'அண்ணே உங்களுக்கு போன்! நம்ம வேலா அண்ணன்...'
'என்னது வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்... ஏன்டா,
உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்...?' என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு, 'இல்லண்ண... வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான் நான் சொல்ல வந்தேன்' என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது கோபம். ஆனாலும் எதுவும் கூறவில்லை.
'இந்தாங்க பிடிங்கண்ணே!' என்று செல்போனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென மேலேறிச் சென்று விட்டான் அந்த மீசைகூட அரும்பாத இளைஞன். முன்பெல்லாம் எனக்கு எத்தனையோ வெற்றிகளைத் தேடித்தந்த ஆனானப்பட்ட தளபதிகள் கூட என் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசுவதற்கு பல தடவை யோசிப்பார்கள். ஆனால் இப்போது என் பதுங்குகுழிக்கு காவல் நின்றிருக்கும் கற்றுக்குட்டிப் பயல்களெல்லாம் என்னைத் திருத்திப்பேசுமளவுக்கு நிலைமை மாறிப்போய் விட்டதை நினைத்துப் பார்த்தேன். 'காட்டு யானை புதைந்து விட்டால் சேற்றுத் தவளையும் ஒரு உதைவிட்டுப் பார்க்குமாம் என்று சும்மாவா சொன்னார்கள்...' என்று நொந்தவாறு செல்போனை பார்த்தேன். அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டிருந்தது. மீண்டும் அதே அழைப்பு வருவதற்காக எரிச்சலோடு காத்திருந்த வேளையில் மேலே காவலுக்கு நின்றிருக்கும் அந்த இளைஞன் என்ன செய்கிறான் என்று சற்று அண்ணாந்து பார்த்தேன்.
அவன் தான் நின்ற இடத்திலிருந்து லேசாகச் சரிந்து கீழிருக்கும் என்னை எட்டிப் பார்ப்பது தெரிந்தது. நான் பார்ப்பதைக் கண்டதும் சட்டென்று நிமிர்ந்து விறைப்பாக நின்றான். ஆனாலும் அவனது கடைவாய் ஓரத்தில் மெல்லிய ஏளனம் உறைந்திருந்தது. அதைப் பார்த்ததும் உள்ளுரப் பற்றிக்கொண்டு வந்தாலும் இப்போது நான் இருக்கும் நிலைமையில் ஒரு சிறுவனைக்கூட அதட்ட முடியவில்லை; அதட்டவும் கூடாது. அவர்களில் ஒருவனை லேசாய் முறைத்தாலும் போதும். 'இந்தா பிடி உன் துப்பாக்கி' என்று முகத்தில் வீசிவிட்டு அகதிகளோடு அகதியாய் எதிரிகளின் பக்கம் ஓடிப்போய்விடுவான். சில மாதங்கள் முன்புவரை என் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கிப்போய் காற்சட்டையை நனைத்த இந்த நாய்களையெல்லாம் இப்போது நானே அனுசரித்துப் போக வேண்டியுள்ளதை நினைத்தபோது என்னையறியாமலே பெருமூச்செறிந்தது.
இந்த இடத்திற்கு நானும் எனது உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் மற்றவர்களும் உயிர்தப்பியோடி வந்து ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. இதை உலகம் முழுவதிலும் இருக்கும் எங்கள் புலம்பெயர் ஆட்கள், 'தற்காலிகப் பின்னடைவு' 'தந்திரோபாயப் பின்வாங்கல்' என்றெல்லாம் வெகுகௌரவமாக வார்த்தைச் சிலம்பமாடிக்;கொண்டிருக்கின்றார்கள். இருந்தாலும் நாங்கள் தோல்வியடைந்து ஓடிவந்திருப்பதுதான் உண்மை. எனது கட்டளைத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டு எங்கள் வசமிருந்த கையிருப்புகள் அனைத்தும் சின்னாபின்னமாகிப்போன நிலையில் தப்பியோடி இங்கு வருவதைத் தவிர வேறுதெரிவுகள் எதுவும் இருக்கவில்லை. எதிரிகளின் தரைவழித் தாக்குதலுக்குப் பயந்து பிள்ளை குட்டிகளோடு ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்திருக்கும் அகதி மக்களுடன் வேறுவழியின்றி நாங்களும் ஓடிவந்தோம். இனியும் ஓடித்தப்பமுடியாது எனும் நிலையில்தான் கடைசியாக உப்பு ஏரிக்கும் கடலுக்கும் இடையில் நீண்டு கிடக்கும் இந்த நிலப்பரப்பில் அகதிமுகாம் ஒன்றை அமைத்து அதற்குள்ளே நாங்களும் ஒளிந்திருக்கின்றோம்.
