Monday, July 14, 2014

ஷியா மசூதிகளை இடிக்கும் சன்னி வாகாபியிஸம்


டக்கு இராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும், வழிபாட்டுத் தர்காக்களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடிமருந்துகளை வைத்து இவற்றை தகர்த்தெறிந்து அப்படையினர் முன்னேறி வருகின்றனர். வடக்கு மாகாணமான நினேவெஹ்-ல் உள்ள மொசூல், டல் அஃபர் ஆகிய நகரங்களில் இத்தகைய வழிபாட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.


சிரியாவிலும், இராக்கிலும் சன்னி பிரிவினர் வாழும் பகுதிகளை இணைத்து சன்னி இசுலாமிய நாடு ஒன்றை பிரகடனப்படுத்த முயன்று வருகிறார்கள் இந்த அடிப்படைவாதிகள். இவர்கள் ஷியா பிரிவினரை உருவ வழிபாட்டாளர்கள் என்றும், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும் வகாபிச கடுங்கோட்பாட்டு அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றனர். அந்த காஃபிர்களின் வழிபாட்டு ஸ்தலங்களை இடிப்பது தமது கடமை என்றும் கூறிக்கொள்கின்றனர்.


அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையில் இயங்கி வரும் இந்த வகாபிச பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களால் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதும், ஆயிரக்கணக்கில் அகதிகளாக வெளியேறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தாங்கள் அறிவித்துள்ள தனிநாட்டில் ஷாரியத் சட்டப்படி நடைபெறும் இசுலாமிய அரசை (கிலாஃபத்) நிறுவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவின் கூலிப்படையாக இவர்கள் செயல்பட்டு வந்தனர். ஜோர்டானில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்ட இவர்களுக்கு சவுதி, கத்தார், அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன. சிரியாவில் அப்போது இயங்கி வந்த இன்னொரு அமெரிக்க கூலிப்படை இசுலாமிய அடிப்படைவாத அமைப்பான அல் நுஸ்ரா வுடன் இணைந்து தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு துவங்கப்பட்டது.


மசூதி இடிப்புமேற்கத்திய உலகைப் பொறுத்தவரை, சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடியபோது விடுதலைப் போராளிகளாக காட்சியளித்த இவர்கள் இப்போது இராக்கில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். எண்ணெய் வளம்மிக்க மேற்காசிய பிராந்தியம் முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மத, இன மோதல்களை உருவாக்குவதும், பதற்ற நிலையை நீடித்திருக்கச் செய்வதும் அமெரிக்காவின் உத்தியாகவே இருக்கிறது.


சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரில் தன் சார்பில் போரிடுவதற்கு வகாபிய குழுக்களை உருவாக்கியது அமெரிக்காதான். சதாம், பின்லாடன் என அமெரிக்கா உருவாக்கி ஆதரித்த நபர்கள் பிறகு அமெரிக்காவிற்கு எதிராக மாறியதும் நடைபெற்றது. கச்சா எண்ணெய் சந்தையை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்தவர்கள் பின்னர் பிரச்சினைக்குரியவர்களாக மாறியதுதான் பிரச்சனைக்கு காரணம். இப்போதும் இராக்கில் ஆட்சியில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட ஷியா அரசை காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்த தான் பாடுபடுவதாக அமெரிக்கா சொல்வது ஏமாற்றுதானே தவிர வேறல்ல. முன்னர் சதாமின் ஆட்சியில் அமெரிக்காவின் சார்பில் இரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்துமாறு விடப்பட்டு இராக் பத்தாண்டு காலம் சின்னாபின்னமாக்கப்பட்டது; சதாம் ஆட்சியில் ஷியாக்களுடன், குர்துக்களும், கம்யூனிஸ்டுகளும் பத்து லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர்.


