Wednesday, October 31, 2012

மூதூர் மாணவி பாத்திமா பாஃரா ரோஷன் கவிதைப்போட்டியிலே வெற்றி
 
தி/ மூதூர் அந்நஹார் மகளிர் கல்லூரி யைச் சேர்ந்த தரம் 7   மாணவி செல்வி. பாத்திமா பாஃரா ரோஷன் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியிலே மூன்றாம் இடத்தை வெற்றியீட்டியுள்ளார். இவர் திருகோணமலையில் தொழில்புரியும் மூதூர் வர்த்தகரான ஜனாப். முஹம்மது பாயிஸ் - பரீன் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் மறைந்த அதிபர் எம்.எம்.கே. முஹம்மது அவர்களின் பேத்தியுமாவார்.
 
இவருக்குரிய பரிசு இன்றைய 30.10.2012 தினம் சம்மாந்துறையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகள் தின விழா விலே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். கவிதைப்போட்டியிலே முதலாம் இரண்டாம் இடங்களை கிண்ணியா கல்வி வலயத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
 
பாத்திமா பாஃரா மற்றும் வெற்றி பெற்ற மாணவிகள் அனைவரையும் பாராட்டுகின்றோம்
 
- 'Mutur' Mohammed Rafi

Monday, October 29, 2012

சிறுகதை : எனது பெயர் இன்சாப்.


னது பெயர் இன்சாப்.

இந்த நவம்பர் மாதம் வந்தால் எனக்கு வயது 13 ஆகப்போகின்றது. ஆனால் நவம்பர் மாதங்களெல்லாம் இனிமேல் வருமா என்பதுதான் இப்போது பிரச்சினையே. ஆம், அதற்குக் காரணமிருக்கின்றது. அதற்கு முன்பு என்னைப்பற்றிச் சொல்லி முடித்து விடுகின்றேன்.


நான் பார்ப்பதற்கு அழகானவனோ அல்லது சட்டென எல்லோருக்கும் பிடித்துப்போகும் சிறுவனோ கிடையாது. ஆனால் வகுப்பிலே ஓரளவு கெட்டித்தனமாகப் படிப்பவன்தான். விஞ்ஞானப்பாடத்தை மட்டுமே மிகவும் விருப்பத்துடன் படிப்பேன். வீட்டில் எனது அறை முழுவதையும் வயர்களாலும் பற்றரிகளாலும் நிறைத்து வைத்திருப்பேன். பொதுமைதானத்தில் கிரிக்கட் விளையாடும் வகுப்புச் சினேகிதர்கள் தவிர வீட்டிலிருக்கும் உம்மா வாப்பா உட்பட பெரியவர்களுக்கு குறிப்பாக வீட்டு வராந்தாவில் சாய்மனைக் கதிரையில் கால்நீட்டியமர்ந்து பத்திரிகையை புரட்டிக்கொண்டிருக்கும் பென்சன் வாங்கும் பெரிசுகளுக்கு  நான் கிலோக் கணக்கிலே எரிச்சல் தருபவன்.


வீட்டிலிருந்து சுமார் நாலு கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் சந்தடி மிகுந்த நகரப்பாடசாலையொன்றிலே எட்டாம் வகுப்பிலே படிக்கின்றேன். தினமும் காலையில் எழுந்தவுடன் எனது தம்பி இம்ரானுடன் (பட்டப்பெயர்: ஒல்லிப்பிச்சான்) ஒரு சின்னச் சண்டையாவது போடாவிட்டால் சாப்பாடு செரிக்காது எனக்கு. பாடசாலைக்கு நாங்கள் இருவரும் வெளிக்கிடும் நேரத்தில் எங்கள் வீடு கிட்டத்தட்ட 2009 மே மாதத்து  வெள்ளிமுள்ளி வாய்க்கால் போலிருக்கும்.


அலாரம் மணிக்கூடுபோல் சமையல் புகைக்குள்ளிருந்து அவ்வப்போது நேரத்தைச் சொல்லித் தொண்டையைக் கிழிக்கும் உம்மா, பழைய மோட்டார்சைக்கிளிலே எங்களைப் பாடசாலையில் இறக்கிவிட்டு இறைச்சிக்கோழி பாக்கி வசூலுக்குப் போகும் பரபரப்பில் பத்து செக்கனுக்கு ஒருதடவை தொண்டையைச் செருமியபடி, 'டேய்! டேய்! வாங்ளேண்டா கெதியா!' என்று முன்னும் பின்னும் அலையும் வாப்பா, முன்வராந்தாவில் படித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையை விலக்கி மூக்குக்கண்ணாடிக்குள்ளிருந்து முறைக்கும் புச்சியப்பா (வாப்பாவின் தந்தை - அவரை நான் அப்படித்தான் அழைப்பேன்),  ஆகியோரின் வசவுகளின் பின்னணி இசையோடு நானும் ஒல்லிப்பிச்சானும் பாடசாலைக்குப் போவதற்குள் வீடு நாலுபடும்.


நான் சஞ்சரிக்கும் உலகிலிருந்து இந்தப் பெரிசுகளையெல்லாம் நீக்கிவிட்டால்  அதிலே எனது கிரிக்கட் நண்பர்களும் டீவியில் வரும் மல்யுத்தச் சண்டியர்களும் தான் இருப்பார்கள். எனது மண்டைக்குள்ளே கார்ட்டூன் மிருகங்களும் சண்டியர்களின் சாகசங்களும்தான் மறுஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாததால் மனதிலோடும் சாகசக்கயிறுகளின் இழைபிரிந்து வெடிக்கும் ஒரு கணத்தில் திடீரென 'ஆய்....ஊய்!' என்று அலறிவிட்டு அதற்கடுத்த கணங்களிலே எதுவுமே நடவாததுபோல எனது வேலையைச் செய்து கொண்டிருப்பேன். புதிதாக இதைக் காண்பவர்கள் என்னைச்சிறிது சந்தேகமாய்ப் பார்ப்பதுண்டு. ஆனால் எங்கள் வீட்டிலுள்ள பெரிசுகளுக்கு  இதெல்லாம் பழகிப்போன விடயம். ஆனால், விருந்தினர்கள் வந்திருக்கும் நேரங்களில் மட்டும் 'யேய்! இன்சாப்!' என்று புதிதாய் அதட்டுவார்கள்.


கார்ட்டூண், கிரிக்கட் தவிர இன்னுமொரு பொழுதுபோக்கும் எனக்கு உண்டு. சகல பத்திரிகையிலும் வெளிவரும் விண்வெளி பற்றிய செய்திகளையெல்லாம் தவறாமல் விரும்பிப் படிப்பதும் அவற்றைக் கத்தரித்து என் தாத்தாவின் பழைய டயரி ஒன்றிலே ஒட்டி வைத்துவிடுவதும்தான் அது. இந்த ஆர்வம் வந்ததற்கு என் வகுப்பாசிரியரான விஞ்ஞான ஆசிரியர் ஜெயக்குமார் ஸேரும் ஒரு காரணம். அவரிடம் விண்வெளியைப்பற்றி ஏதாவது சந்தேகம் கேட்டால் அதன் பிரமாண்டத்தையும் அதிசயத்தையும் கூறி எங்களையெல்லாம் பிரமிக்க வைத்துவிடுவார்.


சரி, அதெல்லாம் இருக்கட்டும். முதலில் நான் சொல்ல வந்த கதையைச் கூறிமுடித்து விடுகின்றேன்.