எங்கள் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் குடும்பத்தினர் மற்றும் துப்பாக்கி ஏந்திக் காவலுக்கு நிற்கும் நூற்றுக்கணக்கான அடிமட்ட உறுப்பினர்களுமாய் நாங்கள் இங்கு தங்கியிருப்பதை எங்கள் எதிரிகள் அறிந்து எங்களைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். ஆனாலும் ஆயிரக்கணக்கான மக்களைத்தாண்டி வந்து எங்களைக் கண்டுபிடித்துத் தாக்கியழிப்பது எப்படி என்பதுதான் அவர்களுக்குள்ள ஒரே சிக்கல். அகதிமக்கள் வெளியேறிவிட்டால் அடுத்த நிமிடம் எங்களை ஒரு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல சுலபமாய்ப் பிடித்துவிடுவார்கள். அதனால்தான் அகதிகளை முகாமைவிட்டு வெளியேறிவிடாமல் பலியாடுகளாய் மிரட்டி வைத்திருக்கின்றோம். உண்மையை அப்பட்டமாய்க் கூறுவதானால், எதிரிகளின் துப்பாக்கி ரவைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றிவைத்திருப்பதெல்லாம் எலும்பும் தோலுமான இந்த உயிருள்ள மண்மூட்டைகள்தான்.
சர்வதேச சக்திகளை அனுசரிக்க வேண்டிய தேவை எங்களைவிட எங்கள் எதிரிகளுக்குத்தான் அதிகமுள்ளது. ஆதலால் பொதுமக்கள் அகதிகளாய் தங்கியிருக்கும் இந்த முகாமுக்குள் வான்தாக்குதல் எதையும் நடாத்த மாட்டார்கள் என்று கணக்குப்போட்டு வைத்துத்தான் இதுவரை காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் யாரையும் எதையும் முழுமையாக நம்ப முடியாது. நாங்கள் எதிர்பாராத எதுவும் இனிமேல் நடக்கலாம். அதனால்தான் இந்த அகதிமுகாமுக்குள் மக்கள் ஓரளவு சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்த போதிலும் நாங்கள் மாத்திரம் ஆழமான பதுங்கு குழிகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றோம்.
சிலவேளை எதிர்பாராத வான்தாக்குதல்கள் ஏதேனும் நடந்தால்கூட தப்பிப்பிழைக்கும் சாத்தியத்தை அதிகரிப்பதற்காகவே ஒரேஇடத்தில் நாங்கள் ஒன்றாக இருப்பதில்லை. ஆம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கூட தனித்தனியாய் பிரிந்து வௌ;வேறு நிலவறைகளிலேதான் தங்க வைத்திருக்கின்றார்கள் என்னுடைய பாதுகாப்பு அணியினர். அதிலும் என்னை மட்டும் தனியாகப்பிரித்து யாரும் இலகுவில் கண்டுபிடிக்கவோ யூகிக்கவோ முடியாத இந்த இரகசியமான இடத்தில் வைத்திருக்கின்றது.
கைத்தொலைபேசியை வைத்துக்கொள்வதற்கு கூட அந்தக்குழு என்னை அனுமதிக்கவில்லை. முக்கியமான அழைப்பு ஏதாவது வரும்போது மட்டும் காவலுக்கு நின்றிருப்பவர்கள் மூலம் அதைக் கொண்டு வந்து தருகின்றார்கள். எல்லோருக்கும் கட்டளையிட்டு மட்டுமே பழகிய எனக்கு இதெல்லாம் புதிய விடயம். ஆனாலும் என்னைப் பாதுகாக்கும் அவர்களது திட்டத்திற்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறுவழியில்லாததால் எல்லாவற்றையும் நான் பொறுத்துக்கொண்டிருக்கின்றேன்.
