Saturday, September 3, 2011

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை!




அடையாள   அட்டைகள்









ன்றாட வாழ்வில் நாம் பொதுவாக பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்துகின்றோம். பாடசாலை அடையாள அட்டைகள், தேசிய அடையாள அட்டை, தொழில் நிறுவன அட்டைகள் என்று பல்வேறு அடையாள அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் நமது புகைப்படம் மற்றும் முக்கியமான விபரங்கள் காணப்படுவதுண்டு.


ஆனால், காலம் செல்லச் செல்ல நமது அடையாள அட்டைகளில் இருக்கும் புகைப்படத்துக்கும் நமது உண்மையான தோற்றத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் தோன்றவாரம்பித்து மெல்ல மெல்ல அந்த வித்தியாசங்கள் அதிகரித்து, ஒரு கட்டத்தில் உற்றுப்பார்த்தாலும் கூட ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்க முடியாதளவு  வேறுபட்டுப் போய் விடுவதும்  உண்டு.


புகைப்படம் மட்டுமல்ல கால ஓட்டத்தில் நமது சுயவிபரங்களில் கூட சில மாற்றங்கள் உண்டாகிவிடுவதுண்டு. ஒரு காலத்தில் மாணவனாயிருப்பவர் தொழில் செய்பவராவதும் தனியாளாய் இருப்பவர் மணமுடித்தவராவதும் போன்ற மாற்றங்களைக் கூறலாம்.


இவ்வாறாக நமது தோற்றத்திலும் சுயவிபரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்போது அவற்றினை நாம் வாழ்வின் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு வேறு புகைப்படம் பதிய விபரங்களை உள்ளடக்கிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து 'மாட்டேன் போ! நான் சின்ன வயதில் எடுத்த படம்தான் அழகாயிருக்கிறது.' என்று நீங்கள் பிடிவாதம் பிடித்துக் கொண்டிந்து புதிதாக  அடையாள அட்டை ஒன்றைப் பெற மறுத்தால் சிரமம் யாருக்கு என்று யோசித்துப் பாருங்கள்.


 ஒரு பழைய அடையாள அட்டை - அது ஒருகாலத்தில் எவ்வளவு பயனுள்ளதாக இருந்த போதிலும்- எப்படி இன்றைய தேவைக்கு உதவாமல் போய்விடுகின்றதோ அப்படித்தான் நாம் ஒருகாலத்தில் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த சில விடயங்களும் வழக்கொழிந்து போய் விடுகின்றன.

இது காலத்தின் யதார்த்தம். விரும்பியோ விரும்பாமலோ இதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கின்றது. மாறாக, வரட்டுப்பிடிவாதம் பிடித்து நீங்கள் நின்றால் இன்றைய யதார்த்த உலகை புரிந்து கொள்வதிலும் அதற்கேற்ப உங்கள் வாழ்வியலை எடுத்துச் செல்வதிலும் இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இப்போது யோசித்துப் பாருங்கள்....

இன்று நாம் வாழ்வியல் தேவைகளுக்காக பின்பற்றி வருகின்ற சித்தாத்தங்கள், கொள்கைகள் உட்பட எல்லாமே நமது அடையாள அட்டைகள் போன்றதுதான். அவற்றிலே தெளிவாக  நாள், மாதம், ஆண்டு கொண்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையே தவிர அவை அனைத்துக்கும் ஒரு செல்லுபடியாகும் கால எல்லை இருக்கத்தான் செய்கின்றது.


நாம் எவ்வளவுதான் புனிதமாக நினைத்துக் கொண்டிருந்தாலும்   இயற்கை எனும் இரக்கமற்ற சிற்பி காலம் எனும் உளி கொண்டு அனைத்தையும் செதுக்கிக் கொண்டேதான் இருக்கின்றான்.


வேறு வார்த்தைகளிலே சொல்லப்போனால் மாற்றம் என்ற ஒன்று மட்டும்தான் என்றுமே மாறாமல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரே விடயம்.


