Saturday, April 14, 2012

சிறுகதை:


நான் எனும் நீ!


'அழாதீங்கோ பிள்ளையள்!'


அழுதுபுரளும் அக்கா தங்கைகளைத் தானும் அழுது தேற்றிக் கொண்டிருக்கின்றார் முருகேசு மாமா. அம்மாவின் கூடப்பிறந்த தம்பி. அப்பா அகாலமாய்ச் செத்தபிறகு  தான் கலியாணமே செய்யாமல் அக்காவின் பிள்ளைகளாகிய எங்களை பாசத்தைக் கொட்டி பாடுபட்டு வளர்த்து ஆளாக்கியவர் அவர். அவரை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. ஆனால் வேறு என்னதான் செய்வது. சுற்றிக்கிடந்து அழுதுபுரள்வதைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் சுற்றிநின்று இவர்களெல்லாம் கண்டபடி ஏசுவதைத் தாங்கத்தான் முடியுமா?

'தங்கச்சி அழாதனை...எல்லோரும் ஒருக்காத் தம்பியக் கடைசியாப் பார்த்துக் கொள்ளுங்கோ...அவனைக் கொண்டு போவோம்' என்று கூறிவிட்டு உடைந்து போய் ஹோவென அழுதவரை ஓடிவந்து பிடித்துக் கொண்டார்கள். அவரைப் பார்த்து அத்தனை பெண்களும் ஓலமிட,


'டேய் முருகேசு! இதென்னடா நீயும் பொம்பளை கணக்கா அழுது கொண்டிருக்கிறா....இஞ்ச வா சின்னராசு, இவன அங்கால ஒரு ஓரமா இருத்தி விடப்பு...வாங்க நாங்க ஆகவேண்டியதைப் பார்ப்போம்' என்று பக்கத்து வீட்டு மணியண்ணன்தான் நிலைமையைச் சீராக்கினார்.


நாலுபுறமும் பிடித்துப் பெட்டியைக் கவனமாக மூடிவர உலகமே இருளத் தொடங்கியது. முன்னும் பின்னும் உறவகள் சூழ நண்பர்களின் தோளிலேறியதும் உச்ச ஸ்தாயியில் கோரஸாக எழுந்த அழுகை ஓலம், வெளிவாசலில் படபடத்து வெடித்துக் காதுகிழித்த பட்டாசு வெடியோசைக்குள் மெல்லச் சரணடைந்தது. கடைசி ஊர்வலத்தின் காலடியோசைகள் அந்தச் செம்மண் பூமியின் மீது உரசுகையில் காற்றிலே சரசரக்கும் பனையோலைகளை நினைவூட்டின.


பள்ளிப்பருவத்திலிருந்து ஓடிப்பிடித்து விளையாடித்திரிந்த பனந்தோட்டங்கள் இன்னும் பசுமையாக இருந்தது நெஞ்சில். கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் விளையாடிய மேட்டுவட்டைத்திடலுக்கு கிழக்குப்புறமாக இருக்கும் சுடகாட்டுக்குத்தான் இந்தக் கடைசிப் பயணம். முன்னோக்கி நகரும் ஊர்வலத்திலிருந்து பின்னோக்கி ஊர்ந்தன நினைவுப் பாம்புகள்.


கார்த்திகேசு மகேசுவரன் என்பதுதான் எனது முழுப்பெயர். விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர். உறவுகளிலிருந்து நண்பர்கள் வரை 'மகேஸ்' என்றால்தான் தெரியும். வேலை கிடைத்ததிலிருந்து இரண்டு வருடங்கள் மட்டும்தான் ஊரிலிருந்தேன். சண்டையும் தொடங்கி அக்காவின் கலியாணமும் முடிந்த கையோடு அம்மா நோயில் விழுந்து விட்டா. முருகேசு மாமாவிடம் வீடு தோட்டம் எல்லாவற்றையும் பொறுப்புக் கொடுத்துவிட்டு ஐசிஆர்சி கப்பலில் ஏறி இந்தக் கோணேசப் பெருமான் குடியிருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்து ஆறுவரடங்கள் ஓடிவிட்டன. அம்மாவை இங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து வைத்தியம் செய்ய வசதியாக இங்கேயே இடமாற்றம் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அம்மாவை இனிமேல் காப்பாற்றவே முடியாது என்று வைத்தியர்கள் கைவிட்டதும் அவவுடைய திருப்திக்காகத் திருமணமும் செய்து கொண்டேன்.


அவளுக்கும், அதுதான் என் மனைவி செல்லம்மா, எனது ஊர்தான் பிறப்பிடம். தூரத்து உறவும் கூட. இந்த ஊரிலேதான் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எக்கவுண்ட்ஸ் கிளார்க்காக இருக்கிறாள். கலியாணம் நடந்து ஆறுமாதத்திற்குள் அம்மாவும் இறந்துவிட அவவின் விருப்பப்படியே பெருங்கஷ்டப்பட்டு கப்பலிலில் ஊருக்குக் கொண்டு சென்று ஈமச்சடங்குகளை முடித்துத் திரும்பியதெல்லாம் பழைய கதை. அன்றைக்கும் முருகேசு மாமா அழுத அழுகைதான் எல்லோருடைய நினைவிலும் இருக்கிறது. அதற்குப் பிறகு சண்டைகள் ஓய்ந்து நிலைமை சீராகி இப்போது ஒரு ஆறுமாதமாகத்தான் நிலைமை சீராகி ஊருக்கெல்லாம் போய்வர முடிகின்றது. அதன்பிறகு எங்கள் வாழ்க்கை கொஞ்ச நாள் சீராகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்குமே ஒரு திருப்பம் வருமல்லவா அப்படித்தான் வந்தது. இல்லை..இல்லை நானாகத் தேடிக்கொண்டது.


வேறு மாகாணங்களிலிருந்து இந்த ஊருக்கு இடம்மாற்றம் பெற்று வந்தவர்களுக்கு நகரச்சூழலுக்குள் வசதியாக பாடசாலைகள் கிடைப்பது முயல்கொம்புதான். அதற்கெல்லாம் தேவையான மேலிடத்துச் சிபாரிசுகள், செல்வாக்குகள், இதெல்லாம் கிடையாது எனக்கு. ஆனால் இந்த வில்லங்கங்கள் எதுவுமேயில்லாமல் அதிர்ஷ்டவசமாக நகரத்துக்குள்ளேயே தொந்தரவில்லாத பாடசாலையொன்று கிடைத்தது.என்னுடைய குணமறிந்துதான் கடவுளாய்ப் பார்த்து அதைக் கொடுத்திருப்பார் போல. ஏனென்றால் நான் எந்த வம்பு தும்புக்கும் போக விரும்பாதவன். இலேசில் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன். அதற்காக எல்லாவற்றையும் அப்படியே  ஏற்றுக் கொண்டு வாழ்பவனுமல்ல. வாழ்க்கை பற்றி எனக்கென்றும் சில தர்ம நியாயங்கள், அபிப்பிராயங்கள், சமூகக் கோபங்களெல்லாம் சத்தியமாய் உள்ளன. எல்லாவற்றுக்குமே எதிர்விளைவுகள் இருக்குமென உறுதியாக நம்புபவன் நான்.ஒரு பாம்பு வீட்டுக்குள் வந்தால் கூட அது விஷமுள்ளதா இல்லையா என்று பார்த்து விட்டுத்தான் எனது தாக்குதல் இருக்கும். அது விஷமுள்ளதாக இருந்தால் கூட 'அது ஒன்றும் நம்மைக் கொத்துவதற்குத் திட்டமிட்டு வரவில்லையே' என்ற வியாக்கியானமெல்லாம் பேசி அதை எப்படியாவது வந்த வழியே அனுப்பிவிடத்தான் முயற்சிப்பேன்.'இஞ்சப்பா, உந்த விசரக் கதையெல்லாம் விட்டுப் போட்டு அதை அடிச்சுக் கொல்லுங்கோவனப்பா. விட்டா இஞ்ச எங்கயாவது அயலுக்குள்ளதானே சுத்தித் திரியும். கெதியா அடியுங்கோவனப்பா!' எனக் கத்தும் செல்லம்மாவிடம், 'சரி, சுத்தித் தெரிந்தால் வேறு யார்ட்டயாவது வேண்டுவார்தானே? இல்லையெண்டாலும் கீரிப்பூனையள் ஆலாக்கள் தரவழியிட்ட மாட்டுப்படுவார்தானே' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என்னுடைய கையிலிருக்கும் தடியைப் பறித்து படமெடத்து நிற்கும் பாம்பின் தலையில் நச்சென்று ஓரே போடாய்ப் போட்டுக் கொல்லுவாள் செல்லம்மா.  என்மீதுள்ள கோபத்தையும் சேர்த்து சில அநாவசிய அடிகளையும் செத்தபாம்பு வாங்கிக் கட்டும்.  பிறகென்ன, அதன் மரணச்சடங்குகளை மட்டும் நான் பார்த்துக் கொள்வேன். இதுதான் என்னுடைய குணம்.


தானாய்க் கனிந்து கையில் கிடைத்த பக்கத்துப்  பாடசாலையில் நானும் காலடியிலிருக்கும் அலுவலகத்தில் செல்லம்மாவுமாக ஐந்தாறு வருடங்களை ஒருவாறு பிரச்சினையில்லாமல் ஓட்டிவிட்டோம். இன்னும் இரண்டொரு வருடத்தில்  நிலைமை மேலும்  சிறிது சீராகியதும் மாற்றம் எடுத்துக் கொண்டு ஊருக்கே போய்விடலாம் என்ற சிறு நப்பாசை கூட இருந்தது எங்களுக்கு. அந்த நேரத்தில்தான் என் தூரத்து உறவினன் ஒருவன் வந்து நிம்மதியைக் குலைத்தான்.


'அந்தாள்ர விசர்க்கதையள விடுங்கப்பா! கனகாலம் டவுனுக்குள்ள படிப்பிக்கிறவைய தூர இடங்களுக்கு மாத்தி விடப்போறமெண்டு ஒவ்வொரு வருசமுந்தான் சொல்லுவாங்க. இந்த நான் இங்க வந்து பத்துப் பதினைஞ்சு வருசமாகுது...இந்தக் கதை வருசம் தவறாம வரும். ஆனால் லேசில அப்பிடி நடவாது.'

'என்னப்பா இவ்வளவு திட்டமாச் சொல்றீர்?'

'பின்ன...? டவுனுக்குள்ள இருக்கிற ஸ்கூல்கள்ள இருக்கிற டீச்சர்மார்கள்ள அரைவாசிக்கு மேல உங்கட எடுயுக்கேஷன்  டிப்பார்ட்மெண்டில இருக்கிற மேலதிகாரிகள்ற மனுஷிமார்தானப்பா. அவங்கள எப்படியாவது தூர இடங்களுக்குப் படிப்பிக்கப் போடாமல் பார்த்துக் கொள்றதுக்காகத்தானே அந்தக் கதிரைகளிலே குந்திக் கொண்டிருக்கினம்..! அதெல்லாம் நடக்கிற காரியமில்ல.. சும்மா அதை நினைச்சு நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளாதீங்கப்பா!'


'இல்ல செல்லம், அவங்களாத் தூக்கித் தொலைக்குப் போட்டுக் கரைச்சல் தரமுன்னம் நானே கொஞ்சம் தூரமுள்ளதாக ஒரு வசதியான ஸ்கூலுக்கு மாற்றம் கெட்டு எடுத்திட்டால் நல்லதப்பா...! பிறகு அவையள் கண்டுபிடிச்சி அள்ளித் தூரத் தொலைய வீசேக்க தலையைச் சொறிஞ்சுகொண்டு நிக்கேலாது கண்டியே?'


'சரி, சரி. நீங்கள் சரியான  முன்ஜாக்கிரதை முத்தண்ணாதானே..? என்னென்டாலும் செய்யுங்கோ...ஆனால் எனக்கெண்டா நீங்க சும்மா கிடக்கிற சங்கை...' என்று தொடங்கி ஏதோ முனகிவிட்டுத் திரும்பித் தூங்கி விட்டாள்.


இது நடந்து இரண்டாவது வாரம் கழிந்ததும் நான் விண்ணப்பித்தபடியே இடமாற்றம் கிடைத்தது. புதிய பாடசாலை நகருக்கு வெளியே ஐந்து கிலோமீற்றர் தொலைவிலே பிரதான நெடுஞ்சாலையில் இருந்தது. நானும் புதிய பாடசாலைக்கு வந்து சேர ஆசிரியர் இடமாற்றத் திட்டமும் அமுலுக்கு வந்திருந்தது. புதிதாகக் கடமையேற்றிருந்த கண்டிப்பான  மேலதிகாரி ஒருவர் அதிரடி நடவடிக்கை எடுத்து, வேறு பாடசாலையென்றால் என்னவென்றே அறியாமல் கிடந்த பழம் பெருச்சாளிகளையெல்லாம் ஓடஓட விரட்டிக் கொண்டிருந்தார்.


