Wednesday, June 5, 2013

இஸ்லாமிய ஆட்சியின் லட்சணம் பாரீர்!படங்கள் கூறும் கதை :


பசிதாளாமல் ஐ.நா. முகாமை நோக்கி நடக்க முடியாமல் நழுவிச்செல்லும் ஆபிரிக்க முஸ்லீம் சிறுமி


கண்ணாடி அணிந்திருப்பவர் சவூதி இளவரசர் பகத் அல் சவுத்  : பார்ட்டி செலவு ஈரோ  € 15 மில்லியன்  (250 கோடி  இலங்கை ரூபா )
 

Monday, June 3, 2013

சிறுகதை : நீ எங்கே?
றைக்கதவைத் திறந்து நான் உள்ளே சென்றதுதான் தாமதம். பச்சக் என்று ஈரமாக எனது வலது கன்னத்தில் வந்து அப்பியது அது.
 
 
'ஓ! யே.. ஏஏ...!'
 
 
எதிர்பாராத அந்த தாக்குதலால் நான் பயத்திலே அலறிச் சரிந்து கட்டிலருகே விழுந்து விட்டேன். என் கையிலிருந்த பைல் பேப்பர்கள் சிதறி அறைமுழுவதும் இறைந்ததும் மேசை மீதிருந்த குவளைத்தண்ணீர் சரிந்து தரைமுழுவதும் பரவியது. மூன்று நாட்களாக நான் மாய்ந்து மாய்ந்து எழுதிய அத்தனை நோட்ஸும் என்கண்முன்னே நனைந்து பாழாகியது. ஆனால் இதற்கும் தனக்கும்  சம்பந்தமே இல்லாததுபோல உருண்டு கிடந்த தண்ணீர்க்குவளையின் மீது ஏறி உட்கார்ந்திருந்தது அது.
 
 
எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியதில் அழுகையே வரும் போலிருந்தது.
நான் சுதாரித்து எழுந்து கொள்வதற்குள் அது குவளையிலிருந்து மீண்டும் எங்கோ தாவிப் பாய்ந்துவிட்டது. விழுந்ததிலே அடிபட்டு வலித்த வலது முழங்காலுடன் சிரமப்பட்டு நடந்து அறையின் விளக்கைப் போட்டேன். நான் யூகித்தது சரியே. அறைச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கின் கீழே பின்னங்கால்களிலொன்றை நீட்டியபடி ஒரு மலையேறும் வீரனைப்போல அப்பிக்கொண்டிருந்தது அது.
 
 
'ஒன்னைக் கொல்றேன் இரு!' என்றபடி மூலையிலிருந்த தும்புத்தடியை ஓசைப்படாமல் கையிலெடுத்து அது இருந்த இடத்தைக் குறிவைத்து ஓங்கிவிட்டேன் ஒரு அடி. 'கலீர்' என்ற ஓசையுடன் நொறுங்கி வீழ்ந்தது, போன வாரம்தான் நான் புதிதாக வாங்கிய 23 வாட்ஸீஎப்ஃசீ மின்குமிழ்.
 
 
பிறகென்ன அறை முழுவதும் இருள் சூழ்ந்துகொண்டது.
 
 
'ஏய் ரெமி! என்னடா மச்சான் சத்தம் அது?' என்றபடி ஓடிவந்தான் எனது பக்கத்து அறை நண்பன் முக்தார். நானும் அவனும் பேராதனை ஆங்கில ஆசிரியர் கலாசாலையின் முதல்வருடப் பயிற்சி ஆசிரியர்கள். ஆண்கள் விடுதிவளாகத்திலுள்ள 'டென்ஸில் கொப்பேகடுவ' மாடிக்கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலே அடுத்தடுத்த அறைகளிலிருப்பவர்கள். விரிவுரையிலும் ஒரே குரூப்பில் இருந்ததால் நெருக்கமான நண்பர்கள்.
 
 
 'வேறென்ன, அந்தத் தேரைச் சனியன்தான்தாண்டா! இன்டைக்கு வந்து கதவைத் திறக்கிறேன்.. சரியா மொகத்துலயே பாஞ்சிட்றா!'
 
