Tuesday, August 21, 2012

பாவமன்னிப்பு ஒரு பலவீனமா...?இலவுகாக்கும்

சி

'இஸ்லாமியக்' கிளிகள்


ங்களிடத்தில் ஒருவர் ஆயிரம் ரூபாவைக் கடனாகப் பெற்றுச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உரிய காலத்தில் அவர் அதைத் திருப்பித் தருவவதற்குத் தவறினால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?


இரண்டு மூன்று தடவை அவருக்கு நினைவூட்டுவீர்கள். கற்றுக் கறாராகக் கேட்டுப் பார்ப்பீர்கள். இதற்கெல்லாம் மசியாது போனால் அடுத்து, 'சரி அவருக்கு என்ன கஷ்டமோ' போனால் போகின்றது விட்டு விடுகிறீர்கள்.

சிறிதுகாலத்திற்குப் பின்பு அதே நபர் மீண்டும் தனது கஷ்டத்தைக் கூறி எப்படியோ உங்களிடம் இன்னுமொரு ஆயிரம் ரூபாவை கடனாகப் பெற்றுச் சென்றுவிடுகின்றார் என்றும் வைத்துக்கொள்வோம். அவருக்குத் திருப்பித் தரக்கூடிய நிலைமை இருந்தும் அவ்வாறு செய்யாமல் மீண்டும் அதே போலவே நடந்து கொள்கின்றார். அதையும் மன்னித்து விடுகின்றீர்களென்றே வைத்துக் கொள்வோம்.

காலக்கிரமத்திலே மூன்றாம் தடவையும் மற்றொரு கடனுதவிக்காக அவர் உங்களை நாடி வருகின்றார் அதேபோலவே கஷ்டத்தைக் கூறி உங்கள் அனுதாபத்தை வென்று  உதவி பெற்றுச் செல்கின்றார். இம்முறையும் பழைய கதையேதான் நடக்கின்றது என்றால் அவர் பற்றிய உங்கள் எதிர்காலத் தீர்மானம் எதுவாக இருக்கும்?

அவருக்குக் கொடுத்த கடனை வசூலிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனிமேல் அவர் எவ்வளவு கெஞ்சினாலும் புதிதாகக் கடன் கொடுப்பதில்லை என்றுதானே முடிவெடுப்பீர்கள்.


சரி, இவ்வாறான கறார் முடிவை நீங்கள் இப்போது எடுக்க வேண்டியேற்பட்டதற்குரிய காரணம் என்ன?.

நீங்கள் ஓர் இரக்கமில்லாதவரா அல்லது உதவுகின்ற குணமில்லாத உலோபியா அதுவுமில்லையென்றால் கஷ்டங்களால் துன்புறுபவர்களிடம் கருணையே காண்பிக்காத நபரா...?

இவை எதுவுமே கிடையாது!

மாறாக, உதவும் குணமுள்ள  உங்களை கடனுதவி பெற்ற நபர் தவறாகக் கையாளும் விதம்தான் காரணம்.

உங்களிடம் பணம்பெற்றுச் சென்றவருக்கு இருந்த பணமுடைதான்  முதல் தடவை அவர் பணத்தைத் திரும்பத்தரத் தவறியதற்குரிய காரணம் என்றாலும் அதற்கடுத்த தடவைகளிலே நிச்சயமாக அது காரணமாய் அமைந்திருக்கவில்லை.

இன்னும் கூறினால், நீங்கள் முதல் தடவை அவரை மன்னித்து விட்டுவிட்ட பெருந்தன்மையை அவர் உங்களது பலவீனமாகக் கருதியதனால்தான் இரண்டாம் முறையும் அதே தவறை தெரிந்து கொண்டே செய்யத் துணிந்திருக்கின்றார்.


அதாவது முதல் தடவை அவர் புரிந்த தவறுக்குக் காரணம் அவரது இயலாமை. ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் அவர் செய்த தவறுகளுக்கெல்லாம் காரணமாக அமைந்தது உங்களை இலகுவிலே ஏமாற்றிவிடலாம் என்ற அவரது  மோசடியான எண்ணம்.

இவ்வாறு தெரிந்த கொண்டே ஏமாற்ற நினைப்பவருக்கு நீங்கள் மறுபடியும் மறுபடியும் மன்னிப்பை வழங்குவீர்களா..?  என்பதுதான் இதிலுள்ள வினா.


நிச்சயமாக மாட்டீர்கள் அல்லவா?.

சரி,  சராசரி மனிதர்களாகிய நாமே நம்மை ஒருவர் ஏமாற்றுகின்றார் என்றால் இவ்வளவு எச்சரிக்கையடைகின்றோமே எல்லாவற்றையும் அறிந்த இறைவன் தன்னை ஏமாற்ற முயல்பவர்கள் பற்றி எச்சரிக்கையடைய மாட்டானா?

நல்லது, இப்போது விடயத்திற்கு வருவோம்.

நம்மில் பலர் ஒவ்வொரு தடவையும் பல்வேறுபட்ட பாவகாரியங்களைச் செய்கின்றோம். அதுவும் அவற்றை பாவம் என்று நன்றாக அறிந்து கொண்டேதான் செய்து வருகின்றோம்.  பின்பு ஆண்டுதோறும் ரமழான் காலத்தில் புனித லைத்துல் கத்ர் எனும் இரவிலே இறைவனின் சந்நிதானத்தில் அவற்றை மன்னிக்குமாறு பாவமன்னிப்பை வேண்டுகின்றோம். 