'நல்லவேளை தப்பித்தோம்!' என்ற புளகாங்கிதமும் செல்லம்மாவின் கணிப்பு முதன்முதலாகப் பொய்யாய்ப் போன திருப்தியும் ஒன்றுசேர 'இப்ப என்னப்பா சொல்லுறீர்..எப்படி ஐயாவின் கணிப்பு?' என்று கொக்கரித்தேன். 'சரி, சரி ஓவராய்த் துள்ளாதீங்க! அதெல்லாம் எட்டு வருசத்துக்கு மேல் ஒரே பாடசாலையில இருந்தவைக்குத்தான் தூர இடங்களுக்கு டரான்ஸ்பர் தெரியுமா? நீங்க அஞ்சு வருசம்தானே இருந்த  நீங்க! அது தெரியாமல் அவசரப்பட்டுட்டீங்களப்பா! அதோட...' என்று இழுத்தாள்.


'அதோட என்னப்பா?'


'இல்ல இன்னம் கொஞ்சம் காலம் பொறுமையாக இருந்திருந்தா இப்ப நம்ம ஊர் நிலைமைகள் க்ளியராகிக் கொண்டு இருக்கிறதால இருந்த ஸ்கூல்ல இருந்தே நேரடியாக மாற்றம் எடுத்திருக்காலாம். சரி, விதி யாரை விட்டது. இப்ப போன இடத்தில என்ன தொல்லைகள் காத்திருக்குதோ?' என்றாள், சலிப்புடன்.


அவள் கூறிய தொல்லைகள் வந்த சேர அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. ஒருமாத காலத்துக்குள் எங்கள் பழைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றுவிட அவரது இடத்திற்கு புதியவர் ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டார். 'எல்லாமே ஒரளவு பழக்கமாகிக் கொண்டிருக்கையில் இப்படியாகிவிட்டதே' என்று சங்கடம் உண்டானது எனக்கு. இனி புதியவரோடு முதலில் இருந்து பழகியாக வேண்டுமே?


புதிய அதிபர் பதவியேற்ற அன்றே ஆள் கொஞ்சம் வில்லங்கமானவர்தான் என்பது விளங்கி விட்டது எனக்கு. ஆசிரியர் கூட்டத்தில் அவர் ஆற்றிய முதலாவது உரையிலிருந்த அகந்தையும் பிறரைத் துச்சமாக நினைக்கும் குணமும் என்னை வேதனைப் படுத்தியதுடன் 'இருந்து இருந்து கடைசியில் தப்பான இடத்திற்குத்தான் வந்து விட்டோமோ?' என்ற சஞ்சலத்தையும் உண்டு பண்ணியது.


அன்று பாடசாலை முடிவடைந்ததும் சோர்வாக வீடு வந்து சேர்ந்தேன். 


மாலையில் செல்லம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாக, "இஞ்சருங்கோப்பா, கேட்டீங்களே...உங்களுக்குத்தான்  ஒரு நியூஸ்!' என்று உற்சாகமாய் ஆரம்பித்தவள் எனது முகத்தைப் பார்த்துவிட்டு, 'என்னப்பா ஒரு மாதிரி இருக்கிறீங்கள்..சுகமில்லையா? சாப்பிட்டீங்களா?' என்றாள், பதறிப்போய்.
'சேச்சே! அதெல்லலாம் ஒண்டுமில்ல. இந்த புதுசா வந்த ஆள்தான். கதை பேச்சு எல்லாம் அவ்வளவு சரியில்லை. ஆள் கொஞ்சம் சண்டித்தனம் போலக் கிடக்கப்பா!' என்றேன் பரிதாபமாக.


'ஆர்...? உங்கட புது அதிபரே? அந்த நியூஸ்தானப்பா இன்றைக்கு எங்கட ஒபிஸ் முழுக்கக் கதை. ஆள் கரைச்சல் பிடிச்சவர்தானாம். அவர் உங்கட ஸ்கூலுக்கு வர முதல் இருந்த இடத்தில பண்ணின அழிச்சாட்டியம் தாங்கேலாமத்தான் அந்த ஊர்ச்சனமெல்லாம் ஒண்டு கூடி அடிக்காத குறையாகத் துரத்தி விட்டவையாம். இப்ப யார் யார்டவோ காலைக் கையப் பிடிச்சுத்தான் உங்கட ஸ்கூலுக்கு வந்திருக்கிறாராம்..என்று கதைச்சவங்கள்!'


'இதென்ன செல்லம், நீ வேற பயப்படுத்திறீர். ஏற்கனவே அது விசயமாத்தான் நானே யோசிச்சுக் கொண்டிருக்கிறன்.'


'அட! அவர் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் உங்களுக்கென்னவாம்...? நீங்களென்ன உந்த தமிழ்ப்படத்து ஹீரோ கணக்காத்  தட்டிக்கேக்கவா போறீங்க..? வீட்டுக்குள்ள வந்து, 'என்னை அடி' எண்டு நிக்கிற பாம்பையே அடிக்காமல் பார்த்துக் கொண்டு சும்மா நிக்கிற ஆள் நீங்க. நீங்களும் உங்க வேலையும் எண்டு பேசாம இருக்கிறதுக்குச் சொல்லியா தரவேணும் உங்களுக்கு?' அவளது நையாண்டி புரிந்தாலும் அந்தப்பேச்சு சிறிது ஆறுதலைத் தந்தது.

***

புதிய அதிபரின் நிருவாகத்தின் கீழ் எப்படியோ ஓரிரு மாதங்கள் கடந்திருந்தன. அவரது தான்தோன்றித்தனமான போக்குகளாலும் முடிவுகளாலும் ஆசிரியர்கள் பலருடன் சிறுசிறு உரசல்கள் எழுந்தன. பலர் விட்டுக் கொடுத்தும் சிலர் தட்டிக்கேட்கவும் செய்யலானார்கள். குறிப்பாக பாடசாலை நிதிவிடயங்களில் பல சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுந்தன. அதிபர் தனது நலன்களுக்கு மட்டுமே ஒத்தாசையாக இருக்கும் ஆசிரியர்கள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு நிதி மோசடிகளிலே இறங்கியிருப்பதாக உள்ளுரிலே பரவலாக கதை அடிபடலாயிற்று. இதனால் நிலைமை சற்றுத் தீவிரமாகவும் ஆரம்பித்திருந்தது.இந்த விவகாரங்களில் எல்லாம் பட்டுக் கொள்ளாமல் தாமரை இலைத் தண்ணீர்த்துளியாக நானுன்டு எனது வேலைகளுண்டு என்று இருந்து வந்ததால் அதிபரோடு எதுவித உரசல்களுமில்லாமல் தப்பித்துக் கொண்டிருந்தேன். இதனால்  'கழுவுற மீன்ல நழுவுற மீன்' என்று எனக்கு ஒரு பட்டப் பெயரும் சக ஆசிரியர்களுக்குள்ளே புழங்கியது.


இருந்தாலும் அதிபரின் நாகரீகமற்ற அணுகுமுறைகள், கையாடல்கள், 'அரசியல்வாதிகளின் செல்வாக்கினால் எவரையும் எதையும் சமாளித்து விடலாம்' என்ற அசட்டுத்துணிவு ஆகிய அவரது குணங்கள் மீது காட்டமான விமர்சனமிருக்கத்தான் செய்தது. ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் வெறுத்தபடி இயங்கியதுதான் இத்தனை காலமும் அந்தப் பாடசாலையில் எதுவிதப் பிரச்சினையுமின்றித் தப்பிப் பிழைத்து வந்ததன் இரகசியச் சூத்திரமாக இருந்தது.


ஆனாலும் எனக்குரிய வில்லங்கம் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொருட்காட்சிக் கொண்டாட்டத்தின் வடிவிலே காத்திருந்தது. மிகவும் கோலாகலமாக நடந்தேறிய அந்தக் கண்காட்சியின் நிகழ்வுகளை டிஜிட்டல் காமிராவில் படமெடுத்து கணனியில் ஆவணப்படுத்துகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். எனது உயர்தர வகுப்பு மாணவர்களை வைத்து திறமையாகச் செய்து முடிந்திருந்தேன். குறிப்பாக அதிபரையும் அவரது துதிபாடிகளையும் மிகவும் அழகாக எடுத்திருப்பதாக அதிருப்திக் குழுவினரின் கேலிப்பேச்சுகள் அதற்குரிய பக்கவிளைவாகக் கிடைத்தது எனக்கு.


***


ரு ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிலே ஓய்வாகப் படுத்திருந்தேன்.


தனது அம்மாவுக்குச் சுகமில்லை என்று முதல்நாள் மாலை பஸ்ஸில் ஊருக்குச் சென்றிருந்தாள்,  செல்லம்மா.  அவள் இன்று மாலைதான் திரும்புவதாகச் சொல்லியிருந்தாள். நேரத்துக்கு வந்து விடுவாளா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே செல்போன் சிணுங்கியது. மறுமுனையில் அதிபரின் குரல். பாடசாலைத் தொலைபேசியில் இருந்து  தன்னை உடனே வந்து சந்திக்குமாறு பதற்றமான குரலில் அழைத்தார். உடனடியாக வீட்டைப் பூட்டிக் கொண்டு பாடசாலையை நோக்கி விரைந்தேன்.

ஒரு விடுமுறை நாளுக்கேயுரிய வெறிச்சோடலுடன் இருந்தது பாடசாலை.
சிற்றூழியன் பார்த்திபன் மட்டும் வெளியில் நின்றிருக்க அதிபரின் அறை திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தேன். அதிபர் தனியாகத்தானிருந்தார்.

'வணக்கம் சேர்!'

'வாங்க, மகேஸ்வரன்..இப்படி வந்து இருங்க!'

நான் இருக்கவில்லை, ' என்ன விஷயம் சேர், அவசரம் என்றீங்க!'

'முதல்ல இருங்களேன்.. சொல்றேன்' என்றுவிட்டு சிறிது நேரம் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு ஏதோ முடிவுக்கு வந்தவராக, 'மகேஸ்வரன், உங்களுக்கு இங்கருந்து முழுசாக ஊர்போய்ச்சேர விருப்பமில்லையா?' என்று கேட்டார். முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு.

எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. 'எனக்கு விளங்கேயில்ல சேர், நீங்க சொல்றது!'

'இஞ்ச பாருங்க! மகேஸ்வரன் சும்மா ஒண்ணும் தெரியாத பபா மாதிரி நடிக்க வேணாம் சரியா? நீங்க இதுவரைக்கும் எனக்குக் கரைச்சல் தராத ஆள்தான். ஆனா இப்ப நடந்திருக்கிற விஷயம் அப்படியில்ல. இங்க கொஞ்சப் பேர் எனக்கு எதிராக சும்மா அதை இதையெல்லாம் சொல்லிக் கொண்டு அலையிறாங்கள் தெரியுமா இல்லையா?


'அது ஒரளவு தெரியும்தான்! ஆனா இப்ப என்ன பிரச்சினை அதை முதல்ல..'


'நம்ம ஸ்கூல் கொம்ப்யூட்டர்ல இருந்த ஒரு முக்கியமான' படம் ஒண்டு எனக்கு எதிராக ஓடித்திரியிற ஆக்கள்ட கைக்குப்போய்ச் சேர்ந்திருக்கு... அது உங்களுக்குத் தெரியாம போயிருக்க இயலாது. ஏனென்டா நடந்த பொருட்காட்சி விழாவுல போட்டோ எடுக்கிறதுக்கெல்லாம் நீங்கதானே பொறுப்பாயிருந்தீங்க!


'பொருட்காட்சியில் எடுத்த போட்டோக்களில என்ன பிரச்சினை இருக்கப் போகுது சேர், அதில வெறும் ஆட்களும் பொருட்களும்தானெ இருக்கு..?' என்றேன், புரியாமல்.


'ஹலோ! என்ன ஜோக்கடிக்கிறதா நினைப்பா? அது..அது நான் சம்பந்தப்பட்ட படம். உங்களைப் பொருட்காட்சியில போட்டோ எடுத்துத் தரச் சொன்னால் அந்த நேரம் ஸ்கூல் கெண்டீன், கிச்சன் ஸ்டோருக்குள்ளயெல்லாம் ஏன்டாப்பா கெமராவைத் தூக்கிட்டு  அலைஞ்சனீங்கள்? ஆங்!' என்று அவர் சூடாகத் தொடங்கிய போது அவரது செல்போன் ஒலித்தது. உடனே எழுந்து அறையை விட்டு வெளியேறி மைதானத்தினுள் நடந்தபடி பேசிக் கொண்டிருந்தார்.


எனக்குத் தலை வலித்தது. 'இது என்ன புது வம்பு?' என்று நான் யோசித்தக் கொண்டிருந்த போது அதுவரையில்  வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபன் சுற்றிவரப் பார்த்துவிட்டு மெல்ல என்னருகே வந்தான்.


'என்னடா பார்த்தீ! இதெல்லாம்?'


'ஸேர், நான் சொன்னதெண்டு சொல்லிராதீங்க! இவர் ஸ்கூல் கிச்சன் ஸ்டோர்ல இருந்து மதிய உணவு அரிசி மூடைகளை அவர்ர வேனில ஏற்றிக் கொண்டு நின்றதை நீங்க அன்றைக்கு வச்சிருந்த கெமராவில போட்டோ எடுத்திட்டீங்களாம். பொருட்காட்சி போட்டோவோட சேர்ந்து கொம்ப்யூட்டர்ல இருந்த அந்த போட்டோவையும் கொண்டு போயிட்டாங்களாம். அதுதான் அப்படித் துள்ளுறார். கவனம் ஸேர்!' என்று கிசுகிசுத்து விலகினான்.இப்போதுதான் புரிந்தது எனக்கு. அன்றைக்கு நிகழ்ச்சிகள் முடிவடைந்து எல்லோரும் கலைந்து போன பின்பு அவரது வேன கிச்சன் ஸ்டோர் பக்கமாக நின்றது இதற்காகத்தானா? அதைப் படம் பிடித்தது யார்? ஏஎல் பையன்கள்தான் கெமராவை சார்ஜ் பண்ணவென்று இடையில் எடுத்துப் போனான்கள். ஒருவேளை...


