Tuesday, February 11, 2014

சிறுகதை : இலைமறை கொலைகள்


ந்தளாயில் கணவன் வீட்டில் வசிக்கும் நிறைமாதக் கர்ப்பிணியான எனது மகளைப் போய்ப் பார்த்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியை வந்தடைந்தேன்.


திருகோணமலை செல்லும் தனியார் பஸ்வண்டி ஒன்றில் ஏறி அமர்ந்திருந்தபோது பஸ்ஸின் பின்புறமாக காதைப் பிளக்கும் பலமான ஹோர்ன் சத்தம் ஒன்று கேட்டது. யன்னலினூடக எட்டிப்பார்த்தால், எங்கள் ஊர்காரர் சமது நானாவின் புது டெலிக்கா வேன் மரக்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸைக் கடந்து செல்ல முயல்வதைக் கண்டேன். என்னுடைய பால்ய நண்பனான ஜவாப்தீன்தான் வேனை ஓட்டிக்கொண்டு சென்றான். அவனோடு முன் ஆசனத்தில் சமது முதலாளியும் இருந்தார்.

 உடனே, 'ஜவாப்தீன்!  ஜவாப்தீன்!'  என்று கடந்து செல்லும் அந்த வேனை நோக்கி பலமாக சத்தம் வைத்தேன். பஸ்சுக்குள் இருந்த அத்தனை தலைகளும் திரும்பிப் பார்த்தன. அதேவேகத்தில் பஸ்ஸிலிருந்து மளமளவென நான் இறங்கியபோது டிக்கட் எழுதிக்கொண்டிருந்த கண்டக்டர் பையன் சிங்களத்திலே கெட்டவார்த்தையால் வாய்க்குள் திட்டியது காதில் விழுந்தது. அதையெல்லாம் கவனிக்காமல் கைகளைப் பலமாக தட்டியபடி வேனின் பின்னே ஓடியதில் அது கந்தளாய் பெற்றோல் நிலையத்தைத் தாண்டி சற்றுத் தடுமாறிய பின்பு நின்றது.

நான் ஓடிவந்ததை ஜவாப்தீன் பின்பக்கப் பார்வைக் கண்ணாடியிலே பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் நிறுத்தியிருக்கின்றான். வேனிற்கு அருகில் நான் போய்ச்சேர்ந்ததும், 'என்ன ஜவாப்தீன்.. பஸ்ஸுக்குள்ள இருந்து கையைக் காட்டி கூப்பிட்டது விளங்கல்லியா..?' என்று கேட்டேன்.  ஓடிவந்ததிலே மூச்சிரைத்தது எனக்கு.

 'ஓ! நீதானா அது..? நான் கண்டன்தான் மச்சான். ஆனா மதிக்கயில்லடா.. வா வா உள்ள வந்து ஏறு! பின்னால மரக்கறி மூடையெல்லாம் கெடக்கு. இஞ்ச முன்னால.. முன்னால வா! எங்கடா றிஹானாவப் பார்க்க வந்தியா..? எப்ப உனக்கு பேரக் குழந்தை கெடைக்க இருக்கு?' என்று கேட்டான் ஜவாப்தீன். சமது நானா புன்னகையுடன் முன்புறக் கதவைத் திறந்து தான் இறங்கிக் கொண்டு உள்ளே ஏறும்படி சாடை காட்டினார்.

'ஓம் மச்சான்.. இன்டைக்கு ஆகஸ்ட் 21 தானே? இந்த மாசக் கடைசியில  என்டுதான் டேட் குடுத்திருக்காங்க. அதான் மனுஷியக் கொண்டு மகளோட வுட்டுட்டு வாறன். அதுசரி, நீங்க ரெண்டுபேரும் எங்க தம்புள்ளையிலருந்தா வாறீங்க? நேத்துப் பின்னேரம் ஊருக்குப் போயிட்டு திரும்பியும் வந்திருக்கீங்க போல' என்றபடி உள்ளே ஏறி இருவருக்கும் இடையில் நான் அமர்ந்து கொண்டதும் வேன் மீண்டும் ஊரை நோக்கிக் கிளம்பியது.

'கந்தளாய் வரைக்கும் என்டுதான் வந்தோம்.. பொறவு இவ்வளவு தூரம் வந்தாச்சி.. என்டு தம்புள்ளயில தங்கி சாமானை ஏத்திட்டு வாறம்' என்றான் ஜவாப்தீன்.

'எப்பிடி சமது நானா, தம்புள்ளயில மரக்கறி சாமான் விலையெல்லாம்..? இடையில ஏதும் பிரச்சினையா?'

'வெலையெல்லாம் சரிதான் அனீஸ் தம்பி. செக்பொயிண்டுகளால சமாளிச்சு மரக்கறிய டவுனுக்குக் கொண்டு போய்ச் சேத்திட்டாச்சரி.. கொஞ்சம் கூடக் கொறைய காசு பாக்கலாம்..' என்றார் சமது நானா.