 
'சரிதான், றூம் பல்ப்பையும் ஒடைச்சிட்டியா... போனமாதம் மணிக்கூடு.. முந்தா நாள் முகம்பாக்கிற கண்ணாடி.. இன்டைக்கு பல்ப்பா..? நீயும் ஒருமாதமா அதை அடிக்கப் பாயுறதும் ஒடையுறதும்தான் வேலையாப் போயிட்டுது. ஆனா ஒவ்வொரு முறையும் அது தப்பிருதேடா' என்று சத்தமாய்ச் சிரித்தான் அவன்.
 
 
எனக்கு எரிச்சலாக இருந்தது.
 
 
'ச்சே.. அதை அடிச்சிக் கொண்டாத்தாண்டா முக்தார் நிம்மதி! பாருடா, சனியன் என்ன பாட்டைத்தான் படுத்துது. அடிக்கப் போனா அங்க இஞ்ச அலுமாரி இடுக்கு, புத்தகம் கட்டிலுக்குள்ளயெல்லாம் பாய்ஞ்சு மறைஞ்சு எப்பிடியோ தப்பிடுதுடா'
 
 
'டேய், அதை எலியடிக்கிற மாதிரி அப்பிடி அடிக்கேலாடா..மச்சான்! ஜன்னல நல்லா விரியத் தொறந்து வை. கண்ணடில அப்பிக்கிரிக்கக்கொள்ள தும்புத்தடியால தள்ளிரு. கீழ போய் வுழட்டும்!'
 
 
'திருப்பியும் மேல வராதாடா?'
 
 
'மூணாம் மாடிலருந்து கீழ வுழுந்தாருண்டா மாப்புள்ளைய ஹொருவெலக்குத்தான் கொண்டு போவணும். இடுப்பொடைஞ்சி கெடப்பாரு. பொறவெங்க இஞ்ச வாற..?' என்ற முக்தார் அறையை சிறிது ஒழுங்குபடுத்தி தந்துவிட்டுப் போய்விட்டான்.
 
 
அலுமாரியைத் திறந்து பழைய குண்டு பல்ப்பை எடுத்து ஹோல்டரில் மாட்டி சுவிட்சைப் போட்டேன். மீண்டும் வெளிச்சம் பரவியபோது சுவரில் அது இருந்த இடத்தைப் பார்த்தேன். இப்போது அதைக் காணவில்லை. வேறு எங்கேயும் தென்படவில்லை.
 
 
'இருடி.. என்டைக்காவது மாட்டாமலா இருப்பாய்' என்று மனதுக்குள் கறுவியபடி கட்டில்மெத்தையிலும் மேசையிலும் கிடந்த கண்ணாடிச் சிதறல்களையெல்லாம் பொறுக்கியெடுத்தேன். பின்பு தும்புத்தடியால் அறையைப்பெருக்கி வெளியே வந்து வராந்தாவிலே அதை அள்ளிக்கொண்டிருந்தபோது மீண்டும் அறைக்குள்ளே ஏதோ ஒன்றின்மீது அது தாவிப்பாயும் ஒலி கேட்டது. 
 
 
 
 
'என்னடா காலையிலேயே டல்லா இருக்கிறா.. அச்சினி கேகாலையிலருந்து கேள்ஸ் ஹொஸ்டலுக்கு இன்னும் வரல்லயோ?' சைக்கோலொஜி விரிவுரை முடிந்து இடைவேளை நேரத்தில் ரகசியமாய் கலாய்த்தான் முக்தார்.
 
 
'ஓ அதுதானா மாப்பிள்ளை.. லவ்வை சொல்லத் தெரியாத  பழைய முரளி மாதிரி ஃபீல் பண்ணிட்டிருக்காரு? என்று ராஜேசும் 'எய் மச்சான் லவ் ஃபீவர்த..? ஹா.. அத சுது பபா சுட்டக் பரக்குனவா நேத ?' என்று பத்திரணவும் சேர்ந்து கொண்டான்.
 
 
'டேய், எருமைகளா! அவள் அச்சினியை  கே குறூப் மகாநாமதாண்டா லவ் பண்றான்! நான் அவளோட சும்மா ப்ரண்ட்டாதான் பழகி...'
 
 
'ஓ! அப்பிடியா? சரி, நம்பிட்டோம்டா..'
 
 
'நீ வேற..! டேய் என்னை எப்பிடி வேணுமெண்டாலும் நக்கலடி! ஆனா கடவுளுக்காக அச்சினியைக் கொழப்பி வுட்றாதடா! ப்ளீஸ்!'
 
 
'ஓஹோ! இதில கடவுளுக்கும் ஒரு பங்கைக் குடுத்திட்டீங்களோ?'
 
