Thursday, April 4, 2013

சுஜாதா : ஒரு முரண்நோக்கு



டந்த சில ஆண்டுகளில் தமிழுக்குப் பல விதங்களில் பங்களித்த ஆளுமைகளின் மறைவு தொடர்ந்து துக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையின் மறைவு நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சிட்டி, ஆதிமூலம், லா. ச. ரா. என இப்பட்டியல் நீள்கிறது.


சுஜாதா இவர்களில் இருந்து வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருப்பினும் ஒரு காலகட்டத்தில் வாசகர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடும் பட்டியலில் ஒதுக்கிவிடக்கூடியவர் அல்ல. சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா. அவரோடு வெகுஜன தளத்தில் எழுதவந்தவர்களுக்குப் பின்னர், சில தலைமுறை வெகுஜன எழுத்தாளர்கள் ஜொலித்து மறைந்த பிறகும் சுஜாதா வெகுஜன தளத்தில் தொடர்ந்து நாயகனாக நின்றார். இன்று வெகுஜன தளத்தில் நுழையும் பெரும்பான்மையான இளைய தலைமுறையினர் எவ்வாறு வேகமாகத் தேக்கமடைந்து காலாவதியாகிவருகிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய செய்தி இது.


பலரையும் போல் சுஜாதாவை நானும் என் பதின்களில் வெகுஜன இதழ்களில் படித்திருக்கிறேன். அவரது நாவல்கள்மீதான ஆர்வம் பதின்கள் முடியும்வரை நீடிக்கவில்லை. பின்னர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் செயல்படத் தொடங்கிய பிறகு காலச்சுவடு ஆசிரியராக அவருடனான உறவு பெரிதும் எதிர்நிலையிலிருந்தே ஏற்பட்டுள்ளது. வணிகப் பண்பாட்டிற்கு எதிராக ஒரு சிற்றிதழ் இயக்கத்தை முன்னெடுத்தவர் காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமி. அக்காலகட்டத்தில் வெகுஜனப் பண்பாட்டின் நாயகனாக நின் றவர் சுஜாதா. இருப்பினும் காலச்சுவடு சுஜாதாவை உரிய இடங்களில் அங்கீகரிக்கத் தயங்கவில்லை.


'தமிழ் இனி 2000' நிகழ்வை நாங்கள் நடத்தியபோது, 'கணினியும் தமிழும்' அமர்வு அவருடைய தலைமையிலேயே நடந் தது. எங்கள் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அவர் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் 'அற்றைத் திங்கள்' நிகழ்விற்கு அவரை அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவரது உடல்நிலை கருதி அழைக்காமலேயே இருந்துவிட்டோம்.
அதேநேரம் அவருடைய எழுத்துக்கள் சார்ந்தும் கருத்துகள் சார்ந்தும் பல முரண்பட்ட கட்டுரைகளும் விவாதங்களும் காலச்சுவடில் இடம்பெற்றுள்ளன. சுஜாதாவும் காலச்சுவடை அதிகமும் பாதகமாகவே சுட்டிவந்திருக்கிறார். ஆனால், சுந்தர ராமசாமியின் எழுத்தைப் பற்றி அவர் எப்போதுமே உயரிய மதிப்பீட்டை வெளிப்படுத்திவந்தார்.


சு. ரா. வுக்கு சுஜாதா பற்றிய மதிப்பீடு இருந்தது. அவரை ஒரு 'ஜீனியஸ்' என்று சு. ரா. கருதினார். தன்னை வெகுஜன தளத்தில் சமரசப்படுத்திக் கொண்டதால், தமிழ்ச் சமூகம் அவரது பங்களிப்பைக் குறைவாகவே அடைந்துள்ளது என்றும் கருதினார். அவரது மேலோட்டமான அணுகுமுறை, பாலியல் கொச்சைப்படுத்தல் பற்றிய கடும் விமர்சனமும் சு.ரா.வுக்கு இ ருந்தது. ஒரு எதிர்வினையில் 'வணிகச் சீரழிவின் நாயகன்'1 என்று சுஜாதாவைச் சுட்டினார் சு.ரா. அறிவியல் தமிழுக்கு அவரது பங்களிப்பைப் பற்றிய மரியாதையும் சு. ரா. வுக்கு இருந்தது. சிங்கப்பூர் நா. கோவிந்தசாமிக்கு எழுதிய அஞ்சலிக் கட்டு ரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:


கணினியில் பொது விசைப்பலகை - பொதுக் குறியீட்டு முறை உருவாக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடித் தொடர்ந்து அவர் முனைந்து வந்தார் என்பது தெரிகிறது. அவர் கண்டறிந்த உண்மைகள் என்ன? அந்த உண்மைகள் எந்தளவுக்கு இன்று நமக்குப் பயன்படும்? இவை பற்றி வாசகர்கள் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற வேண் டும். கணினித் துறையில் நுட்ப விபரம் கொண்ட ஒருவர்தான் இதனைத் தெளிவுபடுத்த முடியும். தமிழ் வாசகர்கள் அறியும் வகையில் சுஜாதா இதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.


தீவிரமான விஷயங்களை மேலோட்டமாகவும் சில சமயங்களில் அலட்சியமாகவும் சுஜாதா எழுதுவது பற்றிய வருத்தமும் அவருக்கு உண்டு. குவளைக்கண்ணனுக்கு அவரது கவிதைத் தொகுப்பு பற்றி சு. ரா. எழுதிய ஒரு கடிதம் நூல் மதிப்புரையாக காலச்சுவடில் வெளிவந்தது.



'கிட்டதட்ட கவிதைகள்' என்ற உபதலைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும். இது கவிதைக்கு எதிரான ஒரு வேடிக்கை மனநிலையை உருவாக்குகிறது. இந்த வேடிக்கை மனோபாவம் தமிழில் ஒரு இதழாலும், ஒரு பிரபல எழுத்தாளராலும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவது'3
என்று குறிப்பிடுவது சுஜாதாவைத்தான் என நினைக்கிறேன். (அழுத்தம் என்னுடையது)


சுஜாதா ஒன்றிரண்டுமுறை தெற்குப்பக்கம் வந்தபோது வீட்டிற்கு வந்துவிட்டு சு. ரா. வைப் பார்க்க முடியாமல் போனது பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். 80களின் இறுதியில் இருக்கலாம், பீட்டர் புருக்கின் 'மகாபாரதம்' நாடக நிகழ்வு பெங்களூரில் நடைபெற்றபோது சு. ரா. வைச் சந்தித்த சுஜாதா, அவரும் இணைந்துகொண்டு காலச்சுவடைத் தொடர்ந்து நடத்து வது பற்றிப் பேசியிருக்கிறார். அந்தத் திட்டத்தை சு. ரா. முன்னெடுக்கவில்லை. சுஜாதா இதனால் மிகவும் மனம் புண்பட்டார் என நினைக்கிறேன். 1991இல் காலச்சுவடு ஆண்டுமலர் வெளிவந்தது. கோமல் சுவாமிநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முதல் பிரதி ஒன்று சுபமங்களாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடுத்த இதழிலேயே சுஜாதாவின் மிக எதிர்மறையான விமர்சனம் சுபமங்களாவில் வெளிவந்தது. சுஜாதாவே தன்னை அழைத்து, தான் விமர்சனம் செய்வதாகக் கூறிப் பெற்றுக்கொண்டதாகக் கோமல் கூறினார். அவ்வாறு தான் செய்வது பற்றியும் முற்றிலும் தீவிரத் தளம் சார்ந்த அம்மலரை விமர்சிக்கத் தனக்கிருக்கும் தகுதி பற்றியும் சுஜாதாவுக்கு இருந்த உறுத்தல் அக்கட்டுரையிலேயே வெளிப்பட்டது.



இதற்கான உன் தகுதி என்ன என்றால் காலச்சுவடு மதிப்புரைக்காக சுபமங்களாவுக்கு இந்தப் புத்தகத்தை அனுப்ப - அவர்கள் எனக்கு அதை அனுப்பி விமரிசனம் எழுதச் சொன்ன ஒரே காரணம்தான். இருந்தும் இதை எழுதுவதில் எனக்கு இஷ்டமே.4



சு. ரா. வின் கடுமையான எதிர்வினையும் சுபமங்களாவில் (ஏப்ரல் 92) வெளிவந்தது. காலச்சுவடில் பங்கு பெற முடியாது போனதால் தொடர்ந்து காலச்சுவடைச் சீண்டிவந்தார் என்றும் பிற்காலத்தில் காலச்சுவடு 'போன்ற' ஒன்றை உருவாக்கித் தன் ஆற்றாமையை சுஜாதா தீர்த்துக்கொண்டார் என்றும் எண்ண இடமிருக்கிறது.
 

2000ஆம் ஆண்டை ஒட்டி சுஜாதாவை அவர் வீட்டில் நண்பர்களுடன் சென்று சந்தித்தேன். சந்தித்த காலத்தையும் நோக்கத் தையும் இப்போது தெளிவாகச் சொல்ல முடியவில்லை. காலச்சுவடு இதழைப் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் எழுதியிருந்ததை அப்போது 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எடுத்துப் போட்டிருந்தோம். அதைக் கு றிப்பிட்டு 'உண்மையிலேயே எனக்குப் புரியவில்லையப்பா' என்றார். அதற்கு முன்னர் பேச்சுவாக்கில் சில தண்டிதண்டி ஆங்கிலப் புத்தகங்களை எடுத்துக்காட்டியிருந்தார். அவை கண் முன்னால் மேசையிலிருந்தன. 'இவை புரியும்போது காலச்சுவடு புரியவில்லையா?' என்று கேட்டேன். சில கட்டுரைகள் புரியவில்லை என்றார். 'சில' என்பதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே என்றேன். சிரித்துக்கொண்டே 'அப்ப தப்புதான்' என்றார்.



அறிவியல் புனைகதைகள் எழுதுவது பற்றிய ஒரு பட்டறைக்குக் காலச்சுவடு ஒழுங்குசெய்தால் வந்து நடத்து கிறேன் என்றார். ஆர்தர். சி. கிளார்க் போன்று அறிவியலின் வளர்ச்சியை முன் உணரும் படைப்புகள் தமிழ்ச் சூழலில் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை. மேலும் அறிவியல் மனோபாவம், பகுத்தறிவு என்பன மிகுந்திருக்கும் சூழலில் ஒரு நெகிழ்ச்சியை அறிவியல் கதைகள் அளிக்கக்கூடும். பகுத்தறிவும் அதீதங்கள் பற்றிய நம்பிக்கையும் இரட்டைப் பின் னல்போல இருக்கும் தமிழ்ச் சூழலில், மென்பொருள் வட்டத்திற்கு வெளியே அறிவியல் புனைகதைகளின் பொருத்தத்தை நான் உணரவில்லை. அதை அவரிடம் சொன்னேன். மாற்றுக் கருத்துகள் பற்றிய பொறுமையின்மை ஏற்பட்டுவிட்ட வயது அப்போது அவருக்கு.



பின்னர் அவர் ஆலோசகராகப் பணியாற்றிய மீடியா டிரீம்ஸ் என்ற நிறுவனத்திற்கு ஒரு புளிய மரத்தின் கதையைத் திரைப்படமெடுக்க அவர் யோசனை கூறியிருந்ததை அடுத்து அவரை ஓரிருமுறைகள் அலுவலகத்தில் சந்தித்தேன். அதில் ஆசிரியருக்கு உரிய தொகையின் போதாமையைச் சுட்டி நான் வாதிட்டதை அவர் ரசிக்கவில்லை. படத்திற்கான மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதம்கூட நூலாசிரியருக்கு இல்லை. எனக்குத் தொகையைவிடவும் இலக்கியவாதிகளை எளிதில் வசப்படுத்திவிடலாம் என்ற சினிமாக்காரர்களின் முன் முடிவை உடைப்பது அவசியமாகத் தோன்றியது. பின்னர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் இடையீட்டில் சமரசமாகி அந்த முயற்சி தொடங்குவதற்குள் நிறுவனம் பொளிந்துவிட்டது.



தமிழுக்கு சுஜாதாவின் பங்களிப்பை இவ்வாறு தொகுக்கலாம் என நினைக்கிறேன்:


1. சமகாலத் தமிழ் உரைநடையின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு
முக்கியமானது.


2. தான் செயல்பட்ட வெகுஜன தளத்தில் வாசகர்களுக்குத் தொடர்ந்து தீவிர ஆளுமைகளை அறிமுகப்படுத்தி வந்தி ருக்கிறார்.


3. தொழில்நுட்பத் தமிழுக்கு அவருடைய பங்களிப்பு மிக வலுவானது. சிக்கலான அறிவியல் செய்திகளை எளிய முறையில் விளக்கிவிடுவதில் அவருடைய ஆற்றல் தன்னிகரற்றது.


(பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அமெரிக்கப் பயண அனுபவங்களைத் தமிழன் எக்ஸ்பிரசில் தொடராக எழு திக்கொண்டிருந்தார். அதில் அமெரிக்கா செல்லும்போதும் திரும்பும்போதும் ஏற்படும் time differenceஐ விளக்க, 'மறுநாள் கிளம்பி முதல் நாள் வருவதுபோல' என எழுதியிருந்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது நினைவுக்கு வருகிறது.)



2005 நவம்பரில் 'கருத்து' அமைப்பின் தொடக்க விழாவில் சுஜாதாவைக் கடைசியாகச் சந்தித்தேன். உடல்நலம்குன்றிக் காணப்பட்டார். சுந்தர ராமசாமியின் மறைவைப் பற்றிய துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். 'பெரிய இழப்பு, பெரிய இழப்பு' என மீண்டும் மீண்டும் முணு முணுத்துக் கொண்டேயிருந்தார். அதெல்லாம் சம்பிரதாயமானதாக இல்லாமல் ஆத்மார்த்தமானதாக இ ருந்தது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அன்று நான் படித்த கட்டுரையைப் பற்றி உயர்வாக ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' பத்தியில் எழுதியிருந்தார். இனி அதிகமும் முரண்படவும் அவ்வப்போது பாராட்டவும் சுஜாதா இல்லை.
 


ஒரு தலைமுறைத் தமிழ் வாசகர்களுக்குப் பெண் பற்றிய விடலைத்தனமான கிளுகிளுப்பை ஏற்படுத்தியவர் சுஜாதா. தனது சாதிச் சங்கங்களுடன் அவர் கொண்டிருந்த உறவை அவரே பதிவுசெய்திருக்கிறார். அவர் புறக்கணித்து ஒதுக்கிய 'காலச்சுவடு 1991 ஆண்டு மல'ரில் அவரைக் கவர்ந்த சில படைப்புகளில் ஒன்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனின் 'ராமஜென்ம பூமி: ஓர் இந்தியப் பார்வை.'
சென்னையிலிருந்து வெளிவரும் சமநிலை சமுதாயம் என்ற 'முற்போக்கு மாத இத'ழின் கௌரவ ஆசிரியர் ஏவி. எம். ஜாபர்தீன் மலேசியாவில் வசிப்பவர். அவர் சுஜாதாவுக்கு எழுதிய அஞ்சலியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் 'கோயில் ஒழுகு' பற்றி அவர் எழுதும்போது அது முஸ்லிம்களைத்தான் குறிப்பிடுகிறது என்று எண்ணிய இருவர், சுஜாதாவுக்குக் கடுமையான கடிதம் எழுதினர். சுஜாதா தானாக ஏதும் கூறவில்லை. கோயில் ஒழுகு பற்றி கூறப்பட்டவற்றை அப்படியே எழுதப்போய் சிலர் உணர்ச்சிவசப்பட்டு தூஷணையுடன் எழுத, மனம் நொந்த சுஜாதா இனி இஸ்லாம், முஸ்லிம்கள் பற்றித் தாம் ஏதும் எழுதப் போவதில்லை என்பதுபோல் 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் கு றிப்பிட்டார்.


 முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் முயற்சி இது. புகழ்பெற்றவர்களுடன் நெருங்கிப் பழகும்போது ஏற்படும் இன் பம், தர்க்கத்திற்கும் கருத்தியலுக்கும் அப்பாற்பட்டது. அந்த இன்பத்தை ஜாபர்தீன் அவர்கள் சுஜாதாவிடமிருந்து நிறைவாகப் பெற்றிருக்கும் செய்தி அவரது அஞ்சலிக் கட்டுரை முழுக்க விரவிக் கிடக்கிறது.
மேற்படி விஷயத்தில் சுஜாதா 'கண்டதும் கேட்டதும்' பகுதியில் எழுதியது இதுதான்:


அண்மையில் வைஷ்ணவஸ்ரீ அவர்கள் பதிப்பித்த அருமையான 'கோயில் ஒழுகு' புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்தேன். . .


". . . 'கோயில் ஒழுகு' நூலில், ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள் என்று பதினோரு விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார் வைஷ்ணவஸ்ரீ. அதில், கோவிந்தா கூட்டத்தினர் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்று உண்மைகள் ஏதேனும் பொதிந்துள்ளதா என்று கேட் டிருக்கிறார்.
நிச்சயம் இருக்கலாம், நாட்டுப்புறப் பாடல்கள் கல்வெட்டுகள்போல! முக்கியமான பஞ்சம், வெள்ளம், இயற்கையின் சீற்றங்கள், படையெடுப்புகள் எல்லாம் நாட்டுப்புறப் பாடல்களில் ஏதேனும் வரியில் பிரதிபலிக்கும்.
யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323இல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். (ஆனந்த விகடன் 17.4.05) (அழுத் தம் என்னுடையது).


இது பற்றிய விவாதம் காலச்சுவடு இதழில் நடந்தது. கோம்பை எஸ். அன்வர், ஜெ. ராஜா முகமது, ஆ. சிவசுப்பிரமணியன், பொ. வேல்சாமி ஆகியோர் பங்களித்தனர். இவற்றை ஜாபர்தீன் அவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
விருந்தினர் வீட்டிற்கு வருவது, அதுவும் நாம் ஆதர்சிப்பவர்கள் வருவது மகிழ்ச்சியான செய்திதான். சுஜாதா குடும்பத்துடன் தன் வீட்டிற்கு வந்தது பற்றி ஜாபர்தீனின் உணர்வுகள் இவை:


1993இல் நான் கோலாலம்பூரில் இருந்த சமயம், ஒரு நாள் மாலை அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. "ஜாபர்தீன்! நான் உங்க ஊருக்கு வந்திருக்கிறேன்" என்றார். உடனே அவரைச் சந்தித்தேன். அவருடன் அவர் துணைவியார் திருமதி சுஜாதா ரங்கராஜனும் அவருடைய மாமனார், மாமியார் ஆகியோரும் வந்திருந்தனர். அனைவரையும் அழைத்துக்கொண்டு ஒரு சைவ உணவு விடுதிக்குச் செல்லும்போது, "எங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்தான். ஆனால் அங்கு நீங்கள் உணவருந்தமாட்டீ ர்களே?" என்றேன். "யார் சொன்னது? நீங்கள் கூப்பிடவில்லை என்பதுதான் எங்கள் குறை. எங்களுக்கு சைவ சாப்பாடு தாரு ங்கள். நாங்கள் வருகிறோம்" என்றனர் அனைவரும்.


நான் என் மனைவியிடம் கூறி அசைவ உணவுகளை அப்புறப்படுத்திவிட்டு சைவம் மட்டுமே சமைத்து அவர்களை வி ருந்துக்கு அழைத்தோம். எவ்விதத் தயக்கமுமின்றி அனைவரும் வந்து விருந்துண்டனர். தொடர்ந்து கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்க விரும்பிய அவர்களுக்கு எனது காரையும் டிரைவரையும் அவர்கள் மலேசியாவில் தங்கி இருக்கும்வரை கொடுத்தேன். மிகவும் மகிழ்வோடு அவர்கள் சுற்றுப்பயணம் நிகழ்ந்தது.



ஆச்சாரமான அய்யங்கார்கள் நம் வீட்டில் தங்கி, உணவருந்தி கௌரவித்துவிட்டார்களே என்ற ஜாபர்தீன் அவர்களின் பெருமிதம் இ ன்றைய காலத்திற்குச் சிறிதும் பொருத்தமற்றது. மேற்படிப் பதிவில் விரவிக்கிடக்கும் புலால் உணவு பற்றிய ஜாபர்தீன் அவர்களின் தயக்கங்களும் குற்ற உணர்வும் சமூகவியல் ஆய்வுக்கு உரியவை.
 
 
 
சுஜாதா ஆர்வத்துடன் விரும்பிச் செயல்பட்ட தளம், வெகுஜன வணிகத்தளம். அத்தளத்தில் இருந்து அவருக்குச் செலுத் தப்பட்ட அஞ்சலிகள் பல ஆத்மார்த்தமானவை. சுஜாதாவால் பயன்பெற்றவர்கள், பயன்பெறத் தொடங்கிய காலகட்டத்திற்குப் பிறகு மட்டும் அவரைப் பற்றி உதிர்க்கத் தொடங்கிய மிகையான புகழாரங்களை, 'நன்றி விசுவாசத் தந்திரம்' என்று புறக்கணி த்துவிடலாம். பெண்ணியமும் திராவிடச் சித்தாந்தமும் பேசுபவர்கள் சுஜாதாவின் கருத்தியல் தொடர்பாக மேற்கொள்ளும் விமர்சன மௌனத்தையும் இதே தொடரில் அடக்கிவிடலாம்.



தீவிர இலக்கியத் தளத்திலிருந்து வெகுஜன எழுத்திற்கும் வணிக சினிமாவிற்கும் நகர்ந்துவிட்டவர்களும் நகர்வதற்குக் கொதி போட்டுக்கொண்டிருப்பவர்களும் சுஜாதாமீதும் அவர் மறைவுக்குப் பின்னர் அவர் எழுத்தின் மீதும் கொண்ட திடீர் கரிசனம், ந ட்சத்திர ஒளி அவர்கள் விமர்சனக் கண்களைப் புண்ணாக்கிவிட்டதன் அடையாளம். இலக்கியத் தளத்தில் சுஜாதாவின் இடத்தை அவரது எழுத்தின் தரம் தீர்மானிக்கும். அதிகாரமும் நட்சத்திர ஆதரவும் அதிக காலம் அவருக்கு முட்டுக்கொடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.



என் பார்வையில் அறிவியல் தமிழை முன்னெடுப்பதே சுஜாதாவுக்குச் செலுத்தப்படும் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும். அந்த முன்னெடுப்பு கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல் என்ற 'முழு உண்மை'மீது எழுப்பப்பட்ட கேள்விகளையும் விவாதங்களையும் - சுஜாதா முற்றாகப் புறக்கணித்த அல்லது அறிந்துகொள்ளாத உரையாடல் இது - உள்ளடக்கியதாக இ ருக்க வேண்டும். தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் மரண வியாபாரிகளின் ஆட்டங்கள் முடிந்த பிறகு இந்தப் பணியை அவரது ஆத்மார்த்தமான அன்பர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

-கண்ணன்
 
Thanks: Saraswathi.com

Wednesday, April 3, 2013

உலகத்திற்கு முன்னுதாரணம் : தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி




 




thunisia_protest
 
துனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண்டு மேலெழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டோம். அங்கு சாரிசாரியாக மக்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்தெல்லாம் நகரங்களுக்குப் படையெடுத்து போராடும் மக்களோடு இணைந்து கொண்டார்கள். துனிசியாவில் மூட்டிய நெருப்பு அரபு நாடுகள் முழுவதும் பரவியது. மக்கள் வெள்ளம் அரபு நாடுகளின் ஆயுதப்படைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இறுதியில் ஒரு சர்வாதிகாரிக்குப் பதிலாக மற்றோரு சர்வாதிகாரி பிரதியிடப்பட்டார்.
ஒடுக்குமுறை இயந்திரம் முன்னிலும் பலமாக்கப்பட்டது. இனக்குழுக்களிடையே மோதல்கள அதிகரித்தன. பல்தேசிய கொள்ளைக்காரர்கள் மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்காக முகாமிட்டுக்கொண்டார்கள்.
இதே போன்று,  அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவான தன்னெழுச்சியான போராட்டங்கள் அந்த அரசுகளைக் கேள்விகேட்டன. உலகில் போராட்டங்களை ஒடுக்கும் அமரிக்க அரசின் முற்றத்திலேயே வால் ஸ்ரீட் போராட்டம் தோன்றி உலகின் அதியுயர் அதிகாரத்தின் வேர்களை விசாரணை செய்தது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அப்போராட்டங்கள் பரவிப்படர்ந்தன. எழுச்சி முழக்கங்கள் என்பதற்கு அப்பால் மேல் வளர்ச்சியடைய முடியாமல் அப்போராட்டங்கள் அனைத்தும் செயற்பாடற்று செத்துப்போயின.
 
 
neo_liberalism
 
 
1970 களில் ஆரம்பித்த உலக ஒழுங்கு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நவ தாராளவாத உலகமயமாதல் என அறியப்பட்ட உலக ஒழுங்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட தசாப்தங்களுக்கு உள்ளாகவே அது மீட்சியடைமுடியாத நெருக்கடியைச் சந்த்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்தியாவிலும் லத்தீன் அமரிக்க நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்த பின்னர் அந்த நாடுகளில் நவதாராளவாத உலகமயமாதல் தனது கோரக்கரங்களை இறுக்க ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாதவாறு ஊழல், சதி, போர் ஆகியவற்றை உலகமயமாக்கியது. பல் தேசிய நிறுவவனங்கள் அமரிக்காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து அந்த நாடுகளில் சென்று குடியேறிக்க்கொண்டன. அங்குள வளங்களையும் தொழிலாளர்களைம் ஒட்டச் சுரண்டின.
உள் நாட்டில் நேரடியாகத் தமக்குச் சேவையாற்றும் அரசுகளை மக்களின் எதிர்ப்பின்றி உருவாக்கிக்கொள்வதே பல்தேசிய நிறுவனங்களுக்காகச் செயற்படும் அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் பிரதான அரசியல் ஆயுதமாகத் திழழ்ந்தது. இதற்காக உள் நாட்டில் பொருளாதர பலம் மிக்க விரல்விடுக் கணக்கிடக்கூடிய பணக்கார வர்க்கத்தை உருவாக்கினர். இவர்கள் உள்ளூரில் மக்கள் எதிர்ப்பின்றிய ஏகாதிபத்திய சார்பு அரசு ஒன்று செயற்படுவதை ஜனநாயகம் எனக் கருதினர். உள் நாட்டைச் சந்தைப்படுத்தக் கூடிய சூழலில் வைத்திருப்பதைச் சமாதானம் என மக்களின் பொதுப்புத்தியாகினர்.
சந்தைப்படுத்தும் சூழல் என்பது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான சூழல் என்பதே.
 
 
imf
 
 
இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமரிக்கா தலைமையில் பல இராட்சத நிறுவனங்கள் உருவாகின. உலக வர்த்தக மையம்(WTO), உலக நாணய நிதியம், உலக வங்கிIMF), வட அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பு (NATO) போன்ற நிறுவனங்கள் நேர்த்தியான திட்டமிடலுடன் உலகை அமரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன.
பொருளாதார வார்த்தைகளில் சொல்வதானால், இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கம் என்பது மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டி ‘உபரி உற்பத்தியை’ உறிஞ்சிக்கொள்வதாகும்.
இவ்வாறான சுரண்டலால் உருவாகக் கூடிய வறிய மக்களும் உழைப்பாளிகளும் ஒரு நேர உணவிற்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாழ்வதற்காகப் போராட ஆரம்பித்தனர். இவர்களது போராட்டம் சுதந்திட சந்தைக்கு அதாவது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தடையாக அமைந்தது. இவர்களைது போராட்டங்களைத் தற்காலிகமாகத் உறங்கு நிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கோடு தன்னார்வ நிறுவனங்களை (NGO) மேற்குறித்த இராட்சத நிறுவனங்களின் பண வழங்கலின் கீழ் உருவாக்கினர். தன்னார்வ நிறுவனம் என்ற கருத்துருவாக்கம் பின்னர் விரிவாக்கப்பட்டு பல அமைப்பு வடிவங்களைப் பெற்றது.
இவை அனைத்திற்கும் அப்பால் மக்கள் தாம் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாகத் தோன்றிய போது பல வழிகளில் அழிக்கப்பட்டன.
ஈழத்தில் சந்தைப்படுத்தும் சூழலைத் தோற்றுவிப்பதற்காகவே விடுதலைப் புலிகளும் மக்களும் இரவோடிரவாக அழிக்கப்பட்டனர்.
தவிர, திட்டமிட்ட அரசியலோடு அரசியல் அமைப்புக்கள் தோன்றுவதை ஆரம்பத்திலிருந்தே அழிப்பதற்கு இந்த இந்த ராட்சத நிறுவனங்களின் உதவியோடும் அரசுகளின் நேரடிக் கண்காணிப்பிலும் புதிய முறைகள் கையாளப்பட்டன. மக்கள் போராடுகின்ற போது அப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் தடுத்தனர். போராட்டங்களைத் தாமே தமது உள்ளூர் முகவர்களுக்கு ஊடாகவும் சந்தர்ப்பவாத-பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு ஊடாகவும் கையிலெடுத்துச் சிதைத்தனர்.
 
 
 
otpor_until_victory_belgrad
 
 
 
 
அரபு நாடுகளில் போராட்டங்களின் பின்னணியில் ஒட்பொர் (OTPOR) என்ற அமைப்பு செயற்பட்டது. அதே அமைப்புத் தான் வால் ஸ்ரீட் போராட்டத்தையும் கையகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுத்தது. சில வேளைகளில் போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக தாமே போராட்டங்களை உருவாக்கி அழித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட போராட்டங்களை தோற்றுவித்து அழித்ததாக அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் (NSA) பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒட்போர் அமைப்பு வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளது.
 
 
 
இனப்படுகொலைக்கு சகல வழிகளிலும் பின்புலத்தில் செயற்பட்ட அமரிக்காவே மனித உரிமைஅமைப்புக்களின் துணையோடு ஐ.நா போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தையும் முன்வைத்தது .
இலங்கையில் ராஜபக்சவை இன்னொரு இனவாதியால் பிரதியிடும் முயற்சியை மேற்கொள்ளும் அமரிக்க அரசு அதற்கான முன் நிபந்தனைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்துவிட்டது. திடீர் எழுச்சிகளை உருவாக்குவதும், புலம் பெயர் அமைப்புக்களை உள்வாங்கிக்கொள்வதும். தன்னார்வ நிறுவனங்களை நாடு முழுவதும் விதைப்பதும். இனவாதக் கட்சிகளை எழுச்சிக் கட்சிகளாக மாற்றுவதும் அவர்களின் உடனடிச் செயற்பாடுகள். அடுத்த தேர்தலுக்கிடையில் ராஜபக்ச அரசு அமரிக்கா எதிர்பார்பதற்கு மேலாக இலங்கையின் வளங்கள் முழுமையையும் சீனவிடமிருந்து பறித்தெடுத்து அமரிக்காவிற்கு வழங்கினால் எழுச்சிகள் நிறுத்தப்படும். இல்லையெனின் இலங்கையில் பேரினவாதம் எதிரியல்ல ராஜபக்சவே எதிரி என்று தேர்தலுக்கு முன்னதக அறிவிக்கப்படும்.
 
