Thursday, August 18, 2011

நினைப்பதைக் கூறுங்கள்...

ஒரே நாளில் நடந்த மனதை உறுத்தும் இரு நிகழ்வுகள்!






 ம்மாதம்  (ஆகஸ்ட்) இரண்டாம் திகதி ஒரே நாளில் இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களைப் பாருங்கள்.

சம்பவம் 1 :

இந்தியாவின் கோவை நகரில் சாவிநகார் (Savinagar) எனும் 4 வயதுச் சின்னஞ் சிறுமி தான் வசித்து வந்த மாடிக்குடியிருப்பின் மின்தூக்கியின்  தானியங்கிக் கதவுகளுக்குள் மாட்டி உடல் நசிந்து உயிரை விட்டாள்.

சம்பவம் 2:

இங்கிலாந்தின் லண்டன் நகரில்  க்றிஸ் ஸ்டேர்ணிபோர்ட் (Chris Sternyford) எனும் 20 வயது இளைஞன் தான் வசித்து வந்த அறையிலே  கணினியில் தொடர்ச்சியாக 12 மணிநேரம் விளையாட்டில் ஈடுபட்டதன் காரணமாக அதீத  அயர்ச்சியின் காரணமாக உயிரை விட்டான். இதனை அங்குள்ள மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். (நன்றி: சுடர் ஒளி)

முதல் சம்பவத்தில் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்த தாயின் கவனக்குறைவினால் மாடிக்குடியிருப்பின் மின்தூக்கியின் (Lift/elevator) அருகில் வந்த சிறுமி மற்றவர்கள் பொத்தானை அழுத்தி அதனை இயக்குவதைப் பார்த்துவிட்டுத் தானும் அவ்வாறே செய்ய முனைந்த போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. மின்தூக்கியின் தானியங்கிக் கதவுகள் இரண்டும் வேகமாக மூடிக்கொண்ட வேளையில் இதனைத் தள்ளித் தாங்கத் தெரியாதவளான அப்பாவிச் சிறுமி பாவம் பரிதாபமாக நசுங்கி செத்திருக்கிறாள்.

இரண்டாவது சம்பவத்தில் இருபது வயது இளைஞன் கணினி (computer games) விளையாட்டில் ருசி கண்டு தொடர்ச்சியாக 12 மணிநேரம் விளையாடிய பொறுப்பற்ற செயலே அவனது அகால மரணத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்த இருசம்பவங்களையும் வெறுமனே வழமையாக நிகழும் விபத்துக்களாகவும் பார்க்கலாம். இதனையே இன்றைய நவீன சமூகப்போக்குகளின் குறியீட்டுச் சம்பவங்களாகவும் காணலாம்.

அதாவது குழந்தைகளைக் கவனிப்பதிலே தாய்,தகப்பன் மற்றும் வீட்டிலுள்ளவர்களின் கவனம் சிதறுகின்றளவுக்கு  இன்றைய வாழ்வியல் கூறுகள் மாறி வருவதை இவ்வாறான சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. மறுபுறம் இன்றைய இளைய தலைமுறையினர் நவீன இலத்திரனியல் சாதனங்களின் பயன்படுத்துதலில்  காட்டும் அபரிமிதமான ஆர்வத்தையும் அதிலுள்ள ஆபத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த இரு சம்பவங்களும் உங்கள் மனதிலே ஏற்படுத்தும் தாக்கங்களை எமக்கு அனுப்பலாம். வெளிப்படுத்தத் தயாராகவுள்ளோம்.
 - Jesslya Jessly

Monday, August 15, 2011

தொடர் கட்டுரை:



யுத்தம் சரணம்  கச்சாமி!




-4-





விஜயன் வந்தான். ஆண்டான். இறந்தான். அப்புறம் ஒரு வருடத்துக்கு அங்கே மன்னன் கிடையாது. பிறகு கி.மு. 504-ல் பாண்டு வாசுதேவன். அப்புறம் அபயா என்று இன்னொரு மன்னன். அதன்பின் பதினேழு வருடங்களுக்கு மன்னர்கள் இல்லை. மீண்டும் 437-ல் பாண்டுக அபயா.அப்புறம் முட சிவன். பிறகு தேவனாம் பிரியதிஸா. உதியா. மகாசிவா. சூர திஸா. சேனா குதிகா. அஸேலா. எலரா. தத்த காமனி. சதா திஸா. துலந்தனா. லஞ்சதிஸா. கல்லத நாகா. வட்டகாமனி. மகா சூலி மகாதிஸா. கோர நாகா. திஸா. சிவா. வடுகா. தாகு பாதிக திஸா. நிலியா. அநுலா. குடகண்ணதிஸா. பதிகபயா.
ஒரு மரியாதைக்காக இருபத்தெட்டு வினாடிகள் செலவு செய்து இந்தப் பெயர்களையாவது வாசித்துவிடுங்கள். இந்த வரிசையில் இன்னும் பல பேர் உண்டு. விஜயன் காலம் தொடங்கி, அடுத்த இருநூறு வருஷங்களுக்கு இலங்கையை ஆண்டவர்கள் இவர்கள். மகா வம்சம், கர்மசிரத்தையாக இந்த மன்னர்களின் கதைகளைப் பக்கம் பக்கமாக வருணிக்கிறது. அவர்கள் ஆண்டு அனுபவித்தது, கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று, குடிமக்களை வாழவைத்தது வகையறாக் கதைகளுக்கு இடையே, பவுத்தம் தழைத்த வரலாறைச் சொல்வதுதான் அதன் அடிப்படை நோக்கம்.
பவுத்தத்திலுமேகூட சித்தாந்தங்களை மேலே வைக்காமல், பிட்சுக்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதே மகா வம்சத்தின் குறிக்கோள். ஒரு காலத்தில் யூதர்கள் மத்தியில்    'ராஃபிகள்' (சுயடிடிi) எனப்படும் அவர்களுடைய மதகுருக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை  இத்துடன் எளிதாக ஒப்பிட இயலும்.
அரசன் என்ன தவறு செய்தாலும் பிட்சுக்களின் காலில் விழுந்துவிட்டால் போதும். 'நீ செய்த செயல் தீச்செயல் ஆகும். மரியாதைக்குரிய பிட்சுக்களுடன் சமரசம் செய்துகொள். அவ்வாறு செய்தால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய்!' என்று மிக நேரடியாக இதனைச் சொல்லிவிடுகிறது மகாவம்சம்.

