Saturday, April 26, 2014

தோப்பில் முகம்மது மீரான் :







மிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று, மீனாக்ஷ¢புரம் என்ற கிராமத்தின்  பிற்படுத்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக முஸ்லீம் மதத்திற்கு மாறியது. ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும், இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் பத்திரிகைகளிலும் மற்ற மேடைகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இப்போது எத்தனையோ வருடங்கள், கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் கடந்து விட்டது. அவர்களுக்கு வாக்குறுதி தரப்பட்ட சமத்துவமும், சமநீதியும் அந்த ஏழை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களுக்கு கிடைத்துள்ளதா, மற்ற முஸ்லீம்களுடன் அவர்கள் சமமாக கருதப்படுகிறார்களா, வாழ்கிறார்களா என்பது தெரியாது. விசாரித்து அறியப்பட வேண்டிய விஷயம் இது.


இதை ஒட்டி நடந்த இன்னொரு சம்பவம், ஒரு விதத்தில் இதுவும் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் சம்பவம், ஒரு இலக்கிய நிகழ்ச்சி. ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை என்னும் தலைப்பில் வந்த தோப்பில் முகம்மது மீரானின் நாவல். அந்த கடலோரத்து கிராமத்தின் பெயர் தேங்காய்ப் பட்டினம். மீனாட்சிபுரத்திலிருந்து அப்படி ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை அது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களே பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்த நாவல் வெளிவந்தது 1988-ம் வருடம். அதன் பிறகு தேங்காய்ப்பட்டினம் என்ற தான் பிறந்த சொந்த கிராமத்தை இன்றைய தமிழ் இலக்கியத்தில் தேங்காய்ப்பட்டினம் மிகவும் அறியப்பட்ட, புகழ்பெற்ற கிராமமாக ஆக்கிவிட்டார் தோப்பில் முகம்மது மீரான். ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினைப் போல, கா·ப்காவின் ப்ராக் போல, ஏன் இன்னும் அருகே ஆர்.கே நாராயணின் மால்குடி போல, தேங்காய்ப் பட்டினம் தமிழ் இலக்கியத்தில் தானும் இடம் பெற்றுவிட்டது இந்த கிராமம். கிட்டத்தட்ட ஒரு மூன்று தலைமுறைக்கு அந்த கிராமத்தில் வாழ்ந்த மனிதர்கள் பலரை, அந்த கிராமத்தின் சந்து பொந்துகள், மசூதி, இன்னும் பல் முக்கிய இடங்கள் எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் தெரியும்.



இந்த கிராமத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் தாங்கள் அசலான அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக்கும் என்பதில் பெருமை கொள்பவர்கள். "ஏன் பெருமைப்படமட்டோம்?. நாங்கள் என்ன மற்றவர்கள் போல ஹிந்துவாக இருந்த மதம் மாறியவர்களா என்ன? எங்கள் முன்னோர்கள் சௌதி அரேபியாவிலிருந்து வந்து இங்கு குடியேறிவர்கள் அல்லவா? அது இன்று நேற்று நடந்த விஷயமா என்ன? அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் சரித்திரமும் உண்டு, அது 9- நூற்றாண்டிலிருந்து தொடங்கும் சரித்திரமாக்கும்" இன்றும் அந்த பிரக்ஞையுடன் தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு மாதிரியான மலையாளமும் தமிழும் கலந்த, நிறைய அரபுச் சொற்கள் தூவிய மொழி பேசுகிறார்கள். இது தான் மீரானின் நாவல்கள் பேசும் மொழியுமாகும். மீரானின் முதல் நாவல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் வாழ்ந்த தன் கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சொல்கிறது. இந்த வாழ்க்கையும் மனிதர்களும், மீரான் தன் பெற்றோர்கள், குடும்பத்து முதியோர்களிடமிருந்து கேட்டறிந்தது. அந்த வாழ்க்கை, வெளிஉலகை ஒதுக்கிய, தமக்குள் சுருண்டு கொண்ட வாழ்க்கை. தங்கள் கிராமத்து, அல்லது அந்த பக்கத்து முஸ்லீம் மத குருமார்கள் சொல்படி தான் அனேகமாக வாழ்க்கை முழுதையும் அமைத்துக் கொண்டவர்கள். அரபு மொழி தவிர வேறு மொழி கற்பதோ, மதரஸாவை விட்டு வேறு எந்த கல்வியையும் கற்பதோ, பத்திரிகைகள் படிப்பதோ, வகுப்பின் கரும்பலகையில் அரபு மொழியும் குரானும் தவிர வேறு மலையாளம் அல்லது தமிழ் மொழிகளில் எழுதுவதோ கற்பதோ, தலையை மொட்டை அடித்துக் கொள்ளாதிருப்பதோ, இப்படி யான கூடும் கூடாதுகளின் பட்டியல் மிக நீண்டு செல்லும் - இந்த எல்லா 'கூடாது' களும் ஹராம் தான். அதாவது முஸ்லீம் மதத்தில் பகிஷ்கரிக்கப்பட்டவை. அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் அடி மனதிலேயே இந்த 'கூடாது' கள் எல்லாம் கல்லில் செதுக்கப்பட்டது போல பொறிக்கப்பட்டுள்ளவை. ஜின்னா என்று ஒருவர் பெயரை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர் ஒரு 'கா·பிர்' தான். ஏனெனில் அவர் அணிவது மேல்நாட்டு உடைகளை அல்லவா? பேசுவது ஆங்கிலம் அல்லவா? தலையில் கிராப் அல்லவா வைத்துக்கொண்டிருக்கிறார்? அவர் மசூதிக்கு தொழுகைக்கும் போவதில்லை, Quran படிப்பதில்லை என்பதை அவர்கள் அறிவார்களா இல்லையா என்பதை மீரான் சொல்லவில்லை.