சமது நானா அனுராதபுரச் சந்தியில் ஜவாப்தீனுடைய பக்கத்து வளவிலே வசிக்கும் ஒரு மொத்த வியாபாரி. நிரந்தரமான வியாபாரம் என்று அவருக்கு எதுவுமில்லை. அந்தந்த நேரத்திலே என்னென்ன டிமாண்ட்டாக உள்ளதோ அதை மொத்தமாக வாங்கி வந்து உள்ளுர் கடைகளுக்கு விநியோகித்துப் பிழைக்கும் ஒரு சீஸன் வியாபாரிதான். வெகுஅண்மையில்தான் அவர் இந்தப் புதுவேனையும் சொந்தமாக வாங்கியிருந்தார். கடந்த ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே அடுத்தடுத்து  அமைதியற்ற அரசியல் சூழ்நிலைகளும் இனமுறுகல்களும் உண்டானது. அதனால் எழுந்த அச்சத்தால் சிங்களவர்கள் திருகோணமலை நகருக்கு வருவதும் தமிழர்கள் கந்தளாய் மற்றும் ஹபரண பகுதிகளைத் தாண்டிச் செல்வதும் உயிராபத்துக்குரிய நிலைமையில் இருந்தது. இதனால் தம்புள்ளையிலிருந்து சிங்களவர்களின் மரக்கறி லொறிகள் திருகோணமலைக்கு வருவது நின்றுபோக திடீரென அவற்றுக்குரிய கேள்வியும் விலையும் விஷம்போல ஏறிப்போனது.

இதையறிந்தால் விடுவாரா சமது நானா?

இந்த நேரத்தில் தம்புள்ளைக்குப் போய் காய்கறிகளைக் கொண்டுவந்தால் கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்று கணக்குப்போட்டார். அதன்படி இந்த வேனை வைத்து சிறிது காலமாக அந்த வேலையைத்தான் செய்து வருகின்றார். அதேவேளை தங்களுடைய உழைப்பு தடைப்பட்ட நிலைமையில் இருக்கும் சிங்கள வியாபாரிகள்  முஸ்லீம் வியாபாரிகள் எதுவித பிரச்சினையுமின்றி உழைப்பதைக் கண்டு பொறாமையுடன் கறுவிக்கொண்டிருந்தார்கள். இதையறிந்து சிலர் சமது நானாவை அவதானமாக இருக்குமாறு எச்சரித்தும் இருந்தனர். ஆனால் பேராசை கொண்டவரான அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

முதல் நாளன்று காலையிலே அவர் தம்புள்ளைக்குப் புறப்பட இருந்தபோது இதே வேனை ஓட்டும் அவருடைய வழமையான சாரதி ஏனோ திடீரென வராமல் நின்றுவிட்டான். இதனால் அவருக்கு அவசரத்திற்கு புதுச்சாரதி ஒருவன் தேவைப்பட்டான். உடனே வாடகைக் கார் ஓட்டிச் சம்பாதிக்கும் அயலவனான ஜவாப்தீனைச் சாரதியாக வருமாறு அழைத்திருந்தார் சமது நானா. வெளிநாடு சென்றிருந்த ஜவாப்தீனின் மனைவி பல வருடங்களுக்குப் பின்பு அப்போதுதான் வீடு திரும்பியிருந்த நேரம் அது. சரியாகக் கூறுவதானால், அவள் வந்து முழுதாக இரண்டு நாட்கள் கூட ஆகியிருக்கவில்லை. காரை திருத்தவேலைக்காக கராஜில் போட்டு அங்கேயே பொழுதெல்லாம் கழிந்ததால் ஜவாப்தீனால் மனைவியோடு சரியாகப் பேசக்கூட நேரம் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலையில் அவ்வளவு தூரம் போய் வருவதா என்று அவன் முதலில் மறுத்து விட்டிருந்தான். ஆனாலும் சமது நானா விடவில்லை. முதலில் கந்தளாய் வரை போய் வருவோம்.. நிலைமை பிரச்சினை இல்லை என்றால் மட்டும் மாலையில் தம்புள்ளைக்குப் போய் வருவோம் என்றிருக்கின்றார். அந்தப் பயணத்தின் ஆபத்துப் பற்றி அறிந்திருந்தும் பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிடும்போது ஜவாப்தீனால் ஏனோ மறுக்க முடியவில்லை. சரி கந்தளாய் வரைக்கும்தானே என்று இருவரும் புறப்பட்டு வந்தது வரைக்கும்தான் எனக்குத் தெரியும். பிறகு நிலைமை அத்தனை தூரம் பிரச்சினையில்லை என்று அறிந்துதான் இவரும் தம்புள்ளைக்குப் போயிருக்கிறார்கள் போல.

'என்ன அனீஸ் தம்பி, கந்தளாய் சிங்கள ஆக்கள் என்ன சொல்றானொள்..?'

'வேறென்ன..? சும்மா முறுக்கிட்டுத்தான் இருக்கிறானொள். நம்மட ஆக்களும் கொஞ்சம் கவனமா இருந்தா நல்லது'  என்றேன்.

'இவனொள் அவனுந் தின்னமாட்டான் மத்தவனையும் தின்னவுடமாட்டான் அனீஸ். இவ்வளவு காலமும் நம்மளை உடாம அவனுகள்தானே தொழில் செய்தானுகள் இப்ப நம்ம செஞ்சா மட்டும் ஏன் இப்பிடி வவுறெரியிறானொள்?'

'அதுவுஞ் சரிதான்' என்று நானும் சமது நானாவும் தொடர்ந்து பேசிக்கொண்டே வர ஜவாப்தீன் மட்டும் பெரும் யோசனையிலாழ்ந்தவனாக தார் வீதியை வெறித்தபடி வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

எனக்கு அவனை நினைத்தால் பெரும் கவலையாக இருந்தது.