மறுபுறம் இசுலாமிய சர்வதேசியம் என்ற கற்பனையான தீர்வை முன்வைக்கும் சன்னி மார்க்க தீவிரவாதிகள் ஷியா பிரிவினரையும், சிறுபான்மை குர்துக்களையும் கொன்றொழிப்பதில்தான் தமது சர்வதேசியத்தை சாதிக்க விரும்புகிறார்கள். மையவாத இசுலாமிய மதப் பிரிவான சன்னி மார்க்கத்தினர் ஷியா பிரிவினரையோ, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் சூபி பிரிவினரையோ ஏற்றுக்கொள்வதில்லை.


மசூதி இடிப்பு


சோவியத் யூனியனின் ஆப்கான் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக இசுலாத்தின் மேன்மையை பிரச்சாரம் செய்த அமெரிக்கா இன்று அதை கட்டோடு வெறுக்க வைக்கும் பிரச்சாரத்தையும் செய்து வருகிறது. இதற்கு பலியான அடிமைகளும், இசுலாமியர்களை தமது சொந்த ஆதிக்கத்தின் பொருட்டு வெறுக்கும் இந்துமதவெறியர், சிங்கள இனவெறியர் போன்றோரும் கூட இத்தகைய அரசியல் பிரச்சினைகள் வரும்போது இசுலாம் எனும் மதமே அடிப்படையில் ஒரு வன்முறையைக் கொண்ட மதம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.  உலகில் இருக்கும் எல்லா மதங்களும் நிலவுகின்ற சமூக பொருளாதார அரசியல் அமைப்பிற்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கும் என்பதை இவர்கள் தமது சொந்த நலன் காரணமாக மறுக்கின்றனர்.


இதனாலேயே இந்தப் பிரச்சினையில் முதல் எதிரியான அமெரிக்காவை எதிர்க்காமல் இசுலாத்தை எதிர்க்கிறோம் என்று கூறி தமது ஏகாதிபத்திய அடிமைத்தனத்தைக் காட்டிக் கொள்கின்றனர். மறுபுறம் இத்தகைய வகாபியச தீவிரவாதிகளை மதப் போராளிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்கள் என்று இசுலாமிய மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் பிடித்திருக்கும் துப்பாக்கியும் இதர ஆயுதங்களும், போராடுவதற்கு உதவும் நிதியும் முன்பு அமெரிக்கா போட்ட பிச்சை என்பதை இவர்கள் மறைக்கின்றனர். இவ்விரண்டு வாதங்களும் தவறு என்பதோடு சாராம்சத்தில் இரண்டுமே அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலனுக்கு சேவை செய்கின்றன.
தங்களை கடத்திச் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ் படையினர் தனிமனித ஒழுக்கத்தை பேணுபவர்கள், பெண்களை கண்ணியமாக நடத்துபவர்கள் என தற்போது அவர்கள் பிடியிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பியிருக்கும் இந்திய செவிலியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் உண்ணாநோன்பு ஏற்கும் புனித ரமலான் மாத்தில் கூட தங்களுக்கு முறையாக உணவளித்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.


மசூதி இடிப்பு


‘இசுலாம் என்பது உயர்ந்த லட்சியத்துடன் கூடிய மார்க்கம் என்பதற்கு இது நல்ல உதாரணம்’ என்று சில இசுலாமிய மதவாதிகள் பேசி வருகின்றனர். அப்படி பார்த்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் சுவயம்சேவக்கோ, பிரச்சாரக்கோ கூட ஒழுக்கமானவனாக இருக்கும் பட்சத்தில் அவர்களையோ இல்லை இந்துமதத்தையோ ஏற்பதற்கு இசுலாமிய மதவாதிகள் தயாரா? இல்லை “அண்ணன் என்னதான் கொலை, கொள்ளை செய்தாலும் பொம்பள விசயத்தில் யோக்கியமானவர்” என்று சில ரவுடிகள் இருக்கிறார்களே, அவர்களையும் இவர்கள் ஏற்பார்களா?


