Monday, October 15, 2012

சிறுகதை: மூதூர் மொகமட்ராபி


 
 
 
 
நாளைக்கும் நிலவு வரும்!
 
 
 
 

'நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்'

காதில் வந்து விழுந்த அந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் திவ்வியா. அழுதது சிவந்துபோன அவளது விழிகளில் தேங்கியிருந்த கண்ணீர்க்குளம் சட்டென உடைந்து கன்னங்களிலே வழிந்தது.

'என்ன திவ்யா, திரும்பவும் அழுகையா?' கரையிலே மோதிச் சிதறும் நுரைப்பூக்களை நீண்டநேரமாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் திவ்வியாவின் விசும்பலைக்கேட்டுத் திரும்பினான்.

அன்று ஒரு கிறிஸ்துமஸ் தினம் என்பதால் சற்று முன்னர் வரை திருகோணமலை கடற்கரை சனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் கூட்டம் மெல்லக் கரையத் தொடங்கியிருந்தது. ஆங்காங்கே ஓரிரு ஜோடிகளைத்தவிர வேறு யாருமே தென்படவில்லை. வெகுதூரத்தில் தொடுவானத்தின் மேலாக மழைமேக இராட்சதர்கள் எழுந்து வந்து கொண்டிருந்தனர்.

'சுரேஸ் அத்தான்.. அந்தா போகிற பாட்டு கேட்குதா உங்களுக்கு? என்று அந்தக் கடற்கரையின் பக்கவாட்டில் செல்லும் தெருவோர விளக்குக் கம்பத்திலே கட்டியிருந்த நகரசபை ஒலிபெருக்கிகளைக் காட்டினாள் திவ்வியா.

'நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்..'

உப்புக் காற்றிலே மிதந்து வந்து மனதைப் பிசையும் அந்த இனிய கீதம். கனமாக இருந்த சுரேஷின் மனதிலே அந்தப் பாடலின் சாரம் முதலில் உறைக்கவில்லை. ஆனால் அடுத்த கணத்தின் இறுதியிலே ஒரு பலமான சம்மட்டியடியாய் இறங்கியது அந்தப்பாடல் வரிகளின் அர்த்தம்.

'நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்.. நாளைக்கும் பூ மலரும் நாமிருக்க மாட்டோம்..'

'நீங்க ஊருக்கு வரமுதல்ல எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன் இந்தப் பாட்டை..ஆனா இப்ப கேட்டால் அது..' அவளால் மேலே தொடர்ந்து பேச முடியவில்லை. முழங்கால்களுக்கிடையே தலையைப் புதைத்து விசும்பியழத்தொடங்கினாள்  திவ்வியா.

ஓங்கியடிக்கும் அலைகள் தரும் சிறு இடைவெளிகளில் ஒன்றையொன்று ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன சின்னஞ்சிறு மணல் நண்டுகள்.
திவ்வியாவின் அழுகையால் சுரேஷுக்கும் அழுகை வரும்போலிருந்தது. அதை தவிர்ப்பதற்காக பார்வையை மீண்டும் கரையோர அலைகளிடம் திருப்பினான்.

அவர்கள் அழுது முடிப்பதற்கிடையில் நாம் அவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொண்டு வந்துவிடலாம்.

திவ்வியா சுரேஷின்  மாமி கனகாவின் இளைய மகள். சுரேஷின் தந்தை திருகோணமலையிலுள்ள ஒரு தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்தவர். நீண்டகால நோயாளியான சுரேஷின் தாய் திடீரென்று ஒருநாள் கண்ணை மூடிவிட அதற்கென்றே காத்திருந்தவர்போல அவர் வேறு திருமணம் முடித்துச் சென்றுவிட பதினொரு வயதுச் சிறுவனான சுரேஷ் ஏறக்குறைய அநாதையாகிப்போனான். வேறுவழியின்றி தந்தையின் ஒரே சகோதரியான திவ்வியாவின் தாய் கனகா மாமியிடம் அடைக்கலம் புகுந்தான். இளம் வயதிலே கணவனைப் பறிகொடுத்திருந்த திவ்வியாவின் தாய்க்கு தனது இரு பெண்குழந்தைகளுக்கும் ஆண்துணையாக சுரேஷ் வந்து சேர்ந்தது பெரும் ஆறதலாக இருந்தது.

சுரேஷ் வீட்டுக்கு வந்துசேர்ந்த மூன்றாவது வருடத்திலே பெரியவள் நித்தியாவும் இளையவள் திவ்வியாவும் அடுத்தடுத்து வயதுக்கு வந்து விட்டார்கள். அதுவரையிலே அக்கம்பக்கத்திலிருந்தவர்களுக்கு சிறுவனாகத் தோற்றமளித்த சுரேஷ் திடீரென ஒரு வாட்டசாட்டமான வாலிபனாய்த் தோன்ற ஆரம்பித்து விட்டான்.