பாவம் அவனுக்கு ஆறு பெண் பிள்ளைகளும் ஒரு பையனும் இருக்கின்றார்கள். போதாதற்கு ஒருநாள் காரை ஓட்டிக்கொண்டு வரும் வழியில் நின்று தவித்துக்கொண்டிருந்த ஒரு யாருமில்லாச் சிறுபையனையும் தத்தெடுத்து வளர்க்கின்றான். அவன் டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில்தான் அத்தனை பேரும் சாப்பிடவும் படிக்கவும் வேண்டும். அதற்காக எவ்வளவு பாடுபட்டு அவன் உழைத்தாலும் அது போதவில்லை. நேர்மையான உழைப்பாளிகளிடம்தான் பணம் என்றைக்கும் தங்கியதில்லையே. ஒருகட்டத்தில் குடும்பச்செலவுகளைச் சமாளிக்கமுடியாமல் அவன் மனைவி வெளிநாடு சென்று உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். அதிலே அவனுக்கு சிறிதும் விருப்பமில்லாத போதிலும் ஆறு பெண்களை கரைசேர்க்கும் இயலாக் கடமையை நினைத்து மறுக்காமலிருந்தான்.
குடும்பத்தை எவ்வளவுதான் வறுமை வாட்டினாலும் ஜவாப்தீன் தன்னுடைய பிள்ளைகளை எவருடைய தயவும் இல்லால் ஒழுக்கமாகவே வளர்த்திருக்கின்றான். அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அருகிலுள்ள உள்ளுர் பாடசாலையில் படித்தாலும் மூத்தவள் ஜரீனை மட்டும் ஓஎல் பாஸ் பண்ணியதும் ஏஎல் படிப்பதற்காக திருகோணமலை நகரிலுள்ள முஸ்லீம் கல்லூரிக்கு அனுப்பவேண்டிய நிலைமை அவனுக்கு. அவளும் திறமையாகப் படிக்கக்கூடியவள் என்பதால் தன் சிரமத்தையும் பாராது அதைச் செய்திருந்தான்.

ஆனால் சிறிது காலமாக மூத்தவள் ஜரீன் தொடர்பான ஒரு விடயம் அவனுடைய மனதைக் குழப்பிக் கொண்டிருப்பது எனக்குத்தான் நன்றாகத் தெரியும். ஜரீன்  படிக்கும் அதே பாடசாலையிலே படிக்கும் ஒருவன் அவள் பின்னால் சுற்றித் திரிகின்றான் என்ற விடயம் அங்கு கெண்டீன் நடாத்திக் கொண்டிருக்கும் தூரத்து உறவுக்காரப் பையன் மூலமாக முதலிலே எனக்குத்தான் தெரிய வந்தது. என்னுடைய பால்ய நண்பனுடைய மகளின் விவகாரம் என்ற வகையிலே நான்தான் அந்த விடயத்தை பற்றி ஜவாப்தீனுக்கு இரகசியமாகக் கூறியிருந்தேன்.

அதைக் கேட்டதுமே ஜவாப்தீன் மனம் குழம்பிப் போனான். தன்னுடைய மகளின் சீரிய குணம் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் காதல், கத்தரிக்காய் விடயங்களிலெல்லாம் இறங்கித் தன்னுடைய படிப்பைக் கெடுத்துக் கொள்ளும் குணமுடையவளல்ல. தவிர அவள் குடும்பப் பொறுப்புத் தெரிந்த நல்லதொரு பெண்பிள்ளையும் கூட. ஆனாலும் இந்தக்காலத்தில் எதையும் இலேசாக எடுத்துக்கொள்ள கூடாது என்பதால் அதை தன் மகளிடமே பக்குவமாகக் கேட்கப் போவதாக கூறிய ஜவாப்தீன் பின்பு அந்த யோசனையை ஏனோ கைவிட்டுவிட்டான். ஜரீனுடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன்னால் அதுபற்றிக் கேட்க முடியாமலிருப்பதுதான் காரணம் என்று கடந்த வாரம் என்னிடம் சொல்லிக் கவலைப்பட்டிருந்தான்.

சிலவேளை அந்தப் பையன்தான் அவளை ஒருதலையாக விரும்பிக் கொண்டு பின்னால் திரிய ஜரீனுக்கு அதுபற்றித் எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டால் அவளை ஜவாப்தீனே வீணாகக் குழப்பி விட்டது போலாகி விடும் என்று அவனை நான் எச்சரித்திருந்தேன். அது அவனுக்கும் நியாயமாகப் பட்டிருக்க வேண்டும். கடைசியில் மகளிடம் விசாரிக்காமல் நண்பர்கள் நாங்கள் இருவருமாகச் சேர்ந்து அதை வேறுவழியில் விசாரித்தறியலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் அல்லும் பகலும் டாக்ஸி ஓட்டி சம்பாதித்துக்கொண்டு திரியும் ஜவாப்தீனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமிருக்கவில்லை. ஆகையால் ஜவாப்தீனுக்காக நான்தான் களத்தில் இறங்கி விசாரிக்க ஆரம்பித்தேன்.

