Saturday, February 2, 2013

விஸ்வரூபம் பட எதிர்ப்பும் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையும்

 
 

 
 
ண்மைய நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இந்தியத் திரைப்பட நடிகர் கமல் ஹாசன் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த ‘’விஸ்வரூபம்” எனும் திரைப்படம் வெளியிடப்படுவதில் இஸ்லாமியர்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தொடர்பான விடயமும் ஒன்றாகும்.
 
 
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அந்தத் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்குமாறு கோரியதை அடுத்து தமிழக அரசு தடை விதித்தமை, இந்தத் திரைப்படத்தை பெரும்பாலான இஸ்லாமியர் விரும்புகிறார்கள் என கமல் தெரிவித்தமை, விஸ்வரூபம் படத்தைத் தடை செய்யவேண்டாம் என நபிகளாரின் பிறந்த தின வாழ்த்தோடு சேர்த்து இஸ்லாமிய நண்பர்களிடம் பிரபல நடிகர் ரஜனிகாந்த் வேண்டிக்கொண்டமை மற்றும் இலங்கையில் விஸ்வரூபம் பட வெளியீட்டைத் தடை செய்ய தாங்கள் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளதாக அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தினர் தெரிவித்தமை என இந்தத் திரைப்படம் தொடர்பான சேதிகளும் மறைமுக விளம்பரங்களும் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
 
 
இதற்கு முன்னர் முஹம்மது நபி (ஸல்) யைக் கேவலப்படுத்துவதான அமெரிக்கத் திரைப்பட விவகாரம் சூடுபிடித்திருந்தது.
இந்த செய்திகள் அனைத்தையும் பார்க்கும் போது எனக்குள் சில வினாக்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. எனது அறிவிற்கு அதனால் விடை காண முடியவில்லை. இந்தப் பட வெளியீட்டைத் தடை செய்யக் கோசமிடும் மற்றும் கோரிக்கை விடும் அமைப்பினர், தனிமனிதர்கள் இந்த வினாக்களுக்குத் தெளிவான விடையினைப் பகர வேண்டும் என வினயமாய் வேண்டி இக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
 
 
1. விஸ்வரூபம் எனும் படத்திற்கு எதிராய் மட்டும் இஸ்லாத்தின் பேரில் இவ்வளவு கோசங்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறதென்றால் இதுவரைக்கும் தமிழகத்திலிருந்து வெளியான ஏனைய திரைப்படங்களனைத்தையும் நீங்கள் ஏற்று அவைகளை இஸ்லாமியர்கள் பார்க்க முடியும் என அங்கீகரிக்கின்றீர்களா?
 
 
2. இஸ்லாம் அல்லாத ஒருத்தரின் தொழில் முயற்சி அல்லது கருத்துச் சுதந்திரத்திற்கு தடைவிதிக்குமாறும் கண்டிக்குமாறும் மார்க்கத்தில் எங்காவது தெரிவிக்கப்பட்டிருக்கிறதா?
 
 
3. இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்ற திரைப்படக் காட்சிகள் குறித்து கண்டனங்களையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கும் நீங்கள் இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் செய்துகொண்டிருப்போருக்கு எதிராக எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? அன்றேல் அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என பகிரங்கமாக அறிக்கை விட்டிருக்கிறீர்களா?
 
 
4. தமிழக சினிமாக்கள் சில பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் செயற்பாடுகளைச் சித்தரிக்கின்றன. அவற்றை நீங்கள் இஸ்லாமியர்களைப் புண்படுத்துவதாகக் கோசமிடுகிறீர்கள். அவ்வாறானால் அவர்களின் தீவிரவாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அன்றேல் அவர்களைச் சித்தரிக்கும் போது நீங்கள் ஏன் கொதித்தெழவேண்டும்?
 
 
5. அண்மையில் காஷமீரின் பூஞ்ச் மாவட்டதில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் தாக்குதல் நடாத்தியது மாத்திரமல்லாமல் ரத்தவெள்ளத்தில் கிடந்த இந்தியச் சிப்பாய்களின் தலையையும் துண்டித்துச் சென்றனர். இந்தச் செயல் குறித்து எந்த இஸ்லாமிய அமைப்பாவது இது வரைக்கும் எந்தக் கண்டனத்தையாவது தெரிவித்துள்ளனவா? ஆனால் இந்தச் சம்பவம் படமாக்கப்படும் போது மாத்திரம் அந்தப் படத்திற்கு எதிராகக் காரமான கண்டனங்கள் எழுப்பப்படுகிறதே அது நியாயமா?
 
 
6. இஸ்லாம் அறியாத ஒருத்தர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்திய தருணங்களில் எப்போதாவது தேசத்தின் அமைதி சீர்குழையும் வகையில் முஹம்மது நபி (ஸல்) எதிர்ப்புத் தெரிவித்ததாய் ஏதும் வரலாறு இருக்கின்றதா? அன்றேல் முஹம்மது நபி (ஸல்)இன்று இருந்திருந்தால் அவர்கள் இவ்வாறுதான் அதை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா?
 
 
7. இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாய்ச் சித்தரிக்கும் சினிமாக்களுக்கு எதிராய்க் குரல் கொடுக்கும் நீங்கள் இஸ்லாமியராய் இருந்து தீவிரவாதம் செய்வோர்களுக்கெதிராய் மட்டும் ஏன் மூச்சுக்கூட விடுவதில்லை?
 
