த்தி தேரோ அவர்கள் இருபது சிங்கள இளைஞர்களுடன் ஜபல் நகர்மலையடிக்கு வந்து மலையுச்சியில் புத்தர் சிலை வைப்பதற்கான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார். ஜபல் நகர் மலையானது,மூதூர் பிரதேசசiயின் ஆளுகைக்கும், பராமரிப்புக்கும் உட்ப்ட்ட ஒரு இயற்கைவளமாகும்.எனவே சேருவில தேர்தல் தொகுதியைச்சேர்ந்த பிக்குவும் குழுவினரும் பிரதேசசபையின் அனுமதி எதனையும் பெறாது மலையை அணுகுவதும்,இயற்கை வளமொன்றை மத ஆளுகைக்கு உட்படுத்துவதும் சட்டவிரோதமானது என பொதுமக்கள் அப்பிக்குவிடம் தம் ஆட்சேபனையை தெரிவித்தபோது தான் உரிய ஏற்பாடுகளோடு வந்து வேலையைக் காட்டகிறேன் என அபப்pக்கு கூறிச் சென்றுள்ளார்.


அவ்வாறு அவர் கூறிச் சென்றதன் பின்னர் சர்வமதக்குழுவினரோ,மக்கள் பிரதிநிதிகளோ குறித்த பிக்குவை அல்லது பௌத்தமதீpடத்தை அணுகி விடயங்களை விளக்கியிருக்கலாம் ஆனால் மக்கள்  அப்பாவித்தனமாக அரசியல் தலைமைகள் அனைத்தையும் வென்று வருவார்கள் என வாளாவிருந்தனர்.


ஏற்கனவே அநுராதபுர சியாரம் உடைப்புக்கு எதிராக வழக்குத்தொடர்வேன் நீதி பெற்று வருவேன். அது நான் செய்தாக வேண்டிய என் கடமை என அரசியல் தரப்பில் இருந்து மக்களை சூடாக்க விடுக்கப்பட்ட வழக்கமான வாய்ச்சவடால் அது என்பதை இனங்காணாமல் இன்னமும் தம் வாக்குப்பலம் வென்று வரும் என மக்கள் நம்பினர்.


இந்நம்பிக்கையின் விளைவு 12.06.2012அன்று தெளிவாகியது. அன்றைய தினம் சேருவில தேரோ, குழுவினருடன் வந்து மலையுச்சிக்கு செல்வதற்கான படிகள் அமைக்கும் கட்டுமானப்பண்களை ஆரம்பித்து வைக்கும் ஸ்தல பூஜா என்று சொல்லிக் கொண்டு சமய அனுஸ்டானத்துடன் பணிகளை ஆரம்பித்து வைத்தார். அதன் போது மூதூர் பிரதேச சபை தவிசாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஜபல்நகருக்குச் சென்று தேரோவை அனுகிய போது,தகாத வதார்த்தைப்பியோகங்களுடாக தான் தொல்பொருள் தினைக்களத்தின் அனுமதி பெற்றிருப்பதாகவும் நாங்கள் இந்த நாட்டுக்கு 2500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். நீங்கள் 500 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். என்னை தடுத்தால் அனைவரையும் ஊரைவிட்டே விரட்டியடித்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தியிருக்கின்றார்.


மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில்  எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்கான வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பன்னெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் மலையின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மiயைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

யதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத பூர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் (குடியேற்றினாலன்றி)பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன் 12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும்  இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். ஏனெனில் ஒரு இந்து வழிபாட்டிடம் அமையப்பெற்று அல்லது இஸ்லாமிய வழிபாட்டிடம் அமையப்பெற்று அதுநாளடைவில் அங்கிருக்கும் இயற்கைவளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரிகட்டச்செய்து புனிதப்பிரதேச பிரகடணம் செய்து பூர்வீகமாக வாழும் மக்களையும் அவர் தம் வழிபாட்டிடத்தையும் அசிங்கமானது எனக்குறி அனைத்தையும் வன்முறை மூலம் அகற்றுமாறு தாக்குதல் தொடுத்ததில்லை.