 
 
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு அவ்வப்போது தோன்றும் திடீர் எழுச்சிகளுக்குப் பின்னணியில் ஒட்போர் போன்ற அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பற்கான ஆதாரங்கள் இன்னும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமையான சுய நிர்ணைய உரிமையைக்கூட அங்கீகரிக்க முடியாத இனவாதக் குழுக்கள் திடீர் மாணவர் எழுச்சிகளைத் தோற்றுவிப்பதன் பின்னணி குறித்த அரசியல் அவதானமாக நோக்கப்பட வேண்டும்.
அரபு நாடுகளிலெல்லாம் அரசியலற்ற திடீர் தனெழுச்சிகளை உருவாக்கி அவற்றை அழிப்பதற்கு ஆட்சி மாற்றம் எனபது கருவியாகப் பயன்பட்டுள்ளது.
 
 
 
 
balachandtan
 
சனல் நான்கு பிரபாகரனின் மகன் உயிரோடிருக்கும் படத்தையும் கொல்லப்பட்ட படத்தையும் வெளியிட்டபோது மனிதாபிமானிகளைக்குற்ற உணர்வுக்கு உட்படுத்தியது. இந்திய மற்றும் தமிழ் நாட்டுத்தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் அது குறித்த காட்சிகள் திரையிடப்பபட்டன.
ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று தேடித்தேடி வேட்டையாடிய ஜெயலலிதாவும் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்துவதற்கு நேரடி ஆதரவு வழங்கிய கருணாநிதியும் புதிய வேகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச ஆரம்பிக்கின்றனர்.
துனிசியப் போராட்டத்திற்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட புறச் சூழலைப் போன்றே தமிழ் நாட்டிலும் போராட்டத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது.
இவ்வேளையில் லயோலா கல்லூரி மாணவர்கள் தமது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றனர்.
இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி இப்போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டார் என்ற நம்பத்தகுந்த தகவல் பல் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
ஜெகத் கஸ்பர் போன்ற உயர் குடிப் பாதிரிகளுக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து விளக்குப் பிடித்துத் தேட வேண்டிய அவசியமில்லை. வன்னி இனப்படுகொலையில் இவர்களின் பங்கே இதற்குப் போதுமான ஆதரங்களை வழங்கியுள்ளன.
 
 
 
 
layola
 
லயோலாக் கல்லூரியில் ஜெகத் கஸ்பரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம், திராவிட இயக்கங்களின் சீர்திருத்தப் பாரம்பரியத்தில் வளர்ந்த தமிழ் நாட்டு மாணவர்களை குறித்த எல்லைக்குள் முடக்கிவிடவில்லை. அப்போராட்டம் அவருக்கு எதிரானதாகத் திரும்ப, அது கல்லூரி நிர்வாகத்தாலும் ஜெயலலிதா அரசாலும் அழித்துச் சிதைக்கப்பட்டது. பின்னதாக மாணவர் போராடங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகத் தோன்றின. போர்க்குணம் மிக்க உணர்வுபூர்வமான போராட்டங்களாக தெருக்களில் மாணவர்கள் போராட ஆரம்பிக்கின்றனர். உலக மயம் உருவாக்கிய நுகர்வுச் சிந்தனைக்குள் முடங்கியிருந்த மாணவர்கள் தெருக்களில் புத்தகங்களையும் காவிக்கொண்டு போராட வெளிவந்தது ஆளும் வர்க்கம் எதிர்பார்க்காத அதிர்ச்சியை வழங்கியது.
 
 
 
 
திருஞான சம்பந்தர் என்ற பிராமணர் ராமேஸ்வரத்திலிருந்கு இலங்கையை நோக்கித் தேவாரம் பாடியதாக ஐதீகக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் வாழும் புலம்பெயர் நாடுகளை நோக்கித் தேவாரம் பாடும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ தன்னெழுச்சியான போராட்டங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக போட்டிபோட ஆரம்பித்த போது அது மாணவர்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்தது.
 
 
 
 
front
 
இவ்வேளையில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நிராகரித்தும், போராட்டங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்வைத்தும் ‘ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் அமைப்பு’ எழுச்சி மிக்க போராட்டத்தை சென்னை விமான நிலையத்தில் நடத்தியது. தமிழகம் முழுவது இவ்வமைப்பினர் நடத்திய போராட்டங்கள் தொடர்கின்றன. தெளிவான உறுதியான முழக்கங்களோடு எதிர்காலத்திற்கான அரசியல் திட்டமிடலுடன் இம்மாணவர் அமைப்பு நடத்தும் போராட்டங்கள், அரபு எழுச்சிகள் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டது போன்றும், வால் ஸ்ரீட் வகைப் போராட்டங்கள் மடிந்துபோனது போன்றும் தற்காலிகத் தன்னெழுச்சிப் போராட்டங்களாக அன்றி உறுதியான வெகுஜன அரசியல் பலத்தோடு முன்னெடுக்கப்படுகின்றன.
ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், ராஜபக்ச என்ற மனித குல விரோதிக்கு அதிகபட்ச தண்டனை கோரியும் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்வைக்கும் அரசியலை ஒட்போர் போன்ற அமைப்புக்கள் கையகப்படுத்தி சீர்குலைக்க முடியாது. அவர்கள் தெளிவாகத் தமது அரசியலையும் அதன் தலைமையையும் முன்வைக்கிறார்கள்.
பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த மறுகணமே அசைவின்றி நின்றுபோன போராட்டங்களைப் போலன்றி தெளிவான அரசியலை முன்வைக்கும் இவர்களின் உறுதி ஏகாதிபத்தியங்களால் கையகப்படுத்தி அழிக்கப்பட்ட போராட்டங்கள் போன்றதன்று.
 
 
ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமன்றி, ஈழத்திற்கு மட்டுமன்றி உலகத்திற்கே முன்னுதாரணத்தை வழங்கவல்லது.
தன்னார்வ நிறுவனங்களும் .புரட்சி வியாபார’ அமைப்புக்களும் போராட்டங்களை மிக இலகுவில் கையகப்படுத்தி அழிக்கும் புதிய ஏகாதிபத்திய அரசியலின் முன்பு அதற்கு எதிரான புரட்சிகர அரசியலை முன்வைப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில் தமிழக மாணவர்கள் அதற்கு முன்னுதாரணமானத் திகழ்கின்றனர்.
 
 
 
 
நன்கு திட்டமிடப்பட்ட ஏகாதிபத்திய அழிவு நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத இவர்களின் போராட்டத் தந்திரோபாயமும் உறுதியான நீண்ட மக்கள் போராட்ட அனுபவம் மிக்க அரசியல் தலைமையும் தமிழகத்தின் பிழைப்புவாதிகளையும் கூட மிரட்டியிருக்கிறது.
 
 
 
2009 ஆம் ஆண்டு வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது தமிழகத்தில் இரத்த ஆறு ஓடப்போகிறது என்று படம்காட்டிய இந்த இனவாதிகள், எல்லாம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் திரும்பி வருவார் என போலி நம்பிக்கை வழங்கி மக்களைப் போராடவிடாமல் தடுத்தனர். திட்டமிட்ட நிறுவனமயப்பட்ட மாணவர்களின் எழுச்சியின் வெம்மை தாங்காது தெருவிற்கு வந்த இந்த இனவாதிகள் மாணவர் போராட்டங்களுக்க அரசியல் வேண்டாம் என வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர்.
உதிரிகளாக புலம் பெயர் தமிழர்களின் கடைகண் பார்வைக்காகவும், பொழுது போக்கு வியாபார விழாக்களையும், சினிமாக்களையும் விற்பனை செய்வதற்காகவும் ஈழ விடுதலை பேசும் பலர் மாணவர் போராட்டங்கள் குழுவாதத்திற்கு சிக்கியுள்லதாகக வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.
அழிக்கப்படும் மக்களின் அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்தும் புலம் பெயர் அமைப்புக்கள் மாணவர் போராட்டத்தின் போர்குணத்தை அறிந்ததும் மௌனித்துப் போயினர். புலம் பெயர் ‘தேசிய’ இணையங்கள் போராட்டங்கள் குறித்த செய்திகளை முற்றாகப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் புள்ளியில் உலகின் போராட்டங்களுக்கே முன்னுதாரணத்தை வழங்கிய தமிழக மாணவர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரிகளையும் நண்பர்களையும் இனம்காட்டியுள்ள்னர்.
 
 
 
ngo
 
ஐரோப்பிய நாடுகள் நிதி வழங்கும் தன்னார்வ நிறுவனங்களின் நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பெரும்பாலானவை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்ற முடிவிற்கு வந்துள்ளன. ராஜபக்ச அரசிற்கு மாற்றாக சந்திரிக்கா தலைமையிலான அரசை இலங்கையிலுள்ள பல்தேசிய தரகுகளின் ஆதரவோடு நிலை நாட்டுவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அடிப்படை முழக்கமாகக் கொண்ட தமிழக மாணவர்களின் போராட்டங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்.
 
 
 
முப்பது வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக முதல் தடவையாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்த மாணவர்களின் குரல் சந்தர்ப்பவாத அரசியலால் சிதைந்துபோகாது பாதுகாக்கப்பட வேண்டும்.
 
 
-சபா நாவலன்
 
Thanks : inioru

Tuesday, April 2, 2013

Lap-Top கம்ப்யூட்ட​ரின் வெப்பம் தடுக்க என்ன வழி?





 



டந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.




டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
 


மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால்,


 

அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.





லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
 
 
 

 


 பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.
 
காற்று துளைகளின் சுத்தம்:
 
 
வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

 
பயாஸ் சோதனை:
 
 
நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.


 
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

New Idea
 
இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

 லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம்.
 
Thanks: rahmanfayed

கோவை மாணவர்களின் எழுச்சி




ஜெனிவாவில் கூட இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். போராட்டத்தின் மூன்றாவது நாள் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் போராட்டமும் கைவிடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவக்கினர். அதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்தனர். சட்டக்கல்லூரிக்கு உள்ளேயே போராட்டத்தை நடத்தினால் பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதால் நகரத்தின் மையத்தில் இடம் தேடினர். இடம் கிடைக்காததால் ம.தி.மு.க. அலுவலகத்தில் அனுமதி பெற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.


மாணவர்கள் எதிர்பார்த்தபடியே ஊடகங்களின், மக்களின் கவனத்தை ஈர்த்தது. சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் தலைவர்கள் என பலரும் வந்து வாழ்த்தி உற்சாகமூட்டினர். இதே வேளையில் தமிழகம் முழுவதும் அரசு சட்டக்கல்லூரி கலைக்கல்லூரி மாணவர்கள் வீச்சாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதை தடுக்க இயலாத தமிழக அரசு அனைத்து அரசு சட்டக்கல்லூரிக்கும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை விட்டது.


விடுமுறை விட்டால் போராட்டம் பிசுபிசுத்துப்போய்விடும் என்று தமிழக அரசு மனப்பால் குடித்த வேளையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தனர். முதலில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களும் அவர்களுடன் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்களும் வந்தனர். இரண்டு கல்லூரி மாணவர்களும் இணைந்து ஒரு பேரணி நடத்தினர் பின் இதில் திருப்தியடையாத மாணவர்கள் வீரியமான போராட்டத்தில் இறங்கும் விதமாக ரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.


இதே வேளையில் சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தை தீவிரபடுத்தும் விதமாக விமான நிலையத்தை முற்றுகையிட்டு அங்குவைத்தே ராஜபக்சேஷவின் உருவபொம்மையை எரித்தனர். இப்போராட்டம் எளிதில் நடந்துவிட வில்லை. விமானநிலையத்தில் இருந்த மாணவர்களை தடுக்க முயல அதை மீறி மாணவர்கள் உள்ளே நுழைய போலீசார் தாக்க துவங்கியுள்ளனர். மாணவர்கள் அதை முறியடித்து உள்ளே நுழைய வட இந்திய போலீஸ் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பணியாமல் உள்ளே நுழைந்து அமெரிக்க அரசு, இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இந்த வேளையில் அனைத்து தனியார் கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்திற்கு வந்துவிட்டனர்.


ஆங்காங்கே சாலைமறியல், உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு, பாரதியார் பல்கலைகழகத்தின் தொடர் உண்ணாவிரத போராட்டம் என போராட்டம் தீவிரமடைந்ததை கண்டு பீதியுற்ற தமிழக அரசு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டது. ஆனால் மாணவர்கள் இதற்கெல்லாம் பின்வாங்குவதும் இல்லை. உடனடியாக மாணவர்கள் தங்களுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.


மாணவர்கள் கூட்டமைப்பு துவக்கம்


தமிழீழ விடுதலைக்காக மாணவர்கள் கூட்டமைப்பு கோவை பகுதியை மையமாக முன்வைத்து மாணவர்களின் முன்முயற்சியில் துவக்கப்பட்டது. கோவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தலைமையின் கீழ் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் பல்வேறு பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறத் துவங்கின. மாணவர்கள் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்தபின் போராட்டம் முன்னிலும் பலமடங்கு வீரியத்துடன் நடைபெறத்துவங்கியது. குறிப்பாக நேரு மாணவர்கள் நடத்திய போராட்டம்.


நேரு கல்லூரி மாணவர்களின் எழுச்சி


முந்தைய நாள் இரவு திட்டமிட்டு குறைந்தது நூறில் (100) இருந்து இருநூறு(200) பேர் பங்கேற்பர் என்ற எதிர்பார்ப்புடன் மறுநாள் காலை அணிதிரட்ட ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டது மாணவர்களின் உணர்வையும் வளர்ச்சியையும் காட்டுகிறது. இதில் பெருமகிழ்ச்சிக்குறிய மற்றொரு செய்தி என்னவென்றால் கலந்து கொண்டவர்களில் பாதிபேர் மலையாளிகள் மேலும் கணிசமான அளவு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள்.


இனவெறி, மொழிவெறி, மாநில மனோபாவத்தையும் கடந்து மாணவர்கள் ஓர் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட்ட களத்திற்கு வந்தனர். துவக்கத்தில் உண்ணாவிரதம் இருப்பது அல்லது அடையாள போராட்டம் நடத்துவது என்ற எண்ணத்தில் வந்தவர்கள் பின்பு போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணினர். எனவே அருகில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக்கொண்டு மதுக்கரையில் உள்ள மத்திய அரசின் இராணுவ ஆயுதக்கிடங்கை முற்றுகையிடக் கிளம்பினர். கல்லூரியிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரைக்கு பேரணியாகவே முழக்கமிட்டபடி கிளம்பினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுச்சியுடன் கிளம்ப நான்கு இடங்களில் காவல்த்துறை தடுத்து நிறுத்த முயன்றது.


