Friday, March 22, 2013

மலாலா : ஆயுதங்களும் சில பள்ளிப் புத்தகங்களும்!



 





 



லாலா யூசப்சாய் பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியைச் சேர்ந்தவள். அவளது தந்தை ஜியாவுத்தீன் யூசப்சாய் ஒரு கவிஞர். மலாலா என்றால் “மிகுந்த சோகமான” என்று அர்த்தம். இந்தப் பெயரை அவளது அப்பா பஷ்தூன் கவிஞர் மலாலாவின் நினைவாக தனது மகளுக்குச் சூட்டியிருந்தார். மலாலாவின் அப்பா ஜியாவுத்தீன் யூசப்சாய் தனது செல்ல மகளை எல்லா சுதந்திரங்களுடன் வளர்த்தார்.


தனது பையன்கள் நித்திரை கொண்ட பிறகும் கூட இரவில் நீண்ட நேரம் வரை தனது மகளுடன் அரசியல், சமூகசூழல் என நாட்டின் எதார்த்த நிலைகளைப் பேசிக் கொண்டேயிருப்பார், விவாதித் துக் கொண்டிருப்பார். இந்த உரையாடல்களின் வழியே ஒரு புதிய மனுஷியாக அவள் வளர்ந்து உற்சாகத்துடன் உலவி வந்தாள்.
இந்த ஸ்வாத் பகுதி முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, ஸ்வாதின் எல்லைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியாக உள்ளது. தலிபான்கள் ஸ்வாதில் வன்முறைகளில் ஈடுபட்டு ஆப்கானில் மறைந்து விடுவார்கள். இதனாலேயே ஸ்வாத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளது.



இந்தப் பெரும் படைகளின் இருப்பு அந்தப் பகுதியின் இயல்பு வாழ்க்கையை மெல்ல மெல்ல அபகரித்து வந்தது. பலருக்கு இதுபற்றிய மன வருத்தம் இருப்பினும் அதனை வெளிப்படுத்த இயலாத சூழல் அங்கு நிலவியது. வசதி படைத்த சிலர் மெல்ல இடம்பெயர்ந்து சென்றாலும், ஏழைகள்

மற்றும் இந்த நிலத்தின்மீது காதல் கொண்ட-வர்களால் அங்கிருந்து அகல இயலவில்லை.

தலிபான்கள் அங்கு அடிக்கடி திடீர் கட்டுப்பாடுகள், தடைகள் விதிப்பது சகஜம். இதனை அவர்களின் பண்பலை வானொலியில்தான் அறிவிப்பார்கள். இந்த அறிவிப்புகள் அந்த மலைகளின் நிறத்தை மாற்றும் பலம் கொண்டவை. பெண்கள்மீதும் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்மீதும் அதீத கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். குறிப்பாக, பெண்கள் கல்வி பயில்வது தலிபான்களுக்கு வேப்பங்காயாக இருக்கும். உலகின் எல்லா அடிப்படைவாதக் குழுக்களும், மத
தீவிரவாதக் குழுக்களும் முதலில் குறிவைப்பது அவர்களின் சமூகப் பெண்களையே.


 
 
 

தனது தந்தையுடன் அடிக்கடி வெளியே சென்று விடுவார் மலாலா. ஒருமுறை பெஷாவர் நகருக்கு மலாலாவை யூசப்சாய் அழைத்துச் சென்றார். அங்கு அந்த கூட்டத்தில் பார்வையாளர்கள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் கூடியிருந்த அரங்கில் அவள் “எனது அடிப்படை உரிமையான கல்வியைத் தலிபான்களால் எப்படிப் பறிக்க முடியும்?” என்றாள். அதே நேரம் யூசப்சாயிடம் ஒரு பிபிசி நிருபர், உனது பள்ளியில் படிக்கும் யாராவது தலிபான்கள் அடக்குமுறையில் பள்ளி மாணவிகளின் வாழ்க்கை பற்றி எழுத இயலுமா என்று கேட்டார்.