தவிர, இன்றைய இளைய தலைமுறைச் சிறார்களின் பரந்துபட்ட அறிவுக்கு இடம்கொடுக்கும் வகையில் நாம் அனைவருமே தயாராக வேண்டியிருக்கின்றது. ஒரு காலத்தில் 'அது ஆகாது' என்றோ 'இது கூடாது' என்றோ கூறினாலே போதும் ஒரு விடயத்திலிருந்து இளையவர்களைத் தடுத்துவிடக்கூடியதாக இருந்தது.


பின்பு அந்த நிலை சிறிது மாற்றமடைந்து 'அது ஆகாது!' என்பதற்கு நாம் ஏதாவது விளக்கம் தர வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு அந்த விளக்கம் கூட அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டியுள்ளது என்பதுதான் மறுக்கவே முடியாத யதார்த்தம்.


நிலைமை இவ்வாறிருக்கும் போது இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு நமது பழைய துருப்பிடித்த கொள்கைகளையே இன்னும் வரட்டுத்தனமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தால் வேலைக்காகுமா?


இடைவிடாது மாறிக் கொண்டேயிருக்கும் நமது உலகில் சிலபேரின் பேச்சுக்களைச் செவிமடுத்திருப்பீர்கள். அதாவது, தாங்கள் வேதவாக்காகக் கருதும் அல்லது நம்பும் சித்தாந்தங்கள் அல்லது கொள்கைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகளில் வாழ்ந்திருப்பார்கள். அவை எதுவித மாற்றத்திற்கும் உட்படாமல் இருக்கின்றது என்று பெருமையடிப்பதையும் கூட பார்த்திருப்பீர்கள்.


 இவர்களுக்காகச் சிரிப்பதா அழுவதா கூறுங்கள்?


 சரி, அதெல்லாமிருக்கட்டும், 'மாற்றமேயுறாதிருக்கும்'  அவற்றைச் சிலாகித்து, எக்காலத்திற்கும் பொருந்திப்போகக் கூடியவை என்று  இவர்கள் கூறுவார்களேயானால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாக இருக்கும்.

இதுகுறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்!


- Jesslya Jessly


1927     இருவருமே(அன்னை) தெரேஸாதான்!   1997






"எல்லாமே மாற்றமடையும் -என்பதைத்தவிர மற்ற எல்லாமே மாற்றத்திற்குள்ளாகும்!"

Friday, September 2, 2011




சிறகுகள்
வலைப்பூவைப்
பார்வையிடும்
நண்பர்கள்
அனைவருக்கும் 
எனது உற்சாகமான
ரமழான் வாழத்துக்கள்!

இந்தப் பண்டிகையை
வெறுமனே
களியாட்டங்களாய்
மட்டும்
கொண்டாடித்
திருப்தியடைந்து விடாமல்
நமது வாழும்
சூழலிலுள்ள
சக மனிதர்களில்
தேவையுள்ளவர்களிலே
குறைந்தபட்சம்
ஒருவருக்காவது 
போதுமான
உணவு, உடை,
மற்றும்
அவசியமான
பண்டங்களை
வழங்கி
இன்புறுவோம்!
Jesslya Jessly

Thursday, September 1, 2011

நாயுடன் ஒரு பேட்டி

('செருப்புடன் ஒரு பேட்டி' என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையைப்  கடித்ததன் விளைவு)






உங்கள் இனம் பற்றி ஏதாவது இயம்புவீர்களா?

உதவுவதற்கென்றே உருவெடுத்தோம்
மிருகமெனப்பெயரெடுத்தும்
காடுகளில் வாழ்ந்ததில்லை
வீடுகளன்றி எமக்கு போக்கிடம் வேறில்லை.
காவல் காக்கும் கடமைதான் கடவுள் எமக்கு தந்த வரம்
மிச்சம் மீதிவரும் போது நாங்கள் இருப்பதும் தெரியவரும்
வித்தை காட்டியும் பிழைப்பார்கள்
எம்மை விற்றும் பிழைப்பார்கள்.