தடுப்புகளை வீசி எரிந்துவிட்டு போலீசையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறியது மாணவர் பட்டாளம். ஆயுதக்கிடங்கை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சுமார் இரண்டுமணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. இந்திய  ராணுவம் துப்பாக்கியை காட்டி மிரட்டிப்பார்த்தனர், போலீஸ் லத்தியை காட்டி மிரட்டி பார்த்தது எதற்கும் அஞ்சாமல் மாணவர்கள் துணிந்து நின்றபோது துப்பாக்கிகளும், லத்திகளும் பணிந்தன. மாணவர்களிடம் கெஞ்சின. மாணவர்கள் எழுச்சியுற்று வீதிக்கு வந்தால் அரசின் அடக்குமுறைக் கருவிகள் அஞ்சி நடுங்குவதையும் கெஞ்சிப்பணிவதையும் நேரில் பார்க்க வேண்டுமே அந்தக் காட்சி வீரியமான போராட்டங்களின் மூலம் அதிகார வர்க்கத்தை பணிய வைக்கமுடியும் என்பதை மாணவர்கள் தங்கள் போராட்ட அனுபவத்தின் மூலம் உணர்ந்தனர்.


பின் போராட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய மாணவர்கள் மன நிறைவு இன்றி பிரிந்து சென்று சென்று சாலைமறியல் ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். மாணவர்களை கைது கூட செய்ய முடியாமல் விட்டு சென்றது போலீஸ்.


என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போர் !


மறுநாள் போராட்டச் செய்திகள் பல்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்டே இருந்தன. எஸ்.என்.ஆர். கல்லூரி, சி.எம்.எஸ்., பி.எஸ்.ஜி. மாணவர்களின் போராட்டம், பள்ளி மாணவர்கள் +2 தேர்வெழுதிவிட்டு தொண்டாமுத்தூர் சாலைமறியல், ஆலாந்துறை பள்ளி மாணவர்களின் போராட்டம், குனியமுத்தூர் பள்ளி மாணவர்களின் போராட்டம், கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி கிராமப்புறங்களில் தன்னெழுச்சி போராட்டம், ஈரோடு, திருப்பூர் மாணவர்களின் போராட்டம் என பரவிக்கொண்டிருந்தது. இவ்வேளையில் என்.ஜி.பி. கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆயத்தமாகி போராட்ட கமிட்டிக்கு அழைப்பு விடுத்தனர்.


போராட்டகமிட்டி பிரதிநிதி சென்று பேசிய போது ஏதாவது பிரச்சினை வருமா? போலீஸ் அடிக்குமா? கொஞ்சம் பயமாக இருக்கிறது இயல்பாக தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர். இவ்வேளையில் நூற்றுக்கணக்கில் போலீஸ் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றிருந்தது. இதை உடைத்துக் கொண்டு எப்படி வெளியேறுவது. நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோம்.என்பதை உணர்ந்து அருகாமை கல்லூரி மாணவர்களை துணைக்கு அழைத்தனர். மாணவர் கூட்டமைப்பும் மாணவர்களை அழைத்து வந்தது.


கல்லூரிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்வது போல் வெளியேறி விமானநிலையத்தை நோக்கி சென்றனர். விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மாணவர்கள் வருவார்கள் என எதிபார்த்து போலீஸ் படை காத்திருந்தது. திடீரென்று முழக்கமிட்டு உள்ளே நுழைந்த மாணவர்களை தடுப்புகளை வைத்து (பேரிகார்டு) தடுக்க முயன்றது. ஒல்லியான மாணவன் ஒருவன் எட்டி உதைக்க பேரிகார்டு எகிறியது.
தடுப்பை உடைத்துக் கொண்டு மாணவர்கள் உள்ளே செல்ல பின்னே போலீஸ் ஓட போர்க்களமானது விமானநிலையம். ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்தியது போலீஸ். ஒரு மாணவனை பிடிக்க மூன்று போலீஸ் நான்கு போலீஸ் என தேவைப்பட்டது. ஒரு வழியாக தடுத்து நிறுத்தி விட்டோம் என போலீஸ் நினைத்து பெருமூச்சு விட எங்கிருந்தோ வந்த மற்றொரு மாணவர் பட்டாளம் விமானநிலையத்துக்குள் பாய்ந்து முன்னேற செய்வதறியாது நிலைகுலைந்து போனது போலீஸ் படை. “போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் எங்களால் முடியவில்லை என்று கெஞ்சத் துவங்கி விட்டார்கள்”.



கமிஷனர் போலீசின் அதிகாரம் மாணவர்களின் காலைப் பிடித்து கெஞ்சிக்கொண்டிருந்தது. “நாங்கள் உடனே நிறுத்தமாட்டோம் பதினைந்து நிமிடம் முழக்கமிட்டபின் செல்வோம்” என்றனர் மாணவர்கள். வேறு வழியின்றி அனுமதித்தது போலீஸ். போராட்டத்திற்கு பின் கைதான மாணவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் சென்ற போது வழிநெடுக முழக்கமிட்ட படியே மாணவர்கள் சென்றனர்.


மாணவர்களை கைது செய்து வைத்திருந்த மண்டபத்தை சுற்றி இருந்த பொதுமக்கள் விஷயத்தை கேள்விப்பட்டு மாணவர்களை சந்திக்க வந்தனர். வரும் போது பலகாரம், உணவு, தேநீர் போன்றவற்றை கொடுத்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துதளையும் தெரிவித்தனர். உங்களின் போராட்டம் சிறப்பானது நீங்கள் இத்துடன் நிறுத்தக்கூடாது நாட்டையே நீங்கள் மாற்ற வேண்டும் என்று வாழ்த்தினர்.


பேரணிக்கு  திட்டமிடல்:


மாணவர்கள்  போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் மாணவர்களை ஒருங்கிணைந்து  மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் இதற்கு தலைமை தாங்கிய கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.


பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்தேறின குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும் மார்ச் 19 அன்று  காவல் துறையின் அனுமதி மறுத்த நிலையில் தான் ஏற்பாடுகள் நடந்தேறின. தடையை மீறி நடத்துவது என்று மாணவரகள் உணர்வு பூர்வமாக தீர்மானித்திருந்தனர். மாணவர்களின் உறுதியை கண்டு அஞ்சிய காவல்துறை மார்ச் 18 அன்று இரவு அனுமதியளித்தது.


வெற்றிகரமான பேரணி:


மார்ச் 19 அன்று  காலை முன்னணியாளர்கள் பேரணி துவங்கும்  இடத்திற்கு வந்தனர். உளவுத் துறை அவர்களை கேமராவில் படமெடுத்து. அதன் மூலம் மிரட்ட முயன்றது. மாணவர்கள் அதற்கு அஞ்சாமல் படம் எடுப்பதை தடுத்து நிறுத்தினர். முந்தைய நாள் பத்திரிகையில் போராட்டத்தில்


பங்கேற்றவர்களின் பெயர், முகவரிகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னாளில்  அரசு வேலைகளில் சேரும்போது அரசுக்கு எதிராக போராடியது தெரிந்தால் வேலை கிடைக்காது என்ற செய்தியை வெளியிட்டு மாணவர்களை பயமுறுத்த முயன்றது.


இவை அனைத்தையும் மீறி மாணவர்கள் பேரணி துவங்கும் இடத்தில் குவியத் துவங்கினர். சுமார் 6,000 மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி எழுச்சியுடன் துவங்கியது. இந்திய அரசையும் அமெரிக்க தீர்மானத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் மோசடியையும் அம்பலபடுத்தியும், தேசிய கட்சிகள், ஒட்டு கட்சிகளின் துரோகத்தையும் தோலுரித்தும் முழக்கங்கள்  எழுப்பினர்.   பறை இசை முழக்கத்துடன் பேரணி துவங்கியது. சாலையின் இரு பக்கத்திலும் கூடி நின்று கவனித்தனர். “வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதிக்கு வந்து போராடு என்ற முழக்கம் அவர்களையும் போராட அழைத்தது.


போலீஸ் ஏற்படுத்திய தடையை முறியடித்த மாணவர்கள்:



மாணவர்கள் போராட்டம் பிரதான சாலையில் முன்னேறிச் சென்ற போது, போலீஸ் வழிமறித்து. தடுப்புகளையும், 2 தனியார் பேருந்துகளையும் நிறுத்தி வைத்து எதிரே போலீஸ் பட்டாளத்தையும் நிறுத்தி வைத்து ஆள் அரவமற்ற மாற்று பாதையில் செல்லச் சொன்னது. மாணவர்கள் மறுத்தனர். “முன்னேறுவோம் முன்னேறுவோம் தடைகளை உடைத்து முன்னேறுவோம் என்ற தொடர் முழக்கம் மாணவர்களை எழுச்சியுறச் செய்தது. மாணவர்களிடமிருந்து கற்கள் பறந்தன. பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கியது, உடனே பேருந்தை எடுத்து விட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு, போலீஸ் படையை விலக்கிக் கொண்டு மாணவர் படை வெற்றி முழக்கமிட்டு முன்னேறியது.


போலீஸ் படையோ எதுவும் செய்ய இயலாமல் கையை பிசைந்து கொண்டு விலகி நின்றது. காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு பின் உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று சட்டக் கல்லூரி மாணவர்களின்  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.  உண்ணாவிரதப் போராட்டம் அரசை நிர்பந்திக்காது எனவே தீவிர போராட்டதிற்கு தயராகும் விதமாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை  கைவிட்டு தீவிர போராட்டத்திற்கு  மாணவர்களை அரை கூவி அழைத்து பேரணியை நிறைவு செய்தனர்.


சுமார் மூன்று மணிநேரம் நடந்த பேரணி மாணவர்களையும் மக்களையும் எழுச்சியுற செய்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு உணர்வூட்டியது.
பேரணி முடித்து சென்ற மாணவர்களில் ஒரு பிரிவினர் ரயிலை மறித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். மறுநாளும் போராட்டங்களும் தீவிரமடைந்தன. தற்போதைய போராட்டங்கள் அனைத்தும் போர்குணமான, துணிச்சலான போராட்டங்கள் ஆகும்.  மாணவிகள் மட்டுமே பங்கேற்ற ஆர்பாட்டம், 14 மாணவிகள் மட்டும் பங்கேற்று காட்டூர் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை போராட்டம், ராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகைப் போராட்டம் அதை வீடியோ படம் எடுத்த மத்திய உளவுத் துறைக்கு அடி உதை அவருடைய பேண்ட் கிழிந்து போனது, சொட்டைத் தலையிலேயே அடித்துள்ளனர். இதர சீருடை போலீசார் வந்து காப்பாற்றி செல்லவேண்டி வந்தது. அதன் பின் போலீஸ் தரப்பில் யாரும் போட்டோ பிடிக்கவில்லை. தந்தி அலுவலகம் முற்றுகை, வருமானவரி அலுவலகத்தை கைப்பற்றி 1 ½    மணி நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கி பி.எஸ்.என்.எல்., முற்றுகை என மத்திய அரசின் நிர்வாக அதிகார மையங்கள் அனைத்தையும் இலக்கு வைத்து போராடினர். போலீஸ் துறையோ வெந்து நொந்து போனது.
தொடர்ச்சியான இந்த போராட்டம் மாணவர்களை  வெகுவாக பயிற்றுவித்துள்ளது.

  • ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது.
  • அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.
  • சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கறையும் கொள்ள செய்தது.
  • போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க கூடாது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தானும் இதில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற சமூக பண்பை விதைத்துள்ளது.
  • குறிப்பாக சமூகம் சார்ந்த எந்த போரட்டத்திலேயும் பங்கேற்காத மருத்துவக் கல்லூரி மாணவர்களையும், விவசாய கல்லூரி மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் வீதிக்கு வரவைத்தது.
  • பெண்களை கணிசமான அளவு ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது.
  • பல மாணவ தலைவர்களை, போராளிகளை, கவிஞர்களை, பேச்சாளர்களை உருவாக்கி சமூகத்துக்கு அளித்துள்ளது.
  • நீண்ட நேரம் அமர்ந்து அரசியல் சார்ந்த சொற்பொழிவுகளை கவனிக்க, விவாதிக்க வைத்துள்ளது.
    ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளை தானும் நம்பாது சமூகத்துக்கும் போதிக்க வைத்துள்ளது.
  • கல்லூரி நிர்வாகத்தை கண்டு, போலீசை கண்டு, அதிகாரிகளை கண்டு அஞ்சாமல் அடக்குமுறைகளை தன் வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் எதிர்கொள்ள பயிற்றுவித்தது.
  • கல்லூரி விட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றாலும் அங்கும் எழுச்சிகளை ஏற்படுத்த முனைவது.


எனினும் இத்தகைய எழுச்சி பெற்ற மாணவர் வர்க்கம் இனவாத கண்ணோட்டத்தில் பீடிக்கப்பட்டும், அரசியல் அறியாமையுடனும் சரியான அமைப்பை தேர்ந்தெடுக்க தெரியாமலும் குழப்பத்தில் இருப்பது ஒரு யதார்த்தம். எனினும் தனக்கான புரட்சிகர கடமையை விரைவில் உணர்ந்து தயாராகும் என நம்பலாம் ஏனெனில் தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில்.
பின்குறிப்பு: 1.  நாம் தமிழர் கட்சியின் தலையீடு காரணமாக மாணவர்களின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் உணர்ந்து மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.


2. இனி போராட்டம் நடைபெறாது என்ற தைரியத்தில் கல்லூரியை திறந்தது சி.எம்.எஸ். கல்லூரி நிர்வாகம். மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம், ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் வளர கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.


தடைகளை கடந்து தொடர்கிறது மாணவர்கள் போராட்டம்…. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!!!

80களின் திசை வழியில்,,,




2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து இலங்கை அதிபர் கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதனிடையே இலங்கையின் போர்க்குற்றங்களைக் கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். நாண்கு நாட்களுக்குப் பிறகு இரவோடிரவாக காவல்துறை அவர்களை கைது செய்து அப்புறப்படுத்த, தற்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கி தமிழகம் முழுவதும் கலை, சட்ட, பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே போராட்டம் பரவி வருகிறது.
 


மெய்யாக அங்கு நடந்தது இனப்பேரழிவு என்பதிலோ,  இலங்கை அதிபர் கும்பல் அதை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையாக சித்தரித்து வருகிறார்கள் என்பதிலோ யாருக்கும் ஐயம் இல்லை. ஆனால் அதற்கு தீர்வு என்ன என்பதில் அமெரிக்க தீர்மானத்தின் பின்னே ஒழிந்து கொள்கிறார்கள். அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ ஆன நிலைபாடுகளில் தான் இந்தப் போராட்டங்கள் எழுந்திருக்கின்றன. தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த நாடு ஆதரவாக இருக்கிறதோ அந்த நாடு என்ன விதமான கொடூரங்களைப் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாமலிருப்பதும், எதிரான நாடுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதன் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி நாசம் செய்வதும் அதை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதும். நாடுகளைப் பணிய வைப்பதற்காக எந்த விதமான எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதும் யாருக்கும் தெரியாத இரகசியங்களல்ல. இப்போது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இந்த வகைப்பாட்டில் அடங்காது மெய்யான அக்கரையினால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் என்று யாரேனும் கூற முடியுமா? அல்லது இலங்கை அதிபர் கும்பலை இதனால் தண்டித்து விட முடியுமா?
 


அத்தனை ஓட்டுக் கட்சிகளும் காங்கிரஸ் அரசு இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருவதையே அல்லது இன்னும் கடுமையாக்க வேண்டும் என்பதையே ஈழத் தமிழர்களுக்கான மீட்சியாக கருதிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சியில் இருக்கும் போது இவாறாக நடிக்க முடியாமல் போனதற்கான பிராயச்சித்தமாக டெசோ, வேலைநிறுத்தம் என்று ‘ரன்’ சேர்க்க முயன்று கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் ஆதரவு வாபஸ் ஏண்றோறு சிக்ஸரையும் அடித்திருக்கிறது. ஏனைய கட்சிகளின் போக்குகளோ இந்த எழுச்சியின் பயனை திமுக அறுவடை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. ஆம். அத்தனை ஓட்டுக் கட்சிகளின் கவலையும் அது தான். மக்கள் எழுச்சியை தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதும், வேறொரு கட்சி அதை பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி தடுப்பது என்பதும் தான் எப்போதும் அவர்களின் கவலை.
 