கண்ணுக்கு அழகான இரு வயதுக்குவந்த பெண் பிள்ளைகளுடன் ஒரு வாலிபன் ஒன்றாக ஒரேவீட்டில் இருப்பதைப்பற்றி அயலவர்கள் சாடைமாடையாய் கதைபேச ஆரம்பித்தார்கள். இதனால் இயல்பாய் இருந்த அந்த வீடு தடுமாறிப்போனது. சிறுவயது முதல் நித்தியாவுடனும் திவ்வியாவுடனும் ஒரேவீட்டில் ஓடிப்பிடித்து விளையாடிப் பழகியவனான சுரேஷ் திடீரென கனகா மாமி  மற்றும் அவர்களது உறவினர்களால் தான் புதுவிதமாகக் நடாத்தப்படுவதை உணர்ந்ததும் குழப்பமடைந்தான்.

'ஏன் மாமி, இந்த அக்கம் பக்கத்தாக்களா உங்கள இவ்வளவு நாளும் பாத்தவங்க...? இவங்கட கதையக்கேட்டா நீங்க.. சே! சரி யார் கதச்சதென்டு சொல்லுங்க.. மட்கோ ஸ்கூல்ல படிப்பிக்கிற அந்தக் கிழவி டீச்சர்தானே..? அவவப் பத்தித் தெரியாததா உங்களுக்கு?  ஒரு ஸ்கூலயே கோள் சொல்லிக் குழப்பினவவாம் அவ. எங்கட வெல்டிங் கடை ரதியக்கா சொன்னவ தெரியாதா...? அவவாத்தான் இருக்கும்.. எனக்குத் தெரியும்' என்று ஆத்திரத்திலும் ஆற்றாமையாலும் கொதித்தான் சுரேஷ்.

கனகா மாமி கண்ணீர் வழிய தலையை இரு கைகளாலும் பிடித்தபடி அமர்ந்து இருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

'ஏனம்மா, சுரேஷ் அத்தான் இன்றைக்கு நேற்றா எங்களோட இருக்கிறார்.. இவ்வளவு காலமும் பாத்திட்டு இருந்தவங்கள்ற கதையக்கேட்டு நீங்களும் தலையைக் குழப்பிட்டு இருக்கிறிங்களேம்மா..' என்று மூத்தவள் நித்தியா தன் பங்குக்கு ஆத்திரப்பட்டாள்.

'இருங்கம்மா, பென்சனுக்குப் போகாமல் இழுத்திழுத்துக் கிடக்கிற அந்தக் கிழட்டு டீச்சரை ஒரு பிடிபிடிச்சிட்டு வாறேன்'

'யேய் சும்மா இருடி.. அவவுக்குச் சும்மாவே வாய் சரியில்ல.. நீயும் அங்க போய் சத்தம் போட்டால் இதுதான் சாட்டென்டு இன்னும் அபாண்டம் சொல்லத் தொடங்கிடுவா..' கொதித்துக் கிளம்பிய திவ்வியாவை நித்தியாதான் குறுக்கிட்டுத் தடுத்தாள்.

இந்தச் சம்பவம் நடந்தது முதல் அந்த வீட்டில் ஒருவிதமான சங்கடம் நிலவியது. முன்பெல்லாம் வேலைக்குச்சென்றால் மாலையில் நேரத்திற்கு உற்சாகமாகத் திரும்பி வந்துவிடும் சுரேஷ் இப்போதெல்லாம் இருட்டிய பின்பு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வரத் தொடங்கினான். அப்படியே நேரத்துக்கு வந்தாலும் யாரோடும் சரியாகப் பேசுவதோ சாப்பிடுவதோ கிடையாது. எப்போதும் எதையோ பறிகொடுத்தவன் போல யோசனையிலாழ்ந்திருக்கத் தொடங்கினான். அவனது மௌனத்தால் சகோதரிகள் இருவரும் நடைப்பிணமானார்கள். அந்தச் சந்தோச இல்லமே களையிழந்து போனது.

ஒருநாள் வழமைபோல வேலைக்குச் சென்ற சுரேஷ் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. கலவரமடைந்த தாயும் சகோதரிகளும் அவன் வேலை செய்யும் வெல்டிங் பட்டறைக்குத் தேடிச் சென்றார்கள். அங்கு இரவு வேலை நடந்து கொண்டிருந்தபோதிலும் சுரேஷ் மட்டும் இருக்கவில்லை.

சுரேஷ் முதல்நாள் வேலையைவிட்டு விலகிவிட்டதாகவும் அவன் இத்தனை காலமும் வேலைசெய்த காலத்திலே சம்பளம் போக தன்னிடம் சேமித்து வைத்திருந்த பணத்தை வீட்டிலுள்ளவர்களுக்குத் தருமாறு கூறியதாகவும் வெல்டிங் பட்டறை உரிமையாளர் சொன்னார். அவர் கொடுத்த பெரும் தொகைப்பணத்தை வாங்கிக் கொண்டு அழுதபடியே மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். அன்றிரவு யாருமே உறங்கவில்லை.

சுரேஷ் எங்கு போனான் என்பது யாருக்குமே தெரியவில்லை.