 
'சரி அதைவுடுங்கடா. என்ட கவலை வேற முக்தார். மூணுநாளா நான் கஸ்டப்பட்டு எழுதியெடுத்த நோட்ஸ் எல்லாம் நேத்து அந்தச் சனியன்ட வேலையால திருப்பி எழுதணும். அதாண்டா யோசனையாருக்கு!'
 
 
'என்னடா இதுக்குப் போய் இவ்வளவு கவலையா..? அதுதான் உன்ட அச்சினிகிட்ட குடு நோட்ஸ்ஸ.  உனக்கென்டா சும்மா அழகா எழுதித் தருவாள் மச்சான்' என்று அபிநயித்தான்.
 
 
'பாத்தியா.. நீ திருந்தவே மாட்டியே. இல்லடா.. நேத்து அது மூஞ்சிலேயே பாஞ்சிட்டுது.. தேரை மூஞ்சில பாஞ்சா தேவாங்கு மாதிரி தேஞ்சுருவோமாம் என்டு எங்கட உம்மா சொல்லுவாங்கடா'
 
 
'யா அல்லாஹ்! நீ தேய்ஞ்சு முடியிறதுக்கு ஒரு நூத்தியம்பது வருசம் புடிக்குமேடா.. ஆளைப்பாரு இதையெல்லாம் போய் நம்பிட்டு.. டேய் நீயெல்லாம் ஒரு சயன்ஸ் படிச்சவனாடா? வெளிய சொல்லாத.. பழைய பஞ்சாங்கம்'
 
 
அவன் சொல்வது உண்மைதான். உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவிலே படித்தவன்தான் நான். ஆனாலும் 'தேரை பாய்ந்தால் தேவாங்கு மாதிரி மெலிவோம்.. பூனை குறுக்கே போனால் காரியம் ஆகாது என்பவற்றை  நம்புவது மட்டுமல்ல ஆவிகள் பேய்கள் பற்றிய பயமெல்லாம் கூட எனக்கு நிறையவே உண்டு. மூடநம்பிக்கைகளில் ஊறிய என்குடும்பம் சின்ன வயதிலிருந்து என்னையும் அப்படியே வளர்த்து விட்டார்கள். அறிவுக்குத் தெரியும் விடயங்களைக் கூட பழக்கவழக்கங்கள் விடாது என்பதற்கு நான்தான் நல்ல உதாரணம்.
 
 
 
 
 
 
பிற்பகல் விரிவுரைகள் முடிவடைந்து நான் மட்டும் அறைக்குத் திரும்பினேன். முக்தார் ஏதோ வேலையாக கீழே பெனிதெனியவுக்கு சென்றிருந்தான்.
அறையைத் திறக்கும்போது சட்டென தேரையின் நினைவு வந்துவிட்டது.  உடனே உள்ளே நுழையாமல் கதவைத்திறந்து பிடித்துக்கொண்டு சற்றுத்தாமதித்து எச்சரிக்கையாக லைட்டைப் போட்டேன். சுவர் முழுவதும் நோட்டமிட்டேன். அதைக் காணவில்லை. சரிதான் வெளியே போயிருக்கும் போல என்று நினைத்து உடுப்பை மாற்றிவிட்டு நிம்மதியாக ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என்று கட்டிலிலே சாய்ந்து ஒரு சஞ்சிகையை வாசித்தேன். சிறிதுநேரத்தில் தூக்கம் கண்ணைச்சுற்றியது. சரிந்து படுக்கலாம் என்று திரும்பியதுதான் தாமதம். வலது பாதத்திலே பனிக்கட்டி வீழ்ந்தது போல ஜில்லென்றது ஒரு தாவல். அடுத்து கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து எனது வலது தோளுக்கு ஒரு சடுதிப்பாய்ச்சல். நான் சுதாரித்து எழுந்து கொள்வதற்குள் வேறு எங்கோ தாவி அது மறைந்து விட்டது. தோளிலே அது இருந்த இடம் ஈரமாக வேறு இருந்தது. பாயும்போது சிறுநீர் கழித்திருக்க வேண்டும் அது.
 