முதலில் ஆயிஷா என்கிற மாணவிதான் இதை எழுத முன்வந்தார். ஆனால் அவளது பெற்றோர் இதை அறிந்ததும் தலிபான்களின் எதிர்வினைக்குப் பயந்து வேண்டவே வேண்டாம் என்றார்கள். அந்த நேரம் வேறு யார் இதை எழுதுவார்கள் என்ற குழப்பமான சூழலில் மலாலா இதை எழுத முன்வந்தார். ஆனால் அவளது பாதுகாப்பு கருதி அவளது பெயரில் எழுத வேண்டாம் எனவும் புனை பெயரில் எழுதலாம் எனவும் முடிவு செய்தார்கள்.


ஜனவரி 3, 2009ல் தான் அவளது முதல் டைரிக் குறிப்பு பிபிசி உருது வலைத்தளத்தில் வெளியானது. இந்த டைரிக் குறிப்புகளுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உருவானார்கள். தலிபான்கள்
அந்தப் பகுதியில் செய்த நடவடிக்கைகளை எல்லாம் மிக துல்லியமான தனது விமர்சனங்களுடன் பதிவு செய்யத் தொடங்கினார் மலாலா. தலிபான்கள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்த்தது பற்றி ஆவேசமாகப் பல பதிவுகள் செய்தார். தடையை ஏற்று மூடியிருந்த பள்ளிகளையும் தலிபான்கள் தகர்ப்பதை அவளால் ஏற்க முடியவில்லை.

பள்ளிகள் தகர்க்கப்பட்டபோதும் அவள் தனது பரீட்சைகளுக்காகப் படித்துக் கொண்டிருந்தாள். எப்படியும் நிலைமை சரியாகிவிடும் என்று அவள் நம்பிக்கையுடன் இருந்தாள். பாகிஸ்தான் ராணுவம் சரிவர தன் கடமையைச் செய்யவில்லை என்று பல சமயம் ஆதங்கப்பட்டாள்.


ஒருமுறை அவள், பாகிஸ்தான்
பிரதமர் சர்தாரியின் மகள் ஸ்வாத் பகுதியில் உள்ள பள்ளியில் பயில்பவளாக இருந்தால் இங்கு நிலைமை இவ்வாறாக இருக்காது என்றும் எழுதினாள்.

இந்த நேரம் குடும்பத்துடன் அவர்கள் இஸ்லாமாபாத், பெஷாவர் நகரங்கள் நோக்கிச் சென்றார்கள். பல நண்பர்களின் வீடுகளில் தங்கினார்கள். அவள் தனது ஸ்வாத்
பகுதியுடன் எல்லா நகரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். மலாலாவுக்குத் தான் ஒரு அரசியல் வாதியாகத்தான் ஆகவேண்டும் என்று திடமான எண்ணம் மனதில் பட்டது. அதன் வழியேதான் இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய இயலும் என்று அவள் நம்பினாள்.

அவளது டைரிக் குறிப்புகள் பிரபலமானதைத் தொடர்ந்து அவளைப் பற்றி நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் ஒன்றை எடுத்தது. இந்தப் படம் வெளியானதும் மலாலா பாகிஸ்தானில் பலர் அறியும் ஒரு நபராக உருவாகி வந்தார். அவள் அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் பேட்டிகள் அளித்து வந்தாள். அவள் ஒரு கல்விசார்
செயல்பாட்டாளராக வளர்ந்து வந்தாள். இந்த நேரம் தெஸ்மண்டு அவர்கள் மலாலாவின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டு அவளுக்கு சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்குப் பரிந்துரைத்தார். இதனை அறிந்த பாகிஸ்தான் அரசு உடனே அவளுக்குத் தேசிய குழந்தைகள் அமைதி விருது வழங்கியது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் தலிபான்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. அவர்களின் கூட்ட விவாதப் பொருளாக மலாலா மாறினாள். அவர்கள் ஏகமனதாக மலாலாவைக் கொல்ல முடிவு செய்தார்கள். அக்டோபர் 9, 2012 அன்று பெரும் தலிபான் படை தங்களின் முழு ஆயுத பலத்துடன் மலாலாவின் பள்ளி நோக்கிச் சென்றது.
 
 
சர்வ வல்லமையுடனான ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாதப் படை நோட்டு புத்தகங்களை முதுகில் சுமந்து பூக்களைப் பறித்து மலைச்சாரலில் தனது வீடு நோக்கிச் சென்ற சிறுமியைப் பார்த்துப் பயம் கொண்டதுதான் வேடிக்கை.
 