அதே பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிந்த ஒருவரது மகள் மூலமாக முழுவிபரங்களையும் கேட்டறிய ஆரம்பித்தேன். அவன் பஸ்வண்டி கூடப் போய்த்திரும்பாத வெகுதூரத்திலுள்ள ஒரு பின்தங்கிய ஊர்ப்பக்கம் பிறந்து வளர்ந்தவனாம். தவிர, நான் முன்னர் யூகித்தது கூட முற்றிலும் சரியாகவே இருந்தது. ஆம், ஜரீனின் பின்னால் அந்தப் பையன் அலைந்து திரிவதும் அவள் அவனைப் பற்றி கணக்கெடுக்காமல் போவதும்தான் நடக்கின்றது என்பது உறுதியானது.

முதலில், அவனை யாரென்று ஒரு தடவை நேரிலே பார்க்க விரும்பினேன் நான். அதன்படி அவனுக்குத் தெரியாமல் பார்க்கவும் செய்தேன். அழகு தேவதை போலிருக்கும் ஜரீனை ஒருதலையாக விரும்பிக்கொண்டு திரியும் அந்தக் கிராமத்தான் தோற்றத்திலாவது சிறிது பொருத்தமாக இருந்தானா? அதுவும் கிடையாது. தூய்மையான வெண்புறாவுக்குப் பக்கத்தில் ஒரு கருங்குரங்கை வைத்தது போல அவன் கன்னங்கரேலென்றிருந்தான். தவிர, அவனொரு மாணவன் போலவே தோற்றமளிக்கவில்லை. கிராமத்திலே பலருடங்கள் பரீட்சைகளிலே பெயிலாகி கிடந்துதான் ஏஎல் படிக்க இங்கு வந்திருப்பான் போல. யாரிடமாவது அவனை ஜரீனின்  ஒன்றுவிட்ட சித்தப்பா என்று அறிமுகப்படுத்தினால் கேள்வி கேட்காமல் நம்பிவிடுவார்கள். அந்தளவு முதிர்ச்சியான தோற்றத்தில்தான் அவன் இருந்தான். எனக்குத் தகவல் கூறியவர்கள் மூலமாக பேச்சுக்கொடுத்து அந்தப் பின்தங்கிய கிராமத்தானின் குணங்களையும் எண்ணப் போக்குகளையும் நான் அறிந்துகொண்டேன்.

தன்னுடைய நோக்கத்திற்கு ஜரீன் சிறிதும் மசியாத காரணத்தால் அவளை வேறுவழியில் மடக்குவதற்காக அவளைத் தன்னுடைய காதலி என்று சகலரிடமும் சொல்லிக்கொண்டு திரிகின்றானாம். அதன் மூலம் ஒருவிதமான நிர்ப்பந்தத்தை அவள்மீது ஏற்படுத்தி அவளுடைய மனதைக் கலைப்பதுதான் அவனது நோக்கமாம். தவிர, இதற்காக அவளோடு கூடப்படிக்கும் சில நண்பிகளின் ஒத்தாசையையும் பயன்படுத்துகின்றானாம். ஜரீனையும் அவளது குடும்பத்தவர்களின் விபரங்களையும் தேடி அறிந்து வைத்திருக்கின்றானாம். ஜரீனை தன் பக்கம் எடுப்பதிலே யார் தடையாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தவொரு தீங்கும் செய்வதற்குத் துணியக்கூடியவனாம் என்றும் ஒரு தகவல் கிடைத்தது எனக்கு.


நான் இதை அறிந்ததிலிருந்து தவித்துப்போய் இருக்கின்றேன். கடந்த வாரமே
இதையெல்லாம் ஜவாப்தீனிடம் சொல்லி அவனை எச்சரிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் ஜவாப்தீனின் மனைவி திடீரென நாடு திரும்பியிருந்தாள். அதனால் அப்போதைக்கு அவனிடம் எதுவும் பேசாமல் இரண்டொரு தினங்கள் கழித்துச் சொல்லலாம் என்று ஒத்திப்போட்டிருந்தேன். அதற்குப் பிறகு வேலைப்பளு காரணமாக ஜவாப்தீனை சந்திக்க முடியவில்லை. இன்றுதான் கண்டிருக்கின்றேன். இப்பொழுதே கவலையாகத் தோற்றமளிக்கும் அவனிடம் இதையும் சொன்னால் இன்னும் சோர்ந்து விடுவானே.. என்ன செய்யலாம்?
'என்ன  ஜவாப்தீன், அனீஸ் தம்பி, ரெண்டு பேரும் ஒண்ணுமே பேசாம வாறீங்க.. ஏதும் பெரிய யோசனையோ?' என்ற சமது நானாவின் குரல் என்னைக் கலைத்தது. நானும் ஜவாப்தீனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். என்னையறியாமலே நீண்ட பெருமூச்சொன்று வெளியானது.

'ஒண்ணுமில்ல இவனுக்கு வெளிநாட்டுல இருந்து முந்தா நாள்தான் மனுஷி வந்திருக்கா.. அதுதான் மாப்பிளை கனவு காண்றாரு போல' என்றேன் நான், அவனைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டியவாறு.

அவனைக் கவலையிலிருந்து மீட்டு சிறிது உற்சாகப்படுத்துவதற்காகவே நான் அப்படிச் சொன்னேன். நண்பர்கள் நாங்கள் இருவரும் இப்படித்தான் வழமையாக வேடிக்கையாகப் பேசுவதுண்டு. இம்முறை சமது நானா கூட இருந்த காரணத்தால் அவன் என்னுடைய கிண்டலுக்கு பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாக வந்து கொண்டிருந்தான்.