'என்ன மகேஸ்வரன் ஸேர். இப்ப என்ன செய்யப்போறீங்க..? இங்க இருந்த படம் எப்படியோ அவங்கள்ற கைக்குப் போயிட்டுது. இனி அது எத்தனையோ கொப்பி போட்டிருப்பான்கள். இனி அதை வாங்கிப் பிரயோசனமில்ல.. ஆனா நீங்க நினைச்சா என்னைக் காப்பாத்தலாம்..' என்றபடி மீண்டும் உள்ளே வந்தார், அதிபர்


'சேர், அந்தக் கோணேசப் பெருமான் மேல சத்தியமாக, நான் எந்த வித்தியாசமான போட்டோவையும் எடுக்கவேயில்ல! இது எனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரச்சினை. நீங்க இப்படி மிரட்டுறது நியாயமே இல்ல! தெரியுமா? என்று நான் சூடானேன். கோபத்தில் என் விரல்கள் நடுங்கின.


'சரி, சரி இப்ப ஏன் வீணாக டென்ஷனாகிறீங்க?' என்று என்னைச் சமாதானப் படுத்துவது போல நெருங்கி வந்து தோளைத் தொட்டு, 'வாங்க மகேஸ்வரன் அப்படியே க்ரவுண்ட் வரைக்கும் போய் விளக்கமாய்ப் பேசலாம். பாரத்திபன்! ஒபிஸைப் பார்த்துக் கொள்! சேரோட ஒருக்கா கதைச்சிட்டு வாறேன்' என்றவாறு சற்றுத் தூரத்திலிருந்த நெருப்புவாகை மரத்தின் கீழே அழைத்துச் சென்றார்.


நான் திரும்பிப் பார்த்தபோது வாசலில் நின்றிருந்த பார்த்திபன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

***

னக்கு ஒரே யோசனையாக இருந்தது.

செல்லம்மா வேறு அம்மாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் இன்னும் இரண்டுநாள் கழித்து வருவதாக போனில் செய்தி அனுப்பியிருந்தாள். அவள் கூட இருந்தாலாவது சின்ன ஆறுதலாக இருந்திருக்கும்.


நேற்றுக் காலையில் அதிபரோடு பேசிய விடயம் தலையிடி தந்து கொண்டிருந்தது. நெருப்புவாகை மரத்தின் கீழ் அழைத்துச் சென்று அவர் கூறிய வார்த்தைகள் நெஞ்சிலே அமிலமாய் அரித்துக் கொண்டிருந்தது.


'மகேஸ்வரன், நீங்க ஒரு பட்டதாரி ஆசிரியர். புத்திசாலியும் கூட. இந்தக் காலத்துல இருக்கிற இடத்துக்கு ஏற்றமாதிரி நடந்து கொள்றதுதான் நல்லது. சரி, நான் உங்கள நம்புறன்...அந்தப் போட்டோவை யார் எடுத்தது கொடுத்தது எல்லாம் எனக்குத் தேவையில்ல. யாரைப் பிடிக்கலாமோ என்னவெல்லாம் செய்வீங்களோ தெரியாது. அந்தப் போட்டோவால எந்தப் பிரச்சினையும் ஏற்படாம நிப்பாட்டுறது உங்கட பொறுப்பு.  என்ன சொல்றீங்க?'


' நான் ஏன் சேர் இதுக்குப் பொறுப்ப நிக்க வேணும்? சம்பந்தமே இல்லாம என்னை ஏன் இதில மாட்டி விடுறீங்க..?'


'அப்படியா? சொல்றேன்' என்றுவிட்டு என்னைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தார்.


'போன ஏப்ரல் மாதம் ஏஎல் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பேராதனைப் பூங்காவுக்கு டுவர் ஒன்று போய் வந்தீங்களல்லவா? அன்டைக்கு நீங்களும் பிள்ளைகளும் வந்த பஸ் இடையில பழுதாகி இங்க இரவு ரெண்டு மணிக்கு வந்தது..அந்த நடு இரவுல பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்ப ஏலாம ஸ்கூல்லயே தங்க வச்சீங்களே நினைவிருக்கா?'


'இருக்கு...ஆனா அது நான் உங்களுக்கிட்ட போன் பண்ணிக் கேட்டுட்டுத்தானே...அதுக்கென்ன இப்போ?'


'அதுக்கென்னவா...? அன்டைக்கு பிள்ளைகளோட நீங்களும்தானே தங்கினீங்க.. அன்றிரவு இருட்டில யாரோ ஒருவன் தப்பா நடக்க ட்ரை பண்ணினான் என்று ஒரு ஏஎல் பெட்டை பொலீஸ் வரைக்கும் போனது தெரியும்தானே? அவன் யாரெண்டு தெரியாம இன்னும் அந்தக் கேஸ் பெண்டிங்ல இருக்கு ஞாபகமிருக்கா?'


'ஓம், அந்தக் கேஸ் இன்னும் முடியல்லையா..சேர்?'


'அதை முடிச்சு வைக்கணுமா?'


'என்ன.. சொல்றீங்க சேர்?'


'இல்ல இருட்டில தப்பா நடந்த அந்த ஆள் நீங்கதானென்டு பொலீஸ்ல கேஸை முடிச்சு வைக்கணுமா மகேஸ்வரன்?'


எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது! அதற்குப் பின்பு அவர் கூறிய எதுவுமே என் காதிலே ஏறவில்லை. எப்போது விடைபெற்று எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.


 'கடவுளே எத்தனை கௌரவமான குடும்பம் என்னுடையது. கார்த்திகேசு மாஸ்டர் என்றால் ஊரே கையெடுத்துக் கும்பிடும் கண்ணியவானின் குடும்பத்திலே இப்படி ஒரு கேவலமான பழிவிழுந்து போனால் நான் என்ன செய்வேன்? இது பொய்யென்று ஓடியாடி நிரூபிக்கலாம் என்று வைத்தாலும் 'ஒருவேளை இவன் செய்திருப்பானோ?' என்று ஊரில் ஒருவன் நினைச்சுக் கேட்டுவிட்டான் என்றால் அதை எப்படி என் குடும்பம் தாங்கும்? ஐயோ! இப்ப நான் எவனிட்டப் போய் அந்தப் போட்டோவைப் பற்றிக் கேட்கிறது?'


எனக்குத் தலையெல்லாம் விறைக்கத் தொடங்கியது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தேன். எங்காவது வெளியே போனால் யாரிடமாவது மனம் விட்டுப் பேசினால் நல்லது.... இருக்கும் மண்டைச்சூடும் குறையும்  என்று தோன்றியது. முகத்தைக் கழுவலாம் என்று குளியலறைக்குச் சென்றேன். உச்சந்தலைக் கொதிப்பு கூடியது. சூடுபோகக் குளித்தாலென்ன என்று தோன்றவே ஷவர் குழாயைத் திறந்தேன். அதுவும் சூடாக வரவே என் மண்டைச் சூட்டுக்கு இது சரிவராது குளுகுளுவென்றிருக்கும் பின்புறத் தோட்டத்துக் கிணற்றுத் தண்ணீர்தான் சரி என்று கயிற்று வாளியை எடுத்துக்கொண்டு அங்கு போனேன்.அது ஒரு பழைய கிணறு. யாருமே பயன்படுத்துவதில்லை என்பதால் கிணற்றடி முழுவதும் காட்டுச்செடிகள் பற்றிக் கிடந்தது. கயிற்று வாளியைக் கப்பியில் செருகி உள்ளே இறக்கிய போது இலேசாக மயக்கம் வருவது போல இருந்தது. தலை உச்சியில் தீப்பிடித்தது போலத் தகித்தது. எப்படியாவது வாளியை இறக்கித் தண்ணீரை அள்ளிக் கொதிக்கும் மண்டையில் ஊற்றிவிட கைகள் பரபரத்தன. விரல்கள் நடுங்கின.
இதோ..இதோ தண்ணீரை அள்ளியாயிற்று. தண்ணீருடன் வாளியை மேலே இழுக்கும் போது.. அடச்சே! கிணற்றின் உள்சுவரில் பரட்டையாய் வளர்ந்திருந்த ஆலங்கொடியில் மாட்டிக் கொண்டது வாளி! இப்போதுதானா இது நடக்க வேணும்..? தலை கொதித்து பிளந்துவிடும் போலிருக்க கொஞ்சம் கையால் எட்டி வாளியை எடுக்கலாம் என்று குனிந்ததுதான் தாமதம். தலைசுற்றிக் கொண்டு வந்து..ஆ..ஐயோ என்ன நடக்கிறது? காற்றில் மிதப்பது போல...தலைகீழாக... நான் எங்கே போகிறேன்...?


ஆஹா! என்ன சுகம்?


என் தலையிலே டன் கணக்கிலே பனிக்கட்டிகளைக் கொட்டியது யார்? எவ்வளவு இதமாக இருக்கிறது.. தலையெல்லாம் குளிர்ந்து.. ஓ! இதென்ன வானம் ஒரு வட்டத் துண்டாகத் தெரிகின்றது..? ஆலங்கொடியும் அதிலே சிக்கிய வாளியும் தலைக்கு மேலே உயரத்தில் தெரிகின்றதே...ஆ! அப்படியானால்.. நான் இருப்பது எங்கே..? கடவுளே! கிணற்றுக்குள்ளேயா? ஆ! கை கால்களெல்லாம் விறைக்கின்றதே...ஆங்..ஆ..க்..ஹ்! மூச்சு..மூச்சு..ஆங்க்! ஆ!'

***


மோட்டுவட்டைத் திடலுக்கு வலப்புறமிருக்கும் சுடுகாட்டில் இறுதியாகச் செய்துமுடிக்க வேண்டிய அத்தனை சடங்குகளும் ஒன்றுவிடாமல் நடந்தேறின. முருகேசு மாமாவைக் கைத்தாங்கலாகச் சிலபேர் கொண்டு வந்தார்கள். அழுது அழுது அவரால் நிற்கக்கூட முடியவில்லை. ஈரவேட்டியுடன் ஓட்டைப் பானைசுமந்து சுற்றிவந்தவரிடம் கையிலே தீவட்டியைக் கொடுத்தார்கள். அதைக் கையில் எடுத்தவர் உடைந்துபோய், 'ஐயோ! மங்களமக்கா! என்ட கையில தூக்கி வளர்த்த உன்ட மகனுக்கு என்ட கையாலயே கொள்ளி வைக்கிறனே! ஐயோ! பாரக்கா இந்த அநியாயத்த..!' என்று பெருங்குரலெடுத்துக் கூவினார்.திடீரென அழுகையை நிறுத்திவிட்டு வெறிபிடித்தவர்போல கட்டைகளால் பாரமேற்றி உடலை மூடிவைத்திருந்த சாணி வரட்டிகளையெல்லாம் சடுதியாய்க் கலைத்து,   'டேய் மகேசு! என்ட தங்கமே மகேசு!' என்று என் முகத்தின் மீது விழுந்து கதறியழுதார், என்னை வளர்த்த பாசமுள்ள முருகேசு மாமா.சிறிது நேரத்தின் பின்பு எல்லோரும் அங்கிருந்த அகன்றுவிட, முருகேசு மாமா வைத்த தீயிலே தன்னந் தனியாக நான் எரிந்து கொண்டிருந்தேன்.

***


-மூதூர் மொகமட் ராபி

(நன்றி:  ஜீவநதி  சித்திரை 2012)

வதை ஒரு கதை!
பகதூரின் வேட்டை நாயும்

நமது முற்போக்குப் பெண்களும்!


மது நடுத்தர வர்க்கக் குடும்பத்துப் பெண்கள் பலரிடம் எப்போது பார்த்தாலும் தங்களிடமிருக்கும் நகைகள் ஆடைகள் மற்றும் ஆடம்பர வீட்டுப் பொருட்களைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் போக்கை அல்லது தங்களிடம் இல்லாத ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போக்கை அவதானிக்கலாம்.


இத்தகையோரிடம், 'சரி, வசதியெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஒரு மனிதன் என்ற வகையில் நீங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் சுதந்திரமாக நடாத்தப்படுகின்றீர்களா?' என்று கேட்டுப் பாருங்கள்.


ஏதோ கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டு விட்டதுபோல நடந்து கொள்வார்கள். எப்போது பார்த்தாலும் மற்றவர்களின் ஆடம்பரங்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு தங்களின் வாழ்க்கையின் உண்மை நிலையை அறியாதவர்களாக செக்குமாடு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள், குதிரை தன் முகத்தின் முன்னே தடியில் கட்டிவைத்திருக்கும் கரட் கிழங்கை துரத்தியோடுவது போல ஒன்று கிடைத்தால் மற்றொன்றுக்காக வாழ்க்கை முழுவதும் ஏங்கிக்கொண்டே செத்து மடிவார்கள்.


