'ஹலோ கேப்டன்.. திஸ் ஈஸ் ஃப்ரம் க்லாலம்பூர் கன்ட்ரோல் டவர்!'
'யெஸ்.. லவ்ட் என்ட் க்ளியர். இட்ஸ் எம். எச். த்ரீ செவன் ஸீரோ. கேப்டன் ஸ்பீக்கிங்..!' பதிலளித்தபடி கடிகாரத்தைப் பார்த்தார் தலைமை விமானி ஷஹாரி அஹமட் ஷா. நேரம் ஜீஎம்டீ 17:05 அருகிலிருந்த அவருடைய உதவி விமானி ஃபாரிக் அபு ஹமீட் தனது ஆசனத்தில் அமர்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். பாவம், காற்றைக் கிழித்து அசுர வேகத்தில் விரையும் விமானத்தின் முன்புறம் இருந்தபடி எவ்வளவு நேரம்தான் இருண்ட வானத்தையும் நட்சத்திரப் புள்ளிகளையும் வெட்டியாய் பார்த்துக்கொண்டிருப்பான். அவனை லேசாய் ஒரு தட்டுத்தட்டி எழுப்பிய ஷஹாரி ஹெட்போனைத் தலையில் மாட்டும்படி சைகையால் காண்பிக்க அவ்வாறே செய்துவிட்டு அவரையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'ஈஸ் எவரிதிங் ஓகே..?' என்று காதுக்குள் இரைந்தது கண்ட்ரோல் டவர்.
'யா! எவ்ரிதிங் ஓகே. ப்ளையிங் ஓவர் த கல்ப்ஃ ஒப்ஃ தாய்லேண்ட், த ப்ளைட் ஓன் ஓட்டோ பைலட் மோட்.. வெதர் கண்டிஷன் ஓல்ஸோ குட் என்ட் பெர்பெக்ட்! ஓல் ரைட்.. குட்நைட்!'
'குட்நைட், மலேசியன் த்ரீ ஸெவன் ஸீரோ!' என்று தானும் விழித்திருப்பதைக் காண்பிப்பதற்காக உளறிவிட்டு அசடு வழிந்தான் ஃபாரிக். அத்தோடு கோலாலம்பூர் விமான நிலைய ரேடார் மையத்திலிருந்து காதுக்குள் ஒலித்தவாறிருந்த பெண்குரல், 'குட்நைட்.. தேங்க்யூ' எனும் இறுதி இரு வார்த்தைகளுடன் அமைதியானது.
ஐந்து மணிநேரத்தில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் தரையிறங்க வேண்டிய போயிங் 777-2000 ரக பயணிகள் விமானம் சரியாக ஜீஎம்டீ 16:40க்கு பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வானுக்கு ஏறியிருந்தது. புறப்பட்டு இருபத்து ஐந்து நிமிடங்களுக்குள் தாய்லாந்து வளைகுடாவுக்கு மேலாகப் பறந்து உச்சபட்ச உயரமான பன்னிரண்டாயிரம் அடியை எட்டிப் பிடித்து விட்டது. இனிமேல் சீனாவின் பீஜிங் ஆகாய எல்லையை அடையும் வரை அவ்வப்போது கண்ட்ரோல் டவர்களிலிருந்து வரும் தொந்தரவுகளுக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு ஏதுவும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. சில விடயங்கள் தவிர எல்லாவற்றையும் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட விமானத்தின் தன்னியக்கச் செலுத்தியே கவனித்துக் கொள்ளும்.
ஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு ஃபாரிக்கிடம், 'ஓகே யங்மேன், இனி நீ நிம்மதியாகத் தூங்கலாம்!' என்றார் ஷஹாரி.
'தேங்க்யூ கேப்டன், அந்த சப்பை மூக்கன்கள்ற ஊர் வந்ததும் எழுப்பி விடுங்க.. எதுக்கும் பார்த்து ஓட்டுங்க.. முன்னால லொறி ஏதும் வந்திடப்போகுது..' என்று கண்ணைச் சிமிட்டிவிட்டு அவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.