 
8. இஸ்லாமியர்களே இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை இஸ்லாம் என்று அரங்கேற்றம் போது கண்டும் காணாதது போல் இருந்துகொள்ளும் நீங்கள் இஸ்லாம் அல்லாத ஒருத்தர் இஸ்லாம் பற்றிய புரிதலின்றிச் செய்யும் செயல்களை மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்கிறீர்கள்? தங்களுக்குப் பாதகம் ஏற்படாதவாறு வசதிக்கேற்றாற் போல தூரத்திலுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் பக்கத்திலே சூழ நடைபெறுகின்ற இஸ்லாமிய விரோதச் செயலைக் கண்டுகொள்ளாதது ஏன்?
 
 
9. விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடைவிதிக்க கடும் பிரயத்தணம் எடுத்த அகில இலங்கை தௌஹீத் ஜமாஆத்தினரிடத்திலும் முஹம்மது நபி(ஸல்)யைக் கேவலப்படுத்துவதான திரைப்படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த உள்ளங்களிடத்திலும் வினவ ஒரு பிரத்தியோகமான வினா இருக்கிறது. அண்மைக் காலங்களாக இலங்கையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் ஷிர்க்கான விடயங்களை அடிக்கடி பாராளுமன்றத்தில் பேசி வருகிறார். அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுவதும் ஆர்ப்பாட்டம் நடாத்துவதும் எப்போது?
 
 
இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான தெளிவை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்.
இந்த உலகம் ஒன்றும் குறித்த சமயத்தவருக்காய் மட்டும் படைக்கப்பட்ட ஒன்றல்ல. இங்கு எல்லோரும் வாழ்கிறார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். யாரின் மீதும் யாரும் தமது கொள்கையைப் திணிக்க முடியாது. ஆனால் விரும்புபவர்கள் தமது கொள்கையை மாற்றிக்கொண்டு இன்னொன்றைப் பின்பற்றவும் கூடும். ஸூறதுல் பகராவில் இடம்பெறும் அதிகாரத்தின் வசனம் (ஆயத்துல் குர்ஸி) இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றது.
 
 
அண்மையில் கூட 'சகிப்புத் தன்மையின் விளைவுதான் சகவாழ்வு என இஸ்லாம் கருதுகிறது' என்று இஸ்லாமியச் சகோதரர் ஒருத்தர் தெளிவாகப் பேசியிருந்தார். இப்படியாக இஸ்லாம் மிக அழகாக மாற்று மதக் காரர்களுடனான உறவை ஒழுங்குபடுத்தி வரவேற்கும் போது அவர்களில் குறைகண்டு அவர்களது செயற்பாடுகளுக்குக் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் செய்து அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் எதிரிகளாகச் சித்தரித்தல் எந்தளவு இஸ்லாமிய நடைமுறை என்பதனை நாமனைவரும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
 
 
தற்போது சினிமாத்துறை மற்றும் ஏனைய ஊடகங்கள் யாவும் பெரும்பாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஏராளமான விடயங்களைத் தாங்கியே வருகின்றன. அதற்காக அந்த விடயங்களைச் செய்யும் மாற்று மதச் சகோதரர்களுடன் நாம் சண்டை போட முடியாது. அவர்கள் எமது மார்க்கத்திற்கு இசைவாகத்தான் தமது வேலைகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது. இங்குதான் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மை அவசியமாகின்றது.
 
 
இதற்கான நிகழ்காலத் தீர்வு யாதெனில் இஸ்லாமியர்களை அவ்வாறான விடயங்களிலிருந்து தூரமாகுமாறு அறிவுறுத்துவது மட்டுமேயன்றி வேறில்லை. எமக்குள்ளே தீர்வை சரிசெய்ய முயற்சிக்காமல் மற்றவர்களுடன் முட்டிமோதுதல் ஒருபோதும் இஸ்லாமிய வழிமுறையாகாது. மற்றப்படி எமது மார்க்கத்தை இழிவு படுத்துவதற்கே திட்டமிட்டு மாற்றுமதச் சகோதரர்கள் முயற்சித்தால் அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அமைதியாகத் தெளிவுபடுத்த முயற்சிக்கலாம். அதுவும் அவர்கள் பிழையாகச் சொல்லுகின்ற, சித்தரிக்கின்ற விடயம் எம்மிடத்தே இல்லாதபட்சத்தில் மாத்திரமே. அத்தைகைய தவறு உண்மையிலேயே எம்மவர்களிடம் காணப்பட்டால் அதை சரிசெய்வதில்தான் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
 
 
இந்த சினிமாக்கள் தொடர்பான பிரச்சினையில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்ட இந்திய சினிமா முற்படுவது தொடர்பில்தான் இதுவரைக்கும் பல சர்ச்சைககள் கிளம்பியுள்ளன. ஏனெனில் இஸ்லாம் யுத்தத்தினையோ வன்முறையையோ வரவேற்று வளர்க்கும் மார்க்கம் அல்ல. மாறாக இஸ்லாம் என்ற சொல்லின் அர்த்தமே அமைதியும் சமாதானமும்தான்.
 
 
அல்குர்ஆனில் யுத்தம் என்பதைக்குறிக்கும் “ஹர்ப்” எனும் சொல் 6 இடங்களில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஆனால் சமாதானத்தைக் குறிக்கும் “சில்ம்” எனும் சொல் 110 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்க சினிமாக்கள் மற்றும் பிற ஊடகங்கள் முற்படுகிறதென்றால் அவர்களொன்றும் எந்தவொரு அடிப்படையுமின்றி அதனைச் செய்யவில்லை. இஸ்லாமியர்களின் பேரில் உண்மையிலேயே உலகில் தீவிரவாத இயக்கங்கள் இயங்குவதனாலேயே இதுவரைக்கும் அவர்கள் அவ்வாறு காண்பிக்கிறார்கள்.
 