மீரானின் துறைமுகம் என்னும் இரண்டாவது நாவல் 1940களில் அம்மக்களது வாழ்க்கையைச் சொல்கிறது. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு. இதில் ஏழை மீனவமக்கள் தூத்துக்குடி நகரத்திலிருக்கும் இடைத் தரகர்களின் பிடியில் வதைபடும் வாழ்க்கையச் சுற்றி எழுதியிருக்கிறார் மீரான். தூத்துக்குடி இடைத்தரகர்களுக்கும் மேலே இலங்கையிலிருக்கும் மொத்த வியாபாரிகள் எஜமானர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் முஸ்லீம்கள் தான். அந்த மொத்த வியாபாரிகள் இதே கிராமத்திலிருந்து சென்றவர்கள் தான். வியாபாரம் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் வாய் வார்த்தைகளில்தான் நடைபெறுகிறது. . இலங்கையில் இருக்கும் பண முதலைகள் கிராமத்து மக்களின் மதிப்பையும் மரியாதையையும் மிகப் பெற்றவர்கள். காரணம் அந்த கிராமத்து மசூதிக்கு அவர்கள் நிறைய பணம் உதவி செய்கிறர்கள். அவர்கள் ஹஜ் யாத்திரை முடித்து கிராமத்துக்கு திரும்பும் போது பெரிய ஆரவாரத்தோடு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கிராமத்து இளம் வாலிபர்கள் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அவரது ஆதர்சத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் முஸ்லீம் மதத்திற்கு எதிரானதென கண்டனம் செய்யப்பட்டு, அதன் ஆசிரியர் கிராமத்திலிருந்தே விரட்டப்பட்டுவிடுகிறார். ஒரு நாயர் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்லும் மாணவனின் குடும்பம் ஜாதி பிரஷ்டம் செய்யப்படுகிறது. அந்தப் பையனின் பெற்றோரோ, கா·பிராகிவிட்ட தங்கள் பையன் காரணமாக தமக்கு நேர்ந்த சாபம் தான் இந்த ஜாதி பிரஷ்டம் என்று கருதுகிறது.
அந்த கிரமத்து ஹாஜி (முஸ்லீம் மத குரு) இப்போது ஜின்னாவை ஒரளவுக்கு ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார். முழுமையாக அல்ல முஸ்லீமகளின் தரப்பை வாதிட ஒருவர் வேண்டுமே. காந்திதான் ஹிந்துக்களின் தலைவராகிவிட்டார். அவருக்கு எதிராக முஸ்லீம்கள் ஒருவரை நிறுத்த வேண்டாமா? மத குருக்களும், பெருந்தனக்காரர்களும் ஒன்றும் அறியாத கபடமற்ற எளிய மக்களை தம் இஷ்டத்திற்கு பணிய வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அந்த எளிய மக்கள் மதத்தின் பேரால் சொல்லப்படும் எந்த கட்டளைக்கும் சுணங்காது, கேள்வி எழுப்பாது அடி பணியப் பழக்கப் படுத்தப் பட்டவர்கள். கிராமத்து மசூதியின் காப்பாளரான அஹ்மது கன்னு பெரும் பணக்காரர். அந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ள, தன்னை கடவுளின் தூதனாக கற்பிதம் செய்துகொள்ளும், ஒரு போலி மதகுருவை தன் வீட்டில் தங்க வைத்து உபசரணைகள் செய்கிறார். அவர் அந்த கிராமத்துக்குத் தப்பி ஓடி வந்துள்ள ஒரு பிசாசை பிடித்து ஒடு போத்தலுக்குள் அடைக்கவேண்டும் என்ற திட்டத்தோடு வந்துள்ளதாக செய்தி பரவவிட்டுள்ளார். கிராமத்து மக்களின் எந்த நோய் நொடியையும், துக்கத்தையும் போக்கிவிடுவார். அவர் தங்கியிருக்கும் இடம் சென்று கையில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரோடு சென்று வரிசையாக அவர் வருகைக்காக காத்திருப்பார்கள் ஜனங்கள். அவர் அந்தக் கிண்ணத்தில் துப்புவதே அவர் அவர்களை ஆசீர்வத்தித்ததாகும். அவர் துப்பிய நீரை அருந்தினால் அவர்கள் குறைகள் தீரும். அவர் அந்த கிராமத்தில் தங்கி இருக்கும் வரை கிராமத்து மக்கள் தம் குடும்பத்து இளம் பெண் ஒருத்தியை அவருடைய சுகத்திற்கு அனுப்பி வைத்தாலே தாங்கள் பெரும் பாக்கியம் செய்துள்ளதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அஹ்மது கன்னுவின் வீட்டுப் பெண் ஒருத்தியையே அனுப்பி வைக்கச் சொன்ன போது தான் அஹ்மது கன்னுவுக்கு கண்திறக்கிறது, இந்த ஆள் செய்து வந்துள்ளது ஒரு பெரும்
மோசடி என்று.