இப்போது சில நாட்களாக எனது உடம்பிலே ஏதோ சிறிய வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. சரியாக எப்போது என்று தெரியவில்லை, என் உடம்பு எனக்கே பாரமாகி விட்டது போலத் தோன்றுகின்றது. கால் மூட்டுக்களில் வலிவேறு பாடாய்ப்படுத்துகின்றது. இதை வீட்டில் கூறியபோது வழக்கம்போல, 'எங்களுக்குந்தாண்டா நோவுது...சின்ன வயசு உனக்கு ஏண்டா? நீ எப்ப பாத்தாலும் போல் போடுற மாதிரியும் பெட் பண்ற மாதிரியும் வீசிக்கிட்டு திரியறதாலதான் அப்படியிருக்கு. ஒரு நிமிசம் கையைக் காலை வச்சகிட்டு நீ இருந்தாத்தானே?' என்ற திட்டுத்தான் கிடைத்தது.
வேறுவழியின்றி, வராந்தாவிலே பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த புச்சியப்பாவிடம் கூறினேன். அவரோ, 'சரி, எனக்கும்தான் நோவுது. அதுவும் இப்ப கொஞ்சநாளாக் கூடுதலாத்தான் வலிக்குது. சரி வா! நோவுக்கு நான் பூசுற இலுப்பெண்ணெய்யைத் தடவி விடுறன்..' என்று ஒரு நாற்றம் பிடித்த பழைய போத்தலை எடுத்தார். அவ்வளவுதான் எடுத்தேன் ஒரே ஒட்டம்..!


000திங்கட்கிழமை காலை..


வாரவிடுமுறை நாட்களில் அடிக்கடி மழை பொழிந்ததால் கிரிக்கட் தோழர்களை உடனே  சந்தித்துப் பேச முடியவில்லை. அன்று பௌர்ணமி விடுமுறையாதலால் அன்றுதான் மைதானத்தில் விளையாடப் போனபோது பார்த்துப்பேசிக் கொண்டோம்..


'ஓம்டா இன்சாப்! எனக்கும் அப்படித்தான்டா இருக்கு! கால் ரெண்டையும் யாரோ நிலத்துக்குள்ள இருந்து இழுத்துப் பிடிக்கிற மாதிரி' என்றான் சதோசன்.


' என்னடா இது? உண்மையாவாடா? நான் எனக்குத்தான் அப்பிடி இருக்குன்டல்லாவா நினைச்சுக்கிட்டு இருக்கிறேன்'


'டேய், பொய் சொல்லாத.. உனக்கும் அப்பிடியாடா இருக்கு...? நான் எனக்கு மட்டுந்தான் அப்பிடியென்று நினைச்சேன்' என்றான் மிஷ்கின்.


'நல்லாருக்கு கதை! எங்க வீட்ல அப்பா அம்மா தங்கச்சி பாட்டி எல்லாருக்கும் இதே போல இருக்குதென்டு ஏதோ செய்வினையோ என்று பயந்துபோய் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேர்த்தி வச்சிருக்காங்கடா!' என்றான் நெட்டைக் கொக்கு அஸ்வின்.


'இதைப் பார்டா, முந்தியெல்லாம் இந்த பெட்டால எவ்வளவு வடிவா தூக்கியடிக்கலாம். இப்பல்லாம் அப்படி அடிக்கேலாம கொஞ்சம் கஷ்டமா இருக்கு!' காற்றில் வீசிக்காட்டினான் சதோசன்.


'உனக்குச் சும்மாவே அடிக்கத் தெரியாது...'


'போடா தூள்புட்டு!'


'டேய்! சண்டையை விடுங்கடா! எங்க வீட்டுலயும் எல்லாருக்கும் கால் வலிடா!'


எங்கள் அணியிலுள்ள எல்லோருமே இதுபோல ஒரே கதையைச் சொல்லத் தொடங்கவே விளையாட்டை நிறுத்திவிட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். ஒன்றுமட்டும் தெளிவாகப் புரிந்தது எனக்கு. சில நாட்களாக நான் உணர்ந்த அந்த ஏதோ ஒரு வித்தியாசம் ஒரு பொதுவான விடயம்தான்.


'இப்ப என்னடா செய்யுறது? யாருக்கிட்டயாவது கேட்டுப் பார்ப்போமா?'


'நாளைக்கு ஸ்கூல்ல சயன்ஸ் ஸேர்க்கிட்ட கேப்பம்டா?'


'நாளை வரைக்கும் பொறுக்கேலாதுடா எனக்கு...இப்பவே அவருகிட்டயாவது கேக்கணும்டா!'


'அவர்ட வீடு தெரியாதே...ஆனா நம்ம ஸ்கூல்ல ஏஎல் படிக்கிற ப்ரீபெக்ட் அஸருதின் அண்ணா...இங்க மூர் ஸ்ட்ரீட் பக்கத்துலதான் றூம் எடுத்துப் படிச்சிட்டிருக்கார். அவர் நம்மட ஸேருக்கிட்டதான்டா க்ளாஸ் போறவர். வீடு தெரியும் போய் கேட்கலாம் வாங்கடா!' என்ற மிஷ்கினின் யோசனையை ஏற்றுக்கொண்டு புறப்பட்டது எங்கள் அணி..


பொதுமைதானத்திலிருந்து நகரின் பிரதான பஸ்நிலையத்தை நாங்கள் கடந்து செல்லும்போது, 'இன்சாப், வா கொஞ்சம் சந்தைக்குள்ளே போய் வரலாம். இதுக்குள்ளதான் எங்க அப்பா மரக்கறிக்கடை வச்சிருக்கார்' என'று கூப்பிட்டான் சதோசன்.


'ச்சீ வேணாண்டா, பிறகு பார்க்கலாம் வாடா!'


'என்னைப் பார்த்தா அப்பா ஐஸ்க்ரீம் குடிக்கக் காசு ஏதும் தந்தாலும் தருவாரு...சரி வேணாம்டா விடு'


' அட! மிச்சம் ஆசைப்படுறான் பாவம்! வாங்கடா' என்று சதோசனின் அப்பாவுடைய காய்கறிக்கடையை பார்க்க சந்தைக்குள் சென்றோம்.


000


'அட இது என்ன கூத்து?'


நாங்கள் சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் அதிர்ந்து கூவினார், தூக்குத் தராசிலே கரட் கிழங்குகளை நிறுத்து வியாபாரம் செய்தபடி நின்றிருந்த சதோசனின் அப்பா சண்முகலிங்கம்.


'அதுசரி! நானும் கொஞ்ச நாளா இதைப் பத்தித்தான் யோசிச்சிட்டு இருந்தேன். போன வருசம் சிக்கின்குனியா காய்ச்சல் வந்தநேரம் கைகால் எலும்பெல்லாம் ஒருமாதிரி இழுத்துப் பிடிச்சாப்பல இருந்திச்சுத்தானே..? கிட்டத்தட்ட அதே மாதிரித்தான் ஆனா காலுக்குக் கீழே பூமிக்குள்ள இருந்து யாரோ இழுத்துப் புடிக்கிறாப்பல இருக்கு..அதுமட்டுமில்ல தூக்கிற சாமானெல்லாங் கூட கடும் பாரமாயிருக்குதுடாப்பா!' என்றார்.


பின்பு சுற்றிலும் ஒருபார்வை பார்த்துவிட்டு, 'இதைக் கொஞ்சம் பாருங்க! இந்தா என்ட கையில இருக்கிற இந்தத் தூக்குத் திராசில முந்தியெல்லாம் ஒரு கிலோவுக்கு நடுத்தர ஸைஸ் கரட் ஒரு பத்து பன்னிரண்டு கிழங்கைப் போட்டாப் போதும் ஆனா இப்ப கொஞ்ச நாளா 8 அல்லது 9 கிழங்கைப் போடக்குள்ளேயே ஒரு கிலோ வந்துடுது. கத்தரிக்காய் 4 , 5 காயைப்போட டக்கெண்டு வந்திடுது ஒரு கிலோ! முந்தியெல்லாம் 7 இல்லாட்டி 8 காய் தேவைப்படும்.' என்று சொல்லிக் கொண்டே போனார். எங்களுக்கு அவர் கூறியது புதுவிடயமாக இருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.