என்னுடைய தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இனிவரும் நாற்பத்தி எட்டு மணித்தியாலங்களை நான் இந்த நாற்றம் பிடித்த பதுங்கு குழிகளுக்குள்தான் கடந்;தாக வேண்டும். நாங்கள் உயிர்தப்புவதற்கு சர்வதேச நாடுகளின் தலையீடு அல்லது பேச்சுவார்த்தை என்று ஏதாவது ஒரு நிகழ்வுதான் தேவை. அப்படி ஒன்று எப்படியும் இன்றிரவுக்குள் நிகழும் எனும் நப்பாசையோடு நாங்கள் எல்லோருமே காத்திருக்கின்றோம். அப்படி எதுவும் நிகழாது போனால்...
திடீரென என் கையிலிருந்த தொலைபேசி உயிர்பெற்று அதிர்ந்தது.
வேலுசிங்கம் அண்ணனின் விதவை மனைவி நடேல்தான் அழைப்பில் இருந்தார். மிகுந்த ஆர்வத்துடன் போனைக் காதில் வைத்து, 'ஹலோ கொல்லுங்க...சே! சொல்லுங்க அண்ணி! நான் தம்பிதான் பேசுறன்..'
'................'
'உதென்ன அண்ணி இப்பிடிச் சொல்றீங்கள்! அப்படிச் செய்யுறதெண்டா கிளிநொச்சி விழ முன்னமே செய்திருக்கலாமே..?'
'......'
'சரி, சென்னையிலயும் மதுரையிலயும் ரோட்டில ஆர்ப்பாட்டம் கடையடைப்புச்செய்து கத்தித் திரிஞ்சதால எந்தப் பிரயோசனமில்லையே... அங்கங்கே ரெண்டு மூண்டுபேரைப் பத்தவச்சுக் கொளுத்திவிட்டிருந்தாலும் பரவாயில்ல.. ஆனா இப்ப இஞ்ச இருக்கிற நிலமையில அப்படித் தீக்குளிச்சா கூட சரிவராது... கோவைல மும்பாய்ல மாதிரி ஒரு நுர்று இருநூறை மண்டையில போட்டால்தான் டெல்லியில உள்ள தலைப்பாகைக்காரர் அசைஞ்சு குடுப்பார். ஆங்.. சரி, நீங்க சொல்லுங்கோ கேட்கிறன்'
'.........'
'ச்சும்மா நீங்களும் அதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்கண்ணி..! அதைக் கேட்கப் போய்த்தான் இவ்வளவும் வந்தது. அந்த நேரமே வேலாண்ணனிட்ட எவ்வளவு சொன்னனான். அவர்தான் 9ஃ11, அமெரிக்கா, சர்வதேச சமூகம், நாகரீகம்.. யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு, சமாதான ஒப்பந்தம் அது இதென்டு கதைச்சு கவுத்தவர். 2001ல எனக்கு மீசைமழிச்சு சபாரிசூட் உடுத்தி கனவான் வேசம் கட்டி டெலிவிசன்ல ப்ரஸ் மீட்டிங், பேட்டி அது இதென்டு சும்மா உலகத்தை ஏமாத்தினதுல ஒத்துமை குலைஞ்சுபோய் எல்லாமே இரண்டா உடைஞ்சதுதான்தான் மிச்சம். அதெல்லாம் செய்யாம அன்டைக்கிருந்து இவனுகளுக்கு தொடர்ந்து அடிச்சு வந்திருந்தா இன்டைக்கு இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்குமா? அதை விட்டுட்டுச் சும்மா.. பொட்டு...'
'..................'
'பொட்டு இல்லண்ணி! 'சும்மா போட்டு' என்டு சொல்ல வந்தனான்... வாய் தவறி 'பொட்டு' என்டு வந்திட்டுது.. நீங்க பயப்பிட வேணாம்.. பொட்டு கிட்டு எல்லாம் வெளிநாட்டுல எங்கேயும் இல்ல.. தப்பிவர வழியில்லாம இஞ்ச என்னோட பங்கர்லதான் கிடக்கிறாங்க!'
'...................'