'நல்ல பைலட்றா நீ!' என்று அவன் தலையை விரல்களால் கலைத்து விட்டு மீண்டும் நேரத்தைப் பார்க்க அவரது கைக்கடிகாரம் ஜீஎம்டீ 17:29 ஐக் காட்டியது.
இதுவரை எத்தனையோ தடவை இந்த ஏர்-லைனர் விமானத்தை இதே ஆகாயத் தடத்தில் ஓட்டிச் சென்று திரும்பியிருக்கின்றார் ஷஹாரி. ஆனாலும் இம்முறை செல்லும் பயணம் அவரைப் பொறுத்தவரை சற்றுத் திகிலானது. அதற்குக் காரணம் இன்றைய தினம் இதே விமானத்தில் பணிப்பெண்களில் ஒருத்தியாக வந்திருக்கும் ரோஸி. ஒரு போயிங் பயணிகள் விமானத்தினுள் அதுவும் விமானிகளின் காக்பிட் அறைக்குள்ளே யாருமே செய்வதற்கு நினைத்துக் கூடப்பார்த்திராத ஒன்றை அந்தப் பணிப்பெண்ணின் ஒத்துழைப்போடு இன்று அவர் செய்யப்போகின்றார். இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் பயணிகள் பகுதியிலிருந்து கேப்டன் ஷஹாரியும் ஃபாரிக்கும் இருக்கும் காக்பிட் அறைக்குள் வந்துவிடுவாள். அதற்கு முன்பு திட்டமிட்டபடி இரண்டு காரியங்களை ஷஹாரி செய்தாக வேண்டும். இரண்டுமே விதிமுறைகளுக்கு மாறானவை. ஆனால் வேறுவழியில்லை. அவற்றை செய்தால் மட்டுமே அவரது வெகுநாள் கனவு நிறைவேறும்.
முதலாவதாக விமானத்தின் முதற்கட்டத் தொலைத்தொடர்பைத் துண்டித்தார். இரண்டாம் பகுதியையும் துண்டிக்க கையை உயர்த்தியவர் சில வினாடிகள் யோசனைக்குப் பின்பு பின்வாங்கி விட்டார். அதற்குக் காரணமிருந்தது. இரண்டாம் கட்டத்தையும் உடனடியாகத் துண்டித்தால் விமானம் கட்டுப்பாட்டு தலைமையகத்துடனான தொடர்புகளை முழுமையாக இழந்துவிடும். அப்படி மட்டும் நடந்து விட்டால் விமானம் எங்கோ விபத்துக்குள்ளாகிவிட்டதாக நினைத்துக் கொண்டு உடனடியாக இராணுவ விமானத்தை அனுப்பித் தேட ஆரம்பித்து விடுவார்கள். அது அவரது திட்டத்தைக் குழப்பிவிடும் என்பதால் ஒத்திப்போட்டார்.
இரண்டாவதாக தன்னருகிலிருக்கும் கோ-பைலட் ஃபாரிக்கை அமைதியாக்க வேண்டும். குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை மணிநேரத்திற்கு விமானி அறைக்குள் நடப்பது எதுவுமே அவனுக்குத் தெரியக்கூடாது. தூங்கிக் கொண்டிருந்த அந்த இருபத்திமூன்று வயது அப்பாவி இளைஞனின் முகத்தைப் பார்க்க ஷஹாரிக்குப் பாவமாக இருந்தது. சிறிது சோம்பேறி என்றாலும் அவன் நல்ல பையன். விமானப் பயணத்தில் அலுப்புத்தட்டும் போதெல்லாம் உருது மொழியில் காதல் கவிதையெல்லாம் பாடி ஷஹாரியை உற்சாகப்படுத்துவது அவன் வழமை. என்ன செய்வது வேறுவழியில்லை.
'ஐ'ம் ஸொறி ஃபாரிக்!' என்று நினைத்தவாறு தன் கிட்பேக்கினுள்ளிருந்த குளோரபோஃம் ஸ்ப்ரேயரை வெளியிலெடுத்தார்.
'என்ன பாஸ் அது..? சென்ட்டா.. ஏயர் ப்ரஷ்னரா?'
