Tuesday, December 25, 2012

சிறுகதை: சிலந்திக்கூடுகள்
கொழும்பிலே ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உதவி இரசாயனப் பகுப்பாய்வாளாராக வேலை செய்து கொண்டிருக்கும் நான் பல வருடங்களுக்குப் பின்பு திடீரென்று ஒருநாள் ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். வந்திறங்கியவுடன் முன்பு ஊரிலே ஒன்றாகத் திரிந்த எனது நண்பர்களில் சிலரையாவது உடனடியாகச் சந்திக்க நினைத்தேன்.
குளித்து முடித்து தம்பியின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு முச்சந்திக்கு வந்தேன்.

'அட என்ன தம்பி  நீங்கதானா இது? நான் வேறு யாரோண்டல்லவா பார்த்தேன்.. முடியெல்லாம் வளர்த்து ஆளே மாறிப்போயிட்டீங்க' என்று ஊர்ப் பெரியவர்கள் சிலர் அதிசயித்துப் பேசியபோதுதான் தெரிந்தவர்கள் பலர் என்னைப் பார்த்தும் பேசாமல் போனதற்குரிய காரணம் புரிந்தது. ஆனால் எனது நண்பர்கள் என்னை நிச்சயம் அடையாளங் கண்டுவிடுவார்கள்.
பாடசாலைக் காலத்திலிருந்தே நண்பர்கள் நாங்கள் வழமையாக ஒன்றுகூடும் முச்சந்தி ஆண்டியின் சில்லறைக்கடைக்கு வந்து சேர்ந்தேன். இத்தனை வருடங்கள் கழிந்தும் அது அதிக மாற்றங்களேதுமின்றி அப்படியேதான் இருந்தது.


'தம்பீ, இப்ப இதில நம்ம இஸ்ஸத் ஸேர், பாகிம் ஸேர்வயர் ஆக்கள் வந்தாங்களா?' என்று கடையில் நின்ற சிறுபையனிடம் விசாரித்தேன். அவனிடம் ஆண்டியின் முகச்சாயல் இருந்தது. அவனுடைய தம்பியாக இருக்க வேண்டும்.


'அஸருக்குப் பொறவு எல்லாரும் இதிலதான் வந்து பேசிட்டு நிண்டாங்க. பொறவு இப்ப கொஞ்ச முதல்தான் நம்மட ஷம்ரி ஸேர்ட வீட்டுப்பக்கம் எல்லாரும் சைக்கிள்ள போறதைக் கண்டேன்' என்னை அவனுக்கு யாரென்று தெரிந்திருக்க நியாயமில்லை என்பதால் புதிதாகப் பார்த்தவாறே பதில் சொன்னான்.

ஷம்ரி என்னோடு ஒரேவகுப்பில் படித்தவன். எனது மிகவும் நெருங்கிய பால்ய நண்பர்களிலே ஒருவன். என்மீது அளவில்லாத அன்பும் ஆதரவும் கொண்டவன். பாடசாலை காலத்திலே என்னோடு ஒன்றாகவே திரிந்தவன். நடுத்தீவில் இருந்த ஷம்ரியின் தாய் வீட்டைத்தான் எனக்குத் தெரியும். திருமணமான பின்பு அவன் மனைவியோடு எங்கே குடியிருக்கின்றான் என்பது தெரிந்திருக்கவில்லை.

அத்தனை நெருங்கிய நண்பனாக அவன் இருந்தும்கூட ஊரில் நடந்த அவனது திருமணத்திற்கு நான் வந்திருக்கவில்லை. நான் நிச்சயம் வரமாட்டேன்  என்பதை அறிந்தும் பெருந்தன்மையுடன் தனது கல்யாண அழைப்பிதழை தபாலில் அனுப்பியிருந்தான். திருமண மாப்பிள்ளையாய் அவன் பெருந்தன்மையாக நடந்து கொண்ட அளவுக்கு ஏனையவர்களும் நடந்து கொள்வார்களா என்ற எனது நியாயமான சந்தேகத்தை  அவனும் அறிந்தே வைத்திருந்தான். ஆம், அவனது திருமணம் நடந்ததே ஒரு பெரிய கதை. அதைக் நான் கூறத்தொடங்கினால் இப்போதைக்குத் திரும்பி வரமுடியாது. எனவே இப்போது ஷம்ரியின் வீடுசெல்வதை மட்டுமே பார்க்கலாம்..


