Thursday, October 27, 2011

சிந்தனைக்கு....



நம்மையே சிறையிடும் நமது வட்டங்கள்!





மது காலடியிலே வளரும் எதிர்காலப் பெருவிருட்சங்களான நமது சின்னஞ் சிறுவர்களை பற்றியும் அவர்களது மனப்பாங்குகளைப் பற்றியும் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

அவர்களது பிஞ்சு மனங்களில் இயல்பாகவே எழும்  வினாக்களையும் அந்த வினாக்கள் நமது  பழமைவாத துருப்பிடித்த சிந்தனைகளுக்கு அடிக்கின்ற சாவுமணிச் சங்கடங்களையும் பற்றிச் சிறிது யோசித்துப் பார்ப்போமா?


'அப்பா டைனோசர் உண்மையிலேயே உலகத்துல இருந்துச்சா?'
என்று  ஆரம்பக்கல்வி படிக்கும் ஒரு சிறுவன் கேட்க,

'இதென்ன கேள்வி...இருந்துச்சுதானே?!' என்பார் தந்தை.

'அப்படியென்டா ஏன் அது இப்ப இல்ல?' 
'அது..அது  வந்து.. அது எல்லாம் செத்துப் போயிட்டுது'

'எப்படிச் செத்திச்சு?'

'ஆ..அது அந்தக் காலத்துல..பெரிய அழிவு வந்து செத்துட்டுதுகள்'

'அழிவு என்டா..எப்படி? சுனாமி மாதிரியா?'

'ஆங்...  ஆமா....ம்! சுனாமி வந்து எல்லாம் ஒரேயடியா தொலைஞ்சிட்டுது!' என்றார் அப்பா உற்சாகத்துடன்! அழிவு என்ற சொல்லை சிறுவனுக்கு எப்படி விளக்குவது என்று முழித்தவருக்கு அவனே எடுத்துக் கூறியதிலே கொண்டாட்டம்! ஆனால் அவரது மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

'சுனாமில பூனைநாய் எல்லாம்தானே  செத்துச்சு...அதெல்லாம் ஒண்ணும் விடாம இல்லாமப் போக இல்லையே அப்பா?'

' அது வந்து...வந்து..டேய்! இதெல்லாம் உனக்கேண்டா...? உன்ட பாடத்தை மட்டும் படித்தால் போதாதா கண்ணா?' என்று சமாளிக்கத்தானே நம்மில் பல பேர் நினைக்கின்றோம்.

தவிர, அவனுக்கு/அவளுக்கு சிறு வயதிலேயே இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு அதன் வழியில் சிந்தனைத் திறனை வளர்த்துச் செல்வதற்கு முயல்பவர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள்.


சிந்தித்துப் பார்த்தால் நாம், இளம் அரும்புகளான நமது  பிள்ளைகளின் இயல்பான அறியும் ஆற்றலை  வளர்த்துக் கூர்மையாக்குவதற்குப் பதிலாக அதனை நமது வசதிகளுக்கு ஏற்றவாறு மழுப்புகின்றோம் என்பதுதான் உண்மை. இதனை நாம் விரும்பியோ விரும்பாமலோ செய்து கொண்டுனிருக்கின்றோம்.

மேலே  உரையாடலில் சில பெற்றோர்களால் பிள்ளையின் கேள்விகளுடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியாத இயலாமை புலப்படுவதைப் பாரத்திருப்பீர்கள். இத்தகைய பெற்றோரால் ஆர்வமும் தேடல் முனைப்பும் நிரம்பிய தமது வாரிசுகளின் அறிவுப்பசிக்குத் தீனியிட முடிவதில்லை. இதன் காரணம் நமக்குள்ள அறிவெல்லாம் வெறுமனே நாம் ஈடுபடும் தொழில்சார்பான அல்லது துறைசார்பான  சில வட்டங்களுக்குள் சிக்கி இருப்பதுதான்.

அந்த வட்டச் சிறைகளுக்குள்ளிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நாமே விரும்புவதில்லை. இதற்கு இயல்பான சோம்பேறித்தனமும் ஒரு காரணம்.  வேறு சிலருக்கோ சும்மா இருப்பதிலே கூட ஒரு சுகம்  இருக்கின்றது.
இதனைப் புரிந்து கொண்டு பெற்றோராகிய நாம் வாசித்தல், கேட்டல், தேடுதல் மூலமாக நிறைய விடயங்களை அறிந்து கொண்டிருப்பது மிகவும் அவசியமானது அல்லவா?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!


 
- Jesslya Jessly

No comments:

Post a Comment