இந்த விவகாரத்தில் திமுக முழுதாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஆட்சியில்
இருக்கும் போது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றும், “ஒரு அடிமை என்ன செய்துவிட முடியும்?” என்றும் பிலாக்கானம் பாடி விட்டு இப்போது ஆதரவு வாபஸ் என்பது சவடால் தான். அதிமுகவோ ஆட்சியில் இல்லாத போதே, காங்கிரசுடன் கூட்டணியில் இல்லாத போதே “போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றதும் தொடர்ந்து புலிப்பூச்சாண்டி காட்டியே தன்னுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படை. இப்போதும் கூட மாணவர்கள் போராட்டம் பரவத் தொடங்குகிறது என அறிந்ததும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விமுறை அறிவித்ததன் மூலம்ஆனாலும் ஜெயலலிதா இன்றும் ஈழத்தாயாக தன்னை பராமரித்துக் கொண்டிருக்கிறார். இடது வலது போலிகளோ அரசை எதிர்த்து போராடும் தேசிய இனம், அந்த இனத்தை இனவழிப்பு செய்ததில் இந்திய அரசின் பாத்திரம் எனும் அடிப்படையில் பார்க்காமல் ஈழமக்களின் துயரம் எனும் எல்லையில் நின்று கொண்டு மார்க்சியச் சொல்லாடல்களில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற புலி அபிமான தமிழ் தேசிய வியாதிகள் பாலச் சந்திரன் மரணத்தை மட்டும் போர்க்குற்றம் என்று ஓங்கிக் கூறி பிரபாகரனை இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று சுவிசேச பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன், நடேசன், கரும்புலிகள் உள்ளட்ட அனைத்துமே போர்க்குற்றங்கள் தாம் என்பதைப் பேச மறுக்கிறார்கள். பேசினால் புலிகளின் சரணடைவுக்கான அரசியல், இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிம்பங்கள் குறித்து பேச வேண்டியதிருக்கும். ஆக இவர்கள் அனைவரின் நாடகங்களும் தங்களின் நலன் எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து கிளைத்தவை தானேயன்றி ஈழ மக்களுக்குக்கான தீர்வு எனும் தாகமோ, ஊக்கமோ இதில் இல்லை.
 


இந்த நிலையில் தான் தன்னெழுச்சியாக கல்லூரி மாணவர்கள் திரண்டு போராட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளும் அமெரிக்க தீர்மானத்தைச் சுற்றியே இருக்கின்றன. இந்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள், கடுமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஈழ மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பின் கொடூரங்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமைகள் மீளக் கிடைக்க வேண்டும் எனும் மெய்யான உந்துதலிலிருந்து நடத்தப்படும் இந்தப் போராட்டங்களில் சரியான அரசியலும் சேர்ந்து கொள்ளும் போது மட்டுமே ஈழமக்களுக்கான உரிமையில் இப்போராட்டங்கள் சரியான பங்களிப்பைச் செலுத்த முடியும்.
 


முதலில் இதில் இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது கள்ளனிடமே சாவியைக் கொடுப்பது போன்றது. ஏனென்றால்  ஈழ இனவழிப்பில் இலங்கை அரசைப் போலவே இந்திய அரசும் போர்க் குற்றவாளி தான். இலங்கை அதிபருக்கு  எதிரான போர்க்குற்றங்களை அவரே விசாரிப்பது எப்படி அயோக்கியத்தனமானதோ, அது போலவே இந்தியாவை இலங்கை அதிபருக்கு எதிராக விசாரிக்கக் கோருவதும் அயோக்கியமானதே. இந்தியா தீர்மானம் கொண்டுவருவதற்கு தகுதியற்றது என்றால் அமெரிக்கா போர்க்குற்றம் எனும் சொல்லை உச்சரிக்கவே அறுகதையற்றது. ஏனென்றால் உலகில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் அத்தனை போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறலிலும் அமெரிக்காவின் பங்களிப்பு இருக்கிறது. அதாவது அத்தனை மனித உரிமை மீறலும் அமெரிக்காவின் நலனுக்காகவே நடத்தப்படுகிறது. ஐ.நா. அவையோ அமெரிக்காவின் இன்னொரு நாட்டில் அத்துமீறுவதற்கான மனித உரிமை அனுமதி வாங்கித்தரும் ஏஜென்ஸியாக செயல்படுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்பதும், இந்தியா திருத்தங்கள் செய்து மேலும் கடுமையாக்க வேண்டும் என்பதும் அந்த அயோக்கியத்தனத்தை மறைக்கவே பயன்படும்.
 


எனவே இந்த அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதே தமிழக தமிழர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும். ஓர் ஒடுக்கும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு சொந்த நாடு இன்னொரு நாட்டை ஒடுக்குவதை எதிர்த்து குரல் கொடுப்பதும் போராடுவதுமே முதன்மையான பணியாக இருக்க முடியும். அந்த வகையிலும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதும், இந்தியாவை திருத்தம் செய்யக் கோருவதும் தவறான முடிவாகவே இருக்கும். தமிழினவாதிகள் இப்போதே இந்தியாவும் இந்த இனவழிப்பில் பங்கெடுத்திருப்பதை கூறினாலும் அது மாத்திரைக் குறைவாகவே ஒலிக்கிறது. ஏனென்றால், அவ்வாறு அவர்கள் கூறும் போதே காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் அவர்களின் நினைவில் வந்தாடுகிறது. எனவே அடக்கி வாசிக்கிறார்கள். எனவே உரக்கச் சொல்வோம், ஈழ இனவழிப்பில் இந்தியாவும் போர்க்குற்றவாளியே.
 



இலங்கை அதிபரது தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் பல வண்ண கோரிக்கைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கப் போவதில்லை. ஆனால் யார் அதை முன்னெடுப்பது? அமெரிக்காவுக்கோ அதன் தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கோ அறுகதை இல்லை, இந்தியாவுக்கோ தகுதியில்லை. பின் யார் முன்னெடுப்பது? மக்கள் தாம். இலங்கையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாடோ இந்த விசாரணையை நடத்தாமல் ஹிட்லரின் நாஜி படைகளுக்கு எதிராக நடந்த நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணையைப் போல உலக நாடுகள் அனைத்தும் பொறுப்பேற்று நடத்த வேண்டும். இதை அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் தம் சொந்த அரசை இதற்கு நிர்ப்பந்தம் செய்வதன் மூலம் சாதிக்க வேண்டும். அன்றைய உலகம் முதலாளித்துவ முகாம், சோசலிச முகாம் என்று இரண்டு பிரிவாக இருந்ததனால் ஓரளவுக்கு சரியாக நூரம்பர்க் விசாரணையின் போக்கு இருந்ததது. ஆனால் இன்று சோசலிச முகாம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டுவிட்ட பின்னால் முதலாளித்துவ முகாம் மட்டுமே நிலவும் இன்றைய உலகில் அத்தகைய விசாரணை சாத்தியமா என்பது கேள்விக்குறி தான் என்றாலும். அயோக்கியத்தன அம்மணங்களை மூடி மறைக்கும் கோமணத் துணியாக பயன்படுவதைக் காட்டிலும் காரிய சித்தியுள்ள வழி இது தான்.
 


எனவே, இந்த திசை வழியில் தமிழகத்தில் 80களில் ஏற்பட்ட எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்.

-Senkodi
 
Thanks: www.Senkodi.com

Monday, April 1, 2013

பொதுபல சேனாவுக்கு பகிரங்க ஆதரவு

 


கடந்த March10ம் திகதி ஜெயராஜ் அவர்களால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


 
-Jesslya Jessly


க்கள் மீதுள்ள அக்கறைத் தளத்தில் தீங்கற்ற செயற்பாடு போல் தென்பட்டாலும், சர்ச்சைக்குரிய நகர்வொன்றை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கடந்த 9ம் திகதி மேற்கொண்டிருப்பது பல்வேறு மட்டங்களில் ஊகங்களை ஏற்படுத்தி விட்டுள்ளது,

கடந்த மார்ச் 09, சனிக்கிழமை ஜனாதிபதியின் சகோதரரும், தற்போது இலங்கையில் இரண்டாவது பலம் வாய்ந்த நபராக குரிப்பிடப்படுபவருமான கோட்டபாய இனவாதப் பாசிச அமைப்பான, பௌத்த சக்திப் படை எனும் பொருள்படும் பொது பல சேனாவுடன் தொடர்புடைய அமைப்பொன்றின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அதன் கட்டடத்தை திறந்துவைத்தார்.

தென் மாகாணத்தின் தலைநகரான காலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ பயிற்சியகத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். வரலாற்றில் றுஹுண என அறியப்படுகின்ற தெற்குப் பிரதேசத்தின் வஞ்சவல பகுதியின் பிலன எனும் இடத்தில் இந்தப் பயிற்சியகத்தின் கட்டடம் கவர்ச்சிகரமான சுற்றயல் பகுதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.

குறித்த பயிற்சியகம் தமது அங்கத்தவர்களான பிக்குகளினதும், பௌத்த தலைவர்களினதும், பௌத்த ஆர்வலர்களான இளைஞர்களினதும் தலைமைத்துவ தரத்தை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக பொது பல சேனா குறிப்பிடுகிறது. மேலும் ஏதிர்காலத்தில் இப்பயிற்சியகம் முழு வசதிகளும் கொண்ட பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

இந்த ஆரம்ப விழாவுக்கு வண. பள்ளத்தற சுமணஜோதி மகாநாயக தேரோ தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றியவர்களுள் “மெத் செவன” என பெயர்சூட்டப்பட்டுள்ள குறித்த பயிற்சியகத்தின் தலைவர் வண. எம்பிலிப்பிடிய விஜித தேரோ மற்றும் பொது பல சேனாவின் செயலாளர் நாயகம் வண. கலபொட அத்தே ஞானசார தேரோ ஆகியோர் முக்கியமானவர்களாகும்.

சாதாரண நிலைமைகளின் கீழ் இவ்வாறான உயர்தரமான நோக்கங்களையும் இலக்குகளையும் கொண்ட பயிற்சியகம் ஒன்றை திறந்துவைப்பது எவ்வித தவறுமற்றதாகவே நோக்கப்படக்கூடியது. எனினும் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு செய்வது மற்றும் பொது பல சேனாவுக்கு அவர் மறைமுகமாக ஆதரவு வழங்கிவருவதாக ஏற்கெனெவே சந்தேகங்களும் இதன் பின்விளைவுகள் தொடர்பான அச்சங்களும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றிருப்பது சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கிறது.

உரை

இந்த விடயம் திறப்பு விழா உரையின் பொது கோட்டபாயவினாலேயே வெளியிடப்பட்டது.

இந்த உரையின் போது கோட்டபாய “பலர் என்னை இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட போதும் இந்நிகழ்வின் காலம் சார்ந்த முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு நான் கலத்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும் “இந்த பௌத்த மதகுருமார் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, யாரும் பயப்படவோ சந்தேகப்படவோ கூடாத வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள்” என்றும் அவர் சொன்னார்.

பாதுகாப்புச் செயலாளரின் பொது பல சேனாவினை பெருமையாக போற்றும் வண்ணமான மேற்குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும், இந்நிகழ்வில் தான் பங்குபற்றுவதில் பலருக்கும் ஆட்சேபணை இருந்ததை அவர் குறிப்பிட்டதும் இந்நிகழ்வினதும் பொது பல சேனாவின் செயற்பாடுகளின் பின்னணியிலும் மறைமுகமாக நிலவியதாக சந்தேகிக்கப்பட்ட உயர்மட்ட செல்வாக்குகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டவிதமாகவே அமைந்தன.

பொது பல சேனாவின் நடவடிக்கைகளே பலர் ஆட்சேபணை தெரிவிக்க காரணமாய் இருந்தன என்பது வெளிப்படை. ஏனெனில் முந்திய ஊடகச் செய்திகள் கோட்டபாய ராஜபக்ஷ காலியில் பொது பல சேனா தலைமையகத் திறப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாகவே தெரிவித்திருந்தன.

பொது பல சேனாவைத் தோற்றுவித்து அதன் தலைவர்களாக இயங்குவோர் பௌத்த மதகுருக்களான வண. கிரம விமலஜோதி தேரோ மற்றும் வண. கலபொட அத்தே ஞானசார தேரோ ஆகியோராகும்

நெதிமல

விமல ஜோதி தேரர் தெஹிவள நெதிமலவில் அமைந்துள்ள பௌத்த கலாசார நிலையத்தின் பணிப்பாளராகவும் இருக்கிறார். காலியில் திறக்கப்பட்ட மெத் செவன கட்டிடத் தொகுதி உண்மையில் நெதிமல நிலையத்துடன் இணைக்கப்பட்ட கல்வி மற்றும் கலாசார நிலையமாகவே திட்டமிடப்பட்டிருந்தது எனினும் பின்னர் விமலஜோதி தேரர் இதை பொது பல சேனாவின் பௌத்த தலைமைத்துவ பயிற்சியகமாக மாற்றியமைத்தார். இரண்டு அமைப்புகளுக்கும் பொறுப்பானவராக அவரே இருந்தது இதைச் சாத்தியமாக்கிற்று

அத்துடன் காலியில் திறக்கப்பட்ட மெத் செவன கட்டிடத் தொகுதி ஜேர்மன் நாட்டவர் ஒருவரால் நெதிமல பௌத்த கலாசார நிலையத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த ஜேர்மன் நாட்டவரே தற்போது பொது பல சேனா பயிற்சியகமாக மாற்றப்பட்ட வீடு மட்டும் நிலம் அடங்கிய சொத்தின் முந்தைய உரிமையாளர் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மை எனின் நெதிமல நிலையத்தின் இணைப்பு நிலையமாக அமைக்கப்பட இருந்த மேற்படி கட்டிடத்தொகுதியை பொது பல சேனா பயிற்சியகமாக மாற்ற அவர் சம்மதித்தாரா? என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. எவ்வாறெனினும் குறித்த ஜேர்மன் நாட்டவர் திறப்புவிழாவின் பொது பிரசன்னமாகி இருந்தார் எனினும் நிகழ்ச்சியின் முதல் மரியாதை அவருக்கன்றி கோட்டபாய ராஜபக்ஷவுக்கே வழங்கப்பட்டது.

இதில் சுவாரசியமான விடயம் யாதெனில் பொது பல சேனா எவ்வித வெளிநாட்டு நிதியையும் பெறவில்லை என பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்த விமலஜோதி தேரர் திறப்பு விழாவின் போது இந்த நிலையத்துக்கான நிதியை ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நலன்விரும்பி வழங்கியிருந்தார் எனக் கூறியதாகும்.

சிலோன் டுடேயின் ரங்க ஜயசூரியவுக்கு வழங்கிய செவ்வியின் போது விமலஜோதி தேரர் “நாங்கள் யாரிடமிருந்தும் ஒரு செப்புச் சதத்தையாவது பெறவில்லை என என்னால் புத்தர் சிலைக்கு முன்னால் வேண்டுமென்றாலும் சத்தியம் செய்ய முடியும். இந்த விடயத்ஹ்டில் நாங்கள் பொய் சொல்கிறோம் என்று யாராவது நிரூபித்தால், நாங்கள் எமது அமைப்பை (பொது பல சேனாவை) அடுத்த நாளே மூடிவிடத் தயார்” எண்று கூறியிருந்தார்.

