Thursday, October 3, 2013

கல்வியமைச்சின் உளவியல் லட்சணம்!



ந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை சரியாக சிறுவர் தினத்தன்று வெளிவந்திருக்கின்றது நமது இலங்கை திருநாட்டின் மேன்மை தங்கிய அரசு. அன்றைய தினம் நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்திலும் சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் களைகட்டிக்கொண்டிருந்த வேளையில் பரீட்சை முடிவுகளை வெளியிட்டு ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறார்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டது பரீட்சைத்திணைக்களம்.

சில சிறுவர்கள் மகிழ்ச்சியில் குதிக்க பல சிறுவர்கள் கண்ணீரில் மிதக்க அன்றைய தினம் குழப்பமாகிவிட்டது. ஏற்கனவே இத்தகைய புலமைப்பரீட்சை சிறுவர்களுக்குப் பொருத்தமற்றது என்ற விமர்சனம் இருந்து வருகின்ற நிலைமையில் இப்படியான விவேகமற்ற செயலில் இறங்கியுள்ள கல்வி அமைச்சின் துணிவை என்னவென்பது.  ஒரு பரீட்சையில் சித்தியடைபவர்களை விட தோற்பவர்களே அதிகம் என்பது பொதுவான நியதி. அதிலும் ஓரிரு புள்ளிகளில் வெற்றியைத் தவற விட்ட மாணவர்களை நினைத்துப் பாருங்கள். அன்றைய தினத்தில் தங்களிடம் கற்கும் மாணவச் செல்வங்களை குதூகலிக்க வைப்பதற்கு பரிசுகள் வாங்கி வைத்திருந்த ஆசிரியர்களும் குழம்பிப்போய்விட்டனர்.  அழுகின்ற பிள்ளைகளைத் தேற்றுவதா அல்லது மற்றப் பிள்ளைகளை வாழ்த்துவதா என்று தடுமாறிக்கொண்டிருந்த காட்சிகளே அன்று அதிகம்.

இது ஏதோ தற்செயலாக நடந்த விடயம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க அடுத்ததாக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டு தனது 'புத்திசாலித்தனத்தை' பறைசாற்றிக்கொண்டது.

அதாவது இனிவரும் ஆண்டுகளிலே ஐந்தாம் ஆண்டுப்புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை சிறுவர் தினத்தில்தான் வெளியிட முடிவு செய்திருக்கின்றார்களாம். ஆசிரியர்களுக்கு கல்வி உளவியல் பற்றி மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடாத்தும் கல்வியமைச்சுக்கும் அரசுக்கும் தெரிந்த கல்வி உளவியலின் லட்சணம் இதுதானா நண்பர்களே?

 -மூதூர் மொகமட் ராபி