பவுத்தத்தின் அடிப்படைகள் என்று நாம் மிக மேலோட்டமாக அறிந்தவற்றிலிருந்தும்கூட இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம் வேறுபட்டிருப்பதை இதனுடன் ஒப்பிட்டு அறிய இயலும். வழிபாடு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் தொடங்கி அரசியல், சமூகக் கட்டமைப்பு வரை இந்த வித்தியாசத்தைப் பல தளங்களில் உணர முடியும். இன்றைக்கும் அதிபரை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர்களாகவே இலங்கை பிட்சுக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் பிட்சுக்களைத் திருப்தி செய்யக்கூடியதா என்று பார்த்துப் பார்த்துத்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தேவை என்று கருதினால் பிட்சுக்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அரசியல் களத்தில் இறங்கிவிடுவார்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனத் தீர்மானங்கள், சில கொலைச் சம்பவங்களும்கூட.
மத ஆராய்ச்சி இங்கு நோக்கமல்ல என்றாலும், இலங்கையின் சரித்திரத்தைப் பேசும்போது பவுத்தத்தின் வருகையும், அது தழைத்த விதத்தை அறிவதும் இன்றியமையாதது.
பிட்சுக்கள் பவுத்தத்தைப் பரப்பினார்கள். மன்னர்கள் பிட்சுக்களை ஆதரித்தார்கள். எங்கும் பவுத்த விஹாரங்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன. மூலைக்கு மூலை பிரமாண்டமாக நிறுவப்பட்ட புத்தர் சிலைகள், அவரை நினைவுகூர்வதற்கு அல்லாமல், பவுத்தத்தின் மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு மன்னனும் எத்தனை விஹாரங்களைக் கட்டினான் என்பதைக் கொண்டு, அவனது சிறப்பு பதிவு செய்யப்பட்டது. ஒருவன் திறமையான அரசனா இல்லையா என்பதைக் கூட, அவன் எத்தனை விஹாரங்கள் கட்டினான் என்பதைப் பார்த்துத்தான் மகா வம்சம் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது.
கி.மு. 273-லிருந்து 232 வரை ஆண்டு, மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் நிகரற்ற பேரரசராக அறியப்பட்டவர், அசோகர். அவருடைய மகனும் மகளும், கி.மு. 250-லிருந்து 210 வரை இலங்கையை ஆண்ட தேவனாம் பிரியதிசா என்னும் மன்னனின் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து அங்கே பவுத்தம் பரவத் தொடங்கியதாக இலங்கை சம்பந்தப்பட்ட பொதுவான சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன.
கலிங்க யுத்தம், அதன் வெற்றி, இறுதியில் அசோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம், பவுத்தத்தைத் தழுவியது, அதனைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டது பற்றியெல்லாம் நாம் அறிவோம். அதன் ஓர் அத்தியாயம், அசோகர் தன் மகன் மகிந்தனையும், மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பிவைத்தது. உடன்பிறப்புகள் இருவரும் புத்தர் மெய்ஞானம் அடைந்த இடத்தில் இருந்த போதி மரத்தின் கிளை ஒன்றை இலங்கைக்கு எடுத்து வருவதாக மகா வம்சம் கூறுகிறது.
இலங்கையில் பவுத்தம் தழைத்ததற்கு இச்சம்பவம் ஒரு மிக முக்கியமான தொடக்கம். சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி மகா வம்சம் இதனை விரிவாக வருணித்தாலும், அசோகருக்கு மகிந்தன் என்றும் சங்கமித்திரை என்றும் இரு குழந்தைகள் இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அசோகர் காலக் கல்வெட்டுகளில்கூடக் கிடையாது. ஆனால் என்ன செய்ய முடியும்? மகா வம்சம் சொல்லிவிட்டால் இலங்கையில் அப்பீலே கிடையாது.