 'தம்பீ ஷம்ரி ஸேர்ட வீடு எங்க இருக்கு?'

'மதரஸாக்குக்கிட்ட சந்தியில டேஸ்ட் கடையில கேட்டிங்கண்டா காட்டுவாங்க நானா'  என்று அவன் வழிசொல்ல பைக்கை ஏஸி ரோட்டில் திருப்பி ஓட்டினேன்.


ஷம்ரியை நினைத்தால் பத்தாம் வகுப்பு வரை எங்களோடு ஒன்றாகப் படித்த ரினோஸாவின் நினைவும் தவறாமல் வரும். அவள் எனது தந்தையின் நண்பர்களில் ஒருவரான உள்ளுர் போஸ்ட் மாஸ்டரின் இரண்டாவது மகள். எங்கள் வகுப்பிலே சரி அரைவாசித் தொகையில் மாணவிகளும் இருந்து வந்தார்கள். பையன்கள் எங்களுக்கும் பெண்களுக்கும் படிப்பு, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் உட்பட எல்லாவற்றிலுமே ஒருவித போட்டி மனப்பான்மை இருந்து வந்தது. நாங்கள் எப்போதுமே பெண்களை எங்களது எதிர்த்தரப்பாகவேதான் கருதுவதுண்டு.


இதனால் நானும் எனது நண்பர்களும் எதையாவது காரணத்தை வைத்துக்கொண்டு மாணவிகளைக் கிண்டலடிப்பது வழக்கம். அதுவும் அவர்களுக்குப் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவதும் அதற்கு அவர்கள் கோபப்படுவதை இரசிப்பதும் எங்களுக்கெல்லாம் பொழுதுபோக்காக இருந்து வந்த காலம் அது. அந்தப் பெண்களும் லேசுப்பட்டவர்களல்ல. படுசுட்டிகள்; பயப்படாமல் பையன்களாகிய எங்களுக்கு ஈடுகொடுத்து வாயடிப்பார்கள். அதிலும் சற்றுத் துடுக்கும் அழகும்  நிறைந்த ரினோஸா எங்களைக் கலாய்ப்பதிலே படுசுட்டியாக இருப்பாள். நாங்கள் அவளைத்தான் கூடுதலாக கிண்டலடிப்பது வழமை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
ரினோஸாவை நாங்கள் எவ்வளவுதான் நையாண்டி செய்தாலும் அவள் அவற்றையெல்லாம் வெறும் விளையாட்டாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் குணமுள்ளவள். எங்களுடைய கிண்டலை தானும் உள்ளுர இரசித்து அதற்குப் பொருத்தமாக திருப்பியடிப்பாளே தவிர ஒருபோதும் அதனை பிரச்சினையாக ஆக்க மாட்டாள். அதுமட்டுமல்ல மற்றப் பெண்களைப்போல போலியான வெட்கமெல்லாம் காண்பிக்காமல் பையன்களாகிய எங்கள் எல்லோருடனும் சமமாகவும் வெளிப்படையாகவும் பழகுவாள். அபூர்வமாக எப்போதாவது ஒருநாள் அவள் கோபித்தாலும் அதுகூட அழகாகவும் நியாயமாகவும்தான் இருக்கும். இதனால் பையன்களாகிய எங்களுக்கு அவள் எப்போதும் ஒரு மதிப்புக்குரிய எதிர்த்தரப்பாகவே இருந்து வந்தாள்.