'டேய்! இதை நம்மட ஜெயக்குமார் ஸேர்க்கிட்டதான் கேக்கணும்' என்றான் மிஷ்கின்.


'என்ன சண்முகம், ஒன்ட மகனோட கூட்டாளியெல்லாம் சேர்ந்து வந்திருக்காங்க போல.  இண்டைக்குக் கிரிக்கட்டுக்கு லீவு விட்டுட்டு மார்க்கட் பக்கம் வந்திருக்காங்களே...சும்மா வரமாட்டாங்களே?' அன்று பௌர்ணமி தினம் என்பதால் கடையைக் கழுவிப் பூட்டியபடி கேட்டார், பக்கத்து ஆட்டிறைச்சிக் கடை முதலாளி அனீபா நானா. அவரிடமும் நாங்கள் கூறிய விடயம் சொல்லப்பட்டது.


'ஓகோ! அதான்டா சண்முகம் நா பார்த்தேன்..ஒரு ரெண்டு மூணு நாளா இப்படிக் கிடக்கே ண்டு...! கால்வலிய வுடு. நிண்ட நெலையில யாவாரஞ் செய்ர நம்மளுக்கெல்லாம் அது எப்பவும் உள்ளதுதானே? அந்த போஸ்ட் மாஸ்டர்ர மனிசி நேத்துக்காலையில ரெண்டு கிலோ 'தனி'  வாங்கிட்டுப்போனா...வாங்கிப்பாத்த கையோட எறைச்சி முந்தி மாதிரி பொலிவாயில்ல என்டு ஒருநாளும் இல்லாத மாதிரிக்கு வந்து ஏசிட்டுப் போயிருக்கா. கடைப் பொடியன் சொன்னான். அப்ப இதுதானா விசயம்? பாரத்தைக் கூடக் காட்டுதா, திராசு..? ம்ம்..கூடக்காட்டினா நமக்கு நல்லதுதான்...ஹாஹ்ஹா! ஆனா அது பாவம்! மேல ஒருத்தன் பாத்திட்டு இருக்கான்.' என்று உரத்துப்பேச அந்த இடத்தில் ஒரு சிறுகூட்டமே கூடி இதைப்பற்றி அலசியது.


அங்கு எல்லோருடைய கதையும் ஒரே கதையாகவே இருந்தது.


000

றுநாள் பாடசாலை ஆரம்பித்தது.


அடிக்கடி மழைபொழிவதும் நிற்பதுமாக இருந்தது அன்றைய காலைப்பொழுது. பாடசாலையிலே எல்லோருடைய வாயிலும் 'அந்தபுதுவித கால்வலி' பற்றிய பேச்சாகவே இருந்தது. ஜெயக்குமார் ஸேர் வகுப்புக்குள் வந்து சேர்ந்ததுதான் தாமதம், முன்தினம் நடந்த அனைத்தையும் அடித்துப்பிடித்து மூச்சுவாங்கச் சொல்லி முடித்தோம்.


எப்போதுமே கலகலப்பாக நகைச்சுவையாய்ப் பேசுபவர்தான் ஜெயக்குமார் ஸேர். அன்று வழக்கத்திற்கு மாறாக மிகுந்த சிந்தனை வயப்பட்டிருந்ததால் நாங்கள் கூறியது ஒன்றுமே அவருக்கு முதலில் புரியவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்டு பொறுமையாகக் கேட்டு விளங்கினார். திடீரென ஏதோ தோன்றியவராக ஆய்வுகூடத்துக்குள்ளே புகுந்து ஒரு விற்றராசுடன் வெளியே வந்தார். 'இங்க வா சதோசன், இன்சாப்! ரெண்டு பேரும் ஓடிப்போய் கெண்டீன் சின்னத்தம்பி அண்ணர்க்கிட்டப் போய் நான் சொல்றதுகள வாங்கிட்டு கெதியா வாங்க!'  என்றார்.


நாங்கள் கொண்டு வந்த தராசு எடைக்கற்களை ஒவ்வொன்றாக விற்றராசிலே நிறுத்துப் பார்க்கலானார் ஜெயக்குமார் ஸேர். என்ன ஆச்சரியம் ஒருகிலோ எனக்குறிக்கப்பட்டிருந்த படிக்கல் அதனிலும் அதிகநிறையைக் காட்டியது. அவ்வாறே 2கிலோ, 5கிலோ கற்களும் நிறைகளைச் சற்றுக்கூட காட்டியது. நடப்பதை நம்பவே முடியாமல் விற்றராசுகளை மாற்றி மாற்றி திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கொண்டேயிருந்தார் ஸேர். ஆனால் விளைவு மட்டும் மாறாமல் அதே விதமாகவே இருந்தது. எங்கள் வகுப்பாசிரியரின் முகம் அதிர்ச்சியில் வெளிறிப்போனது.


அதன் பிறகு அவர் எங்களோடு பேசவேயில்லை. மிகுந்த யோசனையுடன் ஆய்வுகூடத்திற்கும் அதிபர் காரியாலயத்திற்குமாக ஓடித்திரிந்து கொண்டிருந்தார். இயர்போனைக் காதிலே பொருத்தியபடி கைத்தொலைபேசியில் யாராருக்கோவெல்லாம் அழைப்பு எடுத்தவாறிருந்தார். பாடசாலை முழுவதும் ஒரு வகையான பதற்றம் தொற்றியிருந்தது. வெளியாட்கள் பலர் பாடசாலை வளவுக்குள் ஒருவித பரபரப்புடன் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதிபர் காரியாலயத்திற்கு முன்பும் பலர் கூடிப்பேசியவாறு நின்று கொண்டிருந்தார்கள்.


பக்கத்து வகுப்புகளிலிருந்த ஆசிரியர்களும் சில பெரிய வகுப்பு மாணவர்களும் எங்கள் எட்டாம் வகுப்புக்குள் படியேறி வந்து,  'இன்சாப் யார்?' என்று கேட்டு  சதோசன், மிஷ்கின், அஸ்வின் உட்பட எல்லோரையும் ஏதோ மிருகக்காட்சிசாலைக்குப் புதிதாகவந்த விலங்குகளைப் பார்ப்பதுபோலப் பார்த்து விட்டுப் போனார்கள்.


சிறிதுநேரத்தில், 'இன்சாப் உன்னை அதிபர் கூட்டி வரச்சொன்னார்..வா!' என்று எங்கள் வகுப்புக்கு வந்து நின்றான் ஒரு மாணவர்தலைவன். காரணம் புரியாமல், குழப்பத்தோடு நான் படியிறங்கிச் செல்கையில், 'அம்மாத்தலை! நீ ஸ்கூல்லயே பெரிய ஆளாயிட்ட போல, வாழ்வுதாண்டா ஒனக்கு!' என்றான், கண்களிலே லேசான பொறாமையுடன்.

000


திபரின் அறை மிகவும் விசாலமாக இருந்தது.


சுவரில் கைகளைக்கட்டியபடி புன்னகையுடன் அமைதியாக நின்றிருக்கும் விவேகானந்தரின் கீழே விசாலமான மேசையின் பின்னால் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி யாருக்கோ தொலைபேசியில் 'ஓம்.. ஓம்! சரி..சரி!' என்று சொல்லிக் கொண்டிருந்தார் அதிபர். அவரைச் சுற்றிலும் நிறைய பிரமுகர்கள் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்தபடி அமர்ந்திருந்தார்கள்.