 
'சே! சனியன்!' அருவருப்புத் தாங்காமல் பாத்ரூமுக்கு ஓடிச்சென்று கழுவிக்கொண்டு வந்தேன். தூக்கம் கலைந்துபோன கோபத்திலே மீண்டும் நான் தும்புத்தடியை எடுத்தபோது முன்னைய தினம் முக்தார் கூறிய 'கீழே தள்ளிவிடும்' யோசனை  நினைவுக்கு வந்தது. அதன்படி அறை மேசைக்கு எதிரேயிருந்த கம்பிகளில்லாத கண்ணாடி யன்னல்களை நன்கு விரியத்திறந்து வைத்தேன். பின்பு தும்புத்தடியை அருகில் வைத்துக்கொண்டு கட்டிலில் படுத்திருந்தேன். எப்படியும் அது அங்கு இங்கு என்று பாய்ந்து விட்டு விரியத்திறந்திருக்கும் யன்னலின் கண்ணாடிக்கும் தாவும். அப்போது சட்டென கீழே தள்ளிவிடலாம் என்று யன்னலைப் பார்ப்பதும் தூங்குவதுமாக பாசாங்கு செய்துகொண்டு காத்திருந்தேன். ஆனால் நடந்ததோ வேறு. ஆம் என்னை மறந்து அப்படியே தூங்கிப்போய் விட்டேன்.
 
 
'டேய் ரெமி! ரெமி எழும்புடா..! ஏழரையாயிட்டுது என்னடா இது லைட்டையும் போடாம இப்பிடி நித்திரை கொள்றாய்...? இதென்னடாது கையில தும்புக்கட்டு..? ஏண்டா அதைக் கட்டிப்புடிச்சபடி படுத்திருக்கிறாய்?' என்று முக்தார் வந்து லைட்டைப்போட்டு என்னை உலுக்கியபோதுதான் கண்விழித்தேன். சிறிதுநேரம் ஒன்றுமே விளங்காமல் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தேன். பிறகு சற்றுத் தெளிந்ததும் நடந்ததைச் சொன்னேன்.
 
 
'சரி, நல்லகாலம் அதை நீ அடிக்கப்போய் திருப்பியும் எதையாவது ஒடைக்காதது. அதுசரி அது ஜன்னல் கண்ணாடிக்கிட்ட வந்திச்சாடா..?' என்று கேட்டுக் கொண்டிருந்த முக்தார் திடீரென்று அமைதியாகி மெதுவாக எழுந்தான்.
 
 
'டேய் ரெமி, கொஞ்சம் அப்பிடியே இரு!' என்று கிசுகிசுத்துவிட்டு எதையோ உற்றுப் பார்த்தான். பின்பு ஆள்காட்டிவிரலை தன் வாயில் வைத்து என்னை மௌனமாக்கி விரியத்திறந்திருந்த கண்ணாடி ஜன்னலை சைகையால் எனக்குக் காட்டினான்.
 
 
அப்போதுதான் நானும் பார்த்தேன். என் முகம் சட்டென மலர்ந்தது. திறந்து வைத்திருந்த கண்ணாடி யன்னல் கதவிலே எங்களுக்கு தனது பின்புறத்தைக் காட்டியவாறு அப்பிக்கொண்டிருந்தது அந்தத் தேரை.
 
 
'மச்சான், மெல்லமா ஒன்ட கையிலருக்கிற தும்புக்கட்டைத் தந்துபோட்டு நீ இஞ்சால வா..! நான் பாக்கிறேன் ஆளை..' என்று கிசுகிசுத்தபடி புலிவேட்டைக்கு தயாராகும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரனின் எச்சரிக்கையோடு செயல்பட்டான் முக்தார்.  தும்புத்தடியின் தும்பு இருக்கும் முனையை நீட்டிப் பிடித்தபடி யன்னலை நோக்கி மிக மெதுவாய் பதுங்கிப் பதுங்கி அவன் முன்னேற அது அசையாமல் அப்படியே இருந்து கொண்டிருந்தது.
 
 
'இந்த முறை ஆள் காலி' என்று எனக்குச் சைகை காட்டியபடி அவன் அதை நோக்கி நெருங்க நெருங்க பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பரபரப்பாகிவிட்டது. ஒன்றரை மாதமாக என்னுடைய நிம்மதியைக் குலைத்து வந்த சனியன் இன்றோடு தொலையப்போகின்றது என்ற மகிழ்ச்சியில் எனது இதயம் எகிறிக் குதித்தது.
 