அப்போது பார்த்து எங்களுர் சினிமாத் தியேட்டரில் ஒரு புதுத்தமிழ் திரைப்படம் வந்திருந்தது. அந்தப்படம் திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.  நடுத்தர வயதைத் தாண்டியவர்களும் வயோதிபர்களும் இளைஞர் வேடமிட்டு நடிக்கும் அன்றைய காலத்தில் வழமையான தமிழ் படங்களைப்போலன்றி எங்கள் வயதொத்த இளைஞர்களே நடித்திருந்த ஒர் உல்லாசமான காதல் கதையுள்ள படம் அது. இதனால் நானும் நண்பர்களும் பல தடவை அந்தப் புதுப்படத்தைப் போய்ப்பார்த்தோம். அந்தப்படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கும் எனது நெருங்கிய நண்பன் ஷம்ரிக்கும் சலிக்கவேயில்லை. மாலைவகுப்புகளைக் கூட தவிர்த்துவிட்டு இருவரும்  படத்தை அடிக்கடி பார்க்க ஆரம்பித்தோம்.


அந்தப்படத்தில் வரும் அழகிய இளம் கதாநாயகியை எனக்கும் எனது வகுப்பு நண்பர்கள் பட்டாளத்துக்கும் பிடித்துப்போனது. மிகவும் அழகான அந்த நடிகை எங்கள் வகுப்பின் மதிப்புக்குரிய எதிரி ரினோஸாவை தோற்றத்தில் பெரிதும் ஒத்திருந்தாள். அவ்வளவுதான். உடனடியாக எங்கள் எல்லோருக்குமே ரினோஸா மீது திடீரென ஒரு புதிய ஈடுபாடு உண்டாகி விட்டது. இந்த விடயம் எங்கள் வகுப்பு முழுவதும் பரவிவிட்டது. அதற்குப் பின்பு படத்தில்வரும் அந்த நடிகையின் பாத்திரப் பெயரைக்கூறி ரினோஸாவைப் புதிதாகக் கிண்டல் செய்யத் தொடங்கினோம். அந்தக் கிண்டலில் நானும் ஷம்ரியும்தான் சற்றுத் தீவிரமாக இருந்தோம்.


நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்ட ரினோஸாவுக்கு இணையாக எங்களில் யாரென்ற கேள்வி வந்தபோது எதுவித தயக்கமமின்றி நண்பர்கள் பட்டாளம் என்னையே தேர்ந்தெடுத்தது. அத்தோடு அவளோடு சேர்த்து என்னையும் கேலிபண்ண ஆரம்பித்து விடவே எங்கள் வகுப்பு முழுவதும் விடயம் அடிபட ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் இதுகுறித்து நானும் ரினோஸாவும் வெளிப்படையாகக் கோபித்துக்கொண்டாலும் உண்மையில் இருவரும் அதை உள்ளுர இரசித்தோமென்றுதான் கூறவேண்டும். அதிலே கட்டிளமைப்புரவத்திற்கேயுரிய ஏதோ ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்தது. இதனால் நானும் ரினோஸாவும் காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதிலேயே ஏறத்தாழ காதலர்கள் ஆகிவிட்டோம்.


இதுதான் நானும் ரினோஸாவும் 'காதலர்களான கதை'.


காதலர்கள் என்று வாங்கிய பெயரை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று அந்த வயதிலே எனக்கு சத்தியமாக தெரியவேயில்லை. ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் இன்றைய காலத்தில் போல அதிகம் தெரியவில்லை. அப்போது வந்த திரைப்படங்களில் கூட ஆகமிஞ்சிப் போனால் வீட்டாருக்குத் தெரியாமல் எங்காவது தோப்புகளுக்குள்ளே அல்லது கடற்கரையிலே பேசிக்கொண்டிருப்பது போலத்தான் காட்டுவார்கள். நாங்கள் வளர்ந்த சூழலில் அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது. காரணம்  பாடசாலை அல்லது மாலைநேர வகுப்புகள் (அதுவும் கூட பாடசாலையில்தான் நடைபெறும்) தவிர்ந்த வேறு எங்கும் பெண்பிள்ளைகளைத் தனியாக அனுப்பும் வழக்கம் அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் இருந்ததில்லை.