 ' ம்ம்! இங்க வா! நீதானே இன்சாப்? என்ன ஜெயா..? இவன்தானே ஆள்?' என்று பக்கவாட்டில் திரும்பி யாரையோ கேட்டார் அதிபர். அப்போதுதான் எனது வகுப்பாசிரியர் ஜெயக்குமார் ஸேரும் அந்தக்கூட்டத்தில் இருப்பதைக் கண்டேன். எனது பார்வை அவரில் வீழ்ந்ததும் 'பயப்பட வேண்டாம்' என்பது போல லேசாய் சைகை செய்தார்.


' குட்மோர்னிங்சேர்! ஓம்..நான்தான் ஸேர் இன்சாப்!' என்றேன் தட்டுத் தடுமாறியபடி. 'சரி பயப்பட வேண்டாம்! நேற்றுப் பின்னேரம் எங்கே போனனீங்க..என்ன நடந்தது என்றதை காலையில் ஜெயக்குமார் ஸேர்ட்ட சொன்னது போல வடிவாச் சொல்லு பார்ப்போம்' என்று அதிபர் கேட்டார்.
நான் தயங்கியபடி மீண்டும் ஒருதடவை ஜெயக்குமார் ஸேரைப் பார்த்துவிட்டு, 'அது வந்து ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முதல்ல இருந்து...' என்று நான் சொல்லத் தொடங்கியதும் எதிரேயிருந்த தன்னியக்க டிஜிட்டல் வீடியோ கெமரா என்மீது வெளிச்ச வெள்ளத்தை பாய்ச்சியபடி உயிர்பெற்றது.


000


'அடேய்! இன்சாப்! என்னடா சொல்லுறா? ஏண்டா ஒனக்கிந்த வேண்டாத வேலைக்கெல்லாம் பாஞ்சடிச்சிட்டு முன்னுக்குப்போறாய் இரு..இரு ஒனக்கு வாப்பா வரட்டும்;!' என்ற உம்மாவின் தொணதொணப்புக்குப் போட்டியாக மழையும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது.


புச்சியப்பா உள்ளறையில் மதியக் குட்டித்தூக்கத்திலிருந்ததால் முன் வராந்தவிலிருக்கும் அவரது சாய்மானக் கதிரையிலே சுருண்டு படுத்திருந்தேன். அப்போது மழைக்கோட்டிலிருந்து ஈரம் சொட்டச்சொட்ட மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்தார் வாப்பா. சைக்கிளை நிறுத்தி அவர் இறங்குவதற்கிடையிலே, 'இஞ்ச கேட்டீங்களாப்பா! இவன் இன்சாப்ட வேலைய..ஸ்கூல்ல என்னமோ வீடியோ எடுத்தாங்களாம் இவன் ஒண்ணும் ஒழுங்காச் சொல்லுறானில்லப்பா..என்னென்டு கொஞ்சம்...'


'சரிசரி, அதெல்லாம் பிறகு கேட்டுக்கலாம். இப்ப டீவியைப் போடுங்கடாப்பா. அண்டைக்கு ரெண்டு நாளா எல்லாருக்கும் காலுக்குள்ளால இழுத்துப் புடிச்ச மாதிரி இருக்கெண்டு சொன்னீங்கதானே...? அது நம்மளுக்கு மட்டுமில்ல தெரியுமா? ஊரெல்லாம் இதே கதையாத்தான்டாப்பா...அது சம்பந்தமாத்தான் டீவில நியூஸ் சொல்லிட்டிருக்கானாம் போடுங்க கெதியா?' என்றவாறு மழைக்கோட்டைக் கூடக் கழற்றாமல் ஹோலுக்குள்ளே நுழைந்து ஈரக்கையோடு டீவியைப்போட்டார் வாப்பா.


'இஞ்ச பார்ரா இன்சாப்! இந்த மனிசன்ட வேலையை! வீடெல்லாம் ஒரே தண்ணீ!' என்று கூவிய உம்மாவையெல்லாம் கவனிக்காமல் உயிர்பெற்ற தொலைக்காட்சி,

'.....ன்று தெரிவித்தார். அவர்மேலும் இதுபற்றிக் கூறுகையில், இந்த வகையான கால்மூட்டு வலி நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்டுள்ளதோடு மிக விரைவாக நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பரவியுள்ளமை ஆச்சரியத்தைத் தருவதாகவும் தெரிவித்தார். இந்த அசாதாரண இழுவிசையுடன் கூடிய கால் மூட்டுவலி இதுவரை அறியப்படாத கிருமிகளின் தொற்றுதலால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை எனவும்....' என்று தொடர்ந்தது.


'என்னப்பா இது செய்தி சொல்றான்? ஒண்ணும் வெளங்குதில்ல!'


' அதான் டீவிக்காரன்! கொஞ்சம் இரேன் முழுசாக் கேப்பம்!'


'வாப்பா! வாப்பா, இது நான் இண்டைக்கு ஒருநாள் சொன்னதுதானே..? நீங்களும் உம்மாவும் ஏசுனீங்க நம்பாம!'


'சரிசரி, கத்தாம செய்தியைக்கேளு!'


'இதுவரை ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாவட்ட வைத்தியசாலைகளின் வெளிநோயாளர்பிரிவுகளிலே சிகிச்சைக்கென வந்த கொண்டுள்ளனரெனவும் அவர்களுக்கு வெறும் வலிநிவாரணி மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் தேசிய...'


'பாத்தீங்களாப்பா! இவன் இன்சாப் அண்டைக்குச் சொல்லக்குள்ள நம்ம பெரிசா கணக்கெடுக்கயில்ல..' என்று என்னை அன்போடு கட்டிப்பிடித்துக் கொண்டார் வாப்பா.


'...விடயமாக மேலும் பல மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதுபற்றி மக்கள் வீண் அச்சம் அடையத் தேவையில்லை. பொதுமக்கள் பீதியடையாமல் அமைதி காக்குமாறு...'


'நீ பெரிய கெட்டிக்காரந்தாண்டா. ஆனா ஏண்டா ராஜா இப்படிக் குழப்படி...?' என்று கோபம் குறைந்து உம்மாவும் என் கதைச் செல்லமாகத் திருகிக்கொண்டிருக்கும்போது,


'மணிச்சாச்சி! மணிச்சாச்சி' என்று மூச்சிரைக்க ஓடிவந்தான் அடுத்த வீட்டுச் சிறுவன் பர்சான். 'மணிச்சாச்சி, ஒங்கட இன்சாப் இருக்கானே...அவன எங்கட டீவில காட்டினாங்க!' என்று சொல்லிவிட்டுத் திரும்பி ஓடிப்போனான்.


முதலில் ஒருவருக்கும் புரியவில்லை. 'என்னடா சொல்றான், அவன்?' என்று குழம்பினார் வாப் வாப்பா. 'வாப்பா! காலையில ஸ்கூல்ல என்னை வீடியோ எடுத்தாங்க வாப்பா!'


'என்னப்பா இவன் சொல்றான்? என்னடா...என்ன எடுத்தாங்க சரியாகச் சொல்லித் தொலையேன்!'


'அதைத்தானேப்பா நீங்க வந்தவுடனே கரடியாக் கத்தினேன். நீங்க எப்பயாவது என்ட கதையக் கேட்டிருக்கீங்களா?'


'சரி, ஒன்ட பொலம்பல நிப்பாட்டு பாப்போம்!' என்று ஒரு சின்ன முறுகல் இருவருக்குமிடையிலே உண்டாவதற்கிடையில், 'அடியேய் மணி!' என்றபடி இடுப்பில் கைக்குழந்தையுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள் அடுத்த வீட்டு மாமி.