பொது பல சேனாவின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியால்தான் அதன் முக்கிய நிகழ்வொன்றில் கோட்டபாய பங்கெடுப்பது ஒரு பிரச்சினையாக நோக்கப்பட்டது.

பாரதூரமான விளைவுகள் / நடவடிக்கைகள்

அண்மைக்காலமாக பொது பல சேனா இலங்கையின் மத வழி சிறுபான்மையினருக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நச்சுக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சார நடத்திவருவது தொடர்பில் செய்திகளில் அதிகம் இடம்பெற்று வருகிறது

பொது பல சேனா நிர்வாகிகளின் மறுப்புகளைத் தாண்டி அவ்வமைப்பு பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புதிய பாசிச அமைப்பாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் அடையாளப்படுத்தப்பட அதன் நடவடிக்கைகள் துணைபோயுள்ளன.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவும் வேறு சில குழுக்களும் ஒருங்கிணைந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரமானது சர்வதேச ரீதியாக பல தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் நாட்டுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தி வரும் சேதங்கள் நாட்டுக்கு வெளியிலிருந்து இயங்கும் தீய சக்தி இந்நடவடிக்கைகளுக்கு பின்னல் இருக்குமோ என்ற சந்தேகத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது. தெளிவான ஆதாரங்கள் இல்லை எனினும் சிலர் இஸ்ரேலின் மரிவான உதவிகள் இதற்கு பின்னணியில் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

பொது பல சேனாவின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனிக்கத்தக்க மற்றுமோர் முக்கிய விடயம் யாதெனில், அதன் வெளிப்படையாகவும், பெரும்பான்மையினரின் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும், தெளிவான நோக்கத்தைக் கொண்டவையுமாக மேற்கொள்ளப்படும் அதன் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளை தடுப்பதில் ராஜபக்ஷ அரசு கவனமற்றிருப்பதாகும். இது வெளிப்படையாகவே புலப்படுகிறது.

பிரச்சாரம்

அடிக்கடி பௌத்த – முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிய அறிவிப்புகள் விடுக்கப்பட்டும் அதை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக தெளிவற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் வந்தன எனினும் பொது பல சேனாவைக் குறிப்பிட்டு இவ்வாறான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. முஸ்லிம்களுக்கு அரசு ஒருபோதும் அவர்களுக்கு தீங்கு நேர அனுமதிக்காது என்ற உறுதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிரான சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவது தொடர்பில் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

முஸ்லிம் சமூகத் தலைவர்களும் பிரதிநிதிகளும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறையிட்ட போது, பொது பல சேனா மிகச் சிறிய ஆதரவு கொண்ட குழு என்றும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அதை பௌத்தர்களிடம் பிரபலப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக ஆகி விடும் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது.

17.02.2013 அன்று மஹரகமயில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கையின் பின்னர் விடுக்கப்பட்ட பொது பல சேனாவை தடைசெய்யும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மஹரகம எதிர்ப்பு நடவடிக்கையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டது மஹிந்தவினதும் கோட்டபாயவினதும் பொது பல சேனா அதிக ஆதரவற்ற ஒரு சிறு குழு என்ற கருத்துகளைப் பொய்ப்பித்தது. அங்கு சேர்ந்த கூட்டமும் அவர்கள் வெளிக்காட்டிய வெறுப்பான மனோநிலையும் பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை மக்கள் மத்தியில் விரைவாக பரவுவதை வெளிக்காட்டின.

உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும் பாஜபக்ஷ அரசு பொது பல சேனாவால் முன்வைக்கப்பட்ட அழுத்தமான கோரிக்கைகள் சிலதுக்கு இசைவாக நடந்து கொள்வதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் அண்மையில் அரசினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிரந்தர கருத்தடை முறைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதாகும்.

பொது பல சேனா மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை கடுமையாக எதிர்த்திருந்தது. இவற்றினால் சிங்கள பௌத்த சமுதாயத்தின் சனத்தொகை குறைவடைவதாகவும், முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சியடைவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது. சிங்கள பௌத்தர்களுக்கான “சிறிய குடும்பமே சிறந்தது” என்ற கருத்தடை ஊக்குவிப்பு சுலோகத்தை பொது பல சேனா குறித்து இலக்கு வைத்திருந்தது.

பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலான தீர்மானிப்பு நிலை

இங்கு தீர்மானிப்பு நிலையில் உள்ள முக்கிய விடயமாக பொது பல சேனாவின் நடவடிக்கைகள் மீது போலீசார் என்ன செய்கிறார்கள் ? என்பது அமைகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளையெல்லாம் உத்தரவிடப்பட்டபோது தகர்த்து எறிந்த பொலிசார், சிறுபான்மை இனம் ஒன்றையும் அதன் மார்க்கத்தையும் இலக்கு வைத்து ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடத்தப்படும் பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரலைக்கூட அசைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உச்ச நீதிமன்றத்துக்குள் செல்வதைத் தடுக்க முழு வலுவுடன் குவிக்கப்பட்ட சட்டத்தின் காவலர்களான காக்கி உடையினர், சமூகங்களுக்கிடையில் உறவைக் குலைக்கக்கூடிய பொது பல சேனாவின் நடவடிக்கைகளின் போது அவ்வியக்கத்தின் ஒட்டுக்குழு போன்று செயற்படுகின்றனர்.

அநேக சந்தர்ப்பங்களில் கோபமுற்ற பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய எதிர்ப்புகளிலிருந்து தங்களை பௌத்த செயற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்ளும் போது பல சேனாவுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலேயே பொலிசாரின் செயற்பாடுகள் அமைந்தன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் போது பொது பல சேனாவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமான முறையில் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலேயே அமைந்திருந்தும், பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை முஸ்லிம்களை மாத்திரமின்றி, உலகளாவிய இஸ்லாமிய நம்பிக்கைக்கே கடுமையாக ஊறுவிளைவிக்கும் வகையிலான படங்கள், சுலோகங்கள் மற்றும் கொடும்பாவிகள் பாவிக்கப்பட்ட போதும் பொலிஸ் அசையவில்லை. பொது பல சேனா இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நிராகரித்து, குற்றச்சாட்டுகளை அவர்களை ஒத்த செயற்பாடுகளைச் செய்துவரும் ஏனைய அமைப்புகளின் மீது போட்டாலும், உண்மை பலருக்கு ஆதாரப்பூர்வமாக தெரிந்திருக்கிறது.

பொது பல சேனா மீது அதிருப்தியுற்ற பொலிஸ் அதிகாரிகள் நம்பிக்கைக்குரிய ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களிடம் பதிவுக்கு வராத வண்ணம் மேலிட உத்தரவு காரணமாக எங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது என்று ஒத்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

சந்தேகம்

இவ்வாறாக நடந்துவரும் பிழைகள் ராஜபக்ஷ அரசால் கவனிப்பற்றும் நடவடிக்கைகள் அற்றும் விடப்படுவது, பொது பல சேனாவுக்கு அரசாங்கம் மறைமுகமாக ஊக்கமளிப்பது மட்டுமன்றி அனுசரணையும் வழங்குகிறதா? என்ற சந்தேகம் பரவ காரணமாக அமைகின்றன. அரசியலில் ஈடுபட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய போலன்றி, தாங்கள் அரசியில் ஈடுபடப் போவதில்லை என பொது பல சேனா கூறுகின்றது எனினும், ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூரண ஆதரவை தாங்கள் வழங்குவதாக பொது பல சேனா உருதியளித்துள்ளதோடு, அவரது அரசை உண்மையான சிங்கள பௌத்த அரசு என்றும் அழைக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் ராஜபக்ஷ அரசு ஏன் இவ்வாறு ஒரு இனவாத மதவாத பாசிச அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது என்று பல்வேறு ரகசிய அரசியல் சதிவேலை தொடர்பான கதைகள் உலாவுகின்றன.

இவற்றுள் முக்கியமானதாக பாதுகாப்புச் செயலாளரை முக்கியப்படுத்தி, முன்னாள் கஜபா படைப்பிரிவு வீரரும் பௌத்த மதத்தை ஆழமாகப் பின்பற்றுபவரும், சைவ உணவுப் பழக்கமும் உடைய இவர் பொது பல சேனாவை ஆதரிப்பது மாத்திரமன்றி பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள ரகசிய நிதியைப் பயன்படுத்தி இவ்வமைப்புக்கு நிதியுதவி அளித்து வருகிறார் என்பது அமைகின்றது.

முன்னர் குறிப்பிடப்பட்ட விமலஜோதி தேரரிடம் ரங்க ஜயசூரியவால் செய்யப்பட நேர்காணலில் இவ்விடயம் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டன.

பிரித்தெடுப்பு

கேள்வி: முந்தைய கேள்விக்கு மீண்டும் வருவோம். அரசாங்கம் உங்களது அமைப்புக்கு பின்னணியில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே ?

பதில்: அரசிடமிருந்து எமக்கு எவ்விதமான ஆதரவும் கிடைக்கவில்லை. சிறிதுகாலத்துக்கு முன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்புக்கு செல்ல ஜனாதிபதி அவர்கள் எமக்கு ஒரு வாகனத்தைக் கூட அனுப்பவில்லை.

கேள்வி: கோட்டபாய ராஜபக்ஷவிடமிருந்து கூடவா? அவர் ஒரு சிறந்த சிங்கள பௌத்தராயிற்றே?

பதில்: இல்லை, யாரிடமிருந்தும் நாங்கள் ஆதரவைப் பெறவில்லை என்று நான் உங்களுக்குச் சொன்னேன். பாதுகாப்புச் செயலாளரிடம் இருந்து நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. அவர் எங்களிடம் “ஹாமதுருமார்களே, தயவுசெய்து பிரச்சினையை உருவாக்க வேண்டாம்” என்று சொன்னார். நான் அவரிடம் நாங்கள் பிரச்சினையை உருவாக்குவதில்லை என்றும், அவரோ அரசில் உள்ளவர்களோ அதைப்பற்றி பயப்படத் தேவையில்லை என்றும் சொன்னேன்.

கேள்வி: நோர்வேயிடமிருந்து நீங்கள் நிதியுதவி பெறுவதாக சொல்லப்படுவது பற்றி…….

பதில்: சிலர் எங்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் பணம் தருவதாகவும், இன்னும் சிலர் எங்களுக்கு நோர்வே நிதியுதவி செய்வதாகவும் சொல்கின்றனர். நாங்கள் யாரிடம் இருந்தும் ஒரு செப்புச் சத்தத்தைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என என்னால் சத்தியம் செய்ய முடியும் – புத்த பெருமானின் சிலைக்கு முன்னால் கூட. இவ்விடயத்தில் நாங்கள் பொய் சொல்லுகிறோம் என யாராவது நிரூபித்தால், நாங்கள் மறுநாளே எமது அமைப்பை கலைத்துவிட தயாராக இருக்கிறோம். சம்புத்த ஜயந்தி மந்திரயவை புதுப்பிக்க பெறப்பட்ட கடன்களுக்காக நான் வங்கிகளுக்கு 240 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டியுள்ளது. எமது வேலைகளுக்காக எனது பௌத்த சன்க்ஸ்குருதிக மடையஸ்தானயவுக்கு சொந்தமான வாகனங்களே பாவிக்கப்படுகின்றன. நான் எழுதும் தம்ம புத்தகங்கள் பௌத்த பரோபகாரிகளின் நிதியுதவியுடன் அச்சிடப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் எந்த நிதியுதவியையும் பெறவில்லை என உறுதியாக கூறுகின்றீர்களா ?

பதில்: ஆம். அரசிடமிருந்தோ, எந்த வெளிநாட்டிடம் இருந்தோ, அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தோ நாங்கள் ஒரு செப்புச் சதத்தையேனும் பெறவில்லை. அங்கத்தவர்களைச் சேர்த்து அவர்களிடமிருந்து அங்கத்துவப் பணத்தை வசூலிக்கும் முயற்சியொன்றை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களையும் மதகுருமாரையும் உள்ளடக்கி 100,000 அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வது எமது திட்டமாகும்.

இணைப்புகள்

வலுவான மறுப்புகளையும் மீறி இலங்கை மக்களிடயே கோட்டபாய ராஜபக்ஷ – பொது பல சேனா இணைப்பை பற்றிய சந்தேகம் நிலைத்திருக்கிறது. இந்த சந்தேகம் ஊடகங்களால் எழுப்பப்பட்டிருக்கும் பொது பல சேனாவின் எழுச்சிக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பிருக்கும் எனும் உறுதியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுத்து மேலும் வலுப்பெற்றுள்ளது.

பொது பல சேனா போன்ற அமைப்புகளுடன் தொடர்பற்ற எந்த அரசும் அதை உறுதிப்படுத்த பகிரங்க அறிக்கையொன்றை விடுப்பது வழமையான செயற்பாடாகும். ஜனாதிபதியோ அரசாங்கமோ பொது பல சேனாவை அதன் முஸ்லிம் எதிர்ப்பு வேலைத்திட்டத்துக்காக பகிரங்கமாக விமர்சிப்பது சிறந்த செயற்பாடாக அமைந்திருக்கும்.

ஆனால் இவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் தற்போதைய அரசின் கீழ் அது இடம்பெறவும் போவதில்லை போன்றே தெரிகிறது.

அவ்வாறே பாதுகாப்புச் செயலாளரும் அவருக்கு உண்மையாகவே புதிய பாசிசவாத அமைப்பு எனக் கருதப்படும் பொது பல சேனாவுடன் தொடர்புகள் ஏதும் இல்லாதவிடத்து அதை உறுதிப்படுத்தி அவரது நிலையை தெளிவுபடுத்தி இருக்க முடியும்.

மாறாக அவர் பொது பல சேனாவின் தலைமைத்துவப் பயிற்சியகத்தை திறந்து வைத்ததனூடாக பகிரங்கமாக தன்னை பொது பல சேனாவுடன் இணைப்பு உள்ளவராக காட்டுவதையே தேர்வு செய்துள்ளார்.

மனோநிலை

இவ்வாறு செய்வதன் ஊடாக பொது பல சேனாவுடன் தனக்குள்ள இணைப்பை வெளிக்காட்ட தான் தயங்கவில்லை என்ற தெளிவான செய்தியை அவர் சொல்லியுள்ளார். பொது பல சேனா தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சாதகாமான கருத்துகள் அவ்வமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அவரது மனோநிலையை தெளிவாகக் காட்டுகின்றன. அவரது மேற்படி செயற்பாடுகளால், கோட்டபாய பொது பல சேனாவின் பிரச்சாரத்தை தான் ஏற்றுக்கொள்வதை வெளிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சரியாக ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் செயலாளரின் நகர்வு தொடர்பில் அவரது செயற்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்போரால் பல்வேறு நியாயப்படுத்தல்களும் காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோட்டபாய ராஜபக்ஷ தனது நடத்தைக்கு உண்மையான முறையில் பொது பல சேனா போன்ற அமைப்பு ஒன்றுடன் பகிரங்கமாக தன்னை இணைத்துக் காட்டிக் கொண்டார் எனக் கொண்டால், அவர் பொது பல சேனாவை எதிர்மறை அமைப்பாக பார்க்கவில்லை என்பதையும் தனது நம்பிக்கைகளுக்காக உறுதிபட நிற்பார் என்பதையுமே அவர் செயற்படுத்திக் காட்டியுள்ளார். சொற்களால் அன்றி செயற்பாட்டால் இதை வெளிக்காட்டியதன் ஊடாக அவர் குறித்த இனவாத மதவாத பாசிசத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்த மரியாதையும் தான் அளிக்கவில்லை என்பதையும் அவர்களை தான் கருத்தில் கொள்ளவில்லை என்பதையுமே அவர் பகிரங்கமாக காட்டியுள்ளார்.