அதிலும் பையன்களாகிய எங்களுக்கிருந்த சுதந்திரம் பெண்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. இருந்தாலும் காதல் விடயத்திலே ரினோஸா என்னைவிட படுவிவரமாகவே இருந்தாள். தன்னை விரும்புபவன் தனக்கு நிறையத் தின்பண்டங்கள் வாங்கித் தரவேண்டும்.. தான் விரும்புவதையெல்லாம் அசடுவழிந்த கொண்டே நிறைவேற்ற வேண்டும்.. மற்றப் பெண்பிள்ளைகளோடு நெருங்கிப்பழகக்ககூடாது... தான் பையன்களுடன் சாதாரணமாகப் பேசினால்கூட அதற்காக நான் தன்னைக் கோபிக்க வேண்டும் என்பது போன்ற சில மலிவான எதிர்பார்ப்புகளையெல்லாம் வைத்திருந்தாள். ஆனால் சிறுவயது முதல் பாசாங்குகள் தெரியாமலே வளர்ந்தவனாகிய எனக்கு அதையெல்லாம் செய்வதற்குத் தெரியவில்லை மட்டுமல்ல அவற்றை நான்  விரும்பவுமில்லை. இது அவளுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும்.


அதுமட்டுமல்ல என்னோடு ஒப்பிடும்போது இரண்டொரு மாதங்கள் பெரியவள் என்பதோடு தன்னுடைய அழகு போதாது தாழ்வான எண்ணத்தையும் அவள் கொண்டிருந்தாள். பாடசாலையில் வைத்து எப்போதாவது தனிமையிலே சந்திக்கக் கிடைத்தபோதெல்லாம் என்னுடைய அழகுக்கும் குணத்துக்கும் தான் பொருத்தமில்லை என்பதுதான் அவளது பேச்சாக இருப்பதுண்டு. அப்படி அவள் சொல்லும்போதெல்லாம் எனக்கு அவளுடைய தாழ்வுணர்வு எரிச்சலூட்டியது. அதைவிடவும் பாடசாலையிலே அவளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்த எனக்கு எங்களைவிட உயர்ந்த வகுப்புப் படிக்கும் பையன்களோடெல்லாம் சகஜமாகப் பேசிப்பழகும் ரினோஸாவுக்கு காதல் விடயத்தில் வேறு சில தெரிவுகளும் இருப்பதாக சிறு சந்தேகமும் உண்டானது. அவளது பல தெரிவுகளில் நானும் ஒருவனோ என்று எண்ணவும் தோன்றியது எனக்கு.


நான் சிறுவயது முதலே புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். அவளுக்கு பாடப்புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவளுக்கு வானொலி நிகழ்ச்சிகளென்றால் உயிர். எனக்கு அதிலே பெரிய நாட்டமில்லை. இதுபோல பல அம்சங்களில் எங்களுக்கிடையே வேறுபாடுகளிருந்தன. ஆகமொத்தத்தில் என்னுடைய இரசனைக்கு அவளாலும் அவளுடைய எதிர்பார்ப்புகளுக்கு என்னாலும் இறங்கி வரவே முடியவில்லை. இதனால் எங்கள் 'காதல்' ஒரு முழுமையான வடிவம் பெறமுடியாமல்   நெடுங்காலம் அலைக்கழிந்தது. ஒருகட்டத்தில் இருவரும் முன்பு இருந்ததைப்போலவே மிகவும் சாதாரணமாக பழகத்தொடங்கி விட்டோம். இதைப்பார்த்த எனது நண்பர்கள்தான் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.


'என்னடா ரெண்டுபேருக்கும் ஏதும் பிரச்சினையா?' என்று துளைத்தான் நண்பன் ஷம்ரி.


'இல்லையே. இப்பவும் பேசிட்டுத்தானே இருக்கிறோம்'


'பேசுறீங்கதான்.. பழகுறீங்கதான். ஆனா.. அதில ஒரு 'இது' இல்லியடா?'


'இது இல்லையெண்டா எதுடா?'


'என்னடா சொல்றது..? இப்பல்லாம் உங்களைப் பாத்தா லவ்வர்ஸ் மாதிரியே இல்லியடா!'


நான் என்னுடைய பிரச்சினைகளை ரஸீனிடம் சொன்னேன்.