 
எனவே இங்கு மாற்று மதத்தவர்களுடன் சீறிப்பாய்வதை விடுத்து எம்மவர்களை அவ்வாறான தீவிரவாதச் செயல்ககளைப் புரிவதிலிருந்து தடுத்து நிறுத்தவேண்டும். அன்றேல் அவர்கள் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றையே செய்கிறார்கள், அவர்கள் எம்மைச் சார்ந்தவர்களல்ல என்று பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தச் சினிமாக்களின் சித்தரிப்புக்கள் எம்மை ஒரு போதும் காயப்படுத்தாது. ஏனெனில் அந்தச் சினிமாக்கள் காண்பிப்பது எம்மைச் சாராத ஒரு கூட்டத்தினரையே என ஆறுதலடைய முடியும்.
 
 
இப்படியாகப் பிரச்சினைகள் எமக்குள்ளேயே இருக்க கண்டனங்கள் என்றும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் தேசத்தின் அமைதி சீர்கெடும் வகையில் நாம் நடந்துகொள்வதும் எமது மாற்றுமதச் சகோதரர்களின் தொழில் முயற்சிக்குத் தடை விதிப்பதும் இஸ்லாமிய நடைமுறைகளல்ல என்பதே எனது வாதம். இவ்வாறான நடைமுறைகளானது மென்மேலும் எம்மீதான தப்பான அபிப்பிராயங்களையே மற்றவர்களுக்கு உண்டுபண்ணும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.
 
 
கடைசியாக ஒரு உதாரணத்தைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். பல்லின மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் மாற்று மத சகோதரன் ஒருத்தன் பன்றியிறைச்சி வியாபாரம் செய்கிறானென்றால் இரவோடு இரவாச் சென்று அவனது கடையைத் தீயிட்டுக்கொழுத்திவிட்டு வருவதோ அல்லது அந்தக் கடையை மூடுமாறு ஆர்ப்பாட்டம் நடாத்துவதோ, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதோ தீர்வு அல்ல. எமது சமயத்தாரிடம், பன்றியிறைச்சி ஹராமானது. அதனை உட்கொள்வதற்கு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தி அதிலிருந்து ஒதுங்கியிருப்பதே
சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையாகும்.
 
-R.P. Aroos
Thanks: Kalkudahinfo.comWednesday, January 30, 2013

கமல்ஹாஸன் கவிதை :

 
 
குளத்தடி மீனது...
 
 
 

குளத்தடி மீனது பேய்மழை கேட்டபோல்

உளத்தடி ஞாயம் கேட்பவன் நான்

தலைப்படும் காரியம் தவறெனக் கூறிடும்

மனக்குரல்கேட்பினும் கேளாதிருப்பவன்

பிறன்மனை நோக்கையில்..

அக விளக்கேற்றையில்...

குளத்தடி மீனது பேய்மழை கேட்டபோல்..

உளமொழி நடுவனாய்

இருநதிக்கரையானய் இருப்பவன்

சுகிப்பவன் சகிப்பவன் நான்..

பெருமழைபெய்ததில் இருநதி கூடிடின்

கரையுமில்லை யானுமில்லை என்றுணர்ந்து வாடுபவன்.

நாளையெதுவாகுமென ஆகுமென

யாவரைப்போலவும் யானுமே அறிந்திலேன்

வாழும் குளத்துநீர் வாயெல்லாம் கரிக்கையில்

வரைகடல்பொங்கி பிரளயமே வந்ததென

உணர்ந்தபடி நீந்திடும்..

குளத்தடி மீனது பேய்மழை கேட்டபோல்

உளத்தடி ஞாயம் கேட்பவன் நான்..

 
-கமல்ஹாஸன்
2013.01.29
 
Thanks : Maiam

Tuesday, January 29, 2013

கவிதை : ஓர் ஒப்புதல் வாக்கு மூலம்!


ஓ! ரிசானா...!

எனக்கு மூச்சு முட்டுகிறது.
முள்ளந்தண்டு வளைகிறது.
மூன்றாவது தடவையாகவும் செய்த
ஹஜ்ஜை நினைக்கையிலே!


000


ரிசானா....!

மறுமையில்
கன்னத்திலும் விலாவிலும்
சூடு போடப் படுமாமே...!
ஸக்காத் என்ற பெயரில்
ஐந்துரூபா குற்றியை
சுண்டிவிட்டதை நினைக்கையிலே!

000


ரிசானா...!

எனக்கு அவமானமாக இருக்கிறது.
'சீதனம் ஒழிக' என்று
இன்னும் மைக்குக்கு முன்னால்
கத்திக் கொண்டிருப்பதை நினைக்கையிலே!


000


ரிசானா...!

உன் போல் வீடென்ற பெயரில்
ஆட்டுக் கொட்டில்களில் வாழ்பவரையறியாது
ஆறடி மண்ணை மறந்து...
அந்த அறை,  இந்த அறையென்று
ஆடம்பர மாளிகை கட்டுவதை நினைக்கையிலே!


000

ரிசானா...!