மகா வம்சம் விவரிக்கும் மன்னர் பரம்பரையில் சில தமிழ் மன்னர்களும் உண்டு. ராஜராஜ சோழனுக்கு முன்னால் சோழ தேசத்திலிருந்து படையெடுத்துச் சென்று, வென்று ஆண்டவர் உண்டு. ஆனால் முழு இலங்கைத் தீவையும் ஆண்ட ஒரே மன்னன் என்று யாருமில்லை. எல்லோரும் பிராந்திய மன்னர்கள்தாம், சிற்றரசர்கள்தாம். அல்லது சற்றே பெரிய சைஸில் ஒரு மன்னன், பகுதி வாரியாக அவனுக்குக் கப்பம் கட்டும் சிறு மன்னர்கள்.
கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களுடன் இதனை ஒப்பிடலாம். தேசியம் என்கிற ஒற்றை உணர்வைப் பொதுவில் எதிர்பார்க்க இயலாத சூழல். அது பின்னிணைப்பாகப் பிறகு சேர்ந்த கருத்தாக்கம். இங்காவது ஒளரங்கசீப் காலத்தில் காஷ்மீர் முதல் ஆந்திரப் பிரதேசம் வரைக்கும் ஒரே பேரரசு பரவியிருந்தது. இலங்கையில் அம்மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய மன்னர்கள். நிறைய யுத்தங்கள். வாரிசு அரசியல்கள். மகா வம்சமே, நாகர் அரசர்கள் பற்றியும் யட்சர் குல மன்னர்கள் பற்றியும் (இந்த யட்சர்தான் தமிழில் இயக்கர் ஆகிறார்.) பல இடங்களில் குறிப்பிடுகிறது.
லங்கைத் தீவு முழுவதையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்த முதல் மன்னனாக ராஜராஜ சோழனைத்தான் சொல்லவேண்டும். கி.பி. 1018 முதல் 1055 வரையிலான முப்பத்தேழு வருடங்களுக்கு இலங்கையில் சோழக்கொடி பறந்தது. ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்நாட்டு பள்ளிப் புத்தகங்களிலும் இடம்பெறவேண்டியவர்களானார்கள்.
இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இலங்கையில் புலிக்கொடி கட்டுவதற்கு ராஜராஜ சோழன் அங்கிருந்த சில தமிழ் மன்னர்களையும் வீழ்த்த வேண்டியிருந்தது என்பதைச் சுலபமாகப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவார்கள். இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு, சிங்களர் ஆளும் தெற்கு என்றெல்லாம் அவர் பிரித்து யோசிக்கவில்லை. அந்நாளைய எல்லா மன்னர்களுக்கும் இருந்தது போன்ற ஒரே லட்சியம்தான். நாடு பிடிக்கும் லட்சியம். நம் இனம், மாற்று இனம் என்றெல்லாம் சோழப்பெருந்தகை பார்க்கவில்லை. ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்து அழைத்து வந்தாரா? அது போதும், 'போற்றிப் பாடடி பெண்ணே' என்று சொல்லிவிடுவார்கள்.
முப்பத்தேழு வருடங்கள் என்பது சற்றே நீண்ட காலகட்டம்தான். இல்லையா? முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன், முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று வாய் வலிக்கும் வரை புகழ்ந்து தள்ளிவிட்ட பிற்பாடு, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்து வந்த யாரும் சரியாக அமையவில்லை. ஒரு சிங்கள மன்னன் தான் அந்தக் காரியத்தைச் செய்தான்.
பெயர், விஜயபாகு. கி.பி. 1055 முதல் 1110 வரை மத்திய இலங்கையில் உள்ள பொலனருவாவைத் தலைநகராகக் கொண்டு இந்த மன்னன் நிறுவிய ஆட்சி, இலங்கையில் பவுத்தம் புத்துணர்ச்சி கொண்டு அதிவேகமாக வளர்வதற்கு ஒரு காரணமானது. விஜயபாகுவின் பேரன் பராக்கிரமபாகு இன்றைக்கும் பாடப்புத்தகங்களில் வசிப்பவர்.
பொலனறுவவிலிருந்து முழு இலங்கையையும் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் மன்னர் குடும்பத்துத் திருமணங்களெல்லாம் தென்னிந்தியப் பெண்களுடனேயே இருந்து வந்திருக்கிறது. இதன்மூலம் அன்னியப் படையெடுப்புகளைத் தவிர்க்க நினைத்திருக்கலாம். தேசத்தின் உள் கட்டமைப்பை ஒழுங்கு செய்து கொஞ்சம் நிம்மதியான நல்லாட்சி வழங்க உத்தேசித்திருக்கலாம்.

