வன்னியார் ஒழுங்கையிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றிலே மகளை இறக்கிவிட்டு அப்படியே அதுபோய் பிரதான வீதியைச் சந்திக்குமிடத்திலே இடதுபக்கம் திரும்பி நேரே மடத்தடிச்சந்தி சுற்றுவட்டத்தைத் தாண்டும்வரை அது ஓர் ஒருவழிப்பாதை என்பதை நான் கவனிக்கவில்லை.
'சொய்......ங்!' என்று போக்குவரத்துப் பொலீசின் விசில் சப்தம் காதிலே ஒங்கியறைந்தபோதுதான் 'ஆகா மாட்டிக்கொண்டோம்டா!' என்பது உறைத்தது. 'அப்படியே திரும்பிப் பார்க்காமலே ஓடிவிடுவோமா..' என்று உதயமான ஓர் அசட்டுத் துணிச்சல் காதுமடல்களைச் சூடாக்கிவிட்டு கணத்தில் மறைந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. இல்லையென்றால் இதே நேரத்திற்கு இருக்கும் வாகன நெரிசல்களுக்குள் வேறுயாருக்கோ விசில் ஊதியது போல முகத்தை வைத்துக்கொண்டு நைஸாக நழுவியிருக்கலாம்.
'சனியன் பிடிப்பான்கள்.. யுத்தம் முடிஞ்சு தொலைச்ச பிறகு கிடக்கிற றிசேவ் பொலீஸ்காரனுக்கெல்லாம் கையில வெள்ளைத்துண்டையும் வாயில விசிலையும் குடுத்துவிட்டிருக்கிறானுகள் ..சே!' என்று சலித்துக் கொண்டே இடது புறமாக பைக்கை ஓரம் கட்டினேன்.
ட்ரபிக் பொலீஸ் என்றாலே எனக்குப் பயங்கர அலர்ஜி. அவர்களுக்கு நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் இல்லை.. இல்லை.. கடுப்புப் பெயர் என்ன தெரியுமா? வசூல்ராஜாக்கள்! இத்தனைக்கும் பைக் புக், ட்ரைவிங் லைசன்ஸ், ரெவின்யூ லைசன்ஸ், இன்ஷுரன்ஸ் முதல்கொண்டு சகல ஆவணங்களையும் உரிய திகதியில் பக்காவாக முடித்து வைத்திருக்கும் ஓர் உத்தம பிரஜைதான் நான். ஆனாலும் இத்தனைகால பைக் அனுபவத்தில் வ.ரா. க்களுக்கும் எனக்கும் அத்தனை நல்ல உறவுகள் ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இத்தனைக்கும் இரண்டு அல்லது மூன்று தடவைதான் அவர்களிடம் மாட்டியிருக்கின்றேன்.
அபயபுர இறக்கத்தில் ரவுண்டபோட் சந்தியைத் தாண்டியதும் உள்ள புகையிரதக்கடவையின் தடுப்புக்கதவுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதைத்தாண்டி வந்ததற்காக ஒருதடவையும் ஒரு சரிவுப்பாதையிலே முன்னே சென்ற வாகனத்தை முந்திச் சென்றதற்காக இரு தடவைகளும் அங்குநின்றிருந்த வ.ரா.க்கள் எனக்குக் 'குற்றம்' போட்டிருக்கின்றார்கள். நானும் தபால் அலுவலகம் சென்று தண்டப்பணம் கட்டிவிட்டு வந்திருக்கின்றேன். ஆனால் அந்த மூன்று தடவையுமே செய்யாத தவறுக்காக நான் மாட்டினேன் என்பதுதான் அவர்கள் மீதான இந்த தீரா 'அன்பு'க்கு காரணமே. அதையெல்லாம் இங்கே விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தால் இந்தச் சிறுகதை ஏறக்குறைய ஒரு குறுநாவல் போலாகிவிடும். அவற்றை இத்தோடு விட்டுவிட்டு.. இப்போது பொலீசிடம் போய், 'எதற்காக விசில் ஊதினாய்?' என்று கேட்கலாம் வாருங்கள்.