அவன் திரும்பி வருவானென்று காத்திருந்து காத்திருந்து நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களானது. அவன் வருவான் என்ற நம்பிக்கை அவர்கள் மூவரின் வாழ்க்கைப் போராட்டப் பாதையின் நெரிசல்களுக்குள் சிக்கி மெல்லத் மெல்லத் தேய்ந்து போனது. எல்லோருமே சுரேஷை ஏறத்தாழ மறந்து போயிருந்தார்கள்.

நித்தியாவுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அத்தோடு தனது குடும்ப நிலைமையையும் கருதி படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு அருகிலிருந்த தையல் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து உழைத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் இளையவள் திவ்வியாவோ நித்தியாவைப் போலல்லாமல் படிப்பில் படுகெட்டிக்காரியாக இருந்தாள். உயிரியல் விஞ்ஞானப் பிரிவிலே படித்து உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தாள். அவளது பாடசாலையிலே அந்த வருடம் மருத்துவத்துறைக்கு  எதிர்பார்க்கப்பட்ட மாணவிகளிலே திவ்வியாவும் ஒருத்தி. கணவனையும் இழந்து உதவியின்றித் தவித்த குடும்பத்திலே திவ்வியாவின் எதிர்காலத்தை நினைத்துத்தான் கனகா மாமி ஓரளவேனும் நம்பிக்கையோடு இருந்தாள்.

ஒருநாள் அதிகாலை அவர்களது வீட்டு வாசலிலே வந்து நின்ற ஒரு விமானநிலைய வாடகை வேனிலிருந்து இறங்கினான் சற்று உயரமான சிவந்த நிறமுடைய ஓர் அழகான இளைஞன். நீலநிற டெனிம் ஜீன்ஸ் டீசேர்ட் விலையுயர்ந்த கூலிங் க்ளாஸ் அணிந்து வீட்டுக்குள் வந்தவன் சுரேஷ்தான் என்பதை அடையாளங் காண்பதற்கு எல்லோருக்கும் வெகுநேரமானது.

கண்முன்னே நடப்பதெல்லாம் ஒரு கனவுபோல இருந்ததால் அவற்றை நிஜம் என்று புரிவதற்கு கனகா மாமி, நித்தியா மற்றும் திவ்வியா ஆகிய மூவருக்கும் சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

'தம்பீ சுரேஷ்! எங்களையெல்லாம் விட்டுட்டு...' என்று மாமி அழத்தொடங்க பிறகு நடந்ததையெல்லாம் சொல்லவும் வேண்டுமா..? பிரிந்தவர்கள் கூடியதில் அடக்கி வைத்திருந்த ஆற்றாமை உணர்வெல்லாம் அழுகையாய் வெடிக்க.. வார்த்தைகளை வென்ற கண்ணீர் மழை ஆறாய்ப் பெருக்கெடுத்தோட நீண்ட காலத்திற்குப் பின்னர் அந்த வீட்டில் ஆனந்த வெள்ளம் கரைபுரண்டோடியது.
"T.M. Suresh of  Trincomalee, SriLanka From Dubai"    என்ற கறுப்புநிற ஸ்டிக்கர்கள் ஒட்டிய பிரமாண்டமான பல சூட்கேஸ்களும் தங்களைக் கவனமாகக் கையாளுமாறு ஆங்கிலத்தில் கெஞ்சும் அட்டைப்பெட்டிகளிலே எல் ஈ டீ டீவி, ப்ரிஜ், லாப்டொப் போன்ற புத்தம் புதிய ஆடம்பரப் பொருட்களும் வரிசையாக வேனிலிருந்து இறக்கப்படுவதை அந்தத் தெருவே லேசான பொறாமையுடன் வேடிக்கை பார்த்தது.

000

சுரேஷ் துபாயிலிருந்து வந்து ஒரு மாதம் கழிந்து விட்டிருந்தது.

அந்த நடுத்தர வர்க்கத்து வீடு வெளிநாட்டு ஆடம்பரப் பொருட்களால் நிரம்பித் திக்கு முக்காடியது. அதுவரையில் வெகுநிதானமாய் ஊர்ந்து கொண்டிருந்த எளிமையான அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைமுறை ஐந்தாவது கியருக்கு மாற்றிய பல்ஸர் பைக்காய் மாறிப் பறக்கவாரம்பித்தது. தினமும் சினிமா, பீச் விசிட், ஷொப்பிங், பேஸ் வாஷ், மேக் அப், உடற்பயிற்சி சாதனங்கள், உல்லாசப் பயணம், செல்போன் உளறல்கள், பார்ட்டிகள் என்று அவர்கள் வாழ்க்கையே மாறிப்போனது.

முன்பெல்லாம் திருப்பள்ளியெழுச்சியுடன் கண்விழிக்கும் நித்தியாவின் காலைப்பொழுதுகள் இப்போதெல்லாம் ஏ. ஆர். ரஹ்மானின் ஸ்டீரியோ அலறல்களுடன் விடிந்தன. அவள் அறையில் கேபிள் டீவி ஏறத்தாழ இருபத்திநான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்க இன்னும் தைத்து முடிக்காத ஆடைகள் அவளது அறையிலே மலைபோலக் குவிந்து கிடந்தன.