இத்தகைய மத்தியதரக் குடும்பத்துப் பெண்களில்  பலர் தமது பொழுதுபோக்குகளில் ஒன்றாக வாசிக்கும் பழக்கத்தை வைத்திருப்பதுண்டு. அவ்வாறு வாசிப்பவர்களிலும் கிடைப்பதையெல்லாம்  வாசிப்பவர்களும் இருக்கிறார்கள். மாறாக, தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களும் இருக்கின்றார்கள். பெண்களிலே பொதுவாக அதிகமானோர் கவிதை மற்றும் புனை கதைகளிலே ஈடுபாடுள்ளவர்களாக இருப்பதுண்டு.  இவர்களிலே சிலர் வாசிப்பதோடு மட்டும் நிற்காமல் ஆக்கங்கள் பற்றிய தமது கருத்துக்களை ஊடகங்களுக்கோ அல்லது ஆக்கியவர்களுக்கோ தெரிவிக்கும் பழக்கமுள்ளவர்களாகவும் இருப்பர். இன்னும் சிலர் சுயமாக ஆக்கங்களை எழுதக்கூடிய ஆற்றலையும் கொண்டிருக்கின்றார்கள்.


தமது வாசிக்கும் பழக்கத்தால் ஏனைய பெண்களோடு ஒப்பிடும்போது இவர்கள் பல விடயங்களை ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பார்கள். பொதுவாக எந்தவொரு வியடமும் இவர்களுக்குப் புதிதான ஒன்றாக இருப்பதில்லை எனலாம். இந்தத் தகுதியே இவர்களை சமூகத்தில் உள்ள மூளைசாலிகளுடன் விரும்பியோ தற்செயலாகவோ இணைக்கின்றது எனலாம்.


இதன் விளைவாக பல முற்போக்கான கருத்துக்களைப் பற்றியும் அறியும் வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைக்கின்றது. இந்தக் கருத்துக்களின் விளைவாக ஒருநிலையில் தமது வாழ்வியல் நிலையை சுய விசாரணைக்கு உள்ளாக்கும் கட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பெண்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது. இதனால் அதுவரை ஒரு பெண் என்ற நிலைப்பாட்டிலிருந்து தான் பார்த்த வாழ்வியல் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாகின்றார்கள்.பொதுவாக நமது சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் ஆளுமையையும் தீர்மானிக்கும் பல்வேறுபட்ட காரணிகளில் அவன் சார்ந்துள்ள மத நம்பிக்கைகளினதும்  சம்பிரதாயங்களினதும் பங்கு அளப்பரியது. இதனால் முற்போக்கான கருத்துகளை  உள்வாங்கும்போது அதுவரையிலே குடும்ப ரீதியாகவும் சமுதாயப்பிரிவுகள் ரீதியாகவும் சிறுவயது முதற்கொண்டு ஆழப்பதிக்கப்பட்ட பல அறிவியல் தர்க்க ரீதியில் ஆதாரமற்றதும் வெறும் நம்பிக்கை சார்ந்ததுமான கருத்தியல்களோடு முரண்பட வேண்டிய தேவையேற்படுகின்றது. இன்னும் கூறினால் மேற்கூறிய ஆதாரமற்ற கருத்தியல்களைத் தாண்டித்தான்தான் ஒருவர் தனது வாழ்வு பற்றி புதிய தேடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.


இது ஒரு ஆணுக்கே பலத்த சவாலான ஒன்றாக இருக்கும்போது ஒரு பெண்ணின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்வது அத்தனை சிரமமானதல்ல. ஒரு ஆண் தனது சமூகத்தின் தடைகளைத்தாண்டி முற்போக்குக் கொள்கையுடையவனாகத் தன்னை வெளிக்காட்டும்போது அவன் சார்ந்த சமூகத்தின் விமர்சனம் அவனது கருத்தின் மீதுதான் முதலில் வைக்கப்படும். ஆனால், ஒரு பெண் அவ்வாறு துணிகையில் இனங்காணப்பட்டால் வைக்கப்படும் முதல் விமர்சனம் அவளது நடத்தை மீதாகத்தான் இருக்கும். இது நமது பெண்களைப் பொறுத்தவரை எத்தனை அபாயமானது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.


இதனால்தான் நமது சமூகத்திலே வாழும் சிந்தனைத் திறனுள்ள பெண்கள் கூட தமது எண்ணங்களை வெளிப்படுத்த  முன்வருவதில்லை. மீறி வெளிப்படுத்தினாலும் கூட சில வரம்புகளைத் தாண்டுவதுமில்லை.
ஆனால் ஒரு பெண் தனது வாழ்வில் ஒரு முறையாவது தான் சார்ந்திருக்கும் நம்பிக்கை சார்ந்த கருத்தியல்களினால் திணிக்கப்பட்ட விடயங்களுக்கு சிறு எதிர்ப்பையாவது காட்டி இருப்பாள் என்பதுதான் இதிலுள்ள முரண்நகை. குறைந்தபட்சம் பாடசாலைப் பருவத்தில் சக வயது மாணவர்களின் கேலிப்பேச்சுகளுக்கோ ஒதுக்கல்களுக்கோ ஆளாகும்போது அதிலுள்ள ஆண் - பெண் சமத்துவமின்மையை எதிர்த்து நிச்சயம் கேள்வி எழுப்பியிருப்பாள்.
மாணவப் பருவத்தில் பாடசாலையிலும் வீட்டிலும் தீரமாக எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு பெண் பின்பு மொத்த சமூக அமைப்பும் தன்னையும் தன்போன்ற பெண்களையும் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்துவதை அறிந்து வேறுவழியின்றி படிப்படியாக எதிர்ப்பை கைவிட்டு சரணாகதி அடைகின்றாள்.பின்பு திருமணமாகும் வரை, தான் குடும்பத்தினருக்கு ஒரு பெரும் சுமை போன்று மறைமுகமாகவேனும் உணர்த்தப்படுகின்றாள். திருமணமானதும் கணவன் மற்றும் குழந்தைகளின் பணிவிடை பராமரிப்பு என்ற சிறுவட்டத்துக்குள் சிக்கிச் சுழன்று (சிக்க வைக்கப்பட்டு)  படிப்பதற்கோ அறிவுத்தேடலுக்கான வாசித்தலுக்கோ வழியின்றி வேலைகளுக்குள்ளேயே தன்னைத் தொலைத்து விடுகின்றாள்.


வேலைக்குச் செல்லும் பெண்களை எடுத்துக் கொண்டால் ஒரு விதத்தில் அவர்களுக்கு பொருளாதார பலம் கிடைத்தாலும் அவர்களை விடுவிப்பதாகக் கூறமுடியாது. வேலைக்குச் சென்று உழைத்துச் சம்பாதிக்கும் பெண் என்பதற்காக வீட்டு வேலைகளிலிருந்து அவளுக்கு விடுதலை கிடைப்பதில்லை. மாறாக இரண்டையும் செய்ய வேண்டிய இரட்டைச் சுமையாகி வேறு வடிவத்தில் அவளை விலங்கிடுகின்றது என்றேதான் சொல்ல வேண்டும்.


ஆக மொத்தம் இந்த படித்த மத்தியதரக் குடும்பப் பெண்கள் வாசிப்பறிவால் கிடைக்கும் முற்போக்குக் கருத்துகளின் முன்னோக்கிய உந்துதலுக்கும்  பாரம்பரிய மத சம்பிரதாயங்களின் பின்னோக்கிய இழுப்புக்கும் இடையிலான விளையுள் திசையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம்."சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பவர்களைத் தவிர மற்றவர்கள் கீழேயுள்ள கதையை வாசிக்க வேண்டாம்!  வாசிக்கவே வேண்டாம்!!
சிறுவயதிலே தமிழ் பாடப்புத்தகம் ஒன்றிலே நான் படித்த கதை ஒன்றிருக்கின்றது. பகதூர் எனும் ஒரு பணக்கார வேட்டைக்காரர் காட்டிற்குச் சென்று தனது பங்களாவிலே தங்கியிருக்கின்றார். ஒரு பகல் பொழுதில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது அவரது வேட்டை நாய் தனியாகக் காட்டுக்குள் சென்று விடுகின்றது. அந்த அடர்ந்த கானகத்தின் நடுவிலே காட்டு நாய் ஒன்றைக் கண்டு விடுகின்றது.  இருவரும் அறிமுகமாகி உரையாடத் தொடங்குகின்றனர்.


இருவரும் தத்தமது வாழ்வைப் பற்றி பேசிக்கொள்கின்றனர். வேட்டை நாய் தனது எஜமானர் பகதூரின் வீட்டிலே கிடைக்கும் சிறந்த உணவு மற்றும் வசதியான தங்குமிடம் உட்பட அனைத்து சொகுசுகளையும் ஒன்றும் விடாமல் காட்டு நாய்க்கு எடுத்துக் கூறுகின்றது.


வேட்டைநாய் சொல்வதையெல்லாம் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த காட்டு நாய்க்கோ ஆச்சரியம் தாளவில்லை. காட்டிலே வெயிலிலும் மழையிலும் அலைந்து உணவுக்கும் நீருக்கும் போராடி வாழும் தனது வாழ்வை நினைத்து கவலையுறுகின்றது.  தானும் எஜமான் பகதூரின் வீட்டிலே வந்திருக்க முடியுமா? என வினவுகின்றது. அதற்கு உதவுவதாக வேட்டை நாயும் ஒப்புக்கொள்ளவே இருவரும்  சேர்ந்து பகதூரின் காட்டு பங்களாவை நோக்கி செல்கின்றனர். 


பங்களாவை நெருங்கும் தறுவாயில் வேட்டை நாயின் கழுத்திலிருந்த வளையம் போன்ற ஒரு தழும்பை  தற்செயலாக பார்த்து விடுகின்றது, அந்தக் காட்டுநாய். அதுபற்றி வினவியதும், வேட்டை இல்லாத நாட்களில் பகல் முழுவதும் தன்னை ஒரு பெறுமதியான வெள்ளிச் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதைப்பற்றி பெருமை பொங்க விபரிக்கின்றது வேட்டை நாய்.


அதனைக் கேட்டதும் சட்டென நின்று விடுகின்றது காட்டு நாய். காரணம் கேட்கும் வேட்டை நாயை ஏளனமாய் பார்த்து, ' தூ அற்பனே! நான் காட்டிலே இருந்தாலும் கஷ்டமான வாழ்வை வாழ்ந்தாலும் சுதந்திரமாக இருக்கின்றேன். ஆனால் நீயோ வேளைக்குச் சாப்பாடு சொகுசுப் படுக்கை என்று வாழ்ந்தாலும் வெள்ளிச் சங்கிலியில் கட்டுண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். நான் வாழும் காட்டிலே எங்கு வேண்டுமானாலும் இஷ்டம்போல சென்று வருவேன். நீயோ அவர்கள் அவிழ்த்து விட்டால்தான் உலாவலாம்.  உன்னைப்போல என்னால் சொகுசாய் வாழ்வதற்காக சுதந்திரமில்லாமல் இருக்க முடியாது' என்றுவிட்டு காட்டுக்குள் திரும்பி ஓடிவிடுகின்றது.


-மூதூர் மொகமட் ராபி

Thursday, April 12, 2012

பம்..பம்..பம்...பூகம்பம்!

ஜீன்ஸ் மந்திரவாதிகளும்

SMS

சாமியாடலும்!
நேற்று புதன்கிழமையன்று சுமாத்திரா கடல் பகுதியிலே புவியதிர்வுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடத்தக்களவில் வரத்தொடங்கியதுதான் தாமதம் நமது கைத்தொலைபேசிகளின் உள்பெட்டிகளெல்லாம் (அதுதான் inbox) குறுஞ்செய்திகளால்  நிறையத் தொடங்கி விட்டன. 


அவற்றில் இரண்டு  மூன்று தவிர மற்றவை அனைத்தும்,  'ஆபத்துகளின்போது பின்வரும் சுலோகங்களை ஜெபியுங்கள்' அல்லது
 'இயற்கை அழிவு ஏற்படும்போது காப்பாற்றக் கடவுளை வேண்டி இதனை ஓதுங்கள்!' போன்றவைதான்.


வழமையாக ஏதாவது ஒர் உப்புச்சப்பில்லாத விடயத்தைக் கூட வைத்துக்கொண்டு Breaking News போட்டு இழுத்து இழுத்து எரிச்சலூட்டுவதையெல்லாம் முன்பு நமது 'சக்தி வாய்ந்த' தொலைக்காட்சிகளும் 'சுட்டெரிக்கும்' பண்பலை வானொலிகளும்தான் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது கைத்தொலைபேசிகளிலும் கிட்டத்தட்ட அதுதான் நடக்கின்றது.


இது ஒருவகையான உத்தி. ஏதாவது ஒரு முக்கியமான நிகழ்வு ஏற்பட்டுவிட்டால் மக்கள் இலத்திரனியல் ஊடகங்களைத்தான் உடனடியாக நாடுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு சரியான நியூஸ் கிடைக்கிறதோ இல்லையோ TVவாலாக்கள்  டையைக் கட்டிக்கொண்டு கற்பனைச் சட்டியோடு ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் வந்திறங்கி விடுவார்கள். கிடைத்த சிறுகடுகு போன்ற துணுக்குச் செய்தியை வைத்துக்கொண்டே கிராபிக்ஸ் அடுப்பு மூட்டி வார்த்தைஜாலக் கரண்டி கொண்டு வதக்கித் தாளித்துப் பரிமாறுவார்கள்.


பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்தங்களை இன்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு மட்டும் எதிர்வுகூற முடியாது. ஆனால் கடலில் பூகம்பங்கள் நிகழும் போது அவை ஏற்பட்டுள்ள பிரதேசம், தரைக்கீழ் ஆழம், அதிர்வின் அளவு ஆகியவற்றைக் கணித்து கரையோரங்களுக்கு சுனாமித் தாக்கங்கச் சாத்தியங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்க முடியும். அதுவும் 2004ல் தெற்காசியாவிலும்  2011ல் ஜப்பானிலும் கையைச் சுட்டுக்கொண்ட அனுபவங்களால் இந்தத் துறையிலே இப்போது நிறைய தொழினுட்பத் துல்லியங்கள் ஏற்பட்டுள்ளன.


பூகம்பம் ஏற்பட்டுள்ள பிரதேசம் மற்றும் மிக அண்டிய பகுதிகளைத் தவிர ஏனைய தூர நாடுகளில் கடலையண்டி வாழ்பவர்களுக்கு சில மணிநேரங்களாவது அவகாசமிருக்கின்றது. அதற்குள்ளாக குறைந்தபட்சம் அவரவர் உயிரையும் வெகுமுக்கியமான ஆவணங்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இதுதான் அனுபவ + அறிவியல் உண்மையாக இருக்கும்போது அநாவசிய பதற்றங்களை வேண்டுமென்றே ஏற்படுத்தி விட்டு அற்பசுகம் காணும் அல்லது அவற்றைக்  கோழைத்தனமாகப்  பயன்படுத்தும்  போக்குகள் ஏன் ஒவ்வொருமுறையும் நிகழ்கின்றது?


சிந்தித்துப் பாருங்கள் சில உண்மைகள் தெரியவரும்.


மேலே நான் குறிப்பிட்டுள்ள அற்பசுகம் காணும் போக்கு என்றால் உங்களுக்கு இலகுவாய் புரியும். அது ஒருவகை சொறிதல் சுகம் போன்றது. அடுத்தவர்களை எப்படியாவது கவருவதற்கென்றே சிலபேர் அலைவார்கள். இப்படி ஏதாவது ஒன்று கிடைத்து விட்டால் போதும் ஏதோ சுமாத்திரா பன்டா ஆஷே தீவுக்கே போய் பூகம்பத்தை நேரில் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் போல கதையளப்பார்கள். அறியாத மக்களை வெருளச்செய்து அதிலே  கிடைக்கும் மலிவான அதிர்ச்சி மதிப்பும் சிறு VIP அந்தஸ்தும் கிடைப்பதை உள்ளுர வசித்து மகிழும் அற்ப புத்தியுடையவர்கள் செய்வதுதான் இதெல்லாம்.அடுத்து மக்களின் உயிர்ப்பயம் பற்றிய பதற்றத்தை பயன்படுத்துபவர்கள் பற்றிப் பார்க்கலாம்.  திருடுவதிலே உடமையைத் திருடுவது உழைப்பைத் திருடுவது என்று இருவகை இருப்பதுபோல இந்த பதற்றத்தைப் பயன்பத்துபவர்களிலும்  இருவகையினர் உள்ளனர்.


அதாவது இப்படியான அனர்த்த வேளைகளில் மக்கள் இயல்பாகவே வேறு கவனத்திலிருப்பதால் அந்தவேளை பார்த்து பொருட்களை அபகரிக்கும் சில்லறைத் திருடர்கள் ஒருவகையினர்.


மற்ற வகையினர் பதறித்திரியும் மக்களின் உயிர்ப்பயத்தைப் பயன்படுத்தி  அவர்களின் மூளையைத் திருடுபவர்கள்.(ஏனைய நேரங்களில் அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்க முடியாததாலோ என்னவோ)  இது புரிகிறதா உங்களுக்கு? இருங்கள் சொல்கின்றேன்.


இவர்கள் பார்ப்பதற்கு கனவான்கள் போலத்தான் இருப்பார்கள். ஆனால் அப்பாவி மக்களின் பதற்ற நேரத்திலே அவர்களது இயலாமைக்குள்ளேயும் உயிர்ப்பயத்துக்குள்ளேயும் புகுந்து எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் காட்டுவார்கள். இயற்கை அனர்த்தங்களுக்குரிய அறிவியல் காரணங்களை விலக்கி பழைய மந்திரவாதி ஸ்டைலில் 'சாமி குத்தம் ஆயிடுச்சிடா!' என்று கத்தாத குறையாக மக்களிடம்  கொண்டு செல்ல நினைக்கின்றார்கள். சுருங்கச் சொன்னால் தமது குறுகிய துருப்பிடித்த நம்பிக்கைகளை மக்களின் மூளைக்குள்ளே விதைக்க நினைக்கும் ஆசாமிகள்.


இவர்கள்தான் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கைத்தொலைபேசிக் கனவான்கள். நேற்றைய பதற்ற நிலைமையிலே, அந்த மந்திரத்தை ஓதுங்கள்...இந்த சுலோகத்தை மனப்பாடம் செய்யுங்கள் என்று நியூஸ் அனுப்பிய அறிவாளிகள்.


அந்தக் காலங்களில் கிராமங்களிலே கடும்வரட்சியோ தொற்றுநோயோ ஏற்பட்டு மக்கள் வாடும்போது ஊர்ப் பூசாரிகள் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவரையிலும் தன்னைக் கண்டுக் கொள்ளாமல் இருந்த மக்களுக்குத் தன் மீது பயம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக (அப்போதுதானே ஏய்த்துப் பிழைக்கும் தன் வயிற்றுப் பிழைப்பு ஜோராக நடக்கும்) 'ஆத்தா கனவுல வந்தாடா! நோயால ஊரையே அழிச்சிடுவாடா!   கருங்கோழி வெட்டுங்கடா! ஆட்டைக் கொண்டு கட்டுங்கடா!' என்று சாமியாடுவார்கள்.


அதுபோலத்தான் நமது இந்த ஜீன்ஸ் போட்ட மந்திரவாதிகளும் மக்களின் சுனாமிப் பயத்தை தமது மூளைச்சலவை வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள். மந்திரவாதிகளுக்கும் இந்தக் கனவான்களுக்கும் உள்ள...

ஒற்றுமை:

மக்களை ஏய்ப்பதற்கும் அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் வசதியாக அறிவியலிலிருந்து முடிந்தவரை விலக்கி மூடத்தனத்திலேயே அமிழ்த்தி வைத்திருப்பது.

வித்தியாசம்

இடுப்பு வேட்டி பதிலாக டீசேர்ட் ஜீன்ஸ் etc.  சாமியாடலுக்குப் பதிலாக SMS சேவைகள்


இப்படியெல்லாம் செய்வதற்குப் பதிலாக குறைந்தபட்சம் அனர்த்தங்களின் போது எப்படி விரைவாக வெளியேறுவது..என்னென்னவற்றை செய்யலாம் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது போன்ற தகவல்களைக் கொடுத்திருந்தாலாவது நடைமுறைக்கு உதவியாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்திருக்கும்.


இனியாவது செய்வார்களா?

-'Mutur' Mohammed Rafi

குட்டிக்கதை:

என்ன விலை அழகே!
முன்பெல்லாம் நட்பு அல்லது காதலின் வலிமையைச் சொல்லுவதற்கு ஒப்பிடுவதற்கு 'நகமும் சதையும் போல' அல்லது 'நீரும் மீனும்போல' என்பது போன்ற சில வழமையான சொற்றொடர்களைத்தானே கதைகளிலெல்லாம் பயன்படுத்துவார்கள். அதெல்லாம் இப்போது கேட்பதற்கே சலித்துப்போய் விட்டதே...

'சுனாமியும் சுமாத்ராவும் போல' அல்லது 'Q வும் U வும் போல'  அல்லது 'காக்கிகளும் லஞ்சமும் போல'  என்று புதிதாக ஏதாவது சொன்னாலென்ன...?

உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. ஒருகாலத்தில் போற்றப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட பல விடயங்கள் இப்போதெல்லாம் பழைய மினுமினுப்புக் குறைந்து பாவனையின்றி போய்க் கொண்டிருக்கிறது. பழைய இசைத்தட்டுக்கள், வீடியோ கெஸட்டுகள், டேப் ரெக்கோடர்கள், டைப் ரைட்டர்கள், ப்ளொப்பி டிஸ்க்குகள்...உண்மை..நேர்மை..காதல்..பக்தி ..etc..etc.


என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நகரின் கடைத்தெரு ஒன்றால் நடந்து கொண்டிருந்தேன்.  அப்போது பேனா ஒன்று தேவைப்படவே வாங்கலாம் என்று  ஃபென்ஸி கடை ஒன்றினுள்ளே நுழைந்தேன்.

எப்படித்தான் பார்த்தவுடனே எழுதுகிற ஆள் என்று கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை.  நான்,  'பே...' என்று ஆரம்பிப்பதற்குள் போல்ட் பொயின்ட் பேனாப் பெட்டியை எடுத்து அதில் ஒன்றை நீட்டியே விட்டார் கடைக்காரர். அதை வாங்கிக்கொண்டு கடையை நோட்டமிட்டேன். கண்ணாடி சட்டகத்தினுள் நிறைந்திருந்த விதவிதமான அலங்காரப் பொருட்களுக்குள் என்னைக் கவர்ந்தது ஒரு அழகான பழைய காலத்து பவுண்டன் பேனா.

'இந்தக் காலத்திலும் மையூற்றுப்பேனாவெல்லாம் வாங்குபவர்கள் இருக்கிறார்களா?' அதைக்காட்டி விசாரித்தேன். என்னை ஒருமாதிரியாகப் பார்த்தவாறே வெளியிலெடுத்துத் தந்தவரிடம்,


'இதற்கு ஊத்துகிற மையெல்லாம் இருக்குதா என்ன?' என்று கேட்டேன். அவர் லேசாய் சிரித்தபடி,


'இதுக்கு அதெல்லாம் தேவையே இல்லை' என்றார்.

'ஏன், மை தானாகவே சுரந்து வருமோ?' என்றேன் அவருக்கு பதில் நக்கல் விடுவதற்காக. 'இல்ல, இதுவும் ஒரு போல்ட்பொயிண்ட் பென்தான் ஸேர்' சட்டென்று மூடியைத் திறந்து ஒரு தாளில் எழுதிக்காட்டினார்.


நம்ப முடியாமல் ஆச்சரியத்தோடு அதை வாங்கி, 'என்ன விலை அழகே...' என்று நானும் ஒருதடவை எழுதிப்பார்த்தேன். அற்புதமாக எழுதியது, சரியாக பழைய மையூற்றுப்பேனாவின் வடிவிலிருந்த அந்த அதிசயம்.

'அதெல்லாம் சரி, என்ன விலை இது?'

பதில் சொன்னார் அவர்.

என் முகத்திலிருந்த அத்தனை சந்தோசமும் சட்டென வடிந்திருக்க வேண்டும் போல.

'ம்! இதெல்லாம் சும்மா! இந்த டீச்சர்ஸ் டே வலண்டைன்ஸ் டே.. அது.. இதுகளுக்கு ப்ரஸண்ட் பண்றதுக்குத்தான் சரி.  ஸ்கூல் புள்ளைகள்தான் வழமையா வேண்டிட்டுப் போவுங்கள்.' என்று என்னைத் தேற்றுவது போலக்கூறியபடி மீண்டும் அதை இருந்த இடத்தில் வைத்து விட்டார்.

லேசான அவமானத்துடன் கடையைவிட்டிறங்கி மீண்டும் நடைபாதைக்கு வந்து திரும்பி நடந்து கொண்டிருக்கும்போது,

'அது என்ன? போல்ட்பொயிண்ட் பென்னா? இதெல்லாம் இப்பவும் வருதா அண்ணன்?'

' சேச்சே! இதுவும் ஒரு லேசர் பென்தான். சரியாக அந்தக் காலத்துப் பழைய போல்ட் பொயிண்ட் பென்போலவே இருக்குது..! அவ்வளவுதான்!'


என்று இதே கடைத்தெருவின் சுப்பர் மார்க்கட்டின் 76 வது மாடியிலிருக்கும் ஒரு கடையொன்றிலே கி.பி. 2040ல்  நிகழவிருக்கும் ஓர் உரையாடலை  இன்றிரவு நான் எழுதப்போகும் சிறுகதைக்காக மனதுக்குள் ஓட்டிப்பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தபோது...

அவமான உணர்வு கணிசமாகக்  குறைந்திருந்தது.