ஒரு விடயம். அப்போதுகூட மன்னர் குடும்பத்துக்குள்ளே, பங்காளிகளுக்குள்ளே பகையும் சண்டையும் இருந்ததே தவிர, மக்களுக்குள் பிரிவினை அல்லது ஒற்றுமை பற்றிய சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லை.
பொலனறுவ பேரரசுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அரசு என்பது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மாகா என்கிற மாகன் என்னும் கலிங்க மன்னன் நிறுவிய அரசு.
அதுநாள் வரை தெற்கிலும் மத்தியிலும் நிலைகொண்டுதான் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வடக்கு எல்லையில் கடலோர யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டு முழு இலங்கையிலும் வீசிய புயல் என்று இந்த மன்னனின் படையெடுப்பைச் சொல்லலாம்.

இந்த மாகனைத் தமிழ் மன்னன் என்று யாழ்ப்பாண சரித்திரங்கள் சொல்கின்றன. கூடவே குழப்புவதற்குத் தோதாக 'கலிங்கத்திலிருந்து வந்த தமிழ் மன்னன்' என்றும் சொல்கின்றன. கலிங்கம் என்றால் இன்றைய ஒரிஸ்ஸா.
கி.பி. 1215 என்பது தமிழகத்தில் பாண்டியர் காலம். ஜடாவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி புரிந்த சமயம். அந்த வருடம்தான் மாகன், யாழ்ப்பாணத்துக்கு  வந்து இறங்குகிறான். அடுத்த வருடமே இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜடாவர்மனுக்குப் பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்துவிடுகிறான். கலிங்க_ பாண்டிய யுத்தங்களின் நீட்சியாகவே இந்தப் படையெடுப்பை நாம் எடுத்துக்கொள்ள இயலும்.
கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மாகன் யாழ்ப்பாணத்தில் இருந்து முழு இலங்கையையும் ஆண்டிருக்கிறான். இலங்கையின் சரித்திரத்தில் அநேகமாக முதன்முதலில் மதம் சார்ந்த தீவிரவாதச் செயல்களை ஆரம்பித்துவைத்தவன் என்று இவனைத்தான் சொல்ல வேண்டும். தேசமெங்கும் பல பவுத்த விஹாரங்களை உடைத்து நொறுக்கியது, புத்தர் சிலைகளை நாசம் செய்தது, சிங்களப் பெண்கள் கற்பழிப்பு என்று இருபது வருஷங்களையும் ரணகளமாகவே கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான்.
பிறகு பாண்டியர்கள் வந்தார்கள். ஜெயவீர சிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்று அந்த மன்னனுக்குப் பெயர். 1260-ல் யாழ்ப்பாணம் வந்து இறங்கி, கிட்டத்தட்ட பாதி இலங்கைக்கு மேல் கைப்பற்றி ஆட்சி புரிந்த இந்த மன்னனின் காலத்தில் இருந்துதான் நாம் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்களைச் சற்று க்ளோசப்பில் பார்க்க முடிகிறது.
அவர்கள் முத்துக் குளித்தார்கள். விவசாயம் செய்தார்கள். படித்தார்கள். பக்தி செய்தார்கள். சாதிக்கொரு வீதி அமைத்து ஒரு மாதிரி பிரபுத்துவ சமத்துவம் பேணினார்கள். நல்லூரில் மட்டும் அறுபத்து நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்களும், ஒவ்வொரு சாதியினரும் வசிக்கத் தனித்தனிவீதிகளும் இருந்திருக்கின்றன. 'மேனிச் சுத்தம் பராமரிக்காத தீண்டாச் சாதியினரை' இந்த வீதிகளுக்குள் விடாதபடியினால்தான் 1816-க்கு முன்னால் வரை இலங்கையில் வயிற்றுப்போக்கு நோயே யாருக்கும் வந்ததில்லை என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் சொல்கிறது.
முகம் சுளிக்கவே வேண்டாம். சாதி விடயத்தில் தமிழ்நாட்டுக்கு சற்றும் சளைத்ததல்ல இலங்கை.
1505-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்து சேரும் வரையிலான அத்தீவின் சரித்திரம் என்பது பெருமளவு மன்னர்களின் சரித்திரமாகவே எழுதப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பெரிதாக அறிந்துகொள்ள இயலாது.
அந்த வருடம் ஃப்ரான்ஸிஸ்கோ டி அல்மெய்தா  என்ற முதல் போர்த்துக்கீசியர் இலங்கையில் காலெடுத்து வைத்தார். சுற்று முற்றும் பார்த்தவருக்கு ஏழு தனித்தனி ராஜ்ஜியங்களாக இலங்கை சிதறுண்டு, சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்சிதான் முதலில் உறுத்தியது. அப்புறம் கொழும்பு நகரில் வானளாவ உயர்ந்து நின்ற கோட்டை.
அடடே! பிரமாதமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டார்.

(தொடரும்)

Sunday, August 14, 2011

சிறுகதை :

ராஜதந்திரம் /  கடைசிப்பந்து!








நாற்பத்தியாறாவது ஓவரின் கடைசிப்பந்து.

சற்று முன் களமிறங்கிய புதிய துடுப்பாட்டக்காரனுக்கு இறுக்கமான களத்தடுப்பமைத்து மிகவும் அவதானமாக வீசிக்கொண்டிருந்தார் பிரபல  சுழல்பந்து வீச்சாளர். அவரது முதல் ஐந்து பந்துகளையும் மரியாதை கொடுத்துத் தடுத்தாடிக் கொண்டிருந்தவன் கடைசிப்பந்தை யாருமே எதிர்பாhரதவிதமாக க்ரீஸை விட்டு இறங்கிவந்து ஒரு தூக்குத் தூக்கிவிட மைதானத்துக்கு வெளியேயுள்ள கார்பார்க்கை நோக்கிப் பறந்தது பந்து.