ஷஹாரி திடுக்கிட்டு, 'ஏய் நீ இன்னும் தூங்கல்லியா..?' என்று கேட்டார்.
'அஹ்! இடையில நீங்க எழுப்பினதால தூக்கமே வருதில்ல கேப்டன்' என்று சோம்பல் முறித்தவாறு எழுந்திருக்க முயன்றான் ஃபாரிக்.
'சரி, இதை அடிச்சுவிடுறேன். இனி நல்லாத் தூக்கம் வரும்' என்றபடி ஷஹாரி அவன் முகத்தில்; அதை வேகமாய் அவர் விசிறியடிக்க நிமிடத்தில் அவன் தலைதொங்கிப்போனது. இனிமேல் சீன எல்லை வரும் வரை அவன் எழுந்திருக்கப் போவதில்லை.
சிறிது நேரத்தில் ஷஹாரி எதிர்பார்த்தபடியே காக்பிட் கதவின் பஸ்ஸர் லேசாய் அலறியது. ரோஸிதான் வந்திருக்கின்றாள்.
'யெஸ், கமின்!' என்றதும் காக்பிட்டின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓட்டோமெட்டிக் பாதுகாப்புக் கதவுகள் தானாக திறந்து திறந்து மூடும் மெல்லிய ஒலிகளுக்குப் பிறகு ஆளுயர செலூலோயிட் பொம்மை போல அழகிய பெண்ணொருத்தி ஒரு ட்ரேயில் இரு மதுக்கிண்ணங்களில் பொன்மஞ்சள் நிறத்திரவத்தை ஏந்திக்கொண்டு உள்ளே வந்தாள்.
'ஹாய் ரோஸி!'
'ஹாய் கேப்டன்! நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டாள்.
'ஏய்.. பொறு பொறு! என்ன அவசரம்? அதுதான் இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே..'
'ஓ! அபூ வேற தூங்கிட்டானா?' என்று அப்போதுதான் ஃபாரிக்கைப் பார்த்து விட்டுக் கேட்டாள். ஃபாரிக்கை அவள் அப்படித்தான் அழைப்பது வழக்கம்.
'இல்லை, நான்தான் தூங்க வச்சேன்'
'பாவம், என்னைப் பார்த்து எப்பவுமே ஜொள்ளு விடுற பையன். என்ன பண்ணீங்க கேப்டன் அவனை..?'
'ஒண்ணுமில்ல.. பீஜிங் வரும்வரை தூங்க ஆசைப்பட்டான். லேசா இதை முகத்தில் அடிச்சேன்.. தூங்கிட்டான்..! வேணும்னா உனக்கும் அடிச்சு விடட்டுமா..?'
'ஓகே.. அப்புறம் யாரோடு..?' என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென நாக்கைக்கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள். ரோஸி எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றிலுமே ஓர் அழகும் நளினமுமிருந்தது. பெல்ஜியம் பளிங்குச்சிலை ஒன்று உயிர்கொண்டு காக்பிட்டினுள் நடமாடுவது போல ஜொலிக்கும் அவள் அழகையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் கேப்டன் ஷஹாரி. அவர் மனதிலே ஏழுவருடங்களுக்கு முன்பு இதே மலேசியன் ஏர்-லைன்ஸில் அவர் இணைந்த ஆரம்ப காலத்தில் பழகிய அவளுடைய தாய் லிசி தோற்றம் நிழலாடியது.
ரோஸியின் தாய் லிசியை கேப்டன் ஷஹாரிக்கு நன்கு அறிவார். இதே மலேசியன் ஏர்-வேய்ஸில் ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஒரு சிரேஷ்ட பெண் அதிகாரியாக அவள் இப்போதும் பணியாற்றுகின்றாள். லிசி ஷஹாரியை விட ஒன்பது வயது பெரியவள் மட்டுமல்ல சேவையிலும் பல வருடங்கள் சீனியர். ஆனால் பார்வைக்கு எப்போதும் இளமையாகத்தான் தெரிவாள். ரோஸியோடு அவள் சேர்ந்து வருவதைப் பார்த்தால் லிசியை 'அக்காவா தங்கையா?' என்று அசட்டுத்தனமாகக் கேட்பீர்கள். அப்படியொரு உடல்வாகு லிசிக்கு.