'உன்னிலயும் பிரச்சினை இருக்குதுடா. நீ லவ்வை ஃபிட்டாக்கிற மாதிரி எதுவும் செய்யாம இருக்கிறியே..'

'சரி, இப்ப என்ன செஞ்சா லவ் ஃபிட்டாகும்? படத்தில காட்ற மாதிரி புளியமரத்தை சுத்திப் பாட்டுப்பாடி ஆடணுமாடா? சொல்லு செய்வோம்'


'ஓ! ஆடுங்க.. வருவாரு வாப்பா! போஸ்ட் ஒபீஸ்ல கடிதத்துக்கு சீல் குத்துற கட்டையாலயே ஒன்னப் போட்டுக் குத்தியெடுப்பாரு மனிசன்! மச்சான் வாடா பின்னேரத்தில கொடத்தோட மில்லுக்கெணத்துக்கு தண்ணிக்கு வரும். சைக்கிள எடுத்திட்டு வாடா பொட்டைய பாக்கப் போவோம்'


'அதான் ஒவ்வொரு நாளும் ஸ்கூல்ல பாக்கிறந்தானேடா!'


'போடா இவனே! நீயெல்லாம் ஒரு..! லவ்வெல்லாம் ஃபிட் ஆகணுமெண்டால் இப்பிடியெல்லாம் போவணும் திரியணும்'


ஷம்ரியின் யோசனைப்படி ஒரு வெள்ளிக்கிழமை பின்னேரம் அவள் வீடு இருக்கும் தெருவால் பல தடவை சைக்கிளில் டபுள்ஸ் அடித்துப் போவதும் மில்லுக்கிணற்றுக்கு முன்னாலிருக்கும் புளியமரத்தடியில் காத்து நின்றும் பார்த்தோம். ஊரிலுள்ள அத்தனை இளம் பெண்களும் தண்ணீருக்கு வந்தார்கள். ஆனால் ரினோஸாவைத்தான் அந்தப்பக்கமே காணவில்லை. சனி ஞாயிறுகளிலும் அவள் வரவில்லை. அவள் வராததிலே என்னைவிட ஷம்ரிக்குத்தான் அதிக ஏமாற்றமாக இருந்தது.


எங்கள் ஏமாற்றம் அத்தோடு முடியவில்லை.


அடுத்த வாரம் முழுவதும் ரினோஸா பாடசாலைக்கும் வராதிருந்தாள். விசாரித்துப் பார்த்ததிலே கொழும்பிலிருக்கும் அவளது மாமா ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். சரி, எப்படியும் அதற்கடுத்த வாரமாவது பாடசாலைக்குத் திரும்பி வருவாள்தானே என்று நாங்கள் எங்களையே தேற்றிக்கொண்டோம். ஆனால் நடந்ததோ வேறு விடயம்.
ஆம். ரினோஸா வரவேயில்லை. கொழும்பு சென்ற  ரினோஸா அங்கே மாமா வீட்டிலேயே தங்கிப் படிக்கப்போவதாக ஒரு செய்தி மட்டும்தான் வந்தது.
'என்னடா இப்பிடிப் போய் கொழும்புலயே நிண்டுட்டாள்..?' என்று சலித்துக் கொண்டான் ஷம்ரி.


'அதானடா. இதைப்பத்தி ரினோஸா எதுவும் சொல்லவே இல்லையே திடீர் என்டு ஏன்டா..?'


'நீ அவளை ஷேப்பண்ணி வச்சிருந்தால்தானே சொல்லுவாள்..? சரி, எப்பிடியும் லீவிங் ஸேர்ட்டிபிக்கேட் எடுக்க இங்க வருவாள்தானே.. அப்ப  எப்படியாவது அவளைத் தனியாச் சந்திக்கணுன்டா.. இப்பிடியே போனா சரிவராது மச்சான்'


அதற்குப் பிறகு பாடசாலை விட்டால் போதும் கொழும்பிலிருந்து ரினோஸா வந்திட்டாளா இல்லையா என்று அறிவதற்காக அவளது தெருவிலேயே அலைந்து கொண்டிருப்பதுதான் எனக்கும் ரஸீனுக்கும் தினசரி வேலையாகிப் போனது.