'ஐயோ அண்ணி, கிட்டு என்டால் கிட்டு இல்ல.. அவஞ்செத்து எவ்வளவு காலம்..? அது ஒரு எதுகை மோனைக்காகச் சொன்னது.. ஆங், சாப்பர்டுதானே..? அதெல்லாம் ஏதோ பரவாயில்ல.. எங்களுக்கு கொஞ்சம் கிடைக்குது. என்ன... சனங்கள்தான் பாவம் சோத்துக்கும் பாலுக்கும் வழியில்லாம அலையுதுகள்! ஓமோம்.. அதனாலதான் அந்தப் பக்கமே போகேலாமக் கிடக்கு... எங்களைக் கண்டாலே சனம் காறித் துப்புதுகள். முந்தி இருந்த மாதிரியில்ல... தேசியம் தலைவர் என்ட மதிப்பெல்லாம் இஞ்ச போயிட்டுது.'
'...........'
'ஓமோம்! அந்தப்பக்கம் ஒலிபெருக்கியை.. ஒலிபெருக்கியெண்டால் தெரியாதே..? அதுதான் லவுட்ஸ்பீக்கர்.. அதை பனை உச்சியில கட்டி பாட்டுப்போட்டுச் சனங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறானுகள்... இதுகள் சனங்களும் நாங்கள் எவ்வளவுதான் மறிச்சாலும் சுட்டுப்போடுவம் என்டு பயப்பிடுத்தினாலும் ஒண்டொண்டா ஆளத் தெரியாம ஆள் அந்தப்பக்கம் நழுவுதுகள். சனத்தை விடுங்க.. சனத்தோட சேர்ந்து துவக்கை எறிஞ்சிபோட்டு எங்கடை இவனுகளுமல்லவா சத்தமில்லாம ஓடுறானுகள்.. சே! அதைப்பார்க்கேக்கதான் எனக்குப் பத்திட்டு வருகுதண்ணி.. சனம் முழுதும் அந்தப்பக்கம் போயிட்டா பிறகு எங்கள்ற கதை முடிஞ்சுது.. அதுக்கிடையில ஏதாவது பண்ணித் தொலைங்க!'
'.................'
'ஓமோம், இந்தச் சண்டையை நடத்துறதே டெல்லியில இருக்கிற அந்த தலைப்பாகைக்காரரோட ஆட்கள்தானே.. அதால நீங்க திரும்பவும் ஒருக்கா அவங்களோட கதைக்கிறீங்களே அண்ணி..? பேச்சுவார்த்தை இல்லாட்டியும் பரவாயில்ல.. ஆகக்குறைஞ்சது சீஸ்பயர் ஒன்டாவது கேளுங்க.. அவன் நம்மட ஜேபீ மலேசியாவுல இருந்து எங்களைக் காப்பாத்திக் கொண்டுபோக கப்பல் ஒன்டு ரெடியா இருக்குதாம் அது இதென்டு சும்மா ஸ்டண்ட் அடிச்சிக் கொண்டிருக்கிறான். அதையெல்லாம் நம்பேலாது.. ஆனா நாங்க இஞ்ச இப்பிடிக்கிடக்கிறது எதுவும் இந்த கனடா சுவிஸ்காரர்களுக்கும் பேப்பர்காரருக்கு தெரியவராமப் பாத்துக்கொள்ளுங்கோ.. மானம்போயிடும். சரி, அப்ப நீங்க கதைச்சுப் போட்டுச் சொல்லுங்கோ! ஆனா ஒண்டு, கெதியாக் கதைக்க வேணும்.. இல்லையெண்டால் அடுத்த முறை உங்களுக்கு இப்படியெல்லாம் எங்களோடை பேசக்கிடைக்காது. விளங்குதே?' என்று சிறிது கோபத்தோடு அழைப்பைத் துண்டித்தேன்.