 
முக்தார் யன்னலை நெருங்கி.. நின்று நிதானித்து.. அந்தச் சனியனை வழித்துக் கீழே தள்ளிவிடுவதற்காக தும்புத்தடியை பின்னிழுத்து ஓங்கிய வினாடியில்...
சட்டென மின்சாரம் தடைப்பட்டுப்போனது.
 
 
எங்கள் விடுதி வளாகமே இருளில் மூழ்கிவிட எங்கும் கும்மிருட்டு! யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை
 
 
'முக்தார் தள்ளிட்டியாடா அதை! கீழ விழுந்திச்சா மச்சான்'
 
 
'அப்பிடித்தான் நெனைக்கிறேன்.. அதுக்குள்ள பாரு இந்த கரண்ட்ற வேலைய.. டோச் இருக்காடா.. சே!'
 
 
'அதுசரி கரண்ட் போனவுடனே என்னமோ கீழ விழுந்த சத்தம் கேட்டிச்சேடா முக்தார்?'  என்று டோர்ச்சை தேடிக்கொண்டே கேட்டேன்.
 
 
'நீ ஒண்ணு! அது தும்புக்கட்டு விழுந்த சத்தம்டா!'
 
 
சிறிது நேரத்தில் மீண்டும் கரண்ட் வந்துவிட்டது. உடனே இருவரும் அறையின் சுவர்களைப் பார்த்தோம். அதைக் காணவில்லை.
 
 
'மச்சான் ரெமி, ஆள் தும்புக்கட்டோட கீழ போய்ட்டாரு.. கவலைய வுடு' என்று என் உள்ளங்கைகளிலே தன்கையால் தட்டிக் குதூகலித்தான் முக்தார். சிறிது சந்தேகமிருந்தாலும் நானும் அவ்வாறு நம்பவே ஆசைப்பட்டேன்.
 
 
ஆனால் எங்கள் மகிழ்ச்சி அதிகநேரம் நீடிக்கவில்லை.
 
 
கீழே சென்று தரையில் விழுந்த தும்புக்கட்டை எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் அறைக்கு வந்தபோது மின்விளக்கினடியில் சுவரில் அப்பிக்கொண்டிருந்தது அந்தச் சனியன்.
 
 
அதுதான் அந்தத் தேரையை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் புரிந்த கடைசி முயற்சி.
 
 
 
 
ப்போதெல்லாம் நான் அந்தத்தேரையை அடிப்பதற்கு முயற்சிப்பதேயில்லை. சரியாகச் சொல்வதென்றால் அதனுடனே வாழப்பழகிக்கொண்டேன். அது எங்காவது சுவரிலோ அல்லது அலுமாரியிலோ ஒட்டியிருந்தால் அதை இடையூறு செய்யாமல் அதற்கேற்றபடி அந்தச் சிறிய அறைக்குள்ளே நான் எனது நடமாட்டத்தை வைத்துக்கொள்வேன். இரவில் தூங்கும்போது அது என்மீது பாய்ந்து தொல்லை தராமலிருப்பதற்காக கட்டிலைச்சுற்றி நுளம்புவலையைப் போட்டுக்கொள்வேன்.
 
 
சொன்னால் நம்பவே மாட்டீர்கள்.
 
 
முக்தார் உட்பட பக்கத்து அறைகளிலே இருந்த முஸ்லீம் நண்பர்கள் ரமழான் பண்டிகைக்கு ஊருக்குச் சென்றிருந்ததால் கடந்த பத்து நாட்களாக ஒருவிதத்தில் எனது தனிமையை விரட்டும் ஜீவனாகவும் எனது பொழுதுபோக்காகவும் அந்தத் தேரை மாறிவிட்டிருந்தது.
 
 
பரீட்சைக்கு புத்தகங்களைப் படித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது கண்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படும். அப்போதெல்லாம் சுவரிலிருக்கும் மின்விளக்கினடியிலே சிறிய பூச்சிகளை அது வேட்டையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எனது வேலை. இன்னும் சொன்னால் அதனுடைய ஒவ்வொரு அசைவும் எனக்குப் பிடித்துப்போய்விட்டது. பூச்சிகளைப் பிடிப்பதற்காக அது அசையாமல் பொறுமையாய் காத்திருப்பதையும் மலையேறுபவனைப்போல பூச்சிகளை நோக்கி அது முன்னேறுவதையும் பார்க்க விநோதமாக இருக்கும்.
 