அப்போது எங்கள் வேன் முள்ளிப்பொத்தானையை நெருங்கிக் கொண்டிருந்தது.

'என்ன ஜவாப்தீன், மனிசியோட ஏதும் பிரச்சினையா..?' என்று கேட்டார் சமது நானா.

'சேச்சே அதெல்லாம் ஒண்ணுமில்ல! இது வேற பிரச்சினை..' என்றான் ஜவாப்தீன் விரக்தியுடன். அவனுடைய பதில் எனக்கும் வேதனையைத் தந்தது.

'சொல்லக்கூடியதென்டாச் சொல்லுங்க ஜவாப்தீன். மனசுக்கும் பாரங் கொறையும்.. நம்மளுக்குள்ளதானே.. பிரச்சினை தெரிஞ்சா நம்மளால முடிஞ்சதைச் செய்யலாமே' என்றார் சமது நானா.

ஜவாப்தீன் சட்டெனத் திரும்பி என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. அவனுக்கும் அவரிடம் பிரச்சினையைக் கூறினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் போலிருந்தது.


 'அனீஸ், நீதான் அந்த 'பித்னா'வைச் சொல்லு மச்சான்' என்று கூறிவிட்டு அவன் வேனைச் செலுத்திக் கொண்டேயிருந்தான்.

நான் சமது நானாவிடம் அவனுடைய பிரச்சினையை ஒன்றும் விடாமல் எல்லாவற்றையும் கூறிமுடித்தேன். சிறிது நேரம் மூவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக வந்தோம். சமது நானாதான் மௌனத்தை முதலிலே கலைத்தார்.

'இந்த நாளையில உள்ள பொடியனொள் படமும் டீவியும் பாத்துப் பாத்து இப்பிடித்தானே இருக்கிறானொள்.. கண்ணுக்குப் பார்வையான பொம்புளப் புள்ளைகளை நம்பி டவுண்ல எங்கயும் வுடேலாம இருக்கு பாருங்க..!' என்றார் சமது நானா.

'அதோட அவனுக்கு ஆமியில யாரோ பெரியவனைத் தெரியுமாம். அதால தன்ட லவ்வுக்கு யாராவது குறுக்கால நிண்டா அவங்கள வுட்டுத் தூக்கிருவாராம் என்டெல்லாம் கதைச்சிருக்கான்.. அவன்ட திமிரப் பாத்தீங்களா சமது நானா?' என்றேன் எரிச்சலுடன்.

இது ஜவாப்தீனுக்குப் புதிய செய்தி. அதனால் அவன் அதிர்ச்சியடைந்தவனாக என்னைப் பார்த்தான்.

'இப்ப இதுதானே எல்லாருக்கும் வேலையாப் பொயிட்டு! ஆ ஊ என்டா ஆமியென்டுறதும் புலியென்றதும். நான் தெரியாமத்தான் கேக்கிறேன், அவனுகளுக்கு வேற வேலை இல்லியா என்ன?'

'இல்ல நானா, அந்தக் கறுவல் நாட்டான் கொஞ்சம் டேஞ்சரான ஆள்தானாம் என்டு அவனோட கூடப்படிக்கிற பொடியனுகள்ற கதையில இருந்து தெரியுது.. அவன் எதுவுஞ் செய்யக் கூடியவனாம்!'

'யாரு ஆளெண்டு ஒருக்கா எனக்கிட்ட காட்டி வுடுங்களேன்.. நம்மட சென்றல் றோட் பசார் பொடியனுகளுக்கிட்ட சொல்லிப் பல்லைப் பேத்துருவோம்' என்றார் சமது நானா சிறிது ஆவேசமாக.

'சீச்சீ.. அதெல்லாந் தேவையில்ல நானா. கொஞ்சம் ஆளை வெருட்டிவுட்டாப் போதும். மொதல்ல ஆள் யாரு எண்டு பாக்கணும்'  என்றான் ஜவாப்தீன்.

'அப்ப ஒங்களுக்கு இன்னமும் அவனைத் தெரியாதா?' என்று கேட்டார் சமது நானா வியப்புடன்.

'நான் கேள்விப்பட்டதுதான். இன்னும் ஆளத்தெரியாது..!' என்றார் ஜவாப்தீன்.

'எனக்குத் தெரியும்.! ஒரே ஒருதரம் சோனவாடிப் பள்ளியில பாத்திருக்கன்.. இன்னொருதரம் அவனை எங்க கண்டாலும் மதிச்சுருவன். ஆள ஒங்களுக்குக் காட்டித் தரட்டா நானா?'

'சரி, அனீஸ் நாளைக்கு பத்து மணிபோல டவுண்ல பசாருக்கு வாங்க. இந்தியாக்கார துவான் நானாட ஹாட்வெயார்லதான் நான் நிப்பேன். துவான் நானாட தூரத்துச் சொந்தக்காரனாம். ஒரு பாய் முஸ்லீம் பொடியன் இந்தியன் ஆமில கேர்ணலா இருக்கான். பீச்சடி கேம்ப்ல ஆளப் போய்ச் சந்திப்பம். அவனிட்ட சொல்லி ஏதாவது வேற கேஸ்ல ஆளப்புடிச்சி ரெண்டு தட்டுத் தட்டச் சொன்னா தம்பி ஊருக்கே ஓடிப்போயிருவான்..'