'நடேல் அண்ணியின் குரலில் அத்தனை சுரத்து இல்லை. நிலைமை எங்கள் எல்லோருடைய கையையும் மீறிக்கொண்டிருக்கின்றது என்பது அவவின் பேச்சிலேயே புரிந்துவிட்டது எனக்கு. இவர்கள் என்னதான் முயன்றாலும் இனிமேல் அதையெல்லாம் நம்புவதிலே பலனில்லை என்று என்னுடைய உள்மனம் எச்சரித்தது. என்னை நம்பி இத்தனை காலமும் போராடிய அத்தனை இளைஞர்களும் கொல்லப்பட்டு எங்கள் சகலமும் அழிந்து போய் பின்னடைந்து விட்ட நிலையில் இனிமேல் எதிரிகள் எங்களோடு சமரசத்திற்கு வரப்போவதில்லை என்பது உள்ளுரப் புரிந்து விட்டது எனக்கு. புலம்பெயர்ந்த மக்கள் குரல்கொடுத்தும் கூட சர்வதேசம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதிலிருந்தே இதை நாங்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி எங்களைச் சுற்றி சனங்களை சேர்த்து வைத்துக்கொண்டு காலத்தைப் போக்குவது என்றும் தெரியவில்லை. பசியும் பட்டினியும் வாட்டியதில சனத்துக்கு எங்கள் மீதுள்ள மரியாதை முழுமையாகப் போய்விட்டது. இனி பயமும் இல்லாமல் போனால் எங்கள் நிலைமை அதோகதிதான். ஒவ்வொரு நாளும் மக்களின் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் சனங்களே ஒன்றுதிரண்டு எங்களைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சே! சர்வதேச நிலைமை, சர்வதேச நிலைமை என்று சொல்லிச் சொல்லியே என்னையும் என்னுடைய நோக்கத்தையும் வீணடிச்சுப் போட்டாங்கள். இப்ப நாங்கள் உப்புக்கடலுக்கும் எதிரிகளுக்கும் இடையில மாட்டுப்பட்டுப்போய்க் கிடக்கிறோம் வேலா அண்ணன் அடிக்கடி சொல்லும் அந்த சர்வதேச சக்திகளெல்லாம் இப்ப எங்களைக் கண்டும் காணாததுபோல இருக்கிறான்கள். ஆனால் அவனுகளையும் பிழை சொல்லேலாது. ஒவ்வொரு முறையும் துரோகிகள் துரோகிகள் என்று நாங்கள் பொடியளையும் சனத்தையும் போட்டுச் சாகடிச்ச காலத்தில இருந்து 'ஜனநாயக மீறல்கள் செய்யாதீங்கோ செய்யாதீங்கோ.. பிறகு வெளியுலகத்தில பேர் பழுதாகிடும்' என்று எங்களை அவன்களில் எத்தனைபேர் எச்சரிச்சவங்கள்..? நாங்கதான் காதிலை வாங்காமல் கூடச்சேர்ந்து போராடினவை எல்லாத்தையும் சுட்டுச் சரித்தனாங்கள்.. காணாததற்கு கடல்கடந்துபோய் பக்கத்து நாட்டுல அடுத்த பிரதமரா வந்திருக்க வேண்டிய அந்த மனிசனையும் எலெக்சன் மீட்டிங்குல சிதறடிச்சு.. செய்த குற்றம் மாட்டுப்பட்டு இன்டைக்கும் அந்தப்பக்கம் முழுசாத் தலை காட்ட முடியாமலிருக்கு. அன்டைக்கு அப்படிச் செய்த காரணத்தாலதான் இன்டைக்கும் எங்களைக் காப்பாத்தச் சொல்லி தலைப்பாகைக்காரிட்ட நேரடியாக கேட்க முடியாமலிருக்கு..
ஒருவேளை மற்றவை சொல்றதுதான் சரியோ.. நாமதான் பிழை விட்டுட்டமோ...? விடுதலை விடுதலை என்று சொல்லி ஆள் சேர்த்ததும் பிறகு பலம் கூடியதும் துரோகி துரோகி என்று கூட நின்று போராடின நண்பர்;களையெல்லாம் போட்டுத்தள்ளியதும்தான் இன்டைக்கு இப்பிடி ஒருபக்கம் உப்புநீரும் மறுபக்கம் எதிரிகளும் காத்திருக்க கதவிடுக்கில மாட்டின எலிமாதிரி நான் கிடக்க காரணமோ..' என்று மெலிதான ஒரு சுடலை ஞானம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே 'சேச்சே! அது எப்படிச் சரிவரும். இவனுகள் சும்மா.. வெளிநாடுகள்ற கதைகளைக் கேட்டுப்போட்டு கடைசியில எல்லாத்தையும் நாசமாக்கிப் போடுவான்கள் என்டதால்தானே நான் மட்டுமே போராடுவேன் என்று எல்லாத்தையும் கையிலெடுத்தனான்' என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.