ஒழுங்காய் உணவு தரவில்லை என்று புலம்புகிறீர்களே உன்னதமான நன்றியறிதலுக்கு உங்களைத்தானே உதாரணமாகச் சொல்கின்றோம்.

அன்பு பொங்கி வரும் போது 'நன்றியுள்ள நாய் 'என்பீர்கள்
சந்தோசம்.
ஆத்திரம் தலைக்கேறினால்
நன்றி கெட்டநாய் என்கிறீர்களே!

சரி போகட்டும் முதல் முதலாக உம் இனத்தை விண்ணுக்கனுப்பிப்பி மண்ணில் பெருமை தரவில்லையா?

வாவ்..வவ.வவ்(அஹ்தாகப்பட்டது- ஹஹ்ஹஹ்ஹா!...)
விண்ணுக்கெமமையணுப்பினீர்
விக்கினமின்றித் உதவி புரிந்தோம். எம்மைப்பலியாக அனுப்பி பரீட்சித்தீர்
பின்னர் குஷியாகப்போகப்புறப்பட்டீர்.
ஓகே...ஓகே..காட்டில் வாழக்கடவாமல் வீட்டில் வாழவழிவிட்டோம். வீட்டுவாயிலிலும் எமதன்றி உமது பேரையன்றோ பொறித்திடடோம். மட்டுமா 'கடிநாய் கவனம்' என்றொரு கௌரவத்தையும கச்சிதமாய் தந்திட்டோம்.

கள்ளர் கயவர் அண்டாது துள்ளிக்குதித்து வெருண்டோட
எழுதியிருந்தால் தப்பில்லை.
பஞ்சம் பசி பட்டினி என்று
கெஞ்சித்திரியும் மாந்தர்களை
மறித்துது; திருப்பி அனுப்பி விட
நாங்கள் இல்லா வீடுகளிலும்
எங்கள் நாமம் உண்டல்லோ?!

உயர் தர வீடுகளிலும் உல்லாசமாக வாழ்கிறீர்கள் தானே?

கழுத்தோடு கட்டி கையில் வைத்துக்கொண்டு
பிஸ்கட்டை எறிந்து பிடிக்கச்சொல்லி
என் உணவு வேளை அங்கு உல்லாச வேலையாகிறது.(.......மௌனம்........)
மாடிவீட்டு மழலைகள் போல்
தெருவோரச் சுதந்திரத்துக்காக தினம் ஏங்குகிறோம்.
அக்கரைப்பச்சைகள் எங்களுக்கும் உண்டு.

சரி சரி. கொஞ்சம் பொதுவாகப் பேசுவோம். அது ஏன் அடிக்கடி வைக்கோல் போரில் போய் படுக்துக்கொள்கின்றீர்கள்.

நாங்கள் படுப்பது கிடக்கட்டும். .அது உங்கள் 'படுப்பு' வகையறா போன்றல்ல.
சீசனுக்கு சீசன் ஊரூராய் வந்து. உள்வீடுவரை
அழையாது புகுந்து-கவனியும் அழையாது புகுவது நாங்கள் மாத்திரம் அல்ல
உருகிவழிந்து உணர்ச்சியூட்டி உங்கள் பொன்னான வாக்குகளை
வாரியள்ளிக் கொண்டு போய் கூவிவிற்றுவிட்டு
உயர் சபையில் போய் ஒரு ஆட்சி முடியுமட்டும்
'படுத்து'திரிகிறார்களே !!!!!
அவர்களது நெஞ்சுச்சட்டை பிடித்து
நாக்கைப்பிடுங்கிச்சாக
நாலு கேள்வி கேட்க துணிவிருக்கா
(மௌனம்)
அதாவது
 உரிமையுள்ள பசு உண்ண வந்தால் ஒன்றும் செய்வதில்லை.
ஊரான் பசு வந்தால் உறுமத்தவறுவதில்லை. அவ்வளவுதான்.