அவரது இந்த நடத்தைக்கு என்ன காரணம் இருப்பினும் அது கோட்டா – பொது பல சேனா இணைப்பு தொடர்பான சந்தேகங்களை வலுப்படுத்தியே விட்டுள்ளது. இதன் பிரதிபலிப்புகள் அவர் மீது மட்டுமல்ல அவரது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் அவர் தலைமை தாங்கும் அரசின் மீதும் மோசமாக ஏற்படும் என்பது உண்மையாகும்.

பொது பல சேனாவின் தலைமைத்துவப் பயிற்சியகத்தை திறந்துவைத்தது சிறியதொரு செயற்பாடாக தோன்றினாலும், இந்நடவடிக்கையின் பின்விளைவுகள் முள்ளிவாய்க்கால் வெற்றியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளைப் போலவே ஜெனீவா, வாஷிங்டன், லண்டன் மற்றும் புது டில்லியில் உணரப்படும் என்பது மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் .
-D.B.S. ஜெயராஜ் 
 Thanks :  தமிழாக்கம்: காத்தான்குடி இன்போ

Sunday, March 31, 2013

இலங்கை 2090 இல் முஸ்லிம் நாடாகும்?







* 2090 இல் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடாக மாறும்.


* தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.


 
* முஹம்மத் பின் காஸிம் இந்தியா வந்தவேளை, நாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தை தீயிட்டுக் கொழுத்தி, 5,000 பிக்குகளை கொன்றான்.

* மலேசியா, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவ பண ஆசையும் காமவெறியுமே காரணம்.

* புலிகளுக்கும் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

* எம்.எச்.முஹம்மத், ஹாபிஸ் நஸீர் அஹ்மத், பாகீர் மாகார், ஏ.ஸீ.எஸ் ஹமீட், ஹகீம், அஷ்ரப் ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதிகளாவர்.


* இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை இலங்கையிலிருந்து துரத்திய பிரேமதாச முஸ்லிம் அடிப்படைவாதிகளது சதியில் சிக்கியவராவார்.

* வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்திலும் கல்பிட்டியிலுமுள்ள சிங்களவர்களது சொத்துக்களைப் பிடித்துக் கொண்டார்கள்.

* இலங்கையிலுள்ள மத்ரஸாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிடப்பட்டவை

ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சருமான சம்பிக ரணவகவின் கருத்துக்களாகும்.
 
 
அவரது  "அல்கைதா அல்ஜிஹாத்' என்ற தனது நூலில் மேலுள்ள கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
 
(அல்ஜிஹாத் அல்கைதா இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் பாட்டலி சம்பிக ரணவக) மேற்படி நூலிலிருந்து பெறப்பட்ட முக்கிய கருத்துக்களை பக்கங்களுடன் அவரது வார்த்தைகளிலேயே வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறோம். அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி எவ்வளவு மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை இதிலிருந்து புரியலாம். அவர் துவேஷம், பொறாமை, வைராக்கியம் , வெறி  என்பனவற்றை கக்குகிறார்.

 அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின்  பிரதானமான கருத்துக்கள் வருமாறு:

சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம் :

உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக், மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்)

தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அடிப்படைவாதக் குழுக்க ளுக்கு பண மற்றும் யுத்த உதவிகளைச் செய்யும் நாடாக ஈரானைக் காணலாம். அல்ஜீரியா, மொரோக்கோ, சிரியா, ஜோர்தான், லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கிறது. (பக்:78)

கடாபி இலங்கை வந்தவேளை முஸ்லிம்கள் அவருக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தனது பேரப்பிள்ளை இலங்கைக்கு வரும் போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று கூறினார். கடாபி மனதால் இஸ்லாமிய அடிப்படைவாதிதான். இலங்கையிலுள்ள சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் அமெரிக்காவை போலியாக எதிர்ப்ப வர் களுக்கும் அவர் அடிப்படையான பல உதவிகளைச் செய்வது இரகசியமல்ல. சதாம் ஹுஸைன் மேற்குலக எதிரிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத கட்சிகளுக்கும் பண ரீதியான மற்றும் ஆயுத ரீதியான பல உதவிகளைச் செய்திருக்கிறார். (பக்:111, 116)

"இஹ்வானுல் முஸ்லிமூன்' இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சவூதி அரேபியாவின் ஸலபீக்களும் அடிப்படைவாதிகளாவர். இவர்கள் தான் உஸாமா பின்லாடினை உருவாக்கினார்கள். சவுதி அரேபியாவுக்குள் அல்காயிதாவுக்கு பெருமளவு பணம் திரட்டப்படுகிறது. இதற்காக IIRO, ISCAG, IWWWM போன்ற நிறுவனங்கள் பயன்படுத் தப்படுகின்றன. உலகெங்கும் பள்ளிவாசல் களை, மத்ரஸாக்களை, பாடசாலைகளைக் கட்டுவதற்கும் சேமநலத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் சவூதி அதிக பணத்தை வழங்குகின்றது. இலங்கையிலும் இது இப்படித்தான் நடக்கின்றது. அந்தவகையில், பயங்கரவாதத்தின் ஆணி வேராக சவூதியின் ரியால்தான் இருக்கிறது. (பக்:228)

 இந்தியாவுக்கு வந்த முஹம்மத் பின் காஸிம், காஷ்மீரின் பௌத்த அரசை தாக்கினான். உலகின் மிகப் பெரிய பௌத்த பல்கலைக்கழகமாக இருந்த நாலந்தாவுக்கு தீயிட்டுக் கொழுத்தி 5000 பிக்குகளைக் கொன்று குவித்தான். பிக்குகள் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் காஸிம் நாலந்தாவுக்குள் நுழைந்தான். அந்தப் பிக்குகள் எந்த எதிர்நடவடிக்கையிலும் ஈடுபடாததினால் இந்தக் கொலையையும் தீயிடலையும் அவனால் செய்ய முடிந்தது. தெய்வத்தில், வாழ்க்கைக்கோர் குறிக்கோளில் நம்பிக்கை வைக்காத பௌத்தர்கள் பிசாசுகளைப் போன்று அவனுக்குத் தென்பட் டார்கள். பௌத்தர்கள் தமது அரசை ஆயுத பலத்தால் ஆளவில்லை. எனவே, பௌத்த சாம்ராஜ்யத்தின் வடமேல் பகுதி சரிந்து விழுந்தது. பௌத்த ராஜ்யத்தின் சிதைவுகளின் மீது கட்டி யெழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசு கி.பி 808 வரை இந்தியா வின் சிந்துப் பிரதேசத்தில் நிலைத்தது. (பக்:52)

மலேசியா மிகவேகமாக முஸ்லிம் அடிப் படைவாதத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்தோனேசியாவிலிருந்த கோத்திரங்களது தலைவர்களுக்கு அரேபிய வியாபாரிகள் பணம் (சந்தோஷம்) கொடுத்துத்தான். இஸ்லாத்தைப் பரப்பியிருக்கிறார்கள். தற்காலத்தில் அங்கு அதிதீவிரவாதிகளது கட்சியானது ஷரீஆ சட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்து தேர்தல்களில் கூட முன்னணி வகிக்கிறது. உலகி லேயே அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் அடிப்படை வாதக் கட்சி இந்தோனேசியாவிலேயே உள்ளது. (பக்:120)

மலாயா, சுமாத்தரா, ஜாவா ஆகிய தீவுக ளும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் ஏற்கனவே பௌத்த இராஜ்யங்களாக இருந்தன. அப்பகுதிகளுக்கு அரபு வர்த்தகர்கள் வந்தார்கள். அப்பிரதேசங்களி லிருந்த கோத்திரத் தலைவர்கள், பிராந்திய ஆட்சியா ளர்கள், இராஜாக்கள், இளவரசர்கள் ஆகி யோருடன் வியாபார தொடர்புகளை வைத்து வியாபாரப் பண்டங்க ளைக் கொடுத்து அவர்களை வசீகரித்தார்கள். சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துள் இணை வதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுகம்பெற பௌத்த மதம் தடையாக இருந்ததால் அவன் இஸ்லாத்திற்குச் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது. (பக்:55)

முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரிவுகளை மறந்து ஐக்கியப்பட்டு ஒரே சர்வதேச சமூகமாக மாற வேண்டும் என ஆப்கானி விரும்பினார். அவருக்கு 100 வருடங்க ளுக்குப் பிறகு அவரது கருத்தை உஸாமா பின் லாதின் நடைமுறைப்படுத்துகிறார். ஆப்கானியைப் போலவே முஹம்மத் அப்துஹவும் முக்கியமானவராக இருக் கிறார். ஸெய்யித் குத்ப், முஹம்மத் குத்ப் போன்றவர்களும் எகிப்திலே மேற்குலகுக்கெதிரான அடிப்படைவாதத்தை போதித்திருக் கிறார்கள். (பக்:65)

புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும்:

தமிழ் பிரிவினை வாதத்தை தோற்க டிக்க முஸ்லிம் அடிப்ப டைவாதிகள் சிங்களவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இது அவர்களது தந்திரமாகும். சிதைந்துபோன நாட்டில் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தானையும் சபிஸ்தானையும் (கிழக்கில் தனியான முஸ்லிம் ஆட்சியை) உருவாக்குவதே இவர்களது நோக்கமாகும். (முகவுரையில்)

அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. புலிகளுக்கு பிலிப்பைன்ஸிலுள்ள மேரோ முஸ்லிம் விடுதலை இராணுவத்துடன் தொடர்பிருக் கிறது. புலிகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அல்காயிதாவிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் முஸ்லிம் கெரில்லாக் களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள அல்உம்மா எனப்படும் குழுவினருக்கும் புலிகள் ஆயுதப் பயிற்சியளித் திருக்கிறார்கள். புலிகள் அல்கைதாவின் ஆயுதங்களை கடல் மார்க்க மாக இடத்துக்கிடம் நகர்த்துவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை தாக்க வந்த புலிகள் அல் கைதாவிடம் பயிற்சி எடுத்தவர்கள் தான். (பக்:248,249)

அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், ஒஸ்மான் ஆகியோர் உருவாக்கிய முஸ்லிம் அடிப் படைவாதத்துக் கெதிராக நான் போர் தொடுக்க முனைந்த மைக்கு அவர்கள் தீகவாபியை திட்ட மிட்டு அழித்ததுதான் காரணமாகும். (முகவுரையில்)

2003ஆம் ஆண்டு முஸ்லிம்கள் "அல் லாஹு அக்பர்' என கோஷமிட்டு ஒலுவில் பிரகடனத்தை செய்தார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நெருப்புப் பந்தமாக மாறியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் தான் அதற்குத் தலைமை வகித்தது. அதன் மூலம் முஸ்லிம் கள் இந்நாட்டின் தனியான சாதியினர் என்றும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான பூர்வீக பூமியிருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு சுயாதிபத்தியமிக்க அதிகாரம் வேண்டுமென்றும் பிரகடனம் செய்யப்பட்டது. இது எத்தனை உயிர்களது அழிவில் முடியுமோ தெரியாது. (பக்:252)

1976இல் வட்டுக்கோட்டையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கருத்தரங்கை நடாத்தி சுதந்திரமான தமிழீழத்தைப் பிரகடனம் செய்தார்கள். அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோசமெழுப்பி ஆசீர்வதித் தார்கள். இதன் பின்னர் தான் 46000 பேரின் மரணத்திற்குக் காரணமான புலிகளது பிரிவி னைவாத யுத்தம் வெடித்தது. இதுபோன்று தான் ஒலுவில் பிரகடனத்தையும் நாம் பார்க்கிறோம். (பக்:253)

வரலாறு இல்லாத முஸ்லிம்கள்:

இலங்கை அரசின் பணத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் கலாசார திணைக்களத் தினால் நடாத்தப்படும் மீலாத் விழாக்களில் வெளியிடப்படும் நூற்களில் இலங்கை முஸ்லிம்களது வரலாறு கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென நிறுவப்பார்க்கி றார்கள். இது பொய்யான கருத்தாகும். ஆனால், முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கைக்குமான தொடர்பு 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் ஓரளவு ஏற்பட்டது. அதற்கு முன்னரான முஸ்லிம் களது வரலாறு பற்றிக்கூறப்படும் கதைகள் மத அடிப்படைவாதிகளது வதந்திகளாகும். அதற்கு மார்க்கத்திலுள்ள குருட்டு நம்பிக்கை தான் காரணமாகும். இதற்கு புதைபொருளா ராய்ச்சி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கி.பி.

16ஆம் நூற்றாண்டிலிருந்து தான் இலங்கை யில் இஸ்லாம் பரவியிருக்கின்றது. அது 19ஆம் நூற்றாண்டில்தான் ஸ்திரமாகப் பரவியதென முடிவு செய்ய முடியும். (பக்:256)

முஸ்லிம்களின் சுயநலமும் துரோகமும்:

இலங்கையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 21 பேரில் 17 பேர்  இலங்கை முஸ்லிம்களாவர். (பக்:92) 

போர்த்துக்கேயரது காலத்தில் முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேய ருக்கும் இடையே 1517ல் மோதல் ஏற்பட்டது. இங்கு சமாதானம் செய்யச் சென்ற கோட்டை அரசன் தர்மபராக்கிரமபாகுவிற்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் யுத்தம் மூண்டது. முஸ்லிம்கள் கோள் சொன்னதனால் தான் சிங்கள அரசன் தம்மை எதிர்த்தான் என இதற்கு போர்த்துக்கேயர் காரணம் கூறினார்கள். (பக்:263)

போர்த்துக்கேயரால் கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு சிங்கள அரசர்கள் தான் புகலிடம் கொடுத்தார்கள். ஆனால், முஸ்லிம்களது நாட்டுப்பற்று ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது. முஸ்லிம்களை போர்த்துக்கேய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்த செனரத் அரசன் அந்த போர்த்துக்கேயர்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு முஸ்லிம்களை அழைத்தான். 4000 பேரில் 1500 பேர் மட்டுமே முன்வந்தார்கள். அந்தவகையில், முஸ்லிம்கள் தமது இருப்பைப் பற்றி மட்டுமே யோசித்தார்களே தவிர நன்றிக் கடன் தெரிவிக்கவில்லை. கண்டி இராச்சியம் பற்றிய இரகசியத் தகவல்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவர்களும் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களுடன் இணைந்து ஆங்கிலேயர் கண்டி அரசுக்கெதிராக 1802ல் யுத்தம் தொடுத்தார்கள். அந்த யுத்தத்தில் மலே, ஜாவா, முஸ்லிம் படைவீரர்களும் இருந்தார் கள். ஊவாவெல்லஸ்ஸ கிளர்ச்சியும் இதுபோன்ற காரணத்தால் ஏற்பட்டதாகும். சிங்களவருக்கெதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்கள் காரணகர்த்தாக்களாவர். 1915ம் ஆண்டு முஸ்லிம் சிங்கள மோதல் சிங்கள எழுச்சிக்கு வித்திட்டது. பெரும்பான்மை சிங்களவரை ஆத்திரமூட்டச் செய்வது முஸ்லிம்க ளுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனும் பாடத்தை முஸ்லிம்கள் படித்துக் கொண்டார்கள். (பக்: 263)

அரசியலில் முஸ்லிம் அடிப்படைவாதம்:

 இலங்கையின் நவீனகால இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எகிப்தின் அடிப் படைவாதியான ஒராபிபாஷாதான்  அடித்தளமிட்டார். அதனை தேசிய ரீதியில் சித்திலெப்பை பிரசாரம் செய்தார். 1899ல் கிண்ணியாவில் மத்ரசதுல் சைதிய்யா என்ற மத அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலை உருவாக்கப்பட்டதுடன் நவீன கால அடிப்படைவாதம் ஆரம்பமாகிறது. (பக்:270)

சிங்கள சமூகத்தில் மேட்டுக் குடிகள் அரசியல் செய்தது போல முஸ்லிம்களுக்கு மத்தியிலும் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ரீ.பி. ஜாயா போன்ற வர்களும் மேட்டுக்குடிகளாயினர். இவர்கள் அரசியலுக்கு வருவதற்காக ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தார்கள். உள்நாட்டவர்களை கஷ்டத்தில் வீழ்துவதே இவர்களது ஒரே அரசியல் தகைமையாக இருந்தது. (பக்:272)

பதியுதீன் "ஜிஹாத்' என்ற சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவியது.