 
மலாலாவைத் தலிபான்கள் கழுத்திலும் தலையிலும் சரமாரியாகச் சுட்டார்கள். அடுத்த சில தினங்கள் மயங்கிய நிலையில் அவள் உயிர் பிழைப்பாளா என்பதே பெரும் சந்தேகமாக இருந்தது. உலகம் முழுவதும் மலாலாவுக்கு ஆதரவாகப் போராட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவளை முதலில் ராவல்பிண்டிக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது பாகிஸ்தான் அரசு.
 
 

 
 
பாகிஸ்தானில் உள்ள 50 மதத்
தலைவர்கள்  மலாலாவைத் தாக்கியவர்களுக்கு எதிராக ஃபத்வா பிறப்பித்தார்கள்.

இந்த நேரம் மலாலாவின் கதை சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்க உடனே விமான ஆம்புலன்சில் அவள் லண்டன் அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு பிரிட்டன் பிரதமர் இணையத்தில் ‘‘நானும் ஒரு மலாலா’’ என்கிற மனுவைச் சுற்றுக்கு விட்டார்.

மலாலா இதனை எந்தக் கணமும் எதிர்பார்த்துதான் காத்திருந்தார். இப்படி ஒன்று தனக்கு நிகழும் என்பதை முன்உணர்ந்தவளாகவே அவள் இருந்தாள். இதனையும் கூட அவள் தனது டைரியில் எழுதியிருந்தாள்.


‘‘நான் அடிக்கடி தலிபான்கள் என்னைக் கொல்ல வரும் காட்சி பற்றி யோசித்திருக்கிறேன். நிச்சயம் அவர்கள் என்னைக் கொல்ல வரும் சந்தர்ப்பத்திலும்கூட நான் அவர்களிடத்தில் நீங்கள் செய்வது தவறு, கல்வி என்பது எனது அடிப்படை உரிமை என்று வாதிடுவேன்’’


என்கிறார் மலாலா.

.
இந்த சம்பவங்கள் நடைபெறும் இதே சூழலில்தான் வட இந்தியாவில் உள்ள ஜாட்கள் குழந்தை திருமணம்தான் ஜாதியைப் பாதுகாக்க ஒரே வழி என்றும், தமிழகத்தில் ஜாதி மறுப்பு செய்யும் தங்கள் ஜாதிக்காரர்களைக் கொல்லுவோம் என்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் பகிரங்கமாகப் பேட்டி அளித்ததும் நினைவுக்கு வருகிறது. எல்லா மதங்களிலும் தலிபான்கள் பல நிறங்களில், பல வடிவங்களில் இருக்கவே செய்கிறார்கள்.
 

-முத்து கிருஷ்ணன் 


Thursday, March 21, 2013

சுஜாதாவின் ஆட்டோகிராஃப்



         

சுஜாதாவுடனான எனது முதல் சந்திப்பு இது.
 
 
எனது கல்லூரியின் முதல் வருடம் முடியும் நேரத்தில், பல்கலைகழகம் முழுவதும் ஏதோ ஒரு வேலை நிறுத்தத்தால் திடீர் விடுமுறை கிடைத்தது. எனக்கு ஒரு வருடம் முன்பு சேர்ந்தவர்களே இன்னமும் முதல் வருடத் தேர்வு எழுதாமல் இருந்த வினோதமானச் சூழல் அது. அதாவது, பல்கலைகழகத்தில், ஒரே நேரத்தில் இரண்டு பேட்ச் முதல் வருட மாணவர்கள். அதனால், ராக்கிங் எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வராமல் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது.
ஊருக்கு திரும்புவதற்காக பெங்களூர் வந்து விட்டு, வழக்கம் போல எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோட்டில் அலைந்து கொண்டிருந்தேன். அப்பபோதெல்லாம் இரவு ஏழு மணிக்கு மேல்தான் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் தமிழ்நாட்டுக்கு வண்டிகள் கிளம்பும்.
 
 
ஒரு சோம்பலான மதியப் பொழுதில் கப்பன் பார்க்கில் திரிந்து கொண்டிருக்கும் போதுதான் அந்த பியட் காரைப் பார்த்தேன். காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பக்கத்தில் இருப்பவரிடம் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தது சாட்சாத் சுஜாதா! எனக்கு மூச்சு சற்று நேரம் நின்று விட்டது. உண்மையில் கையும் ஓடவில்லை! காலும் ஓடவில்லை! காருக்கு பின்னாலேயே தயங்கி நின்று கொண்டேயிருந்தேன்.
 