'அதெல்லாம் வாணாம் சமது நானா..' என்று மீண்டும் மறுத்தான் ஜவாப்தீன். அவன் எப்போதும் இப்படித்தான். ஒரு சின்ன எறும்புக்குக்கூட தீங்கு செய்ய விடமாட்டான்.

'சும்மாயிரு ஜவாப்தீன்..! இனி இது ஒன்ட பிரச்சினையில்ல.. நாங்க பாத்துக்கிறோம்..'

'நீங்க கவலைப்படாதீங்க.. ஜவாப்தீன். இதைப் போய் ஒங்கட புள்ளைக்கிட்டயும் கேக்க வாணாம். மனிசிக்கிட்டயும் சொல்ல வேணாம்.  நீங்க எனக்கு அவசரத்துக்கு ஒதவிக்கு வந்திரிக்கீங்க. அதுக்கு நானும் ஒதவி செய்யணும். சரியா? அடுத்த கெழமை ஆள் பள்ளிக்கூடத்துல இரிக்க மாட்டான். நீங்க மனிசி புள்ளைகளோட சந்தோசமா இரிங்க.. அல்லாட ஒதவியால எல்லாஞ் சரியா வரும். என்ன?' என்றார் சமது நானா.

ஜவாப்தீன் எதுவுமே பேசவில்லை. வெறிச்சோடியிருந்த வீதியின் குறுக்கே நீண்ட தோகை கொண்ட ஆண்மயில் ஒன்று ஓடிமறைந்தது.

சிறிது நேர ஓட்டத்தில் கித்துல் உத்துவ எனும் காட்டுப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தோம். இன்னும் சில நிமிடங்களிலே இராணுவச் சோதனைச்சாவடி வந்து விடும். இங்கிருந்து ஊருக்கு இன்னும் பதினைந்து கிலோமீற்றர் தூரம் மட்டுமே இருந்தது. இனிவரும் பாதையின் இருபுறமும் மனிதக் குடியிருப்புகளே இல்லாமல் வெறும் காடுகள்தான் இருக்கும். இந்தப் பிரதேசத்தினுள் பொதுவாக இராணுவத்தினர் தவிர வேறு எவரும் நடமாடுவது கூடக் கிடையாது. இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது இஷ்டத்திற்கு வேகமாகச் செல்ல முடியுமென்பதால் நேரத்திற்கு வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற சந்தோசம் இருக்குமே தவிர மனதிலே நிம்மதி இருக்காது.சோதனைச் சாவடியில் வேனின் வேகத்தைக் குறைத்து இடது ஓரமாக நிறுத்தினான் ஜவாப்தீன். சாரதி இருக்கையிலிருந்து இறங்கிச் சென்று காவலரணிலே இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் ஆவணங்களைக் காண்பித்து வாகனப் போக்குவரத்தைப் பதிவு செய்யும் புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான். அவன்  வருவதற்கிடையில் சிப்பாய்கள் இருவர் துப்பாக்கி சகிதம் வேனைச் சோதனை செய்து முடித்தார்கள்.

'என்ன ஜவாப்தீன்.. என்ன கேட்டானொள் சென்றியில..?' என்று கேட்டார் சமது நானா.

'மூணுபேர்ர பேரையும் கேட்டானொள். குடுத்தேன். மூணுபேரும் முஸ்லீம்தானே என்டு கேட்டான். ஓமென்டேன். மூணு பேரையும் கொப்பில வேறயா ஒரு தாளில எழுதிப்போட்டு.. அதில என்ட பேரைச்சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருந்தான் அந்தா வயர்லஸ் வச்சிக்கிட்டிருக்கிறானே அந்த தடியன் ஆமிக்காரன்.' என்று அவனைக் காண்பித்தான் ஜவாப்தீன்.

'ஒன்ட பேரையா.. அது ஏன்..?' என்று கேட்டேன் நான் யோசனையோடு.

'அது ஒண்ணுமில்ல.. நம்மளுக்கிட்ட காசு கீசு ஏதும் கழட்டலாமென்டு யோசிச்சிருப்பானொள்.. பொழுதுபடுமட்டும் காடு முழுக்க இவனொள்தான் நிப்பானொள். இவனொளை பகைச்சிக்கிட்டா தொழில் செய்ய ஏலாது.. நீங்க றைவர்தானே அதான் ஒங்கட பேரைக் கிறுக்கியிருப்பான்.. பார்ப்பம் இடையில என்னமாவது கேட்டாக் கொஞ்சம் குடுத்திட்டுப் போவலாம்..' என்று சமாதானம் சொன்னார் சமது நானா.   

மீண்டும் நாங்கள் வேனில் ஏறி திருகோணமலையை நோக்கிப் புறப்பட்டபோது நேரம் பிற்பகல் மூன்று மணியைத் தாண்டியிருந்தது.
வேறு வாகனங்களின் போக்குவரத்துக் கூட இல்லாமல் வெறிச்சோடியிருந்த வீதி வழியே உச்ச வேகத்தில் வேனைச் செலுத்திக் கொண்டிருந்தான் ஜவாப்தீன். இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றர் தூரம் சென்றதும் ஒரு திருப்பத்தில் வீதியின் மத்தியில் சீருடையணிந்தவர்களும் வேறு சிலருமாக ஐந்தாறுபேர் நின்றிருந்து எங்கள் வேனை மறித்தார்கள்.