ஆனால் அறுபதுவருடப்பழமைவாய்ந்த தம்புள்ளைப் பள்ளிவாசலும்,காளிகோவிலும் இன்று பௌத்த தேரோக்களின் பார்வையில் அகற்றப்படவேண்டிய அசிங்கங்களாகத்தெரிகின்றன. இவ்வாறு ஒவ்வொரு சிறுபான்மைப்பிரதேசத்திலும் சுத்திகரிப்புத் தாக்குதல்கள் சட்டத்தால் கட்டுப்படுத்தமுடியாதளவுக்கு நடைபெற்றுவருவதை நாளாந்தம் கண்கூடாகக் கண்டு கொண்டுதானிருக்கின்றோம்.



அந்த வகையில் தற்போது ஜபல் நகர் மலைமீதான புத்தர் சிலை நிறுவுதலானது,  எல்லாவற்றையும் போன்ற ஒரு சமய அடையாளம் என்பதற்கு அப்பால் எல்லோருக்கும் பொதுவான இயற்கைவளம் மீதான ஒர் ஆக்கிரமிப்பு என உள்ளுர் மக்கள்அச்சம் கொள்வதில் உண்மையும்,; நியாயமும் இருக்கிறது.
 


தற்போது தம் முதற்கட்ட இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் வேலைகள் சரண கீர்த்தி தேரோவின் தலைமையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் குறித்த தேரோ, அல்லது அவரது சீடர்கள் மலையில் பாறாங்கல்லுடைப்பதற்கு தடை விதிக்கலாம்.(அப்போது 87 மைல்களுக்கு அப்பால் உள்ள கந்தளாயிலிருந்து பல்லாயிரம் ரூபாக்களைச் செலுத்தி பாறாங்கற்களை கொள்வனவு செய்யவேண்டிவரும்)அல்லது விகாரைக்கு வரிகட்டி உடைக்குமாறு கட்டளை பிறப்பித்து கல்லின் கொள்விலையை அதிகரித்துக்கொண்டு போகலாம். அல்லது இவை யாவற்றையும் வென்று அடுத்த சில ஆண்டுகளிலோ,எதிர்கால சந்ததியை நோக்கியோ புனிதப்பிரதேசப் பிரகடனம் புறப்பட்டு வரலாம். அப்போது  கல்லுடைத்தலுடன் தொடர்புடைய ஜீவனோபயத்தை நம்பிவாழும், வாழப்போகும் மக்கள் (தற்போது கல்லுடைத்தலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜீவனோபாயத்தை உடைய குடும்பங்களின் எண்ணிக்கை - 488) பாதிக்கப்படுவார்கள்.




மேலும், மலையைச்சூழவுள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை புனிதப்பிரதேசம் விழுங்கிவிடலாம். அப்போது மக்களின் ஜீவனோபாயம் வீதிக்கு வந்தவிடலாம். மொத்தத்தில் உள்ளுர் மக்களது வாழ்வும் வளமும் கேள்விக்குறியாவதற்கான சூழலே கட்டமைக்கப்படுகிறது. என நாட்டுநடப்பை கருத்திற் கொள்ளும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர் ஒருவர் உள்நாட்டு யுத்தத்துக்கு முன்பும், பின்பும் திருகோணமலை கன்னியாய் வெந்நீருற்றை தரிசித்தவராக இருப்பின், அங்கு உள்ளுர் மக்களது மத அடையாளத்திற்கு நிகழ்ந்துள்ள கதியை நன்கறிவார்.முன்பு அங்கு இஸ்லாமியப் பெரியாரின் அடக்கத்தலம், பள்ளிவாசல்,சிவன் கோவில் என்பனபோன்ற வற்றை மட்டுமே கண்டிருப்பார். அங்கு  பௌத்த சமய அடையாளத்தையும் கண்டிருக்க முடியாது. ஆனால், இன்று... யுத்தத்திற்குப்பிந்திய கன்னியாயில் பௌத்தசமய அடையாளத்தையன்றி வேறெதனையும் அங்குகாண முடியாதள்ளது. இது யுத்தத்துக்குப்பிந்திய இலங்கைவாழ் சிறுபான்மை மக்களது சமய, கலாசார, பண்பாட்டு அம்சங்களுக்கு நேர்ந்துவரும் கதியின் ஒரு சோறுபதம்.

-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்.


Ethnic                        Muslim   Tamil        Sinhala
Families                    10,221       8,194           94
Population                 40,101      27,153        293
Male                          19,824      12,970        139
Female                       20,277      14,183        154
Percentage (%)           59.37         40.20        0.43
                                            



     (statistics-2011 D.S. Mutur)