 
இரை எதுவும் கிடைக்காத பகல்வேளைகளில் தனது கால்களை உடலோடு நெருக்கமாக மடித்துச்சுருக்கி வைத்தபடி கண்களை மூடிக்கொண்டு ஒரு குழந்தையைப்போல நீண்ட உறக்கத்திலிருக்கும். வழக்கமாக வெளிறிய மண்ணிறத்தில் இருக்கும் அதன் தோலின் நிறம் பகல் உறக்கத்தின்போது மட்டும் அறைச்சுவரின் மெல்லிய பச்சை வண்ணத்திற்கு மாறிவிடும். உறக்கத்திலிருக்கும்போது எதிரிகளின் பார்வையில் இலகுவில் பட்டுவிடக்கூடாது எனும் அந்தச் சிறிய உயிரின் முன்னெச்சரிக்கையை நினைத்து நான் பலமுறை வியந்து போவதுண்டு.
 
 
முன்பெல்லாம் அது எங்காவது ஓரிடத்தில் அதிக நேரம் நிற்காதா என்று தும்புத்தடியுடன் தேடித்திரிந்ததை இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்போதெல்லாம் விரிவுரைக்குச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பினால் இயல்பாகவே எனது கண்கள் அந்தத் தேரையைத் தேடும். சிறிதுநேரம் அதைக் காணாவிட்டாலும் எனக்கு என்னவோ போலிருக்கும்.
 
 
ருநாள் வழக்கம்போல அறையை மூடிவிட்டு சில பொருட்கள் வாங்குவதற்காக கீழே பெனிதெனியவுக்கு சென்றிருந்தேன். சத்துரங்க பேக் ஹவுஸினுள்ளே நுழைந்து பாண் வாங்கிக்கொண்டிருந்தபோது தோளின்மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். தோளிலே ட்ரவலிங் பேக்கோடு சிரித்தபடி நின்றிருந்தான், முக்தார்.
 
 
'டேய் முக்தார், எப்படா ஊர்லருந்து வந்த நீ' என்று அவன் கையிலிருந்த சிறிய பேக்குகளிலொன்றை வாங்கிக் கொண்டேன்.
 
 
'இப்பதான்டா பஸ்லருந்து எறங்கி வாறேன்.. வழியில நீ இதுக்குள்ள போறதை கண்டுட்டுத்தான் பின்னாலயே வந்தன். டேய் ரெமி, இரவுச்சாப்பாடு ஊர்லருந்து ஒனக்குஞ் சேத்துத்தான்டா கட்டி வந்திருக்கேன்.. பாணை நீ வாங்கிட்டியா..?'
 
 
'பரவாயில்ல இதைக் காலைல சாப்பிடலாம். பிறகு, நோன்புப் பெருநாள் எல்லாம் எப்பிடி நல்லமா?'  பேசிக்கொண்டே விடுதியை நோக்கி ஏறலானோம்.
 
 
பட்டர்புரூட் மரத்திலிருந்து பூக்களின் வாசைன காற்றில் மிதந்து வந்தது.
 
 
'ஓம்டா. இந்தமுறை எங்கட பக்கம் வயல் நல்ல விளைச்சல். அதால பெருநாளும் விசேசம்தான். ஒன்னையும் கூப்பிட்டந்தானே.. நீதான் அச்சினியை விட்டு வரமாட்டியே.. பரவாயில்ல, ஒனக்கு நெறைய தொதல் முறுக்கு பலகாரம்லாம் பார்சல்ல இருக்கு. தாறேன் அச்சினிக்கும் குடு...'
 
 
'சரி மச்சான்' என்றேன் உற்சாகத்தோடு. நாங்கள் பேசிக்கொண்டு நடந்தபோது பெண்கள் விடுதி வந்து விட்டது.
 
 
'இன்டைக்கு அச்சினி ஹொஸ்டல்லதானே இருப்பாள்..? இப்பவே கொண்டுபோய் குடுக்கிறியா அவளுக்கு தனியா பார்சல் சுத்தி வச்சிருக்கேன்டா..'
 
 
'இல்ல, நாளைக்கு நம்ம ரிஹான்ஸி ஸேர்ட சைக்கோலொஜி பீரியட்ல வச்சு குடுப்போம்.. அவருக்கும் உங்கட முஸ்லீம் தொதலென்டா நல்ல விருப்பம்'
 
 
'அதுக்கு வேறயா எனக்கிட்ட இருக்கு. இப்ப நீ அச்சினியை மட்டும் ரகசியமா கூப்பிட்டுக்குடு.. நோட்ஸெல்லாம் எழுதிட்டியா..? அதுசரி, உன்ட தேரை மச்சான் என்ன செய்யுறாரு.. உயிரோட இருக்காரா.. அடிச்சிட்டியா?
 