தினமும் தமிழ் சினிமா பார்க்கும் நித்தியாவை வில்லன்கள் கனவிலே கடத்திச் செல்ல பைக்கிலே துரத்திவந்து காப்பாற்றிக் கொண்டிருந்தான் சுரேஷ். ஏசீஏ டியூட்டரியில் திவ்வியாவுடன் படித்து ஆறுமாதமாய் அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்த திலீப்புக்கு, 'சுரேஷ் அத்தான் வந்து விட்டதால் இனியும் என் பின்னால் அலையாதே' என்று ஒரு எஸ்எம்எஸ் பண்ணிவிட்டு போன் ஸிம்மை கழற்றி எரியும் அடுப்பிலே போட்டுவிட்டாள்.

நித்தியாவையும் திவ்வியாவையும் குதூகலிக்க வைப்பதே வாழ்வின் ஒரே இலட்சியமாய்க் கருதி பணத்தைத் தண்ணீராக இறைத்தான் சுரேஷ்.  அவர்களது சந்தோசத்திலே அரேபியப் பாலைவனத்தில் கொளுத்தும் வெய்யிலிலே வருடக்கணக்காகச் சிந்திய வியர்வைத்துளிகளையெல்லாம் மறந்து போனான்.

அவன் வீட்டைவிட்டு ஓடிப்போகக் காரணமாக இருந்த அயலவர்களின் வாய்களெல்லாம் சுரேஷ் தந்த வெளிநாட்டுச்சுயிங்கம், சொக்லேட், சென்ட் குப்பிகள் மற்றும் டீ சேர்ட்டுகளின் உபயத்தில் திறக்கவே மறந்துபோயிருந்தன. ஆனாலும் ஊரவர்களின் வாயை நிரந்தரமாகவே அடைத்துவிட வேண்டுமென்று கனகா மாமி விரும்பினாள்.

நித்தியாவுக்கு  சுரேஷிலே விருப்பமிருப்பதை மட்டுமல்ல இளையவள் திவ்வியாவின் பருவக்கோளாறையும் கனகா மாமி அறிந்திருந்ததால் சுரேஷ் லீவு முடிந்து மீண்டும் துபாய் செல்வதற்கிடையிலே மூத்தவள் நித்தியாவை அவன் கையிலே பிடித்துக் கொடுத்து விடுவதற்குத் துடித்தாள். சுரேஷ் தனது ஒரே அண்ணனின் மகன் என்ற உரிமையில் மிகுந்த நம்பிக்கையோடு அவனிடம் அதைப்பற்றிக் கேட்பதற்குக் காத்திருந்தாள் அந்தத் தாய்.

திவ்வியா பாடசாலைக் கல்விச்சுற்றுலா சென்றிருந்த டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் சுரேஷிடம் மனம்விட்டுப்பேசி திருமணத்திற்கான சம்மதம் பெறப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளிலே பதிவுத் திருமணத்தை முடித்துவிட்டு சுரேஷ் துபாய் செல்வதெனவும் பின்பு நித்தியாவை துபாய்க்கு அனுப்பிவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டு அதற்கான நாளும் உறவினர்களால் குறிக்கப்பட்டது.
அந்த நாளும் வர சுரேஷின் வெளிநாட்டுப் பயணத்தை உத்தேசித்து நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் சுரேஷ் - நித்தியாவின் பதிவுத் திருமணம் வெகுநிறப்பாக நடைபெற்றது. திருமணத்தையடுத்து அன்றிரவு நிகழ்ந்த கலகலப்பான விருந்திலே சுரேஷ் மட்டும் டல்லாக இருந்ததற்கு காரணமிருந்தது.

சுரேஷை ஒருதலையாய் காதலித்திருந்த திவ்யா இரகசியமாக நஞ்சுகுடித்து உயிரைவிட எடுத்துக் கொண்ட முயற்சிதான் அந்தக் காரணம் என்பது வேறு யாருமறியாதது. திவ்யாவின் அறைக்குள்ளே புகுந்து அவள் கையிலிருந்த நஞ்சுக்குப்பியைப் பறித்தெடுப்பதற்கும் பிறர் அறியாமல் அவளை சமாதானப்படுத்தித் தேற்றுவதற்கும் சுரேஷ் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. திருமண உடையை மாற்றுவதற்காக வீட்டின் பின்புறம் வந்தவன் தற்செயலாக திவ்வியாவின் அறைப்பக்கம் செல்ல நேர்ந்ததால்தான் அவளைச் சரியான சமயத்திலே அவனால் காப்பாற்றிவிடவும் நடந்ததை வெளியிலே தெரியாதபடி மறைக்கவும் முடிந்தது. இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயந்தான் சுரேஷ்.