கூனன் தோப்பு என்னும் நாவல் இரண்டு கிராமங்களிடையே நடந்த மதக்கலவரத்தைப் பற்றியது. ஒரு நதியின் எதிரும் புதிருமான கரைகளில் இரண்டு கிராமங்கள். இரண்டு கிராமங்களிலும் இரு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். இரண்டு கிராமங்களிலும் அவரவருக்கு உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் சரி, எங்கும் காணப்படும், திருடர்கள், சண்டியர்கள், தம்மை ரோமியோக்களாக நினைத்துக் கொண்டு திரியும் வாலிபர்கள், நதியில் குளிக்கும் பெண்களைப் பார்த்துக் கண்ணடிக்கவே தாமும் குளிக்க வரும் காதலர்கள் கிட்டத்தட்ட ஒரே விகிதாசாரத்தில் இரண்டு கிராமங்களிலும் உண்டு. அத்தோடு கோழி திருடுபவர்களும் உண்டு. எல்லா கிராமங்களிலும் நடக்கும் இந்த கோழித்திருட்டுதான் இந்த இரண்டு கிராமங்களிடையே மதக்கலவரம் வெடிக்கவும் காரணமாகிறது. கோழி திருடியவன் ஒரு கிராமத்து முஸ்லீம். கோழி இன்னொரு கிராமத்து கிறிஸ்தவப் பெண் ஒருத்திக்குச் சொந்தமானது. அந்த கிறிஸ்தவப் பெண்ணுக்கு காதலன் ஒரு சண்டியர். அவன் தன் வீரத்தைக் காதலிக்குக் காட்டும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? திருடிய எதிர் கிராமத்து முஸ்லீமை நன்றாக விளாசிவிட்டு வருகிறான். இது சாதாரண ஒரு கோழித்திருட்டை மிகச் சிக்கலான மதமோதலாக்கி விடுகிறது. பின் என்ன! இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியுமா? முஸ்லீம் சமூக கௌரவம் என்ன ஆவது? ஒருவருக்கொருவர் பதிலடி கொடுக்க சிக்கல் அதிகமாகிறது. காயம் பட்ட மத கௌரவம், தனி மனித குரோதம், பழி வாங்கல், நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா என்ற ஆவேச கொந்தளிப்புகள் எல்லாம் பூதாகாரமான மதக்கலவரமாகிறது. ஒரு ஹாஜி அவமானப்படுத்தப்பட்டால் சும்மா இருக்கமுடியுமா என்ன? அது மதத்திற்கே, கிராமத்திற்கே, அந்த சமூகத்திற்கே கேவலம் இல்லையா? இரண்டு கிராமங்களிலும் முடிவுறாது நீண்டு செல்லும் பகைமை, ரத்தம் சிந்த, வீடுகள் நாசமாக, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதில் முனைப்பு கொள்கின்றனர்.