'இட்ஸ் எ ஹிமாலயன் ஸிக்ஸ்!' என்று தொலைக்காட்சி வர்ணனையாளர் உரத்துக் கீச்சிட அதுவரை உடைமாற்றும் அறையின் முன் வராந்தாவிலே அமர்ந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த எனது வயிற்றினுள் ஏதோ உருண்டது. மூன்றே மூன்று விக்கட்டுகள்  எஞ்சியிருக்க இன்னும் இருபத்தி நான்கு பந்துகளில் நாற்பத்து எட்டு ஓட்டங்கள் என்றது எதிரேயிருந்த இலத்திரனியல் திரை.

உலகமே இமைகளை மூட மறந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கப்போகும் பரபரப்பான ஆட்டம். கிரிக்கட்டில் இரண்டு திறமை வாய்ந்த அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி என்பதையெல்லாம் தாண்டி எங்களது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் ஒரு யுத்தம் போலத்தான் இந்த இரவு-பகல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியின் முடிவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் பொறுமையிழந்து அரங்கத்தில் இரைந்து கத்திக் கொண்டிருந்தார்கள்.

தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கும் இருநாட்டு இரசிகனையும் நினைத்துப் பார்த்தால் எனக்குக் மிகவும் கவலையாக இருந்தது. ஒரு விளையாட்டைக் கூட வெறும் விளையாட்டுணர்வுடன் இரசிக்க முடியாதளவு  குரோதம் எப்படி இந்த இரு நாட்டு மக்களுக்கிடையே உருவானது? நாங்கள் எல்லோருமே முன்பு ஒரு காலத்தில் ஒரே மக்களாகத்தானே இருந்தோம். அடிமைகளாக எம்மை வைத்திருந்த வெள்ளைக்காரர்கள் வரும்வரை மதநம்பிக்கைகள் தவிர உடலமைப்பு, உணவு, உடை பழக்க வழக்கம், சுதந்திர உணர்வு எல்லாமே பொதுவாகத்தானே இருந்தது. எவனோ ஒரு ஆங்கில தேசாதிபதி தேசப்படத்திலே கிழித்த பென்ஸில் கோடுதானே ஒரே இரவில் எல்லைக்கோடாகி ஒன்றாய் வாழ்ந்த சகோதரர்களை இப்படி மறைமுக எதிரிகளாக்கியது... அன்று அவர்கள் செய்த பிரித்தாளும் தந்திரம் இரு ஏழை நாடுகளையும் இன்றும் கூட மோத வைத்துக் கொண்டிருக்கின்றதே..? மக்களே ஒன்றுபட நினைத்தாலும் கூட இந்தப் பிரிவினைகளை வைத்து காசுபார்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முதலாளிகளும் அதனை விரும்ப மாட்டார்கள். அதற்காகவே ஏதாவது பகைமையை  வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்..சே! எவ்வளவு காலம்தான் இவர்களோடு சேர்ந்து நாங்களும் இந்த முட்டாள்தனத்தக்குத் துணைபோவது?

'அதோ எதிரணியின் காப்டன் தனது அணி வெற்றியை ருசிக்குமா இல்லையா என்ற ஆழ்ந்த யோசனையுடன்.....' என்று பிதற்றியவாறு தொலைக்காட்சி கொண்டு மீண்டும் எனது முகத்தை இடதுபுறமிருந்து நெருங்கி வந்தது. வெறுப்பு மேலிட வலதுபுறமாய் எதையோ குனிந்து தேடுவது போல பாவனை செய்து வேண்டுமென்றே திரும்பிக் கொண்டேன். 'ப்ளடி பாஸ்டர்ட்ஸ்!'

ஒருபுறம் அனுபவமுள்ள உதவிக் காப்டன்  விக்கட்டைக் காப்பாற்றிக் கொண்டு ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருந்தான். எப்போதுமே நிலைத்து நின்று ஆடுவதுதான் அவனது பாணி. ஆனாலும் தேவையான ஓட்டவிகிதத்துக்கு ஏற்ற வேகத்தில் ஆடமுடியாத களநிலவரம். மறுமுனையிலே புதிதாக வந்திருப்பவன் வெறும் பந்து வீச்சாளன்தான். இன்னும் சிறிது நேரத்துக்குத் தாக்குப்பிடிப்பது கூட கடினம். ஆனாலும் கிரிக்கட்டில் எதுவுமே சாத்தியம்தான்.

அடுத்த ஓவரை யாருக்குக் கொடுப்பது என்று அவசர ஆலோசனை நடந்து முடிந்து களத்தடுப்பாளர்கள் பிரிந்து செல்ல, துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் தமது கையுறையணிந்த முஷ;டிகளைக் குத்திக் கொண்டு தத்தம் முனைகளுக்குச் சென்றனர்.

ஆரம்ப வேகப்பந்துவீச்சாளனின் முதலாவது பந்துக்கு அருகில் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் பெறப்பட்டது. மீண்டும் புதியவன் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்கத் தயாரானான். இரண்டாவது பந்தை முழுவேகத்தில் ஓடிவந்து குறுகிய நீளத்தில் போட தலைக்கு மேலாக ஒரு மின்னல் வேகச்சுழற்றல்! அவ்வளவுதான் பைன்-லெக் திசையில் உயரே எழுந்த பந்து ரசிகர்கள் கூட்டத்திற்குள் போய் விழுந்தது. மற்றுமொரு சிக்ஸ்! அரங்கமே மயான அமைதி கொண்டது.