'சே! அவள் இஞ்ச இருந்த நேரமே லவ்வை டெவலப் பண்ணாம சும்மா இருந்திட்டு இப்ப போய் இப்பிடி அலையுறியேடா மடையா'


'நான் எங்கடா அலையுறேன். நீதான் என்னையும் இழுத்திட்டு அலைய வைக்கிறா தெரியுமா?' என்றேன் வாய் தவறிப்போய்.


'டேய் நாயே! எனக்கு இது வேணுண்டா! நீதானேடா அந்தப் படத்தைப் பாத்துப்போட்டு அந்த நடிகை நம்மட ரினோஸா மாதிரியிருக்கா அது இது என்று உளறிக் கொட்டி என்னையும் இழுத்திக்கிட்டு தியேட்டருக்குத் திரிஞ்சுபோட்டு.. இப்ப இப்பிடியாடா சொல்றா?' என்று என்காதைத் திருகினான் ஷம்ரி.


அதற்குப் பிறகு நான் ரினோஸாவை மீண்டும் காண்பதற்குள் பலவருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. அதற்குள் எனது வாழ்க்கையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் மாற்றங்களும் நடந்தேறியிருந்தன. குறிப்பாக ரினோஸாவை காத்திருந்து அவள் வீட்டுத்தெருவில் நானும் ஷம்ரியும் அலைந்த காலத்திலே நான் இன்னுமொரு காதலைச் சந்திக்க வேண்டியேற்பட்டதை அவசியம் சொல்லித்தானாக வேண்டும்.


அவளுடைய பெயர் ரிமாஷா.


ஊரிலிருக்கும் கிறிஸ்தவப் பாடசாலை கணித ஆசிரியரின் மகள். அவளும் அதே பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். பழைய காதலி ரினோஸாவின் வீடு இருந்த அதே தெருவிலே இருந்து தினமும் பொதுக்கிணற்றுக்குத் தண்ணீர் அள்ளிச்செல்ல வந்து செல்லும் ரிமாஷாவின் ஓரவிழிப்பார்வையில் நான் என்னையறியாமலே விழுந்துவிட்டேன். அவளுடைய அழகும் அமைதியான குணமும் இவள்தான் உண்மையிலேயே எனக்குரியவள் என்ற உணர்வை ஏற்படுத்தியது.


உண்மையைச் சொல்லப்போனால் ரிமாஷாவைக் கண்டபின்புதான் முன்பு எனது பழைய காதல் வெறும் சினிமாக் கவர்ச்சியினால் உருவானது என்பதையும் அது எங்கள் இருவரின் உள்ளார்ந்த ஈடுபாடின்றி நண்பர்களின் ஊக்கத்தால் மட்டுமே தழைத்திருந்த ஒன்று என்ற உண்மையையும் நான் உணர்ந்து கொண்டேன்.


ஆனால் இந்த முறை பழைய தவறுகளை நான் செய்யவேயில்லை.


ஆம், எனது புதிய காதலை மிகவும் இரகசியமாக வைத்திருக்கத் தீர்மானித்தேன்.  எனக்காக என்கூடவே அலைந்தவனாகிய நண்பன் ஷம்ரிக்குக்கூட நான் தெரியப்படுத்தவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் நானும் ரிமாஷாவும் எங்கள் காதலை வெறுமனே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதோடு மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டோம். எங்கள் காதலை அடைகாத்து வைத்திருப்பதிலே என்னைவிடத் தீவிரமாக இருந்தவள் ரிமாஷாதான். இதனால் எனது நண்பர் வட்டாரத்தில் வெளிப்பூச்சுக்கு ரினோஸாவின் காதலன் என்ற பெயரோடு உள்ளுர ரிமாஷாவின் காதலனாக நான் இருந்து வந்தேன்.