 
 
நீண்ட நேரம் நின்று கொண்டு காரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை ரியர்வியூ கண்ணாடி வழியே சுஜாதா கவனித்து விட்டார். தனது பக்க கதவைத் திறந்து கைகளால் என்னை அழைத்தார். அருகில் சென்ற என்னிடம், என்னப்பா வேண்டும்! இப்படி முறைத்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாயே? என்றார்.
 
 
இல்லை சார்! நான் ரசிகன். ஒரு ஆட்டோ கிராஃப் வேண்டும் என்றேன்.
 
 
சரி! பேப்பர், பேனா கொடு என்று கேட்ட பிறகுதான் எனக்கு உறைத்தது. என்னிடம் இரண்டுமே இல்லை! பின்னே! காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிற்றே!
இதோ வாங்கி வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பெங்களூர் அவ்வளவாக பரிச்சயம் இல்லாத 1987ஆம் வருடம் அது. கப்பன் பார்க்கில் இருந்து தவறான வழியில் விதான் சவுதா வழியே வெளியே வந்து விட்டேன். அங்கு மருந்துக்கூட ஒரு கடை இருக்காது. பதட்டத்தில் ஓடிக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக சில கிலோமீட்டரில் கனரா வங்கி தலைமையகம் அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பேப்பர், பேனா கேட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் கப்பன் பார்க் நோக்கி வேகமெடுத்தேன்.
வேகமாக ஓடியதில் மூச்சு இறைத்ததை விட, இந்நேரம் அவர் அங்கிருந்து போய் விட்டிருப்பாரோ என்ற பதட்டம் அதிகமாக இருந்தது. என்னுடைய பையை வேறு காரின் பின்புறத்தின் அருகிலேயே போட்டு விட்டு வந்திருந்தேன். எத்தனை நேரம் ஓடினேன், எவ்வளவு தூரம் ஓடினேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.
 
 
 
கப்பன் பார்க் உள்ளே நுழைந்து, தொலைவினில் அந்த பியட் கார் அங்கேயே நிற்பதை பார்த்த பின்புதான் கொஞ்சம் ஓட்டம் தளர்ந்தது. என் கையிலிருந்த பேப்பர் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. பையில் இருந்த ஒரு துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டு, மூச்சு சற்று ஆசுவாசப்பட்ட பின்பு மீண்டும் காரின் பின்னே காத்திருத்தல் ஆரம்பமாயிற்று.
 
 
 
கொஞ்ச நேரத்தில் என்னை கவனித்து மீண்டும் கையசைத்து கூப்பிட்டார். நான் வியர்வை பொங்க டிரைவர் இருக்கையின் அருகே சென்றேன். இம்முறை கையில் பேப்பரும், பேனாவும் இருந்தது. கொடு அதை! என்று என்னிடம் வாங்கிக் கொண்டு அருகில் இருப்பவரிடம் அந்த பேப்பரையும், பேனாவையும் கொடுத்தார்.
 
 
 
 
 
 
கமல்! ஒரு பையனுக்கு உன்னோட ஆட்டோகிராஃப் வேணுமாம் பாரு! ரொம்ப நேரம் வெயிட் பண்றான் என்று சொன்ன பின்புதான் நான் கவனித்தேன். அவர் அருகில் அமர்ந்து கொண்டிருந்தது நடிகர் கமலஹாசன்!
 
 
 
கமல் அந்த பேப்பரில் ஆட்டோகிராஃப் போடும் வேளையில், நான் சுஜாதாவிடம் சற்று சத்தமாகவே சொன்னேன்.
 
 
 
 "இல்லையில்லை! எனக்கு உங்கள் ஆட்டோகிராஃப்தான் வேண்டும்" என்று!
 
 
 
சில நொடிகள் அங்கு ஒரு அமைதி. சுஜாதா லேசாக அதிர்ந்து விட்டார். கமல் உடனே சுதாரித்துக் கொண்டு, "சார்! நான் சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் நீங்கள்தான் எங்களை விட பாப்புலர்!" எனக் கூறிக் கொண்டே பேப்பரை சுஜாதாவிடமே தந்து விட்டார். சுஜாதா எதுவும் எழுதாமல் ரங்கராஜன்/ சுஜாதா என்று வெறுமனே கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார்.
 