மீரானது நான்காவதும், இப்போதைக்கு கடைசியுமான நாவல் சாய்வு நாற்காலி ஒரு முஸ்லீம் குடும்பத்து இரண்டு நூற்றாண்டுக்கு நீளும் சரித்திரத்தை முன் வைக்கிறது. பாவுரீன் பிள்ளை என்னும் ஒரு முஸ்லீம் சிப்பாயின் வீர தீரச் செயல்களோடு தொடங்குகிறது. திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் உயிரையும் அவரது ராஜ்யத்தையும் டச்சுக்காரகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீரச் செயலுக்கு மகாராஜ மகிழ்ச்சியடைந்து ஒரு கிராமம், ஒரு வாள் பின் அரண்மனை போன்ற ஒரு பெரிய வீடு, இத்தனையும் பரிசாக அளிக்கிறார். அந்த சிப்பாயின் சந்ததியார்களின் கதையைச் சொல்லி வரும் நாவல் கடைசியில் முஸ்தபா கன்னுவைச் சுற்றிய் நிகழ்வுகளை அதிகம் விஸ்தரிக்கிறது. முஸ்தபா கன்னு, அதிகம் முதல் நாவலின் அஹ்மது கன்னுவைப் போன்ற மனிதன். எல்லா விஷயங்களிலும். பண்டைக்கால பெருமை, கடந்து விட்ட பழங்காலத்திலேயே இன்னும் வாழ்வதான நினைப்புகள். குருட்டு நம்பிக்கைகள், இறுகி கெட்டித்துப் போன மதப் பிடிப்பு, தன் சுற்றியுள்ள சீரழியும் பண்டைச் சின்னங்களில் கர்வம் - எல்லாம். இந்த மாதிரியான பண்டைப் பெருமைகளில் வாழும், நிகழ்காலத்தைப் பற்றிய நினைப்பே இல்லாத மனிதர்களை, அந்த அவலத்தை சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர், ஆடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் சாதுக்கள். அப்பாவிகள். முஸ்தபா கண்ணு கொடுமை மிக்க முரடன். தன்னைச் சுற்றியிருக்கும் உறவினர்களையும் மற்றோரையும் அவன் படுத்தும் பாடு கொடூரம் நிறைந்தது. அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, சமூகம், காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்து போனது. நாறி அழுகி வருவது. தன்னுள் சுருங்கி, மூட மதப் பழக்கங்களில் இறுகிப் போனது. தன் குடும்பம், கிராமம், மத சமுதாயம் இதற்கு வெளியே உள்ள உலகைக் காண மறுப்பது.


மீரானின் எல்லா எழுத்துக்களிலும் பதிவாகியிருப்பது இருண்டு போன முஸ்லீம் மத அதிகாரத்தின் காலடியில் வதைபடும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை. பதிவாகியுள்ள காலம் மூன்று அல்லது அதற்கு மேற்கொண்ட தலைமுறைகள் வாழ்ந்த காலம். பழமையாகிப்போன மத அதிகாரம் மாறாதிருப்பதில் சுய நலம் காண்பது. அதே சமயம் மீரானின் நாவல்கள் அவர் அறிந்த மனிதர்களின் நினைவில் பதிந்து விட்ட முஸ்லீம் சமுதாயத்தின் வரலாற்றையும் கதையாக நமக்குச் சொல்கின்றன. தான் எந்த கட்டத்திலும் சம்பவங்களையோ மனிதர்களையோ கற்பனையாகச் சித்தரித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவில்லை என்கிறார். தான் அறிந்த, கேட்ட வரலாற்றையும், சம்பவங்களையும் மனிதர்களையும் தான் தன் நாவல்களில் உலவவிட்டுள்ளதாகச் சொல்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க சுய விமர்சனமாகும். அவர் எதையும் மறைக்கவில்லை. பூசி மெழுகவில்லை. ஒரு சுயவிமர்சனமாக அவர் எழுத்து கூர்மையானது. மன்னிப்புகளும் சமாதானங்களும் இல்லாதது. ஒன்றைச் சொல்ல வேண்டும். இத்தகைய, பக்ஷபாதமற்ற சுயமதிப்பீடு, சுய விமர்சனம், இன்றைய தமிழ் எழுத்தில் காணப்படாத்து. இன்றைய தமிழ் ஹிந்து சமூகத்தில் காணும் ஆயிரம் ஆயிரம் சாதிப் பிரிவினைகளும், அது விளைவிக்கும் சாதிப் பூசல்களும், சுய சாதிப் பெருமைகளும், சாதி வெறியும், தன் சாதி அடையாளங்களைப் பாதுகாக்கும் உற்சாகமும், அதே சமயம் மற்ற சாதியினருடன் எந்த சமத்துவத்தையும் விரும்பாத சகிப்பின்மையும், சுய விமர்சனத்திற்கும் சுய மதிப்பீடுகளுக்கும் ஒரு வளம் நிறைந்த களமாகும். ஆனால், சமூக நீதி பேசும் தலைமைகள், சாதி ஒழிப்பு பற்றி பேசும் தலைமைகள் சுய விமர்சனத்தைப்பற்றியே சிந்திக்காதவை.