' டீயேய் மணி! உன்ட இன்சாப்புப் பொடியன டீவில திருப்பித் திருப்பிக் காட்டுறாங்கடி.. இதென்னடி றூபவாகினியப் புடிச்சிவச்சிருக்கா? அங்கால சக்தியைப் போடு புள்ள மொதல்ல!'


வாப்பா அவசர அவசரமாய் சேனலை மாற்ற, 'இதோ மீண்டும் அந்தத் தகவலைப் பார்ப்போம்' என்று அறிவிப்பாளரின் குரலோடு காட்சி விரிந்தது.
முதலிலே எங்கள் பாடசாலையை மத்திய அளவு தூரத்தில் இருந்து காட்டிய கெமரா பின்பு ஸும் ஆகி பாடசாலையின் பெயர்ப்பலகையிலே போய் மொய்த்தது. அடுத்த காட்சியில் அதிபரின் காரியாலயச் சுவரிலிருந்த தமிழ்ப்பண்டிதர்களையும் பெரியார்களையும் ஒரு மேய் மேய்ந்துவிட்டு கைகட்டிப் புன்னகையுடன் நிற்கும் விவேகானந்தரிடம் சில வினாடிகள் தேங்கியபின் வெகுநிதானமாக கீழிறங்கிவர... அங்கே பெரிய மீசைக்குள் சிரித்தபடி எங்கள் அதிபர் இருந்தார். அவரையடுத்து இருபுறமும் காலையிலே நான் பார்த்த மனிதர்கள் இருந்தனர்.


'எங்கடா ஒன்னக் காணயில்ல?' என்று உம்மா பொறுமையிழந்த கணத்தில் சட்டென ஒரு வெட்டில் எனது முகம் நெருக்கமாகக் காட்டப்பட்டது. பின்பு எனது முழுத்தோற்றத்தையும் காட்டும் வசதிக்காக கெமரா சற்றுப் பின்வாங்கியது.


'இந்தா, நம்மட இன்சாப்!...இன்சாப்!' என்று எல்லோருமே கத்தினார்கள். எனக்கு உச்சி மண்டையில் பெருமை மத்தாப்புக் கொட்டினாலும்  லேசான வெட்கமாகவும் இருந்தது.


'உஷ்! சத்தம்! என்ன என்று கேப்பமே' என்று வாப்பா எல்லோரையும் அடக்க, சுற்றியுள்ள அனைவரையும் கலவரமாகப் பார்த்து, 'எனது பெயர் இன்சாப்....' என்று ஆரம்பித்து நான் காலையிலே கூறியது அனைத்தும் ஒளிபரப்பானது.
அவ்வளவுதான். வீட்டுச் சுற்றுப்புறத்திலும் பாடசாலையிலும் நான் ஒரு திடீர் நட்சத்திரமாகி விட்டேன்.


000
றுநாள் நான் பாடசாலை சென்றதும் எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.


ஆசிரியர்கள் கூட 'இன்சாப் நீ டீவில வாறளவுக்கு பெரிய ஆளாயிட்ட போல' என்று பாராட்டினார்கள். எங்கு பார்த்தாலும் இன்சாப் என்பதே பேச்சாக இருந்தது.  என்னுடன் சண்டையிட்டு பேசாமல் இருந்தவர்கள் கூட 'இன்சாப்ட பிரண்ட்ஸ்தான் நாங்க'  என்று சொல்ல ஆரம்பித்தார்கள். நான் போகுமிடமெல்லாம் 'இவந்தண்டா..அது' என்று என்னைக்காட்டிக் கிசுகிசுத்தார்கள். பலரின் பார்வையிலே டன் கணக்கில் பொறாமை தெரிந்தது. 
நான் இயல்பிலேயே ஒரு புகழ்விரும்பி. கிரிக்கட்டில் ஒரு சிக்சர் அடித்துவிட்டாலே நூறாவது செஞ்சுரி போட்ட சச்சின் போல அலப்பறை காட்டுவேன். இப்படியானால் கேட்க வேண்டுமா? புகழ்போதை தலைக்கேறி காற்றில் மிதந்து கொண்டிருந்தேன். ஆனாலும் 'ஏன் இப்படி ஆனது?' என்ற கேள்விமட்டும் என்னை உள்ளுரக் கொன்று கொண்டேயிருந்தது.


இடைவேளை நேரத்தில் நண்பர்களோடு உலாவியபோது..
'அட, வாடா எனது அருமை மாணவனே!'   என்னைக் கண்டதும் கூவியழைத்தபடி வந்தார் ஜெயக்குமார் ஸேர். அவரது கைகளிலே அன்றைய தினசரிப் பத்திரிகைகள் இருந்தன. எல்லோரும் உற்சாகமாகி ஓடிப்போய் அவரைச் சூழ்ந்து கொண்டோம்.


'நீ பெரியளாயிட்டடா இன்சாப், இதில உன் போட்டோ வந்திருக்கு. எல்லோரும் லைப்ரரிக்கு வாங்க காட்டுறேன்!'  என்றபடி மாடியேறிச் சென்றுவிட்டார். 'ஹே!' என்று உற்சாமாய் கூச்சலிட்டபடி அவர்பின்னால் ஓடினோம்.
மேல்மாடியிலிருந்த லைப்ரரியில் அந்தப்பத்திரிகைக்காக வகுப்பே முண்டியடித்தது. எங்கள் பாடசாலையின் படமும் அதிபர், ஜெயக்குமார் ஸேர் மற்றும் எனது படமும் இருந்தது. இந்த வருட வலயமட்டக் கிரிக்கட் போட்டிக்காக போஸ்டல் அடையாள அட்டைக்கு எடுத்த படம்தான் என்னுடையது.


'என்ன ஸேர், எங்க படத்தையும் குடுத்திருக்கலாந்தானே? நாங்களுந்தானே இன்சாப்போட இருந்தோம்' என்று எனது நண்பர்களில் சிலர் ஏமாற்றத்தோடு கேட்க, 'உங்கட படங்கள் அவசரத்துக்குக் கிடைக்கல்லடா...அதோட இன்சாப்தானேடா உங்க கேங்க் லீடர்?' என்று சமாளித்தார் ஸேர். பையன்களும் 'ஓம் ஸேர் அவன்தான் எங்க கெப்டன்!' என்று ஒத்துப்பாட எனக்கு மகிழ்ச்சி மண்டையிலே மீண்டும் மத்தாப்பூக் கொட்டியது.
எனது நண்பர்கள் அனைவரும் படங்களையே முண்டியடித்துக் பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் தனியாக நின்று பத்திரிகையின் மற்றொரு பக்கத்தில் தொடர்ந்த அந்தச் செய்தியின் தொடர்ச்சியைத் தேடி வாசிக்கலானேன்.


'என்ன ஸேர், இப்படி எழுதியிருக்கிறாங்க?' என்று கேட்பதற்கு நான் நிமிர்ந்தபோது என்னையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயக்குமார் ஸேர். அவரைத்தேடி உயர்வகுப்பு விஞ்ஞான மாணவர்கள் சிலர் மேலேறி லைப்ரரிக்குள் வந்து சேர்ந்தார்கள்.


 'எப்படி எழுதியிருக்கு? வாசி பார்ப்போம்' என்றார் அவர், ஆவலுடன்.


' நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த அசாதரண கால்மூட்டுவலி ஆரம்பத்திலே புதிய வகையான தொற்றுநோயாக இருக்கலாமெனக் கருதப்பட்டபோதிலும் தற்போது திருகோணமலை நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர்களும் மாணவர்களும் அனுப்பி வைத்த தகவல் ஒன்றை மேற்கொள் காட்டி முன்னைய அனுமானம் தவறானது என்று இலங்கை விஞ்ஞானப்பேரவை தெரிவித்துள்ளது.' 