திவ்வியாவின் தற்கொலைமுயற்சி ஒருதலைக்காதல் ஆகியவை தந்த அதிர்ச்சியினால் புதிதாகத் திருமணமானதிலுள்ள நியாயமான மகிழ்ச்சியைக்கூட அவனால் அனுபவிக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் அறியாமல் தன்னை ஆவலோடு நாடி வந்த நித்தியாவின் நெருக்கத்தைக்கூட சாக்குப்போக்குகள் கூறி தவிர்த்து வந்தான் அவன். சுரேஷின் உதாசீனமும் காரணமில்லாமல் தன்னோடு முறைத்துக்கொண்டிருக்கும் தன் தங்கையின் புதிய போக்கும் கண்டு புரியாமல் திகைத்தாள் நித்தியா. சுரேஷின் வருகைக்குப் பின்பு சகோதரிகள் இருவரது உறவும் முதன்முதலாக கசந்துபோனது.

இதற்கிடையிலே சுரேஷ் தனது பயணத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஒருதடவை கொழும்புக்குச் செல்லவேண்டியிருந்தது. அவன் சென்ற பின்பு ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாதிருந்த நித்தியாவும் திவ்வியாவும் தாயின் தலையீடு மற்றும் பரிசுப்பொருட்களைப் பிரித்துப் பார்க்கும் ஆவல் காரணமாக மீண்டும் உறவானார்கள்.

'ஏன்க்கா உன்ட ரெஜிஸ்டருக்கே இவ்வளவு  ப்ரஸண்ட்ஸ் வந்திருக்கே கல்யாணத்தையும் சேர்த்து வச்சிருந்தா இந்தே வீடே காணாமப்போயிருக்கும் போல..'

'ஆங் அதெல்லாம் நான் இங்க எல்லோரோடயும் பழகிற மாதிரி.. அதுதான் இவ்வளவு பேர் ரெஜிஸ்டருக்கு வந்தவங்க உனக்கெல்லாம் வச்சா உன்ட ப்ரெண்ட்ஸ் மட்டும்தான் வருவாங்க..அதுவும் சந்தேகம்தான்'

'அக்கா, என்னக்கா இது.. இந்த 2004 ம் வருசத்துக்குரிய பெஸ்ட் ஜோக்கை  டிசம்பர் இரண்டாவது வீக்ல அடிச்சிட்டியே? ஆனா இன்னும் ஒரு கிழமை பொறுத்து 31ம் திகதி இந்த ஜோக்கை அடிச்சிருந்தியென்டால் உனக்கு விருதே தருவாங்களே அக்கா' என்று கலகலவென்று சிரித்தாள் திவ்வியா.

நித்தியாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. 'யேய், அப்பிடி என்னடி பிழையாச் சொல்லிட்டன்.. இப்பிடிச் சிரிக்கிறா நீ?'

'பின்னே என்னக்கா..? எத்தனையோ வருசத்துக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிற சுரேஷ் அத்தான் எப்பிடியிருக்கிறாரு என்று பார்க்கத்தான் அரைவாசிச் சனமே வந்தது. உனக்காக ஒண்ணும் வரல்ல. பாவம், சுரேஷ் அத்தான் வாழ்க்கை முழுக்க உன்னையே பாத்திட்டு இருக்க வேண்டிய தலைவிதி அவருக்கு..' என்று அபிநயம் பிடித்துக் காட்டினாள் திவ்வியா.

'அம்மா இஞ்சப் பாரம்மா இந்தச் சனியன்ட கதைய!'

'அவ மட்டும் எனக்கு ஒருத்தரும் வரமாட்டாங்களாம் என்று சொல்லலாமா?'

'ஏய் என்னடி நீங்க ரெண்டு பேரும்.. சின்னப்பிள்ளைகள் மாதிரி..? இப்பத்தானே ஒண்டா இருந்து நல்ல வடிவா பேசிட்டிருந்தீங்க..?' சமையலறையிலிருந்து அதட்டல் போட்டாள் கனகா மாமி.

'இருடி.. நீயும் ஒருநாள் எவனையாவது கட்டிட்டு வருவாய்தானே.. அப்ப நானும் பார்க்கத்தான் போறேன்..'

'அப்பிடியா..? இதை நீ முதல்லயயே சொல்லியிருந்தா சுரேஷ் அத்தான் என்னையும் சேர்த்து ரெஜிஸ்டர் செய்திருப்பாரே.. இன்னும் நிறைய ப்ரஸெண்ட் வந்திருக்குமே அக்கா?'

'அம்.......மா!'

'அடியேய்.. திவ்வியா கதைய விட்டுப்போட்டு இஞ்சாலை வாடி நீ! பிள்ளை நித்தியா, நீயும் இந்த விசரிட கதையை கேட்டுட்டு நிக்கிறீயே.. இவளுக்கு உன்னக் குழப்புறதே வேலையாப் போயிட்டுது. நீ வா வந்து வளவையெல்லாம் வடிவாக் கூட்டு பாப்பம்!' என்று கனகா மாமி அவர்களின் பேச்சை நிறுத்தியபோது வாசலிலே ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது.
சுரேஷ்தான் கொழும்பிலிருந்து திரும்பியிருந்தான். புதுமாப்பிள்ளையாய் உற்சாகத்துடன் போனவன் முகமெல்லாம் வாடிப்போய் கசங்கிப்போன மாலையாய் வந்திறங்கினான்.