லிசி ஒரு தமிழ்ப் பெண்; சிறு திருத்தம்: தமிழ் பேசாத தமிழ்ப்பெண். இருநூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய பரம்பரை அவளுடையது. தாயும் மகளும் தாய்மொழி உட்பட அனைத்தையும் ஏறத்தாழ மறந்துவிட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நுனிநாக்கு ஆங்கிலம் மலாய் மொழி இரண்டிலும் மாற்றி மாற்றிப் பேசுவார்கள். இருவரின் பெயரின் பின்னால் மட்டும் முன்னோர்கள் போனால் போகிறது என்று ஒட்டிக்கொண்டு வருகின்றார்கள். 'லிசி மகாலிங்கம்' என்ற தனது முழுப்பெயரை எப்போதாவது சொல்ல வேண்டியிருந்தால் கூட, 'லிசி, மாவ்- லிங்- கெம்' என்றுதான் உச்சரிப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ரோஸிக்கு அது கூட வராது என்பது வேறு விடயம்.
2006ல் மலேசியன் ஏர்-லைன்ஸின் இளம் விமானிகள் தேர்வு ஒன்றுக்காக ஷஹாரி தனது ஊரான மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் வந்திருந்தார். அன்றுதான் லிசியை அவர் முதன் முதலாகப் பார்த்திருந்தார். சாதாரணமாக அழகிய பெண்களைப் பார்த்தாலே வந்த வேலையெல்லாம் மறந்துபோகும் அவருக்கு. பார்த்ததுமே சொக்க வைக்கும் லிசி போன்ற பேரழகியை விடுவாரா என்ன? அவளைப் பின்தொடர முயன்று பாதியில் தவறவிட்டு விட்டார். அதன் பின்பு அந்த வளாகத்தைச் சுற்றிச் சுற்றித் தேடியும் அவளை எங்குமே காணக் கிடைக்கவில்லை அவருக்கு.
அடுத்து வந்த நான்கைந்து நாட்களில் அதற்கெல்லாம் நேரமிருக்கவில்லை ஷஹாரிக்கு. முதல் சுற்றிலே இருபத்து மூன்றுபேரிலிருந்து ஏழு பேரை மட்டும் சலித்து சலித்துத் தேர்ந்தெடுத்தார்கள். அதிலே ஷஹாரி மட்டுமே மலேசியக் குடிமகன். ஏனையவர்களில் இரண்டு உக்ரேனியர்களும் மூன்று சிங்கப்பூரியன்களும் ஒரு பிலிப்பினோவும் இருந்தார்கள்.
கோலாலம்பூரிலிருந்து 350 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் புளோவோ பினாங் எனும் தீவிலுள்ள பயிற்சி விமானத்தளத்துக்கு அழைத்துச் சென்று இரண்டு வாரங்கள் தங்க வைத்தார்கள். தேர்வாகிய ஏழுபேருக்கும் மலேசியன் ஏர்-லைனர் போயிங் ரக விமானங்களை ஓட்டுவதற்குரிய முழுத் தகுதியும் இருக்கின்றதா என்பதைப் பரீட்சித்துப் பட்டை உரித்தார்கள்.
அது முடிந்ததும் மற்றொரு நேர்முகத் தேர்வு. அதிலே கல்வி, தொழினுட்பத் தகைமைகளை மட்டுமல்ல விமானிகள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விபரங்களையும் குடும்பப் பின்னணிகளையும் துருவித்துருவி விசாரித்தார்கள். உலகின் பயங்கரவாத இயக்கங்கங்களோடு அவர்களுக்கு எதுவித தொடர்பும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கடினமான கேள்விகள் கேட்டுப் பொறுமையைச் சோதித்தார்கள்.
