Thursday, December 8, 2011

வீதிகள்+வாகனங்கள்= உயிர்கள்!நேற்றைய தினம் (2011.12.06)  காலை 7.30 மணியளவில் திருகோணமலை அபயபுர பகுதியில் ஓர் வீதிவிபத்து நிகழ்ந்தது.இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான வகாப் மொகமட் எனும் இளைஞர் பலியாகியுள்ளார்.

அன்றைய தினம் பாடசாலையில் நிகழவிருந்த ஒளிவிழாவில் கலந்து கொள்ளும் முனைப்புடன் தனது பிறப்பிடமான மூதூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு விரைந்து வந்தவர், அனுராதபுரச் சந்தியைத் தாண்டி அபயபுர பகுதியிலுள்ள சுற்றுவட்டத்தை நோக்கி இறங்கிச் செல்லும் சரிவான வீதியில் வைத்து தனக்கு முன்னாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்திருக்கிறார்.


அவ்வேளையில் சிறுமழை காரணமாக நனைந்திருந்த தார் வீதி, மற்றும் கால்நடைச் சாணி காரணமாக வழுக்கி, எதிர்ப்புறமாக வந்த கொண்டிருந்த பயணிகள் பஸ்ஸின் சில்லுக்குள் மாட்டியதன் காரணமாக தலைப்பகுதியில் படுகாயமுற்றதாக பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள்.


உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு  செல்லப்பட்ட போதும் தலையிலும் மூளைப்பகுதியிலும் குருதிப்பெருக்குக் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கின்றார் எனவும்தெரிவிக்கப்பட்டது.


மிக இளம் வயதிலேயே தனது வாழ்வைப் பறிகொடுத்த இந்த ஆசிரியரின் அகால மரணத்தினால் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது அவரது பாடசாலை சக ஆசிரியர்கள் மாணவிகள் அனைவருமே சோகத்திலாழ்ந்திருக்கின்றார்கள்.


வீதி விபத்துகள் என்பது இப்போதெல்லாம் வெகு சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன. விபத்துகள் நிகழ்வதற்கு பல காரணங்களுள்ளன.  வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு, அலட்சியம், தவறான செலுத்துகை, மிதமிஞ்சிய வேகம், சாமர்த்தியமின்மை, மோசமான வாகனப் பராமரிப்பு, வீதிகளின் குறைபாடுகள்... என்று கூறிக்கொண்டு செல்லமுடியும்.


இவற்றிலே, அண்மைக்காலமாக திருகோணமலைப் பகுதியில் நிகழ்ந்துவரும் வீதி விபத்துகளுக்கு வாகனங்கள் பயணிக்கும் பாதைகளின் சீரற்ற நிலைமையே காரணமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


அதிலும் குறிப்பாக 4ம் கட்டை -அனுராதபுரச் சந்தி-அபயபுர- மட்கோ சந்தி ஊடாக நகரை நோக்கிச் வரும் கண்டி வீதியே மிகவும் மோசமான நிலையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரம்ப காலங்களில் மிகவும் மோசமாக இருந்த நிலாவெளி ஊடாக புல்மோட்டை செல்லும் வீதி சீனக்குடா- கிண்ணியா- மூதூர் ஊடாக மட்டக்களப்பு வரை செல்லும் A-15 வீதி ஆகியவை எல்லாம் இப்போது அழகாகச் செப்பனிடப்பட்டுள்ள நிலையில் இருக்கின்றது. திருகோணமலை -அனுராதபுர வீதியும் ஓரளவு நல்ல நிலையில்தான் இருக்கின்றது.ஆனால், திருகோணமலை நகருக்கு அதிகமான வாகனப் போக்குவரத்து நிகழும் கண்டி வீதி மட்டும் குன்றும் குழியுமாகவே இருந்து வருகின்றது.


- 'Mutur' Mohammed Rafi


(தொடரும்)

Tuesday, December 6, 2011

ஆழ்ந்த அனுதாபங்கள்!ன்று 2011.12.06 செவ்வாய் தினம் காலை திருகோணமலை அபயபுர பகுதியில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் அகால மரணமடைந்த திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின்  ஆங்கில ஆசிரியர் ஜனாப். வகாப் மொகமட் (24 வயது ) அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்கள்  மற்றும்  நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்!

வேகத்தால் வந்த வேகம்!புயலாக மாறாத வரை
வாழ்க்கை ஒரு தென்றல்தான்
தென்றலாகச் சுற்றித்திரிந்து 
எல்லோரையும் ஈரத்துவிட்டு கடைசியில்
எம்மனதினை ஓயவைத்தது அப்புயல்!
0
வேகம் நிறைந்த வாழ்க்கையின்
வேகத்தையே முந்தும் உன்செயல்கள்- இன்றோ
வேகம் கூட கேள்விக்குறியாய் மாறி
உன்னை மீண்டும் எதிர்பார்க்கச் செய்கின்றது!
0
வாழ்க்கை எனும் வரைபடத்தை
வேகமாய் வரைந்து திரிந்த நீ 
அந்தக் கொடூர டிசம்பர் ஆறையும்
வேகமாய் கடந்துவிட நினைத்ததாலா 
அதைமட்டும் முன்னேவிட்டு
உன் உயிரின் வேகத்தை ஓயவைத்தாய்?
0
இன்றோ உன் புன்னகை பூத்த வேகத்தையும்
கண்ணீருடன் தொடர்கின்றோம் நாம்
அதுவேகமா வேதனையா
சொல்வதற்குத்தான் நீ இல்லை!


-பிரிவால் துயருறும்

11A மாணவிகள்