'தம்பி, ஏதும் சுகமில்லையா? இப்பிடிக் காஞ்சுபோயிட்டீங்க' என்று பதறிய மாமியையயும் திகைத்துப் போய்நின்ற நித்தியாவையும் பார்த்து ஒப்புக்குச் சிரித்துவிட்டு நேரே படுக்கையறைக்குள்ளே போய் நுழையப்போனவன் திவ்வியாவிடம் மட்டும், 'ஒண்டுமில்ல களைப்பாயிருக்கு. தூங்கியெழும்பினாச் சரியாயிடும்' என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் கதவைச்சாத்திக்கொண்டு அவன் கட்டிலில் தொப்பென விழும் ஓசை கேட்டது..

அவனை எழுப்பி மேலும் விபரம் கேட்க முடியாமல் திகைத்து நின்றார்கள் மூவரும். சிறிது நேரம் குழப்பமடைந்திருந்த மாமி சட்டெனத் தெளிவாகிய முகத்துடன் 'நான் நினைச்சது சரி, நல்லாருந்த பிள்ளைக்கு கண் வச்சிட்டாங்களடி.. விடக்கூடாது வா! நித்தியா ஒருக்கா கோயிலுக்குப் போய் மாசிலாமணி ஐயரைப் பாத்திட்டு வருவம்..' என்று எழுந்தாள்.

'ஐயோ அம்மா, திரும்பவும் தொடங்கிட்டியா..? அத்தான் எழும்பின பிறகு என்ன ஏதுண்டு கேட்டுட்டு உன்ட மாய மந்திரத்தை தொடங்கலாமே. சரி, இனி இந்த வீட்டில இருந்த மாதிரித்தான்' என்று அலுத்துக்கொண்ட திவ்வியாவை முறைத்தாள் மாமி.

'அடியேய், டீவி பாத்துக் கொண்டிராமல் அத்தான் எழும்பின உடனே டீ போட்டுக்குடு..! இந்தா நாங்க இப்ப வந்திருவம் சரியா?' என்று அதட்டிவிட்டு இருவரும் வீதியில் இறங்கினார்கள்.

அவர்கள் சென்றதும் திவ்வியா தீவிர சிந்தனையிலாழ்ந்தாள்.

திடீரென ஏதோ தோன்றியவளாக எழுந்து சுரேஷின் அறையை ஒசைப்படாமல் திறந்து உள்ளே சென்றாள். அவன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க மெல்ல பூனைபோல நடந்து சற்று முன்னர் கதிரையிலே அவன் வீசியெறிந்த ட்ரவலிங் பேக்கைத்திறந்து ஆராயத் தொடங்கினாள். சுரேஷின் பாஸ்போட், வீசா மற்றும் ஆவணங்களையெல்லாம் தாண்டி அவனது கறுப்புநிற டயறியினுள்ளிருந்த ஒரு பழுப்புநிறக் கடிதவுறை கண்ணில் பட்டது. அதை அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தாள்.

அது கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் இலச்சினை பொறிக்கப்பட்டிருந்த மருத்துவச் சோதனை அறிக்கை. அதைப் பரபரப்பாகப் பிரித்துப் படித்தாள் திவ்வியா. அதனைப் புரட்டிப் புரட்டிப்படித்தாள்.அவளது விழிகள் நம்பமுடியாமல் பனித்தன. தலைசுற்றிக் கால்கள் பலமிழக்க, 'ஐயோ அம்மா!' அலறியபடி மயங்கிச் சரிந்தாள்.
000

கரையை வேகமாக ஒரு தடவை அறைந்து விட்டுச்சென்றது ஒரு பேரலை. ஒரு தடவை மின்னிவிட்டுக் கம்மிய வானம் இருண்டுபோய் இதோ மழை வரப்போகிறது என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.

'திவ்வியா வா போவோம். மாமி உன்னைத் தேடப் போகிறா..!'

'அப்ப உங்கட முடிவுல ஒரு மாற்றமும் இல்லயா அத்தான்?'

'இப்படி ஆனபிறகு எப்படி திவ்வி..? கார் எக்ஸிடெண்ட்ல எனக்கு துபாய்ல நோயுள்ள ரத்தம் பாய்ச்சினதாலதான் இப்படியானதுண்டு சொன்னா ஊர்ல யாராவது நம்புவாங்களா..?'

'நான் நம்புறனே அத்தான்..'

'ஆனா மத்தவங்க..? இந்த வியாதி வாறதுக்கு பாதுகாப்பில்லாத ரத்தம் ஏத்திறது.. ஷேவிங் என்று எத்தனையோ வேற வழிகளும் இருக்குது.  இருந்தாலும் நம்ம சனங்க இது ஒருவனோட கெட்ட சகவாசத்தால மட்டுமே வாறது என்றுதான் நம்புறாங்க தெரியுமா?'

'ஓம் அத்தான் எனக்கும் தெரியும்.  அவங்க நம்பாட்டி என்ன..? அவங்களுக்கு இது தெரியவே வேணாம். இதுக்காக நீங்க சாகிறதுதான் ஒரே வழியா?'