ஒரு வேளை உணவும்
உடுத்தவோர் நல்லாடையும் தேடி
கடல் கடக்க வைத்து
நாம் பாலையில்
பலியாக்கியதை அறிந்ததும்
அல்லாஹ்வை நினைத்து...
என் அங்கமெல்லாம் நடுங்குகிறது.
ஒவ்வொரு பிள்ளைக்கும்
ஒன்றுக்கு நான்கு உடை எடுத்து
நெய்யொழுக பிரியாணியை
பிசைந்து அலைந்து கொட்டி
வேடிக்கையாய்....
வாடிக்கையாய்.....
வாழ்வதை நினைத்தால்!


000


ரிசானா...!

என்றோ ஒருநாளில்
எனக்கு மனசாட்சி
வேலைசெய்து விடுமோ
என்றுதான்
பயமாக  இருக்கிறது,
வாக்குப் 'பொறுக்கி' விற்று
நான் பெற்ற
பில்லியன்களை நினைக்கையிலே!

 
-மூதூர் முகம்மதலி ஜின்னாஹ்
2013 .01. 29
 

Sunday, January 27, 2013

சிறுகதை : ஏன் அழுதான்?
திருகோணமலை ஆதார வைத்தியசாலையின் அன்றைய நாளுக்குரிய மாலைநேரப் பார்வையாளர் நேரம் முடிவடைந்திருந்தது. சீருடையணிந்த ஆஸ்பத்திரி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வார்டாக ஏறி இறங்கி நோயாளிகளைப் பார்வையிட வந்திருந்தவர்களையெல்லாம் திருப்பியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

குடலிறக்க அறுவைச்சிகிச்சை ஒன்றை முடித்துவிட்டு மேலதிக சிகிச்சைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த என்னுடைய வாப்பாவுக்கு உதவியாக நின்றிருந்த நானும் மற்றவர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் மட்டுமே பதினான்காம் இலக்க வார்டுக்குள் நின்றிருந்தோம். வீட்டிலிருந்து வந்த இரவு உணவை உண்பதற்காக  ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோதுதான் திடீரென அந்த அழுகுரல் கேட்டது.

அதைக்கேட்டதும் அனைவரும் ஒருகணம் அமைதியாகிப் போனோம்.

முதலிலே அது ஒர் பெண்ணின் குரல் போல சன்னமாய் ஒலித்தது. பின்பு ஒரு கேவலுடன் விம்மிவெடித்து மயிலொன்றின் அகவல்போல மீண்டும் ஓலமிட்டது. யார் அழுவது எதற்காக அழுகின்றார்கள் என்றெல்லாம் முதலில் எங்களில் யாருக்குமே புரியவில்லை.   அழுவது யாரென்று பார்ப்பதற்காக எல்லோரும் வெளிவராந்தாவிற்கு விரைந்து போனோம்.

அந்த வார்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த நீண்ட மரத்தினாலான பெஞ்சில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தான். விரல்களிலிருந்து முழங்கை வரைக்கும் கட்டுப்போடப்பட்டிருந்த அவனுடைய வலதுகை கழுத்திலிருந்து துணிப்பட்டியொன்றினால் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்தக்கையை தனது இடதுகையினால் தூக்கிப்பிடித்தபடி தலையைக் குனிந்து அழுதுகொண்டிருந்தான் அவன். நாங்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டோம்.

காலடிச் சத்தம்கேட்டு எங்களை ஒருதடவை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் குனிந்து அழுது கொண்டிருந்தான். அவனுடைய அழுக்கேறிய பழைய சட்டை சில இடங்களில் தையல்விட்டுப் போயிருந்தது. கண்ணீர்த்தாரை பெருக்கெடுத்து அவனது வெளிறிப்போன மண்ணிறக் காற்சட்டையின் முழங்கால் பகுதியை ஈரமாக்கியபடியிருக்க காலடியில் பூட்டூசி குத்தியிருந்த தேய்ந்துபோன ஒருசோடி ரப்பர் செருப்பு கவனிப்பாரற்றுக் கிடந்தது.

'யார்ரா தம்பீ நீ...? என்ன செய்யுது.. ஏன் அழுகிறாய் நீ?' என்று கேட்டார் அப்பொழுதுதான் அன்றைய நாளுக்குரிய இரவுக்கடமைக்கு வந்திருந்த ஆஸ்பத்திரி சிற்றூழியரான தியாகராசா அண்ணன்.

தியாகராசா அண்ணன் மிகுந்த இரக்க சுபாவமுடையவர். 

என்னுடைய வாப்பாவுக்கு உதவியாக ஏறத்தாழ ஒருவார காலமாக ஆஸ்பத்திரியிலே தங்கியிருந்த எனக்கு தியாகராசா அண்ணன்தான் பெரிதும் ஒத்தாசையாக இருந்தார். வாப்பாவுக்கு ஒப்பரேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும் தேவையான சிறிய உதவிகளையெல்லாம் செய்து தந்தவர் அவர்தான். அதுமட்டுமல்ல அவர் இரவுக்கடமைக்கு வரும்போது அன்றைய தினசரிப் பத்திரிகைகளையெல்லாம் அள்ளிக் கொண்டு வருவார். இரவு வெகுநேரம் வரை நாங்கள் இருவரும் அவற்றை வாசித்துக் கொண்டே நாட்டு நடப்புகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பது வழமையாக இருந்தது. இதனால் தியாகராசா அண்ணன் எனக்கு நன்கு பழக்கமாகிவிட்டார்.