உண்மை. அந்தவகையில் நீங்கள் எவ்வளவோ மேல். இன்னொன்று .எதில் அடிபட்டாலும் காலைத்தானே தூக்குகிறீர்கள். அது ஏன்?

வேறெதற்கு......
எல்லாம் ஒரு அனுதாபத்தை எதிர் பார்த்து;த்தான்
இருந்தாலும்
ஏனெதற்கென்றில்லாமல் நீங்கள் எடுத்ததற்கெல்லாம அனுதாபம் தேடி
கண்ணீர் விடுதலிலும் பார்க்க
எம் கால் தூக்கல் பிசகில்லை காண்.

சரி... .கால் கிடக்கட்டும். அது ஏன் உங்கள் வாலை நிமிர்த்தவே முடியாதுள்ளது?

ஏன் முடியாது.
நீங்களாக நினைத்தால் முடியாது.
நாங்கள் நினைக்க வேண்டும். எனவே எங்கள் வாலை நிமிர்த்துவது இருக்கட்டும்.
எங்கள் வால் நிமிர்ந்தாலும் நிமிரும். உங்களில் வால்பிடிப்பவர்களை நிமிர்த்தமுடியும்h? (மனதுக்குள்: வால் ஒன்றுதான் குறை)

இந்த கால் வால் என்று நமது பேட்டி வந்துவிட்டதால் அந்தவரிசையில் அவசியம் ஒன்று கேட்டாக வேண்டும். அதாவது குறிப்பாக மின்கம்பங்களைக்கண்டு விட்டால்  உடனே அபிசேகஞ்செய்யத்தொடங்கிவிடுகிறீர்களே......

பதில் ரொம்பமுக்கியமோ?
அடுத்தவனின்
அந்தரங்கம் அறிந்து
அம்பலப்படுத்தி
அதில் சுகங்காணும்
கேவலமான புத்தியை
உங்களோடு மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
................ அவசியம் தெரியணுமாம்..வாhhhவ்-(அதாவது- 'ஹூம்ம்ம்...')

எதற்கெடுத்தாலும் விரக்தியாகவே பேசுகிறீர்களே. திருப்திப்படும்படியாக எதுவுமில்லையா?

ஏன் இல்லை.
'நாயைச் சுடுவது போல்...'
என்பது மாறி
'மனிதனைச்சுடுவது போல் ;;;
என்று
நாம் கூறும் நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்களே!!!

அதுவும் அப்படியா....சரி...உங்களுக்குப் பிடித்த கூற்று.

நன்றி கெட்டமக்களைவிட
நாங்கள் மேல் என்று
நீங்கள் சொல்வது.

(ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி நமக்கே கடிவிழுதே!!!ருட்டமாத்தவேண்டியதுதான்.) ஓக்கே  உங்களுக்கும் நிறைய நியாயமான பிரச்சிளைனகளும் பொறுப்புக்களும் கடமைகளும் இருப்பது தெரிகிறது. அதனால உங்களவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூடி பிரச்சினைகள் தேவைகள் பற்றிப் பேசினால் என்ன?

எம்மை தனியாகக் கண்டாலே கல்லெடுக்கிறீர்கள்.
இந்த லட்சணத்தில் எங்கே கூட்டம் கூடுவது?!
மீறி கல்யாணவீட்டிலோ கத்ததம் பாத்தியாவிலோ
ஒன்று கூடினால்
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே திடீர்தாக்குதலுக்கு உள்ளாகி விடுகிறோம்.
இதை யாரிடம் போய்முறையிடுவது. முறையிட்டாலும் முடிவுகிட்டுமா?
ஒருவிசாரனைக் கொமிசனைப்போட்டு மூடி. இனந்தெரியாத நபர் என்று எங்களுக்கும் தீர்ப்புத்தந்து விடமாட்டீர்கள்.?

இறுதியாக ஒரு கேள்வி. எதையாவது பற்றி சீரியசாக சிந்திப்பதுண்டா?