 
நான் பதில் சொல்லாமல் மையமாக புன்னகைத்தேன்.
 
டுத்து வந்த மூன்று நாட்களும் முதலாம் வருடத்திற்குரிய அரையாண்டுப்பரீட்சைகள் நடந்ததால் அனைவரும் பரபரப்பாக இருந்தோம். பரீட்சை நடைபெற்ற நாட்களிலே நண்பர்களோடு சேர்ந்து க்ரூப் ஸ்டடி செய்தோம். அதற்காக விரிவுரை அறைகளிலும் பிரதான மண்டபத்திலும் எங்கள் பொழுதுகள் கழிந்ததால் இரவில் தூங்கும் நேரம் தவிர எங்கள் அறைகள் பெரும்பாலும் பூட்டியே கிடந்தன.
 
 
வெள்ளிக்கிழமை முற்பகலோடு ஒருவழியாக சகல பரீட்சைகளும் முடிவடைந்தன. அதைக் கொண்டாடுவதற்காக அன்றிரவு பிரதான மண்டபத்திலே களியாட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. ஆனால் மாலையே முக்தார் ஏதோ ஓர் அவசர வேலையாக கொழும்புக்குக் கிளம்பிப் போய்விட்டான்.
 
 
மாலைமுதல் ஆடல்-பாடல், போட்டிகள், விளையாட்டுகள் டின்னர் பார்ட்டி அது இது என்று எங்கள் களியாட்ட நிகழ்வுகள் முடிவடைய நடுநிசி தாண்டி விட்டது. அச்சினியை பெண்கள் விடுதியில் கொண்டுபோய் விட்டுவிட்டு நடுங்கும் குளிரில் தள்ளாடிக்கொண்டு வந்து அறையைத் திறந்து கட்டிலிலில் தொப்பென விழுந்து படுத்தேன்.
 
 
மறுநாள் காலை கண்விழித்தபோது ஒன்பது மணி தாண்டிவிட்டது.
 
 
அன்று சனிக்கிழமை என்பதால் கலாசாலை வெகுஅமைதியாக இருந்தது. எழுந்திராமல் அப்படியே கட்டிலிலேயே படுத்திருந்தேன். ஏதோ ஒன்று குறைவது போன்ற இனம்புரியாத ஓர் உணர்வு என்னை வாட்டிக்கொண்டேயிருந்தது. அப்போது சட்டென அந்தத்  தேரையின் ஞாபகம் வந்தது. அது பகல்வேளைகளிலே அப்பிக்கொண்டு உறங்கும் மின்குமிழின் பின்புறச்சுவரைப் பார்த்தேன். அங்கு அதைக் காணவில்லை.
 
 
எங்கே போயிருக்கும்...?
 
 
பரீட்சை பரபரப்பில் சில தினங்களாக தேரையை நான் கவனிக்கவேயில்லை என்பது அப்போதுதான் உறைத்தது. இடையிடையே நான் நோட்ஸ் எடுப்பதற்காக அறைக்கு வந்த நேரத்திலும் அதைக் கண்டதாக ஞாபகம் வரவில்லை. எழுந்து பாத்ரூமில் குளித்துவிட்டு வந்து யன்னலைத் திறந்தேன். சில நாட்களாக நாங்கள் அறையில் இருந்தது குறைவு என்பதால் யன்னல்கள் திறக்கப்படாமலே இருந்தன. கண்ணாடி பார்த்துத் தலையைச் சீவிக்கொண்டே அறைமுழுவதும் நோட்டமிட்டேன்.
 
 
ம்ஹும். தேரை இல்லவே இல்லை. சிலவேளை அலுமாரிக்குள் புகுந்திருக்குமோ என்று அதையும் திறந்து பார்த்தேன். ஆனால் அங்கேயும் அது இல்லை. அறையைவிட்டு வெளியே வந்து வராந்தாச் சுவர்களிலும் பார்த்தேன். எங்கேயும் அதைக் காணவில்லை.
 