'நிப்பாட்டாதே! தொடர்ந்து வாசி! இன்சாப்!'


'அத்துடன் மேற்படி உடல்வலி நமது நாட்டில் மட்டுமன்றி இந்தியத் துணைக்கண்டத்திலும் ஆசியா மற்றும் உலகின் பல பிராந்தியங்களிலும் உணரப்பட்டு வருவதால் இது புவியின் ஈர்ப்புவிசையுடன் தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம் எனவும் பேரவையின் அறிக்கை குறிப்பிடுகின்றது. இது குறித்து...'


'சரி போதும்..இப்ப கேளுங்க.. உங்க கேள்விகளை!'


'இப்ப பூமியிட ஈர்ப்புவிசை கூடியிருக்கா குறைஞ்சிருக்கா ஸேர்?'


'கூடிக்கொண்டுதான் இருக்குது ஆனா மெல்ல..மெல்லத்தான் கூடியிருக்கு. அதனாலதான் கால்மூட்டு வலி தவிர பெரிய பாதிப்பு ஏதுமில்லாம இருக்கிறம்'
'ஏன் ஸேர் சும்மாயிருக்கிற பூமிக்கு புவியீர்ப்பு கூட வேணும்?'


'அதுதான்டா சரியாகத் தெரியல்ல..நானும் இன்ரநெட்டில எல்லாம் தேடிப் பாத்திட்டுத்தான் வாறேன்..அது சம்பந்தமா நம்பக்கூடிய மாதிரி தகவல் எதையுமே காணல்ல.!'


'பூமி மாதிரி ஒரு விண்பொருள்ற ஈர்ப்புச் சக்தி கூட வேணுமெண்டா என்னென்ன நடக்கணும் ஸேர்..?' ஏஎல் படிக்கிற ஒருவன்  கேட்டான்.


'ம்..ஒண்டு அதுட மொத்தத் திணிவு அதிகரிக்க வேணும்...அல்லது அதுட சுழற்சி வேகம் அதிகரிக்க வேணும்!'


'ஒருவேளை நம்மட பூமியை வெளிக்கிரகவாசிகள் வந்து ஏதும் செய்திட்டாங்களோ?'


'ஹாஹ்..ஹா! நல்ல கற்பனை வளமிருக்குடா இன்சாப் உனக்கு..! நீ பார்க்கிற கார்ட்டூண்லதான் அப்பிடி நடக்கும். சரி, பார்ப்பம் எப்படியும் காரணம் தெரிய வரும்தானே...அதுசரி, இந்த விண்வெளி விசயத்துல உனக்கு என்னடா இவ்வளவு ஆர்வம்' என்று வாஞ்சையோடு என்னுடைய தலையை விரல்களால் சிலுப்பிவிட்டு  இறங்கிச் சென்றார் ஜெயக்குமார் ஸேர்.


அவர் சென்று வெகுநேரமாகியும் கூட நான் அங்கேயே நின்றிருந்தேன். 'ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும். புவியீர்ப்பு அதிகரிப்பதற்கு பூமி திடீரென நிறையில் பெருக்க வேண்டும் என்றுதானே கொன்னார் ஸேர், அது சாத்தியமில்லை. அப்படியானால் உண்மையான காரணம்தான் என்ன?' என்று யோசித்து யோசித்து ஒரே தலைவலியாக இருந்தது. காரணம் தெரியாவிட்டால் தலையே வெடித்து விடும் போலிருந்தது. பாடசாலை நூலகத்திலிருந்த எனது படம் வந்த பத்திரிகையின் பக்கங்களை வெறுமனே புரட்டியபடி இருந்தேன்.


வேறு யாரிடம் கேட்கலாம்? ஏதாவது புத்தகங்களில் இருக்காதா...இணையத்தில் கூட சரியான தகவல் இல்லையென்றாரே... அப்படியானால் என்னதான் செயய்லாம்..? அப்போதுதான் கையிலிருந்த பக்கத்தில் தற்செயலாக அந்தச் செய்தியைக் கண்டேன்.


'விண்வெளி தொடர்பான சில வல்லரசு நாடுகளின் பரிசோதனை முயற்சிகளுக்கும் தற்போது பூமியின் அசாதாரண புவியீர்ப்புவிசை அதிகரிப்புக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று ஐ.நா சபையில் விவாதம். ஆயினும் இக்குற்றச்சாட்டை அனைத்து வல்லரசு நாடுகளும் மறுதலித்துள்ளன...' என்று வாசித்துக் கொண்டிருக்கும் போது எனது மண்டைக்குள் எங்கோ ஒரு 'பளிச்!'


000
'புச்சியப்பா! புச்சியப்பா!'


வீடு வந்து சேர்ந்ததும் புத்தகப்பையை ஒரே வீசாக வீசியெறிந்து விட்டு எனது புத்தக அலுமாரியை எலிபோலக் குடையத் தொடங்கினேன். 'என்னடா இன்சாப், உன்ட ஸேர் என்ன சொன்னாரு?' என்று கேட்ட வாப்பாவுக்கு தேடுவதை நிறுத்தாமல், காலையில் நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொன்னேன்.


'அட நியூஸ்பேப்பர்லயும் வந்திட்டுதா விசயம். வாழ்வுதாண்டா ஒனக்கு? பேப்பர் வச்சிருக்கியா?'


'அந்தா என்ட பேக்ல இருக்கு..எடுங்க!'
பத்திரிகையிலே எனது படத்தைப் பார்த்து மகிழ்ந்த வாப்பா, உம்மாவையும் கூவி அழைத்தார். சமையலறையிலிருந்து ஈரக்கையைத் துடைத்தபடி வெளியே வந்து பார்த்த  உம்மா, ' இஞ்ச பாரு! வேற நல்ல ஒரு போட்டோவைக் குடுத்திருக்கலாமே நீ? ஓடிப்போய் சரீனா சாச்சிக்குக் காட்டிட்டு வா. அவக்கிட்ட குடுத்தாப் போதும் ஊர்ல எல்லாருக்கும் காட்டிடுவா'


'நா எங்க குடுத்தேன், ஸேர்தான் கிரிக்கட் டீம் போட்டோவக் குடுத்தாரு... இப்ப அதுவாம்மா முக்கியம்?' என்றபடி புத்தகங்களை அள்ளி இறைத்தேன்.


' சரி, இப்ப என்னத்தைத் தேடிடா இப்படிக் கொடையுறா நீ?'


'பேப்பர்ல வந்த ந்யூஸ் எல்லாத்தையும் வெட்டி ஒட்டி வச்சிருந்தேன் ஒரு பெரிய டயறி ஒண்ணு. எங்கம்மா அதைக் காணல்ல. இந்த ஒல்லிப்பிச்சான் இம்ரான் எடுத்தானாம்மா..?'


'டேய்.. இனி அதையெல்லாம் வுட்டுட்டு படிக்கிற வேலையப்பாரு!'


'சரி, படிக்கிறன்தானே..வாப்பா! இப்ப அந்த டயறியைத் தாங்க!'
'இன்சாப்! இதையாடா தேடுறா நீ?' என்று எனது பச்சைநிறத் தோல் உறையிட்ட அந்த டயறியை நீட்டியபடி வந்தார் புச்சியப்பா. 'சவுமி, ஒன்ட பொடியன் பெரிய ஆள்றா...? இஞ்ச பாரேன்..எவ்வளவு காலத்துக்கு முந்தின விண்வெளிச் செய்தியெல்லாம் சேர்த்து ஒட்டி வச்சிருக்காம் பாரு! எப்படி இதையெல்லாம் சேர்த்தெடுத்தான் இவன்?' என்றவாறு வாப்பாவிடம் அதைக் கொடுத்தார் அவர். அவ்வளவுதான் எனக்கு வந்ததே ஒரு கோபம்.