'இல்ல.. சாகிறதுக்கு எனக்கு மட்டும் ஆசையா என்ன? சந்தேகத்திற்கு இடமில்லாம வருத்தமிருக்கிறது நிச்சமாயிட்டுது. மருந்தே இல்லாத சாவு நிச்சயமான வியாதி இது. இனியும் நான் உயிரோட இருந்தா நித்தியாவைக் கட்டித்தானே ஆகணும்.. மாட்டேன் என்று சொன்னால் அவளால தாங்கவே முடியாது..'

'நீங்க செத்திட்டா மட்டும் அக்கா தாங்குவாளா அத்தான்..?'

'ரெஜிஸ்டர் செய்துவைத்த ஒரு பொம்பிளைப் பிள்ளைய உயிரோட இருந்திட்டு கல்யாணங் கட்ட மாட்டேன் என்று சொன்னா மட்டும் தாங்குவாளா சொல்லு?'
'........'

'தவிர மாட்டேன் என்று சொன்னால் ஊருலகம் நம்பக்கூடிய மாதிரியான ஏதாவது காரணத்தையும் நான் சொல்ல வேணும்.. அப்பிடி இல்லையென்றால் பழையபடி எங்காயாவது உங்களையெல்லாம் விட்டுத் தெலைந்து போயிடணும். அப்படி எங்கேயோ கண்காணாத இடத்தில நான் உதவிக்குக் கூட ஆளில்லாம நோய்முற்றிக் கஷ்டப்பட்டுத்தானே சாகணும் திவ்வியா.. அப்பிடி அன்பில்லாத ஒரு இடத்தில நான்.. அழுந்திச் சாவுறதைவிட இப்பவே செத்துடறது .. நல்லதுதானே?'

திவ்வியாவினால் பதில் எதுவுமே கூறமுடியவில்லை.

'திவ்வியா, எல்லா உண்மையையும் தெரிஞ்ச ஒரே ஆள் நீ மட்டும்தான். நான் போக வேண்டுமென்பது கடவுள் செயல். சாகும்போதாவது எனக்கு கெட்ட பெயர் எதுவும் வராமப் நீ பார்த்துக் கொள். இதுதான் எனக்கு நீ செய்ய வேண்டிய உதவி'

' தாலி கட்டின பொம்பிளைய சத்தமில்லாமல் கொன்று கோயில் வளவுக்குள்ளேயே புதைச்ச புண்ணியவான்களெல்லாம் இருக்கிற இந்த ஊர்ல மத்தவங்களுக்குக் கஷ்டம் வரக்கூடாது என்று நினைக்கின்ற உங்களுக்குப்போய்  இப்படி ஒரு கஷ்டத்தை தந்த கடவுளையா சொல்றீங்க..?'

சுரேஷ் சிறிது நேரம் தொடுவானத்தை வெறித்தபடி மௌனமாக இருந்தான்.

'அத்தான் உங்க நியாயம் எனக்குப் புரியுது. இதைவிட வேறு வழிசொல்றதுக்கும் எனக்குத் தைரியமில்ல. ஆனா ஒரே ஒரு விசயம். அதை மட்டும் நீங்க மாட்டனென்று சொல்லக்கூடாது'

'என்ன அது?'

'அது வந்து நாளைக்கு நீங்க எங்களையெல்லாம் விட்டுப் பிரிஞ்சு போகும் இடத்திற்கு நானும் வருவேன்..'

'ஏன் திவ்வியா வழியனுப்பி வைக்கவா..?' என்று வேதனைச் சிரிப்புடன் கேட்டவன் சிறிய யோசனைக்குப் பின்பு 'சரி, வா' என்றான்.
அவர்கள் வீடு திரும்புவதற்காக எழுந்தபோது மழை கலைந்து விட்டதனால் மீண்டும் கடற்கரையிலே நத்தார் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.

000

மறுநாள் அதிகாலையிலேயே சுரேஷ் எழுந்து விட்டான்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவனைத் தவிர யாரும் எழுந்திருக்கவில்லை.  தனது தாயின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு சிறிதுநேரம் மௌனமாய் அழுதான். பின்பு மனதைத் தேற்றிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்.

திவ்வியாவின் அறை விளக்கு எரியவில்லை என்பதால் அவளும் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டு அப்படியே நடந்து நித்தியாவின் அறைப்பக்கம் வந்தான். திறந்திருந்த யன்னல் வழியாகப் ஆழ்ந்து உறங்கும் நித்தியாவையும் கனகா மாமியையும் பார்த்தான். இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் அன்று நடக்கப்போவது எதையுமே அறியாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் மாமியும் நித்தியாவும். இருவரையும் எழுப்பாமல் எப்படி விடைபெறுவது என்று சிறிது நேரம் தவித்தான் அவன். 