-மூதூர் மொகமட் ராபி

Wednesday, April 11, 2012

கவிதை:

காதல் எரிமலை


ன் நினைவு வெளியில்
உன் உறவுப்பறவை
உல்லாசமாய்ச் சிறகடித்திருக்கும்
ஓர் ஓய்வு நாளில்
ஓசைப்படாமல் வந்தது
ஒருகடிதம்!அட!
தனித்தனி எழுத்துக்களாய்
தட்டச்சில்
என் பெயரும் முகவரியும்
ஆங்கிலத்தில்..
ஓ! சந்தேகமே வேண்டாம்
எழுதியிருப்பது நீ
நீயேதான்!எனது விழிகளின் தவிப்பை
விரல்கள் மொழிபெயர்க்க
கடிதவுறை திறக்கும் கணங்கள் கூட
காத்திருக்கப் பொறுமையில்லை
எகிறிக்குதிக்கிறது என் இதயம்!" ஓ! போதும்
உன் சாக்குப்போக்குகளும்
சமாதான வார்த்தைகளும்
சலித்தே போயின எனக்கு
இனியும் எழுதாதே நிறுத்து!"
ஆரம்ப வரிகளே
அபாயகரமாய் தாக்கிட
கடிதமென்ன
உன் காகித ஓரங்கள் கூட
கத்திகளாய்த் தோன்றுகின்றதே!"நீ எழுதும் வரிகள்தானே
இளையவள்
என் இதயத்துடிப்பு
நீயும் அதை நிறுத்திவிட்டால்

நின்றிடாதோ
இவள் உயிர்த்துடிப்பு!
ஆண்மகனாய் நீயும்
இருப்பதால்தான் காதலிலே
கவலையில்லை உனக்கு
பெண்ணாய் நானும் பிறந்துவிட்டேன்
என் வேதனைக்குத்தானுண்டோ
ஓர் கணக்கு?"
"கனவுச்சிறகு விரித்து
காதல்வானிலே
களித்திருந்த கன்னிமகள் இதயம்
வேதனைத் தீயில்
வெந்து மடிகின்றதே இப்போது.
கவலைகள் போக்கிடவும்
என் கண்ணீரைத் துடைத்திடவும்
யாருமில்லை இங்கே
தோழியும் தூரதேசம்! "
"இந்த நிலை நீடித்தால்
இடைவிடாது
தொடர்ந்திட்டால்
மனப்பிரமை
நிச்சயம் ங்கைக்கு
மாற்றுவழியில்லை"ஓ!
அன்பே
ஓங்கி மிதிக்கின்றாய்  ஒருவரியில்
ஒத்தடமும் தருகின்றாய் சிலவரியில்
சினிமாவின் வில்லனாய் மிரட்டுகின்றாய்
கோபத்தில் சீறுகின்றாய்
குழம்பாகக் கொதிக்கின்றாய்...ஓ!
அன்பே நீ
எழுதியிருப்பது கடிதமல்ல;
காதல் எரிமலையின்
ஒரு கையடக்கப் பதிப்பு!


-மூதூர் மொகமட் ராபி

Tuesday, April 10, 2012

Why these Kolaivery?

'அப்பாடா  தப்பிச்சோம்!'


ண்மையிலே தற்செயலாக சில இணையத்தளங்களைத் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஓர் உயிர்ப்பான மின்சாரக் கம்பியை தொட்டது போலிருந்தது.அனைத்து இணையத்தளங்களும் நம்பகமானவை அல்ல என்பதையும் இணையத்தில் வெளிவருகின்ற அத்தனை செய்திகளும் முற்றிலும் உண்மையானவை அல்ல என்பதையும் நான் நன்கறிவேன். ஆயினும் ஏற்கனவே அச்சு ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் பேசப்பட்ட செய்திகளை இணையத்திலே காட்சிவழி காணும்போதுதான் மேற்கூறிய அதிர்ச்சி.


சிறுவயதிலும் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்திலும் நாமெல்லாம் ஒரு முஸ்லீம் நாட்டிலே பிறந்திருக்கக்கூடாதா என்று ஏங்கியிருக்கின்றேன். ஆனால் இப்போது முஸ்லீம் நாடுகளில் நடைபெறுகின்ற பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பார்க்கும்போது 'அப்பாடா  தப்பிச்சோம்!' என்று  ஆசுவாசப்பட வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு அங்கு பெண்கள் பற்றிய விடயங்கள் உள்ளன.


இப்படி நான் சொல்வதால் ஏனைய நாடுகளிலெல்லாம் பெண்களைப் பூப்போல வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகாது. உலகம் முழுவதும் பெண்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா விலுள்ள  உள்ள இஸ்லாமிய நாடுகளில்தான் மிக அதிகளவான பெண் கொடூரங்கள் பதிவாகின்றன என்று அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


பொதுவாக இவ்வாறான புள்ளி விவரங்கள் வெளியானவுடன் அந்தத் தகவல்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை.  இவை சரியானவைதான் அல்லது உண்மைக்கு மிகக்கிட்டியவைதான் என்பது நம் அறிவுக்குத் தெரிந்தாலும் உணர்வுக்கு உறைப்பதில்லை. விளைவாக உண்மையை எதிர்கொள்ளத் திராணியின்றி   சோற்றுக்குள் முழுப்பூசணிக்காய் விடயம் போல உடனடியாக அவற்றைக் கடந்து சென்றுவிடத்தான் முயல்கின்றோம். அல்லது தப்பிப்பதற்கான காரணங்களைத் தேடுகின்றோம்.


 'மேற்குலகின் சதி' என்றும் 'அமெரிக்காவின் திரிக்கப்பட்ட செய்தி'
 'யூத ஊடகங்களின் வேலை' என்று சில தயாரிக்கப்பட்ட சொற்றொடர்கள் கூட இதெற்கனத் தயாராக வைத்திருப்போம்.  இத்தகைய சதிகளெல்லாம் முற்றிலும் நமது பிரமையென்று கூறமுடியாது. ஆனால் வீட்டுக்கூரையில் ஒரு மாங்காய் விழுந்தால் கூட அதையும்  'அமெரிக்கச்சதி' என்று கூப்பாடு போடுவதால்தான் அதற்கெல்லாம்  சிறு அதிர்ச்சி மதிப்புக்கூடக்; கிடைப்பதில்லை.


உலக நாடுகளில் நிகழும் மனித சமூகத்துக்கு எழுச்சியும் உயர்ச்சியும் தரக்கூடிய செயற்பாடுகள் பற்றிய செய்திகளை இந்த மேற்குலக யூத ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தால் அல்லது திரிபுபடுத்தி வெளியிட்டால் அதைக் காட்டமாக எதிர்க்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை. அதேவேளை மனித நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்களை - அவை எங்கு நிகழ்ந்தாலும் -  அதே ஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியுலகுக்கு கொண்டு வந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.


சரி, முஸ்லீம் நாடுகளில் தொடரும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று தேடுவோமா?


அறிஞர் பெர்னாட்ஷா ஒரு தடவை,    'சமூகம் குற்றங்களுக்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறது. குற்றவாளிகள் அதனைச் செய்து முடிக்கின்றார்கள்'   என்றார்.


அதாவது எந்தவொரு தனிமனிதனும் ஒரு குறிப்பிட்ட குற்றத்தைச் செய்துமுடிக்க வேண்டும் எனும் தன்முனைப்போடு அதனைப் புரிவதில்லை. அவனைச் சுற்றியுள்ள சமூகக்காரணிகளே பெரும்பாலும் ஒரு குற்றத்தை நோக்கி உந்துகின்றன.


அப்படிப் பார்த்தால் பெண்கள் மீது அதிகமான குற்றங்களை இழைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மதப்பிரிவினர் எதுவிதமான குற்றவுணர்வுமின்றி அல்லது ஒப்பீட்டளவிலே குறைவான  குற்றவுணர்வுகளுடன் முன்வருகின்றனர் என்றால் அவர்களை வழிநடாத்தும்  மத கலாசார விழுமியங்களிலோ சமூகப் பொருளாதாரக் காரணிகளிலோ அல்லது அவற்றின் தவறான பின்பற்றல்களிலோதான்  தவறுகள் இருக்க வேண்டும்.


இதனை ஒர் இலகுவான உதாரணத்தின் ஊடாகப் புரிந்து கொள்ளலாம்.


அதாவது ஒரு கடலோரக் கிராமத்திலுள்ளவர்களையும் விவசாயக் கிராமத்திலுள்ளவர்களையும் ஒப்பிட்டால் பொதுவாக கடலோரமுள்ள மீனவர்கள்தான் விவசாயிகளை விடவும் வாழ்க்கையில் எந்தவொரு விடயத்திற்கும் சட்டெனத் துணிந்து இறங்கி முகம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  காரணம் அவர்களது ஜீவனோபாயத் தொழில்.
கடல் என்பது ஓர் ஆபத்து நிறைந்த பகுதி. காலநிலைக்கேற்ப அமைதியாகவும் கொந்தளிப்பாகவும் இருப்பது. சமயத்தில் சட்டென புயல் சூறாவளி கடற்கோள் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு உயிரைப் போக்கிவிடக்கூடிய சாத்தியமுள்ளது. கடலில் தொழிலுக்காக இறங்கும் மீனவன் ஒருவன் இவ்வாறான அபாயங்களுக்கெல்லாம் அன்றாடம் முகம் கொடுப்பதால் வாழ்க்கையின் சவால்களையும் அவன் துணிச்சலாக எதிர்கொள்கின்றான்.


இதுபோல, பிறந்தது முதல் குறித்த ஒருவித மதச்சடங்குகள் சம்பிரதாயங்களிலே ஊறித்திளைக்கும் சமூகப் பிரிவினர் அதற்கேயுரிய பண்புகளுடன் வளர்ந்து வருவது இயல்புதானே. பொதுவாக  நமது இஸ்லாமிய மதம் ஏனைய மதங்களோடு ஒப்பிடுகையில் நமது சமூகப் பெண்களை அதிகமான கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கின்றது. இதை பெருமையாகவும் கூடக் கருதுகின்றது.


இங்கு மதக்கட்டுப்பாடுகள் இருபாலாருக்கும் பொதுவானவை எனக் கூறப்பட்டாலும் கூட ஆண்களுக்குரிய சுதந்திரமும் சலுகைகளும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான் தெளிவான உண்மை.

'ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் (தேவை)' (குரான் 2:282)

பெண்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாவும் மெல்லியர்கள். எனவே அவர்களை சமூகச் சீரழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்குத்தான் மறைத்து வைத்திருக்கின்றோம் என்று எவ்வளவுதான் நியாயப்படுத்தினாலும் அந்நிய ஆண்களின் பார்வையிலிருந்து பெண்களின் உடலை முழுமையாக மறைத்து வைத்திருப்பதுதான் நாம்; வழங்கும் ஒரே 'பாதுகாப்பு' தவிர சமூகப்பாதுகாப்பு என்பதெல்லாம் திரைமறைவிலே கூட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.தவிர, நமது திருமண வாழ்வின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் முன்மாதிரிகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை பெண்கள் என்பவர்கள் ஒரு ஆணுக்கிருக்கும் ஆடுகள், ஒட்டகைகள், குதிரைகள் போன்ற கால்நடைகள், உணவு குடிபானங்கள் சொத்துக்கள் போல போகப் பொருள்களில் சேர்த்தியானவர்கள் என்றுதான் தெளிவாகச் சொல்கின்றது.

'தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள், ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம்  தரும் பொருட்கள்'  (குரான் 3:14)

ஒர் ஆண் ஒரேசமயத்தில் நான்கு மனைவியரை வைத்திருக்கலாம் என்பதுடன் அந்த மனைவியரின் சம்மதமின்றியே தன்னிச்சையாய் விவாகரத்தும் செய்து விடலாம். இதற்குச் சில நிபந்தனைகள் உபவிதிகள் இருந்தபோதிலும் அவையெல்லாம் ஒர் ஆணுக்கிருக்கும் இந்த எதேச்சாதிகாரத்துக்கு எந்தவிதத்திலும் ஊறுவிளைவிக்காதவை.


ஒரு கணவனின் உடல் இச்சைக்கு மறுக்கும் (எத்தகைய
காரணமிருந்தபோதும்) பெண்ணை இரவு விடியும் வரை வானவர்கள் சப்பிப்பார்கள் என்று கூறும் வேதங்களிடம் ஒரு பெண் என்ன சமூகப்பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும்?

'கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை (வானவர்களால்) சபிக்கப்பட்டவளாகிறாள்.' (புஹாரி: 3237)


நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இளைஞர்கள் பலர் தமது காதலை மறுத்த இளம் பெண்கள் மீது அசிட் வீசி ஆத்திரத்தைத் தீர்க்கும் கொடுமையை வெகு சாதாரணமாகச் செய்து வருகின்றார்கள். வற்புறுத்தித் திருமணம் செய்விக்கப்பட்ட முதியவருடன் ஒன்றாக வாழ மறுத்த இளம் பெண்ணுக்கு மூக்கையும் காதுகளையும் அறுத்து விட்டிருக்கின்றார்கள். தன்னை விட அதிகமாகக் கல்வி கற்பதற்கு ஒத்தாசை புரிந்ததற்காக மனைவியின் தாயையும் தங்கையையும் பாலியல் வல்லுறவுத்தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கின்றனர். இப்படி எத்தனையோ பெண்வதைகள் சிறிதும் குற்றவுணர்வின்றி அரங்கேறிக்கொண்டேயிருக்கின்றன.

(இதோ அதற்குரிய அத்தாட்சிப் படங்கள்).
இப்போது கூறுங்கள் தன்னோடு காலம் முழுவதும் தாயாய் குழந்தைகளாய் சகோதரிகளாய் மனைவியாய் ஒன்றாக வாழும் பெண்களை துச்சமாக நினைக்கும் மனோபாவம் ஒரு இஸ்லாமிய ஆண் மகனுக்கு எங்கிருந்து வருகின்றது?


