இந்த வீணடிப்பு ஏன்?
ரமழான் மாதம் எனப்படும் நோன்பு காலம் உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம் மக்களால் ஒரு புனிதமான காலமாக கருதப்பட்டு வருகின்றது. நோன்பு எனும் விரதத்தின் நோக்கங்கள் பலவாறாக இருப்பினும் புலன்களை ஒருமுகப்படுத்தி இறைவன் காட்டிய வழியில் நமது கவனத்தையும் வாழ்க்கை முறையையும் எடுத்துச் செல்வதுதான் அதன் முக்கியமான நோக்கம் என்பதை மறுப்பேதுமின்றி யாவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
இது தவிர, சமூகத்தின் பல்வேறு பொருளாதார மட்டங்களில் இருக்கும் மக்கள் அன்றாட உணவுக்குக் கூட அல்லலுறும் ஏழைகள் பற்றி நினைத்துப் பார்பபதற்கும் அவர்களது வயிற்றுப்பசியின் கொடுமைகளை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்புத் தருவதும் ரமழானின் மற்றொரு உப நோக்கம். அவ்வாறு உணரும் போது வசதி படைத்தவர்கள் மட்டுமல்லாது ஓரளவு இயலுமானவர்களும் தம்மால் முடிந்தளவுக்கு அவ்வாறான அல்லலுறும் மக்களுக்கு உணவை வழங்குவார்கள், அவர்களது வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கு வேண்டிய உதவி ஒத்தாசை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதுதான் அதன் உள்ளார்ந்த நல்லெண்ண எதிர்பார்ப்பு. சரி, இருக்கட்டும்..
இன்று நமது சமூகத்தில் நடக்கும் இப்தார் எனும் நோன்பு திறக்கும் சடங்கு பற்றி சற்று பார்ப்போமா? இப்தார் என்பது நல்ல விடயம்தான். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் இஸ்லாமிய மதத்தில் ஒன்று கூடி நோன்பு திறப்பது சிறந்த விடயம்தான். ஆனால் தற்போது நமது நாட்டிலும் பல ஊர்களிலே ஒழுங்குபடுத்தி நடாத்தப்படும் இப்தார் விருந்துகளுக்கு நீங்கள் சென்றிந்தால் இப்தாரை முடித்து விட்டு எழுந்து வரும் போது நோன்பு திறந்தவர்களுக்காக வழங்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களிலே பாதி அல்லது சிறுபகுதி சாப்பிடப்பட்டு விட்ட நிலையிலே மீந்து போய் கிடக்கும் அல்லது வீணாகிக் கிடக்கும் உணவுப் பண்டங்களின் அளவை நிச்சயம் கண்ணுற்று இருப்பீர்கள். இந்த மிஞ்சிய உணவுகள் நமக்குப் போதிக்கும் ரமழானின் நோக்கம்தான் என்ன?
நமது ஊரிலும் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் ஒருபிடி உணவுக்கு வழியின்றி அல்லலுறும் இலட்சக்கணக்கான சிறுவர்களின் பெண்களின் ஆண்களின் தோற்றங்களை ஒரு நிமிடம் உங்கள் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அல்லது இதே வலைத்தளத்தில் பின்தொடரும் பிணந்தின்னிக் கழுகினால் சாவதற்கு காத்திருக்கப்படும் ஆபிரிக்கச் சிறுமியின் இந்தப் புகைப்படத்தையும் ஆக்கத்தையும் சிறிது பாருங்கள்.
இதன் பிறகு உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் இஸ்லாமியத் தூண்களே... இஸ்லாமிய கூரைகளே... இஸ்லாமியப் படிக்கட்டுகளே.. நீங்கள் செய்து கொண்டிருப்பது எதை?
இஸ்லாத்தின் பெயரால் வற்புறுத்தித் திருமணம் செய்யப்பட்ட வயோதிபக் கணவனுக்கு பணிவிடை செய்ய மறுத்ததற்காய் ஆப்கானில் இளம் மனைவியின் மூக்கை அறுத்ததைக் கூட நியாயப்படுத்தும் இஸ்லாமியத் தூண்களே...
ஊராரின் பெண்கள் அதிகம் படிக்கக் கூடாது என்ற நியாயமில்லாத தடையை மீறி இரகசியமாய் கல்விகற்று முதுமாணிப் பட்டம் பெற்றதற்காக பாகிஸ்தானில் மகளையும் அவளது தாயையும் அடைத்து வைத்து மானபங்கபடுத்தியதைக் கண்டிக்க மனமில்லாமல், குருரமாய் ரசித்துக் கூறும் இஸ்லாத்தின் கூரைகளே..
எஜமானியின் கைக்குழந்தைக்கு அனுபவமின்றிப் பாலூட்டியதனால் நேர்ந்த கைமோசச் சாவுக்காக இலங்கை மூதூரின் றிசானா நபீக் எனும் சிறுமிப் பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து சவூதியில் சிறைவைத்திருக்கும் அவலம் பற்றி பொழுதுபோக்காய் வம்பளக்கும் இஸ்லாமியப் படிக்கட்டுகளே...
நன்றாக யோசித்துப் பாருங்கள். உலகம் முழுவதும் பட்டினிச் சாவில் நமது முஸ்லீம் மக்களும் கூட இறந்து கொண்டிருக்கும் போது பசியே இல்லாத ருசிக்கு மட்டும் சாப்பிடும் தனவந்தர்களுக்கு விருந்து போட்டு உணவை டன் கணக்கிலே வீணடிக்கும் செயல்தான் நமது ரழழானின் நோக்கமா?
- Jesslya Jessly
"வயிறு நிறைந்த பின்பும் உண்பதை நிறுத்தாதவன் தன் பற்களால் தனது புதைகுழியைத் தோண்டுகின்றான்."