இவையெல்லாம் முடிவடைந்தும் இறுதி நேர்முகத்தேர்வு ஒன்றும் இருந்தது. அதற்காக மீண்டும் கோலாலம்பூர் விமானத்தளத்தின் பொறியியலாளர் வளாகத்திற்கு வரவேண்டியிருந்தது. அங்கு காத்திருந்தபோதுதான் லிசியை மீண்டும் கண்டார் ஷஹாரி. இம்முறை அவள் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருத்தியாக கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்தாள். தேர்வு விமானிகள் பற்றிக் கூறப்படும் குறிப்புகளை மடிக்கணினியில் நிசப்தமாகப் பொறித்துக் கொண்டிருந்தாள். பளிங்குப் பூச்சாடியில் வைத்த ஒற்றைச் சிவப்புரோஜா போல தனியாக ஜொலித்த அவளையே மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்ததில் ஒலிபெருக்கியில் தன் பெயர் ஏலம் விடப்பட்டதைக்கூட கவனிக்கவில்லை ஷஹாரி. பின்பு சுதாரித்து அடித்துப் பிடித்து தாமதமாக அவர் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த கோட்சூட் ஆசாமிகள் கேட்ட முதல் கேள்வி:
'யங்மேன், ஷஹாரி அஹமட் ஷா என்பது உண்மையிலேயே உன்னுடைய பெயர்தானா?'
இறுதி நேர்முகத் தேர்விலே வெற்றி பெற்ற விமானிகள் நால்வரும் மலேசியன் ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்கள் ஒரு பயிற்சி விமானிகளாகக் கடமையாற்ற வேண்டியிருந்தது. தவிர, அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியன் ஏர்லைனர்களிலே உதவி விமானியாகவும் சென்று திரும்ப வேண்டியிருந்தது. அப்போது பைலட் பயிற்சிப் பிரிவில் புதிதாகத் தெரிவான விமானிகளுக்கு லிசி மகாலிங்கம்தான் பொறுப்பாக இருந்தாள். பயிற்சி பறப்புகளுக்குரிய நாள் அட்டவணை விபரம் மற்றும் மலேசியன் ஏர்-லைனர்களில் அனுபவமிக்க விமானிகளுடன் உதவி விமானிகளாக யார் யார் செல்வது என்பது பற்றியெல்லாம் லிசி மூலமாகத்தான் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
இதற்காக ஒவ்வொரு தடவையும் லிசியைச் சந்திக்கும்போதெல்லாம் அவளது அழகும் கவர்ச்சியான அசைவுகளும் ஷஹாரியைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. இதனால் அவளோடு தனிப்பட்டரீதியில் நெருக்கமாகி நட்புக்கொள்வதற்காக அவள் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தார். ஆனால் அவளோ அவருடன்; வெகுகாலம் தொழில்ரீதியான பேச்சு வார்த்தைகள் தவிர வேறு எதுவிதபிடியும் தராமலே இருந்து வந்தாள். பின்பு ஒருநாள் திடீரென அவரை கோலாலம்பூரிலுள்ள பிரபல உணவுவிடுதி ஒன்றிற்கு இரவு உணவுக்காக வருமாறு கைத்தொலைபேசியில் செய்தி அனுப்பியிருந்தாள்.
அது போதா ஷஹாரிக்கு? தன்னிடமிருந்த மிகச்சிறந்த ஆடைகளைத் தெரிவு செய்து அணிந்து வெகுஉற்சாகமாக அங்கு சென்றிருந்தார். அத்தேர்டு தான் நினைத்தவளை அடைந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு அவர் மனம் துள்ளியது. ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒன்று. ஆம், ஷஹாரியை அன்பாக வரவேற்று பேசிக்கொண்டிருந்த லிசி தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது எனும் அதிர்ச்சியான உண்மையை அவருக்குக் கூறினாள்.
