0 பல மாதங்களுக்குப் பிறகு உங்கள் பேட்டியைத் தொடருகின்றேன். இத்தனை கால இடைவெளி எதற்கு என்று கூறுங்கள்.
பல்கலைக்கழகத்தில் நான் பயிலும் கற்கை நெறிக்குரிய பரீட்சைகளுக்காக ஆயத்தப்படுத்த வேண்டியிருந்தேன்.
0 முன்புபோல ஜாஃப்னா முஸ்லீம், கிண்ணியா நெற் போன்ற இணையத்தளங்களிலே இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் ஆக்கங்களுக்கு விமர்சனங்கள் இடுகின்றீர்களா? உங்கள் விமர்சனங்களுக்கு இப்போதும் எதிர்வினைகள் வருகின்றனவா?
கிண்ணியா நெற் என்ன காரணமோ தெரியவில்லை தற்போது மிகவும் மெதுவாக செயற்படுகின்றது. செய்திகளைப் புதுப்பிப்பதற்கு கூட வாரக்கணக்கில் எடுத்துக்கொள்கின்றார்கள்.
ஜாஃப்னாமுஸ்லீம் தளத்தில் என்னுடைய பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆயினும், தங்களுக்குச் சிக்கலாக கருதும் தர்க்கரீதியான பின்னூட்டங்களை இடம்பெற்றுவிடாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்கள். அதன் மூலமாக எனது கருத்துகளுடன் கருத்துக்களால் மோதமுடியாதவர்களையும் அல்லது அவ்வாறு மோதினாலும் மூக்குடைபடக்கூடியவர்களையும் காப்பதற்கு நினைக்கின்றார்கள் போலும்.
தங்களை தைரியமானவர்களாக காண்பித்துக்கொள்ளும் ஆண்கள், நேர்மையானதும் நடுநிலையானதும் மிகுந்த நாகரீகமான வார்த்தையுடனும் புரியப்படும் ஒரு பெண்ணின் விமர்சனத்துக்கு ஏன் பயப்பட வேண்டும்?
பெண்பிள்ளைகளென்றால் இளக்காரமாகப் பார்க்கும் ஆணாதிக்கப் புத்தியுடையவர்கள்தான் நேர்மையான விமர்சனங்களை இருட்டடிப்புச் செய்ய முனைவார்கள்.
0 தற்போதைய அரசியல் சூழ்நிலைபற்றி உங்கள் பார்வை எவ்வாறுள்ளது?
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் சிந்திக்கத்தெரிந்த ஒரு சாதாரண குடிமகளின் யோக்கியமான பார்வைதான் என்னுடையதும்.
கடந்த காலங்களில் அநீதி இழைத்தவர்களுக்குரிய தண்டனைகள் வழங்கப்படுவதோடு பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதமாக சிறுபான்மை மக்கள் கௌரவமாக வாழத்தக்கதான அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும்.
0 இறைச்சிக்காக மாடு அறுக்கப்படுவது பற்றிய கண்ணேட்டம்..?
இந்த விடயத்திலும் ஏற்கனவே பலர் குறிப்பிட்ட கருத்துகளையே நான் வழிமொழிய வேண்டியுள்ளது. உணவுக்காக உயிர்களை அல்லது விலங்குகளைக் கொல்லக்கூடாது என்ற ரீதியில்தான் மாடுகளை அறுப்பது விமர்சிக்கப்படுகின்றது என்றால் நாம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் நியாயம்.
தாவரங்கள் கூட உயிருள்ளவைதானே. விலங்குகளில் மீன்கள் முதல்கொண்டு எதையுமே உண்ண முடியாது. ஆயினும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் இவ்விடயம் பெரிதாக்கப்படுகின்றது என்றால் சிறிது காலத்திற்கு நாமும் அதற்கு ஒத்துழைப்பதுதான் விவேகமானது. கட்டாக்காலி மாடுகள் பெருகியதும் அவர்களே அழைத்து வந்து இறைச்சிக்கடை அமைத்துத் தருவார்கள்.
0 அண்மைக்காலமாக சுன்னி மற்றும் ஷியாக்கள் விடயம் பெரிதாகப் பேசப்படுகின்றதே..?
'மதநம்பிக்கை' என்ற சொல்லை ஒருதடவை உச்சரித்துப் பாருங்கள்!
மதங்கள் அனைத்துமே நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானவையே. மொழிகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தனவோ அவ்வாறுதான் மதங்களும் காலத்துக்கு காலம் அவற்றைப் பின்பற்றுபவர்களாலும் அவற்றோடு முரண்படுபவர்களாலும் மாற்றங்களுக்குட்பட்டே வந்திருக்கின்றன.
ஒரு மதச்சடங்கை எடுத்துக்கொண்டால் கூட இதுதான் சரி என்று அடித்துக் கூறுபவர்களும் இல்லை என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவரவர் நம்பிக்கைகள் அவரவருக்கு உயர்வானதாகத் தோன்றுவது இயல்பே. ஒருகூட்டத்தினருக்கு உத்தமமாகத் தென்படும் விடயம் பிறிதொரு கூட்டத்திற்கு அவ்வாறு தோன்றாதிருக்கவும் கூடும்.
இவை முற்றிலும் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள். அவரவர் நம்பிக்கைகளை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் இருக்கும் சுதந்திரத்தை அனுமதிப்பதே நல்லது என்று தோன்றுகின்றது.
0 அப்படி அனுமதிப்போமானால் மக்கள் ஆளுக்கொரு மதப்பிரிவுகளோடு புறப்பட்டு வந்துவிடுவார்களே?
இறைவன் தன்னுடைய உண்மையான மதத்தை பாதுகாப்பதற்கு வலுவுள்ளவன். எத்தனை பிரிவுகள் கிளம்பினாலும் அவற்றுள் உண்மையான மார்க்கத்தைத்தானே இறைவன் போஷிப்பான்..? ஏனையவற்றுக்கு அதாவது மாற்றுப் பிரிவுகளுக்கு இறைவனுடைய ஆதரவு இருக்காதல்லவா..?
பிரபலமான அரசியல் கட்சிகளில் இருந்து பிரிந்து வருபவர்கள், தமது ஆதாயத்துக்காக ஏறத்தாழ அதேபெயருடன் கூடிய மாற்றுக்கட்சிகளை உருவாக்குவதுபோல மதப்பிரிவுகளையும் உருவாக்கி விடுவார்களோ என்று அச்சமடைய வேண்டியளவுக்குத்தான் இன்றுள்ள ஆன்மீக நிலைமை இருக்கின்றது பார்த்தீர்களா..?
(தொடரும்)