உண்மையைச் சொல்லப்போனால் முதிர்ந்த இலைகள் தளிரிலையைப் போர்த்துப் பாதுகாப்பதுபோல எனது உண்மைக்காதலை மற்றவர்களின் கவனத்திற்குச் செல்லாமல் பாதுகாத்ததே என்னுடைய பழைய காதல்தான். இதற்காகவே ரினோஸாவின் காதலன் என்ற பழைய பெயரை மறுக்காமலே இருந்து வந்தேன். இப்படியே வெகுகாலம் எங்கள் இரகசியக் காதல் தொடர்ந்தது.


இப்படியே வெகுகாலம் எங்கள் இரகசியக் காதல் பேச்சுவார்த்தை, இடைத்தரகர்கள், தோழிகள், கடிதப் பரிமாறல்கள், தொலைபேசித் தொடர்பாடல்கள் ஏதுமின்றி வெகு ரகசியமாக தொடர்ந்தது.

ஓரிரு ஆண்டுகளிலே படிப்பை முடித்துவிட்டு வேலைவிடயமாக வெளியூருக்கு நான் சென்று தங்கியிருக்க வேண்டிய அவசியமேற்பட்டது. அப்போதுதான்...

 'என்ன தம்பீ, யாரைத் தேடுறீங்க' என்று என்னைக் கலைத்தார் என்னுடைய தாய்வழி உறவினர் ஒருவர்.


விடயத்தைச் சொன்னேன்.


'வாங்க அந்த வழியாலதான் நானும் வயலுக்குப் போறேன்' என்றபடி என்னைக் கூட்டிச்சென்று ஷம்ரியின் வீட்டில் விட்டுச் சென்றார்.


இரண்டு பிரதான தெருக்கள் ஒன்றையொன்று வெட்டிச்செல்லும் ஒரு நாற்சந்திக்கு அண்மையிலிருந்தது அவனது வீடு. தகரவேலியிட்டிருந்த அந்த ஓட்டுவீட்டின் முன்னால் நிறைய சைக்கிள்கள் நின்றிருந்தன. சிறிய போர்ட்டிக்கோ போலிருந்த பகுதியை அடுத்திருந்த வரவேற்பறையின் கதவு திறந்து கிடந்தது பலசோடி கழற்றப்பட்ட செருப்புகள் கிடந்தன.


'ஷம்ரீ! ஷம்ரீ!!'  என்று அழைத்தவாறு நான் உள்ளே சற்று எட்டிப் பார்த்தேன். அங்கிருந்த நாற்காலிகளிலே ஷம்ரியும் அவனைச்சூழ எனது நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் ஒரு கணம் அவர்களுக்கு ஒருகணம் எதுவுமே புரியாமல் சட்டென்று அமைதியானார்கள்.


என்னை முதலில் அடையாளங் கண்டவன் வேறு யாராக இருக்கும்? என் பால்ய நண்பன் ஷம்ரியேதான்.


'அடேய் நீயாடா? இஞ்ச பாருங்கடா புதினத்தை! இது எப்படா வந்தாய் நீ! எவ்வளவு நாளைக்குப் பிறகுடா இது..' என்று கூவிக்கொண்டே ஓடோடி வந்து என்னைத் தன் நெஞ்சோடு கட்டித் தழுவிக்கொண்டான் ஷம்ரி.


அதன் பிறகுதான் மற்ற நண்பர்கள் எல்லோருக்கும் வந்திருப்பது நான்தான் என்பது புரிந்தது. ஆளாளுக்கு ஓடோடி வந்து கட்டித் தழுவிக்கொண்டது மட்டுமல்ல, 'டேய் இதென்னடா உன்ட கோலம்..? தலையெல்லாம் நீளமாய் அந்நியன் ஸ்டைல்ல வளர்த்து ஆளை மதிக்கவே ஏலாதுடா..? என்று தலைமுடியை குலைத்து முதுகிலே செல்லமாய் அடிக்கவும் செய்தார்கள்.


'அதுசரி என்னடா எல்லாரும் இஞ்ச வந்து கெடக்கிறீங்க..? ஏதும் விசேஷமாடா..?' என்றேன் எல்லாரையும் பொதுவாகப் பார்த்து.


