Wednesday, November 23, 2016

'முயல்களும் மோப்ப நாய்களும்'





மூதூர் மொகமட் ராபி எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'முயல்களும் மோப்ப நாய்களும்' நூலின் அறிமுகவிழா கடந்த 14.11. 2016 திங்கட்கிழமை முழுநிலா நாளில் மாலை 4.00 மணியளவில் வெகுசிறப்பாக நிகழ்ந்தது. 

திருகோணமலையிலிருந்து வெளிவரும் 'நீங்களும் எழுதலாம்' கவிதைச் சிற்றிதழின் வாசக வட்டத்தின் ஏற்பாட்டில் திருகோணமலைநகராட்சி மன்றத்தின் பொதுநூலத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ந்த மேற்படி அறிமுக நிகழ்வுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பாடசாலை அதிபர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், அரச ஊழியர்கள் உட்படஏராளமான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 
நிகழ்வை 'நீங்களும் எழுதலாம்' கவிதைச் சிற்றிதழின் ஆசிரியரும் சிறந்த இலக்கிய ஆர்வலருமான திரு. எஸ். ஆர். தனபாலசிங்கம் ஆசிரியர் தலைமை தாங்க வரவேற்புரையை பொதுநூலகத்தின் உதவி நூலகர் திரு.கே வரதகுமார் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் திருகோணமலை பொதுநூலகம் வெறுமனே நூல்களை இரவல் தருவதும் பின்னர் பெற்றுக்கொள்வதுமான நிறுவனமாக அன்றி இப்பிரதேசத்தின் இலக்கிய முயற்சிகளுக்கு மேலும் உறுதுணையாகச் செயற்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

நூலின் அறிமுகத்தை நிகழ்த்திய கவிஞர் ஷெல்லிதாசன், மூதூர் மொகமட் ராபியின் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார். 
 

சிறுகதை நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் வழங்கி வைக்க பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியும் சிறந்த இலக்கிய ஆர்வலருமான திரு. ஏ.ஜெகசோதி பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை தனது பெற்றோர்களும் ஓய்வு பெற்ற அதிபர்களுமான திரு. ஏ.எம் புஹாரி மற்றும் திருமதி அம்ரா புஹாரி ஆகியோருக்கு நூலாசிரியர் வழங்கிக்கௌரவித்தார்.

மேற்படி நூல் மர்ஹும் ஏ. எச். என்சுதீன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்த காரணத்தால் அன்னாரது இளைய மகளும் கிண்ணியா வைத்தியசாலை ஊழியருமான திருமதி. ரிஸ்னா நஸீருக்கு வழங்கி வைக்கப்பட்டது. சபையோருக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

அதனையடுத்து நூலின் விமர்சனத்தைப் புரிவதற்காக திருகோணமலை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் திரு. எம். எஸ். எம். நியாஸ், சட்டத்தரணியும் எழுத்தாளருமான திரு. எம். சீ. சபருள்ளாஹ் மற்றும் ஆசிரியை திருமதி. எஸ். சந்திரகலா ஆகியோர் முறையே அடுத்தடுத்து அழைக்கப்பட்டனர்.

திரு. எம். எஸ். எம். நியாஸ் தனது விமர்சனத்தில், மூதூர் மொகமட் ராபி சமகாலப் பிரச்சினைகளின் மீது தனக்குள்ள  சமூகக் கோபத்தை கதைகளில்  காண்பித்திருப்பதாகக் கூறியதோடு  அவற்றை எளிமையாகவும் நுணுக்கமாகவும்  அவர் வடிவமைத்திருக்கும் பாங்கினை சிலாகித்துப் பேசினார். 
 
சட்டத்தரணி திரு. எம் சீ. சபருள்ளா உரையாற்றுகையில், கிரிக்கட் ஆட்டத்தில் தான் ரசிக்கும் இந்திய அதிரடித்துடுப்பாட்ட வீரர் வீரேந்திர  ஷேவாக்கின் அதிரடித் துடுப்பாட்டத்துடன் ராபியின் எழுத்து நடையை ஒப்பிட்டுப்பேசினார். தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் போதாதிருப்பதைக் குறிப்பிட்ட அவர், கையிலெடுத்தால் கீழே வைப்பதற்கு மனமில்லாது  ரசித்துப்படித்து முடிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் வகையில் மொகமட்  ராபியின் கதைகள் இருப்பதாகக்குறிப்பிட்டார். அவர் இந்நூலை மிகவும் ரசித்துப் படித்ததாகவும் அவரின் கதைகள் பற்றி விரைவில் தனது முகநூலில் ஆழமான விமர்சனமொன்றை எழுதவிருப்பதாகவும் கூறினார்.

பெண் எழுத்தாளரான திருகோணமலை தி/மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் ஆசிரியை  திருமதி. எஸ். சந்திரகலா, பொதுவாக இலக்கிய நிகழ்வுகளில் பெண்களுக்குரிய வாய்ப்புகள் போதியளவு ஆற்றப்படாததைக் குறிப்பிட்டு இந்நிகழ்வில் ஒரு பெண்ணின் குரல் ஒலிக்கவேண்டும் என்று கருதி தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திற்காக 'நீங்களும் எழுதலாம்' ஆசிரியர் திரு. தனபாலசிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மொகமட் ராபியின் கதைகளை மிகவும் உணர்பூர்வமாக சிலாகித்துப் பேசினார். குறிப்பாக, கள்ள மௌனங்கள், விசுவரூபம் கதைகளைக் குறித்து சில சமூகத்தினரிடையே காணப்படும்  போலிப்புனிதம் காக்கும் இழிகுணத்தையும் அவற்றை விடுத்து கலந்துபேசி சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, நூலாசிரியரான திரு. எம். பீ. முகம்மது ரஃபி (மூதூர் மொகமட் ராபி) தனது ஏற்புரையில், நூல் வெளியீடுகள் போன்ற இலக்கிய நிகழ்வுகளில் விருப்பத்துடன் கலந்துகொள்வோரின் தொகை அருகிச் செல்லும்போக்கு குறித்துப் பேசினார். இலக்கிய நிகழ்வுகளுக்கு வந்து அமர்ந்திருப்பவர்களின் பெறுமதியான நேரத்தை வீணடிக்கும் அநாவசியமான சொற்பொழிவுகளையும் சம்பிரதாயங்களையும் விடுத்து மேற்படி நிகழ்வுகளை சுவாரசியமானதாகவும் காத்திரமானதாகவும் நடாத்த வேண்டுமென்றும் அவ்வாறு செய்தால்தான்  மறுமுறை அழைக்கும்போது ஆர்வமாக வர எத்தனிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், இளைய தலைமுறையினரிடம் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவதில் பாடசாலை ஆசிரியர்கள் குறிப்பாக தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் சிறப்பான பங்களிப்பை புரியமுடியும் என்பதோடு இன்றுள்ள கைத்தொலைபேசி முகநூல் போன்ற நவீன சாதனங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களுக்கூடாகக் கூட அவற்றினை பரந்தளவில் ஆற்றிட முடியும் என்றார்.

இறுதியாக, நன்றியுரையை நிகழ்த்திய சிரேஷ்ட இலக்கிய ஆர்வலரான திரு. வீ.ரீ. நவரெத்தினம் அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுக்கும் உதவியோர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தனது நூல் வெளியீட்டு அனுபவங்களை நகைச்சுவை தொனிக்கப்பேசி அதுவரையில் அமைதியாகவிருந்த சபையோரை சிரிப்பிலாழ்த்தி சிந்திக்க வைத்ததோடு நூல் அறிமுக நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
 
-Omar Mukthar