வேகத்தைக் குறைத்து வேனை ஓரங்கட்டியதும் சற்றுத் தள்ளி நின்றிருந்த சிலரிலே ஒருவன் மீது என் பார்வை வீழ்ந்தது. இதற்கு முன்பு அவனை எங்கோ பார்த்தது போலிருந்தது எனக்கு. அவன் இலங்கை கிரிக்கட் வீரர்கள் அணியும் தொப்பி போல ஒன்றை அணிந்து சாதாரண உடையில் நின்றிருந்தான். அந்தக் கறுப்பன் அங்குள்ள ஒரு மரத்தின் கீழே நின்றிருந்த சீருடைக்காரர்களோடு ஏதோ பேசிக்கொண்டு நின்றிருந்தான். எங்களைப் பார்த்ததும் தான் அணிந்திருந்த தொப்பியை கண்ணை மறைக்கும்படியாக இழுத்துவிட்டுக்கொண்டு மறுபுறம் திரும்பி நின்றான். எனக்கு அவன் மீதே பார்வையும் சிந்தனையும் சென்றது. ஆனால் அவன் யார்.. எங்கு பார்த்தேன் என்பது சட்டென நினைவுக்கு வரவில்லை.

'அந்த முகம்.. அவனை எங்கே பார்த்தோம்..?'

அதற்கிடையில் அவர்களிலே சிலர் வேனின் அருகிலே வந்து, அதே வீதியில் சற்றுத்தள்ளி பெரும் மரமொன்று விழுந்திருப்பதால் தொடர்ந்து செல்ல முடியாது என்றும் அதை வெட்டி அப்புறப்படுத்தும் வேலைகள் நடைபெற இரண்டு மூன்று மணிநேரம் தாமதமாகலாம் என்றும் கூறினார்கள். அவசரமாகச் செல்ல விரும்பினால் மட்டும் இங்கிருந்து உட்புறமாக காட்டுக்குள்ளாகச் செல்லும் செம்மண் கிறவல் பாதையினூடாகச் சுற்றிச் சென்று மீண்டும் பிரதான வீதிக்கு ஏறிப் பயணத்தைத் தொடரலாம் என்று சிங்களத்தில் கூறினார்கள்.

தாமதிக்காமல் வீடு செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்த காரணத்தால் ஜவாப்தீன் எதையும் யோசிக்காமல் காட்டுக்குள் செல்லும் செம்மண் பாதைக்கு வேனைத் திருப்பி ஓட்ட ஆரம்பித்து விட்டான். நானும் அந்த தொப்பியணிந்து நின்ற கறுப்பனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த காரணத்தால் உடனடியாக வேறு எதையும் தீர்மானிக்க முடியாதவனாக இருந்து விட்டேன். ஆனால் எனக்கு உள்ளுர ஏதோ தப்பாக நடக்கிறது என்று தோன்றியது. அதற்குள் வேன் அந்த கிறவல் காட்டுப் பாதையிலே முக்கால் கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே வந்து விட்டிருந்தது. சட்டென எனக்குச் சந்தேகம் வந்து பின்னால் திரும்பிப் பார்த்தேன். நான் யூகித்தது சரியாகவே இருந்தது. எங்களைத் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் சிலர் ஆவேசமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களது கையிலே பொல்லு தடிகளும் நீண்ட வாள் கத்திகளும் இருந்தன. அவர்கள் அனைவரும் கண்கள் தவிர முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கட்டியிருந்தார்கள்.

'ஆண்டவனே.. ஜவாப்தீன்! நம்மளை ஏமாத்திப் போட்டானொள்றா..! ஒடனே வேனைத் திருப்பு! திருப்பு..! அவனொள் கிட்ட வாறதுக்குள்ள திருப்பி ரோட்டுக்கு பாஸ்ட்டா உடுறா!' என்று ஓலமிட்டேன். அப்பொழுதுதான் சமது நானாவுக்கும் கூட நிலைமையின் தீவிரம் உறைத்திருக்க வேண்டும். அவரும் பதற்றமாகி, 'நாசமாப் போற நாய்கள் பொய் சொல்லி ஏமாத்திப் போட்டானொள்றாப்பா! அல்லாஹ் எங்களைக் காப்பாத்து! யா அல்லாஹ்!' என்று அழுதபடி ஜவாப்தீனிடம் உடனடியாக வேனைத் திருப்புமாறு கத்தியபடி எழுந்து கொண்டார்.

ஆனால் ஒரு மோட்டார் சைக்கிளைக்கூட திருப்புவதற்குச் சிரமமான ஒடுக்கமான காட்டுப் பாதை அது. அதனால் ஜவாப்தீன் வேறுவழியின்றி செம்மண் பாதையின் ஓரத்தில் இருந்த காட்டுப்பற்றைக்குள் விட்டு வேனைத்திருப்பியெடுத்து மீண்டும் தார்ரோட்டுக்கு விட முயற்சித்தான். ஆனால் எங்கள் கெட்ட நேரம் ஓரத்தில் இறங்கிய வேனின் சக்கரங்கள் ஒரு சேற்றுக்குட்டைக்குள் இறங்கிவிட்டன. எவ்வளவு முயன்றும் மரக்கறிப் பொதிகளுடன் இருந்த வேனைப் பின்னோக்கி எடுக்க முடியவில்லை. அதற்கிடையில் அந்தக் கொலைவெறியர்கள் எங்கள் மூவரையும் நெருங்கி விட்டனர். நாங்கள் சுதாரித்து தற்காப்பில் இறங்குவதற்குள் வேன் கதவைத் திறந்து எங்களை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தார்கள்.