பாடசாலை வயதில் பருவக்கோளாறில் தான் ஹொங்கொங் வாலிபன் ஒருவனைக் காதலித்து திருமணம் புரிந்ததையும் தற்போது அவனை விவாகரத்துச் செய்துவிட்டு தனியாக வசிப்பதையும் கூறிய அவள் தனக்கு டீனேஜில் ஒரு மகள் கூட இருப்பதாகவும் அவளை கோலாலம்பூரிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஓர் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கவைத்து படிப்பித்து வருவதாகவும் கூறினாள் லிசி. தனது தன் வாழ்வை மகளுக்காகவே அர்ப்பணித்திருப்பதால் இனிமேல் அவரைத் தன் வாழ்க்கையில் தலையிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள். ஷஹாரி ஏமாற்றமடைந்தாலும் லிசியின் துன்பமான கடந்தகால மணவாழ்க்கைதான் அவளை அளவுக்கு மீறிய எச்சரிக்கையுடன் வாழ நிர்ப்பந்தித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அவளின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருந்தார்.
அதன் பிறகு வெகுகாலம் ஷஹாரி அவளைத் தொந்தரவு செய்யவேயில்லை.
ஆனாலும் விதி லிசியையும் ஷஹாரியையும் வேறுவிதமாக இணைத்து விளையாட ஆரம்பித்தது. ஷஹாரி முழுநேர விமானியாக ஆகிய அதே இரண்டு வருட காலத்தில் லிசியின் மகளான ரோஸி தன் கல்லூரிப்படிப்பை முடித்து இதே மலேசியன் ஏர் லைன்ஸில் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இணைந்து கொண்டதையும் ரோஸியாகவே கேப்டன் ஷஹாரியிடம் மனதைப் பறிகொடுத்ததையும் வேறு எப்படிச் சொல்வது?
தாயின் அழகை ரசித்த கேப்டன் ஷஹாரிக்கு அவளையே அச்சில் வார்த்தது போன்ற அழகு மகளை மட்டும் கசக்குமா என்ன? தன்னுடைய உயரதிகாரியான லிசி மகாலிங்கம் அறியாத வண்ணம் ரோஸியின் காதலை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனாலும் ஒரு மெய்ப்பாதுகாவல் அதிகாரியைப்போல எங்கு சென்றாலும் தன் மகள் ரோஸி கூடவே லிசியும் அலைந்தாள். இதனால் காதலர்கள் இருவரும் தொலைபேசுவதைத் தவிர எங்குமே தனிமையில் சந்திக்க முடியவில்லை. எத்தனையோ மாதங்கள் எத்தனையோ வழியில் முயற்சித்தும் இருவருக்கும் தனிமை என்பதே கிட்டவில்லை. சகல வழிகளையும் முயன்று தோற்று கடைசியில் வேறுவழியின்றித்தான் இந்த திட்டத்தை....
'கேப்டன், இப்பிடியே நீங்க யோசிச்சிட்டிருந்தா நானும் இவனைப்போல தூங்கிட வேண்டியதுதான்..?' என்று ஷஹாரியைக் கலைத்தாள் ரோஸி.
'ஓல்ரைட் டியர்! இதோ நான் ரெடி!' என்று எழுந்து சென்று ஷஹாரி பணிப்பெண் சீருடையிலிருந்த அவளை முகர்ந்துபார்த்துக் கொண்டிருந்த அதேவேளையில் அத்தனைபேரையும் சுமந்தபடி பறந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான ஜெட்விமானம் தாய்லாந்து வளைகுடாவைத்தாண்டி வியட்நாமிய ஆகாய எல்லைக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.
'சே! ரொம்ப மோசம் கேப்டன் நீங்க..? இதுக்கெல்லாம் போய் யாராவது பறக்கிற ப்ளைட்டை தெரிவு செய்வாங்களா..? தப்பித்தவறி மாட்டிக்கிட்டா இனிமே நாம் ப்ளைட்ல இருக்க மாட்டோம்.. ஜெயில்லதான்.!'
'என்ன பண்றது ரோஸி, எங்காவது ஹோட்டல்ல வச்சுக்கலாம்னா.. நீதான் உன் அம்மா பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி திறியிறியே! அவவும் பொடிகாட் மாதிரி உன்னையே வாட்ச் பண்ணிகிட்டு இருக்கிறா..!'
'நான் என்ன பண்றது கேப்டன்? அவவுக்கு தன்னை மாதிரியே என்னையும் யாராவது ஏமாத்திடுவாங்களோன்னு பயம்.. பாவம் அவ என்னை விட்டா அவவுக்கு வேற..' என்று லேசாக விசும்ப ஆரம்பித்தாள் ரோஸி.