தனது உடல் இச்சைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ளலாம் என்றும் 'தலாக் தலாக் தலாக்' என்று மூன்று முறை ஒரு ஆண் தன் மனைவியைப் பார்த்துக்கூறி விட்டாலே விவாகரத்து ஆகிவிடும் என்று ஆணின் மேலாதிக்கத்துக்கு இறைவனின் வேதமே பக்கபலமாக இருக்கும்போது யாருக்குத்தான் தைரியம் வராது?


இந்திய முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் முகம்மது அஸ்ஸாருதீன் இதற்கு வாழும் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.


அவர் தனது முதல் மனைவி நவ்ரினை எவ்வாறு மனைவியின் விருப்பத்திற்கு மாறாக தலாக் கூறி விவாகரத்துச் செய்திருந்தார் தெரியுமா?அதுவரை அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அஸ்ஸார் சங்கீதா பிஜ்லானி எனும் அழகிய இந்தி நடிகையிலே மையல் கொண்டு அவருடன் இரகசிய உறவை வளர்த்து ஊர்சுற்றத் தொடங்கினார். ஒருகட்டத்தில் இந்தவிடயம் இந்திய  ஊடகங்கள் மூலம் அம்பலமாகியதும் வேறுவழியின்றி நவ்ரினிடம் வந்து இரண்டாம் திருமணத்துக்கு விருப்பத்தைக் கேட்டார். நவ்ரின் அதற்கு உடன்பட மறுத்ததும் சில நாட்கள் வரை காத்திருந்து விட்டு திடீரென ஒருநாள் வந்த அஸ்ஸார் அவரைப் பார்த்து 'தலாக்..தலாக்..தலாக்' என்று மும்முறை கூறிவிட்டுச் சென்றதும் இஸ்லாமியக் காரியம் முடிந்து விட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் இந்தியத் திருமணச்சட்டத்தின் விவகாரங்கள்தான்.


'பெண்களுக்கும் விவாகரத்துரிமை என்றதும் ஆண்களைப் போல் 'தலாக்' எனும் சொல்லை மும்முறை கூறி பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட முடியாது. ஆண்கள் செய்யும் விவாகரத்திற்கும் பெண்கள் செய்யும் விவாகரத்திற்கும் இடையே நடைமுறையில் வேறுபாடு இருக்கிறது. பெண்களின் விவாகரத்திற்கு  'குலாஉ' என்று பெயர். விவாகரத்து பெற விரும்பும் பெண் தலைவரிடம் (நீதிமன்றம்) சென்று முறையிட வேண்டும். அவர் கணவனை அழைத்து, திருமணத்தின் போது கணவன் கொடுத்த மணக் கொடையை மனைவி திரும்பக் கொடுத்ததும் இருவருக்கும் இடையிலான திருமணம் முறிந்ததாக கொள்ளப்படும்.


ஆண்களின் விவாகரத்தான தலாக்கிற்கும் பெண்களின் விவாகரத்தான குலாவிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.  ஆண்களின் தலாக் மூன்று கட்டங்களாக நிகழ்வது, பெண்களின் குலா ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆண்களின் தலாக் யாரிடமும் முறையிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக மனைவியிடமே கூறிவிடலாம், பெண்களின் 'குலாஉ' பொதுவான தலைவரிடம் முறையிட்டே செய்யமுடியும். இவைகளை இஸ்லாம் கூறும் குடும்பவியல் நடைமுறைகளோடு ஒப்பு நோக்கினால் இந்த விவாகரத்து நடைமுறைகள் எந்த நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்.


ஆண்களுக்கு நான்கு முறைப்படியான மனைவிகளும் கூடவே எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி இருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு கீழ்படிய மறுக்கும் மனைவியை படுக்கையில் விலக்கிவைத்து, அடித்து கட்டுப்படுத்தும் அனுமதியும் கணவனுக்கு இருக்கிறது. இதனோடு இணைந்து தலாக் எனும் விவாகரத்து மனைவியை மிரட்டுவதற்கு வழிவகை செய்து தருகிறது. பொதுவான ஒருவரிடம் முறையிட வேண்டிய தேவையின்றி படிப்படியாக இரண்டு முறை தலாக் கூறினாலும் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். ஆக, மனைவியை தனக்கு கட்டுப்பட்டவளாக நடக்க வைப்பதற்கான உச்ச கட்ட ஆயுதமாக ஆணுக்கு தலாக் பயன்படுகிறது.

(இதை நடைமுறையில் யாரும் காணலாம்)


ஒரு மனைவி இறந்தால் அவளின் உடமைகளின் பெரும்பகுதிக்கு கணவனே வாரிசாக இருக்கும் நிலையில், திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட மணக் கொடை கணவனிடம் திரும்பிச் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு பொதுவான ஒருவரிடம் முறையிட்டுத்தான் பெண் விவாகரத்து பெற முடியும். அதேநேரம் மனைவி முறையிட்டு கணவனும் ஒப்புக் கொண்டு விட்டால் அந்தக் கணமே விவாகரத்து செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இதுவே ஆணுக்கு தவணை முறையில் செய்யப்படுவதால் அவனுக்கு இருக்கும் அவகாசம் பெண்ணுக்கு இல்லை. எனவே பெண் தனக்கு பிடிக்காத கணவனை விவாகரத்து செய்வது என்பது வேறு வழியில்லாத நிலையில் எதிர்காலம் குறித்த பயத்தையும் மீறித்தான் செய்ய முடியும். இது கணவனின் ஏற்க முடியாத செயல்களையும் கூட சகித்துப் போக வைக்கிறது. இதுவே ஆண் என்றால் தனக்கு கட்டுப்பட மறுப்பவளை தலாக் கூறி மிரட்டி அவள் பணிந்ததும் ஏற்றுக் கொள்ள முடியும்.' (நன்றி : செங்கொடி இணையத்தளம்)


இப்போது பார்த்தீர்களா இஸ்லாம் நமது பெண்களுக்கு வழங்கியுள்ள சமூகப்பாதுகாப்பை? தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு ஓர் இஸலாமிய ஆண் என்பதால் அஸ்ஸாருக்கு  பக்கபலமாக அமைந்தது எது?


'ஏன் அஸ்ஸார் போலவே நவ்ரீனும் மற்றொரு திருமணம் முடித்து வாழ வேண்டியதுதானே' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி:இதே போல நவ்ரீனுக்கு ஒரு வேற்று ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்ய நாடியிருந்தால் இதே போல சுலபமாக தலாக் (3) மூலம் காரியம் முடித்திருக்க முடியுமா? இதற்கு உங்கள் சட்டங்கள் பாரபட்சமின்றி சமவுரிமை வழங்குமா? வழங்குவார்களா நமது மார்க்க அறிஞர்கள்?


நிலைமை இப்படி இருப்பதால்தானே நாமெல்லாம் எவ்வளவுதான் மூடி மறைக்க நினைத்தாலும் இஸ்லாமிய நாடுகளில் பெண்வதை அதிகமாகவும் பரவலாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செய்திகள் வந்து நமது முகத்திலேயே ஓங்கி அறைந்து கொண்டிருக்கின்றன.


இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நாமெல்லாம் இஸ்லாமியர்கள் தனியே அல்லது பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் அல்லாமல் பல்லின மக்கள் வாழும் நாடுகளில் பிறந்தது கூட அந்த அல்லாஹ்வின் அருள்தான் போலிருக்கின்றது.


- Jesslya Jessly

Monday, April 9, 2012

நாட்டார் பாடல்கள்:ட்டுக்கல்வி பெரும்பாலும் இல்லாத நாட்டுப்புற மக்களிடையே எழுதாக் கவிகளாகத் தொன்று தொட்டு வழங்கிவரும் பாடல்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன. பாடல்கள் மட்டுமன்றிக் கதைகள், பழமொழிகள் போன்றனவும் உள்ளன. இவை எல்லாவற்றையும் ஒருசேரக் குறிப்பதற்கு ஆங்கிலத்தில் Folk lore எனும் பெயர் வழங்குகின்றது.


தமிழ் மொழியிலே இத்தகைய இலக்கியத்தைக் குறிப்பதற்கு நாட்டுப்பாடல்கள், நாடோடிப்பாடல்கள், கிராமியப்பாடல்கள், பாமரர் பாடல்கள், மக்கள் கவிதைகள் எழுதாக் கவிதைகள், வாய்மொழி இலக்கியம், பொதுமக்கள் இலக்கியம், நாட்டார் இலக்கியம், நாட்டிலக்கியம் என்பன போன்ற பெயர்கள் வழங்கி வருகின்றன.


பொதுவாக நோக்குமிடத்து இப்பாடல்கள் நாட்டுப்புறங்களில் வாழும் எழுத்தறிவில்லாத, பெயரறியாக் கவிஞர்களால் பாடப் பெறுபவை எனும் கருத்தே இப்பெயர்களில் இழையோடியிருப்பதைக் காணலாம். எழுத்தறிவு அதிகமில்லாத பாமர மக்களினால் பாடப்பெறுபவையாயினும் இவை இசை கலந்த இனிய பாடல்களாயும் கேட்போர் செவிக்கும் இதயத்துக்கும் இன்பமளிக்க வல்லனவாயும் உள்ளன. இதனாலேயே   இப்பாடல்களைக் 'கவிதைகள்'  என்றும் நாகரிக உலகம் ஏற்றுக்கொள்கின்றது.


தமிழில் உள்ள நாட்டுப்பாடல்களைத் தேடித் தொகுத்து வகைப்படுத்தி நூல்களாக வெளியிடுவதில் அண்மைக்காலமாக அறிஞர் பலர் முயன்று வந்துள்ளனர். இலங்கையிலே வட்டாரக்கல்விப் பரிசோதகராகக் கடமையாற்றியவாரான தி. சாதாசிவ ஐயர், இற்றைக்கு ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கிய  வசந்தன் கவிகள் எனும் நாட்டுப்பாடல்களைத் திரட்டி வெளியிட்டார். அவருக்குப்பின் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம், மட்டுநகர் எப். எக்ஸ். சி. நடராஜா, கலாநிதி சு. வித்தியானந்தன் போன்றோர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டனர்.


இலங்கை முஸ்லீம் மக்களிடையே வழங்கும் பாடல்களும் தொகுக்கப்பட வேண்டியுள்ளன. மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு (1940) என்னும் நூலுக்கு அதன் பதிப்பாசிரியர் எழுதிய ஆங்கில முன்னுரையிலே, முஸ்லீம் மக்களிடையே வழங்கி வரும் நாட்டுப்பாடல்கள் இன்னும் வளர்ச்சியடைந்து வருகின்றன என்றும் இவ்வளர்ச்சிக்கு முக்கியமாக முஸ்லீம் பெண்களே உதவுகின்றனர் என்றும், இப்பாடல்கள் பெரும்பாலும் காதல் பாடல்களாகவும் சிறுபான்மை உள்ளுர் நிகழ்ச்சிகள் பற்றியவையாயும் உள்ளன என்றும், மட்டக்களப்புப் பிரதேசத்தின் தென்பகுதியில் கரவாகுப்பற்று, அக்கரைப்பற்று கிராமங்களிலுள்ள முஸ்லீம் பெண்கள் இத்தகைய கவிகளை இயற்றுவதில் சிறந்து விளங்குகின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார். முஸ்லீம் மக்களிடையே வழங்குகின்ற நாட்டுப்பாடல்களில் இஸ்லாமியக் கலாசாரத்தோடு தொடர்புடைய அரபுச்சொற்கள் வெவ்வேறு அளவுகளிலே கலந்திருப்பதையும் காணலாம்.

கீழ்வரும் நாட்டார் பாடலில்...

கிராமத்து இளைஞன் ஒருவனின் பாசாங்கில்லாத காதல் உணர்வின் யோக்கியத்தை அனுபவித்துப் பாருங்கள்:'ஆசைக்கிளியே என்ர ஆசியத்து உம்மாவே
ஓசைக்குரலாலே – உங்க உம்மாவைக் கூப்பிடுகா!


கடலே நீ இரையாதே காற்றே நீ வீசாதே
நிலவே நீ எறியாதே – என்ர நீலவண்டுபோய்ச் சேருமட்டும்!


மாமி மகளே என்ர மருதங்கிளி வங்கிசமே
ஏலங் கிராம்பே உன்னை என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?


கைவிடுவேன் என்று எண்ணிக் கவலைப்படாதே கண்ணார்
அல்லாமேல் ஆணை – உன்னை அடையாட்டிக் காட்டுப்பள்ளி!


சீனத்துச் செப்பே – என்ர சிங்காரப் பூநிலவே
வானத்தைப்பார்த்து – மச்சி வாடுவது என்னத்திற்கோ?


ஓதிப்படிச்சி ஊர்புகழ வாழ்ந்தாலும்
ஏழைக்குச் செய்த தீங்கை அல்லா எள்ளளவும் ஏற்கமாட்டான்!


காவற்பரணில் நானும் கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சி வந்தென் காலூன்றக் கண்டேனே!

காசிதரட்டா மச்சி கதைத்திருக்க நான் வரட்டா
தூதுவரக் காட்டிடட்டா – இப்ப சொல்கிளியே உன்சம்மதத்தை!'
இதைப் படித்தபின்பு இன்று வரும் சினிமாக் காதல் பாடல்களின் வரிகளையும் கேட்டுப்பாருங்கள்.  வித்தியாசம் நிச்சயம் புரியும்.