'சொல்லு தம்பீ.. ஏன் அழுகிறாய்?'

அவன் அவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு பதிலேதும் கூறாமல் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தான். அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவரைத் தொடர்ந்து நாங்கள் எல்லோருமே அவனிடம் அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டோம்.

'கை சரியா நோவுது..!' என்று பலகீனமான குரலில் சொல்லிவிட்டு தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தான் அவன். எங்களுக்கு அவனைப் பார்க்க மிகவும் கவலையாகிவிட்டது. 'நான் விபரத்தைக் கேட்கிறேன்' என்று சைகை செய்து மற்றவர்களை திருப்பி அனுப்பி விட்டு சட்டென அவனுக்குப் பக்கத்திலே போய் அமர்ந்து கொண்டேன் நான். அவனது அழுகை சிறிது ஓயும் வரை காத்திருந்தேன்.

'கையில உனக்கு என்ன பிரச்சினை தம்பி?'

'கை ஒடைஞ்சிட்டு!'

'எப்படி உடைஞ்சது.. விழுந்திட்டியா..?'

'இல்ல.. அவரு அடிச்சி ஒடஞ்சது' என்று திரும்பவும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.

'யாரு உனக்கு அடிச்சது? அழாதடா தம்பீ.. எந்த ஊர் நீ...? இப்ப யாரோட ஆஸ்பத்திரிக்கு வந்திருக்க?'

'பக்கத்து வூட்டு வளவுல இரிக்கிறவரு.. பெரிய கொட்டானால அடிச்சாரு. அம்புலன்ஸில இஞ்ச எச்சிரே படம் எடுக்கிறதுக்கு அனுப்பி வுட்டாங்க'

'வீட்லருந்து யாரும் வரல்லியா.. யாரோட அம்புலன்ஸில வந்த நீ.. உன்ட ஊர் எது?'

'வட்டம்'

'வட்டமா..? அது எங்க இருக்கு?'

'மூதூர்ல.. ஜெற்றிக்கு கிட்ட..! ஆஸ்பத்திரி வாட்ல இருந்து அம்புலன்ஸில தனியத்தான் நானா வந்தேன்!'

அவனது தோற்றத்தையும் அழுகையையும் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவனைப் பார்த்தால் சாப்பிட்டிருக்க மாட்டான் போலிருந்தது.  வீட்டிலிருந்து இரவுச் சாப்பாட்டு வந்த இடியப்பத்தில் வாப்பாவுக்குத் தேவையானது போக மீதியாய் இருந்ததை பக்கத்துக் கட்டில் வயோதிபர் ஒருவருக்கு சற்று முன்னர்தான் கொடுத்திருந்தேன் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். .

'என்ன தம்பீ யோசிக்கிறீங்க?' என்று கேட்டார் தியாகராஜா அண்ணன்.

'இல்லண்ண, ஆஸ்பத்திரி கிச்சன்ல கொஞ்சம் சாப்பாடு எடுக்கேலுமா?'

'யாருக்குத் தம்பி..? இந்தப் பொடியனுக்குத்தானே.. ஒரு ப்ளேட் இருந்தா தாங்க. எடுத்துட்டு வாறேன்' என்று வாங்கிக் கொண்டு போனார்.

வன் கண்ணைத் துடைத்துக்கொண்டு தட்டிலிருந்த சிவப்பரிசிச்சோற்றை உருளைக்கிழங்கு சொதியுடன் பிசைந்து இடது கையால் சாப்பிட ஆரம்பித்தான். இரண்டு மூன்று வாய் சாப்பிடும்வரை நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

'எதுக்காக பக்கத்து வளவுக்காரன் உனக்கு அடிச்சான்?'

'அது வந்து.. அவர்ர மாமரத்துல ஏறினதுக்கு..'

'நீ ஏன் தம்பி அவன்ட மரத்தில ஏறின நீ..? இன்னொருவர்ட மரத்துல கேக்காம ஏறுனது பிழைதானடா.. மாங்காய் பிச்சியா?'

'அதுக்கு வேண்டியா மட்டும் அவரு அடிக்கயில்ல..'

'அப்ப வேற எதுக்கு அடிச்சான்..?'

'அதுவந்து நானா.. அவருக்கு நான் அவரு கூப்பிட்டு முந்தி மாதிரி நா வரயில்லயெண்டு என்னோட பழைய கோவம்.   மொத எனக்கு பள்ளியில ஓதித்தந்த மவ்லவிதான் அவரு. முந்தி எனக்கு எந்த நாளும் காசு தருவாரு.. சாப்பாடெல்லாம் வேங்கித் தாறவருதான்.. பொறவு ஒருநாள்.. என்னைய அவர்ர வளவுக்குள்ள புதுசாக் கட்டுன வூட்டுக்கு..'  என்று கூறி மீண்டும் பேச முடியாமல் தேம்பினான் அவன்.

'யாரு உனக்கு அடிச்சவனா..? அப்ப உன்னோட அவன் இரக்கமாத்தானே இருந்திருக்கிறான். நீதான் அவனுக்கு ஏதோ பிழை செய்திருப்பாய் போல..'

'இல்ல நானா அவரு பொறவு.. என்னை ..பொறவு.. அது வந்து'  அவனது உதடுகள் எதையோ சொல்லத் துடித்தன.

'சொல்லு.. தம்பி' என்று வற்புத்திக் கேட்டேன். அதற்குள் தியாகராசா அண்ணன் வந்துவிட்டார்.