'சரிதான் அம்மா சென்டிமென்ட்.. ஆரம்பிச்சாச்சு! இனி நீ நோர்மலாக அரைமணிநேரமாகுமே' என்று ஏமாற்றத்துடன் அவளை விட்டு விலகிச்சென்ற மீண்டும் விமானத்தின் கட்டுப்பாட்டு விசைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தார் ஷஹாரி.
'ஓகே.. ஐ'ம் ஓல்ரைட். கேப்டன், இப்ப கொஞ்சம் என்னைப் பாருங்க' என்றாள். ஷஹாரி திரும்பிப் பார்த்தபோது அந்த அழகுப்பதுமை தன் சீருடைக்கு விடைகொடுத்து விட்டு உள்ளாடைகளுடன் மட்டும் நின்று கொண்டிருந்தாள்.
அதற்குப் பிறகும் ஷஹாரி சும்மா நின்றுகொண்டிருப்பாரா என்ன? 'ஓ! மை ஸ்வீட்!' என்று எழுந்துபோய் அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.
திடீரென ரோஸி விலகி மயக்கத்தில் சரிந்து கிடந்த ஃபாரிக்கைக் காண்பித்தாள் 'ஐ ஃபீல் வெரி ஷை கேப்டன்!' என்று சிணுங்கினாள் ரோஸி.
'ஐயோ ரோஸி.. அவன் முழுமயக்கத்திலிருக்கிறான்.. இப்ப ப்ளேன்ல இருந்து தூக்கிப்போட்டாலும் தெரியாது அவனுக்கு! எனிவே, ஹேவ் எ குட் ஐடியா' என்று எழுந்து போய் தன் கோர்ட்டைக் கழற்றி மயங்கிக் கிடந்த ஃபாரிக்கின் முகத்தை முழுமையாக மூடிவிட்டு மீண்டும் வந்து அணைத்துக் கொண்டார் ஷஹாரி.
'சரி, அது என்ன கேப்டன் முன்னால இருட்டில கறுப்பா என்னென்னவோ தெரியுது.. மலைகளா அது?' அவரது அணைப்பிலிருந்தபடியே விமானத்தின் முன்புற காற்றுத்தடுப்புக் கண்ணாடி வழியாக ஆகாயத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டாள் ரோஸி.
'மோதிடாதா நம்ம ப்ளைட்?'
'சான்ஸே இல்ல, பன்னிரண்டாயிரம் அடி உயரத்திலே மலையெல்லாம் கிடையாது. அதெல்லாம் உன்னோட பிரமை ரோஸி! கமான் பேபி!' என்றபடி அவளை மீண்டும் வாரி அணைத்துக் கொண்டார் கேப்டன்.
சுற்றிலும் நவீன இலத்திரனியல் கருவிகளும் இணைப்பு வயர்களும்; நிறைந்த அந்த விமானி அறையினுள் மென்மையான முத்தங்களோடு ஆரம்பித்த அவர்களின் காதல் உல்லாசம் மலைகளிலிருந்து பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரும் நீரோடையைப் போல படிப்படியாக வேகம் பிடிக்க ஆரம்பித்தது.
இருவரினதும் ஆவேச அசைவுகளின் கவனக்குறைவான ஒரு தருணத்திலே கட்டுப்பாட்டு விசைகளில் ஒன்று எதேச்சையாக அழுத்தப்பட்டு விட, அதுவரை பீஜிங்கை குறிவைத்து கிடையாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் பிரமாண்டமான அலுமினியப்பறவை, தென்கிழக்குத்திசை நோக்கித் திரும்பியதையும் அதன் கீழே வெகுதூரம் வரை பரந்து கிடக்கும் இந்துமகாசமுத்திர கடற்படுக்கையை நோக்கிச் சாய்வான கோணத்திலே சிறிது சிறிதாக அது சரிய ஆரம்பித்ததையும் யாரும் கவனிக்கவில்லை.
-மூதூர் மொகமட் ராபி
(2014.04.05)