இன்றைய தமிழ் நாட்டின் ஹிந்து சமுதாயத்தின் சாதிகள் தம்மிடையேயிருந்து ஒரு மீரான் போன்ற எழுத்தாளர், தம் சமூக, சாதி சித்திரத்தை பக்ஷபாதமின்றி பதிவு செய்யும் ஒரு எழுத்தாளர் எழுவதை சற்றேனும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி ஒரு சமூக விமர்சனம் பிராமணர்களைச் சாடுவதற்கு எல்லோருக்கும் நிறைந்த சுதந்திரமும் வரவேற்பும் உண்டு. ஆனால் யாரும் மற்ற சாதியனரைப் பற்றி ஏதும் சொல்லிவிட முடியாது. சொல்லித் தப்பிவிடவும் முடியாது. சாதி ஒழிப்பும், அந்த கோஷத்தில் சாதி விமர்சனமும் ஒரே ஒரு சாதிக்கு எதிராகத் தான், பிராமணர்களுக்கு எதிராகத்தான் எழுத அனுமதி உண்டு. தப்பித் தவறி ஒரு சின்ன குறிப்பு வெளிவந்துவிட்டால், அந்த எழுத்தாளன் அத்தோடு தொலைந்தான். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் சுஜாதா எழுதி வந்த சரித்திரத் தொடர்கதையில் தேவரோ நாயக்கரோ ஒரு பாத்திரத்தின் குணசித்திரம் அந்த ஜாதியினருக்கு விரும்பும் வகையில் இல்லை. அந்த ஜாதியில் எல்லோரும் என்ன சொக்கத் தங்கங்களா? ஒரே புனித வார்ப்பா? எல்லா குணச்சித்திரங்களும் எல்லா சாதி மனிதர்களிலும் இருக்கத் தானே செய்யும். ஒரு சரித்திரக் கதையில் அந்த சாதிக்காரன் கொஞ்சம் மாற்றுக் குறைந்து விடக்கூடாது. குமுதம் பத்திரிகை இதழ்கள் ஆங்காங்கே குவித்து எரிக்கப்பட்டன. குமுதம் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது. கலவரங்கள், கண்டன ஊர்வலங்கள் இத்யாதி, இத்யாதி. கடைசியில் குமுதம் நிர்வாகிகள் மன்னிப்புக் கேட்டனர். அந்த தொடரும் உடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுஜாதா தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின் அவர் மிக நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதில் முனைப்பாயிருக்கிறார். இது போன்ற எந்த வம்புக்கும் போவதில்லை.


ஆனால், எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வெளிவரத்தொடங்கிய தலித் எழுத்துக்களில் தான் தலித் சமூகம் தன் சமூகத்தில் உள்ள பிளவுகளையும் தன் தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்குள்ளேயே கூட நிலவும் சாதிப்பிரிவுகளையும் வீண் சாதி வெறியையும் வெளிப்படையாக முன் வைக்கப்படுவதைக் காண்கிறோம். இந்த சுய எள்ளல்கள், விமர்சனங்கள் பிரசுரமாகின்றன. தலித் சமூகத்தினர் எவரும் இதற்குக் கண்டனக் குரல் எழுப்பவில்லை. வீட்டுக்குள் இருக்கும் அழுக்கை ஏன் வெளியில் மற்றோர் பார்க்கக் கொட்டுகிறாய் என்று எந்த தலித்தும் சீறவில்லை. ஆனால் தலித் இலக்கியம் எப்படி எழுதப்படவேண்டும், என்று சித்தாந்தக் கட்டுமானம் தரும் சித்தாந்திகள் தான் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். அவர்கள் கட்டமைத்துள்ள சித்தாந்த விதி, தலித்துகளை வெறி கொண்டு தாக்குவது நாயக்கர்களும், தேவர்களுமானாலும், தலித் இலக்கியம் பிராமணர்களைத் தான் தம் எதிர்ப்புக்கு இலக்காக்க வேண்டும். தம்மையே சுய விமர்சனம் செய்து கொள்வது தம்மக்களையே காட்டிக் கொடுப்பதாகும் என்று சித்தாந்திகள் சொல்கின்றனர்.


