அடையாள அட்டைகள்
அன்றாட வாழ்வில் நாம் பொதுவாக பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்துகின்றோம். பாடசாலை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டை, தொழில் நிறுவன அட்டைகள் என்று பல்வேறு அடையாள அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் நமது புகைப்படம் மற்றும் முக்கியமான விபரங்கள் காணப்படுவதுண்டு.
ஆனால், காலம் செல்லச் செல்ல நமது அடையாள அட்டைகளில் இருக்கும் புகைப்படத்துக்கும் நமது உண்மையான தோற்றத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் தோன்றவாரம்பித்து மெல்ல மெல்ல அந்த வித்தியாசங்கள் அதிகரித்து, ஒரு கட்டத்தில் உற்றுப்பார்த்தாலும் கூட ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்க முடியாதளவு வேறுபட்டுப் போய் விடுவதும் உண்டு.
புகைப்படம் மட்டுமல்ல கால ஓட்டத்தில் நமது சுயவிபரங்களில் கூட சில மாற்றங்கள் உண்டாகிவிடுவதுண்டு. ஒரு காலத்தில் மாணவனாயிருப்பவர் தொழில் செய்பவராவதும் தனியாளாய் இருப்பவர் மணமுடித்தவராவதும் போன்ற மாற்றங்களைக் கூறலாம்.
இவ்வாறாக நமது தோற்றத்திலும் சுயவிபரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றினை நாம் வாழ்வின் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு வேறு புகைப்படம் பதிய விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து 'மாட்டேன் போ! நான் சின்ன வயதில் எடுத்த படம்தான் அழகாயிருக்கிறது.' என்று நீங்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிந்து புதிதாக அடையாள அட்டை ஒன்றைப் பெற மறுத்தால் சிரமம் யாருக்கு என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு பழைய அடையாள அட்டை - அது ஒருகாலத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்த போதிலும்- எப்படி இன்றைய தேவைக்கு உதவாமல் போய்விடுகின்றதோ அப்படித்தான் நாம் ஒருகாலத்தில் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த சில விடயங்களும் வழக்கொழிந்து போய் விடுகின்றன.
இது காலத்தின் யதார்த்தம். விரும்பியோ விரும்பாமலோ இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கின்றது. மாறாக, வரட்டுப்பிடிவாதம் பிடித்து நீங்கள் நின்றால் இன்றைய யதார்த்த உலகை புரிந்து கொள்வதிலும் அதற்கேற்ப உங்கள் வாழ்வியலை எடுத்துச் செல்வதிலும் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இப்போது யோசித்துப் பாருங்கள்....
இன்று நாம் வாழ்வியல் தேவைகளுக்காக பின்பற்றி வருகின்ற சித்தாத்தங்கள், கொள்கைகள் உட்பட எல்லாமே நமது அடையாள அட்டைகள் போன்றதுதான். அவற்றிலே தெளிவாக நாள், மாதம், ஆண்டு கொண்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே தவிர அவை அனைத்துக்கும் ஒரு செல்லுபடியாகும் கால எல்லை இருக்கத்தான் செய்கின்றது.
நாம் எவ்வளவுதான் புனிதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இயற்கை எனும் இரக்கமற்ற சிற்பி காலம் எனும் உளி கொண்டு அனைத்தையும் செதுக்கிக் கொண்டேதான் இருக்கின்றான்.
வேறு வார்த்தைகளிலே சொல்லப்போனால் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் என்றுமே மாறாமல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரே விடயம்.
தவிர, இன்றைய இளைய தலைமுறைச் சிறார்களின் பரந்துபட்ட அறிவுக்கு இடம்கொடுக்கும் வகையில் நாம் அனைவருமே தயாராக வேண்டியிருக்கின்றது. ஒரு காலத்தில் 'அது ஆகாது' என்றோ 'இது கூடாது' என்றோ கூறினாலே போதும் ஒரு விடயத்திலிருந்து இளையவர்களைத் தடுத்துவிடக்கூடியதாக இருந்தது.
பின்பு அந்த நிலை சிறிது மாற்றமடைந்து 'அது ஆகாது!' என்பதற்கு நாம் ஏதாவது விளக்கம் தர வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு அந்த விளக்கம் கூட அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டியுள்ளது என்பதுதான் மறுக்கவே முடியாத யதார்த்தம்.
நிலைமை இவ்வாறிருக்கும் போது இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு நமது பழைய துருப்பிடித்த கொள்கைகளையே இன்னும் வரட்டுத்தனமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் வேலைக்காகுமா?
இடைவிடாது மாறிக் கொண்டேயிருக்கும் நமது உலகில் சிலபேரின் பேச்சுக்களைச் செவிமடுத்திருப்பீர்கள். அதாவது, தாங்கள் வேதவாக்காகக் கருதும் அல்லது நம்பும் சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகளில் வாழ்ந்திருப்பார்கள். அவை எதுவித மாற்றத்திற்கும் உட்படாமல் இருக்கின்றது என்று பெருமையடிப்பதையும் கூட பார்த்திருப்பீர்கள்.
இவர்களுக்காகச் சிரிப்பதா அழுவதா கூறுங்கள்?
சரி, அதெல்லாமிருக்கட்டும், 'மாற்றமேயுறாதிருக்கும்' அவற்றைச் சிலாகித்து, எக்காலத்திற்கும் பொருந்திப்போகக் கூடியவை என்று இவர்கள் கூறுவார்களேயானால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.
இதுகுறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!
- Jesslya Jessly
1927 இருவருமே(அன்னை) தெரேஸாதான்! 1997 |
"எல்லாமே மாற்றமடையும் -என்பதைத்தவிர மற்ற எல்லாமே மாற்றத்திற்குள்ளாகும்!"
No comments:
Post a Comment