உழுந்துவடையும் பருப்புச்சாம்பாரும் வாசமடித்துக் கொண்டிருந்த 'மணீஸ்கபே'க்கு எதிரேயிருந்த முச்சக்கரிகள் நிறுத்தத்திலே வெள்ளை நிற ஹெல்மெற்றும் விசிலுமாக நின்றிருந்தான் அந்த பொலீஸ்காரன். பெண்களைப்போன்ற மெலிந்த உருவமும் யாரோ தெரிந்த ஒருவரை ஞாபகப்படுத்துவது போன்ற முகத்தோற்றமும் கொண்டிருந்தான் அவன். மிஞ்சிப்போனால் அவனுக்கு இருபத்தி ஐந்து வயதுக்கு மேலிருக்காது.
'எய் மஹத்தயா வண்வே பாறயட்ட யன்னே?' என்று கேட்டான். இரண்டொரு வாரங்களுக்கு முன்புதான் நகரின் மத்தியவீதி மற்றும் பிரதானவீதி இரண்டையும் முழுமையான ஒருவழிப்பாதையாக மாற்றியிருந்தனர். ஆரம்பத்திலே மக்களுக்குப் பழகும் வரையில் விஷயம் தெரியாமல் மாறிப் பயணித்த வாகனங்களையெல்லாம் தண்டப்பணம் அறவிடாமல் பிடித்து எச்சரித்துவிட்டு அனுப்பிக்கொண்டிருந்ததை நானும் அறிவேன். ஆனால் இப்போது இரண்டொருநாளாக கடுமையாக இருக்கின்றனர் போலும்.
'அனே மம சுட்டக் அமத்தக்குணங் எவில்லா மல்லி' என்றேன் 'சிறிது மறந்துபோய் வந்து விட்டேன்' என்பதை என்னுடைய அரைகுறையை வைத்துக் கொண்டு.
'மஹத்தயா கொஹெத இன்னே..?' என்ற கேள்விக்கு என்ன பதிலைச் சொன்னால் விடுவான் என்ற ஒரு திட்டமும் இல்லாமல், 'ஹந்திய!' என்றேன்.
என்னை ஒருதடவை நன்றாகப் பார்த்தான் அவன். பின்பு ஏதோ சொல்ல வாயெடுத்தவனை முந்திக்கொண்டு,
'மம ஹெமதாம மே பாற என்ன நே மல்லி..' என்று நான் ஏதோ சொல்லப்போக, அவன் சிறிது யோசித்து விட்டு, 'லைசன்ஸ் இன்ஷுரன்ஸ் கன்ட' என்று கேட்கத் தொடங்கி விட்டான். நான் ஏதும் பேசாதிருந்தால் ஒருவேளை 'சரி போனால் போகிறது' என்று அனுப்பிக்கூட இருந்திருப்பான் போல. ஆனால், பாழாய்ப்போன என் வாய் சும்மா இருந்தால்தானே.. நான்தான் கெடுத்துவிட்டேன் என்று தோன்றியது.
நிலைமையை நொந்தபடி வீதியைக் கடந்து நிறுத்தியிருந்த பைக் வரையில் நடந்து சென்றேன். யூட்டிலிட்டி பொக்ஸைத் திறந்து எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் அவனிடம் வந்தேன். ஆவணங்கள் எல்லாமே சரியாக இருக்கும் தைரியத்தில் வெகு அலட்சியமாக நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவன், 'மொகத மே இன்ஷுரன்ஸ் தின ஈவறவுணானே' என்று அவன் காட்டியபோதுதான் காப்புறுதியைப் புதுப்பிக்கவேண்டிய தினம் இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவடைந்திருந்தது தெரிந்தது.