இத்தகைய பின்னணியில் சில உண்மை விவரங்களைச் சொல்லலாம். மீரானின் முதல் நாவல், ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை தொடராக பிரசுரமானது, அவர் வட்டாரத்து முஸ்லீம் சமுதாயத்து பத்திரிகயான முஸ்லீம் முரசுவில். அப்போது அதை யாரும் வெளியில் கவனித்ததாகத் தெரியவில்லை. 1988-ல் அது புத்தகமாக வெளிவந்த பிறகு தான் அது ஒரு வணிக வெற்றியாயிற்று. அதுவும் பெரும் அளவில். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அதற்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு, நேஷனல் புக் டிரஸ்டின் எல்லா இந்திய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் ஆதான் பிரதான் திட்டத்தில் அவரது இன்னொரு நாவல் சேர்க்கப்பட்டது. வணிக வெற்றியும் சரி, இலக்கிய அங்கீகாரமும் சரி, மீரானை அவர் சமூகத்தில் ஒரு புகழ் பெற்ற நபராக்கியுள்ளது. இவையெல்லாம் மீரானுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளன. இவ்வளவு வணிக வெற்றியும் இலக்கிய புகழும் முன்னுதாரணமற்றவை.


Salman Rushdiக்கும், Taslima Nasrin னுக்கும், தில்லி ஜாமியா மிலியாவில் ஒரு முஸ்லீம் சரித்திரப் பேராசிரியருக்கும், சீக்கிய வரலாறு பற்றி எழுதிய ஆராய்ச்சிக்காக ஒரு சீக்கிய பேராசிரியருக்கும் என்ன கொடுமைகள், கண்டனங்கள், இழைக்கப்பட்டன என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். ஒரு மிரட்டலில் நம்மூர் சுஜாதா பணிந்து விட்டார். நம்மூர் சமூக நீதிக்காரர்களின், சாதி ஒழிப்பாளரின் இரட்டை நாக்கும், இரட்டை நீதியும் இன்றும் செல்லுபடியாகின்றன, கவர்ச்சிகரமான கோஷங்களில்.
அதே சமயம் சையத் ஷாஹ்புதீன்களும், ஒவைசிகளும், அப்துல்லா புகாரிகளும், பனத் வாலாக்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மீரான் நாவல்களைப் படிக்கக்கூடுமானால்.... என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.


அதே சமயம் நம் மீரானே கூட வரலாற்றில் உறைந்து விட்ட சமாச்சாரங்களைத் தாண்டி, சம காலத்துக்கு வரலாம். அப்போது அவருக்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பழைய சமாசாரங்களுக்கு பொறுமை காட்டி அவரைக் கீர்த்திமானாக்கிய சமுதாயம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அவர் இப்போது எழுதுவதையே நிறுத்தி விட்டாற்போல் தோன்றுகிறது. ஆபத்துக்கள் பயமுறுத்துகின்றனவோ என்னவோ. ஹெச் ஜி. ரசூலுக்கு நடந்தது அவரை எச்சரிக்கையோடு இருக்கச் செய்திருக்கலாம். அதே சமயம் நாம் என்ன வாழ்ந்தோம் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்காது எழுதிய மீரான் சௌக்கியமாக திருநெல்வேலியில் வாழ்கிறார். முஸ்லீம் மக்களிடையே ஒரு கௌரவம் மிக்க பிரதிநிதியாக. அதே காரியத்தை மிகச் சின்ன அளவில் ஒரு வரலாற்றுத் தொடர்கதையின் ஒரு பாத்திரத்தின் சித்தரிப்பைக் கூட நம்மால் சகித்துக் கொள்ளமுடியவில்லையே. எந்த முஸ்லீம் கலவரக் கூட்டம் முஸ்லீம் முரசை சுற்றி வளைத்துக் கொண்டு அதன் அலுவலகத்தை சூறையாடியது?



- வெங்கட் சாமினாதன்


Thanks : Azhiyachudar