நன்றி:  'நாட்டார் பாடல்கள்' - கல்வி வெளியீட்டுத் திணக்களம் (1981)

தொகுப்பு: மூதூர் மொகமட் ராபி

கவிதை:

  


நெஞ்சுரமிருக்கிறது தோழி!

ரக்கமற்றவளே
எழுதிக்கொள் இதனை..!நான் ஓர் ஏழை
எனது பெயரோ அநாதை
எனது கண்களிலே
கண்ணீர் மட்டுமல்ல
இதயத்திலிருந்து
இரத்தமும்கூடத்தான் வற்றிவிட்டதுஇருந்தாலும்
இரக்கத்தை எதிர்பார்த்து
இனியும் உன்னிடத்தில் நான்
இரந்திடப்போவதில்லை!நீ விரும்பும்போது சூடிடவும்
வேண்டாதபோது வீசிவிடவும்
நான் ஒன்றும் உன்வீட்டு
முற்றத்து மல்லிகையல்ல!


ஆம்!
ஒரு கடினமான கற்பாறைமீது
முளைத்திருக்கும் முட்செடிபோல
என் வாழ்க்கை வரண்டது!எனது கிளைகளிலே நீ
வாசனைப் பூக்களையோ
வசந்தகாலப் பறவைகளையோ
தயவுசெய்து தேடிவராதே!ஒருதுளி நீருக்கே
என்வேர்கள் இங்கே
ஒரு ஜீவ மரணப்போராட்டம்
நடாத்திக் கொண்டிருக்கின்றது!


ஆனாலும்
நீ வந்து  நீருற்ற வேண்டியதில்லை
ஏனெனில்-
கற்பாறைகளையே கசக்கிப்பிழிந்து
நீர்பருகும் நெஞ்சுரம்
என் வேர்களுக்கு
நிறையவே இருக்கிறது....!


-மூதூர் மொகமட் ராபி

நன்றி:  வீரகேசரி  1990.03.11

Sunday, April 8, 2012

Are People Idiots?

நண்பன்  மற்றும் தோனி
நமக்குச் சொல்வதென்ன?


ண்மையில் வெளியிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படங்களில் நண்பன் மற்றும் தோனி ஆகிய இரண்டும் இரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டுவருகின்றன. இவை   இன்றைய கல்விமுறைமை பற்றிய விமர்சனங்களைத் தமது பிரதான கதைக்கருவாகக் கொண்டிருப்பதால் அது பற்றிய பார்வை மிகவும் அவசியமானது.


'நண்பன்' அதன் தலைப்புக்கேற்றவாறு மூன்று நண்பர்களின் நட்பின்
வலைப்பின்னலில் ஒரு பொறியியல் கல்லூரி வாழ்க்கையைக் களமாகக் கொண்டு இன்றுள்ள கல்வி முறைமையின் முரண்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் பார்வையாளர்களுக்கு முன்வைக்கும் திரைப்படம்.


வறுமை காரணமாக பெருந்தோட்டச் சொந்தக்காரரின் நிலத்தில் உழைத்து வாழும் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த அதீத திறமையுள்ள ஒருவன், தன் முதலாளியின் கட்டளையை மீற முடியாமல் அவரது மகனின் பெயரிலே அவனுக்கு பட்டம் பெற்றுக் கொடுப்பதற்காக பொறியியல் கல்லூரியில் சேருகின்றான்,


அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போராடும் கீழ்நிலை மத்தியதர ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து அம்மா, நோயாளித் தந்தை, முதிர்கன்னி அக்கா ஆகியோரை கரைசேர்ப்பதற்காக படித்து வேலை எடுக்கவேண்டுமே என்று அதே கல்லூரிக்கு வருகின்றான் பயந்து பயந்து படிக்கும் சுபாவமுள்ள மற்றொருவன்.


வனவிலங்குகளைப் படம்பிடித்து ஆவணப்படுத்தும் துறையிலே அடங்காத ஆர்வமிருந்தும் கடன் வாங்கிப் படிக்கவைக்கும் அரச ஊழியரான தந்தையின் வற்புறுத்தலுக்காக பொறியியல் பட்டம் பெற்றுச்செல்ல வருகின்றான்,  இன்னொருவன். இம்மூவரும் எதேச்சையாக கல்லூரி விடுதியின் ஒரே அறையில் தங்குவதனால் நண்பர்களாகின்றனர்.இதேவேளை கல்வி உட்பட வாழ்க்கையின் உன்னதங்கள் அனைத்துமே கடுமையான போட்டியிட்டு வெற்றி பெறுவதில் மட்டுமேதான் உள்ளது என்பதை உறுதியாக நம்பும் அக்கல்லூரியின் முதல்வர் அதனை நோக்கியே தனது கல்லூரியின் மாணவர்களையும் கற்பிக்கும் பேராசிரியர்களையும் வழிநடாத்திவருகின்றார்.இவர்களுக்கிடையில் நிகழும் வேடிக்கையான ஆனால் சிந்திக்க வைக்கும் போராட்டங்கள்தான் நண்பனின் கதை.


கல்வியியலாளர்களும் அறிஞர்களும் ஏற்கனவே கண்டறிந்து வைத்துள்ள விடயங்களை அடிப்படையாக வைத்து புதிய தேடல்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வெறுமனே பாடங்களை மனனம் செய்யும் ஆற்றலைச்  சோதித்துப் புள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் இன்றைய கல்வி முறையின் அபத்தங்களை படம் முழுவதிலும் தோலுரித்துக் காட்டிக் கொண்டே நகருகின்றது கதை.


இறுதியில் மூன்று நண்பர்களில் ஒருவனான கதாநாயகன், மனனம் செய்து சம்பாதிப்பதற்காக மட்டுமே படித்து வந்தவர்களெல்லாம் வியக்கும் வண்ணம் புதிய தேடல்களை ஊக்குவிக்கும் கல்வியை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி வெற்றிபெற்று வாழ்வதாகக் காண்பிக்கும் புள்ளியில் படம் நிறைவடைகின்றது.


இனி 'தோனி' ...


தோனியும் மத்தியதர வர்க்கக் குடும்பக்களுக்கேயுரிய கல்விக் கனவுகளைப் பற்றிய படம்தான். ஆனால் இங்கு ஆரம்ப இடைநிலைப்  பாடசாலைக்கல்வியும் அதனுடன் ஒட்டிய வாழ்க்கைச் சூழலும் கதைக்களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


மனைவியை இழந்த அரச ஊழியரான ஒரு தந்தை தனது சக்திக்கு மீறிய வகையிலே ஒரு தனியார் பாடசாலையில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைக்கின்றார். பிள்ளைகள் இருவரின் மீதும் மிகுந்த பாசமுள்ளவரான அவர், இதற்காக அலுவலகத்தில் மேலதிக வேலை, ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வது, கந்து வட்டிக்கு பணம் வாங்குவது என்று சுழன்றோடிக் கொண்டிக்கின்றார்.


ஆனால் ஒன்பதாம் தரம் கற்கும் அவரது மகனுக்கோ படிப்பைவிட  கிரிக்கட்டில்தான் ஆர்வமும் திறமையும் மிகுதியாகவுள்ளது. இதனால் இருவருக்குமிடையிலே அடிக்கடி சிறுசிறு மோதல்கள் உருவாகி வருகின்றது. அவனது ஆர்வத்தைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக படிப்புக்குத் தடையாக இருந்து வரும் கிரிக்கட்டிலிருந்து அவனைப் பிரித்தெடுப்பதற்கு முயன்று தோல்வியடைகின்றார் அந்தத் தந்தை. ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றி முதன் முறையாக  மகனைக் கோபத்தில் அடித்துவிட எதிர்பாராமல் அவனது தலையில் பலத்த காயமேற்பட்டு விடுகின்றது. இதனால் அவன் கோமா நிலைக்குச் சென்று விடுகின்றான்.
அதன்பின்பு நிகழும் சம்பவங்களால் தந்தைக்கு அதுவரை மூடியிருந்த இன்னொரு உலகம் திறக்கின்றது. கல்வி பற்றிய அபத்தங்களையெல்லாம் நேரடி அனுபவங்களால் அறிந்து அவனது நியாயமான ஆர்வத்தைப் புரிந்து கொள்கின்றார். மகனுக்காக ஆவேசத்துடன் போராடக் களத்தில் இறங்கும் அவர் ஊடகங்களின் உதவியுடன் தற்போதைய கல்வி முறைமையின் தவறுகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துகின்றார்.


இதனால் ஒருகட்டத்தில் தனது வேலையைக் கூட பறிகொடுக்கும் நிலையில் சளைக்காது போராடி மாநில முதலமைச்சர் வரை செல்கின்றார். முதலமைச்சர் மற்றும் தன்னார்வத் தொண்டு புரியும் ஒரு மருத்துவத் தம்பதி ஆகியோரின் உதவியோடு மகனைக் குணப்படுத்தி அவனுக்குப் பிடித்த கிரிக்கட் துறையில் ஈடுபடுத்துவதோடு படம் முடிவடைகின்றது.


நண்பன் மற்றும் தோனி ஆகிய இரண்டு படங்களிலும் ஏறத்தாழ ஒரே அடிப்படைக் கருத்தையேதான் கூறியிருக்கின்றனர் எனினும் அவற்றை வெளிப்படுத்திய விதம் அதற்காகப் பயன்படுத்தியிருக்கும் கதைக்களம் ஆகியன வேறுபடுகின்றன.


வெறும் பொழுதுபோக்கையே பிரதானமாக வைத்து இயங்கும் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் அவ்வப்போது சமூக அவலங்களைப் பிரதிபலிக்கும் சில சமூகப் பிரக்ஞையுள்ள படங்களும் வந்து வெற்றி பெறுவதுண்டு. இவ்வாறு சமூக அக்கறையுள்ள  கதைக்கருவுடன் வெளிவரும் தமிழ் தென்னிந்திய இந்தியத் திரைப்படங்களிலே பின்வரும் போக்குகள் காலம் காலமாக இருந்து வருகின்றன.

1. சமூகப் பிரச்சினைகளை பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்படும் வகையிலே மிகைப்படுத்திக் காட்டுவது பின்பு அதற்குத் தீர்வு எதுவும் கூறாமல் விட்டுவிடுவது. (எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகரன் வகையறா படங்கள்)


2. பிரச்சினைகளை ஓரளவு யதார்த்தமாக காண்பிப்பது பின்பு அதற்குச் சற்றும் பொருத்தமில்லாத உப்புச்சப்பில்லாத தீர்வுகளை முன் வைப்பது. ( கே.பாலசந்தரின் பெரும்பான்மைப் படங்கள்)3. சமூகப் பிரச்சினைகளுக்கு தனிமனிதர்களின் தவறுகளும் அயோக்கியத்தனங்களுமே காரணம் எனக்காட்டி அவர்களைத் திருத்தினால் அல்லது களையெடுத்தால் போதும் உலகமே சுபீட்சமாகி விடும் எனத் தீர்வு காண்பிக்கும் படங்கள். (இயக்குனர் ஷங்கரின் இந்தியன், அந்நியன் வகையறா படங்கள்)ஆனால் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வாழ்க்கைத்தரம் உட்பட சமூகத்திலுள்ள அனைத்துச் சீரழிவுகளுக்கும் காரணம் தனிமனிதர்களின் நேர்மையீனமோ அயோக்கியத்தனங்களோ கிடையாது. அவற்றையெல்லாம் மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கும் எதேச்சாதிகார அரசு இயந்திரங்களும் அவற்றின் ஆட்சிமுறையுமே என்பதை இவ்வாறான திரைப்படங்கள் காண்பிப்பதில்லை அல்லது அதனை வலியுறுத்துவதில்லை என்பதே உண்மை.


விதிவிலக்காக கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர், மௌனகுரு போன்ற சில படங்கள் வருகின்ற போதிலும் அவற்றிலும் அவை அழுத்தமாகக் காண்பிக்கப் படுவதில்லை. இதனால் இவ்வாறான திரைப்படங்களை ரசிக்கும் ஒரு பார்வையாளன் தான் சமூகத்தில் காணும் குளறுபடிகளுக்கு தனிமனிதர்களின் இயல்புகளே காரணம் என்று நினைக்குமளவுக்குத் தவறாக வழிநடாத்தப்படுகின்றான்.


நண்பனில் வில்லன் போன்று சித்தரிக்கப்படும் கல்லூரி முதல்வர் விருமாண்டி சந்தானம் இறுதியில் அர்த்தமில்லாத கல்விப் போட்டி பற்றிய உண்மையை சென்டிமென்டாக உணர்ந்து திருந்தி விடுவதனால் கல்வியை வியாபாரமாக்கி காசுபார்க்கும் முதலாளிகளின் வலைப்பின்னல்கள் மாறிவிடப் போவதில்லை.தோனியில் கோமாவில் கிடக்கும் பையன் குணமாகி அவனுக்குப் பிடித்த கிரிக்கட்டை ஆடுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்த காரணத்தால் சமூகத்தைப் பார்த்து அந்த நடுத்தர வர்க்கத்து தந்தை எழுப்பிய கேள்விகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.


மாறாக சகல மனித அவலங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்து வருகின்ற இன்றைய சமூக அமைப்புக்கு எதிராக அனைத்து மக்களும் கிளர்ந்தெழுந்து நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வகையிலே ஒன்றிணைந்து போராட வேண்டியதைத்தானே உண்மையில் இப்படங்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

-Mutur Mohd. Rafi