'டேய் ஏண்டா அடிக்கிறீங்க.. விடுங்கடா' என்று ஜவாப்தீனும் சமது நானாவும் அலறுவது கேட்டது. இனிமேல் தப்பிப்பதற்கு வழியில்லை என்று புரிந்ததும் எனக்கு ஆவேசம் வந்துவிட்டது. சில அடிகளை வாங்கிக் கொண்டே கடைசி முயற்சியாக அவர்களிலே ஒருவனின் கையிலிருந்த பொல்லை நான் பறித்தெடுத்து பலத்தைக் கூட்டி அவர்களைத் தாக்க ஆரம்பித்தேன். உடனே அவர்கள் ஜவாப்தீனையும் சமது நானாவையும் விட்டு விட்டு என்னைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். என் தலையிலும் தோளிலும் மடமட என்று அடி விழுந்து கொண்டிருந்தது.

என்னால் முடிந்தவரை போராடினேன். அந்தக் காடையர்களில் இரண்டு பேரையாவது பலம் கொண்ட மட்டும் மண்டையில் அடித்து வீழ்த்தினேன். அவர்களின் மண்டை பிளந்து இரத்தம் பீறிட்டது. இனி அவர்கள் எழுந்திருப்பது சந்தேகம்தான். ஆனாலும் அவர்கள் ஆறு ஏழுபேருக்கும் அதிகமிருந்ததனால் என்னால் சமாளிக்க முடியவில்லை. ஒருபக்கம் ஜவாப்தீன், 'அனீஸ்.. அனீஸ் உட்டுட்டு ஓடி வாடா டேய்! வாடா!' என்று கத்துவதும் காதிலே கேட்டது. ஆனால் அதற்கெல்லாம் நேரமிருக்கவில்லை எனக்கு. சரமாரியான தாக்குதலினால் என் கண்கள் கலங்கியது. நெற்றியில் வழிந்த இரத்தம் என் பார்வையை மறைத்தது. மூக்கிலும் வாயிலும் இரத்தமும் உமிழ்நீரும் கோர்த்து வழிந்து கொண்டிருந்தது. அப்போதும் என் கையிலிருந்த பொல்லைக் கொண்டு இயன்றவரை அவர்களை எதிர்த்து நின்றுகொண்டே 'ஜவாப்தீன் தார் ரோட்டுக்கு ஓடு! ஓடு! ஓடித்தப்புடா!' என்று கத்தினேன்.

திடீரென எனது பின் மண்டையில் இடிபோல ஒரு தாக்குதல் இறங்கியது. நான் நிலை தளர்ந்து நிலத்தில் விழுந்ததும் மின்வெட்டியது போல மூளைக்குள் பொறிகள் பறந்தன. சூழ்நிலைக்கு சம்பந்தேமேயில்லாமல் குழப்பமான பல பிம்பங்கள் கனவுகளில் வருவது போல தொடர்பில்லாமல் செருகிக்கொண்டு தோன்றித் தோன்றி மறைந்தன..  என் மகள் றிஹானா சிரித்த முகத்தோடு 'வாப்பா! வாப்பா!' என்று கூப்பிட்டாள். அப்போதுதான் பிறந்த குழந்தையொன்று இரத்தக்கறைபடிந்த உடலோடு இரு கைகளையும் நீட்டி என்னைக் கிணற்றுக்குரலில் அழைத்தது. காட்டுச்செடிகளின் வாசம் நாசியைத் துளைத்தது. ஜவாப்தீனின் மகள் ஜரீன் பாடசாலைச் சீருடையில் அந்தக் கறுப்பனோடு நின்று சிரித்தாள்.. ஆ! நாங்கள் வேனைக் காட்டு வழிக்குத் திருப்பிய இடத்திலே கண்ணை மறைத்து தொப்பியணிந்து சீருடையினரோடு பேசிக்கொண்டு நின்றானே ஒருவன்.. அவன் யாரென்று அப்போதுதான் ஞாபகம் வந்தது.. அவன்.. அவன் வேறுயாருமல்ல.. ஜவாப்தீனின் மகள் ஜரீனின் பின்னால் அலைந்து திரிந்தானே அந்தக் கன்னங்கரேல் நிறக் கிராமத்தான்தான்.. ஆமாம்! அவன்தான்.. அவனேதான்!

 'ஜவாப்தீன் ஓடுறா! ஓடித் தப்புடா! ஒன்ட ஜரீனைக் கா..ப்பா..த்....'

தூரத்தில் யாரோ ஓடுவது போலவும் சில உருவங்கள் துரத்துவது போலவும் தலைகீழாக கலங்கித் தெரிந்தது. மீண்டும் என் மண்டையிலே மற்றொரு மின்வெட்டு பளீரிட.. அதன் பிறகு உலகமே சட்டென இருண்டு போனது எனக்கு.


-மூதூர் மொகமட் ராபி
(2014.02.01)