உண்டு.
சில தலைவர்களையும் சில அதிகாரிகளையும்
பார்க்கும் போது
அவர்களை அடித்து
மன்னிக்கவும் கடித்து
விரட்டிவிட்டு
அவ்விடத்தை
நாங்களே வகித்தாலென்ன என்று சிந்திப்பதுண்டு.....
என்ன சொல்கிறீர்கள்???


Mutur- Abdullah

Monday, August 29, 2011

காலடிச்சுவடுகள்





டந்து வந்த பாதையில் பதிந்திருக்கும் நமது சொந்தக்  காலடிச் சுவடுகளைத் திரும்பிப் பார்ப்பதிலே ஒரு சுகம் இருக்கத்தான் செய்கின்றது. இப்போதிருந்து நாம் பிறந்த ஆண்டு வரை அல்லது மறுதலையாக பிறந்த ஆண்டிலிருந்து இப்போது வரை ஒவ்வொரு வருடமும் நமக்கு நிகழ்ந்த  வாழ்க்கையின் பிரதான மைல் அல்லது கிலோமீற்றர் கற்களை குறித்து வைத்துப் பாருங்கள். நமக்கே சுவாரசியமாக இருக்கும்.

உதாரணமாக இங்கே எனது நெருங்கிய நண்பர் ஒருவரது குறிப்புக்களை  அவரது அனுமதியுடன் தருகின்றேன். இவர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு உரியவற்றைத் தொகுத்திருக்கின்றார்.  நீங்களும் செய்து பாருங்களேன்!

 Jesslya Jessly


2011   பல சிறுகதைகள் எழுதினேன். பத்திரிகைகளுக்குரிய வகையில் எனது போக்கை மாற்றாமல் எனது திருப்திக்கே  எழுதியதால்  பிரபல தேசியப் பத்திரிகை ஒன்றில் ஒரு கதை மட்டுமே -"பலிக்கடா"- பிரசுரமானது.  எனக்கென  ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்


2006  எனது தகப்பனுக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்தோம். வீட்டைச் சுற்றி எல்லை மதில் கட்டினேன். புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை முதன்முதலாக வாங்கினேன்.



2001   பேராதனை கலாசாலையில்  பயிற்சியை வெற்றிகரமாக முடித்து மீண்டும் பழைய இடத்துக்குக்குத் திரும்பியிருந்தேன். அங்கு சில சதி முயற்சிகளைத் துணிவுடன் போராடி முறியடித்தேன்.



1996   இரண்டாவது குழந்தைக்குத் தகப்பனானேன். மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. மனைவியையும் குழந்தைகளையும் உடனடியாகப் பிரிய மனமின்றி  பயிற்சியை இரு வருடங்களுக்கு ஒத்திப்போட்டேன்.



1991  பல பிரச்சினைகள் காரணமாக பல்கலைக்கழகப் படிப்பைத் துறந்து அரச தொழிலுக்கு வரவேண்டிய நிலையில் சரியான முடிவெடுத்து ஊர்திரும்பினேன். மனமுடைந்து விடாமலிருந்ததில் காதலியின் அன்பும் நண்பர்களின் ஒத்தாசையும் எனக்கு மிகப்  பெரிய பலமாக இருந்தன.

1986   ஊரில் ஏற்பட்ட இனமுறுகல் கலவரங்களையடுத்து மீண்டும் உயர்தரம் படிப்புக்காக வெளியுர் வாசம். தேவையில்லாத காதல் உட்பட பல பிரச்சினைகளைச் சந்தித்த ஆண்டு.


1981   மீண்டும் ஊரையும் நண்பர்களையும் பிரிந்து வெளியுர் கல்லூரியில் படிப்பு.

1976  எனது குடும்பத்தினரின்  மீள் வருகையின் பின்னர்  உள்ளுர் நண்பர்களுடன் சொந்த ஊரை சல்லடையிட்டது.


1971  இரம்மியமான சிறு கிராமத்தில் வசிப்பு. பால்யபருவ நினைவுகளின் மண்டலம் மனதை விட்டு நீங்காதது.