Thursday, May 2, 2013

நல்லுபதேசம் Vs.பதில் பதேசம்

 

னிய நண்பர்களே,
 
அண்மையில் ஒரு நண்பர்  நல்லுபதேசம் எனும் தலைப்பிலே மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு எனது பதிலை அனுப்பியிருந்தேன்.  அவற்றை நீங்களும் படித்துப் பாருங்கள். எனது பதில் நல்லுபதேசத்திற்கு அவர் இன்னும் பதில் தரவில்லை. அவ்வாறு தருவாராயின் அதனையும் எதிர்காலத்தில் இணைக்கின்றேன்.
 
 
 
அன்புள்ள இஸ்லாமிய சகோதரியே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜப்னா முஸ்லிமில் வெளியிடப்பட்ட பழைய கட்டுறை ஒன்றைத் தேடிச்செல்லும்போது ஒரு கொமாண்டில் உங்களைப் பார்த்தேன். உங்களைப் பற்றிய தகவல்களை வாசித்தேன்.
 
சகோதரியே! நானும், நீங்களும் உலகிலுள்ள அனைவரும் வீணாகப் படைக்கப்பட்டவில்லை. நாம் முஸ்லிம்கள். மறுமை வாழ்வு பற்றி நம்பிக்கை வைத்துள்ளவர்கள். சுவர்க்கம் பற்றியும், அதன் இன்பங்கள் பற்றியும், நரகம் பற்றியும், அதன் அகோரம் பற்றியும் அறிந்துள்ளோம்.
சகோதரியே! ஷைத்தான் எங்களை எப்போதும் வழிகெடுப்பவன். நரகில் தள்ளுவதே அவனின் குறிக்கோள்.
 
உங்கள் விபரங்களில் பல மார்க்கத்தின் அடிப்படைக்கு மாற்றமானதாக இருப்பதைப் பார்த்து கவலையடைந்தேன். ஓரிரு வரிகள் உங்களுக்கு உபதேசமாக எழுதுவோம் என்றே எழுதுகிறேன். நேர்வழி அல்லாஹ்விடமிருந்து மட்டுமே.
 
இசைகளிலும், சங்கீதங்களிலும், சினிமாக்களிலும் மூழ்கி வாழ்ந்த பலர் இன்று மண்ணறையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட சோதனை எனும் இவ்வாழ்வில் அவர்கள் தோல்வியுற்றவர்கள். நீங்களும் அந்நிலையிலே வாழாது இஸ்லாமிய ஓர் பெண்ணாக, இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணி வாழ்பவளாக இருந்தால் படைத்தவன் அல்லாஹ்வின் அன்பும் உங்களுக்குக் கிடைக்கும். மறுமையில் சுவர்க்க மாதராக நீங்கள் மாறிவிடுவீர்கள். எனவே மனிதனை இறை சிந்தனையை விட்டும் ஒதுக்கும் உலக இன்பங்களில் மூழ்கி மறுமையில் கைசேதப்படுவதை விட இறைவனின் பொருத்தத்துக்குரியவளாக வாழ்வதே ஈருலக வெற்றிக்கான வழி என்பதை ஞாபகமூட்டுகின்றேன்.
சகோதரன்
அபூ ஸஃத்
 
 
 
 
நண்பரே அபூ ஸஃத்
 
உங்களது அக்கறைக்கு மிக்க நன்றி.
 
ஜாஃப்னா முஸ்லீம் தளத்தில் பிரசுரமான எந்தக் கட்டுரைக்கான பின்னூட்டத்தினை  படித்து இந்த 'நல்வழிப்படுத்தும் முயற்சி" யில் நீங்கள் இறங்க வேண்டியேற்பட்டது என்பதை குறிப்பிடவில்லையே.. !
 
ஆனாலும் இதுவரையில் நான் எனது கருத்துக்களை சரியாகத்தான் கூறியிருக்கின்றேன் என்பதிலே எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
 
இஸ்லாமியப் பெண் என்பவள் முட்டாளாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. இறைவன் அருளிய சமத்துவமானதும் உண்மையானதுமான மார்க்கத்தை இடையில் வந்துபோன ஆண்கள் நீங்கள் உங்கள் நலன்களுக்கேற்றபடியெல்லாம் வளைத்து பெண்களின் நலன்களுக்கு எதிராக ஆக்கி வைத்திருப்பதற்காக உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
 
பெண்ணிடமே பிறந்து பெண்ணிடமே வளர்ந்து வாலிபப்பருவம் வந்ததும் பெண்ணையே கேலி செய்யும் நீங்கள் எங்களுக்கு நல்வழிகூறும் தகுதியற்றவர்கள். பெண்ணிடம் இன்பம் துய்ப்பதும் பின்பு வயதாகி நாடி தளர்ந்ததும், ஆண்களைப் பாவத்தில் வீழ்த்த வந்த பிசாசுகள் நாங்கள் என்று பயான் செய்வதும்தானே ஆண்களாகிய நன்றி கெட்ட மனிதர்களின் குணம்...?
 
எங்களது கல்வியை உரிமைகளை நசுக்குவது பற்றித் தட்டிக்கேட்டால் உடனே மேற்கத்திய அரைகுறை ஆடையணியும் பெண்களோடு எங்களை நீங்களாகவே ஒப்பிட்டு தாழ்த்துகின்றீர்கள். உங்களுடைய ஆண் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக நாங்கள் ஒன்றும் தறிகெட்டு வாழ ஆசைப்படுகின்றோம் என்று அர்த்தமில்லை.
 
ஒழுக்கத்தை முதலிலே நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். ஒருபெண் சிறிது அரைகுறையாக வந்தாலும் அவளைப் பார்த்து மனதாலேயே கற்பை இழப்பவர்கள் ஆண்களாகிய நீங்கள்தான். உங்களது பலகீனங்களை மறைக்கத்தான் நீங்கள் பெண்களை போர்த்திக் கொண்டு இருக்கச் சொல்லுகின்றீர்களே தவிர நல்ல நோக்கத்தில் அல்ல. ஆம் பெண்ணை சக மனிதனாக எண்ணாத மானங்கெட்ட கோழைகள் நீங்கள்.
 
பெண்களுக்கு சமவுரிமை தராத விடயங்கள் ஆண்களாகிய உங்களுக்கு எவ்வளவு புனிதமாக இருந்தாலும் அது எங்கள் கால்தூசுக்குச் சமானம்.
 
ஜெஸ்லியா ஜெஸ்லி