இருபத்தியிரண்டு பந்திலே நாற்பத்தியொரு ஓட்டங்கள்!

எனக்கு மயக்கமே வரும்போல இருந்தது. 'ஒருவேளை இலக்கை அடைந்து விடுவார்களோ' என்ற மெலிதான சந்தேகம் முதன்முறையாக இப்போதுதான் வந்தது. இவ்வளவு தூரம் சொல்லி வைத்தும் இப்படியாகி விட்டதே என்ற சலிப்பில் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.

என்னைச்சூழந்து எங்களது அணியின் பயிற்சியாளர்களும் அதிகாரிகளும் சிறிது பதற்றமாய் அமர்ந்திருக்க மைதானத்தின் மறுகோடியில் இருந்த பிரமாண்டமான இலத்திரனியல் திரையிலே அவ்வப்போது எங்களைத் தேடிப்பிடித்துக் காண்பித்தார்கள். குறிப்பாக எனது முகத்தை மிகவும் நெருக்கமாக காட்டிக் கொண்டிருந்தது டெலிவிஷன் காமிரா. போட்டியின் ஒவ்வொரு  கட்டத்திலும் எனது முகபாவம் எப்படியிருக்கிறது என்று உலகம் முழுவதும் காண்பிக்கும் வரலாற்றுக் கடமை அவர்களுக்கு. அவர்களுக்குத் தெரியாமல் கிரிக்கட் வீரர்கள் நாங்கள் இப்போதெல்லாம் கழிப்பறைக்குக்கூடச் செல்ல முடியாது. இதுதான் எங்களது பிரபல்யத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை.

மீண்டும் மைதானத்திலே ஆரவாரம்.

அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்ளை விளாசியிருந்தான் அந்தப் புதிய வீரன். மைதானத்தின் பெரும் பகுதி அதிர்ச்சியில் உறைந்திருக்க இடதுபக்க மூலையிலிருந்த இரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. அந்த இரு எல்லைக்கோடு தாண்டிய ஓட்டங்களையும் சலித்துப் போகும்வரை மீளக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

பதினெட்டுப் பந்துகள், 32 ஓட்டங்கள்!

நான் அதிர்ச்சியிலே தடுமாறியிருக்க அருகிலிருந்த கைத்தொலைபேசி குழந்தையாய் சிரித்து என்னைக் கூப்பிட்டது. அதன் திரையிலே ஒளிர்ந்த எண்களைப் பார்த்ததும் சட்டென எழுந்து கொண்டேன். அருகிலே அமர்ந்திருந்தவர்களை விலக்கியவாறு உடைமாற்றும் அறையை நோக்கி நடக்கலானேன். எனது அந்தரங்க அறைக்குள் நான் போய்ச் சேரும் வரையிலும் என்னை விடாமல் வால்பிடித்தன காமிராக்கள்.


'Shit!'

உள்ளே போனதும் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு கழிப்பறை  நிலைக்கண்ணாடியில் ஓங்கி என்மீதே குத்தி சத்தமாய் கத்தித் தீர்த்தேன்.. நல்லவேளை சற்று உறுதியான கண்ணாடியாக இருந்ததால் காயமின்றித் தப்பினேன்.

மீண்டும் சிரித்த செல்போனை இயக்கி, 'யெஸ்' என்றேன்.  மறுமுனையில் சில வினாடிகள் நீடித்த சற்றுக் குழப்பமான ஒலிகளுக்குப் பிறகு, 'ஹலோ கெப்டன், அங்கே என்னதான் நடக்குது? அவன்  புதிசா வந்தவன் என்ன இந்த அடி அடிக்கிறான்...நீங்களெல்லாம் என்ன பண்ணிட்டிருக்கீங்க...இப்படியே போனா..அவ்வளவுதான் நீங்களெல்லாம் ஊருக்கே வரவேண்டியதில்ல..' என்று எரிந்து விழுந்தார் எங்கள் வெளியுறவுச் செயலர்.

'அவன் அடிக்கிறதுக்கு நான் என்ன செய்யலாம் சேர்? அவன் பெட்ஸ்மேனில்ல... வெறும் போலர்தான். அதுவும் எக்ஸ்ட்ரா ப்ளேயர்! இந்த டூணமெண்டில இதுக்கு முதல் அவன் விiயாடவே இல்ல. ப்ரேக் டைமில ப்ளேயர்சுக்கு ஓடியோடி ட்ரிங்ஸ் கொடுத்திட்டிருந்தான். இப்ப அவன் இறங்கின பிறகுதான் இப்படி அடிப்பானென்றே எங்களுக்கும் தெரியுது..' என்றேன்.

'அதெல்லாம் எனக்குத் தெரியாது தம்பி. உங்களுக்கு ஏற்கனவே நம்மோட நிலைமையைப் பற்றி விளக்கமாச் சொல்லிட்டோம். நீங்களும் ஒத்துக்கிட்டிருக்கீங்க...இல்லையா?'

'ஆமாம். வேற வழி?'

'இந்த மெட்ச்சின் முடிவிலதான் நம்ம எதிர்காலமே இருக்கு...தி எனதர் திங்.. திஸ் ஈஸ் பிஎம் றிக்வெஸ்ட் தெரியும்தானே?'