இறுதியில் இந்த ஜிஹாத் அடிப்படை வாதத்துக்கு ஐ.தே.க. தான் உதவி செய்தது. 1970 தேர்தலில் நாடுபூராகவும் சமதர்மக் கட்சி வென்றபோது பொத்துவில், நிந்தவூர் தொகுதிகளில் ஐ.தே.க.வின் முஸ்லிம் அடிப்படைவாதம் வென்றது. இதிலிருந்து அடிப்படைவாதம் எவ்வளவு பலமானது என்பதைப் புரியலாம். முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பதியுதீன் மஹ்மூத் படித்த பரம்பரையை கொழும்புக்கு வெளியே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கப்படடவர்கள் தான் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்கள். (பக்:273)

ஐ.தே.க.வின் எம்.எச். மொஹமட், பாக்கிர் மார்க்கார், ஏ.ஸி.எஸ். ஹமீட், அப்துல் மஜீட் போன்ற தலைவர்கள் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்தது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், திட்டமிட்ட அடிப்படையில் தன்னார்வ நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள். 1984ல் இஸ்ரேலுடன் ஜே.ஆர். ஜயவர்தனவும் அத்துலத்முதலியும் தொடர்பினை ஏற்படுத்தியபோது புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அடிப்படைவாதிகளும் பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அதனை எதிர்த்தார்கள். (பக்:275)

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படை வாத கட்சியாகும். ஜே.ஆர். முஸ்லிம் அடிப்படை வாதத்தின் எழுச்சியை அறிந்து அதனை கவனமாக அணுகினார். முஸ்லிம் பெண்களுக்கான ஹிஜாப், ஷரீஆ சட்டம் என்ப வற்றை அனுமதித்தார். இந்தச் சலுகைகளை வழங்கினால் முஸ்லிம்களை வளைக்கலாம் என நினைத்தார், ஆனால், பதிலாக முஸ்லிம் அடிப்படைவாதம் மேலும் பலமடைந்து வளர்ச்சியடைந்தது. (பக்:276)

பிரேமதாஸ யுகம்தான் (19891993) முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வளமான காலமாகியது. அவர் முஸ்லிம் அடிப்படை வாதத்துடன் இணைந்தார். இஸ்ரவேலை வெளியேற்றினார். பயங்கரவாதத்தை அடக்கும் உபாயங்களை ஈரானிலிருந்து பெற்றார். 1989இல் ஜே.வி.பி. கிளர்ச்சியால் நாடு பலவீனமுற்ற வேளையில் அவரது உதவிக்கு இஸ்லாமிய வங்கி வந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அரசின் பணத்தையும் பொருட் சந்தையையும்

முஸ்லிம் அடிப்படைவாதம் தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இந்தியாவை பிரேம தாஸ எதிர்த்ததால் அவருடன் பாகிஸ்தான் நெருங்கி வந்தது. அதன் விளைவாக பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாத கலாசாலை களுக்கு இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் அனுப்பப்படுவதற்கு வழிசமைக்கப்பட்டது. (பக்: 277)

1994இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா. 7 ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியின் பின்னணியில் தேசிய, சர்வதேச சக்திகள் உள்ளன. நன்றாக மோப்பம் பிடிக்கும் சக்திகொண்ட அஷ்ரப் சந்திரிக்காவுடன் இணைந்தார். அன்றிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தேன்நிலவு ஆரம்பமானது. துறைமுகத்தை ஸ்தாபிக்க எந்தவகை யிலும் பொருத்தமற்ற இடமான ஒலுவிலில் துறைமுகம் ஸ்தாபிக்க ஏற்பாடாகியது. அடுத்த இலக்கு ஒரு விமான நிலையம் தான். முஸ்லிம்களுக்கு மட்டுமான பல்கலைக் கழகத்தை தென்கிழக்கில் கட்டினார்கள்.

இது பதியுதீன் ஏற்படுத்திய முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாகும். துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட கல்விக் கூடங்களுக்குள் தடைசெய்யப்பட்ட பர்தாவும் முஸ்லிம்களது தொப்பியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

பள்ளிகளைப் பராமரிக்க சவூதியிலிருந்து 6.6 பில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டது. நாடுபூராகவும் 700 அடிப்படைவாத  மத்ரஸாக்கள்  ஸ்தாபிக்கப்பட்டன. போதைவஸ் துக்களை இறக்குமதி செய்வது, கள்ளச் சாமான்களை விற்பது, பாதாள உலகக் கோஷ்டிகளது செயற்பாடுகள், கறுப்புப் பணத்தை கையாள்வது என்பவற்றை முஸ்லிம் அடிப்படைவாதமே செய்கிறது. இந்த அடிப்படைவாதிகள் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கிறார்கள். (பக்:279)

முஸ்லிம்களது பகல் கொள்ளை:

வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண் டது போல், தப்பிவந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும், கற்பிட்டியிலும் உள்ள சிங்க ளவர்களது சொத்து செல்வங்களை கைப் பற்றிக் கொண்டார்கள். (பக்:278)

அஷ்ரஃப் தனது பேரம் பேசும் பலத்தை பயன்படுத்தி இலங்கையின் மிகப்பெரிய கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமையும் இலங்கையின் உயர்ந்த கட்டடமான இஸ்லாமிய தகவல் நிலையத்தையும் கட்டியிருக் கின்றார். அஷ்ரபுக்கு சவுதி நிதியிலிருந்து கோடிக் கணக்கில்  பணம் கிடைத்ததாகவும் இதன் மூலவேலைத்திட்டத்தை சவுதியில் அடிப்படைவாதத்தைப் பயின்ற  ஹாபிஸ் நஸீர் அஹ்மத் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஷ்ரப் அகால மரணமாகாவிட்டால் அவர் உருவாக்கிய நுஆ 2012 இல் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் தனது திட்டத்தை அடைந்திருக்கும். (பக்:280)

முஹம்மத்தின் மரணத்தின் பின்னர் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்சினை வந்ததுபோல அஷ்ரபின் மரணத்தின் பின்பும் அதே பிரச்சினை வந்தது. பேரியல், ஹகீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அப்பதவிக்கு போட்டி போட்டார்கள். எதிர்காலத்தில் ஹகீம், அதாவுள்ளாவுக்கிடையிலன்றி பாராளுமன்றமுறைக்கும் ஜிஹாத் ஆயுதப் போராட்டத்துக்குமிடையில் தான் மோதல் நடக்கும். பிரபாகரனுக்கு வடக்கு, கிழக்கு தாரை வார்க்கப்பட்டதன் அபாயகரமான முடிவுகளில் ஒன்றாக உஸாமா பின் லாதினை கிழக்குக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அமையும். 

அபாயகரமான நிலை:

முஸ்லிம்களது மிக விரைவான சனத் தொகைப் பெருக்கம் புதிய கல்வி மாற்றம், தமிழ் பாசிச யுத்தத்தாலும் ஐ.தே.க.வுக்கும் ஐ.ம.சு.கூ.க்கும் இடையிலான மோதலாலும்  ஏற்பட்ட பலவீனம், எண்ணெய் பணத்தின் குமுறல் இவை அனைத்தினதும் முடிவு இலங்கையின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை, வெடிப்பதற்கு  தயார்நிலையிலுள்ள எரிமலையைப் போன்றாக்கிவிட்டது. இலங்கை உளவுப் பிரிவின் தகவலின்படி தமக்கிடையில் மோதிக் கொள்ளும் 4 முஸ்லிம் ஆயுதக் குழுக்கள்

(முஜாஹிதீன், ஒஸாமா, ஜெட், பீம்)) இலங்கையில் இருப்பதாகவும் அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அறிய முடிகிறது. ஒலுவில் பிரகடனம் என்பது அர்மில்லாததொன்றல்ல. அது இந்தோனேஸியாவையும் இலங்கையையும் சேர்த்துத் தீயிட்டுக் கொழுத்தி விடும். (பக்:281)

அடிப்படைவாதக் கலாசாலைகள்:

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதமானது மக்தப்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய முன்பள்ளிகள், முஸ்லிம் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் போதிக்கப்படுகின்றது. மத்ரஸாக்களைப் பொறுத்தவரையில் மக்கிய்யா, பாரீ, பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, கிண்ணியா சஹதிய்யா, மாதர அன்மின்னதுல் பாஸியா, மைதுல் அரபுப் பாடசாலை (தர்ஹாநகர்), காஸிமிய்யா, கபூரிய்யா என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவை வெளிநாட்டு பணத்தால் வேகமாக நவீனமயப்பட்டு வருகின்றன. அங்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆசிரியர்கள் கூட போதிக்கிறார்கள். 20032010ற்கும் இடையில் 700 மத்ரஸாக்களை நிர்மானிக்க சவுதி வாக்குறுதியளித்துள்ளது. பாடத்திட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன்  சம்பந்தப்பட்டிருக்கிறது. நளீம் ஹாஜியாரால் 1973ல் பேருவலையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அடிப்படைவாத கலாசாலை இங்கு மைல்கல்லாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த அடிப்படைவாத ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி, நவீன தொழினுட்பத்தை போதிக்கும் இடமாக அது மாறியுள்ளது. (பக்: 284,285)

1996ல் 111 அடிப்படைவாத முன்பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் 5 பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்துக்கான தனியான துறைகள்கள் உள்ளன. அஷ்ரப் 1995ல் தனியான முஸ்லிம் பல்கலைக்கழத்தை ஆரம்பித்ததுடன் இந்நிலை இன்னும் வேகமடைந்துள்ளது. நாட்டின் ஏனை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சபரகமுவ, ரஜரட, ஊவா, வடமேல் பல்கலைக்கழகங்கள் இறுதி மூச்சுவாங்கும் போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மடைதிறந்த வெள்ளமாக வெளிநாட்டு உதவிகள் வந்து சேர்வதால் அது சீக்கிரமாக நவீன பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இந்திய சுதந்திரப் போருக்கு அலிகார் பல்கலைக்கழகம் செய்த பங்களிப்பை விட கிழக்கின் சுய ராஜ்ய உருவாக்கத்திற்கு அதிகமான பங்களிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செய்யும் என்பதை 20030129 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக பூமியில் ஒலுவில் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் பேச்சாளர்கள் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது. அந்தவகையில் அது இன்று முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்பது தெளிவாகிறது. (பக்: 310)

வேகமாகப் பரவும் முஸ்லிம் சனத்தொகை:

முஸ்லிம்களது சனத்தொகை அண்மைக்காலத்தில் அதிவேமாகப் பரவி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் செல்வதாலும் அதிகமாகத் திருமணங்கள் நடைபெறுவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. சிங்களவர்களது வளர்ச்சி 1& ஆகும். அதேவேளை முஸ்லிம்களது வளர்ச்சி 2.8 & ஆக  இருக்கின்றது. 2090 ம் ஆண்டு முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பன்மையினராக மாறுவார்கள். சிங்கள சமூகத்தில் இளைஞர்களது விதிசாரம் 16 & ஆகும். அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களது விகிதாசாரம் 29 & ஆகும். எனவே, பொதுவாக புரட்சிகளுக்கு இளைஞர்களே காரணமாக அமைகின்றனர் என்ற வகையில், முஸ்லிம் சமூகத்திலும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளது புரட்சி பலமடைவதற்கு இது வழிவகுக்கும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெண்களது தொகை ஆண்களது தொகையை விடவும் 1,77,961 மேலதிகமாக இருக்கிறது. இவர்களுள் 1,35,251 பேர் சிங்களப் பெண்களாவர். ஆனால் இந்தப் பெண்களை எதிர்காலத்தில் திருமணம் செய்வது யார்?. இவர்கள் ஒன்றில்  முஸ்லிம் அல்லது வெளிநாட்டு ஆண்களையே முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் பலதார மணத்தின் மூலமே இஸ்லாம் இலங்கையில் பரவியது. (பக்:317)

பௌதர்களிடம் சிங்களத்தன்மை பற்றிய உணர்வில்லாமலுமிருப்பதனால் தான் அவர்கள் திட்டமிட்டுச் செயற்பாடாமல் இருக்கிறார்கள். இதனால் தான் சிறுபான்மை தீவிரவாதம் வளர்கிறது. சிங்களத்தன்மையைக் கொலை செய்கிறவர்கள் தான்  இந்த சிறுபான்மைத் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு வழி சமைப்பவர்கள்  என்பதை மறக்கலாகாது. அடுத்த தசாப்தங்களில் சிங்களவர்கள் தமது சிங்களத் தன்மையிலிருந்து எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் தலைவிதி தீர்மானிக்கப்படும். மகாத்மா காந்தி இலங்கையனின் மரணம் எம்மால் தாங்க முடியுமான கவலை. மாறாக இலங்கையின் மரணம் எம்மால் தாங்க முடியாத கவலை. என்று குறிப்பிட்டார். (பக்: 312) 

இவரது நெகனஹிர சிங்கள உருமய (கிழக்கின் சிங்கள பூர்வீகம்) 2002 எனும் நூலிலும் இது போன்ற கருத்துக்கள் உள்ளன.

இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் பயங்கரமாக அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. என்ற  நூலில் எந்த அடிப்படைகளுமற்ற, திரிபுபடுத்தப்பட்ட, வரலாற்று ஆதாரங்களற்ற, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மாத்திரமே இருக்கின்றன. எனவே, இந்த நூல் சிங்கள சமூகத்திலுள்ள படித்தர்வர்கள், பல்கலைக்கழக மட்டதத்திலுள்ளவர்களாலும் படிக்கப்பட்டு வருவதால் முஸ்லிம்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் அவர்களது மனங்களிலிருந்து முற்றாக எடுபட்டு விட்டது. அத்துடன் அது வரலாற்று ஆவணமாகவும் மாறி எதிர்கால சிங்கள மக்களது உள்ளத்தில் நச்சு விதைகள் விதைக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

எனவே, இதுபோன்ற நூல்களுக்கு மறுப்பு எழுதப்பட வேண்டும். மற்றும் ஜாதிக ஹெல உருமய அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் விழிப்பார்களா? இந்தத் தகவல்களை  முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பும்படி  எதிர்பார்க்கிறோம்..
 
Thanks : Jaffnamuslim.com