 
ஒருவேளை பாத்ரூம் பக்கம் தாவிப்போயிருக்குமா என்றால் அது இவ்வளவு தூரம் அறையை விட்டு வெளியே வந்ததே கிடையாது. ஆனாலும் பாத்ரூமையும் ஒரு இடம் விடாமல் முழுமையாக பார்த்துவிட்டேன். அங்கே மட்டுமல்ல எங்கேயும் அதைக் காணவில்லை.
 
 
மனமெல்லாம் வெறுமையாக இருந்தது.
 
 
எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென டீசேர்ட் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு பெனிதெனியவுக்கு இறங்கிச்சென்று காலையுணவும் பழங்களும் வாங்கிக்கொண்டு திரும்பினேன். வழியிலிருந்த சிறிய ஆங்கிலிக்கன் தேவாலயத்தின் உள்ளே போய் சிறிது நேரம் அமைதியாக கண்களைமூடி அமர்ந்திருந்தேன். அப்போதும் மனம் ஏனோ ஒருநிலைப்படவில்லை.
 
 
கல்லூரி லைப்ரரி இருக்கும் ஆளரவமற்ற அமைதியான வீதியிலே உயர்ந்து வளர்ந்திருந்த பட்டர்ப்ரூட் மரங்களை அண்ணாந்து பார்த்தவாறு தனியாக உலாவினேன்.  கேள்ஸ் ஹொஸ்டலைத்தாண்டி வரும்போது வாசலில் நின்றிருந்த பெண்கள் சிலர், 'ஹாய் ரெமி!' என்று கையசைத்தார்கள். அவர்களிடம் சொல்லி உள்ளேயிருக்கும் அச்சினியைக் கூப்பிட்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கலாமா என்று தோன்றியது. ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அறைக்கு வந்துவிட்டேன்.
 
 
இப்போதும் அறையிலே அந்தத் தேரையைக் காணவில்லை.
 
 
சாப்பாட்டுப்பார்சலை மேசையில் பிரித்து வைத்தும் ஏனோ சாப்பிட முடியவில்லை. மீண்டும் அறைமுழுவதும் தேரையைத்தேடும் படலம் ஆரம்பமானது. புத்தகங்கள், ஆடைகள், அலுமாரி இடுக்கு, மெத்தையின்கீழ் என்று ஒரு இடம் விடாமல் கடைந்து தேடியும் விளைவு தோல்வியே.
 
 
முன்பு இதே தேரையை கொல்லுவதற்காக நான் தும்புத்தடி சகிதம் கோபத்தோடு தேடியது ஞாபகம் வந்தது. இப்போது அதை நினைத்ததும் ஏனோ என்னையறியாமலே சட்டென கண்ணின் ஓரம் நீர் துளிர்த்தது எனக்கு. சாப்பாட்டுப் பார்சலை மீண்டும் மடித்து வைத்துவிட்டு சிறிதுநேரம் அப்படியே கட்டிலிலே படுத்தவாறு யோசித்துக் கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனேன்.
 
 
மீண்டும் கண்விழித்தபோது தோள்பட்டையிலே ஏதோ அரித்தது எனக்கு.
 
 
தலையைத் திருப்பிப் பார்த்தபோது கட்டிலினருகே சித்தெறும்புகள் சாரிசாரியாக ஒரு கோடுபோல எங்கோ போய்க்கொண்டிருப்பதைக் கண்டேன். சட்டென மேசையிலே வைத்திருந்த சாப்பர்ட்டை எடுத்துப் பார்த்தேன். ஆனால் அதிலே எறும்புகளைக் காணவில்லை. அப்படியானால் அவை எங்கேதான் போகின்றன என்ற ஆர்வத்தால் எறும்பு வரிசையை பார்வையாலேயே தொடர்ந்தேன். அவை மேசையைக் கடந்து மூடிக்கிடந்த கண்ணாடி ஜன்னலின் கதவுகள் நிலையோடு பிணைச்சல்களால் இணைக்கப்பட்டிருந்த சிறிய இடைவெளிக்குள் போவதைக் கண்டேன்.
 
 
ஆர்வம் மேலிட மெதுவாக ஜன்னல் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன்.
 
 
அந்த இடைவெளிக்குள் நசிந்து சப்பையாகிக் காய்ந்துபோய் எறும்புகளால் அரிக்கப்பட்டு பாதி எலும்பும் பாதி தோலுமாக ஒட்டிக்கிடந்தது அந்தச் சிறிய தேரை.
 
 
-மூதூர் மொகமட் ராபி
(2013.05.31)