உவன் ஜேபீயும் மற்றவங்களும் வெளிநாடுகளில நிண்டு கொண்டு சொல்லுற கதையிலலெல்லாம் உண்மையில்ல போலத்தானிருக்கு. வெளிநாட்டுல வருசக்கணக்கில கோட்டும் சூட்டும் பியரும் இறைச்சியும் ஹோட்டலும் பெட்டைகளும் என்டு நல்ல சொகுசா வாழ்ந்து கிடந்து பழகிட்டானுகள். அதனாலதான் கதையில இருக்கிற வேகம் செயலுல இல்லாமலிருக்கு. அப்படியே ஜேபீயின் கப்பல் வந்தாலும் கடல்வழியே நாங்கள் அப்புறப்படுவதற்கு டெல்லி தலைப்பாகைக்காரருடைய கடற்படையின் கழுகுக்கண்கள் விட்டுவைக்குமா என்பதெல்லாம் சந்தேகமே. எத்தனை பாடுபட்டு எவ்வளவு பேரைப் பறிகொடுத்தும் பலிகொடுத்தும் நடாத்திய போராட்டம். கடைசியில் யாராருடையதோ காலைப்பிடிச்சு உயிர்ப்பிச்சை கேட்கவேண்டிய அளவுக்கு போய்விட்டதே..' என்று வெகுநேரம் யோசித்தபடியே இருந்ததில் தூக்கம் கண்களைச்சுழற்றியது. அப்படியே பங்கருக்குள் தூங்கிப்போனேன்.
000
'டும்...டும்! படீர்!'
எங்கேயோ தூரத்தில் பெருத்த வெடியோசைகள் கேட்டுத்திடுக்கிட்டு கண்விழித்தேன். வெடியோசையின் அதிர்விலே நானிருந்த பதுங்கு குழி அதிர்ந்து மண்கொட்டியது. மேலே முகாமுக்குள் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நிலவறைக்குள்ளிருந்து சிறிது மேலே ஏறிவந்து நிலமட்டத்தோடு கண்களை வைத்து எட்டிப்பார்த்தேன். மேலே என்னுடைய காவலுக்கு நின்றிருந்தவர்கள் யாரையுமே காணவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த அகதி முகாம் வெறிச்சோடிக்கிடந்தது. வெடியோசைகள் அடுத்தடுத்துக் கேட்டன. அந்த வெடியோசைகளைத் தொடர்ந்து வெடிமருந்தின் கந்தகமணமும் பனைவடலிகளின் கருகல் பச்சை மணமும் காற்றில் கலந்து நாசியைத் துளைத்துச் சென்றது.
உடனே எனக்குப் புரிந்து விட்டது. இது ஒன்றும் எதிரிகளின் தாக்குதல் வெடியோசை கிடையாது. நாங்கள் பின்வாங்கி வந்தபோது தற்காப்புக்கென கொண்டு வந்தவற்றையெல்லாம் ஒரு பெரும் கிடங்கில் மறைத்து வைத்திருந்தோம். எப்போதாவது இனிமேல் தப்பிக்க வழியேயில்லை என்ற நிலைமை வந்தால் மட்டும் எதிரிகளின் கைகளுக்கு அவை கிடைத்துவிடாமலிருக்க அத்தனையையும் ஒன்றாகச் சேர்த்து அழித்துவிடும்படி என்னுடைய பாதுகாப்புக் குழுவுக்கு நான்தான் உத்தரவிட்டிருந்தேன். அதனால்தான் எனது ஆட்கள் கிடங்கை தீவைத்து அழித்திருக்கின்றார்கள். அந்த ஓசைதான் அது.
அதுசரி, அகதிமுகாமிலிருந்த மக்கள் எல்லோரும் எங்கே..? எல்லோரும் எப்படி இங்கிருந்து வெளியேறிப் போனார்கள்..? அப்படியானால் என்னுடைய துப்பாக்கிப் பையன்கள் என்ன ஆனார்கள்? சரிதான், அவர்களும் மக்களோடு மக்களாக எதிரிகளின் இடத்திற்கு ஓடிப்போய்விட்டார்கள் போலும்.
அப்படியானால் அகதிகள் முழுமையாக தங்கள் பகுதிக்கு வந்து சேரும்வரை காத்திருக்காமல் இனி எதிரிகள்; உள்ளே புகுந்து வரத்தொடங்கிவிடுவாhர்கள். அவ்வாறானால் என்னுடையதும் என்னைப்போலவே நிலவறைகளுக்குள்ளே இருப்பவர்களினதும் வாழ்வின் இறுதி நிமிடம் அண்மித்து வந்து விட்டது. இனிமேல் கழியும் ஒவ்வொரு மணித்துளியும் என்னுடையதும் என்னைச் சேர்ந்தவர்களினதும் அழிவை உறுதியாக்கிக் கொண்டிருக்கின்றது..