'ம்ம்..ம்ம்'

' திரும்பவும் ஞாபகப்படுத்திறன். நம்ம நிலைமை முக்கியமானது. ஒருபக்கம் அவன்கள் ஆப்கான், ஈராக், லிபியா என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஒவ்வொன்றையும் அடிச்சுக்கிட்டே வாறான். அவன் சொல்றதை கேட்காவிட்டால் எங்களையும் அழிச்சு கற்காலத்துக்கே கொண்டு போகப்போறதா மிரட்டல் விடுறான்.  இந்த நேரம் நாங்க இவங்களோடயும் தொடர்ந்து பகைச்சுக் கொண்டிருக்க இயலாது. அப்படியிருந்தா ஒருபக்க ஆதரவும் இல்லாம தனிச்சுப் போயிடுவோம்..'

'.......'

' இப்ப கொஞ்ச காலமாகத்தான் பழையதெல்லாம் மறந்து இரண்டு நாட்டுக்கும் நட்புறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகி வருது. இந்த நேரம் பார்த்து முக்கியமான ரெண்டு பேருக்கும் இந்த முக்கியமான கிரிக்கட் போட்டியும் வந்திட்டுது. இட்ஸ் அன்போச்சுனேற் ஐ நோ.. அதனாலதான் சொல்றோம்..போட்டி நடக்கிறது அங்க அவங்கட ஊருல... அவங்கட அத்தனை ஆட்களுக்கும் முன்னுக்கும் அவமானப்பட்டா நம்மளோட அத்தனை முயற்சியும் வீணாகிடும். புரியுதா கெப்டன்?'

'ம்ம்..புரியுது!'

' குட்! எனக்குத் தெரியும் .. நீங்க டீமோட நிறைய கஷ;டப் பட்டிருக்கீங்க..பட் இப்ப நம்ம நிலைமைதான் இப்ப கிரிக்கட்டை விட முக்கியம் கெப்டன்! ஸோ டூ வாட் வீ டோல்ட். ஆனா ..ஏதாவது வித்தியாசமா செய்யுறதா நினைச்சுட்டு...உங்க இஷ;டத்துக்கு வேற ஏதாவது..செய்யாதீங்க.. டோன்ட் ட்ரை எனி றிஸ்க். சரிதானே டூ சம்திங். வாட் எபவுட் யுவர் வைஸ் கெப்டன்? அவனுக்குச் சொல்லியிருக்கிறீங்கதானே விசயத்தை...?'

'Ok..ok, சொல்லியிருக்கிறேன்'

'நாங்களும் இங்க டீவி பார்த்திட்டுத்தான் இருக்கிறம்.  ஹீ ஈஸ் ஸ்டில் இன் த மிடில்?தென் வாட்ஸ் தாட் பூல் டூயிங் இன் த மிடில், கெப்டன்?'
'ஓகே!.. ஓகே..! இதோ இந்த ஓவர் முடிய கூல்ட்ரிங்ஸ் கொடுத்து மெஸேஜ் அனுப்புறன்' என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் முகத்திலடித்தாற் போல மற்றொரு ஸிக்சர் வந்து விழுந்தது.

'அடச்சே! ஹரி அப்! ஹரி அப்!' என்று இரைந்து கத்திவிட்டு போனை வைத்தார், வெளியுறவுச் செயலர் சலிப்புடன்.

மீண்டும் வெளியில் வந்து பழைய இடத்தில் அமர்ந்தேன்.

14 பந்துகளில் 26 ஓட்டங்கள்!
'ஆண்டவனே.. இந்த ஓவர் முடிவதற்கு இன்னும் இரண்டு பந்து வீச்சுகள் வேறு உள்ளதே. அந்த இரண்டு பந்தையும் அவனே சந்தித்தால் வெளுத்து வாங்கி விடுவானே. சே! இந்த மடையன்கள் என்ன போலிங் போடுகிறான்கள்...பருப்பையும் உழுந்தையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகப்பந்துல ஒரு காரமே கிடையாது!' என்று சம்பந்தமேயில்லாமல் உள்ளுக்குள் புழுங்கினேன்.
'இவன்கள் மெட்ச்சைக் கொண்டு போனால் ஊருக்கு வரவே தேவையில்லை என்று சொல்லிட்டார். இதென்ன கொடுமை. மற்றவங்களெல்லாம் நிம்மதியாயிருக்க எனக்கு மட்டும் ஏனிந்த...'

மீண்டும் ஒலித்தது செல்போன்.

'சரி, அதுதான் சொல்லிட்டேனே.. பிறகு ஏன்..' என்று கோபத்தில் நான் கத்த,
'அப்பா..நான் Sheenu குட்டி பேசுறேன்பா! என்ன ஆச்சு உங்களுக்கு? டீவியில மெட்ச் பார்க்கிறன்பா.. ஏன் நீங்க விளையாடல்ல...?' என்றவள் நர்சரி போகும் எனது ஒரே செல்ல மகள்.

'ஹாய் Sheenu.. ! எப்படியிருக்கேடா.. எனக்கு காலில சுளுக்கு அதாலதான் விளையாடல்ல.' என்றேன், சட்டென வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன்.