'ஓண்டா விசேஷம்தான்..! நம்மட ஷம்ரி வாப்பாவாகிட்டான்டா. மனுஷி ஆஸ்பத்திரி வாட்ல; நேத்துத்தான் ஆம்பிளைப் பிள்ளைளொண்ணு கெடைச்சிருக்கு.. அதான் வந்து மச்சானைக் கலாய்ச்சிக்கிட்டிருந்தோம். இப்ப நீயும் வந்திட்டா!'


'ஓ! நல்ல விசயந்தானே..? இப்ப ரெண்டு பேரும் எப்பிடி இருக்கிறாங்க?'


'பிரச்சினையில்லடா சுகப்பிரசவந்தான். நாளைக்கு இல்லாட்டி
நாளண்ணைக்கு டிக்கட் வெட்டுவாங்க.. உம்மா மாமியெல்லாம் வாடலதான் கூடவே நிக்கிறாங்க.. இரு, நான் உனக்கு டீ போட்டுட்டு வாறேன்' என்று எழுந்து உள்ளே சென்றான் ஷம்ரி.


'ஷம்ரி ஊத்துற டீயைக் குடிச்சிடாத! குடிச்சியோ நாளைக்கே கொழும்புக்கு ஓடிடுவா?' என்றான் பைஸல்.


'ஓண்டா.. இதை பைஸல் ரெண்டு கப் டீயைக் குடிச்சிப் போட்டுத்தான்டா சொல்றான்!' என்று கிச்சனிலிருந்தபடி ஷம்ரி சொல்ல மற்றவர்கள் சத்தமாய்ச் சிரித்தோம்.


'பார்டா, வீட்ல பொம்பிளை இல்லையென்ட உடனே எப்பிடியெல்லாம் கூத்தடிக்கிறானொள் எண்டு'


அடுத்த ஒரு மணிநேரம் நண்பர்கள் எங்களது அளவளாவலோடு வெகு அட்டகாசமும் மகிழ்ச்சியுமாய் கழிந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த மத்ரஸாவிலிருந்து மஃரிப் தொழுகைக்கான அழைப்பு கேட்டது.  உடனே நண்பர்கள் எழுந்து,


'மச்சான் ஷம்ரி, நாங்க தொழுதுட்டு ஆண்டி கடையில நிக்கிறோம் ரெண்டுபேரும் அங்க வாங்க சரியா' என்று ஷம்ரியிடம் விடைபெறத் தொடங்கினார்கள்.


'இருங்கடா நானும் வாறேன்'  என்று நானும் எழுந்தேன்.

'நீ இரு மச்சான். அவனொள் போகட்டும்.  நம்ம முன்கடையில கிழங்கு ரோஸ் ஏதாவது சாப்பிட்டுட்டு டீ குடிச்சிட்டு தொழப் போவோம்' என்றான் ஷம்ரீ.

'பாத்தியாடா இவன..  பழைய கூட்டாளி வந்தவுடனேயே எப்பிடி நம்மளுக்கு காய் வெட்டுறானென்டு' என்றான் இஸ்ஸத் சிரித்துக் கொண்டே.

நண்பர்கள் எல்லோரும் சென்றதும் 'மச்சான் டேய், இந்தா இதைப் பார்த்திட்டு இரு. ஒரு நிமிஷத்தில முகத்தைக் கழுவிட்டு வாறேன்' என்று  அவனது திருமண போட்டோ அல்பத்தை தந்து விட்டு கிணற்றடிக்குச் சென்றான் ஷம்ரி .

அதை வாங்கி நான் திறந்ததும், கருநீலநிற கோட்சூட் அணிந்த திருமண மாப்பிள்ளை ஷம்ரியின் இடதுபுறமாக பாரதிராஜா படத்தில்வரும் தேவதைகள் போன்ற வெண்ணிறத் திருமண ஆடையில் கையிலே பூங்கொத்துடன் காதலின் துரோகம் சிறிதும் தெரியாதபடி புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் அழகும் அமைதியும் நிறைந்த பாத்திமா ரிமாஷா.


-மூதூர் மொகமட் ராபி

 .