இன்னும் சிறிது நேரத்தில் எம்மை வேட்டையாடுவதற்காக முன்னேறிவரப்போகும் எதிரிகள் என்னைத்தான் மிகத் தீவிரமாகத் தேடுவார்கள். என்னைப்போலவே உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் இங்கே எங்கேயோ சில நிலவறைகளுக்குள்தான் மறைந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் எதிரிகளின் கைகளிலே சிக்காமல் நிச்சயம் தற்கொலை செய்து கொள்ளுவார்கள். அல்லது இந்தநேரம் அனைவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டு பிணமாகிக்கூட இருக்கலாம். ஆம், தப்பிக்க முடியாமல் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளும் நிலைமை வரும்போது உயிர்ப்பிச்சை கேட்டு எதிரிகளிடம் மண்டியிடுவதைவிட தற்கொலை செய்து கொள்வதுதான் உத்தமம் என்றுதானே எங்கள் அடிமட்ட உறுப்பினர்களுக்கு காலம் காலமாகப் போதித்து வந்திரக்கின்றோம் நாங்கள். ஆனால் என் மனைவி பிள்ளைகளை நான் அப்படி வளர்க்கவில்லை. அவர்கள் எல்லோரும் வாழப்பிறந்தவர்கள். பாவம், அவர்களுக்குத் தற்கொலை தெரியாது. அவர்களுக்கும் இப்படியொரு நிலைமை வரும் என்று அறிந்திருந்தால் எல்லோரையும் நடேல் அண்ணியிடம் முன்கூட்டியே அனுப்பிவைத்திருக்கலாம். அவர்களுக்கு இனிமேல் என்ன நடக்குமோ என்று நினைத்தால்தான் நெஞ்சுவலிக்கிறது எனக்கு.
இத்தனை வருடத்தில் எத்தனை ஆயிரம் ஏழைச் சிறுவர்களையும் சிறுமிகளையும் கழுத்தில் நச்சுக்குப்பியுடன் களமிறக்கி எதிரிகளின் துப்பாக்கி ரவைகளுக்குப் பலிகொடுத்திருப்பேன். எத்தனை நூறு இளைஞர்களையும் யுவதிகளையும் ஓர் இரவுநேர உணவுக்கும் ஒரு புகைப்படத்திற்கும் பின்பு தன்னைத்தானே அழித்துக்கொள்ள அனுப்பிவைத்திருப்பேன். அப்போதெல்லாம் அதிகாரத்தை எவ்வழியிலேனும் கைப்பற்றிவிட வேண்டும் எனும் பேராசைக்கு முன்பு மனித உயிர்களின் உண்மையான மதிப்பு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை எனக்கு. இந்த உலகில் தொடர்ந்து வாழ வேண்டுமென்பதிலே ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் ஆசையெல்லாம் எனது மனiவி பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கும் இந்த வேளையில்தானே எனக்கு தெரிகின்றது.
என்னாலும் எனது கட்டளையாலும் உயிரிழந்த எத்தனையோ ஆயிரம் பேரின் மரணத்தை எண்ணிப் பார்க்கின்றேன். மரணத்தறுவாயில் என்னைப்போல பித்தம் கலங்கிய எத்தனை கணவர்கள், மனைவிகள், தாய்-தந்தையர்கள், குழந்தைகள் இருந்திருப்பார்கள்..? நான் ஆணையிட்டு அனுமதித்த ஒவ்வொரு வெடியும் இந்த மண்ணில் எத்தனை உயிர்களை காவு கொண்டது என்பதை இப்போதுதான் நினைக்கத் தோன்றுகின்றது. ஆரம்ப காலத்திலிருந்தே விடுதலைக்கு விடுதலைக்கு என்று எத்தனை பேரைத்தான் போட்டுத் தள்ளிவிட்டேன். எதிரிகள் கொன்று முடித்த உயிர்களைவிட இந்த மண்ணில் நான் தீர்த்துக்கட்டிய நண்பர்கள்தானே அதிகம்.