'அப்பா, நம்ம டீச்சர் ஆன்ரி சொல்றாங்க நம்ம டீம் தோத்துடுமாம்...உண்மையாப்பா? நாங்கதானே வெல்லுவோம்? சொல்லுங்கப்பா...நாங்கதானே?'

எனது கண்களில் என்னையறியாமலே கண்ணீர் துளிர்த்தது. இந்த வெற்றிக் கிண்ணத்துக்காகத்தான் எத்தனை முயற்சி எத்தனை பயிற்சி? எவ்வளவு பிரிவுகள்.. அவமானங்கள்.. போராட்டங்கள். எத்தனை கோடி பிரஜைகளின் கனவுகள் இது... ஒரு கணம் அத்தனையையும் நினைத்துப் பார்த்தேன். 
சட்டென உடைந்தது எனது கண்ணீர்க்குளம்.

மைதானத்திலிருக்கும் திரையிலே எனது முகம் பெரிதாய் தெரியவர சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டேன். மெல்லச் சுதாரித்துக் கொண்டு, 'சரிம்மா, நம்ம டீம்தான் வெல்லும். கவலைப்படாதீங்க.'

' சரி, வேர்ல்ட் கப் யானை பொம்மை ஒன்டு வாங்கிட்டு வாங்கப்பா!'
'கட்டாயம் வாங்கிட்டு வாறேன்டா!' என்று அவளைச் சமாதானப்படுத்திய பின்பு மறுமுனையில் காத்திருந்த மனைவியோடு இரண்டொரு வார்த்தை அவசரமாக உரையாடிவிட்டு கீழே இறங்கி,  மற்றவர்களுக்குக் காத்திராமல் கையில் கிடைத்த குளிர்பானங்களை அள்ளிக் கொண்டு மைதானத்தின் மத்தியை நோக்கி ஓடினேன். 

-Mohammed Rafi

"நரிகள் புத்திமதி கூற ஆரம்பித்தால் உனது கோழிகளைப் பத்திரப்படுத்து!"

கவிதை:


பிரிவு!






 

லைகள் கோடி
கிளைகளில் துளிர்க்கும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு மலருக்கு ஈடாவதில்லை!

ணர்வுகள் ஆயிரம்
உள்ளத்தில் உதிக்கும்
ஆனால் அவையெல்லாம்
ஒர் அன்புக்கு ஈடாவதில்லை!

றவுகள் நூறு
உலகினில் தோன்றும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு அன்னைக்கு ஈடாவதில்லை!

நினைவுகள் பல
நெஞ்சினில் நிறையும்
ஆனால் அவையெல்லாம்
ஒரு பிரிவுக்கு ஈடாவதில்லை!

-M.R.T. Nasrin


  
"The most difficult pose is to look natural!"

சிறுகட்டுரை:


நிறைவான அறிவைப்பெறும் பிரதான வழி புத்தகவாசிப்பே!










ன்றைய தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டிலே வாசிப்பு என்பது படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது போலத் தோன்றுகின்றது. இலத்திரனியல் பொழுதுபோக்குச் சாதனங்களின் தாக்கமே இதற்கு பிரதான காரணியாக கருதவேண்டியுள்ளது. இந்தப் புதியபோக்கு உலகளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் தவிர்க்க முடியாத மாற்றங்களில் ஒன்று.

எனினும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இன்றைக்கும் வாசிப்பு என்பது அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான பிரதான வழியாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் எவ்வளவுதான் இலத்திரனியல் ஊடகங்களும் பொழுதுபோக்குச் சாதனங்களும் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள போதிலும்  அவற்றையெல்லாம் கொள்வனவு செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அவசியமான நிதித்தேவை என்பது சாதாரண அடிமட்ட மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இன்னும் சவாலாகவே இருந்து வருகின்றது. தவிர இலத்திரனியல் சாதனங்களை மின் இணைப்பு இல்லாத இடங்களிலே பயன்படுத்த முடியாது என்பது அவற்றின் மிகப்பெரிய பலவீனமாகும். இதனால் அவற்றை தமக்குத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்துவதிலே இன்னும் சிரமங்கள் இருந்து வருகின்றன.
புத்தகங்களைப் பொறுத்தவரையில் அவை வெறும் காகிதத்தினால் ஆனவை. வேண்டிய இடத்திற்குக் எதுவித தயக்கமுமின்றிக் கொண்டு செல்லப்படத்தக்கவை. வீட்டில் அலுவலகத்தில் கடையில் ஏன் நடையிலும் கூட வாசிக்கலாம். பஸ்ஸில் ரயிலில் அவற்றை வேண்டிய அளவில் வைத்தக் கொள்ளலாம்  மடிக்கலாம். சுருட்டி வைத்துக் கொள்ளலாம். அவற்றைப் பயன்படுத்துவதற்கு நேரம் ஒன்றைத் தவிர எதுவித செலவும் அவசியமில்லை.

எனவே நிறைவான அறிவை பெறக்கூடிய பிரதான வழி புத்தகவாசிப்புத்தான் என அடித்துக் கூறலாம்.
-M.B. Sithy Rumaiza (Librarian)


 "சோம்பேறித்தனமும் சிலவேளை  பொறுமையெனத்   தவறாகக் கணிக்கப்படுகின்றது"