நான் வாயடைத்துப் போய் நின்றுவிட்டேன்.. 'வருகிற செப்டம்பர் மாதத்தில்தான் ஒருவருடம் பூர்த்தியாகின்றது என்றுதானே ஞாபகம்...இது எப்படிச் சாத்தியம்' என்று எனக்குப் புரியவேயில்லை. சந்தேகம் தீராமல் அந்த ஆவணத்தை அவனிடமிருந்து வாங்கி பலமுறை படித்துப் பார்த்தேன். ஆம், அவன் கூறியதுதான் சரியாக இருந்தது. சரி, இனி வாதிட்டுப் பிரயோசனமில்லை. உண்மையை ஏற்றுக்கொண்டு சமாளிக்க வேண்டியதுதான். இன்ஷுரன்ஸ் கேசுக்கு எப்படிப்பார்த்தாலும் ஒரு ஐநாறு அல்லது ஆயிரம் 'சந்தோசம்' கழற்றுவான். விடியற்காலையிலே மகளை டியூஷனுக்கு கொண்டுவிடும் அவசரத்தில் பேர்ஸைக்கூட எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. என்ன செய்யலாம்? எப்படியாவது எதிலும் அவன் எழுதிவிடாதபடி பார்த்துக் கொள்வதுதான் உத்தமம்.
அவனருகில் சென்று மெல்ல 'இப்போது கையிலே காசில்லை.. பிறகு வரும்போது உங்களை கவனித்துக் கொள்கின்றேன்' என்று தெரிந்த சிங்களத்திலே சொல்ல நான் வாயெடுக்கையிலே முச்சக்கர வண்டியொன்று விர்ரென நான் வந்தது போலவே ஒருவழிப்பாதையில் எங்களைத் தாண்டிச் சென்றது. அதை நிறுத்துவதற்காக தனது விசிலை பொலீஸ்காரன் பக்கற்றுகளில் அவசர அவசரமாகத் தடவித்தேடிப் பார்ப்பதற்கிடையிலே அவன் பறந்து போய்விட்டான். இப்போது அவனுக்கு என்னைப் பார்க்கச் சங்கடமாக இருந்திருக்க வேண்டும்போல..
'ஓ! இப்பிடிப் பிச்சிட்டு ஓடறவனையெல்லாம் விட்டு எங்களை மாதிரி மரியாதையாக நின்று கேக்கிறவனை மட்டும் புடி' என்று நான் மனதுக்குள் கறுவியது கேட்டிருக்குமோ என்னவோ உடனே லேசான அசட்டுச் சிரிப்புடன் சிங்களத்திலே தனக்குள் ஏதோ சொல்லிக் கொண்டான். நானும் எரிச்சலை அடக்கிக் கொண்டு சிரித்து வைத்தேன். அப்படியாவது ஒரு தற்காலிக சிநேகம் வளர்ந்து என்னை விட்டுவிட மாட்டானா என்ற நப்பாசைதான் காரணமே தவிர வேறென்ன.
அவன் இதையெல்லாம் சட்டைசெய்யாமல் தனது பைக்கின் வெள்ளைநிறப் பெட்டியிலிருந்து ஒரு நோட்புக்கை எடுத்தான். அதிலே ஒரு பக்கத்திலே எனது பைக்கின் இலக்கம் மற்றும் லைசன்ஸ் விபரங்களைக் குறித்துக்கொண்டு ஆவணங்கள் சகலவற்றையும் திரும்பத் தந்து விட்டான். பின்பு என்னிடம் தனது பெயரைக் குறிப்பிட்டு ஒரு செல்போன் நம்பரையும் எழுதித்தந்தான். பின்பு ஏதோ நீளமாய் சிங்களத்திலே கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து போய்விட்டான். முதலிலே அவன் கூறியதெல்லாம் புரிந்தது போலத்தான் இருந்தது. ஆனால் போனபின்புதான் பெயரைத் தவிர எதுவுமே சரியாக விளங்கவில்லையென்பதே தெரிந்தது.
அந்த துண்டுக்காகிதத்தை எடுத்துக்கொண்டு சற்றுத் தள்ளி நின்றிருந்த சற்று வயதான ஆட்டோ சாரதி ஒருவரிடம் சென்று அதைப்பற்றிக்கேட்டேன்.
'லைசன்ஸை தந்திட்டானா?'
'ஓ! எல்லாத்தையும் தந்திட்டான் அண்ணன்!' என்றேன் சந்தோஷமாக.