இதுநாள்வரையில் நான் கொன்றதெல்லாம் எதிரிகளையும் நண்பர்களையும் மட்டுமா? இல்லை.. இல்லை.. இந்தப் போராட்டத்திலே எந்த வகையிலும் சம்பந்தமேயில்லாத போதிலும் ஆரம்பத்தில் எங்களுக்கு பல வகையிலும் ஒத்தாசையாக இருந்து வந்த சகோதர இனங்களையுமல்லவா கொன்றழித்தேன். இரண்டு மணியாத்தியாலங்களுக்குள் வெளியேறச் சொல்லி அவர்களைத் துரத்தினேன். மசூதிகளுக்குள்ளே புகுந்து இரத்தச்சேறடித்தேன். அவர்களின் எத்தனை வீடுகளையும் குடிசைகளையும் குருதியில் மூழ்கடித்தேன். எத்தனை குழந்தைகளைக் கருவிலும் உறக்கத்திலும் அழித்தொழித்தேன். பிஞ்சுகளாய்க் கருகிப்போன இளம் பிள்ளைகள்தான் எத்தனை எத்தனை? வயோதிபர்கள், நோயாளிகள், பெண்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளிகள், அறிஞர்கள்.. அப்பப்பா! என்னால் அழிந்துபோன அத்தனை ஆத்மாக்களின் வேதனையும் ஒன்று திரண்டு ஒரு பெரும் சாபமாய் மாறியதனால்தான் நான் இப்படித் தோற்றுப்போனேனா?
வெகுநேரம்வரை கண்களைமூடி அமைதியாய் அமர்ந்திருந்தேன். எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை. முதல்நாள் இரவு ஏற்றிக்கொள்ள வேண்டிய இன்சுலீன் ஊசியைக்கூட போட்டுக்கொள்ள மறந்துவிட்டதால் என்னையறியாமலே மயக்கத்தில் இருந்திருக்கின்றேன் போலும். இனிமேல் அதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்று தோன்றியது. ஆம், இனி வேறுவழியில்லை. எல்லாமே கையை மீறிப்போய்விட்டதால் என்னை நானே அழித்துக்கொள்வது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தேன்.
எனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோடியது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக என் கழுத்தில் பயனின்றித் தொங்கிக் கிடக்கும் நஞ்சுக்குப்பியை ஒரு தடவை தடவிப் பார்த்துக்கொண்டேன்.
ஒரு வீரனாக எதிரிகளுடன் நேருக்கு நேர் போராடிச்சாகாமல் இப்படி ஒரு பதுங்கு குழிக்குள் கிடந்து சாகப்போவதை நினைத்தால்தான் அதிக வேதனையாக இருந்தது எனக்கு. ஆனாலும் இனிமேல் இதைவிட வேறு தெரிவுகள் எனக்கில்லை. ஆரம்பகாலம் முதல் எனக்காக தமது இன்னுயிரைத் தியாகம் செய்துவந்த அத்தனை போராளிகளிலிருந்து இப்போது தோல்வியிலும் என்னுடனிருந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கும் அல்லது இனிமேல் மாய்த்துக் கொள்ளப்போகும் என் விசுவாசமிக்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் வரையில் அத்தனைபேரின் தியாக உணர்வுக்கும் இந்த நிலையிலே நான் அளிக்கும் கைம்மாறு எனது தற்கொலை மரணம் ஒன்றுதான் என்று எண்ணியபோது தோல்வியடைந்துபோன நிலையிலும் சிறுபெருமிதத்தால் என் நெஞ்சு விம்மியது.
கழுத்திலிருக்கும் நஞ்சுக்குப்பியை கழற்றிக் கையிலெடுத்தேன். அதை வாயில் வைத்துக்கடிப்பதற்கு முன்பு நிலவறையை விட்டு மேலேறிச்சென்று எனது தாய் மண்ணை கடைசியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வர விரும்பினேன். மெல்ல எழுந்து பதுங்கு குழியிலிருந்து நிலமட்டம் வரை மேலேறி வெளியே வந்து நான் எட்டிப்பார்த்தபோது, சற்றுத்தூரத்தில் எனது விசுவாசமிக்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அத்தனைபேரும் ஆளுக்கொரு வெள்ளைக்கொடியை கையில் உயர்த்திப்பிடித்தபடி வரிசையாய் எங்கோ போய்க்கொண்டிருந்தார்கள்.
-மூதூர் மொகமட் ராபி
(2013.10.12)
(2013.10.12)