'என்ன சொல்லுறான் பொடியன்..?'

அவன் உடனே சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கன்னத்தில் வழிந்த கண்ணீரை இடது புறங்கையால் துடைத்தபடி அழுதான்.

'சரி..சரி, அதையெல்லாம் யோசிக்காம இப்ப நீ சாப்பிடு. பிறகு பேசலாம்.'

சிறிது நேரத்தில் அவன் சாப்பிட்டு முடித்து போத்தல் தண்ணீரைக் குடித்து சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்வரை காத்திருந்தேன். அருகிலே அமர்ந்திருந்த தியாகராசா அண்ணன் பத்திரிகைகளை பிரித்துப் படித்துக்கொண்டிருந்தார்.

'நீ என்ன செய்திருந்தாலும் அதுக்காக உன்னை இப்பிடியா அவன் அடிக்கிறது.. உன்ட வாப்பா உம்மா ஒருவரும் போய் அவனிட்ட போய் ஏனென்று கேக்கயில்லியா?'

'வாப்பா எங்களை உட்டுட்டுப் பெய்த்தாக'

'சரி, உம்மா?'

'உம்மா நெருப்புல பத்தி மௌத்தாகிட்டாக! வாப்பாவும் பொறவு சுனாமில இல்லாமப் போயிட்டாகளாம்'

'ஏய் சும்மா பொய்யெல்லாம் சொல்லாத! உண்மையைச் சொல்லு'

'இந்த சாப்புட்ட எரணம் மேல சத்தியம நானா! பொய் சொல்லயில்ல.. மெய்தான் நானா' என்றான் அவன். எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவனுக்கு கைகளைக் கழுவ உதவினேன். மேசை மீதி சிந்தியிருந்த உணவு மீதிகளைத் துப்புரவு செய்து தட்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்று கழுவிக்கொண்டு வந்தபோது மீண்டும் அவன் மெல்லிய குரலிலே அழுது கொண்டிருந்தான்.

' கை நோகுதா..? சரி, அழாத மிஸ்ஸிட்ட சொல்லி குளிசை ஏதாவது கேப்பம்!' என்று அவனைத் தேற்றினேன்.

'விடிஞ்சோன நான் மூதூருக்குப் போவலாமா நானா?' என்று அப்பாவித்தனமாய் கேட்டான் அவன்.

நானும் தியாகராசா அண்ணனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.

'இல்லடா தம்பீ.. நீ வாட்ல அட்மிட் ஆகியிருக்கிறியே.. அதால கை முழுசா சரிவந்த பிறகுதான் போகலாம்.  என்ன அவசரம் உனக்கு?'

'உம்மம்மா தனிய இருப்பாக.. பாவம் கண்ணுஞ் சரியாத்தெரியா அவக்கு'

'பக்கத்துல சொந்தக்காராக்கள் தெரிஞ்சாக்கள் யாராவது பாத்துக்க மாட்டாங்களா?'

'பாப்பாங்கதான். என்னைய பொலீஸ் தேடி வருமெண்டு தாடிவச்சிருந்தாரே அந்த ஒசந்த அண்ணஞ் சொன்னாரு.. எனக்கு இஞ்ச இரிக்க பயமாக் கெடக்கு நானா'

'யாரு அந்த தாடி வச்ச அண்ணன்?'

'அது வந்து பின்னேரம் ஓஃப் ஆகி போனாரே நம்மட மேல் நர்ஸ் நகுலேஸ்வரன் மாஸ்டரத்தான் சொல்றான் பொடியன். மாஸ்டர் இனி விடியக்காலையில ஆறு மணிக்குத்தான் ட்யூட்டிக்கு வருவாரு' என்றார் பெஞ்சில் படுத்தபடி  தினசரிப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்த தியாராசா அண்ணன்

'பொலீஸா? அவங்க எதுக்கு ஒன்னத் தேடணும்..? ஊர்ல ஏதும் களவு கிளவு எடுத்தியா நீ?'

'இல்ல.. அது எனக்கு அடிச்ச அந்த மவுலவிய மூதூருல பொலிஸில புடிச்சு வச்சிருக்காங்க!'

'ஓ! அப்ப இது பொலிஸ் கேஸாகிட்டுதா? சரி, உன்ட கையை அவன் மவுலவி அடிச்சு முறிக்கிற அளவுக்கு என்ன நடந்திச்சு அங்க என்டு விளக்கமாச் சொல்லு பாப்பம்' என்றேன்.

நானும் தியாகு அண்ணனும் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டும் கூட அவன் ஒன்றுமே சொல்லாமல் அழுது கொண்டே இருந்தான்.

'சரி விடுங்க தம்பீ, நகுலேஸ் மாஸ்டர் வரட்டும். அவருக்குத்தான் இவன்ட விசயம் முழுசாத் தெரியும். காலையில விபரத்தைக் கேப்போம்.. பாவம், இவன் கத்திக்கிட்டேயிருக்கான் என்டு மாலதி மிஸ்ஸுக்கிட்ட சொல்லியிருக்கன். இவனுக்கு நித்திரை கொள்றதுக்கு மருந்து குடுப்பா. படுத்திட்டானென்டா கொஞ்சம் வலி தெரியாது. அது சரி, இந்த ந்யூஸைப் பாத்தீங்களா..?' என்று என்னிடம் பத்திரிகை ஒன்றை நீட்டினார்.

சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வந்து அவனுக்கு ஊசிமருந்து ஒன்றை ஏற்றிவிட்டுச் சென்றதும் அழுது கொண்டிருந்தவன் அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டான். பத்திரிகையைக் கையில் வைத்திருந்தாலும் மனம் செய்திகளிலே லயிக்கவில்லை. ஆழந்து உறங்கும் அந்தச் சிறுவனையே வெகுநேரம் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு கட்டில் விரிப்பு ஒன்றால் அவனைப் போர்த்துவிட்டு வாப்பாவின் கட்டிலருகே இருந்த தரையில் விரிப்பொன்றை இட்டு படுத்துக் கொண்டேன்.

காலையில் நான் கண்விழித்து எழுந்தபோது என்னைப்போல நோயாளிகளைப் பார்த்துக்கொள்ள வந்தவர்கள் எல்லோரும் வராந்தாவிலே ஒன்றுகூடி நின்றிருப்பதைக் கண்டேன். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு எதையோ கவனித்துக்கொண்டு நின்றிருந்தார்கள். அவர்களின் நடுவிலே இருந்த பெஞ்சிலே தியாகராஜா அண்ணன் அமர்ந்திருக்க அவரது மணிக்கட்டிலே இருந்த காயமொன்றுக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்தான் நகுலேஸ்வரன் மாஸ்டர்.

எனக்கு எதுவும் புரியவில்லை.

'என்ன.. என்ன நடந்தது. தியாகராஜா அண்ண.. ஏன் உங்களுக்கு மருந்து கட்டுப்படுது?'

அவர் பதில் எதுவும் கூறாமல் கத்தரி பஞ்சு கொண்டு மருந்திடப்படும் தனது காயத்தை முறைத்தபடி இருந்தார்.

'சொல்லுங்க அண்ண என்ன நடந்தது?'

'ஆ...! நோகுது.. பார்த்து மாஸ்டர்!' என்று எனது கேள்வியைப் பொருட்படுத்தாமல் வலியில் கத்தினார் அவர். அவருக்கு அருகில் நின்றிருந்தவர்கள் என்னிடம் ஏதோ சாடை காட்டினார்கள். அவர்கள் காட்டிய இடத்தில் வலியில் முனகியபடி பெஞ்சிலே படுத்திருந்தான் அந்த மூதூர்ப் பையன். குழப்பத்தோடு நெருங்கிச் சென்று ஒருக்களித்துப் படுத்திருந்த அவனைப் பார்த்தேன். அவனது கடைவாய் ஓரத்திலே இரத்தம் உறைந்திருந்தது.


அதைப் பார்த்ததும் அதுவரை எனக்கிருந்த தூக்கக் கலக்கம் பறந்தோடி விட்டது.

'சரி சரி மற்ற ஆக்கள் கொஞ்சம் விலகுங்க பாப்பம். தியாகு அண்ண நீங்க கொஞ்சம் சாய்ந்து படுங்க ரெத்தம் கொஞ்சம் போயிருக்கிறதால களைப்பாயிருக்கும்' என்றபடி தியாகராசா அண்ணணை அட்மிஷன் கட்டிலிலே கிடத்தி ஊசிமருந்து போட்டுவிட்டுச் சென்றார் மாஸ்டர் நகுலேஸ்வரன். இடது கையால் குழல் விளக்கின் வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு காலை நீட்டியபடி ஆயாசத்தோடு படுத்திருந்தார் தியாகராசா. அவர் கோபத்தோடு இருந்த காரணத்தால் நகுலேஸ்வரனைப் பின்தொடர்ந்து சென்று நடந்ததை வினவினேன்.

'அது ஒண்ணுமில்லை. இவன் பொடியன் விடிய அஞ்சுமணிக்கு எழும்பி வலியால ஓ வென்டு கத்திட்டிருந்திருக்கிறான். நம்ம தியாகராசா அண்ணன தெரியுந்தானே.. மனிசன் பரிதாபம் பொறுக்க ஏலாம இஞ்ச நைட் ட்யூட்டி இருந்த மாலதி மிஸ்ஸுக்கிட்ட போய்ச் சொல்லியிருக்காரு. அவ உடனே வலியை இல்லாமலாக்கிறதுக்கு பின்பக்கம் உள்ள வைக்கிற ரெண்டு கெப்ஸ்யுல் குடுத்திருக்கா.. ஆ! அது உங்களுக்குத் தெரியுந்தானே.. ஒப்ரேஷன் முடிந்து வாட்டுக்கு வந்த பிறகு உங்கட வாப்பாவுக்கு நான் தந்து நீங்க வச்ச நீங்கதானே?'

'ஓமோம் மாஸ்டர்'

'அதை ஆசனத் துவாரத்துல  வைக்கச்சொல்லி தியாகராசா அண்ணன் கிட்டதான் குடுத்திருக்கிறா மாலதி மிஸ்.  அதுவந்து அவன் சின்னப் பொடியனுக்குத் தெரியாதுதானே.. பழக்கமும் இல்ல.. அதோட அவனுக்கு வலது கையில காயம்தானே..? தனியா வைக்கவும் முடியாது என்டதால தியாகராசா அண்ணன்தான் அவனை பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு கொண்டுபோய் கெப்ஸ்யுல வைக்கிறதுக்கு ட்ரை பண்ணியிருக்காரு..'

'சரி, அதுக்கு?'