'அதுதான் தம்பி கரைச்சலே! லைசன வாங்கி வைச்சானென்டாலும் பிறகு ஸ்டேஷனுக்குப்போய் ஒரு மாதிரி கதைச்சுக் கிதைச்சு எடுத்திட்டாவது வந்திரலாம்.. ஆனா இப்பிடி எழுதிட்டுப் போனா அவன் விரும்புன கேசுல மாட்டிவுட்றுவான்.. கோட்சுக்கு கீட்சுக்குப் போட்டானென்டா ஐயாயிரம் அடிப்பான்... வீண்அலைச்சல்! பின்னேரம்போல போய் கதைச்சு 'எதை'யாவது குடுத்துக்கிடுத்து விசயத்தை முடிங்க தம்பி' என்றார் அவர்.
அதன்பிறகு அங்கு நான் நிற்பேனா..?
அன்றைய தினம் மாலையில் பெரிய பொலீஸ் ஸ்டேசனுக்குப் போனேன். பைக்கை அருகிலிருந்த வெற்றுக்காணிக்குள் நிறுத்தி வைத்துவிட்டு போக்குவரத்துப் பிரிவிற்கு ஏறிச் சென்று குறித்த பொலீஸ்காரனைத் தேடினேன். ஆனால் அவன் அங்கு இருக்கவில்லை. அதுவரையில் ஞாபகமிருந்த அவனது பெயரும் சட்டென மறந்துவிட்ட காரணத்தால் அங்குள்ளவர்களிடம் விசாரிக்கவும் முடியவில்லை. உடனே அவன் தந்த செல்போன் நம்பர் பைக்கின் யூ.பொக்ஸில் இருப்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் கீழே இறங்கி வந்து வேப்பமர நிழலின் கீழ் நின்றிருந்த பைக்கில் சாய்ந்தவாறே அந்த பொலீஸ்காரனை போனிலே அழைத்தேன்.
'ஹலோ கவுத?' என்று கேட்டது எதிர்முனை.
'அனே மம அத உதயே ஒயா.. மடத்தடி லங்க வன்வே பாஸிங் அல்லப்பு எகனக் தன்னவாத? ஒயா போன் நொம்பர் எக்க துன்ன நிஸா மம ஸ்டேஸன் எவில்லா..' என்றேன். என்னுடைய சிங்களத்தை எண்ணி எனக்கே வெறுப்பாக இருந்தது.
'தன்னவா.. தன்னவா.. ஒயா தெங் கொஹெத இன்னே..?'
இடத்தைச் சொன்னேன்.
'ஏனாங்.. மெஹ.. மெயின் ரோட் அற விக்னேஸ்வரா ஸ்கோல தன்னவா நேத? ஆ.. அதிங் முன்னால மம நிக்கறது இங்க நீங்க வாங்க' என்றான் எனக்காக சிறிது தமிழையும் கலந்து.
உடனே அங்கு சென்று சேர்ந்தேன்.
பெருந்தெரு விக்கினேஸ்வரா கல்லூரிக்கு எதிரேயுள்ள சந்தியில் காலையில் என்னைப் பிடித்த அந்த இளம் பொலீஸ்காரனோடு நடுத்தர வயதான சற்றுப் பருமனான இன்னொரு பொலீஸ்காரரும் நின்றிருந்தார். இருவரும் விசில் ஊதியபடி தவறாக ஓட்டும் வாகனங்களை நிறுத்தியபடி நின்றிருந்தார்கள். நான் சற்றுத்தள்ளி என்னுடைய பைக்கை நிறுத்தினேன். இன்றைக்கு எப்படியும் ஒரு 500 ரூபாயாவது கழரும் என்று நினைத்துக் கொண்டேன். நாளைக்கு இளைய மகளின் ஸ்கொலசிப் டீயூசனுக்குத் தர வைத்திருந்த ஃபீஸுக்கு வேட்டுதான் நினைத்துக் கொண்டு அந்த பொலீஸ் இளைஞனின் முன்னே போய் நின்றேன்.
ட்ரபிக் பைக்கின் சீற்றில் மீது குனிந்து யாருக்கோ தண்டப்பணம் அறவிடும் ரசீதை எழுதிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்து, 'ஆங்.. ஒயா நேத..! சுட்டக் இன்ட' என்று என்னைச் சிறிது நேரம் காக்க வைத்து விட்டு எழுத்து வேலையை முடித்தான். பின்பு என்னைப் பார்த்து புன்னகைத்து, 'மே.. அற சாஜன் மஹத்தயாட்ட கிஹிங் கத்தா கரண்ண' என்று மற்ற பொலீஸ்காரரிடம் அனுப்பி வைத்தான்.