இது நம்மில் பலருக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.


தாம் வாழ்நாளில் புரிந்த பாதகச் செயல்களை,  அவை பாவங்கள் என்று அறிந்ததும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பவர்களும் இல்லாமலில்லை. அவ்வாறு மனம் வருந்திக் கேட்பவர்கள் அதே பாவகாரியங்களை மீண்டும் செய்யாமல் இருப்பது ஒன்றுதான் அவர்களின் நேர்மையான மன்னிப்புக்கோரலுக்குரிய தூய்மையான அடையாளம்.
மாறாக, மீண்டும் அதே பாவங்களை எதுவித உறுத்தலுமின்றி அல்லது 'அடுத்த லைலத்துக் கத்ரில் பார்த்துக்கொள்ளலாம்' என்ற நப்பாசையோடு மீண்டும் ஆரம்பித்தால் அத்தகையோரை இறைவன் மன்னிப்பானா?

ஒருவர் தன்னைத் தொடர்ந்து ஏமாற்றுகின்றார் என்று தெரிந்து விட்டால் எச்சரிக்கையடைந்து உதவ மறுக்கும் ஒரு சராசரி மனிதனை விடவா அந்த அனைத்துமறிந்தவன் எச்சரிக்கையற்று இருப்பான்?


சிந்தித்துப் பாருங்கள்...!


இப்படியான மோசடிக்காரர்களை மீண்டும் மீண்டும் இடைவிடாது மன்னிப்பதாக இருந்தால் ஒன்றில் இறைவன் தான் படைத்த மனிதனை விட எச்சரிக்கை குறைந்தவனாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இறைவன் மனிதனைவிட வலுக்குறைந்தவனாக இருக்க வாய்ப்பே கிடையாது. உண்மை இவ்வாறிருக்கும்போது தொடர்ச்சியாக பாவச்செயல் புரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் எங்கனம் இறைவன் தங்களை ஒவ்வொருமுறையும் மன்னிப்பான் என்று அத்தனை உறுதியாக நம்புகின்றார்கள்?

சிந்தித்துப் பாருங்கள்!

இதே போலத்தான் இஸ்லாமியரின் புனிதப் பயணமாகிய ஹஜ் கடமையும் ஆகிவிட்டது. ஒருதடவை ஹஜ்ஜை  நிறைவேற்றிவிட்டு வந்தால் அன்று பிறந்த பாலகர் போலாகி விடுவார்கள் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு.


அவ்வாறு கூறுவதன் உள்ளார்ந்த அர்த்தம்தான் என்ன?

அந்த புனிதக் கடமையை நிறைவேற்றுபவர்கள் தமது வாழ்நாளில் அதுவரை  புரிந்துவந்த பாவங்களுக்காக உண்மையாகவே மனம்வருந்தி ('உண்மையாகவே' என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்) இறைவனிடத்தில் மன்னிப்பைக்கோரினால் அவன் மன்னித்து விடுவான் என்பதுதானே தவிர, அந்த மன்னிப்பு என்பது அடுத்து வருகின்ற காலம் முழுவதும் அவர்கள் புரியப்போகும் புதிய பாவங்களுக்கான முன்அனுமதியல்ல என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

ஆனால் நமது ஹஜ்யாத்திரிகர்களில் பலர், 'ஆகா இறுதிக்கடமையையும் செய்து விட்டோம். இதுவரை புரிந்த பாவங்களெல்லாம் தீர்ந்துவிட்டன. இதுபோதும் இனி ஊருக்குத் திரும்பி நமது வழமையான பாவக்கணக்கை மீண்டும் புதிதாக மேற்கொள்வதிலே பிரச்சினையில்லை' என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

சிலவேளை கட்டுக்கடங்காதளவுக்கு பாவக்கணக்கு அதிகரிக்க நேர்ந்தால் மீண்டும் ஒருதடவை -அதுவும் அந்தப் பாவச்சம்பாத்தியத்திலேதான்- மக்காவுக்குப் போய் வந்தால் போயிற்று என்பது அவர்களது நப்பாசையாகவும் இருப்பதுண்டு.

இறைவன் தாயைவிடப் பலமடங்கு இரக்கமானவன்தான். மிகப்பெரும் கருணையாளன்தான். அதற்காக அவனொன்றும் அடுத்தவர்கள் ஏமாற்றிட ஏமாற்றிட ஏமாறிக்கொண்டேயிருக்கும் சில இளிச்சவாயர்களான மனிதர்களைப் போன்றவனல்லவே. தன்னைக்  காலம்காலமாக ஏமாற்றிக் கொண்டேயிருக்கும் இப்படியான மோசடி முஸ்லிம்களின்  நப்பாசைகளையெல்லாம் புரிந்துகொள்ளாதவனுமல்லவே.

இப்போது கூறுங்கள்...


இன்றைய நமது சமூகத்திலே எத்தகைய பாவங்களையும் புரிந்துவிட்டு லைலத்துல் கத்ர் இரவிலும் புனித கஃபதுல்லாஹ்விலும் மன்னிப்புக்கேட்டு இலகுவாக அவனது தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் பலர் உண்மையிலே படுபயங்கரமான நஷ்டவாளிகள்தானே..?

-Jesslya Jessly

Sunday, August 19, 2012
Happy
Ramzan Greetings
to  all of our
Sirhukal Viewers