'இவரு அவன்ட காற்சட்டைய கழற்றச் சொல்லியிருக்காரு. ஆனா அவன் விடவே இல்லைலயாம். இவரு நித்திரைக் கலக்கத்துல இருந்தவரு அவசரப்படுத்தி அவரே கழற்றப்போக அவன் பாவி இவர்ர கையக்கடிச்சுக் குதறிட்டு ஓடி வந்திருக்கான்' என்று விட்டு சத்தம் போட்டுச் சிரித்தார் நகுலேஸ்வரன் மாஸ்டர்.

'ஓ! அப்பிடியா..சேதி?  அதுக்கு அடிச்சீங்களா..? அவன்ட வாயில ரெத்தம் வந்திருக்கு'

'ச்சே! நாங்க ஏன் அடிக்கிறோம்..? அது ஏற்கனவே பொலீஸ் கேஸ் வேற. அது வந்து தியாகு அண்ணன்ட காயத்திலருந்து வந்த ரெத்தம்.. மைகாட் அவன் அந்தக்கடி கடிச்சிருக்கிறான் பாவி. பாவம் அந்த மனுசன்.. இவனுக்கு உதவி செய்யப்போய்.. மூணு தையல்! கடிக்காயத்தை நீங்க பாத்திருக்க வேணும்'  என்றபடி எழுந்து சென்று அந்தச் சிறுவனை எழுப்பினார் நகுலேஸ்வரன் மாஸ்டர். நானும் பின்னாலேயே போனேன்.

அவன் மிரண்டு போய் நிமிர்ந்து பார்த்தான்.

'டேய் தம்பி, என்னையும் கடிச்சிப் போடாத...!' என்றபடி சற்று எச்சரிக்கையுடன் தள்ளி நின்று பஞ்சுத்துண்டொன்றை ஸ்பிரிட்டில் நனைத்து அவனது வாயிலிருந்த இரத்தக்கறையைத் துடைத்து இரண்டு மாத்திரைகளை அவனருகிலே வைத்து விட்டுப் போனார் மாஸ்டர்.

அந்த மாத்திரைகளை நான் எடுத்துக்கொண்டு வார்டுக்குள் சென்றேன். ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த வாப்பாவின் கட்டிலருகேயிருந்த சுடுநீர்க்குடுவையிலிருந்து ஒரு க்ளாஸில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு மீண்டும் அவனிடம் வந்தேன். அவனை எழுப்பி மாத்திரைகளை கையிலே கொடுத்துவிட்டு அதை விழுங்கி முடிக்கும் வரை காத்திருந்தேன்.

'ஏன்டா அவரைக் கடிச்ச நீ?'

அவன் எதுவும் பேசாமல் என்னை மிரண்டுபோய் பார்த்தான்.

'அவரு இரவு உனக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து எவ்வளவு உதவியெல்லாம் செஞ்சாரு.. உனக்கு மாத்திறதுக்கு உடுப்புக் கூட இல்லையென்டு தெரிஞ்சு அவர்ர மகன்ட ஒரு உடுப்பைக் கொண்டு வரச்சொல்லி வீட்டுக்கு போன் பண்ணி... டேய் ஏன்டா அவரைக் கடிச்ச நீ..?'

அவன் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனது உதடுகள் நடுங்கின.

'சொல்லித் தொலையன்டா.. எதுக்குடா அந்த மனுஷனை கடிச்ச நீ?  மூதூர்ல உனக்கு சாப்பாடு காசு தந்த அந்த மவுலவிட வீட்ட மா மரத்துல தெரியாம ஏறியிருக்க.. இஞ்ச வந்து சாப்பாடு உடுப்புத்தந்த மனிசனை நாய் மாதிரிக் கடிச்சிருக்க.. உனக்கு உதவி செய்யிற ஆக்களுக்கெல்லாம் ஏன்டா இப்பிடி அநியாயஞ் செய்யிறா.. பைத்தியமாடா நீ?' என்று கோபத்துடன் எழுந்து அடிப்பதுபோல கையை ஓங்கி பாவனை செய்தேன்.

அவன் உடனே பயந்து எழுந்து போய் மரப்பெஞ்சின் ஓரத்திலே உடலைச் சுருட்டிக்கொண்டு தலையைக்  கைகளால் மூடிக்கொண்டு,

'அ..ஆ! அடிக்காதீங்க நானா... அவரு பாத்றூமுக்குள்ள வச்சு என்ட டவுசரைக் கழட்டச் சொல்லி இழுத்தாரு. அதுதான் பயந்து பெய்த்து அவர்ர கையக் கடிச்சிப்புட்டு வெட்டையால ஓடிவந்தன் நானா..' என்று நடுங்கியபடி கூறினான்.

'டேய் மடையா! அவரு எதுக்கு அப்படிச் செய்யச் சொன்னாருண்டு தெரியுமாடா? அதுக்கு ஏன்டா நீ பயப்பிடணும்?'

'இப்பிடித்தான் நானா அந்த மவுலவியுஞ் செஞ்சாரு. ஒருநாள் என்னைய அவர்ர வளவுக்குள்ள புதுசா கட்டுற வூட்டுக்குள்ள கூட்டிப் பெய்த்து.. ஏன்ட காற்சட்டைய உரிஞ்சுபோட்டு...' என்று ஆரம்பித்து நடந்தவற்றையெல்லாம் ஒன்றும் விடாமல் அவன் அழுதழுது சொல்லி முடித்தபோது....

ஆஸ்பத்திரிக்கு வெளியே திடீரென மழை கொட்டத் தொடங்கியிருந்தது.


-மூதூர் மொகமட் ராபி

(2013.01.27)