எனக்கு எரிச்சலாக இருந்தது. இவனே கேட்டு வாங்கிவிட்டு அனுப்ப வேண்டியதுதானே.. 'சரிதான் இன்டைக்கு இரண்டு பேருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாயாவது கேப்பானுகள் போல' என்று நினைத்தபடி அவரிடம் சென்றேன். தெருவோரமாக நின்று விசில் ஊதிக்கொண்டிருந்தார் அந்த பருமனான பொலீஸ்காரர். என்னைக் கண்டதும், 'என்ன பிரச்சினை?' என்று தமிழிலேயே கேட்டார். எனக்கு 'அப்பாடா!' என்றிருந்தது. தமிழ் பேசும் பொலீஸ்காரர்கள் கூட தங்களிடம் பிடிபடுபவர்கள் அதிகம் வாதாடிவிடக்கூடாது என்பதற்காக எங்களைப் போன்றவர்களிடம் சிங்களத்திலே பேசுவதுதான் வழமை. இவரோ ஒரு சிங்களவராக இருந்தும் நன்றாகத் தமிழ் பேசுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.
நான் விடயத்தை விபரமாகச் சொன்னேன்.
'சரி, இப்ப வன்வேயால வந்ததை விடுவோம். அது ஏன் இன்னும் இன்ஷுரன்ஸ் புதிசா எடுக்கல்ல.. சொல்லுங்க.. அதுவும் நாலு மாசமா?' என்றார் அவர்.
'நாலு மாசம் இல்ல.. ரெண்டு மாசம்தான்'
'சரி, நேத்தைக்கு முடிஞ்சாலும் இன்டைக்கு புடிக்கேலும் தெரியுமா ஒங்களுக்கு?' என்று சிறிது சூடானவர் என்னை தலைமுதல் கால்வரை பார்த்தவாறு 'என்ன வேலை செய்யிறது?' எனக்கேட்டார்.
' ஸ்கூல் டீச்சர்;'
'ஆங் மாஸ்டரா? என்ன சப்ஜெக்ட்;?'
'ப்ரைமரி'
'எந்த ஸ்கூல்?'
சொன்னேன்.
'ம்ஹும், மாஸ்டர்மாரே இப்பிடிக் கவனமில்லாம இருக்கலாமா? டைமுக்கு அந்தந்த விசயத்தை செய்யணுமெண்டு சின்னப் புள்ளைகளுக்கு எவ்வளவு அரட்டுவீங்க.. ஒருநாள் பாடம் செய்து வராட்டி அடிக்கிறீங்கல்ல..'
எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
'அட! நீங்க மட்டும் சுத்தமோ? மற்றவர்களை குற்றம் செய்தால் பிடிக்கும் நீங்களே கை நீட்டி இலஞ்சம் வாங்கலாமா?' என்று கேட்க நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை.
அப்போது நாங்கள் பேசிக் கொண்டு நின்ற இடத்திற்கு அண்மையில் இரண்டு ஆட்டோக்கள் ஒன்றுடன் ஒன்று மோதப்பார்த்து தார்வீதியைத் தேய்த்தபடி கிரீச்சிட்டு நின்றன. ஆட்டோச் சாரதிகள் சட்டென இறங்கி நின்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவே அதைக்கவனிப்பதற்குச் சென்றுவிட்டார் அந்தப் பொலீஸ்காரர்.
இவரிடம் என்ன சாக்குச் சொல்லலாம் என்று யோசித்துப் பார்த்தேன். 'மறந்து விட்டேன்' என்பதைத் தவிர என்ன காரணத்தைச் சொன்னாலும் அது நிஜமில்லை. தவிர 'பொய் சொல்லாதீர்கள்' என்று பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் நானே இந்த பொலீஸ்காரனிடம் பொய் சொல்லி லஞ்சம் கொடுத்துக் கேவலப்படலாமா என்று ஒருகணம் யோசித்துப் பார்த்தேன்.