 
 
அந்த ஆட்டோகிராஃபை சட்டையில் வைத்துக் கொண்டு, அன்று முழுதும், கப்பன் பார்க் முழுக்க கெத்தாக நடந்து கொண்டேயிருந்தேன். அப்போதே நான் கமல் ரசிகனும்தான். ஆனால், சுஜாதாவிற்கு முன்பு வேறு எந்த ஆளுமையும் என்னை அந்த அளவிற்கு பாதித்திருக்கவில்லை.
 
 
 
இருபது வருடம் கழித்து, நானும் நண்பர் பவா.செல்லதுரையும் ஒரு மாலைப் பொழுதில் சுஜாதாவை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போதெல்லாம், அவர் சென்னைக்கே வீடு மாற்றி வந்து விட்டிருந்தார். அவரை பார்க்கப் போகிறோம் என்றவுடன், எங்கள் நண்பர் திலகவதி ஐபிஎஸ், தானும் வருவதாக சொல்லி உடன் வந்தார்.
 
 
 
நீண்ட நேர சுவாரஸ்யப் பேச்சுக்கு பின், அவரிடன் நான் அந்த முதல் சந்திப்பைக் குறிப்பிட்டு சொன்னேன். சட்டென்று அங்கும் ஒரு அமைதி! பின் அது நீங்கதானா? என்றவர் அந்த சம்பவத்திற்கு பின்புதான் தானும் ஒரு பிரபலம் என்பதை நம்பவே ஆரம்பித்தேன் என்றார். கமல் இன்னமும் அதை நினைவில் வைத்திருக்கிறார் என்று ஒரு கூடுதல் தகவலும் கொடுத்தார்.
இன்ஜினியரிங் படிக்க பெங்களூருக்கு ஏன் வந்தீர்கள்? மார்க் குறைவா? என்றார். மார்க்கை சொன்னேன். தமிழ்நாட்டிலேயே கிடைத்திருக்குமே? பின் ஏன் பெங்களூர் என்றார்.
 
 
உங்களால்தான் சார்! என்றேன்.
 
வாட்!
 
ஆமாம் சார்! நீங்கள் பெங்களூரில் இருந்தீர்கள். அங்கே படித்தால் உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமே? அதனால்தான் பிடிவாதம் பிடித்து அங்கே வந்தேன் என்றேன்.
 
 
நீங்கள் மேலும், மேலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறீர்கள்! என்றவர், பின்பு ஏன் என்னை பெங்களூர் வீட்டுக்கு வந்து பார்க்காமல், இந்த கப்பன் பார்க் விளையாட்டெல்லாம்? என்றார்.
 
 
நீங்கள்தானே சார், அப்போது எழுதியிருந்தீர்கள்! “உண்மையான ரசிகர்கள் கடிதம் போடுகிற அல்லது நேரில் வந்து பார்க்கிற ஜாதியில்லை” என்று? என்றேன்.
 
 
சட்டென அதிர்ச்சியுற்று, பின் நீண்ட நேரம் மவுனமாக இருந்து விட்டு, வீட்டினுள்ளே திரும்பி, "சுஜாதா! இங்கே வா! இன்னுமொரு சுவாரஸ்யமான ரசிகன் எனக்கு" என்று அவரின் மனைவியை அழைத்தார்.
 
 
 
 (கட்டுரைக்கு அவசியமற்ற ஒரு பின்குறிப்பு):
 
 
ஒவ்வொரு முறை பெங்களூரு செல்லும் போதும் நான் ஓடிச் சென்று வந்த வழியில் ஒரு முறை சென்று பார்ப்பேன். கப்பன் பார்க்குக்கும் அந்தப் பெட்டிக் கடைக்குமான தூரம் இன்னமும் அதேதான்.
 
 
ஆனால், இப்போது நான் செல்வது என்னுடைய லெக்சஸ் காரில்!
இருப்பினும், வியர்வை பொங்கி வர, மூச்சு வாங்க ஓடி வந்து, ஒர் பியட் காரின் பின்னே பதட்டத்துடன் காத்திருந்த அந்த ஒல்லி இளைஞனாகத்தான் ஓவ்வொரு முறையும், என்னை உணர்கிறேன்.
 
Karuna
 
Thanks : karuna's thoughts