இறங்கிப் பாய்ந்தோடி வந்து, 'இங்க தாங்க அதை!' என்று வெடுக்கென புச்சியப்பாவின் கையிலிருந்து பிடுங்கி தரையில் டயறியோடு விழுந்தேன். 'டேய்! இன்சாப், என்னடா இது மரியாதையில்லாம..' என்ற வாப்பாவின் அதட்டல் குரலையெல்லாம் பொருட்படுத்தாமல் அதனைத்திறந்து படபடவென பக்கங்களைப் புரட்டினேன்.


கடைசியில் நான் தேடிய அந்தச் செய்தி அகப்பட்டு விட்டது. அதைச் சில நிமிடங்கள் நிதானமாக வாசித்தேன்.. வாசித்தேன்.. வாசித்துக் கொண்டேயிருந்தேன்.


'டேய் இன்சாப்? என்னடா ஒனக்கு?' என்று உம்மா கேட்டதெல்லாம் காதில் விழுந்தாலும் கவனத்தில் ஏறவில்லை. அந்த இரண்டு பக்கத் துணுக்குச் செய்தியை வாசித்து முடித்ததும் வெறியே பிடித்து விட்டது எனக்கு.
'ஓ! ஹோ......!' என்று டயறியை இருகைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி வெளியே முற்றத்திற்கு ஓடிவந்தேன். வராந்தாவிலே அங்குமிங்கும் துள்ளியோடினேன். என்னாலேயே என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


'நான் கண்டு புடிச்சிட்டேன்! கண்டு புடிச்சிட்டேன்!' என்ற வானத்தைப் பார்த்து அலறினேன்.


'டேய் இன்சாப்? இன்சாப் என்னடா இது? பக்கத்து வீட்ல ஆக்கள்லாம் பாக்கிறாங்கடா!'


'ஜெயக்குமார் ஸேர்! உங்க மாணவன் இன்சாப்! இன்சாப்  கண்டு புடிச்சிட்டான்..!'  என்று சந்தோஷ மிகுதியால் முற்றத்தில் சுற்றிச் சுற்றி ஓடினேன்.


'யா! அல்லாஹ்! என்ட புள்ளைக்கு என்னமோ ஆயிட்டு! டீவில காட்டினதில எல்லார்ர கண்ணூறும் பட்டுட்டு.. என்ட புள்ள ஆண்டவனே!' என்ற உம்மாவின் புலம்பலும் 'ஓ! யுரெக்கா...யுரெக்கா! கண்டு புடிச்சிட்டேன்..!' என்று நான் கத்தியதும்தான் கடைசியாகத் தெரியும் எனக்கு.


மீண்டும் நான்  கண்விழித்தபோது என்னைச்சுற்றி பல தெளிவில்லாத முகங்கள் தண்ணீரிலாடும் பிம்பங்கள் போலத் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. இறுதியில் மீண்டும் இருண்டுபோயின.


000


'யென்ஷாப்! யென்ஷாப்! ஓபன் யுவர் ஐஸ் போய்! யென்ஷாப் கண்ணத் தொற!' என்று காதுகளுக்கருகிலே புதிதாக ஒரு கிணற்றுக்குரல் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, 'நீங்க கூப்பிட்டுப் பாருங்க' என்று அது விலக, 'இன்சாப்! வாப்பா! இஞ்ச பார்ரா கண்ணை முழிச்சுப் பார்டா என் தங்கம்!' என்று உம்மாவின் விசும்பல் குரலும் இடையிடையே வாப்பாவின் குரலும் பாதாளத்துக்குள்ளிருந்து ஒலித்தன. குரல்கள் தெளிவாகக் கேட்டாலும் எவ்வளவு முயன்றும் கண்ணைத் திறக்கவோ உடலை அசைக்கவோ முடியவில்லை.


நான் எங்கே இருக்கிறேன்..?


'நோ ப்ரொப்ளம்!  ஹீல் பீ ஓல்ரைட்!  அவனுக்கு ஒண்டுமில்ல...நீங்க எல்லாரும் வெளிய இருங்க கொஞ்ச நேரம்' என்றது அந்த 'யென்ஷாப்'  குரல். அதன் பிறகு நீண்ட மௌனம். மின்விசிறியின் ஒலிதவிர வேறு எதுவும் கேட்கவில்லை.


'குட்மோர்னிங் டொக்டர்!' என்று எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குரல் கேட்டது.


'ப்ளீஸ் கம் மிஸ்டர் ஜயக்குமார்! நீங்கதான் யென்ஷாப்ட க்ளாஸ் டீச்சரா? வெல்..! நீங்க வந்து கூப்பிட்டுப் பாருங்க. ஒரு தடவை கண் திறந்திருக்கிறான். பட் திரும்பவும் மூடிட்டான். யு ஜஸ்ட் ட்ரை..கோல் ஹிம்!'


'இன்சாப்! உன்ட ஸேர் வந்திருக்கிறன்டா பயலே. கண்ணைத் திறடா என்ட கெட்டிக்காரப்  பயலே!...இன்சாப்!' என்று என் தலையைக்கோதியவாறே கூப்பிட்டார். அவர் கெஞ்சுவதைப் பொறுக்க முடியாமல் இமைகளிரண்டிலும் பாறாங்கற்கள் கட்டியிருந்த கண்களைக் கஷ்டப்பட்டுக்திறக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை.


'மிஸ்டர் ஜயக்குமார்! என்ன ப்ரச்சினை ஸ்கூல்ல இவனுக்கு? பேரண்ட்ஸ் என்னமோ சொன்னாங்களே..சம்திங் எபவுட் ஒன் கோயிங் கன்ட்ராவேர்ஷல் க்ராவிட்டி ப்ராப்ளம்? இவன் எதையோ கண்டுபிடிச்சிட்டனென்டு கத்திக் கூப்பாடு போட்டு...ஓவர் எமோஷனல் ஸ்டேஜ்க்கு வந்ததாகத்தான் உங்க ட்ரிங்கோமலீ பேஸ் ஹொஸ்பிடல் றிப்போர்ட்.. வாட் ஹெப்பண்ட் எக்சுவலி?' என்று கேள்விக்குமேல் கேள்வியாய் கேட்டது அந்த புதுக்குரல்.


'ஓ! அதுவா டொக்டர்? இவன் அவனையறியாமலே ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறான்... ஆரம்பத்திலருந்து எல்லாம் சொல்றேன்' என்று ஜெயக்குமார் ஸேர் ஆரம்பிக்க,  'இப்படி வாங்க அங்க என் ரூம்ல போய் உட்கார்ந்து பேசலாம்' என்று அந்த புதுக்குரல் அழைக்க இருவரும் தூரவிலகிச் சென்று விட்டார்கள்.


அங்கு அமைதி ஆட்கொண்டது. மீண்டும் மின்விசிறியின் மெல்லிய
படபடப்புடன் நிசப்தத்தில் நான் மட்டும் தனியாய்... 


சிறிது நேரத்தில் அதே குரல்கள்...


'ஓ! அப்படியா? வெரி இன்ட்ரஸ்டிங் போய்!' என்று என் தலையைக்கோதின அந்த புதிய குரலுக்குரிய குளிரான விரல்கள்.