ஆகக்கூடினால் என்ன நடக்கும். கோட்சுக்குப் போடுவான். என்னுடைய ஞாபக மறதிக்கு விலை ஐயாயிரம் ரூபாய். என் சம்பளத்திலே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு. என்னைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய தொகைதான். அடுத்த மாத கரண்ட் பில், தண்ணீர் பில் அத்தனையும் கண்ணில் வரிசைகட்டி நின்றன. அதேவேளை பொய் சொல்லி லஞ்சம் கொடுத்தாலோ ஒரு ஐநூறு அல்லது ஆயிரத்தோடு போய்விடும்.
'என்ன மாஸ்டர், என்ன நடந்தது.. ஏன் நீங்க இன்சூரன்ஸ் றீனுவல்
பண்ணல்ல..?' ஆட்டோச் சாரதிகளை அனுப்பிவிட்டு திரும்பி வந்ததும் கேட்டார்.
'மறந்திட்டேன்!'
'என்ன..? மறந்திட்டீங்களா.. ஒரு கவர்ண்மென்ட் சேவன்ட் சொல்ற காரணமா இது?'
'ஓமோம், ஒரு கவர்மெண்ட் சேவண்ட்தான். ஆனா அவனுக்கு எத்தனை நம்பர் தெரியுமா? ஐடின்டிக்காட் நம்பர், லைசன்ஸ் நம்பர், பேங்க் எக்கவுண்ட் நம்பர்.. அதுமட்டுமா? எத்தனை டேட்கள்.. டேட் ஓவ் பேர்த், பெஸ்ட் அப்பொயின்ட் மென்ட் டேட்... இங்க்ரிமெண்ட் டேட், இன்சூரன்ஸ் றீனூவல் டேட் இப்பிடி எத்தனையோ திகதிகள்.. இதில எத்தனையை ஞாபகத்தில வச்சிருக்கேலும் சொல்லுங்க.. அதுதான் சில டேட்டுகள் முன்னைப் பின்னவாகிடுது.. மறந்திடுது.. சாஜன் நீங்க என்ன பைன் வேணுமென்டாலும் போடுங்க' என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்துவிட்டு வேறு எங்கோ பார்த்தபடி நின்றிருந்தேன்.
நான் சொல்வதை தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தவர் திடீரென வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்து விட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். ட்ரபிக் பைக்கின் ஸீற்றின் மீது வைத்து எழுதிக்கொண்டிருந்த மற்ற பொலீஸ்காரனும் தலையை உயர்த்தி அவரை ஆச்சரியமாக பார்த்தான்.
' ஜய மல்லி, அற களுபாட்ட நோட்புக் அறந்தென்னகோ'
என்று அவனிடம் சொல்ல அவன் பைக்கிலிருந்து ஒரு நோட்புக்கை எடுத்துக்கொண்டு வந்தான். அதை வாங்கி அதிலுள்ள ஒரு பக்கத்தைத் தேடிக் கிழித்து எடுத்து என்னிடம் காட்டினார். அதிலே என்னுடைய பைக் நம்பர் லைசன்ஸ் இலக்கம் போன்ற விபரங்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதை என் கண்முன்னாலேயே சுக்குநூறாக கிழித்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியினுள் வீசிவிட்டு,
'சரி மாஸ்டர், நாளைக்கு திங்கள் கிழமை.. உடன போய் இன்சூரன்ஸ் எடுக்கணும் சரிதானே..? நீங்க போங்க' என்றார். நான் நம்ப முடியாமல்
அங்கேயே நின்றிருந்தேன்.
'இல்ல, நீங்க போங்க.. பைன் இல்லே' என்றார் மீண்டும் கனிவாக. நான் நன்றி சொல்லிக் கொண்டு என் பைக்கை நோக்கிச் செல்லும்போது,
' மல்லி, நான் என்ட ஸேர்விஸ்ல இப்பிடி ஒரு காரணம் சொன்ன ஆளைக் கண்டதில்ல தெரியுமா' என்று காலையிலே என்னைப் பிடித்த பொலீஸ்காரனிடம் அவர் சிங்களத்தில் சொல்லிக்கொண்டிருப்பது காதில் லேசாக விழுந்தது.
-மூதூர் மொகமட் ராபி
26.08.2013
26.08.2013