மீண்டும் அறைக்கு வந்து திவ்வியாவின் படிப்புச் செலவுக்குத் தேவையான பணம் பெறுவதற்குரிய வங்கி ஆவணங்களையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்தான். அதன் பின்பு தனது மருத்துவ அறிக்கை சம்பந்தமான காகிதங்களையெல்லாம் ஒன்றும் விடாமல் சேகரித்து தீயிட்டுக் கொளுத்தினான்.  சாம்பலைக்கூட விட்டுவைக்காமல் கழிப்பறையில் ப்ளாஷ்-அவுட் செய்துவிட்டு வெளியே வந்து திவ்வியாவின் அறையைப் பார்த்தான். அவள் அறைவிளக்கு இன்னும் எரியவில்லை. செல்போனில் அவளது நம்பரை அழுத்த ஆரம்பித்தவன் பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக முயற்சியை இடையிலே கைவிட்டான். சிறிது நேரம் மௌனமாய் அழுதவன் வீட்டிலிருந்து வெளியேறி வீதிக்கு வந்து இருட்டில் திரும்பிப் பாரக்காமல் நடக்கத் தொடங்கினான்.

மார்கழிக்குளிருக்கு உடலைச் சுருட்டிக் கிடந்த தெருநாய்கள் எழுந்து நின்று குரைப்பதற்குப்பதில் லேசாய் உறுமிவிட்டுப் படுத்தன. சிறிது தூரம் நடந்தவன் தன்பின்னால் யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது  திவ்வியா வந்து கொண்டிருந்தாள்.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். முதல்நாளே பேசி வைத்துக்கொண்ட இரகசிய இடத்திற்கு அவர்கள் இருவரும் நடந்து வந்து சேர்ந்தபோது பொழுதுபுலர்ந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது.

அது ஓர் ஆள்அரவமற்ற பாறைக்கடற்கரை. கரைமுழுவதும் சிறியதும் பெரியதுமாக குத்திக்கிழிக்கும் பாறைகள் நிறைந்திருந்தன. ஆழமும் நீரோட்டமும் அதிகமான இடம் அது. அந்தப்பகுதியிலே வந்து கடலுக்குள் இறங்கியவர்கள் தற்கொலை முயற்சியில் வந்து விழுந்தவர்கள் யாருமே உயிரோடு மீண்டது கிடையாது என்பதால் அந்த இடத்துக்கு ஆள்கொல்லிக் கடல் என்றொரு பெயருமிருந்தது. சுரேஷ் அந்த இடத்ததைத் தெரிவு செய்ததற்குக் காரணமும் அதுதான்.

'சரி, திவ்வியா, நீ இனி வீட்டுக்குத் திரும்பிப்போ! நான் போய்.. வாறேன். யுனிவசிட்டி கிடைத்ததும் போய் உன்ட படிப்பை...நீ நல்லபடியா..' அவனால் தொடர முடியவில்லை.

திவ்வியா எதுவும் பேசவில்லை. உப்புக்காற்றிலே கேசம் அலைபாய்ந்து கொண்டிருக்க சலனமேதுமின்றி கூடவே நடந்து வந்தாள். அவளது முகம் பாறையாய் இறுகிப்போயிருந்தது. இருவரும் கடலுக்குள் துருத்திக்கொண்டிருந்த உயரம் குறைவான பாறை ஒன்றிலே ஒருவரையொருவர் பார்த்தபடி வெகுநேரம் வரை பேசிக்கொள்ளாமலே அமர்ந்திருந்தார்கள். அதுவரை கத்திக்கொண்டிருந்த கடல் அலைகள் குறைந்து ஒரு குளம்போல அமைதியாகி விட்டிருந்தது.

மனதைக் கல்லாக்கிக்கொண்டு சுரேஷ் எழுந்தான். உணர்ச்சியில்லாத உருவம்போல திவ்வியாவும் எழுந்து நின்றாள். தூரத்தில் எங்கோ வாகனங்கள் வீறிட்டுக் கொண்டு செல்லும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.

'திவ்வியா, நேரமாயிட்டுது. இந்நேரம் உன்னைத் தேடிக்கிட்டிருப்பாங்க..ப்ளீஸ் வீட்டுக்குப்போ!' என்று தழுதழுத்த சுரேஷை திடீரென்று வெறிபிடித்தவள் போல ஆவேசமாய்க் கட்டியணைத்துக் கொண்டாள் திவ்வியா.

'அத்தான் நான் உங்களை சாக விட மாட்டேன்.. அக்கா வேணாம்..நான் உங்களை கட்டிக்கொள்றேன்.. உங்க வருத்தம் எனக்கும் வரட்டும்.. பரவாயில்ல அத்தான்..'

சுரேஷ் இதை எதிர்பார்க்கவில்லை.

'ஏய்! திவ்வி உனக்கென்னப் பைத்தியமா?' என்று அவளது ஆவேசப்பிடியிலிருந்து விடுபடுவதற்காக சுரேஷ் முயன்றுகொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் நின்றிருந்த பாறையின் கீழே கடல் திடீரென வேகமாக வற்றிக்கொண்டு சென்றது.

கடல் பின்வாங்கிச் சென்ற அந்த நாள் 2004.12.26. நேரம் காலை 8.49 மணி.

-மூதூர் மொகமட்ராபி