'யெஸ் டொக்டர் பூமி வெப்பமடைதல்... யூ நோ.. க்ளோபல் வார்மிங்.. சூடு கூடி துருவத்திலே இருக்கிற பனிப்பாறைகள் உருகி கடலின் மட்டம் கூடி மாலைத்தீவு போல சில தீவுகளும் ரஷ்யா போல சில பெரிய நாடுகள்ற கரையோரங்களும் கடலுக்குள்ள போகும் என்று கேள்விப்பட்டிருப்பீங்களே டொக்டர்..?'


'யெஸ்! யெஸ்! ஐ நோ! ஐ யூஸ்ட்டு வோட்ச்  டிஸ்கவரி சேனல்'


'அதிலருந்து குறுக்கு வழியில தப்புறதுக்கு சில நாடுகள் ரகசியமாகச் செய்த சதி ஒண்ணு அம்பலமானதுக்கு இவனும் ஒரு காரணமாக இருந்திருக்கிறான் டொக்டர்!'


'அப்படியா? எப்படி அது?'


'இப்ப நம்ம பூமியை மெல்ல மெல்ல சூரியனை விட்டுத் விலக்கித் தள்ளி வச்சா அதோட வெப்பநிலை அதுதான்  எவரெஜ் டெம்பரேச்சர் குறைஞ்சிரும்தானே..'


'ஓ! மை காட் அது எப்படி இவ்வளவு பெரிய பூமியைத் தள்ளி வைக்க முடியும் மிஸ்டர் ஜயக்குமார்? இட் ஈஸ் அன் பிலீவபிள்!'


'இட்ஸ்.. பொஸிபிள் டொக்டர்! பூமிக்கும் செவ்வாய்க்குமிடையில ஒருசில வால்நட்சத்திரங்கள் ..கொமட்ஸ் அடிக்கடி கடந்து போய்க்கிட்டே இருக்கும்.. அது ஒவ்வொரு தடவையும் க்ரொஸ் பண்ணும்போது செவ்வாய்ப் பக்கமிருந்து ஒரு ஸ்பேஸ்ஷிப்ல இருந்து பவர்புல்லலான லேசர் கதிர்களை வால்நட்சத்திரத்துக்குப் பாய்ச்சினாப் போதும்..'


'ஓகே.. பாய்ச்சினா என்னாகும்?'


'அந்த அசையும் வால்நட்சத்திரத்தின்ட ஈர்ப்புச் சக்திகடுமையாக அதிகரிக்கும். அதனால் அது பூமியைக் கவரும். அப்படியே பூமியை அலுங்காமக் குலுங்காம ஒரு நாய்க்குட்டியைப் போல சூரியனிலிருந்து விலக்கி தேவையான இடத்துக்கு கொண்டு வந்திடும். இதைத்தான் மெல்ல மெல்ல பல ஆண்டுகளாகச் செய்து ரகசியமாகச் கொண்டு வந்திருக்கிறாங்க....'


'இட்ஸ் ரிடிக்யுலஸ்! ஸோ, நம்ம பூமி இப்போ பழைய இடத்தில இல்லையா?'


'யெஸ் டொக்டர்! அவர்கள் கடைசித் தடவையாக பூமியை இழுத்தபோது தவறுதலாக திடீரென அதிக தூரத்துக்கு இழுபட்டு விட்டது பூமி. அதாலதான் பூமியோட சுழற்சி வேகம் சட்டென அதிகரித்து கால்வலி, உடல் பாரம், அதிக மழை போன்ற பிரச்சினைகள்... இந்த ரகசிய நடவடிக்கை இவன் மூலமாக இப்போ அம்பலமாகியிருக்கு..!'


'ஓகே! இதெல்லாம் இந்தச் சின்னப் பையனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?'


'இவனுக்கு மட்டுமில்ல, நிறையப்பேருக்கு ஏன்..எனக்கும் கூட சந்தேகம் வந்ததுதான். ஆனா அது ஒரு ஷேப்புக்கு வந்ததுக்கு இவனுக்கு ஸ்பேஸ் நியுஸ்களில இருந்த இன்ட்ரஸ்ட்டும் இவன்ட பத்திரிகைகள்ல வருகிற ஸ்பேஸ் ந்யூஸ் எல்லாத்தையும் வெட்டி ஒட்டி வைக்கிற பொழுது போக்குதான் காரணம். அப்படி...'


'சொல்லுங்க.!'


'அப்படி ஒரு செய்திதான் இது. இதுதான் அந்த செய்தி...பாருங்க! இது 2001ல் அதாவது இவன் பிறந்த அடுத்த வருசம் குமுதம் என்ற மெகஷின்ல ஓகஸ்ட் 2ம் திகதி, 'பூமியை இடம் மாற்றுங்கள்!' என்ற ஒரு சிறுகட்டுரை. இது இவனிட்ட இருந்ததாலதான் இந்த காரணத்தையே கெஸ் பண்ணி எங்களால இன்டர் நெஷனல் சயன்ஸ் யூனியனுக்கு தகவல் கொடுக்க முடிந்தது. அதனாலதான் இப்ப விசயமே அம்பலமாகி யூ என் வரை  பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்குது..' என்று ஜெயக்குமார் ஸேர் சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்கு மெல்ல மெல்ல...கைகளை அசைக்க..முடிந்தது.


'இந்தச் சின்னப்பயல் இப்போ இன்டர்நேஷனல் லெவல்ல பேமஸாகிட்டான்.. டொக்டர்! இவனை இங்கே கொழும்பு ஹொஸ்பிடலுக்கு  கொண்டு வந்தது தெரியாததால டீவி பேப்;பர் ரிப்போர்ட்டர்ஸ் எல்லோரும் இவனைத்தேடி ட்ரிங்கோவுக்குப் போயிருக்கிறாங்க...இவன் இங்க இருக்கிறது மட்டும் தெரிஞ்சா இந்த ஹொஸ்பிட்டலே தாங்காது டொக்டர்!'


'வெல் வெல்! ஸோ, யூ ஸே மை ஹொஸ்பிட்டல் இஸ் ஓல்ஸோ கொயிங் டூ பீ மோர் பொப்யூலர்.. அப்படித்தானே ஜயக்குமார்?'


'பாவம், எல்லாத்துக்கும் காரணமாக இருந்திட்டு இவன்  இப்படிக் கிடக்கிறானே டொக்டர்?'


'டோண்ட்  வொறி! ஹீ வில் பீ ஓல்ரைட் ஜயக்கு..மா...! ஓ காட்! அங்க பாருங்க! அவனோட கண் திறந்திருக்கு! கம்!கம்!'


'யென்ஷாப்.. மை போய்! யென்ஷாப்! ஜயக்குமார் ப்ளீஸ் கோல் ஹிம்!'


'இன்சாப்! இங்க பாரு இன்சாப்!' என்று கூப்பிடும் ஜெயக்குமார் ஸேர் இப்போது எனக்குத் தலைகீழாக தெரிந்தார். கை கால்ககளை மெல்ல அசைக்க முடிந்தது. முகம் முழுக்க மூடியிருந்த கருவிகளின் வயர்களைத் தாண்டி லேசாகப் புன்னகைத்தேன். எனது கண்களிலிருந்து நீர் வழிந்தது.


'டேய் என்ட கெட்டிக்காரப்பயலே! உண்மையில பெரிய ஆள்தாண்டா நீ!' என்று என்னைக் கட்டிக் கொண்டு கூவினார், எனக்கு மிகவும் பிடித்தமான அந்த அருமையான விஞ்ஞான ஆசிரியர். அவர் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் முத்துக்கள் அறையின் புளொரஸெண்ட் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது எனக்கு.


'தேங்க்யூ ஸேர்!' மீண்டும் புன்னகைத்தேன், நான். -மூதூர் மொகமட் ராபி