தனிமனித ஒழுக்கத்தோடு சமூக நடவடிக்கை ஒழுக்கத்தையும் வைத்துதான் ஒரு தனிமனிதனை மதிப்பிட வேண்டும். லஞ்சம், ஊழல் வாங்காமல் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் ஒருவனையும், பாலியல் முறைகேடுகள் எதுவும் செய்யாமல் லஞ்சம் ஊழல் மட்டும் செய்பவனையும் ஏதோ ஒரு நல்லதுக்காக மட்டும் ஆதரிக்க முடியுமா?


ஒருபுறம் சக இசுலாமிய சகோதரனை கொன்று குவித்துக் கொண்டே தம்மிடம் சிறைப்பட்ட பிற மத, நாட்டு செவிலியர்களுக்கு முறையாக உணவு தருவது மட்டும் எப்படி மனிதத் தன்மையுடைய செயலாக இருக்க முடியும்? தமது பெண்களை கட்டாயம் புர்கா அணிந்தாக வேண்டும், வேலைக்கு போகக் கூடாது, படிக்க கூடாது, வீட்டு வேலை மட்டும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மீறுபவர்களை தண்டிக்கலாம், ஷரியத் சட்டப்படி அப்படித்தான் செய்ய வேண்டும் என்பவர்களை எப்படி வரவேற்க முடியும்? ஒரு சிலர் இவையெல்லாம் இசுலாத்தைப் பற்றி தவறான புரிதல்கள், உண்மையான இசுலாம் இது அல்ல என்று வாதிடுகிறார்கள். உண்மையான இசுலாம் எது, குர் ஆனுக்கு அத்தாரிட்டி யார் என்பதிலேயே ஒற்றுமையோ உலக அங்கீகாரமோ இல்லாத போது இதை பேசி என்ன பயன்?


mosque-3


தாம் பேசுவதுதான் இசுலாம் என்று அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட சன்னி வகாபியிசம்தான் இன்று சக இசுலாமிய சகோதர்களை அவர்கள் ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காக கொன்று வருகிறது. அவர்கள் வழிபடும் தலங்களை இடித்தும் வருகிறது. பாகிஸ்தானில் இம்மக்கள் படும் துயர் என்பது பாரிய அவலத்தை கொண்டது. ஷியா பிரிவு மக்கள் கோழைகள், முழுமையாக இசுலாத்தை கடைபிடிக்காதவர்கள் என்றெல்லாம் சன்னி மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.


இதனாலேயே இராக்கில் ஷியா மசூதிகள், தர்காக்கள் இடிக்கப்படுவதை இவர்கள் ஆதரிக்கவும் செய்கின்றனர். இவர்கள் நினைக்கும் இசுலாம்தான் சரி என்று மற்ற இசுலாமிய முறைகளை அழிப்பது சரி என்றால், பார்ப்பனிய ஆதிக்க சாதி வெறியர்கள்  தாம் பின்பற்றும் இந்துமதம்தான் சரி என்று மாட்டுத் தோல் உரிக்கும் தலித்துக்களை கொல்வதும் சரிதானே?


இப்படித்தான் அமெரிக்க ஆசிபெற்ற சன்னி வாகாபியிசம், இசுலாமிய சர்வதேசியம் பேசி இராக்கின் ஷியா பிரிவினரை நாட்டுக்குள்ளேயே கொன்று குவிப்பதுடன் பலரையும் அகதிகளாக்கி வெளியேற்றி வருகிறது. இராக்கை ஷியா, சன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை விரும்பிய அமெரிக்காதான் இதை ஆரம்பத்தில் இருந்து இயக்கி வருகிறது. அமெரிக்காவின் உத்தி மற்றும் நோக்கம் காரணமாக நடக்கும் இந்த உள்நாட்டு சண்டையில் நாம் இருதரப்பினரையும் எதிர்ப்பதே சரியாக இருக்கும்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற அடித்தளங்களில் இருந்துதான் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பை இராக்கில் கட்ட முடியும். அதன்றி இராக் மக்களுக்கு மட்டுமல்ல, வளைகுடா மக்களுக்கும் நிம்மதி இல்லை.

-    கௌதமன் 

Thanks : Vinavu